“உன்னை தேடி உடனே வராம இருந்ததுகூட உன்னை மேல மேல நோகடிக்க வேண்டாம்ங்குறது ஒரு காரணம். இன்னொன்னு நீ சொன்னதெல்லாம் எனக்கு புரிஞ்சுக்கவே நேரம் தேவைப்பட்டுச்சு.” என்று அவன் பேச, அவள் வேறு பேசினாள்.
“வீட்ல இருக்குறவங்களை விட்டுட்டு எனக்கு மட்டும் தனியா செய்யுணும்னு இல்லை. பொதுவா ரெண்டு முறை எல்லாரோடையும் போறோமா ஒரே ஒரு தடவை எனக்காக எதுவும் செஞ்சீங்களாங்க? எல்லாருக்கும் எல்லாருக்கும்னு பார்த்து இந்த மூணு வருஷத்துல பொக்கிஷமா சேமிச்சு வச்சிக்குற மாதிரி நமக்குன்னு தனியா எந்த நியாபகமும் இல்லை. எனக்குத்தான் இவ்வளவுநாள் தோணல, உங்களுக்கு கூட நமக்காக செய்யணும்னு தோணலையே. நானாவது வீட்ல இருக்கேன்னு அடைச்சிருறீங்க, நீங்க நாலு இடம் போயிட்டு வரீங்க. நிறைய பேரை பாக்குறீங்க, அப்போகூட எனக்கு செய்யணும்னு தோணலையாங்க.” அன்று போலவே இன்றும் மனம் வருந்தி அவள் கேட்க, எதுவும் சொல்ல முடியாத ஆதங்கத்துடன் பார்த்தான் மகிழ்நன்.
“என் மேலதான்டி தப்பு. எனக்காக, நம்ம குடும்பத்துக்காக பார்த்த உன்னை நான் பாத்திருக்கணும்.” அவன் தணிந்துவிட, தவறு என்று அவன் ஒத்துக்கொண்டதே அவளுக்கு அத்தனை ஆசுவாசம் கொடுத்தது.
“பாப்பா வளந்ததும் நானும் வேலைக்கு போவேன்.”
“உனக்கு தோணுறதை செய்.” என்பதைத்தவிர வேறு என்ன சொல்லிவிட முடியும் மகிழ்நனால். தவறெல்லாம் தன்மீது என்று தணிந்து போபவனுக்கு பிரச்சனை இதோடு முடிந்தால் போதும் என்று இருந்தது.
“வீட்டுக்கு போலாமாடி?” எதிர்பார்ப்புடன் அவன் பார்க்க, அவள் தலை மறுப்பாக அசைந்தது.
“சமு?”
“நீங்க சொல்றது எல்லாம் இதுக்கு புரியுது.” என்று நெஞ்சை தொட்டுக்காட்டியவள் தொடர்ந்து தலையை சுட்டிக்காட்டி, “இதுக்கு இது போதலை.”
“அதுக்கு புரிய வைக்க என்ன பண்ணனும்?” இதற்கு மேல் தனக்கு பேசத் தெரியவில்லை என்பது போல் பார்த்தவனுக்கு அதனை நேரடியாக ஒத்துக்கொள்ள அத்தனை தயக்கம்.
சமுத்திராவோ கையை அவனிடமிருந்து உருவிக்கொண்டு போகலாம் என்று எழுந்தாள். சிணுக்கத்துடன் எழுந்து கொண்டவன் பிள்ளையை தூக்கப்போக அவள் கைகளில் அகப்படமாட்டேன் என சிரித்துக்கொண்டே ஒன்றிரண்டு முறை கோவிலை சுற்றி ஓடவிட்டாள். மூச்சுவாங்க கைகளை இடுப்பில் வைத்து நின்றுவிட்டான் மகிழ்நன். அப்பாவை தோற்கடித்துவிட்ட குஷியில் இன்னும் இரண்டு சுற்று சுற்றினாள் உமையாள். பொறுத்துப்பார்த்த சமுத்திரா வண்டியின் அருகே சென்று நின்றுகொண்டு தான் கிளம்புவதாக சத்தமாக சொல்ல, ஓடிவந்து அவள் காலை கட்டிக்கொண்டது சின்ன சிட்டு. புருவம் உயர்த்தி மெச்சிக்கொண்ட மகிழ்நன் வண்டியை எடுக்க, கைதட்டிக்கொண்டு ஆரவாரமாக அமர்ந்தாள் உமையாள். பெற்றவர்களுக்கு அவளின் மகிழ்வில் மனம் இளகியது.
வீடு திரும்பிய மகள் மருமகனை குறுகுறுவென பார்த்தார் கலைவாணி. போலியாக அவரை முறைத்த சமுத்திரா மகளுக்கு உணவு பிசைய, பின்னோடே வந்துவிட்ட கலைவாணி, “மாப்பிள்ளை என்ன சொல்றாரு?”
“ரொம்ப நாள் எல்லாம் இங்க இருக்கமாட்டேன், கவலை வேணாம்னு அப்பாகிட்ட சொல்லிடு.” என்று சொல்லி மகளை தேடிக்கொண்டு செல்ல, எதற்கு சம்பந்தமில்லாமல் இப்படி சொல்கிறாள் என்ற யோசனையோடே கணவருக்கு அழைத்துவிட்டார்.
“முன்னாடியே வந்துட்டாரா அப்போ? இப்போ வந்து சொல்ற.”
“பேச விடுங்க முதல்ல. பாப்பா சீக்கிரம் கிளம்பிடுவேன்னு உங்ககிட்ட சொல்ல சொல்லி சொல்றா. திடீர்னு எதுக்கு அப்படி சொல்லணும்? என்ன பண்ணி வச்சீங்க?”
அமைதி மறுபுறம்.
“உன்னைத்தான்யா கேக்குறேன்.”
“போன்ல பேசுனதை சமு கேட்டுருக்குமோ? நேத்தி அரசு பேசுனான், மாப்பிள்ளைக்கிட்ட பேசுறேன்னு சொன்னான். பாப்பா இப்படி வந்துட்டாளே சம்பந்தி வீட்ல என்ன நினைப்பாங்க, நேர்ல போய் பேசணும்னு சொல்லிட்டு இருந்தேன்.” மகனிடம் பேசியதை மேலோட்டமாக பகிர்ந்தார் அய்யாவு.
“நம்ம பொண்ணு என்ன தப்பா பேசிட்டானு இப்போ அங்க போய் மன்னிப்பு பத்திரம் வாசிக்கணுங்குறேன்?” எகிறிக்கொண்டே அலைபேசியோடு பின்புறம் சென்றார் கலைவாணி.
“பேசுனது சரி தப்பு இப்போ பிரச்சனையில்லை, நாளைக்கு சமு அங்கதான் போய் வாழனும். இப்படி பேசிட்டு வந்துட்டா நாளைக்கு முகம் பாத்துக்க வேணாம்? சும்மா யோசிக்காம நீயும் பேசாத. சண்டை போட்டு பொண்ணு வீட்டுக்கு வந்துச்சே சமாதானப்படுத்தி அனுப்பணும்னு இல்லாம அமைதியா பொண்ணை கூடவே வச்சிகிட்டோம்னு நம்மளை பத்தி அவங்க நினைக்க மாட்டாங்களா.”
“அவங்க நினைப்பாங்கனு நம்ம பொண்ணை விடமுடியுமா? அங்க போனா என் பொண்ணு மேல தப்புனு பேச முடியுமா இல்லை தப்பில்லைனு பேச முடியுமா? அப்படி பேசுனா இன்னும் பிரச்சனை பெருசாகும்.” என கலைவாணி அடக்க,
“அதுக்காக எவ்வளவுநாள் அமைதியா இருக்க முடியும்? அரசு கிளம்பி வரேன் போய் பேசலாம்னு கூட சொன்னான்.”
“அப்பாவும் புள்ளையும் கம்முனு கிடங்க. மாப்பிள்ளை பாக்க வந்துட்டாரு, இன்னைக்கு இல்லைனாலும் தீபாவளிக்குள்ள சமாதானம் செஞ்சி வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாரு. தேவையில்லாம நீங்க தலையிட்டு பெருசு பண்ண வேணாம். அதோட உங்க பையன்கிட்ட இங்க நடக்குறதை முழுசா சொல்லிக்கிட்டு கிடக்காதீங்க, நானே அவன் இல்லைனு சந்தோசப்பட்டுட்டு இருக்கேன். இங்க நடக்குறதை அப்படியே அவன் பொண்டாட்டிகிட்ட சொல்லுவான், அவ அவ வீட்டுக்கு சொல்லுவா. இவங்களாம் புறணி பேசுறதுக்கு என் பொண்ணோட கஷ்டத்தை கடைபரப்ப முடியாது.” என்றும் பேச, இதுவேறா என்று நினைத்துக்கொண்டார் அய்யாவு.
“அதெல்லாம் ஆச்சு ஆச்சு. இன்னைக்கு எப்படி சாப்பிடாம போறாருனு நானும் பாக்குறேன்.” சவால் போல் சொல்லிக்கொண்டு அழைப்பை துண்டித்தவர் உள்ளே செல்ல, குடும்பமாக அமர்ந்து பிள்ளைக்கு ஊட்டியபடி பேசிக்கொண்டிருந்தனர் சமுத்திராவும் மகிழ்நனும். மனம் நிறைந்து போனது.
“சாப்பிடுறீங்களாடி? எடுத்து வைக்கவா?” என்றார் மணியை பார்த்துக்கொண்டே.
மகிழ்நனும் மணியை பார்த்துவிட்டு சமுத்திராவைப் பார்க்க, அவள் உமையாளுக்கு ஊட்டுக்கொண்டிருந்தாள்.
“பாப்பாவுக்கு ஊட்டிட்டு வரேன்மா.”
“நான் ஊட்டிவிடுறேன், நீயும் மாப்பிள்ளையும் சாப்புடுங்க.” என உமையாளை தூக்கிக்கொண்டு பின்னே சென்றுவிட்டார்.
சமுத்திரா சமைத்து வைத்ததை எடுத்து வந்து வைக்க, கைகழுவிவிட்டு வந்தமர்ந்தான். இங்கு உணவு மேசை கிடையாது, கீழே அமர்ந்து உண்ண வேண்டும். சமுத்திரா அவன் அருகே அமர்ந்துகொண்டு தட்டில் பரிமாற,
“உனக்கும் போட்டுக்கோ.” என்றான் அக்கறையாய்.
இந்த அக்கறையே சக்கரையாய் இனிக்கிறதே என்று எண்ணுகையில் அவள் இதழருக்கே உணவுடன் நீண்டது அவன் கரம். இன்ப அதிர்வுடன் அவள் நிமிர்ந்து கணவனைப் பார்க்க,
“சீக்கிரம் வாங்குடி, யாராவது வந்துடப் போறாங்க.” அவனோ அத்தனை அவஸ்தையுடன் கையை நீட்டிக்கொண்டிருந்தான். அவன் விழிகள் வீட்டின் முன்புறமும் பின்புறமும் யாரேனும் வருகிறார்களா என்று கவனிப்பதில் தீவிரமாகியது.
என்றுமில்லாத அவனது திருதிரு முழியில் இவளுக்கு நகைப்பு வர, ஆசையாய் கணவன் கொடுத்ததை வாங்கிக்கொண்டாள். அவ்வளவுதான் என்பது போல் அடுத்து அவன் வயிறை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
சமுத்திராவும் அமைதியாக உண்டவள் இடையிடையே அவனை பார்த்துக்கொண்டு, “இன்னைக்கு தான் நாம தனியா ஒண்ணா சேர்ந்து சாப்பிடுறோம்.” என்க, அவன் கை அந்தரத்தில் நின்று பார்வை இவளை நோக்கியது. அவன் பார்க்கவும் இவள் குனிந்துகொண்டாள்.
ஆமாம்தானே எப்போதும் யாராவது ஒருவர் சுற்றி இருந்துகொண்டே இருப்பார்கள், இல்லையா முக்கால்வாசி நேரம் அவன் அம்மாதான் அவனுக்குப் பரிமாறுவர். மனைவியுடன் எப்போது இதுபோன்று நேரம் கிடைத்தது என்று யோசித்துப் பார்த்து சோர்ந்தான். நெருக்கம் கிடைக்கவில்லை என்பதைவிட ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றுகூட சொல்லலாம், அது புரியாதவனாய் தொண்டை செருமியவன், “தீபாவளிக்கு இன்னும் டிரெஸ் எடுக்கலையே.”
“எல்லாரும் சேர்ந்து போய்தானே எடுப்போம்.” என்றாள் இவள் நொடிப்பாய்.
மற்ற நேரம் என்றால் கூட அவனுக்கு அந்த யோசனை வந்திருக்காது. முதல் முறை இருவரும் தனியாக உண்கிறோம் என்று அவள் குறிப்பிட்டதும், “இன்னைக்கு நமக்கு போய் எடுத்துட்டு வந்துரலாம், கிளம்பு.” என்றதும் அவளுக்கு எக்கச்சக்க மகிழ்ச்சி. தலையாட்டப் போனவள் உடனே சுதாரித்து அவனை முறைப்பது போல் பார்த்து வைத்தாள்.
“என்னடி சமு?”
“எடுக்க போலாம்ன்னு இல்லை போலாமா முடியுமான்னு கேக்கணும்.” என்று சொல்லிக்கொண்டே உண்ட தட்டுடன் எழுந்து சென்றுவிட்டாள்.
இவன் பேவென்று பார்த்து அமர்ந்திருந்தான். கைகழுவிவிட்டு வந்தவள் உணவுக் பாத்திரங்களை ஓரமாக வைக்க, இவனும் கைகழுவ எழுந்துகொண்டான். பின்புறம் கைகழுவிட்டு பாட்டியுடன் விளையாடும் மகளை ஒருபார்வை பார்த்துவிட்டு உள்ளே வந்தவன் மனைவியிடம் கண்சிமிட்டிவிட்டு அவள் அறைக்குள் புகுந்துகொள்ள, பின்னோடே சென்றவள்,
“வீட்டுக்கு கிளம்பல?”
“போகணுமா?” சட்டையை கழற்றியபடி அவளைப் பார்த்தான்.
“உங்க ட்ரெஸ் எதுவும் இங்க இல்லை.”
“தேவையில்லை.” பனியனோடு அங்கிருந்த மெத்தையில் கால்நீட்டி அமர்ந்து அவளுக்கு கைநீட்ட, எட்டப்போனாள் மனைவி.
“சமு.”
“பாப்பாவை பாக்கணும்.” வெளியேறிவிட்டாள் சமுத்திரா.
அவனின் இந்த பேச்செல்லாம் தற்காலிகமா நிரந்தரமா என்று ஒருபுறம் குழப்பமும் அதை ஏற்கமுடியா தன் அறிவின் நிர்பந்தமும் அவளை நிலையின்றி தவிக்கச் செய்ய, எப்பொழுதும் போல் மகளிடம் தஞ்சம் புகுந்துகொண்டாள்.
தன் வீட்டினில் வேலை இருக்கிறது, பாப்பாவை பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இவனிடமிருந்து அவள் விலகிச் சென்ற பொழுதெல்லாம் வெகு இயல்பாக கடந்தவனுக்கு இன்று என்னவோ ஒரு உறுத்தல். இங்கு விலகிச் செல்லும் மனைவி உள்ளே வலிக்கச் செய்தாள், அவனையே பரிசோதனைக்கு உட்படுத்தினாள், இடையே திரை எழும்பி நிற்பது போல் உணர வைத்தாள். பெருமூச்சுடன் அவன் கண்மூட, அலைபேசி அழைப்பு வந்தது.
அக்கா கல்யாணி அழைத்திருந்தாள்.
“என்னடா பிரச்சனை? சமு ஏதோ பேசிட்டாளாம், ரெண்டு நாளா போன் போடுறேன் எடுக்க மாட்டேங்குற?”
“வேலை அக்கா.” என்றான் மகிழ்நன்.
“இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் இப்படித்தான் இருக்காங்க. வேலை செய்யவே வணங்க மாட்டேங்குது. நான்கூட மதி மாதிரி இல்லை இவன்னு நினைச்சேன்.”
“வேலை செய்யுறதுல அவளுக்கு பிரச்சனையில்லை.”
“வேற என்னவாம் அப்புறம்?”
“உனக்கு தெரியாம உன் வீட்ல, நம்ம வீட்ல எதுவும் நடக்குதா?”
“அதெப்படி?”
“அவளுக்கு நடக்குது அக்கா… நான் பாத்துக்குறேன். நீ இதைப்பத்தி அவகிட்ட கேட்கவோ முகம் காமிக்கவோகூடாது. எப்போதும் போல இருக்கணும்.” என்று மனைவிக்காக பேச, இவன் அக்காவோ தெளிவாக இருந்தாள். பேசாத சமுத்திராவே பேசிவிட்டதில் சுதாரித்துவிட்டார்.
“நான் ஏன் கேட்கப்போறேன், காலத்துக்கும் என் தம்பிங்க சொந்தம் எனக்கு வேணும்.” என்றுவிட, எல்லாம் தெளிவாகத்தான் இருக்காங்க நாமதான் என்று நெற்றியில் அடித்துக்கொண்டான் மகிழ்நன்.