Advertisement

     “சுபா டிபன் ரெடியா ஆபிஸ்க்கு டைம் ஆச்சு?” – இது கணவன்
     “அம்மா என்னோட டைரி எங்க ஸ்கூல் பஸ் வரப் போகுது?” – இது மகள்
     “சுபா எனக்கு ஒரு கப் காபி தரியா மா?” – இது மாமியார்.
     தினமும் காலை கேட்கும் வார்த்தைகள் தான். காலை ஒன்பது மணி வரை காலில் சக்கரம் இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணிய நாட்கள் அதிகம். வீட்டில் அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்பவளும் அவளே.
      அனைவருக்கும் தக்க பதில் அளித்தாலும் கை சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
     ஒரு வழியாக அனைவரின் வேலைகளையும் முடித்து பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பி பெருமூச்சு விட்டு அமர முடியாது. ஏனெனில் அவளும் வங்கியில் வேலைக்கு செல்கிறாள்.
      வீட்டில் அனைத்து வேலையும் அவள் வசம் தான். உதவி புரிவோர் தான் யாரும் இலர். அலுவலகம் அங்கே சென்றால் அங்கேயும் மலையென குவிந்து கிடக்கும் வேலைகள்.
     ஆனால் அவள் அந்த வேலையை பிடித்தே செய்தாள். வாழ்வில் இதையேனும் தனக்கான தனித்துவமெக கொள்ள வேண்டும் என்பது அவள் விருப்பம். இதில் அவளுக்கு ஒருவித நிம்மதி என்று கூறினால் சரி.
     ஒருவழியாக மாலை ஐந்து மணி பறவை கூடு திரும்புவது எப்படி இயல்போ அதே போல் அனைவரும் தம் இல்லம் செல்லும் நேரம். அவளும் இல்லம் நோக்கி திரும்பினாள்.
      வார நாள் என்பதால் அதிக வாகன நெரிசல். பேருந்தில் ஜன்னலோர இருக்கை, அதில் எதிர் காற்று முகத்தில் மோத அவளின் எண்ணங்கள் வாழ்வின் பின்னோக்கி பயணப்பட்டது.
     “ஏ சுபா ஒழுங்கா நில்லு ஓடாத ஸ்கூல்க்கு நேரம் ஆச்சு பாரு” என‌ தன் பின் வரும் அன்னைக்கு தண்ணீர் காட்டிக் கொண்டு இருந்தாள் சுபா. இதில் தந்தைக்கு அவள் மிக செல்லம் தந்தையின் இளவரசி.
     தந்தை தாயின் ஒரே மகள் என்பதால் இன்னும் அதிக செல்லம். அவள் வைப்பது தான் வீட்டில் சட்டம் என்றே கூறலாம். அவள் வீட்டில் அவள் ஒரு வேலைக் கூட பார்த்தாள் இல்லை.
     தற்போது எண்ணினாலும் மனதின் இனிய நினைவு தான் அது. தாயின் பாசம் புரிந்து வளர்ந்தவள், அவரின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அனுபவித்தது அவளின் திருமணத்தின் பின்னே தான். இப்போது தாய் வீடு சென்றாலும் அவள் அங்கே செல்லம் தான்.
     அவளின் பழைய நினைவுகள் அவளுக்கு என்றும் இனிமையை தான் தரும். அத்தோடு தன் மகள் அவள் கணவனுடன் சேர்ந்து விளையாடுவதும் தன்னிடம் வம்பு வளர்ப்பதும் அப்படியே அவளின் சிறு வயதை என்றும் நினைவில் கொண்டு வந்துவிடும்.
     இனிய ஜன்னலோர பயணத்துடன் தன் இனிய நினைவுகளை எண்ணிக் கொண்டே தன் இல்லம் நோக்கி சென்றாள் இந்த வாரம் கண்டிப்பாக தாய் தந்தையை காண செல்ல வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு.
-சாந்தி கவிதா

Advertisement