“சமையல் முடிஞ்சிருச்சுல? நான் எக் பாயில் பண்ணிக்குறேன்.” என்று அவள் பாட்டிற்கு ஒரு அடுப்பை பிடித்துக்கொள்ள, உடனே வெளியேறிவிட்டாள் சமுத்திரா. முட்டையின் வாசம் அவளுக்கு சுத்தமாய் ஆகாது. அவளுக்கு மட்டுமல்ல, அவ்வீட்டில் யாருக்கும் ஆகாது. குடும்பமே சைவம், நன்மதி மட்டுமே முட்டை எடுத்துக்கொள்வாள். 

“என்ன முட்டை அவிக்குறாளா? இவளை என்னனு சொல்றது? சொன்னாலும் கேக்குறளா? அவ இஷ்டத்துக்கு வரா, போறா, பண்றா. இதை வீடுன்னு நினைச்சாளா ஹாஸ்டல்னு நினைச்சாளா? யாரையும் மதிக்குறது இல்லை.” என புலம்பிக்கொண்டே சாமியறையில் சாம்பிராணி ஏற்றிவைத்த பத்மா கொல்லைப்புறம் சென்றுவிட்டார். உமையாளை தூக்கிக்கொண்டு இவளும் கொல்லைப்புறம் சென்று அங்கிருந்த பூக்களைப் பறித்தாள். உமையாள் அவள் உயரத்திற்கு இருந்த செடிகளிலிருந்து  இலைகளை பிய்த்துப்போடுவதும் பத்மா அவளை கண்டிப்பதுமாக இருந்தார். சிறிது நேரம் சென்று சமையலறைக்குச் செல்ல,  

“குக்கர்ல எதையோ வச்சிட்டு நீ பாட்டுக்கு போயிட்டா. விசில் வந்துட்டே இருக்கு கருகிட்டுன்னா என்ன பண்றதுனு ஆஃப் பண்ணிட்டேன்.” என்ற நன்மதி வெந்த முட்டையையும் தோல் உரித்து வைக்கப்பட்டிருந்த பாதாமையும் எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

தலையில் கைவைத்துவிட்டாள் சமுத்திரா. இட்லிக்கு தோதான தக்காளி குருமா வைத்திருந்தாள். நன்மதி வரவும் ஏதோவொரு நினைப்பில் அப்படியே வெளியேறிவிட்டாள். இப்போது வெந்திருக்குமா இல்லை நீர் வற்றியிருக்குமா என்ற சந்தேகத்தோடு வாசனை இழுத்துப்பார்க்க அடிபிடித்து காந்தவில்லை என்பது மட்டும் உறுதியானது. நன்மதி முன்னரே நிறுத்தியிருந்தால் ஒழுங்காக வெந்திருக்காதே. உள்ளிருக்கும் அழுத்தம் குறையும்வரை விசிலை எடுக்கவோ மூடியை திறக்கவோ முடியாது. செழியன், கந்தசாமி என வரிசையாக காலை உணவிற்கு வந்துவிடுவார்களே, நேரமாகிவிட்டதா என்று எட்டிப்பார்த்தாள். எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. 

இனிமேல்தான் இட்லி ஊற்ற வேண்டும். நன்மதி வரவும் தான் இங்கிருந்து சென்றிருக்ககூடாது என்று நெற்றியில் அடித்துக்கொண்டவள்  கொல்லைப்புறம் பார்க்க, உமையாள் விளையாடிக்கொண்டிருந்தாள். பத்மாவிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வேக வேகமாக இட்லி ஊற்றி வைத்தாள். செழியனும் அவன் மனைவி நன்மதியும் எட்டரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார்கள். அவர்களைத் தொடர்ந்து மாமனார் கந்தவேல், அவள் கணவன் இருவரும் கிளம்புவார்கள். இடையே மகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். அரக்கப்பரக்க கொஞ்சம் சட்னியும் அரைத்தாள். நல்ல வேலையாக சட்னிக்கு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு வைத்திருந்தார் பத்மா. வியர்த்து வழிய துப்பட்டா கொண்டு துடைத்துக்கொண்டே சூடான இட்லிகளை ஹாட்கேஸில் மாற்றி டைனிங் டேபிளில் கொண்டுபோய் வைத்தாள். அதற்குள் குக்கர் அழுத்தம் குறைந்துவிட, திறந்து பார்த்தால் இன்னும் கொஞ்சம் வேக வேண்டும் போல் இருந்தது. அடுப்பை பெரிதாக வைத்து கொதிக்க வைத்தவள் மறுபக்கம் நான்கு டப்பிகளில் மதிய உணவு கட்டினாள். 

உணவு மேசையில் சட்னி மட்டும்தானா இன்று என்ற பேச்சுக்குரல்கள் கேட்க, குருமாவை ருசி பார்த்து பாத்திரத்தில் மாற்றி எடுத்துச் சென்றாள். செழியன் தன் மனைவியைப் பார்க்க, சமுத்திராவிடமிருந்து வாங்கி மேசையில் அமர்ந்திருந்தவர்களுக்குப் பரிமாறி தானும் அமர்ந்துகொண்டாள் நன்மதி. பத்மாவும் உமையாளை தூக்கிவந்து கூடத்தில் விளையாடவிட்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அரக்க பறக்க சிற்றுண்டியை அவர்கள் முடிக்கவும் அவர்களின் உணவுப்பையை சமுத்திரா கொண்டு வந்து மேசையில் வைக்கவும் சரியாக இருந்தது. செழியன் உண்ட தட்டை எடுத்துச் சென்ற நன்மதி தங்கள் இருவருடையதை மட்டும் கழுவி கவிழ்த்து வைத்துவிட்டு சென்றாள். 

பெருமூச்சுடன் மகளைத் தூக்கி வந்த சமுத்திரா வெளியே வேடிக்கை காண்பித்தபடி அவளுக்கு உணவு ஊட்ட, செழியனும் நன்மதியும் வேலைக்கு தயாராகி வந்தனர். செழியன் தன் வண்டியை வெளியே எடுத்து அதில் அமர்ந்தபடியே உமையாளுக்கு கைகாட்ட, அவனுடன் செல்ல வேண்டும் என சிணுங்க ஆரம்பித்தாள். அவர்கள் ஊசி போட செல்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தாள் சமுத்திரா, தினமுமா அப்படி செல்வார்கள் என்று கேட்கத் தெரியாத குழந்தை தன் அழுகையால் மழலையில் எதையோ சொல்லிக்கொண்டே உணர்வுகளை வெளிப்படுத்தியது.

“வீட்டுக்குள்ள வச்சி ஊட்டு சமு.” என்ற நன்மதி, “சரி நாங்க கிளம்புறோம்.” என்று சொல்லிக்கொண்டு செழியனின் பின் அமர்ந்துகொள்ள,

அவளை ஏறெடுத்துப் பார்த்தாள் சமுத்திரா. பருத்திப் புடவையை நேர்த்தியாக மடிப்பு எடுத்துக் கட்டி, அழகாக பின்னலிட்டு கொஞ்சம் ஒப்பனை செய்து பளிச்சென்று இருந்தாள் நன்மதி. அனிச்சையாக தன்னை குனிந்து பார்த்தாள். காலையிலிருந்து ஓயாத வேலைகளில் எத்தனை முறை கைக் கழுவி அதனை தன் சுடிதார் டாப்பின் தொடைப்பகுதியில் துடைத்தாளோ? அவ்விடமே ஈரமாய் சொரசொரப்பாய் இருந்தது. மேலே போட்டிருந்த ஷால் முழுதும் உமையாளின் உணவு ஓவியம். தலைமுடியும் ஏனாதானோவென கொண்டையில் அடைபட்டிருந்தது. மூளைக்குள் என்னவோ யோசனை செல்ல, அதற்குள் அவளைத் தேடி வந்துவிட்டது அழைப்பு.

“மகிழ் கூப்பிடுறான் பாரு. செழியன் கிளம்பிட்டானா?” என கேட்டுக்கொண்டே வந்தார் பத்மா. அவருக்கு தலையசைத்துவிட்டு எழுந்துவிட்டானா என்ற யோசனையுடன் அவசரமாக கணவனைத் தேடிச் சென்றாள் சமுத்திரா.

மகிழ்நன். அவ்வீட்டின் கடைக்குட்டி. இந்த சமூகம் எதிர்பார்க்கும் அத்தனை அம்சமும் கொண்டவன். முப்பது வயதிலேயே ஆறு இலக்க  சம்பளத்தை எட்டிவிட்டான். மாநகரில் ஆறு இலக்க ஊதியம் பெரிதில்லை கிராமமும் அல்லாது நகரமும் அல்லாது இரண்டிற்கும் இடையே வளர்ந்து வரும் சோழ தேசத்தில் அழகன் முருகன் சுவாமிநாத சுவாமியாய் ஆட்சி புரியும் சுவாமிமலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக இருக்கிறான். படிப்பு முடிந்தவுடனேயே தேர்வு எழுதி தெரிவாகி வேறு இடத்தில் வேலை பார்த்து திருமணத்திற்கு பின் சொந்த ஊருக்கே மாற்றல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டான். 

“என்னங்க?” பரபரப்பாக கணவன் முன் வந்து நின்றாள் சமுத்திரா. குளித்துவிட்டான் என ஈரம் காய்ந்து படியாமல் இருந்த முடியும் மேல்சட்டையின்றி உள்பனியனோடு நின்றவன் வேலைக்குக் கிளம்ப ஆயத்தமாகிவிட்டான் என்று சொல்லியது.

“ப்பா…ப்பா.” என அவனிடம் தாவினாள் உமையாள்.

“என்னோட ப்ளூ ஷேர்ட் எங்க?” என கேட்டுக்கொண்டே மகளை வாங்கிக்கொண்டான்.

“இங்கதான் இருக்கும்.” என்று அப்படியே அவள் தேடப்போக,

“ஸ்ஸ்… சாப்பாட்டு கையோட என்ன பண்ற நீ?” என கண்டிப்பு வந்தது கணவனிடமிருந்து.

மீண்டும் நெற்றியில் தட்டிக்கொண்டவள் உணவுக் கிண்ணத்தை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு கைகழுவப் போக, 

“பாப்பாக்கு ஊட்டு முதல்ல. நான் தேடிக்குறேன் எங்க வச்சேன்னு நியாபகப்படுத்தி சொல்லு.” என மகளை மனைவியிடமே கொடுத்தவன் அலமாரியை திறந்து வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான். 

சமுத்திரா சொல்ல சொல்ல இரண்டு அடுக்குகளில் தேடியவன் எரிச்சலுறும் முன் அவன் தேடிய சட்டை கிடைத்துவிட்டது. அயர்ன் செய்து வைத்திருந்ததை உதறிப் போட்டவன் அதனை பேண்டினுள் இன் செய்து தலை வாரி கிளம்பினான். அதுவரை மகளிடம் ஒருகண்ணும் மணவாளனிடம் ஒரு கண்ணுமாக இருந்தாள் சமுத்திரா.

“உன் கவனம் எங்க இருக்கு?” திடுமென அவன் எதிரே வந்து கேட்கவும் திகைத்துப் பார்த்தவள் விழி விரித்து நிற்க, அவனோ வெகு இயல்பாய் அவள் வகுட்டில் கோணலாக இருந்த குங்குமத்தை தன் ஒற்றை விரலால் நேர்ப்படுத்தினான்.

“நின்னு குங்குமம் வைக்க ரெண்டு செகண்ட் ஆகுமா. அதைக்கூட ஒழுங்கா பண்றது இல்லை.” 

கடிந்து பேசுகிறானா இல்லை அக்கறையில் சொல்கிறானா, அவன் இயல்பே இதுதானா என்று இனம் காண முடியாமல் நின்றாள் சமுத்திரா.

“என்ன சாப்பாடு இன்னைக்கு?” என கேட்டுக்கொண்டே அவன் வெளியேறிவிட, மெளனமாக பின்தொடர்ந்தாள். 

தன் சின்னப்பிள்ளைக்கு தட்டில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார் பத்மா. அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே மகிழ்நன் மனைவியைப் பார்க்க, உமையாளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். வெகு நேரமாக மகளுக்கு ஊட்டுவது போல் தெரிகிறது, மகளின் வயிற்றுக்கு சென்றதை விட பெற்றவள் உடைக்கு சென்ற உணவுதான் அதிகம் போல் இருந்தது. மகள் கொஞ்சம் படுத்துகிறாளோ என்ற எண்ணம். ஆனால் கேட்டுக்கொள்ளவில்லை. கேட்டாலும் பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள் என அனைவரும் ஒன்று போல பதில் சொல்வார்கள். உண்டு முடித்து சிறு தலையசைப்புடன் அவனும் கிளம்பிவிட, சோர்ந்துவிட்டாள் சமுத்திரா. தினமும் இப்படி சோர்வுறுவாளா என்றால் இல்லையென்பாள். காலை நேரமே எழுந்துவிடுபவள் அவளுக்கான பால் குடித்துவிட்டுதான் வேலையில் இறங்குவாள். இன்று கனவில் கரைந்து போனதில் கொஞ்சம் அதிக நேரம் உறங்கிவிட்டதின் பலன், குறைந்த நேரத்தில் வேலைபளு அதிகம்.

“இந்த காலத்து பசங்க எல்லாம் இதுக்கே சோர்ந்து போறீங்க. நாங்க எல்லாம் அவ்ளோ வேலை செய்வோம் அப்போ. மிக்ஸி, கிரைண்டர் கிடையாது. அம்மி ஆட்டுக்கல்ல தான் அரைக்கணும், மண்ணெணெய் ஸ்டவ்…” என பத்மா பழைய கதையை எடுத்துவிட, அவரை கண்டுகொள்ளாமல் தனக்கு தட்டில் இட்லியை போட்டுகொண்டு வந்தமர்ந்தாள்.

நான்கு இட்லிகள் உள்ளே போனதே தெரியவில்லை. ஐந்தாவது இட்லி தொண்டையில் இறங்குகையில் கண்கள் பளிச்சென்று தெரிந்தது போல் இருந்தது. அத்தனை ஆசுவாசம். அதனை கலைக்கவென அவள் அலைபேசி அடித்தது. அடுத்தது இவங்களை சமாளிக்கணுமா? இப்போவே கண்ணை கட்டுதே… அதற்காக ஒதுக்க முடியுமா? ஒதுக்கி வைக்கும் உறவா? தவிர்க்கக்கூடிய பந்தமா? 

சமையலறையை சுத்தம் செய்துவிட்டு அறைக்கு வந்தவள் நிதானமாக அலைபேசி எடுத்து விடுபட்ட எண்ணுக்கு அழைத்தாள். மகளை மடியில் போட்டு தட்டிக்கொடுக்க, சின்னவளுக்கு கண்கள் சொக்கிக்கொண்டு வந்தது. காலை நேரமே எழுந்துவிட்டதின் விளைவு. நொடியில் உறங்கியும்விட்டாள். 

அழைப்பில் இணைந்தவர் அவளின் அன்றைய நாளை பற்றி விசாரித்துவிட்டு,

“உன் ஓப்படி சீவி சிங்காரிச்சிட்டு வேலைக்கு போறா, நீ அவளுக்கு பண்ணையம் பண்ணிட்டு இருக்க. நீ என்ன அந்த வீட்டுக்கு வேலைக்காரியா? எல்லாத்தையும் எதுக்கு நீயே செய்யுற? அவளை மாறி நீயும் எட்டு மணி வரை தூங்கு. அவங்கவங்களுக்கு சோறு வேணும்னா பொங்கி திங்கட்டும் இல்லை கடையில வாங்கிக்கட்டும். நீ உனக்கு, உன் புருஷன், புள்ளைக்கு மட்டும் பண்ணிக்கோ. என்னால பண்ண முடியாது தனிக்குடுத்தனம் போகணும்னு சொல்லு. என் பொண்ணா இருந்துட்டு பொழைக்க தெரியாதவளா இருக்கியே.” என்று ஆரம்பித்தார் அவள் தாய்.

ரெடி ஸ்டார்ட் மியூசிக்… சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் என அவளுக்கும் உறக்கம் வந்துவிட்டது.