“வேதா பங்ஷனுக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க சமு. எப்போ வந்து உன்னை கூட்டிக்க?”
அவன் கேள்வியில் அவள் முறைக்க,
“நாமதான முன்ன நின்னு செய்யணும்.” குரல் இறங்கியது.
சென்றாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தே இருந்தாள் சமுத்திரா. பிறந்த வீட்டிற்கு வந்தும் நாட்கள் ஓடியிருக்க, இப்போது புகுந்தகம் சென்றே ஆகவேண்டும். விசேஷத்தில் முன்னே நிற்கவில்லை என்றால் தேவையின்றிய பேச்சுக்கள் வரும். குடும்பத்திற்குள் ஆயிரம் வருத்தமிருந்தாலும் அதனை பகிரங்கப்படுத்தும் எண்ணம் அவளுக்கு துளியும் இல்லை. முன்னே நிற்க தன்னை ஒருவாறு தயார்படுத்திக்கொண்டு அவனைப் பார்த்தாள்.
“என்ன சமு?” அவள் பார்வையின் அர்த்தம் புரியாது கேட்டான்.
“பங்ஷனுக்கு முதல் நாள் நைட் வந்து என்னை கூட்டிட்டு போங்க.” என்றவளுக்குள் லேசான தடுமாற்றம் இருக்கவே செய்தது. மனதின் ஆதங்கங்களை கொட்டிவிட்டு வந்தபின் குடும்பத்தினரை இன்னும் எதிர்கொள்ளவில்லை. உந்துதலில் பிறந்தகம் வந்துவிட்டாலும் திரும்ப புகுந்தகம் சென்று முன்பு போல் இயல்பாக இருக்க முடியுமா என்ற சந்தேகம். இருந்துதானே ஆகவேண்டும், தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
“நைட்டா? முதல் நாள் கடைக்கு போற மாதிரி இருக்கும்.” யோசனை அவனிடத்தில். இவள் நெற்றி சுருக்க,
“டிரெஸ் எடுக்கணும். செழியனும் நாமளும் தனித்தனியா வரிசை வைக்கணுமாம். பூ, பழமெல்லாம் மொதோ நாள் வாங்குனாதான ஃப்ரெஷ்ஷா இருக்கும்.”
கேட்டுக்கொண்டவள் தலையை ஒருவாறு அசைக்க, “உன்னை கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம் நான் கடைக்கு போய் வாங்கிக்கவா?” என்று பார்க்க, இம்முறை சமுத்திராவின் முகம் தெளிந்தது போல் இருந்தது. அதனை பிடித்துக்கொண்டான்.
“ட்ரெஸ் எடுக்க எப்போ போகலாம்? சீர் தட்டுல வைக்க வேதாவுக்கு அப்புறம் நமக்கு தீபாவளிக்கு.” முடிவு செய்து சொல்லாமல் தன்னிடம் கேட்கிறான் என்று இதமாய் உணர்ந்தாள் சமுத்திரா. துணி எடுப்பதற்கு யோசனை கேட்பது சாதாரண விஷயம்தான் அதைக்கூட இப்போதுதான் இவனுக்கு கேட்கத் தோன்றியிருப்பதால் சமுத்திராவுக்கு இதுவே பெரிய மாற்றமாய் தோன்றியது. இவளுக்கு தோன்றிய யோசனையை பகிர்ந்துகொண்டாள். ம் கொட்டிக்கொண்டவனும் அப்பொழுதிலிருந்தே நாட்களை எண்ணத் துவங்கிவிட்டான்.
அன்றைக்கு பரபரப்பாக வாசலுக்கும் சமையலறைக்கும் நடந்தார் பத்மா. செழியன் அவரைப் பார்ப்பதும் கையிலிருந்த பட்டியலைப் பார்ப்பதும் என இருந்தான். வாங்கியிருந்த பொருட்களை சரிபார்த்து நன்மதியிடம் நகர்த்த பொருட்களை பைகளில் போட்டாள் அவள். சிறிது நேரத்தில் வண்டிச் சத்தம் கேட்க வேகவேகமாக வெளியே சென்றார் பத்மா.
மகிழ்நன் வண்டி நிறுத்தவும் சமுத்திரா இறங்கிக்கொள்ள, அவர்களை நெருங்கி பேத்தியை வாங்கிக்கொண்டு கொஞ்சலில் இறங்கிவிட்டார் பத்மா. தயக்கத்துடன் அவரை ஒருபார்வை பார்த்துவிட்டு சமுத்திரா உள்ளே நுழைய, நன்மதி வரவேற்பாக புன்னகைத்தாள். செழியன் நலம் விசாரித்து உமையாள் எங்கே என்று எட்டிப் பார்க்க, பத்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டு அவரிடம் என்னவோ சொல்லியபடி ஒய்யாரமாக அவர் இடுப்பில் அமர்ந்திருந்தாள்.
“இப்போதான் வீட்டுக்கே உயிர் வந்த மாதிரி இருக்கு.” என்றபடி பேத்தியுடன் அமர்ந்துவிட்டார் பத்மா.
பூ பழங்கள் வாங்குவதற்காக மகிழ்நன் செழியனை அழைக்க,
“நீ இன்னும் டிரெஸ் எடுக்கல. சேர்ந்து போனப்போவே எடுக்கலாம்னு சொன்னேன் நீதான் என்னென்னவோ காரணம் சொன்ன.” என்றார் பத்மா இடைபுகுந்து.
சமுத்திரா கையிலிருந்த பைகளை அப்போதுதான் கவனித்தார் பத்மா, “எல்லாம் தனித்தனியா இஷ்டத்துக்கு செய்யுற அளவுக்கு வந்தாச்சு.” பெருமூச்சுடன் அவர் சொல்ல, வேதாவுக்கு எடுத்த உடையை பிரித்துக்காண்பித்தாள் சமுத்திரா.
உமையாளை கீழே இறக்கிவிட்டு அதனை வாங்கி இப்படியும் அப்படியும் பார்த்தவர், “புடவை எடுக்க சொன்னா பாவடை தாவணி எடுத்துட்டு வந்திருக்கீங்க. அதுவும் இந்த தாவணி இத்தினி மெலிசா இருக்கு, எப்படி போட முடியும்? உங்க எல்லாருக்கும் இன்னும் விவரம் புரியாதுனுதான் சேர்ந்து எடுக்கலாம்னேன் கேட்டாதான.” பத்மா அங்கலாய்க்க,
“செழியன் புடவை எடுத்திருக்கான், அதுதான் நான் மாத்தி எடுத்தேன். புடவை எப்போ வேணும்னாலும் கட்டலாம், தாவணி இப்போ போட்டாதான… இப்போல்லாம் இந்த மாதிரி மாடல்தான் பேஷனாம். புடவை மாதிரியே பட்டு ஜரிகை வச்சு தச்சிருக்குற பாவாடை, கல் வச்ச பிளவ்ஸ், நெட்டட் தாவணி. பாக்கதான் மெலிசா தெரியுது, புடவை கட்டுற மாதிரி மடிப்பு வச்சா தாவணி நல்லா இருக்கு. கடைக்காரங்க மடிப்பு வச்சி காமிச்சதுக்கு அப்புறம்தான் வாங்குனோம்.” என்று நீண்ட விளக்கமாக கொடுக்க, மகனைதான் கண்சிமிட்டாது பார்த்திருந்தார் பத்மா. இது நன்றாக இருக்கிறது எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னால் எதிர்கேள்வி கேட்காமல் அதற்கு காசு கொடுத்துவிடுவான் சின்னவன். இன்று இத்தனை விளக்கம் கொடுக்கிறான். இதெல்லாம் இவனுக்கு தெரிந்திருக்கிறதே என்று பார்க்க, அவனின் பார்வை மனைவியிடம்.
மனைவியின் யோசனைப்படி, அவளின் தெரிவுதான் இந்த உடை. பண்டிகைக்கு ஏற்ற விதமாக பார்க்கவே பளிச்சென்று இருந்த பாவடை தாவணியை அவள் தேர்வு செய்யவும் பத்மாவைப் போலத்தான் இவனுக்கும் கேள்விகள் முளைத்தது. அதற்கு சமுத்திரா கொடுத்த பதிலைத்தான் அப்படியே தன் தாயிடம் கடத்தியிருந்தான் மகிழ்நன்.
“நல்லாயிருக்கு சமு, உன் செலெக்ஷனா?” அருகே வந்து அந்த உடையை வாங்கிப்பார்த்துக் கேட்டாள் நன்மதி.
சமுத்திரா புன்னகைக்க, செழியனும் நன்றாக இருக்கிறது என்றவன் அவன் மனைவிக்கு கண்காண்பிக்க, அவள் பத்மாவை கண்காண்பித்தாள்.
“அம்மா, வேதாவுக்கு நம்ம எடுத்த டிரெஸை எடுத்துட்டு வந்து சமுத்திராவுக்கும் காமி.”
“பீரோல இருக்குடா, காலையில எடுக்குறப்போ காமிக்குறேன்.” என்று அலுப்பாக சொல்ல,
“எந்த பீரோல இருக்கு சொல்லு.” என கேட்டுக்கொண்டே பெற்றவர்கள் அறைக்குச் சென்று தேடி எடுத்து வந்து சமுத்திராவிடம் காண்பித்தான் செழியன்.
‘உடனே காமிக்கணுமா?’ என்ற பத்மாவின் முணுமுணுப்பு அங்கிருந்த யார் செவியும் எட்டவில்லை.
அறிந்தோ அறியாமலோ சமுத்திராவின் அழுத்தத்திற்கு காரணமாக இருந்திருக்கிறோம் இனி உரிய மரியாதை கொடுத்து கவனமாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு செழியன் தம்பதியிடம். அதனை சமுத்திராவும் உணர்ந்தாள். முன்பும் பொதுவாக செய்யும் அனைத்தையுமே இவள் பார்வைக்கும் கொண்டுவருவார்கள்தான் ஆனால் இன்று இருக்கும் பதவிசு முன்பு இருந்ததா தெரியவில்லை. நாசூக்காய் ஒரு மரியாதை தொனி வந்தமர்ந்திருப்பதை கவனிக்க முடிந்தது.
நேரமாகிறது என்று மகிழ்நன் செழியனை அழைத்துக்கொண்டு கடைத்தெருவுக்கு கிளம்பிவிட்டான்.
“எல்லாத்தையும் பத்திரமா வைங்க, காலையில மறக்காம எடுத்துட்டு போகணும்.” என சொல்லிக்கொண்டே செழியன் வாங்கியிருந்த புடவையோடு இவர்கள் வாங்கி வந்திருந்த உடையும் கேட்க, சமுத்திரா அந்த பையை மட்டும் கொடுக்க மீதமிருந்த பையில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். தங்களுக்கான தீபாவளி உடைகள் என்று சமுத்திரா சொல்ல அதையும் சேர்த்து எடுத்துக்கொண்டு பீரோவில் வைக்கச் சென்றார் பத்மா.
சமுத்திரா தன் அறைக்குச் சென்று உடைமாற்றி வந்தாள். உமையாள் வழமை போல் அவள் பொருட்களை தேடி எடுத்து கூடம் முழுக்க இறைத்து வைத்தாள். நன்மதி புன்சிரிப்புடன் அதனை கவனித்துக்கொண்டே வரிசைக்கு வாங்கியிருந்த பொருட்களை எடுத்து வைக்க, முதல்முறையாக அவ்வீட்டில் என்ன செய்வது என்று புரியாது ஒருநிமிடம் நின்றுவிட்டாள் சமுத்திரா. வெளியே சென்றுவிட்டு வந்தால் எப்பொழுதும் ஏதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும், நிற்கவே நேரமின்றி எதையாவது செய்துகொண்டிருக்கும் நிலைமைதான். இப்போதும் கால்கள் தன்னால் சமையலறை பக்கம் செல்லப் பார்க்க, அறிவின் விழிப்பில் கால்களை நன்றாக தரையில் ஊன்றி நின்றாள் சமுத்திரா.
“மாவு இருக்கு, உமையாளுக்கு என்ன கொடுக்கணுமோ ஊத்திக்கோ சமு.” என்று வந்தார் பத்மா.
மணியைப் பார்த்த சமுத்திராவுக்கு இப்போது வேறு வழி இருக்கவில்லை. சமையலறை சென்று ஒரு ஈடு இட்லி ஊற்றினாள். தொட்டுக்கொள்ள சட்னி செய்ய வேண்டும். மகளுக்கு மட்டும் செய்துவிட்டு நகர்வதா இல்லை அனைவருக்கும் செய்வதா என்ற குழப்பம். இத்தனை மாதங்கள் எல்லாருக்கும் சேர்த்து செய்துவிட்டு இப்போது மகளுக்கு மட்டுமே என கொஞ்சமாக செய்யவும் மனது முரண்டியது. சுயநலமாய் பட்டது.
“உமையாள் என்ன சட்னி சாப்பிடுவா சமு? தேங்கா ஓகேவா இல்லை தக்காளி அரைக்கவா?” என்று வந்து அவள் குழப்பத்தை தெளிவுபடுத்திவிட்டாள் நன்மதி.
“காலையில தேங்காய் சட்னி சாப்பிட்டா.”
“அப்போ நான் தக்காளி சட்னி அறைக்குறேன் நீ இட்லி ஊத்துறியா?” எளிதாக வேலையை நன்மதி பங்குபோடவும் அத்தனை இலகுவானது சமுத்திராவுக்கு.
சட்னிக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்த நன்மதி வெங்காயத்திற்கு தோல் உரிக்கவும் அவளை பார்த்துக்கொண்டு நின்றாள் சமுத்திரா.
“வேலை முடிச்சி இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டோம், தினம் முடியுமா தெரியல. எனக்கு டைம் இருக்குறப்போ காய்கறி கட் பண்றது, பாத்திரம் க்ளீன் பண்றது எல்லாம் செஞ்சி வச்சிடுறேன். இன்னும் மேல் வேலைக்கு ஆள் கிடைக்கல, நாமதான் செய்யுற மாதிரி இருக்கும்.” என பேசிக்கொண்ட நன்மதி பொறுமையாக நறுக்க, அதனை வாங்கி வேகமாக நறுக்கி வாணலியில் போட்டு வதக்க சமுத்திராவின் கை பரபரத்தது. கட்டுப்படுத்திக்கொண்டாள், இப்படி செய்து செய்துதான் தன்னைத்தானே கீழிறக்கிக்கொண்டோம் அறிவு உபதேசித்தது. நன்மதியின் பொறுமை இவளின் பொறுமையை சோதித்தது. இந்நேரம் அனைத்தையும் நறுக்கி வதக்கியே இருப்பேன் என்று நினைத்துக்கொண்டாள் சமுத்திரா.
“ரெண்டு பேரும் என்ன பண்றீங்க உள்ள? பாப்பா இங்க செல்ப்பை புடிச்சி தொங்குறா பாரு.” என்ற குரலில் பதறியடித்து வெளியே சென்றாள் சமுத்திரா.
கூடத்தில் இருந்த கப்போர்டை பிடித்துக்கொண்டு மேலேற முயன்றுகொண்டிருந்தாள் உமையாள். அதட்டி உள்ளே தூக்கிச் சென்றவள் அவளை ஒருகையால் பிடித்தபடி இடுப்பில் வைத்துக்கொண்டே இட்லி வெந்துவிட்டதா என்று பார்க்க,
“பாப்பாக்கு சுட்டுக்க போவுது சமு. என்ன பண்ற நீ?” நன்மதி பதறிவிட்டாள்.
“எனக்கு பழக்கம்தான், ஒண்ணுமாகாது.” சமுத்திரா இயல்பாக சொல்லிக்கொண்டே ஆவி பறக்கும் தட்டுகளை இட்லி குண்டானிலிருந்து கீழிறக்க, நன்மதிக்கு என்னவோ போலானது.
“நான் எடுக்குறேன், நீ நகரு.”
அவளே வலிந்து வந்து கேட்கவும் நகர்ந்துவிட்டாள் சமுத்திரா. உமையாளுக்கு முதலில் கொடுத்துவிட்டு மீதியை நன்மதி கவனித்துக்கொள்ள, சமுத்திரா வெளியேறிவிட்டாள்.
சிறிது நேரத்தில் ஆண்கள் வந்துவிட, இரவு உணவு துவங்கியது.
வழமை போல் பத்மா பரிமாற அடிக்கடி மனைவியை பார்த்துக்கொண்டான் மகிழ்நன். உமையாளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
“நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா?” கேள்வி மனைவிக்கானது, புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லை.
“என்ன புதுசா கேக்குற, பாப்பா மட்டும்தான் சாப்பிட்டிருக்கா.” என்ற பத்மாவிற்கு தலையாட்டியவன் உணவு முடித்து மகளுடன் கூடத்தில் அமர்ந்துகொண்டான்.
பெண்கள் உணவு முடித்து பாத்திரங்களை ஒழித்துப்போட, நன்மதி மீதி வேலையை கவனித்தாள்.
“சமு எல்லாம் சரியா இருக்கான்னு பாரு, தட்டுல அடுக்குறதுக்கு வசதியா பிரிச்சி அடுக்கிடு.” பத்மா பழக்கம் போல் சொல்லிவிட்டு கால் நீட்டி அமர,
“எல்லாம்தான் செழியன் பாத்துட்டானே.” குறுக்கே வந்தான் மகிழ்நன். எங்கே பழைய பழக்கங்கள் தொடர்ந்து மீண்டும் சிக்கலாகிவிடுமோ என்ற பயம். வருந்திச் சென்றவள் ஒருவழியாய் வீடு வந்துவிட்டாள், இனி கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புடன் இருந்தான் மகிழ்நன்.
“தேடாம கொள்ளாம சட்டுனு சட்டுனு எடுக்குற மாதிரி பிரிச்சி வச்சிட்டா நேரத்தை வளத்தாம வரிசை எடுத்துடலாம், இந்த வேலை எல்லாம் சமு சரியா செஞ்சிடுவா.” என்று பத்மா சொல்ல, முகத்தை அழுந்தத் துடைத்த மகிழ்நன் தானே எழுந்துகொண்டான்.
பத்மாவின் யோசனைக்கு இணங்கி சமுத்திரா பைகளில் இருந்தவற்றை பிரிக்க, இவன் உதவிக்கு சென்றான். குடும்பமே அவனை புருவம் உயர்த்திப் பார்த்தது. செழியன் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, ஓரக்கண்ணால் அதனை கண்டுவிட்ட தம்பிக்காரன் விரல் நீட்டி நாக்கை மடக்கி எச்சரித்தான். செழியனின் புன்னகை இன்னும் விரிந்தது.
“இதை இந்த பையில வைங்க, எல்லாம் ரெண்டு ரெண்டு செட் வைக்கணும்.” என கணவனிடம் சொல்லிக்கொண்டே சமுத்திரா அந்த வேலையை செய்ய, இடைஇடையே உமையாள் வந்து அதனை கலைத்துவிட்டாள். செழியன் அவளை தூக்கிக்கொள்ள, பத்மா இத்தனை ஆப்பிள் வைக்க வேண்டும், பெரிய ஆரஞ்சுபழமாக பார்த்து வை என அதிகாரம் செய்து கொண்டிருந்தார். கணவன் உடனிருந்து உதவியதால் எதுவுமே பெரிதாக தெரியவில்லை சமுத்திராவுக்கு. இயல்பாக இலகுவாக அனைத்தும் மாறிவிட்டதாய் எண்ணி ஆசுவாசம் கொண்டாள்.