என்ன பேச்சு பேசிவிட்டாள்? மகிழ்நனின் காதுகள் சிவந்தது. தாடை இறுக, கைமுஷ்டிகளை மடக்கியவன், கண்கள் மூடி வேக மூச்சுக்கள் எடுத்து தன்னை நிதானப்படுத்திக்கொள்ளப் பார்த்தான். வெளிவர சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவனுக்கு. ஆனாலும் அவள் வார்த்தை கொடுத்த குற்றச்சாட்டு அவனைப் போட்டு அழுத்த,
“இவ்ளோதான் நீ என்னை புரிஞ்சி வச்சிருக்கியா? என்னை பார்த்தா அப்படியாடி தெரியுது உனக்கு?” சீறிக்கொண்டு மனைவியின் கைகளை அழுத்தமாக பிடித்து விலக்கி அவள் முகம் பார்த்தான் மகிழ்நன்.
அழுததில் முகமெல்லாம் சிவந்து கண்கள் அதற்குள் தடித்து விட்டிருந்தது. முடிகள் ஆங்காங்கே வெளிவந்து கண்ணீரின் பாதையில் ஒட்டிக்கொண்டு பார்க்கவே பரிதாபமாக இருந்தாள். விடவில்லை மகிழ்நன்.
“என்னை எப்படி அப்படி சொல்லலாம் நீ? அப்படியா நான் உன்னை நடுத்துறேன்?” தாளமாட்டாமல் அவன் கேட்க, முழுதாக நனைந்துவிட்ட பின் முக்காடு எதற்கு என்று நினைத்துவிட்டாளோ என்னவோ வாய் திறந்தாள் சமுத்திரா.
“வேற எப்படி சொன்னீங்க? எல்லாம் உங்களுக்காகன்னு இருந்த எனக்கு இந்த பேர் தேவைதான்ல. எங்கேயும் எனக்காக யோசிக்கல.” அழுகையினூடே மூக்கை துடைத்துக்கொண்டே பேசியவள் பட்டென்று திரும்பிக்கொண்டாள்.
அவள் தோளை அழுத்தமாக பிடித்துத் திருப்பியவன், “பேச ஆரம்பிச்சிட்டீல்ல மொத்தமா முடிச்சிடு. அமைதியா இருக்க அதுதான் உன் குணம்னு பார்த்தா மனசுல என்னவோ வச்சிருக்கடி நீ.” என்றுவிட, மீண்டும் அடிபட்டுப் போனாள் மனைவி.
என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்? விரக்தியில் மீண்டும் கண்ணீர் பெருக, அங்கு அவனருகில் படுக்கவே பிடிக்கவில்லை சமுத்திராவுக்கு. எழுந்து செல்லலாம் என்றால் முடியாதவண்ணம் மகள் சுடிதாரின் ஒரு நுனியை பிடித்துக்கொண்டிருந்தாள். கழிவிரக்கத்தில் பொங்கிய உணர்வுகளை அடக்க பெரும்பாடுபட்டுப்போனாள். உதடுகள் பற்களில் மாட்டிக்கொண்டு அல்லல்பட்டது.
அவள் எழ முயல்வதும் தடுப்பது போல் மகள் உடையை பிடித்துக்கொண்டு உறங்குவதும் அதனைக் கண்டு பொங்கி வரும் கண்ணீரை அடக்குவதும் என மனைவியின் செயல்கள் அனைத்தையும் கவனித்தவன் பட்டென்று எழுந்துவிட்டான். அத்தனை ஆவேசம், தன்னருகில் படுக்கக்கூட அவளுக்கு பிடிக்கவில்லையா? ஏற்கவே முடியவில்லை மகிழ்நனால். எழுந்து அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் நடை போட்டான். அவ்விருட்டில் உமையாள் விளையாடி கீழே போட்டிருந்த விளையாட்டுப் பொருள் ஒன்று அவன் காலை பதம் பார்த்துவிட, வலியில் முகம் சுருக்கியவன் தன் கோவத்தை அதில் காண்பித்துவிட்டான். பட்டென்று சுவரில் மோதி கீழே விழுந்தது அது. அதன் சத்தத்தில் உடல் தூக்கிப்போட கண்களை இறுக மூடிக்கொண்டாள் சமுத்திரா. உமையாள் கூட உடலை நெளித்து உறக்கத்தை தொடர்ந்தாள்.
அவ்விரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப் போனது. விடியும் வேலையில் வேறு வழியின்றி கட்டிலின் ஓரத்தில் படுத்து உறங்கினான் மகிழ்நன். சமுத்திராவுக்கு அவள் உடல் அசதியோடு மனதின் சோர்வும் வலியும் சேர்ந்துகொண்டு எப்பொழுதோ ஓய்வுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. விடிந்து பத்மா பாத்திரங்கள் உருட்டுவது கூட அவளுக்குக் கேட்கவில்லை. மாறாக அயர்ந்து உறங்கும் மகிழ்நன் இன்று விழித்துக்கொண்டான்.
காதை பொத்திக்கொண்டு அவன் புரண்டு படுக்க, பாத்திரங்களின் கச்சேரி முடிவதாய் இல்லை. மருமகள் எழுந்து வரும் வரை அந்த இசை நிகழ்ச்சியை தொடர்வது அவர் வாடிக்கையாகிற்றே, அதெல்லாம் ராஜ வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு எங்கே தெரியப்போகிறது. ஒருகட்டத்தில் முடியாது எழுந்துவிட்டவன் மனைவியைப் பார்க்க அவள் ஆழ்ந்த உறக்கத்தில்.
‘அப்படியொரு வார்த்தையை சொல்லிட்டு இவளால் எப்படி தூங்க முடியுது?’ எரிச்சலுடன் நினைத்துக்கொண்டே இவன் எழுந்து செல்ல, சமையலறையில் தனியாக என்னவோ உருட்டிக்கொண்டிருந்தார் பத்மா.
“மனுஷன் தூங்க வேண்டாம், அமைதியா செய்ய முடியாதாமா உன்னால?” மொத்த கடுப்பும் அவரிடம் இறங்கியது.
பத்மாவோ மருமகள் இன்னும் எழுந்து வரவில்லையே என்ற கடுப்பில் இருந்தவர், “ஒன்னுக்கு ரெண்டு மருமகளுங்க இருந்தும் நாந்தான் எல்லாம் செய்யணுமா? என் வயசுக்கு என்னால எவ்வளவு முடியும்.” பதிலுக்கு காய்ந்துவிட்டார்.
“தினம் சமுதானே செய்யுறா? ஒருநாள் அமைதியா செய்ய மாட்டியா நீ?” என்று இவனும் எகிற,
“செய்யாமதான் இப்படி வளந்து வந்து என்னை கேள்வி கேக்குறியா நீ? தள்ளு, மிக்சி போடணும்.” என்று மகனை நகர்த்திவிட,
அவர் கையிலிருந்த மிக்சி ஜாரை பட்டென்று பிடுங்கி மேடையில் வைத்தவன், “பாத்திரமே சத்தம் கொடுக்குதுனு சொல்றேன், இப்போ போய் மிக்சி போடுறேங்குற. வை மா பேசாம, தூங்க வேணாமா நாங்க?”
“சமைக்க வேணாமா நானு.” எரிச்சலுடன் மகனை முறைக்க,
“ஒன்னும் வேண்டாம். சமு எழுந்தா செய்வா இல்லையா வெளில வாங்கிக்கலாம்.” என்றுவிட்டான் மகிழ்நன்.
“சந்தோஷம்” என்று நகர்ந்த பத்மா, “உன்னை இங்க கத்த விட்டு என்ன பண்றாளோ அவ. கிட்சனுக்கும் ரூமுக்கு எவ்வளவு தூரம் இருந்திடப்போகுது ஆனா இவ்வளவு சத்தத்துக்கு வாழ வந்த ரெண்டும் கண்ணைத் திறக்கலை…” அவனைக் கடக்கையில் முணுமுணுத்துவிட்டு சென்றார்.
நெற்றியை அழுந்தத் தேய்த்தவன் எரிந்த கண்களையும் மூடித்திறந்து மீண்டும் அறைக்குள் செல்ல, அசைவின்றி உறங்கினர் அம்மாவும் பிள்ளையும். இரவு நடந்தது எல்லாம் நினைவு வர, உச்சுக்கொட்டியபடி அலுப்பில் பொத்தென்று அவர்கள் அருகில் விழுந்து கண்களை மூடிக்கொண்டான். அதில் உடல் குலுங்க உடலை திருப்பியவள் கண்களை திறவாது உறக்கத்தை தொடர்ந்தாள்.
“காலையிலேயே ஏதோ பிரச்சனையோ? சத்தம் கேக்குது.” உறக்க கலக்கத்தில் புரண்டு படுத்த நன்மதி கணவனை உசுப்ப, அவளை இழுத்தணைத்து தன் நெஞ்சுக்குள் பொத்திக்கொண்டவன் செழியன்.
நன்மதியும் வாகாய் அவன் முதுகோடு கட்டிக்கொண்டவள் முகத்தை அவன் நெஞ்சில் வைத்து தேய்த்து முனக,
“எந்திருக்கணுமா மதி?”
“ம்ம்… டெஸ்ட் பண்ணனுமே…” எதிர்பார்ப்போடு கண்களைப் பிரித்து கழுத்தை வெளியே இழுத்து அவனைப் பார்த்தாள்.
சோம்பலாய் கண்களை திறந்தவன் குனிந்து நன்மதியின் நெற்றியில் முத்தம் வைத்து, “என்ன வந்தாலும் பீல் பண்ணக்கூடாது. கடைசி வரைக்கும் உனக்கு நான் இருப்பேன்.” ஆழ்ந்த குரலில் சொல்ல, சமாதானமாய் தலையசைத்தவள் மெல்ல அவன் பிடியிலிருந்து விலகி எழுந்தாள்.
செழியனும் அவளைத் தொடர்ந்து அமர்ந்தவன் அவளை தோளோடு அணைத்து விடுவித்து, “போயிட்டு வா, நான் வெய்ட் பண்றேன்.”
ஆசையும் எதிர்பார்ப்புமாய் தன் கைப்பையிலிருந்த சாதனத்தை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றாள் மதி. அவள் கதவடைக்கவும் கட்டிலிலிருந்து இறங்கி சோம்பல் முறித்தவன் குளியலறை வாயிலில் சென்று நின்றுகொண்டு குரல் கொடுத்தான்.
சில நொடிகளில் பரபரப்பாக வெளியே வந்தவள் அந்த சாதனத்தை அவனிடம் கொடுத்துவிட, நன்மதியை தோளோடு அணைத்துக்கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தவன் பார்வை தன் கையிலிருந்த கர்ப்ப பரிசோதனை சாதனத்தில் இருந்தது. பதட்டத்தோடு செழியன் தோளில் முகம் புதைப்பதும் பின் ஒற்றைக்கண்ணால் அந்த சாதனத்தை பார்ப்பதுமாக இருந்தாள் நன்மதி.
மனைவியின் பரிதவிப்பை உணர்ந்தவன் தோள் அணைத்த கையை உயர்த்தி அவள் தலையை பரிவாக வருடினான். ஒற்றைக் கோடு பளிச்சென்று தெரிய அந்த இரண்டாவது கோடு எப்போது பிரகாசிக்கும் என்ற ஆர்வத்தோடு அதனை பார்த்தவர்கள் காத்திருப்பு நீண்டது.
“வரும் மதி. இன்னும் டைம் இருக்கு, பாக்கலாம்.” அவன் சமாதானத்திலும் அழுத்தமில்லை.
“இல்லை இந்நேரம் வந்திருக்கணும்.” நன்மதியின் குரல் உள்ளே சென்றுவிட்டது.
திரும்பி அவளைப் பார்த்தவன் அவள் பின்னத்தலையில் கைகொடுத்து அவள் முகத்தை தன் தோளில் மறைத்துக்கொண்டான்.
“பாக்கலாம் மதி.”
“அஞ்சு நிமிஷம் ஆச்சு.”
“இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கே.”
அற்புதம் நிகழ்ந்துவிடாதா, கடவுள் கண் திறந்துவிடமாட்டாரா என்ற ஏக்கத்துடனும் தடதடக்கும் இதயத்திற்கிடையில் குறையும் ஆவலுடனும் விழிகளை அழுந்த மூடி செழியனின் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்ட நன்மதியின் விழிகளில் கட்டுப்பாட்டை மீறி நீர் நிறைந்தது.
ஒற்றைக்கோட்டோடு நின்றுவிட்ட அந்த சாதனத்தையே வெறித்துப் பார்த்திருந்த செழியன் அகத்தில் சொல்லணா வலி.
“இந்த டைமும் நெகட்டிவ்ல.” குரல் கலங்க, அழுகைக்கு இடையில் கேட்டாள் நன்மதி.
தொண்டையடைக்கும் வேதனையை கடினப்பட்டு முழுங்கியவன், “ஒருநாள் இதுவும் பாசிட்டிவா மாறும் மதி.”
“ஆனா இந்த மாசம் பாசிட்டிவ் இல்லையில்லை?” உடையக்கூடாது என்று நினைத்தாலும் உடைந்துதான் வந்தது அவள் உணர்வுகள்.
“மதி.”
“நானும் என்ன ரிசல்ட் வந்தாலும் அக்சப்ட் பண்ணனும்தான் நினைக்குறேன் ஆனா வலிக்குதுங்க. அழக்கூடாதுன்னு நினைக்குறேன் முடியல. ஏன் நமக்கு மட்டும் இப்படி?” எனக் கேட்டபடியே உடைந்துபோனாள் நன்மதி.
“இதுவும் கடந்து போகும் மதி.”
“நெகட்டிவ்தான்னா பீரியட்ஸ் கரெக்ட்டா வரலாம்ல. தள்ளிப் போய் ஏன் எதிர்பார்க்க வைக்குது?”
இயற்கையின் விடையில்லா விளையாட்டுகளுக்கு மானிடரிடம் பதில் இருக்குமா என்ன? மாறி மாறி ஆறுதல் சொல்லி தேறிக்கொள்ள வேண்டியதுதான்.
செழியன் அதைத்தான் செய்தான். மனைவிக்கு தோள் கொடுத்து சில நிமிடங்கள் வருந்தவிட்டவன் பின் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் கன்னங்களை தன் இருகரம் கொண்டு தாங்கிக்கொண்டான்.
“நம்ம ஹனிமூன் பீரியட் எக்ஸ்டெண்ட் ஆகிட்டு இருக்கு செல்லம். நாம ட்ரை பண்ண வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.” அவள் காதுகளில் அந்தரங்கம் பேச, வெட்கச் சிரிப்புடன் அவன் நெஞ்சிலேயே செல்லமாக அடித்தாள் நன்மதி.
“போதும் நிறுத்துங்க. காலையிலேயே என்ன பேச்சு?” வெட்கத்துடன் அவன் வாயை மூடியவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.
சில நிமிடங்களில் தங்களை தேற்றிக்கொண்டு இருவருமே கிளம்பி வர, வீடு ஓவென்று இருந்தது. இருவரின் முகத்திலும் சிந்தனை ரேகைகள்.
இரவு துடைத்து வைத்தது போல் அப்படியே இருந்தது. பால் மட்டும் காய்ச்சப்பட்டு கொஞ்சம் காய்கறிகள் நறுக்கப்பட்டிருக்க, வெளியே வந்து மணியைப் பார்த்தாள் நன்மதி. எப்போதும் அவர்கள் வரும் நேரத்திற்கு பதினைந்து நிமிடம் முன்னதாக வந்திருந்தாள்.
சமுத்திராவுக்கு உடல்நிலை சரியில்லை போல என நினைத்துக்கொண்டே காலை என்ன செய்யலாம் என்று பார்க்க,
“வாங்கப்பா… இப்போதான் விடிஞ்சுதா உங்களுக்கு?” என்ற பத்மாவின் இடக்கான குரலில் நன்மதி எட்டிப்பார்த்தாள்.
“ஏன் என்னாச்சு?”
“என்னாகனும்? இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடுன்னு உன் அப்பா வந்துடுவார், இதோ இப்போ நீங்க வந்து நிக்குறீங்க. ஆனா சமைக்க வேண்டியவங்க தூக்கம்தான் முக்கியம்னு இருந்தா வயிறை யார் கவனிக்குறது?” பத்மா நீட்டி முழக்க,
“சமுக்கு உடம்பு முடியல போல காலைலைக்கு நான் ஏதாச்சு செய்யுறேன். மதியம் வெளில பாத்துக்கலாம்.” என்று வந்து சொன்னாள் நன்மதி.
“ரொம்ப நல்லது. நீங்க எல்லாம் வெளில போறீங்க வெளிலையே சாப்புட்டுப்பீங்க. நாங்க என்ன பண்ண? காலையில உன் தம்பி எழுந்து வந்து கத்திட்டு வெளில வாங்கிக்கலாம்னு போயிட்டான். அடுத்து நீ என்ன சொல்லலாம்னு இருக்க?” என்று செழியனிடம் மல்லுக்கு நின்றார்.
அந்த நிமிடம் உமையாளை இடுப்பில் வைத்துக்கொண்டு எழுந்து வந்தாள் சமுத்திரா.
“விடிஞ்சிடுச்சா?” என்று பத்மா எள்ளலாக கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் சொல்லாமல் சமையலறைக்குப் போக,
“இன்னும் ஒன்னும் சமைக்கல, சமு. நீ வந்தா சமைப்பேனு சொன்னான் மகிழு.” என்று பின்தொடர்ந்த பத்மாவிடம்,