*18*

“எங்க கிளம்பிட்ட?” காலையே வெளியே செல்வது போல் தயாராகி நின்ற பத்மாவை பார்த்துக் கேட்டார் கந்தவேல்.

“என்ன கேள்வி இது? நம்ம பேத்தி பெரியவளாகிட்டா போய் பாக்க வேணாமா. செழியனும் மகிழும் ஒன்னும் சொல்லல அதுக்காக மூணாவது மனுஷங்க மாதிரி அவங்க விஷேஷம் வைக்குற அன்னைக்கு போய் நிக்க முடியுமா?” அங்கலாய்ப்பாக அவர் கேட்க, கந்தவேலின் முகம் சுருங்கியது.

“எல்லாருக்கும் வேலை இருக்கு.”

“நான் யாரையும் கூப்பிடலையே, எல்லாரும் அவங்களுக்கு முக்கியமானதை செய்றாங்க. எனக்கு என் பேத்தி முக்கியம், நான் போறேன்.” என்று நின்றார்.

“ப்ச், எப்படி போவ நீ?”

“பஸ் ஏத்தி விடுங்க.”

வேறெதையும் யோசிக்காது அப்போதைக்கு சரியென்றவர் செல்லும் போது பழங்கள் வாங்கிச் செல்ல என்று பணம் கொடுக்க, பத்மாவின் புருவம் உயர்ந்தது.

“பேர பசங்கன்னு வந்துட்டா மட்டும்தான் பர்ஸ் வெளில வருது.”

“என் பசங்களுக்கு எல்லாம் செஞ்சிட்டேன், இனிமே எல்லாம் பேரபுள்ளைங்களுக்குதான்.” என சொல்லிக்கொண்ட உண்ண அமர, செழியனும் நன்மதியும் கிளம்பினர்.

“விசேஷத்துக்கு முன்னாடி ரெண்டு தங்கச்சிங்களுக்கு தீபாவளி சீர் வச்சிட்டு வந்துருவோம்.” திடுமென நினைவு வந்தவராய் சொல்ல, பத்மாவுக்கு அதில் உடன்பாடு இருப்பது போல் தெரியவில்லை.

“நான் போறேன்னு சொன்ன மகிழு மாமியார் வீட்டுக்கு போயிட்டான். அவனை எதுவும் கேக்காம ரெண்டு இடத்துக்கும் நாமளே போவணுமா?”

“இப்போ போற நிலைமையில இருக்கானா அவன். நானே அவன் பிரச்சனை இல்லாம இருந்தா போதும்னு இருக்கேன், நீ எதையும் இழுத்துவிடாத. நாளைக்கு லீவ் போடுறேன் போய் சீர் வச்சிட்டு வந்துரலாம்.” 

“இன்னைக்கு கல்யாணி கூட தங்கலாம்னு இருக்கேன்.”

“தங்குறியா?” அதிர்வாக நிமிர்ந்து பார்த்தார் கந்தவேல்.

அந்நேரம் கிளம்பி வந்த மகிழ்நனும், “எங்க தங்குற?” என்று பார்க்க,

“ஏன் என் மக வீட்ல தங்குனா என்ன? இத்தனை வருஷம் வீடே கதின்னு இருந்தேன்ல, இப்போ எனக்கு நேரம் வந்திருக்கு.” 

“கல்யாணி வீட்டாளுக இருப்பாங்கன்னு எப்போதும் அங்க தங்க மாட்ட. இப்போ என்ன?” பத்மா வெளியே தங்குவதில் தன் பிடித்தமின்மையை வெளிப்படுத்தினார் கந்தவேல். 

“எப்போதும்தான் அவங்க இருக்காங்க, அதுக்காக இந்த மாதிரி நேரத்துல கூட பொண்ணுக்கு ஒத்தாசையா இருக்கக் கூடாதா என்ன? இந்த ஒருகாரணத்துக்காகவே அவளை கட்டிக்கொடுத்த இத்தனை வருஷத்துல ஒருநாளும் அங்க தங்குனதில்லை.” 

கந்தவேல் மகனைப் பார்த்தார். வீட்டில் ஒரு மருமகள்தான் இருக்கிறாள், பத்மாவும் இல்லையென்றால் வீடு சரியாய் இயங்குமா என்பதில் சந்தேகம். அதுவும் மகளுக்கு ஒத்தாசை செய்தாக வேண்டிய நிர்பந்தமும் இல்லை. மகிழ்நன் எதுவும் சொல்லவில்லை, அவனாகவே எடுத்துப் போட்டு உண்டான்.

“நீ இல்லைனா இங்க சரிவராது பத்மா. காலையில போயிட்டு நைட் வந்துடு.” மகன் எதுவும் சொல்லவில்லை என்கவும் அவரே முடிவாக சொன்னார்.

“ஏன் ஏன்? வீட்டுக்கு வந்த மகராசிங்க அவங்க விருப்பத்துக்கு நினைச்ச நேரம் வெளில போறப்போ நான் போவக்கூடாதா?” பத்மா எகிறிக்கொண்டு வர, மகிழ்நன் நிமிர்ந்தான். கந்தவேலும் பதிலுக்கு பாய்ந்தார். 

“வீம்புக்குதான் அங்க தங்கணும்னு நிக்கிறியா அப்போ?”

“நான் மட்டுமே வீடே கதின்னு கிடக்கணுமா?” விடவில்லை பத்மா. சின்ன மருமகளிடம் ஒட்டிய அளவுக்கு பெரியவளிடம் ஒட்ட முடியவில்லை. இவர் ஒரு பக்கம் சென்றால் அவள் மறுபக்கம் இழுக்கிறாள். இவர் ஒன்று சொன்னால் அவள் ஒன்று செய்கிறாள், அதனை அனுசரித்து செல்வதைத் தவிர இவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை. என்னவோ வயதான காலத்திலும் தழைந்து போவது போல் தோன்ற அவரால் நிம்மதியாக வீட்டில் வளம் வரமுடியவில்லை. எந்நேரமும் பேத்தியின் குரல் கேட்டு அவள் வீட்டை சுற்றி வருவதை பார்க்கையிலேயே இவருக்கு நேரம் ஓடிவிடும். இப்போதோ எல்லாரும் கிளம்பிச் சென்றபின் ஓவென்று இருக்கும் வீட்டில் அடைக்கப்பட்டது போல் உணர ஆரம்பித்துவிட்டார். விடுதலை தேடி புறப்படுவதற்கு ஏதுவாக மகள் செய்தி சொல்லவும் உடனிருக்கும் அவள் மாமியார் மாமனாரை பொருட்படுத்தாது கிளம்பிவிட்டார்.   

“உனக்கு போகணும்னா போயிட்டு வாம்மா. எல்லாரையும் கை புடிச்சி இழுக்காத.” என்றான் மகிழ்நன்.

“கம்முனு இரு மகிழு. உன் அம்மா பாட்டுக்கு கிளம்பி போயிட்டா மருமக கையை எதிர்பாத்துட்டு இருக்க முடியுமா நான்? எதுக்கு அவங்களுக்கு சிரமம் கொடுக்கணும்.” கந்தவேலுக்கு அவர் கவலை. என்றுமே அவர் தேவைகளை கவனிக்க மனைவி கூடவே இருந்துவிட்டார், இப்போது போய் மருமகள் கையை எதிர்பார்க்க முடியுமா என்ற தயக்கம்.

“என் மருமகளுங்க நான் இருக்கேங்குற தைரியத்துல அவங்க விருப்பத்துக்கு இருக்காங்க. உங்க அம்மா இருந்தா நானும் பையை மாட்டிட்டு கிளம்பியிருப்பேன் இப்படி கேட்டுட்டு நின்னிருப்பேனா, ஆனா அவங்க இல்லையே அதுக்கு நான் என்ன பண்றது?” 

இதனை எப்படி எடுத்துக்கொள்வது என்று பார்த்தான் மகிழ்நன். அம்மா சொல்வதில் என்னவோ இருப்பது போலவும் இருந்தது இல்லாதது போலவும் இருந்தது. சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஒன்றுமட்டும் நிச்சயம் அம்மாவோ மனைவியோ தங்களைப் போல் நினைத்த மாத்திரம் அவர்களால் வெளியே கிளம்பிச் செல்ல முடியவில்லை, அனைத்திற்கும் காரணமும் அனுமதியும் வேண்டியிருக்கிறது. என்னவோ மனம் பிசைந்தது. சமுத்திராவும் இப்படி நினைத்து எத்தனை நாள் அவள் வீட்டிற்கு செல்லாமல் இருந்திருப்பாளோ? மனைவியின் பால் மனம் இளகியது. இரவு பேசியது, காலை தாமதமாக எழுந்ததால் வங்கிக்கு சென்ற பின் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தான். 

கந்தவேலும் பத்மாவும் ஒருவழியாக உடன்படிக்கைக்கு வந்தார்கள். அதன்படி நாளை இரு நாத்தனாருக்கும் சீர் வைத்துவிட்டு நேரே கல்யாணி வீடு சென்றுவிடுவது. பத்மா அவ்விரவு அங்கு தங்கிக்கொள்ள கந்தவேல் மட்டும் வீட்டிற்கு வருவதாய் திட்டம்.

‘இப்போ கிளம்பிட்டேனே.’ நிராசையாக கிளம்பி நின்ற தன் கோலத்தை எரிச்சலுடனும் அலுப்புடனும் பார்த்தார் பத்மா. மனைவி கடுப்பாவதை உணர்ந்த கந்தவேல் அவரை உண்ணச் சொல்ல, இது ஒண்ணுதான் குறைச்சல் என்று முனகிக்கொண்டே சேலை மாற்ற சென்றுவிட்டார்.

தாடையில் கைவைத்து பாவம் போல் மகிழ்நன் தன் அப்பாவைப் பார்க்க, “நம்ம  பாடு இவங்களுக்கு எங்க புரியுது. எதாச்சு சொன்னா அலுத்துக்குறாங்க.” என்று நகர்ந்தார் அவர்.

ஊன்றி கவனிக்கும் போதுதான் உறவுகளின் சிக்கல், அவர்களின் மனவோட்டம், விட்டுக்கொடுக்கும் தன்மை என எல்லாம் புரிவது போல் இருக்கிறது. புரிந்தால் மட்டும் போதுமா அதனை பாதகமின்றி யார் மனமும் கோணாது நடைமுறைப்படுத்த வேண்டுமே. 

வங்கி சென்றதும் வேலைகள் இழுத்துக்கொண்டாலும் மனைவிக்கு அழைத்துப் பேசினான். நேற்று இரவு பேசியது கனவோ என்று எண்ணும் வண்ணம் வந்த சமுத்திராவின் வெகு இயல்பான பேச்சுக்கள் அவனை யோசிக்க வைத்தது. வீட்டிற்கு வா என்று வாய் வரை வந்துவிட்டதை விழுங்கிக் கொண்டான். வீட்டில் நடக்கும் விஷயங்களை மேலோட்டமாக பகிர்ந்து கொண்டான். 

மறுநாள் பெரியவர்கள் நேரமே கிளம்பிவிட, சமையலறையில் செழியனும் நன்மதியும் சிரித்துப் பேசிக்கொண்டே வேலை செய்ய எதர்ச்சையாக அதனை கவனித்த மகிழ்நன் அப்படியே நின்றுவிட்டான். செழியன் என்னவோ சொல்ல கையிலிருந்த கரண்டியால் செழியன் தோளில் ஒரு அடி போட்டாள் நன்மதி. இவன் விழி விரிக்க, சிரித்துக்கொண்டே தன் முன் நீண்ட கரண்டியை பிடித்திழுத்து மனைவியின் நெற்றி முட்டி நின்றான் செழியன். கண்களை மறைத்தார் போல் முகத்தை தேய்த்துவிட்டபடி நகர்ந்துவிட்டான் மகிழ்நன். ஆனால் அவன் பார்வை அவர்களைத் தொடர்ந்தது. 

அம்மா இருந்தால் பெண்கள் சமையலறையிலும் இவர்கள் வேலைக்கு கிளம்புவதிலும் இருப்பர். செழியன் மட்டும் அவன் மனைவி சமையலறையில் தென்படும் நேரத்தில் உடன் நிற்பான். அதற்கே பத்மா சண்டை பிடிப்பார். பதிலுக்கு செழியன் பேசி சமாதானம் செய்வான் இல்லையா எதிர்த்து நிற்பான். அங்கு மட்டுமா அப்படி எங்கு நன்மதி இருந்தாலும் அங்கு செழியனை பார்க்க முடியும். 

ஆனால் தான்? எங்குமே சமுத்திராவின் அருகில் இருந்ததில்லை. நிதர்சனம் மீண்டும் மீண்டும் பொட்டில் அறைய, உதட்டில் உறைந்த புன்னகையுடன் ரகசிய கண்சிமிட்டல்களை பரிமாறிக்கொண்டு செல்லும் அண்ணன் அண்ணியை ஏக்கத்துடன் பார்த்து அமர்ந்திருந்தான் மகிழ்நன். 

இதைத்தான் சமுத்திரா தன்னிடம் எதிர்பார்த்தாளா? இப்படியெல்லாம் ஒன்றும் செய்யாததுதான் அவளை அழுத்தத்திற்கு தள்ளி இருக்குமோ, நினைக்கையிலேயே சோர்வு வந்தது.

அவன்தான் கடைசியாக வேலைக்கு கிளம்பி நேரமே வீடு வருபவன் என்பதால் வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை கையோடு கொண்டு சென்று மாலை நேரமே வீட்டிற்கும் வந்துவிட்டான். யாருமில்லாத வீடு அவனின் அலுப்பை பன்மடங்காக்கியது. எப்போதும் வீட்டிற்கு வந்ததும் கைக்கு தண்ணீரும் காபியும் வந்துவிடும். இன்று அவனை கவனிக்க ஆளில்லை. பழக்க தோஷத்தில் நாவும் நரம்பும் காபி கேட்டது. சமையலறை புறமே எட்டிப்பார்க்காதவன் அவசரத்திற்கு சுமாரான காபி போடுமளவுக்கு கூட தெரிந்து வைத்திருக்கவில்லை. சோர்வுடன் வெளியே சென்று குடித்து வரலாம் என்று கிளம்ப, செழியனிடமிருந்து அழைப்பு வந்தது. 

“அப்பா அக்கா வீட்லையே சாப்பிட்டுதான் கிளம்புறாங்களாம். தினம் வீட்லதான் சாப்பிடுறோம் அதனால இன்னைக்கு கிச்சனுக்கு லீவ். நாங்க வெளில சாப்பிட்டு வந்துர்றோம். நீ அங்க பாத்துக்குறியா இல்லை நான் பார்சல் வாங்கிட்டு வரவா?” என்று கேட்க, இவனின் அறிவு இவனை காரித்துப்பாத குறை.

‘என்றேனும் ஒருநாளாவது சமுத்திராவை வெளியே அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்ததை வாங்கிக்கொடுத்து அவளது சமையலுக்கு விடுப்பு கொடுத்திருப்பாயா?’ 

“மகிழ் என்னடா?”

“நான் பாத்துக்குறேன்டா.” அழைப்பை துண்டித்துவிட்டவனுக்கு மனைவியிடம் செல்லும் ஆவல். வீட்டுச் சாவி இவனிடம் இருக்க, யாரேனும் ஒருவர் வரும்வரை எங்கும் நகர முடியாதே… தவிப்பாக உணர்ந்தான். நினைத்ததை உடனே செய்ய முடியவில்லை என்று எரிச்சல் மண்டியது. அவர்களுக்காக தான் காத்திருக்க வேண்டியிருக்கிறதே, அதில் சிறு சுணக்கம் கூட. இத்தனை நாட்கள் சமுத்திராவுக்கும் மற்றவர்களின் நலன்களை சார்ந்து வாழ்கையில் இப்படித்தான் இருந்திருக்கும் என்று புரியவில்லை அவனுக்கு.

அவளுக்கு அழைத்துப் பேசினான், செழியன் சொன்னதை பகிர்ந்தான். வெளியே சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டவள் மகளை பக்கத்து வீட்டில் விட்டிருப்பதாகவும் சென்று அழைத்த வரவேண்டும் என்று அலைபேசி அழைப்பை துண்டித்துவிட, இவனது தவிப்பு கூடிப்போனது. யாருமில்லாமல் நினைத்த மாத்திரம் மனைவியிடம் செல்ல முடியாமல் அங்குமிங்கும் ஊரை சுற்றினான். செழியன் வீட்டிற்கு வந்து அழைப்பு விடுக்கவும் சாவியுடன் சென்றான்.

“சாப்பிட்டியா?” செழியன் அவன் முகம் பார்க்க, ஆயிற்று என போலியாக தலையசைத்தான். என்னவோ எதுவும் பிடிக்கவில்லை. அப்படியே சென்று கட்டிலில் படுத்துவிட்டான்.

உருண்டு பிரண்டு கடினப்பட்டு உறங்கி எழுந்து வங்கிக்கு செல்ல ஏதுவாக தயாராகி வெளியே சென்றால் கந்தவேல் மட்டுமே உணவு மேசையில் அமர்ந்திருந்தார்.

“என்ன லேட் பண்ணிட்ட. நைட்டும் நான் வர்றதுக்கு முன்னாடியே தூங்கிட்ட இப்போவும் இவ்வளவு நேரம்.”

உச்சு கொட்டியபடி இவன் உண்ண அமர, பாத்திரத்தை அவனுக்காக தள்ளி வைத்தார். பசியில் வேக வேகமாக உள்ளே சென்றது. ருசி சுமார் என்று வயிறு நிரம்பிய பின்னே உரைக்க அதன்பின் இறங்குவேனா என்று நாக்கில் நின்று சண்டித்தனம் செய்தது அந்த வெண்பொங்கல். மீதியை வீணடிக்க மனமின்றி உருண்டைகளாக உருட்டி மாத்திரை போல் விழுங்கிவிட்டான் மகிழ்நன். கந்தவேலுவும் பாவமாக அதையே செய்துவிட்டு, “இதுக்குதான் உன் அம்மாவை இருக்க சொன்னேன்.”

“ப்ச், ஒன்னும் பண்ணமுடியாது. சமைக்க மட்டுமா இருக்கேன்னு இப்போதான் ஒருத்தி ஆடிட்டு போயிருக்கா, நீங்க அடுத்து அம்மாவுக்கு சலங்கை கட்டாதீங்க. தாங்காது.” என சொல்லிக்கொண்டே எழுந்தவன், “என் லன்ச் பேக் எங்க?” 

“எனக்கு லன்ச் கட்டிட்டேன்னு சொல்லுச்சே மதி. உனக்கும் கட்டியிருக்கும். ஒழுங்கா பாரு.” என்றார் கந்தவேல்.

“ப்ச், இங்க இல்லை.” என்றான் சமையலறை மேடையில் தேடிவிட்டு. 

கந்தவேலும் மகனுக்காக வந்து தேடினார். எங்கும் இல்லாமல் போக, யோசனையுடன் கூடத்திற்கு வந்த மகிழ்நன் பார்வையில்பட்டது அவன் உணவுப்பை. எப்பொழுதும் வேலை முடிந்து வந்தால் எந்த இருக்கையில் அமர்கிறானோ அங்கேயே அப்படியே வைத்துவிடுவான். நேற்றும் அப்படியே வைத்திருக்க, அது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. 

‘பேக் பண்ணி இங்கேயே வச்சிட்டாங்களோ.’ என்ற எண்ணத்துடன் பையை எடுக்க, அதன் கணமே அவனை யோசிக்க வைத்தது.

வேகவேகமாக அதனை திறந்து பார்த்தான். நேற்று மதியம் சாப்பிட்டு கழுவாமல் வைத்த உணவு டப்பி கெட்டுப்போன வாடை வீச, கை தவறவிட்டான். சத்தத்தில் கந்தவேல் வந்து பார்க்க,

“நேத்தி எடுத்துட்டு போனது இன்னும் கழுவல.” முகச்சுழிப்புடன் அப்பாவை பாவமாக பார்க்க, இருவருக்குமே அந்நிமிடம் தத்தம் மனைவி கண்முன் வந்து போயினர்.

ஒன்றும் சொல்ல முடியாமல் மகனுக்காக அந்த பாத்திரத்தை கந்தவேல் வாங்கிக்கொண்டு கழுவப் போக, பின்னோடே சென்றான் மகிழ்நன்.

மனைவியும் அம்மாவும் செய்யும் போது தெரியாத சுமை இருவருமே இல்லாத போது புரிந்தது. அப்பா பாத்திரத்திற்கு சோப் போட, மகன் தண்ணீரில் கழுவினான். பின் அவனுக்கு தேவையான அளவு டப்பியில் உணவை நிரப்பி வேலைக்குக் கிளம்பினான்.

இரவு பத்மா வந்துவிட அப்பாடா என்றானது ஆண்களுக்கு. விஷேசத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது என்று தேதியோடு, சீர் செய்ய என்னவெல்லாம் வாங்க வேண்டுமென்றும் சொல்ல, இரவே மனைவியிடம் சரணடைந்துவிட்டான் மகிழ்நன்