அத்தியாயம் 7

திருமண தேதி குறிக்கப்பட்டு வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சிவா வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து பேக்கரி செல்வதும் நடு இரவில் வீட்டிற்கு வருவதும் என்று அவனுடைய வழக்கமான வேலைகளில் இருந்தான். பார்ப்பவர்கள் தான் குழம்பிப் போய் திரிந்தனர்.

‘நிஜமாவே இஷ்ட்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிறானா?’ என்ற சந்தேகம் வீட்டில் இருந்த அனைவர் மனதிலும் எழுந்திருந்தது. சிவாவின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருந்தது.

நிச்சயம் செய்த அன்றே சிவாவின் நம்பரை அபர்ணாவிடமும், அவளின் நம்பரை சிவாவிடமும் கொடுத்திருந்தான் கபிலன். அதனால் மருந்துக்கும் பிரயோஜனமில்லை. அபர்ணாவும் சிவாவை அழைக்க வில்லை. சிவாவும் அவளுக்கு அழைப்பு எடுக்கவில்லை.மொத்தத்தில் இருவருமே யாருக்கோ திருமணம் என்ற ரீதியில் இருந்தனர்.

மாதவனின் திருமணம் முதல் முகூர்த்தத்தில் குறிக்கப்பட்டிருந்ததால், சிவா-அபர்ணா திருமணம் அடுத்த முகூர்த்தத்தில் குறிக்கப்பட்டிருந்தது.

என்றும் இல்லாத திருநாளாய் அன்று சிவா மாலையே வீட்டுக்கு வர, வீட்டினருக்கு ஆச்சர்யம்.

“என்ன சிவா? இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” என்றார் நடராஜன்.

“அதானே..! இவ்வளவு சீக்கிரம் வந்துட்டா அங்க கடையை யாரு பார்க்குறது?” என்றாள் செல்வி.

“ஏன் இருபத்தி நாலு மணி நேரமும் கடையிலே இருக்கேன்னு உங்களுக்கு எதுவும் எழுதிக் குடுத்திருக்கேனா?” என்றான் சிவா எரிச்சலுடன்.

“நான் அப்படி சொல்ல வரலை. இந்த நேரத்துல கூட்டம் அதிகமா இருக்குமே. நீங்க இல்லைன்னா யார் பொறுப்பா பார்த்துப்பாங்கன்னு கேட்க வந்தேன் சிவா” என்றாள் செல்வி சற்று தணிந்த குரலில்.

“வீட்டுக்கு முக்கியமான ஒருத்தர் பத்திரிகை வைக்க வர்றதா சொன்னார். அதான் வந்தேன். அண்ணா வீட்ல இல்லையா?” என்றான் சிவா.

“அவரும் இப்போ தான் வந்தார், குளிச்சுட்டு இருக்கார்” என்றாள் செல்வி.

“நல்லது” என்றவன் மேலே தன் அறைக்கு சென்று தானும் ஒரு குளியலை போட்டுவிட்டு வந்தான்.

அவன் வருவதற்கும் அந்த முக்கியமான ஆள் வருவதற்கும் சரியாக இருந்தது.

“வாங்க சார்” என்றான் மரியாதை நிமித்தமாக.

“டேய் சிவா, இவரு நம்ம தொகுதி எம்எல்ஏ தான?” என்றான் பிரபாகரன் மெதுவான குரலில்.

“ம்ம்!! ஆமாண்ணா” என்றவன், அவரை வரவேற்று உபசரிக்க,

“கண்டிப்பா வீட்ல எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துடனும் தம்பி. என் ஒரே பொண்ணு கல்யாணம். ஏற்பாடெல்லாம் ஜாம் ஜாம்ன்னு நடந்துட்டு இருக்கு” என்றார் பெருமையுடன்.

“கண்டிப்பா வந்திடுறோம் சார்” என்றான் சிவா.

“நான் பத்திரிக்கை குடுக்க மட்டும் வரலை சிவா. தாம்பூலப் பையில குடுக்குற ஸ்வீட்ஸ்ல இருந்து மறுவீட்டு விருந்து ஸ்வீட்ஸ் வரைக்கும் நம்ம கடையில தான் செஞ்சு குடுக்கணும். எல்லாம் தரமா இருக்கணும். நம்ம கடை டேஸ்ட் தரத்தை பத்தி பிரச்சனையில்லை. இருந்தாலும் நல்ல முறைக்கு பண்ணிக் குடுக்கணும்” என்றார்.

‘எவ்வளவு பெரிய ஆர்டர்’ என்று செல்வி வாயைப் பிளந்தாள்.

“கண்டிப்பா பண்ணிடலாம் சார். எல்லாமே தரமா சரியான நேரத்துக்கு முடிச்சு குடுத்திடலாம்” என்றான் சிவா.

“அதனால தான தம்பி உங்ககிட்ட சொல்லியிருக்கேன்” என்று நிறுத்தியவர் ஏதோ பேசத் தயங்கினார்.

“என்னன்னு சொல்லுங்க சார்?” என்றான் சிவா.

“நான் பொண்ணு குடுக்குற வீடு உங்க சித்தப்பா வீடுன்னு கேள்விப் பட்டேன். உங்க ரெண்டு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை இல்லைன்னு சொன்னாங்க. அதை மனசுல வச்சுட்டு கல்யாணத்துக்கு வராம இருந்திட மாட்டிங்களே? பிரிஞ்ச குடும்பமெல்லாம் இப்படி நல்லது கெட்டதுல ஒன்னு சேர்ந்தா தான் ஆச்சு” என்றார்.

எம்எல்ஏ தன் வீட்டிற்கு நேரில் வந்ததற்கான காரணம் புரிந்தது சிவாவிற்கு. விஷயம் புரிந்த நடராஜனும் அமைதியாய் இருக்க,

“உங்களுக்குள்ள பிரச்சனை இருக்கலாம். ஆனா நான் பொண்ணைப் பெத்தவன். என் பொண்ணு வாழப் போற வீட்டோட சொந்த பந்தங்களை முறைப்படி அழைக்கணும் இல்லையா?” என்றார்.

“உங்களோட அழைப்புக்காக, உங்க வீட்டு சார்பா கண்டிப்பா நாங்க வருவோம் சார்” என்றான் சிவா. மறைமுகமாக மாப்பிள்ளை வீட்டுப் பக்கம் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுவதை போல் இருந்தது அவனின் பேச்சு.

“சரி சிவா” என்றவரும் கிளம்பிவிட்டார்.

“டேய் சிவா! இவரை எப்படிடா உனக்கு தெரியும்?கொஞ்சம் கூட பெரிய ஆளுன்ற பந்தா இல்லை. நம்ம சித்தப்பா வீட்டுக்கு இப்படி ஒரு சம்பந்தியா?” என்றான் பிரபாகரன்.

“அவர் நம்ம கடையில ரெகுலர் கஸ்ட்டமர். அவர் வீட்டு பங்க்ஷன் எல்லாத்துக்கும் ஸ்வீட்ஸ் காரம் நம்ம தான பண்றோம்” என்றான் சிவா.

“இதை என்கிட்ட சொல்லவே இல்ல” என்றான் பிரபா.

“நீங்க கவனிக்கலைன்னு சொல்லுங்க. உங்ககிட்ட குடுத்த கணக்கு வழக்கு பைலை எடுத்து பாருங்க. பெரிய ஆர்டர் எல்லாமே தேதி வரியா, யார் என்னன்னு தெளிவா இருக்கும். நீங்க பார்க்கலைன்னா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றவன்,

“அவர் நம்மளை மதிச்சு கூப்பிட்டிருக்கார். அதுக்காகவாது போய்ட்டு வரணும். அப்பாவும் அம்மாவும் போயிட்டு வரட்டும்” என்றான் சிவா.

“சரி”என்பதைப் போல் பிரபா தலையை ஆட்ட,

“அப்பறம் இது கொஞ்சம் பெரிய ஆர்டர். மாஸ்டர்ஸ் ரெண்டு பேர் லீவ்ல போயிருக்காங்க. அவங்களுக்கு இன்பார்ம் பண்ணனும். தேவையான திங்க்ஸ் எல்லாத்தையும் கடைல சொல்லி இறக்க சொல்லிடுங்கண்ணா” என்றவன் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான்.

“பரவாயில்லைங்க! உங்க தம்பி பெரிய பெரிய ஆளையெல்லாம் பழகி வச்சிருக்கார்” என்ற செல்வி,

“எது எப்படியோ நம்ம கடைக்கு பெரிய ஆர்டர் எல்லாம் வந்தா சரித்தான்” என்றாள் செல்வி.

பிரபாகரனுக்குத் தான் மனதிற்குள் சற்று குற்ற உணர்ச்சியாக இருந்தது. வெளியே சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், சிவா பொறுப்பேற்ற இந்த  நான்கு வருடங்களில், அவன் கடை நல்ல வளர்ச்சி அடைந்திருந்தது என்பது தான் உண்மை. அங்கு பணிபுரியும் அனைத்து மாஸ்ட்டர்களுக்கும் நிறைவான சம்பளத்தையும், சரியான பணி நேரத்தையும் ஒதுக்கிக் கொடுத்திருந்தான்.

அங்கு எந்த வித அதிகப்படியான சலுகைகளும் இல்லாமல் வேலை பார்த்தவன் சிவா ஒருவனே. அவன் அதை அண்ணன் கடையாக ஒரு நாளும் நினைத்தது கிடையாது. சொந்த கடையை எப்படி வளர்ப்பானோ அப்படித்தான் வளர்த்தெடுத்திருந்தான்.

“சிவா கல்யாணத்துக்கு நாம ஏதாவது செய்யணும் செல்வி” என்றான் பிரபா.

“நம்ம தனியா செய்ய என்ன இருக்கு? அதான் உங்கப்பா கல்யாண செலவுக்கு பணம் குடுத்துட்டாரே? வேற என்ன செய்யணும்னு நினைக்கிறிங்க?” என்றாள் செல்வி கடுப்புடன்.

“ஒரு ரெண்டு சவரன்ல செயின் எடுத்து போடுவோமா?” என்றான்.

‘எதே! ரெண்டு சவரனா? சவரன் என்ன விலை விக்கிதுன்னு தெரியுமா உங்களுக்கு? சாதாரணமா சொல்றிங்க? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அண்ணன் தம்பிக்குள்ள இதெல்லாம் தேவையில்லை” என்றாள் செல்வி.

மனைவியை முறைத்தபடி சென்று விட்டான் பிரபாகரன்.

ஒரு வழியாக மாதவனின் திருமண நாளும் விடிந்திருந்தது. முதல் நாள் மாலை மூர்த்தியும் சாந்தியும் மட்டும் மண்டபம் சென்று விட்டு வந்திருந்தனர்.

காலையில் அபர்ணாவும் கிளம்புவதாக இருக்க, மனமே இன்றி அமர்ந்திருந்தாள்.

“முகூர்த்தத்துக்கு நேரமாகுது அபர்ணா. சீக்கிரம் கிளம்பினா தான் போக முடியும்” என்றார் சாந்தி.

“நான் வரலைம்மா” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காயத்ரி கிளம்பி தயாராகி வந்தாள்.

“இன்னுமாடி நீ கிளம்பலை?” என்ற காயத்ரி,

“அதைத்தான் நானும் கேட்குறேன் காயத்ரி. மாதவன் கல்யாணத்துக்கு நம்ம வீட்ல இருந்து எல்லாரும் கண்டிப்பா போயே ஆகணும்னு சொன்னது இவ தான். இப்ப இப்படி வரலைன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்றார் சாந்தி.

“நீங்க போய் எடுத்து வைக்கிறதை எடுத்து வைங்கம்மா. நான் இவளை கூட்டிட்டு வரேன்” என்ற காயத்ரி, சாந்தி அறையை விட்டு சென்ற பிறகு அபர்ணாவை முறைத்தாள்.

அவளின் முகம் பார்க்க தயங்கிய அபர்ணா பார்வையை மாற்ற,

“இப்ப எதுக்கு மேடம் இப்படி சோக கீதம் வாசிச்சுட்டு இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் நக்கலுடன்.

“அவங்களுக்குத்தான் புரியலை. உனக்குமா காயு புரியலை” என்றாள் மெல்லிய சோகம் இழையோடிய குரலில்.

“உனக்குத் தான் புரியலை அபர்ணா. உனக்கும் சிவா அண்ணாக்கும் நிச்சயம் முடிஞ்சுருச்சு. நீ இன்னும் உங்க மாமா நினைப்புல இருக்குறது நல்லாவா இருக்கு?” என்றாள் கோபமாய்.

“என்னால முடியலை காயு. நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்க்குறேன். அவ்வளவு சீக்கிரம் அதுல இருந்து என்னால வெளிய வர முடியலை. இத்தனை நாள் நான் உரிமையா போன அத்தை வீடு. இனி அங்க நான் யாரோ ஒருத்தி தான?” என்னும் போதே கண்கள் கலங்கியது.

“இப்படியே பேசிட்டு இருந்தேன்னு வை.. அடிச்சுடுவேன் அபூ. எப்போ இருந்து நீ இப்படி சுயநலவாதியா மாறுன?” என்ற காயத்ரியின் கேள்வியில் திகைத்தாள்.

“நான் என்ன சுயநலவாதியா மாறுனேன்?” என்றாள் உள்ளே போன குரலில்.

“உன்னை வேண்டாம்னு தூக்கிப் போட்ட குடும்பத்தை இன்னும் எத்தனை நாளைக்கு தூக்கிப் பிடிச்சுட்டு நிக்க போற? உன் மனசும் அதுல இருக்குற வலியும் எனக்குப் புரியுது. ஆனா உன்னோட இந்த உண்மையான நேசத்துக்கு உன் மாதவன் மாமா தகுதியான ஆளு தானா?” என்றாள்.

“வேண்டாம் காயு. இதைப் பத்தி பேச வேண்டாம். அவர் எப்படியோ ஆனா நான்.. “ என்று தேங்கியவள்,

“நான் வச்ச அன்பு உண்மைதான காயு. இத்தனை வருஷம் மனசுல வளர்த்த ஒரு நினைப்பை உடனே தூக்கி எறின்னா எப்படி எறிய முடியும்?” என்றாள்.

“நீ தூக்கி எறியவே வேண்டாம். அப்படியே மனசுக்குள்ள வச்சுகிட்டு சோக கீதம் வாசிச்சுட்டு இரு. ஆனா,உன் மாதவன் மாமா இன்னைக்கு புது மாப்பிள்ளை. வேற ஒரு பொண்ணுக்கு சொந்தமாகப் போறாரு. அதை மறந்துடாத” என்றாள் காயு.

“அது எனக்கும் தெரியும் ” என்றவள் வந்த அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டாள்.

அவள் அமைதியாக கிளம்பும் போதே அவளின் மனநிலை காயத்ரிக்கு புரிந்து போனது. அதீத மன உளைச்சல் இருந்தால் மட்டுமே அபர்ணா இப்படி அமைதியாகிப் போவாள்.

ஏற்கனவே சாந்தி எடுத்து வைத்திருந்த புடவையை கட்டியவள், ஏனோ தானோவென்று கிளம்ப, அவளைக் கை பிடித்து தடுத்த காயத்ரி, அவளை அமர வைத்து அவளே அபர்ணாவை தயார் செய்தாள்.

“இப்போ எதுக்கு காயு இந்த மேக்கப் எல்லாம்?” என்றாள் அசிரத்தையுடன்.

“அப்படியே போனா அழுது வீங்கியிருக்க உன் முகம் தான் எல்லாருக்கும் இன்னைக்கு கன்டென்ட்டா இருக்கும் பரவாயில்லையா?” என்றவள் மேற்கொண்டு அவளை பேச விடவில்லை.

நேராக சென்று மண்டபத்தின் வாயிலில் இறங்கும் போதே அபர்ணாவிற்கு கைகால்கள் வெடவெடக்க ஆரம்பித்தது. எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளே செல்ல முற்பட்டவளை, மண்டப வாயிலில் இருந்த மாதவன் வெட்ஸ் சுஜிதா என்ற பேனர் வரவேற்றது.

ஒரு நிமிடம் பார்வையை அதில் நிலைக்கவிட்டவள் பின் பார்வையை மாற்றிக் கொண்டவளாய் உள்ளே செல்ல, அவளின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த காயத்ரிக்கு அவள் மேல் பரிதாபம் தான் தோன்றியது.

இதே மாதவனோடு தன்னை சேர்த்து எத்தனை கனவுகள் கண்டாள் என்று காயத்ரிக்குத் தான் தெரியுமே. அவளின் முழு உலகமே அவன் தான் என்னும் அளவிற்கு காதலை வளர்த்துக் கொண்டவள் ஆயிற்றே. ஆயிரம் காதல் மொழியை வெளிப்படுத்திய அவள் கண்களில் இன்று எதுவுமின்றி யாரோ போல் இருந்த உணர்வை கண்டு காயத்ரியும் மனதிற்கு உடைந்து தான் போனாள், அபர்ணாவை நினைத்து.

இதோ அவள் உள்ளே செல்லும் போது சொந்த பந்தங்களின் பார்வை ஏனோ அவளை ஏளனமாய் பார்ப்பதைப் போல் அவளுக்குள் ஒரு பிரம்மை உருவாவதை அவளால் தடுக்க முடியவில்லை. சிலர் பாவமாய் பார்ப்பதைப் போல் பார்த்து வைத்தனர். ஏனோ அவர்களின் பார்வை தன்னை கீழிறக்குவதாய் உணர்ந்த அந்த நிமிடம் சட்டென்று தலை நிமிர்ந்து அனைவரையும் பார்த்தாள் அபர்ணா.

மண்டபத்தில் கூட்டம் அதிகமாக இருக்க, அந்த கூட்டத்திலும் அவளிடத்தில் ஓடி வந்தார் அன்னம்.

“என்னடா அபர்ணா? ஏன் நேத்து நைட்டு வரலை? அத்தை உன்னை தேடிட்டே இருந்தேன்” என்ற அன்னத்திற்கு ஒரு சிறு புன்னகையை பதிலாய் கொடுத்திருந்தாள்.

“இது உங்களுக்கே ஓவரா தெரியலை. இவ வந்து இந்த கல்யாணத்துல,  வேலை செய்யணும்னு எதிர்பார்க்குறிங்களா?” என்றாள் காயத்ரி பொறுக்க மாட்டாமால்.

“நான் அப்படி சொல்ல வரலைமா” என்ற அன்னம் என்ன பேசுவதென்று தயங்கி நிற்க,

“நீங்க போய் வந்தவங்களை கவனிங்க அத்தை. இங்க நான் பார்த்துக்கிறேன்” என்ற அபர்ணா எப்போதும் போல் அன்னத்தின் வேலையை பாதியாய் குறைத்திருந்தாள் அந்த இடத்திலும். காயத்ரி தான் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மூர்த்தியும் சாந்தியும் கூட பயந்து கொண்டு தான் இருந்தனர், எங்கே அழுது வைத்து விடுவாளோ என்று. ஆனால் அபர்ணா முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளவே இல்லை.

மேடையில் இருந்த மாதவன், அவள் உள்ளே வரும் போதே கவனித்து விட்டான். வெண்பட்டு உடுத்தி, தேவதையாய் வந்தவளைக் கண்டவனின் மனம், தான் தவற விட்ட வசந்தத்தை எண்ணி விரக்தியுடன் சிரித்துக் கொண்டது.

அபர்ணா ஒரே முறை தான் மேடையைப் பார்த்தாள். அதற்குமேல் அவள் பார்வை மேடைப் பக்கம் போகவே இல்லை.

“என்ன இருந்தாலும் உன் அண்ணன் மகளை நீ விட்டிருக்க கூடாது அன்னம். மகாலெட்சுமி மாதிரி இருக்கா” என்று ஒரு சிலரும்,

“உன் அண்ணன் பொண்ணுக்கு வரன் பார்க்குறாங்களா? எங்க சொந்தத்துல பையன் இருக்கான்” என்று சிலரும்,

“நீ குடுத்து வச்சது அவ்வளவு தான்” என்று சிலரும் சொல்ல, இதையெல்லாம் கேட்டபடி கல்யாண வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அன்னத்திற்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், அறைக்குள் சென்று அழுது தீர்த்துவிட்டார்.

“ம்மா என்ன பண்றிங்க?” என்றான் கிஷோர் கோபமாக.

“என்னால முடியலை கிஷோரு. பார்க்குறவங்க எல்லாம் ஏதாவது ஒன்னு சொல்லும் போது, அப்படியே உங்கப்பா மேலயும் மாதவன் மேலயும் ஆத்திரமா வருது” என்றார் அன்னம்.

“இனி ஆத்திரப்பட்டு ஒன்னும் ஆகப் போறது இல்லை. வீணா அழுது அவங்க மேற்கொண்டு பேசுற மாதிரி வச்சுக்காதிங்க. எனக்குத் தெரிஞ்சு ஆபரணம் தம் கட்டி சிரிச்சுட்டு இருக்கா. நீங்க இப்படி அழறது தெரிஞ்சா அவளும் சேர்ந்து அழுவா. அவளுக்காகவாது அமைதியா இருங்க” என்று அதட்டி அவரை வெளியே அழைத்து வந்திருந்தான் கிஷோர்.

“அடடே வாங்க தம்பி” என்று எம்எல்ஏவே சென்று வரவேற்கவும் அவருடன் சென்ற முத்து மாணிக்கம், அங்கே தன் அண்ணன் குடும்பத்தைக் கண்டு திகைத்து நின்றார்.

“என்ன சம்பந்தி பார்த்துட்டு இருக்கீங்க? சிவா தம்பி நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்” என்றார் எதுவும் தெரியாதவரைப் போல.

“வாங்க” என்றார் வேறு வழியின்றி.

பிரபாகரனுடன்,நடராஜனும் கலையரசியும் மட்டும் வருவதாக இருக்க, கடைசி நிமிடத்தில் என்ன நினைத்தானோ சிவாவும் வந்திருந்தான்.

அன்னத்திற்கும் கிஷோருக்கும் அவர்களை அங்கு பார்த்தவுடன் நம்ப முடியவில்லை.

“பெரியப்பா,பெரியம்மா,அண்ணா வாங்க” என்ற கிஷோருக்கு மனதிற்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவனுடைய எத்தனை நாள் கனவு இது.

“சிவாண்ணா நிஜமா என்னால நம்ப முடியலை” என்றான் சற்று உணர்ச்சி வசப்பட்டவனாய்.

“பொண்ணோட அப்பா பழக்கம் கிஷோர். அவர் கண்டிப்பா வரணும்னு சொல்லவும் அவர் பேச்சை தட்ட முடியலை” என்றான் சிவா.

“யாருக்காக வந்திருந்தாலும், நீங்க வந்ததே சந்தோசம்ண்ணா” என்ற கிஷோர் அவர்களை விழுந்து விழுந்து கவனிக்க, அவனுடன் அன்னமும் சேர்ந்து கொண்டார். இதைப் பார்த்த முத்து மாணிக்கம் ஒரு பக்கம் பல்லைக் கடித்தாலும், மனதின் ஒரு ஓரத்தில் நிறைந்து போனதை பாவம் அவரே அறியவில்லை.

இவர்கள் வந்ததை அபர்ணா கவனித்திருக்கவில்லை. அவள் தான் ஒரு சிந்தனையில் இல்லையே.

மாதவனின் பார்வையோ விடாமல் அபர்ணாவைச் சுற்ற, மேடையை பார்த்துக் கொண்டிருந்த சிவா அவன் பார்வையின் பொருள் புரியாமல் அவன் பார்வை சென்ற திசையில் பார்த்தான். அப்போது தான் அவனும் அபர்ணாவைப் பார்த்தான்.

அவளோ யாரையும் சட்டை செய்யாது, சாந்தியுடனும் அன்னத்துடனும் சேர்ந்து பரபரப்புடன் அவர்கள் சொன்னதை செய்து கொண்டிருந்தாள்.

கைகளை கட்டி அமர்ந்திருந்தவன் இமைக்காமல் அவளைத் தான் பார்த்திருந்தான். அவள் இயல்பாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும் நிஜத்தில் அவள் இயல்பாய் இல்லை என்பதை சிவா உணர்ந்திருந்தான்.

“சிவா நீங்க எப்போ வந்திங்க?” என்றபடி வந்த கபிலனிடம் பேசியவன்,

“பார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம் கபிலன். நீ போய் அங்க பார்க்குறதை பாருங்க. அப்பறம் நாங்க இங்க இருக்கோம்னு உங்க சிஸ்டர்கிட்ட சொல்ல வேண்டாம். அதுக்கும் அவங்க பீல் பண்ணுவாங்க” என்ற சிவாவை நிஜமாகவே பிடித்துப் போனது கபிலனுக்கு.

“அதெல்லாம் பீல் பண்ண மாட்டா சிவா. நான் போய் அவளை வர சொல்றேன்” என்றான்.

“சொன்னா கேளுங்க கபிலன். அதெல்லாம் வேண்டாம்” என்று சிவா உறுதியாக கூறவும் வேறு வழியின்றி அமைதியாக சென்று விட்டான்.

“அப்பா நீங்க இருந்து கல்யாணம் முடிஞ்ச உடனே வாங்க. நான் கிளம்புறேன்” என்ற சிவாவை புரியாமல் பார்த்தனர் நடராஜனும் கலையும்.

“இவ்வளவு தூரம் வந்துட்டு இப்பவே கிளம்பிப் போனா நல்லா இருக்காது சிவா. பிடிக்குதோ பிடிக்கலையோ இது என் தம்பி வீட்டு கல்யாணம். இருந்து முடிச்சுட்டே போவோம்” என்றார் நடராஜன்.

‘இவங்க வேற மனுஷன் நிலைமை தெரியாம’ என்று முனங்கிக் கொண்டவனுக்கு நிஜமாகவே அந்த இடத்தில் அபர்ணாவை நினைத்து வருத்தமாக இருந்தது. அவளின் மனநிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. மாதவனின் பார்வை அவளைத் தொடர்வதைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. எரிச்சலாக உணர்ந்தான்.