ஒரு வழியாக முகூர்த்த நேரம் நெருங்கியிருந்தது. மூர்த்தி செய்ய வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களையும் செய்து, விட்டுக் கொடுக்காமல் செய்முறையும் செய்ய, அன்னம் கண் கலங்க நின்றிருந்தார்.
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற வார்த்தைகளில் சட்டென்று மேடையைப் பார்த்த அபர்ணாவிற்கு அது வரை அடக்கி வைத்த கண்ணீர் விழிகள் ததும்பி நிற்க,
“அபர்ணா அட்சதையை போடுடி” என்று இடித்த காயத்ரி அவளுக்கு அருகில் வந்து நின்ற சிவாவைப் பார்த்து வாய் பிளந்து நின்றாள்.
“சிவாண்ணா” என்றவளுக்கு காத்து தான் வந்தது.
தன் முன்னால் நீண்ட கைக்குட்டையை புரியாமல் பார்த்தவள், பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, அப்போது தான் சிவா நிற்பதை அவளும் பார்த்தாள். அவனைப் பார்த்து அதிர்ந்தவள் சட்டென்று கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.
“உங்களுக்குத் தேவைப்படும் வச்சுக்கோங்க” என்று மீண்டும் விடாமல் கைக்குட்டையை நீட்டினான். அவளோ தயக்கத்துடன் வாங்கிக் கொள்ள, இவர்கள் ஜோடியாய் நின்றிருந்ததைப் பார்த்த மாதவனும் எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.
மாதவன் பார்ப்பது தெரிந்ததும் இன்னும் அவள் அருகில் ஒட்டி நின்றான் சிவா. அவர்களின் ஜோடிப் பொருத்தமும் கண்ணை நிறைத்தது.
தெரிந்தவர்கள் வரவும் அவர்களுடன் பேசிக் கொண்டே நகர்ந்துவிட்டான் சிவா. அவன் சென்ற பிறகு தான் அவளால் இயல்பாய் மூச்சு விட முடிந்தது.
“கர்சீப் குடுத்துட்டு போறாருன்னு நினைக்காத. சிவாண்ணா உன்னை நக்கல் பண்ணிட்டு போறாரு. அது கூட தெரியாம நிக்கிற” என்றாள் காய்த்ரி.
அவள் சொன்ன பிறகு தான் அவன் பேசிய தொனியை யோசித்துப் பார்த்தாள் அபர்ணா. அவளுக்கும் அப்போது தான் புரிந்தது.
பெண்ணைப் பெற்றவரோ இருந்து போட்டோ எடுத்துட்டு சாப்பிட்டு தான் போகணும் என்று சிவாவின் குடும்பத்திடம் கூறியிருக்க, வேறு வழியின்றி நடராஜன் கலையரசியுடன் மேடையேறினான் சிவசக்தி.
இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெண்ணைப் பெற்றவருக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டார் நடராஜன்.
“வாழ்த்துக்கள் பிரதர்” என்று கையை குலுக்கிய சிவாவின் முகத்திலோ, பதிலுக்கு கையை குலுக்கிய மாதவனின் முகத்திலோ மருந்திற்கும் சிநேகம் இல்லை. ஆனால் கை கொடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
“நானும் வர்றேன்” என்று கிஷோரும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள,
“ஒரு நிமிஷம்” என்ற சிவா, கீழே இருந்த கபிலனை அழைத்தான்.
“சிவா”
“கபிலன் உங்க சிஸ்டரை மேடைக்கு வர சொல்லுங்க” என்றவுடன் புரியாமல் அபர்ணாவை அங்கு அனுப்பி வைத்தான் கபிலன்.
மேடைக்கு வந்தவளை முதன் முறையாக கையைப் பிடித்து இழுத்து தன்னருகில் நிறுத்திக் கொண்டான் சிவா. கீழே இருந்த குடும்பத்தினர் ஆச்சர்யமாய் பார்க்க, அபர்ணாவோ அவன் செயலில் திகைத்தவள், அதை முகத்திலும் காட்ட,
“இப்போ எடுங்க” என்றான் சிவா.
‘சிவாண்ணா சம்பவம் பண்றாரே’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் காயத்ரி.
போட்டோ எடுத்து முடித்தது தான் மாயம், ஆளை விட்டால் போதும் என்பவளைப் போல் ஓட்டம் எடுத்திருந்தாள் அபர்ணா.
அதன் பிறகு சாப்பிட்டு முடித்து கிளம்பும் வரை அபர்ணாவை அவன் பார்க்கவேயில்லை.
அபர்ணாவைப் பார்த்து சில உறவுக்கார பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள, அவள் அருகில் சென்றதும் பேச்சை நிறுத்திக் கொண்டனர். அவள் சற்று நகர்ந்ததும் மறுபடியும் பேச ஆரம்பிக்க, இப்போது அவர்கள் பேசியது அபர்ணாவின் காதுகளில் மட்டுமல்ல அருகிலிருந்த காயத்ரியின் காதுகளிலும் தெளிவாக விழுந்தது.
“இத்தனை நாள் மாதவனைத் தான் கட்டுவேன்னு சொல்லி பின்னாடி திரிஞ்சுட்டு இருந்தா. இப்போ என்ன பிரச்சனையோ தெரியலை, சம்பந்தம் மாறி போச்சு” என்று ஒரு பெண் சொல்ல,
“இத்தனை வருஷம் பழகியிருக்காங்க, எதுவும் நடக்காமையா இருந்திருக்கும்? இந்த காலத்து பிள்ளைங்களை எங்க நம்ப முடியுது?” என்றாள் ஒரு பெண் வேண்டுமென்றே.
“அபர்ணா அப்படியெல்லாம் இல்லை, நல்ல பொண்ணு” என்றாள் ஒரு பெண்.
“அட நீங்க வேற, மாதவனை அவ பார்க்குற பார்வையை பார்க்கணுமே? அப்படியே முழுங்குற மாதிரி பார்த்து வைப்பா. இப்போ கூட பாருங்க, மேடையில இருந்து அவன் இவளைத்தான் பார்த்துட்டு இருக்கான். ஒன்னுமில்லாமையா அப்படி பார்ப்பான்?” என்றாள் அந்த வம்புக்கார உறவுப் பெண்.
“எப்படியோ மாதவன் வசதிக்கு ஒன்னு அசதிக்கு ஒண்ணுன்னு காலத்தை ஒட்டப் போறான்” என்றவர்களின் வார்த்தைகளில் அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.
நடராஜனையும் கலையரசியையும் பிரபாகரன் காரில் அழைத்து சென்று விட,அங்கிருந்து நேராக பேக்கரிக்கு கிளம்புவதற்காக வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டிருந்தான் சிவா.
ஹெல்மெட்டை மாட்டியவன் சரியாக வண்டியை ஸ்டார்ட் செய்யும் நேரத்தில், மண்டபத்திற்குள் இருந்து அழுத படி வந்த அபர்ணா வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிச் சென்று விட்டாள்.
“ஹேய் அபர்ணா நில்லுடி” என்று பின்னாடியே ஓடி வந்து கொண்டிருந்த காயத்ரியைக் கண்டவன்,
“காயத்ரி என்னம்மா ஆச்சு?” என்றான் புரியாமல்.
அவனிடம் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்தவள்,
“ஆங் அண்ணா..! அது ஒன்னும் இல்லைண்ணா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கபிலனும் வேகமாய் வந்து காரை எடுத்திருந்தான். அவனுக்கு இருந்த கோபத்தில் அங்கு சிவா நிற்பதை கவனிக்க வில்லை.
“காயத்ரி என்னன்னு கேட்டேன்” என்றான் அழுத்தி.
“அது அண்ணா உள்ள” என்று இழுத்தவள் உறவுக்கார பெண்கள் பேசியதைக் கூறினாள்.
“அப்பாவும் அம்மாவும் உள்ள இருக்காங்கண்ணா. நான் அவங்க கூட வந்துடுவேன்” என்றாள்.
“சரிம்மா” என்றவன் கிளம்பியிருந்தான்.
‘இப்ப எதுக்கு யாரோ என்னமோ பேசுறாங்கன்னு சொல்லி இப்படி அழுதுட்டு போறா? இன்னும் எத்தனைய பார்க்கணுமோ?’ என்று நொந்தபடி பேக்கரியை நோக்கி சென்று கொண்டிருந்தவனுக்கு மனம் கேட்கவில்லை. வண்டியை அவள் வீட்டை நோக்கி திருப்பியிருந்தான்.
அவர்கள் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவனுக்கு எப்படி உள்ளே செல்வதென்ற தயக்கம். வாசலிலேயே தேங்கிவிட்டான்.
உள்ளே அபர்ணாவின் அழுகையும் வீட்டினரின் சமாதானமும் வாசல் வரை கேட்டுக் கொண்டிருந்தது.
“நான் என்ன பண்ணேன்? எல்லாரும் ஏன் என்னை பேசணும்?” என்றாள் அழுகையின் ஊடே.
“அம்மாடி அழாதம்மா” என்றார் மூர்த்தி.
“நீங்க பேசாதிங்கப்பா! எல்லாமே உங்களால தான். நீங்க சரியா இருந்திருந்தா இன்னைக்கு இப்படி பேச்செல்லாம் வந்திருக்குமா?” என்று மூர்த்தியிடம் பாய்ந்தாள். கோபத்திலும் வருத்தத்திலும் என்ன பேசுகிறோம் செய்கிறோம் என்ற நிதானமே அவளிடம் இல்லை.
“முட்டாள் மாதிரி பேசாத அபர்ணா” என்று கபிலன் குரலை உயர்த்த,
“நான் முட்டாள் தான். முட்டாளாவே இருந்துட்டு போறேன். என்னை முட்டாளாக்குனது நீங்க எல்லாரும் தான? நீங்க தான எல்லாத்தையும் என் மனசுக்குள்ள விதைச்சிங்க. நானா கேட்டேன். செய்ற எல்லா தப்பையும் நீங்க எல்லாரும் சேர்ந்து தான் பண்ணிங்க. ஆனா இப்போ இப்படி ஒரு பேரோட முட்டாளாகி நிக்கிறது நான் தான்” என்றாள் அழுகையுடன்.
“அபூ அப்படி எல்லாம் பேசாதடி” என்ற கபிலன் தங்கையை அணைத்துக் கொள்ள, அந்த நிமிடம் முற்றிலும் உடைந்து போனாள்.
“நான் என்னண்ணா தப்பு பண்ணேன்? நான் ஏன் இப்படி பேச்சு வாங்கணும்? என் அன்புக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாத மாதவன் மாமா சந்தோஷமா தான இருக்கார். அப்போ நான் மட்டும் ஏன் அப்படி இல்லை. என்னால மட்டும் ஏன் அப்படி இருக்க முடியலை” என்றவளை அழுத்திப் பிடித்துக் கொண்டான் கபிலன்.
“நான் தான் அப்பவே போய் பேசுறேன்னு சொன்னேன். நீதான அபூ வேண்டாம்னு சொன்ன?” என்றான் கபிலன் அவளை தெளிய வைக்கும் நோக்கத்தோடு.
“அப்படி கேட்டு வாங்குற பிச்சை வாழ்க்கை ஒரு காலமும் எனக்கு வேண்டாம்” என்றவளிடம்,
“உனக்கே தெரியுது, உன் அன்புக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாதவன்னு. அப்பறம் ஏன் அபூ இப்படி அழற?” என்றான் கபிலன்.
“எனக்கே தெரியலைண்ணா” என்றவளின் ஆதங்கம் கோபம் இயலாமை அனைத்தும் அன்றே, அந்த நிமிடமே வெளி வந்திருந்தது.
“அவங்க எப்படிண்ணா என்னை அப்படி தப்பா பேசலாம். அப்போ அவங்களும் அப்படித்தான நினைப்பாங்க” என்றாள் அழுகையின் ஊடே திக்கித் திணறி.
‘எவங்க அப்படி நினைப்பாங்க?’ என்று புரியாமல் பார்த்தவன்,
“நீ யாரை சொல்ற?” என்ற கபிலனுக்கு தாமதமாகத்தான் புரிந்தது அவள் யாரை சொல்கிறாள் என்று.
“நீ சிவாவையா சொல்ற?” என்றான் கபிலன்.
“ஆமாம்” என்பதைப் போல் அவள் தலையை ஆட்ட,
“சிவா ஒரு நாளும் அப்படி நினைக்க மாட்டான் அபர்ணா. அவனைப் பார்த்தா அப்படி நினைக்கிறவன் மாதிரியா தெரியுது. நாங்க அப்படி ஒரு பையனைத்தான் உனக்கு பார்ப்போமா?” என்றான் கபிலன்.
“மாதவன் மாமா இப்படி பண்ணுவார்ன்னு நினைச்சோமா? அவர் பண்ணலை? நீங்க பார்த்த இந்த மாப்பிள்ளையும் இப்படி நினைக்க மாட்டார்ன்னு என்ன நிச்சயம்?” என்றாள்.
“யாரை யார் கூட கம்பேர் பண்ற அபூ? நீ இப்போ நிதானமா இல்லை. உன் மூளைக்குள்ள தேவையில்லாத விஷயம் நிறைய ஓடுது. நீ ரொம்ப ஓவர் திங்கிங் பண்ற? இப்போ அழுகையை நிறுத்தப் போறியா இல்லையா?” என்று கபிலன் ஒரு அதட்டுப் போடவும் அப்படியே அடங்கினாள்.
கபிலன் எப்போதாவது தான் இப்படி அதட்டுவான்.
“இந்த வீட்ல எங்க எல்லாருக்கும் புத்தி சொல்லி பொறுப்பா இருந்ததே நீதான். இப்போ நீ தான் புத்தி பேதலிச்சு போய் இருக்க அபூ” என்றான் குரலை உயர்த்தி. இனி அவளிடம் அமைதியாய் பேசினால் வேலைக்கு ஆகாது என்று அவனுக்குத் தெரியும்.
கண்களைத் துடைத்தவள் நிமிர, எதிரே அவளை முறைத்தபடி உக்கிர மூர்த்தியாய் நின்றிருந்தான் சிவா.
அவளின் அதிர்ந்த பார்வையை பார்த்தவர்கள் அப்போது தான் திரும்பி சிவா நிற்பதை பார்த்தனர்.
“சிவா” என்று கபிலன் ஏதோ பேச வர, அவனைத் தடுத்தவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பி சென்று விட்டான்.
“இன்னும் ஒரு வாரத்துல உனக்குக் கல்யாணம். அது வரைக்கும் நீ அமைதியா இருந்தா அதுவே போதும்” என்றபடி கிளம்பிவிட்டான்..
அபர்ணா அப்படியே ஆணியடித்தார் போல் அதே இடத்தில் நிற்க, மனம் கேட்காமல் திரும்பி வந்த கபிலன், தங்கையை அணைத்துக் கொண்டான்.
“உன்னை என்னால் புரிஞ்சுக்க முடியுது அபூ. ஆனா இதே மாதிரி எல்லா இடத்துலையும் பேசுறவங்க இருக்கத்தான் செய்வாங்க. எல்லாத்துக்கும் இப்படி ரியாக்ட் பண்ணிட்டு இருந்தா நம்ம வாழ்க்கை தான் நரகமா மாறிடும். நிதானமா யோசி. உனக்கே புரியும். முடிஞ்சா சிவாவுக்கு போன் பண்ணி சாரி கேளு” என்றவன்,
“பார்த்துக்கோங்க” என்று பெற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அபர்ணாவிற்கு அப்போது தான் நிஜமே உறைத்தது. அதிலும் சிவா பார்த்து சென்ற பார்வையை மீண்டும் யோசித்தவளுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.
“ச்ச்ச..! நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்? யார் மேலயோ இருக்குற கோபத்துல..” என்று தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
சாந்தியும் மூர்த்தியும் மகளைப் பாரத்த படி இன்னமும் நின்றிருக்க, சட்டென்று நிமிர்ந்தவள்,
“சாரிப்பா” என்றாள் கலங்கிய குரலில்.
“நீ சொன்னதும் உண்மை தானடா” என்றவர் அமைதியாய் சென்றுவிட, அவளுக்கு குற்ற உணர்வு தலை தூக்கியது.
வேகமாய் தன் அலைபேசியை எடுத்தவளுக்கு ஏனோ அவனுக்கு அழைப்பதில் தயக்கம். அலைபேசியை எடுப்பதும், மீண்டும் வைப்பதுமாக இருந்தவள் கடைசி வரை சிவாவிற்கு அழைக்கவே இல்லை.
இரண்டு நாட்கள் கழித்து மதிய வேலையில் பேக்கரியில் வந்து அமர்ந்தவளைப் பார்த்தவன் கண்டுகொள்ளவில்லை. பார்க்காதவன் போல் இருந்து கொண்டான்.
“அண்ணி வந்திருக்காங்கண்ணா” என்ற மணியை முறைத்து வைத்தான்.
“என்னம்மா காயத்ரி இந்த பக்கம்?” என்றான் காயத்ரியிடம்.
“அட்மிஷன் போகுதுண்ணா. அதான் ரெண்டு நாள் வர சொல்லியிருந்தாங்க” என்றாள் பதிலாய். அபர்ணா அவனிடம் பேச முற்படுவதைப் போல் தெரிந்தது. ஆனால் அவன் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை.
“பேசணும்னு தான வந்த. பேச வேண்டியது தானடி” என்றாள் அடிக்குரலில்.
அவளை முறைத்த அபர்ணா,
“ஜூஸ் குடிக்க வந்தா அந்த வேலையை மட்டும் பாரு காயு. சீக்கிரம் குடிச்சுட்டு வா. கிளம்பலாம்” என்றாள் பட்டென்று. சிவா தன்னிடம் பேச விருப்பப்படவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள் அபர்ணா.