காலை இவள் வைத்திருந்த அலாரம் அடிக்கும் முன்னமே சமையலறையில் கச்சேரி சத்தம் கேட்க விழிப்பு வந்துவிட்டது சமுத்திராவுக்கு. சோம்பலுடன் புரண்டுப் படுத்தவள் மகளை நெருங்கி அணைத்துக்கொள்ளப் பார்க்க, தன் மீது பாரத்தை உணர்ந்தாள். விழிகள் பட்டென்று திறந்துகொண்டது. பாரமென உணர்ந்தது தன் கணவனின் கை என்றதும் நிமிர்ந்து பார்த்தாள் சமுத்திரா.

நிர்மலமான உறக்கத்துடன் நடுவில் இருந்த மகளோடு ஒன்றி மனைவியை தோளோடு அணைத்தவாறு படுத்திருந்தான் மகிழ்நன். தன்மீது இருக்கும் அவன் கையையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவள் நேராகப் படுக்க, அவன் கரம் அவள் கழுத்தை சுற்றிக்கொண்டது. சில நொடிகள் ஆழ்ந்து சுவாசித்தவள் கண்களை மூடி அந்த தருணத்தை கிரகிக்க முயன்றாள். தன் தேவை முடிந்ததும் விலகிப் படுப்பவன் இல்லையென்றாலும் அப்படியொன்றும் கொஞ்சிக்கொண்டு இணக்கமாக இருப்பவனும் இல்லை. சில நொடிகள் கையணைப்பில் வைத்துக்கொண்டு நகர்ந்து விடுவான். உறக்கத்தில் கூட வலப்பக்கம் படுத்தால்தான் உறக்கம் வரும் என்று இருப்பவன் இன்று இடப்பக்கம் திரும்பிப்படுத்து அணைக்கவும் இனிக்கவே செய்தது மனைவிக்கு. 

நேரம் பார்த்து அலைபேசியும் ஓசை எழுப்ப, பதட்டத்துடன் அதனை எடுத்து அணைத்துவிட்டு கணவனைப் பார்த்தாள். தூக்க கலக்கத்தில் இவள் பெயரை முனகிக்கொண்டே அசைந்துப் படுத்தான். பெருமூச்சுடன் எழுந்தவள் வழமை போல் குளித்து முடித்து வந்து விடிவிளக்கை போட உமையாள் விழித்துவிட்டாள். கொஞ்சம் அலுப்புதான், கிளம்பும் முன்னமே எழுந்துவிட்டாளே என்ற சோர்வுடன் அவளை தூக்கிகொண்டவள் பின் என்ன நினைத்தாளோ மகிழ்நன் தோள் தொட்டு உசுப்பினாள்.

உமையாளின் சிணுங்கல், ஓயாது உலுக்கும் மனைவி என தொந்தரவில் உறக்கம் கெட்டு விழித்தவன், “நசநசன்னு என்ன சத்தம்? தூக்கிட்டு வெளில போவாம… மனுஷன் தூங்க வேணாம்.” என கடுப்படித்தபடி விழிகளைப் பிரிக்க, அவனையே அழுத்தமாக பார்த்து நின்றிருந்தாள் சமுத்திரா.

“என்ன பார்வை?” முதலில் ஒன்றும் புரியவில்லை. எதற்கு இப்படி மகளை அழவிட்டு தன் தூக்கத்தை கெடுக்கிறாள் என்று எரிச்சல் மண்டியது. அவள் நகராமல் நிற்கவும்தான் இவன் அறிவு விழித்துக்கொண்டு பதற வைத்தது.

“சமு.” பட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டான். உறக்கத்தில் கலைந்திருந்த சிகை அவன் முன்நெற்றியில் புரள, உறக்கம் மிச்சமிருக்கும் விழிகளில் இப்போது ஒருவித பதட்டம் சூழ்ந்திருந்தது. முகத்தை அழுந்தத் துடைத்தவன், “ஏன் அழறா?” சமுத்திரா தோளில் சிணுங்கியபடி இருந்த மகளை நோக்கி இவன் கைநீட்ட, அவனிடம் மகளை ஒப்படைத்தவள், “பாப்பாவுக்கு தேவையானது எல்லாம் ரெடி பண்ணிட்டு வரேன்.” என்று நகரப்போக, மணி என்ன என்று கேட்டு அவளை நிறுத்தினான்.

அவள் சொல்லவும், “மணியாகிடுச்சா? நேரமே கிளம்பணுமே.” என்று சொல்லிக்கொண்டே எழுந்துவிட்டான்.

மகளை தோளில் போட்டு தட்டிக்கொடுத்துக்கொண்டே இவன் மனைவியைப் பார்க்க, அவள் நகர்ந்துவிட்டாள். இவள் தலை தெரியவுமே வந்துவிட்டார் பத்மா.

“பால் காய்ச்சி வச்சிட்டேன். கார் வர்றதுக்குள்ள கிளம்பலாம்னா எல்லாம் இன்னும் தூங்கிட்டு இருக்காங்க.”

“எல்லாம் ரெடியா இருக்கே அத்தை. பாத்துக்கலாம்.” பதில் கொடுத்த வண்ணம் மகளுக்கு அடுப்பில் கஞ்சியை ஏற்றியவள் ஒரு ஆப்பிளை எடுத்து நறுக்கி சிறிய டிபன்பாக்சில் அடைத்துக்கொண்டாள். உமையாளுக்கு தேவையான தண்ணீர், பிளாஸ்கில் பால் என அவள் பாட்டிற்கு வேலை செய்ய, அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தார் பத்மா. காலை உணவே விஷேஷ வீட்டில் என்பதால் சமைக்கும் வேலை இல்லை. 

பத்மாவின் பார்வையில் சமுத்திரா தடுமாற, எதற்கு இப்படியொரு பார்வை என்று புரியவில்லை. கேட்கவும் ஒருமாதிரியாக இருந்தது.

“ட்ரெஸ், நகை எடுத்து வைக்கணும்னு சொன்னீங்களே அத்தை.” பேச்சு கொடுக்க வேண்டுமே என்று அவள் பேச,

“இதுக்குதான் நீ வேணும்னு நான் சொல்றது. குளிச்சிட்டு எடுத்து வைக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன்.” என்று நெற்றியில் தட்டிக்கொண்டே அறைக்குச் சென்றுவிட்டார் பத்மா. இவளுக்குதான் குழம்பியது. அத்தனை பேசி பேத்திக்கு என்று வாங்கி வைத்த நகையை மறக்கக்கூடியவரா இவர்? தன்னைப்போல் பேச சந்தர்ப்பம் பார்த்திருந்தாரோ என்று நினைப்புடன் விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.

“டான்னு சின்னது குளிச்சிட்டு கிச்சனுக்கு வந்துடுச்சு. நான்கூட பயந்தேன் எங்க ஒட்டாம போயிடுவாளோன்னு.” கணவரை எழுப்பி சொல்லிய பத்மா பேத்திக்கென்று வாங்கிய உடைகளையும் நகைகளையும் எடுத்து பத்திரப்படுத்தினார்.

“விஷேஷத்துல பாத்து நடந்துக்க. வாய் தவறிகூட சமுத்திரா வருத்தப்பட்டு வீட்டுக்கு போனதை பத்தியெல்லாம் வெளில காட்டிக்காத, அப்புறம் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கணக்கா எதையாச்சும் பேசிவிட்டுருவாங்க. ரெண்டு சம்மந்திங்க வீட்லேந்தும் வருவாங்க, நல்லா இருக்காது.” மனைவியின் குணமறிந்து எச்சரித்தார் கந்தவேல்.

“என்னை பாத்தா வீட்டு விஷயத்தை கடைபரப்புற மாதிரி இருக்கா?”

“வெளில சொல்லிக்கமாட்டதான், கல்யாணிகிட்ட எதையாச்சும் பேசுவ. அதை யாராவது கேட்டுட்டு ஒண்ணுக்கு ரெண்டா திரிச்சிவிட்டுட்டா பசங்க எப்படி எடுத்துப்பாங்கனு தெரியல. ரெண்டு பேருமே முன்ன மாதிரி இல்லை, கல்யாணிக்கும் நம்ம வீட்டோட கடைசிவரை உறவு நிலைக்கணும்.” மகன்களை எண்ணி அவர் சொல்ல, பத்மா ஆமோதித்தார்.

“அதை சொல்லுங்க, நேத்தி மகிழு பண்ணதை பாத்தீங்களா? சமுவை கூடவே இருந்து அடைகாக்குறான்.” 

“செய்யாம… நான் சொல்ல சொல்ல கேக்காம கல்யாணி வீட்ல தங்கிட்ட. பெரிய மருமக நேரத்துக்கு சமைச்சி போட்டுச்சுதான், ஆனா… இந்த மகிழ் பய சாயந்திரம் வேலை முடிச்சி வந்து லன்ச் பாக்ஸை அப்படியே சேர்ல போட்டுட்டான். மதி பொண்ணு அதை கவனிக்கல. சாப்பிட்டு கழுவாம வேற எடுத்துட்டு வந்துட்டான். ரொம்ப கஷ்டமா போச்சு, பொண்டாட்டி இருந்தா இந்த நிலைமை வந்திருக்குமான்னு நினைச்சிருப்பான். அதுதான் தாங்குறான்.” என்று அவர் ஒரு யூகமாய் சொன்னார்.

“அவனுக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை. சமுன்னா எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சிருப்பா.” பெருமூச்சு பத்மாவிடம்.

“விடு, இனி அவங்க பாத்துக்கட்டும்.” என்று எழுந்து கிளம்பினார் கந்தவேல்.

செழியனும் நன்மதியும் கிளம்பி வந்து அமர, உமையாளை தூக்கிக்கொண்டு இப்படியும் அப்படியும் நடந்தான் மகிழ்நன். என்னவோ அன்று உறக்கம் கலைந்த கடுப்பு அவளிடமும் இருந்திருக்கும் போல நசநசவென அழுதுகொண்டே இருந்தாள்.

“நான் கொஞ்ச நேரம் வச்சிக்குறேன், நீ போய் ரெடியாகு.” என செழியன் மகளை வாங்கிக் கொள்ளவும் அத்தனை ஆசுவாசம் மகிழ்நனுக்கு. நன்றியாக பார்த்துவிட்டு அறைக்குச் செல்ல பின்னூடே மகளை செழியனிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்துவிட்டாள் சமுத்திரா.   

“இன்னைக்குனு அழுதுட்டே இருக்கா, அதுக்குள்ள ஏன் தூக்கிட்டு வந்த?”

“குளிக்க வைக்க வேணாமா? தூக்கம் பாதில கலைஞ்சிட்டா இப்படித்தான் அழுவா எப்போவும்.” என்று சமுத்திரா பாட்டிற்கு சொல்லிக்கொண்டே மகளை குளிப்பாட்ட ஆயத்தம் செய்ய புதிதாக பார்ப்பது போல் பார்த்தான் மகிழ்நன். 

“உங்களை மாதிரியே தூக்கம் கெட்டுறக்கூடாது உங்க பொண்ணுக்கு.” பெருமையாக சொல்கிறாளா இடக்காய் சொல்கிறாளா என்று கண்டுகொள்ள முயன்றான் மகிழ்நன்.

அழுகும் மகளை பேசி கொஞ்சி கெஞ்சி குளிக்க வைத்து வெளியே தூக்கி வர, சமுத்திராவுமே பாதி நனைந்துவிட்டாள்.

“தினம் இப்படித்தான் அவளை குளிக்க வைக்குறப்போ நீயும் நனைஞ்சிடுறியா?” அன்றுதான் எல்லாம் அவன் கருத்தில் பதிகிறது போல. சமுத்திரா அவனை ஒருபார்வை பார்த்துவிட்டு மகளை தயார் செய்ய, 

“சமு.”

“இவ பொறந்ததுலேந்து இப்படித்தான் நடக்குது, இப்போ வந்து கேக்குறீங்க. சீக்கிரம் குளிச்சிட்டு வந்து இவளை பாத்துக்கோங்க, நான் கிளம்பனும்.” என்று சொல்லவும் குளிக்க விரைந்தான்.

செல்லும் அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் இதனை தான் முன்னமே செய்திருக்க வேண்டுமோ? மகளின் அன்றாடத்தில் தந்தையாக அவனையும் அனைத்திலும் இழுத்திருக்க வேண்டுமோ என்று கேள்வி கேட்டுக்கொண்டாள்.

நேரம் செல்ல செல்ல வீடே பரபரப்பானது. அனைவரும் ஒருமித்தமாய் கிளம்பி காரில் பயணித்தனர். சிணுங்கிய உமையாள் காரில் ஏறவுமே அமைதியாகிவிட்டாள். கல்யாணி வசிக்கும் கிராமத்தில் நுழைந்தவுடனேயே விழா குறித்த விளம்பரப் பதாகைகள் கண்களை நிறைத்தது.

பந்தல், சீரியல் லைட், பாட்டு, மேளம் என விழா வீடே அமர்க்களமாக இருந்தது. ஓடி வந்து வரவேற்றாள் கல்யாணி. உடன் அவள் கணவன், மாமனார், மாமியார் எல்லாம் வரவேற்க,

“வந்திட்டியா சமு… நீதான் என்ன பண்ணுவியோன்னு பயந்தேன்.” என்று அவள் கைபிடித்துக்கொண்டாள் கல்யாணி. சமுத்திராவுக்கு ஒருமாதிரியாகிப் போக அவள் கணவனைப் பார்த்தாள். 

“தம்பிங்க இங்க இருக்கோம், எங்களை எல்லாம் கண்ணுக்கு தெரியலையா உனக்கு?” மகிழ்நனுக்கு முன் முந்திக்கொண்டு கல்யாணியின் கவனத்தை தன்பக்கம் திசைதிருப்பிவிட்டான் செழியன்.

மகிழ்நன் ஆசுவாசமாகப் பார்க்க, “இதெல்லாம் பழகிக்கோ.” தம்பிக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிவிட்டு தன் மனைவியை பார்த்து தலையசைத்து அக்காவுடன் பேசிக்கொண்டே அவன் உள்ளே சென்றுவிட, மகிழ்நன் காரிலிருந்து வரிசைப்பைகளை எடுத்தான். பத்மா விவரமாக நகைப் பையை கையோடு எடுத்து சென்றுவிட்டார். 

“மண்டபத்துக்கு பக்கத்துல இருக்குற கோவில்லேந்து வரிசை எடுக்கணும் மகிழு. எல்லாத்தையும் அங்கேயே இறக்கிக்கலாம், காரை கோவிலுக்கு அனுப்பி காத்திருக்க சொல்லிடு.” என்று அவனுடன் சேர்ந்துகொண்டார் கல்யாணியின் கணவர். 

பேத்தியை பார்த்து திருஷ்டி எடுத்த பத்மா, “ஆளும் பேரும் பேசி கடைசியில தீபாவளி பலகாரம் செய்ய ஆளில்லாம போச்சு. வேதாவுக்கு புடிச்சதை செஞ்சி எடுத்துட்டு வருவோம்னு பாத்தா எங்க, எல்லாம் கடைசி நேரத்துக்குதான் வீட்டுக்கே வராங்க. சரி அவங்க வந்ததும் செய்யலாம்னா உன் அப்பா இந்த வருஷம் எதுவும் செய்ய வேண்டாம் கம்முனு இருங்குறாரு.” என்று அங்கலாய்க்க, அவர் கையை கிள்ளிவிட்டார் கல்யாணி.

என்ன என்பது போல் பத்மா பார்க்க, இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த மதியையும் சமுத்திராவையும் கண்காட்டி கூடவே மறுபுறமிருந்து வரும் அவரின் நாத்தனாரையும் காண்பித்தார். கப்சிப்பென்று ஆகிவிட்டார் பத்மா. கணவர் சொன்னது போல் ஏதாவது ஏடாகூடமாகிவிடப்போகிறது என்ற அச்சம் வாய் அடைத்தது. 

வேதாவிடம் நலம் விசாரித்து இவர்கள் பொதுவாக பேச, கல்யாணியின் புகுந்த வீட்டினரும் சேர்ந்துகொண்டனர். பேச்சுக்கள் திசை மாறி எங்கெங்கோ பயணித்து நன்மதியிடம் வந்து நின்றது. முகத்தாட்சண்யம் பார்க்காது நன்மதி எதுவும் பேசிவிடுவாளோ என்ற பீதியில் பத்மா சமாளிக்கப் பார்க்க, அதற்குள் உட்புகுந்த சமுத்திரா,

“பாப்பாவுக்கு பசி வந்திருக்கும். நான் ஆப்பிள் எடுத்துட்டு வரேன் கார்ல இருக்கு, இவளை பாத்துக்கோங்க அக்கா.” உமையாளை நன்மதியிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள் சமுத்திரா.

சட்டென்று அவள் இப்படி செய்வாள் என்று எதிர்பார்த்திராத நன்மதி இன்பமாக அதிர்ந்து உமையாளை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

பேச்சு அப்படியே தடைபட்டு போனது. கூட்டமும் கலைந்தது.

“இப்படி ரெண்டு பேரும் ஒன்னுமன்னா இருந்தா உனக்குத்தான் நல்லது. கம்முனு இருமா நீ, பாத்துக்கலாம்.” தனிமை கிடைத்ததும் கல்யாணி எடுத்துரைக்க, பத்மா கேட்டுக்கொண்டார். அவர் பார்வை அவ்வப்போது மருமகள்களிடம் சென்று வந்தது.

எப்போதும் ஒதுங்கியேதானே இருப்பா என்ற கண்ணோட்டத்துடன் நன்மதியை தொடர்ந்தார். நன்மதிக்கு இதுபோன்ற பேச்சுக்கள் எல்லாம் எதிர்கொண்டு பழக்கம் தான் எனினும் வலிக்காமலா இருக்கும். அதனை புன்னகையின் பின் மறைத்துக்கொள்வாள். இன்று அந்த போலி புன்னகைக்கு சமுத்திரா விடை கொடுக்க, ஆசுவாசமாக உணர்ந்த நன்மதி உமையாளை தன்னுடனே வைத்துக்கொண்டாள். சமுத்திரா அருகில் நின்றுகொண்டாள். இதனை விழா நேரம் கவனித்த செழியனும் மகிழ்நனும் புருவம் உயர்த்திப் பார்த்தனர். 

நின்மதி வீட்டினரும் சமுத்திரா வீட்டினரும் கூட வந்துவிட, உள்வீட்டு நிலவரம் அறிந்தவர்கள் புதிதாக முளைத்திருக்கும் இந்த ஓரகத்திகளின் நெருக்கத்தை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டனர். 

நன்மதிக்கும் சமுத்திராவுக்கும் இடையே முன்பு போலவே பேச்சுக்கள் குறைவுதான் எனினும் சமுத்திரா எடுத்து வைத்த அந்த ஒற்றை அடி நெருக்கத்தை ஏற்படுத்தியது போலிருந்தது.