மாதவனின் திருமண ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இங்கு சிவா அபர்ணா நிச்சய ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது.
அபர்ணாவை விட இந்த திருமணத்தில் துளியும் நாட்டமில்லாமல் இருந்தான் சிவா.
‘இப்போ யாரு இந்த பொண்ணை சரின்னு சொல்ல சொன்னது?’ என்று கோபத்தை முழுவதும் அவள் மீது திருப்பியிருந்தான்.
அன்று வீட்டிற்கு வந்தவனை பிடித்துக் கொண்டார் கலையரசி.
“என்ன சிவா முகத்துல ஒரு கல்யாண கலையே இல்லை? இப்படி இருந்தா நாங்க என்னன்னு நினைக்கிறது? இன்னும் ரெண்டு நாள்ல போய் பூ வச்சு நிச்சயம் பண்ண போறோம் ” என்றார் கவலையாய்.
அண்ணன்களும் அண்ணிகளும் அவன் பதிலை எதிர்நோக்கியிருக்க,
“நான் சென்னை போகலாம்னு இருக்கேன்ம்மா” என்றான் சாப்பிட்டபடி.
அவனின் பேச்சில் அதிர்ந்த பிரபாகரன்,
“சென்னைக்கு இப்போ எதுக்குடா? என்ன விஷயம்?” என்றான் வேகமாய்.
“ஒரு இண்டர்வியூ இருக்கு” என்றான் மொட்டையாய்.
“இப்போ சென்னை வரைக்கும் வேலைக்கு போக வேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்றான் பிரபாகரன்.
நிமிர்ந்து அண்ணனை முறைத்தவன்,”அம்மா அப்பா சொல்ற மாதிரி இப்போ கல்யாணம் பண்றேன்னு வைங்க, உங்க கடையில நீங்க குடுக்குற சம்பளத்தை வச்சு நான் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அதுவும் இல்லாம அண்ணி ஆயிரம் தடவை சொல்லிக் காட்டிட்டாங்க. நீங்களும் மறுத்துப் பேசினதா எனக்கு ஞாபகம் இல்லை. அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன். இனியும் இருக்க முடியும்னு தோணலை. நீங்க கடைக்கு ஒரு நம்பிக்கையான ஆளைப் பாருங்கண்ணா. ரொம்ப நாள் நான் இங்க இருக்க மாட்டேன்” என்றான்.
“நீ பேசுறதை பார்த்தா இப்போ எடுத்த முடிவு மாதிரி தெரியலையே சிவா” என்றான் சத்யா.
“உண்மை தான் அண்ணா. ஏற்கனவே எடுத்த முடிவு தான். சொல்ல இப்போதான் சந்தர்ப்பம் கிடைச்சது” என்றான் சிவா.
“என்னப்பா? இவன் இப்படி பேசிட்டு இருக்கான். நீங்களும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்க?” என்றான் பிரபாகரன் மனக் குமுறலுடன்.
“நான் சொல்ல என்ன இருக்கு பிரபா. சிவாவை உன் கடையைப் பார்த்துக்க சொன்ன. நானும் சரி அண்ணன் தம்பி சேர்ந்து தொழில் பண்ணி ஒரே வீட்ல இருந்தா குடும்பம் ஒத்துமையா இருக்கும்னு நினைச்சேன். ஆனா போக போக அவன் என்னமோ உங்களுக்கு அடிமைன்ற மாதிரி பேசுறதும் நடந்துக்கிறதும் நல்லாவா இருக்கு?” என்றார் நடராஜன்.
“சேர்ந்து தொழில் பண்ணனும்னா ரெண்டு பேரும் முதல் போடணும். ஆனா இங்க அசலை போட்டு தொழிலை வச்சுக் கொடுத்தது என் மாமனார். நம்ம பணமா இருந்திருந்தா கூட இவனை பாட்னர் போட்ருப்பேன். நான் என்ன பண்ண முடியும்? யாருக்கோ ஒருத்தனுக்கு வேலை செஞ்சு சம்பளம் தான வாங்க போறான். அதை சொந்த அண்ணனுக்கு செய்யக் கூடாதா? வெளி ஆளை நம்ப முடியாமத்தான இவனை தொங்கிட்டு இருக்கேன்” என்றான் பிரபா.
“ஆமாம் மாமா..! இப்படி திடீர்ன்னு சொன்னா எப்படி? சிவா கடையை பார்த்துக்குவாருன்னு நம்பித்தான் இவரு பைனான்ஸ் தொழிலுக்கே போனாரு. வாரத்துல நாலு நாள் லைன்குள்ள போகணும். அதனால கொஞ்ச நாளைக்கு மட்டுமாவது இருக்க சொல்லுங்க” என்றாள் செல்வி வேகமாய்.
“சிவா” என்று நடராஜன் தன் கடைசி மகனைப் பார்க்க, அவர் சொல்ல வருவது அவனுக்கும் புரிந்தது. பல்லைக் கடித்து கோபத்தை அடக்கியவன், எதுவும் பேசாமல் எழுந்து சென்றான்.
இது எப்போதும் நடப்பதுதான். ரோஷம் வந்து சிவா வெளியே செல்கிறேன் என்று சொல்வதும், அப்போதைக்கு மட்டும் அண்ணன்மார்கள் தணிந்து போய் அவனை வெளியேற விடாமல் செய்வதும்.
நடராஜன் மகனின் திருமண செலவிற்கென ஒரு தொகையை பிரபாகரனிடம் கொடுக்க, மூத்த மருமகள்கள் இருவரும் கண்ணை விரித்தனர்.
“என்னப்பா இதெல்லாம்?” என்றான் பிரபா.
“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்ச மாதிரி அவனுக்கும் பண்ணி வைக்கணும்ல. நாளைக்கு யாரும் ஒரு சொல்லு சொல்லிடக் கூடாது பிரபா, அதுக்குத்தான்” என்றார்.
“இத்தனை நாள் பணத்தை வச்சுகிட்டு தான் கமுக்கமா இருந்திங்களா மாமா? இது மட்டும் தானா? இல்ல, எங்களுக்குத் தெரியாம இன்னும் வச்சிருக்கிங்களா?” என்றாள் சரிதா.
“நீங்க சொல்றதும் உண்மை தான்க்கா” என்று ஒப்புக் கொண்டாள் சரிதா.
பேக்கரியில் அமர்ந்திருந்த சிவாவின் முகம் தெளிவின்றி குழப்பத்துடன் இருந்தது. எப்போதும் ஒரு நிதானமும் தெளிவும் அவன் முகத்தில் இருக்கும். ஆனால் சமீப காலமாக இதையெல்லாம் தொலைத்திருந்தான். அதற்கு காரணம் அன்று பேக்கரியில் அமர்ந்து அழுத அபர்ணாவின் முகம் தான்.
மாதவனுக்குத் தான் அபர்ணா என்று பேசியிருந்தது சொந்த பந்தங்களிடையே தெரிந்த விஷயம். இப்போது இதெல்லாம் மாறும் போது, அதை சிவாவால் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“அண்ணா நம்ம அண்ணிண்ணா” என்ற மணியின் குரலில் கலைந்தவன்,
“நம்ம அண்ணியா?” என்று மணியை முறைத்தவன் அவன் காட்டிய திசையில் பார்க்க, அபர்ணாவோ கபிலனுடன் வந்து இறங்கியிருந்தாள்.
சிவா யோசனையுடன் பார்க்க, வந்தவர்கள் பேக்கரிக்கு எதிரில் சற்று தள்ளி அமைந்திருந்த வங்கிக்குள் நுழைய,
“பேங்க் வந்திருப்பாங்க போலடா” என்றான் சிவா.
“ஆனா, நம்ம அண்ணியா இருந்தவங்க இப்போ எனக்கு மட்டும் அண்ணியா மாறுவாங்கன்னு நினைக்கலை சிவாண்ணா” என்று சிரிப்புடன் சொன்ன மணியை முறைத்தான் சிவா.
“வாய்லயே போடுவேன்..! வேலையை பாருடா” என்றான். யோசனைகளைத் தவிர்த்து வேலையில் கவனம் கொண்டவனுக்கு ஏனோ பார்வை அவ்வப்போது பேங்க் வாசலுக்கு சென்று திரும்பியது.
சற்று நேரத்தில் சிவாவின் முன் வந்து நின்றான் கபிலன்.
“வாங்க, என்ன சாப்பிடுறிங்க?” என்றான் சிவா இயல்பாய்.
“எதுவும் வேண்டாம் சிவா. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் கபிலன்.
“என்ன பேசணும்?” என்றவன், பேசிக் கொண்டே அவனுக்கு ஒரு காபியை எடுத்து வந்து நீட்டவும் தவறவில்லை.
“சாரி அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. யோசிச்சு பார்த்ததுக்கு அப்பறம் தான் புரிஞ்சது” என்றான் கபிலன்.
“விடுங்க! உங்க சிஸ்டர் மேல இருக்குற அக்கறையில தான பேசுனிங்க. எனக்கும் அப்போ கோபம் வந்தது. அப்பறம் புரிஞ்சுக்க முடிஞ்சது” என்றான் சிவா.
“ரொம்ப தேங்க்ஸ் சிவா. எங்க இந்த விஷயத்தை வச்சு நமக்குள்ள கடைசி வரைக்கும் முட்டிக்குமோன்னு ஒரு பீல். இப்போதான் ரிலாக்ஸா இருக்கு” என்றான் கபிலன்.
“என்ன இந்த பக்கம்?” என்றான் சிவா தெரியாதவன் போல்.
“அபூ ஸ்கூட்டியை சர்வீஸ்க்கு விட்ருக்கு. பேங்க்ல கொஞ்சம் வேலை இருக்குன்னு சொன்னா. அதான் நான் கூட்டிட்டு வந்தேன். நேரம் ஆகும் போல தெரியுது. அதான் நான் கிளம்பிட்டேன். அபூ ஆட்டோல போய்டுவா” என்றவன்,
“அப்போ நான் கிளம்புறேன் சிவா” என்றபடி கிளம்பிவிட்டான்.
கபிலன் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் அபர்ணா வெளியே வரவில்லை. சிவாவின் பார்வை அடிக்கடி வங்கி வாசலுக்கு சென்று வந்தது. அதைப் பாரத்த மணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“அண்ணா அண்ணி இன்னும் வெளிய வரலை” என்றான் கிண்டலுடன்.
“டேய்! நீ இன்னைக்கு அடி வாங்கப் போறது உறுதி” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே வந்திருந்தாள். எப்போதும் புடவையில் இருப்பவள் இன்று சுடிதாரில் இருந்தாள். ஏனோ தானோவென்று கிளம்பி வந்திருக்கிறாள் என்று அவளைப் பார்த்ததில் புரிந்தது. முகத்தில் பேருக்குக் கூட ஒரு மலர்ச்சி இல்லை.
“அண்ணா நான் வேணும்னா போய் அண்ணிக்கு ஆட்டோ பிடிச்சு குடுத்துட்டு வரவா?” என்றான் மணி.
“அதெல்லாம் வேண்டாம்” என்றவன் தானே செல்ல எத்தனிக்க, அப்போது தான் எங்கோ போய்விட்டு வந்து கொண்டிருந்த மாதவன், அபர்ணா நிற்பதை பார்த்துவிட்டு அவளுக்கு அருகில் சென்று வண்டியை நிறுத்தியிருந்தான்.
“என்னப்பா இங்க?” என்றவனின் முகம் பாராது எங்கோ பார்த்தவள்,
“பேங்க் வந்தேன் மாமா” என்றாள்.
“சரி வா வீட்ல விடுறேன்” என்றான் மாதவன்.
“இல்லை வேண்டாம். நான் ஆட்டோல போயிப்பேன்” என்றாள் யோசிக்காமல் பட்டென்று.
அவளின் அந்த குரல் மாதவனை உள்ளுக்குள் ஏதோ செய்தது. எப்போதும் தன்னிடம் ஆசையாய் பேசும் குரல் அதுவல்ல என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது.
“ஏன் அபர்ணா? இதுக்கு முன்ன நான் உன்னை கூட்டிட்டு போனது இல்லையா?” என்றான் மனதில் எழுந்த வலியுடன்.
“இருக்கட்டும் மாமா. முன்ன உறவும் இருந்தது உரிமையும் இருந்தது. இப்போ உறவு மட்டும் தான் இருக்கு” என்றாள் கமரிய குரலில். அதை அவனுக்கு காட்டாமல் இருக்க அரும்பாடு பட்டு போனாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியில் வந்து நின்ற ஒரு வண்டியின் வேகத்தில் பயந்து தடுமாறி சமாளித்து நின்றாள் அபர்ணா.
“டேய் அறிவில்லை” என்று சத்தம் போட்ட மாதவன், வந்தவன் யாரென்று தெரிந்த பின்பு பல்லைக் கடித்தபடி வாயை மூடிக் கொண்டான்.
அபர்ணாவோ நெஞ்சில் கை வைத்தபடி ஒரு பயத்துடன் சிவாவை பார்த்திருக்க, அவனோ எதிரே இருந்த சாலையைத் தான் பார்த்திருந்தான்.
“நா..நான் கிளம்புறேன் மாமா” என்றவள் ஒரு தயக்கத்துடன் சிவாவின் பின்னால் ஏறி அமர்ந்தாள். மாதவன் அவளை அதிர்ச்சியுடன் பார்க்க, அவளுக்கோ கண்ணீர் ததும்பி நின்றது. அவள் அமர்ந்த அடுத்த நிமிடம் வண்டியை கிளப்பியிருந்தான் சிவா. மாதவனோ சென்ற அவர்களைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தான். ஒரு இனம் புரியாத வலி மீண்டும் அவன் மனதிற்குள் வந்து போவதை அவனால் தடுக்க முடியவில்லை.
அபர்ணாவின் வீடு சென்று அவளை இறக்கி விடும் வரை சிவா ஒரு வார்த்தை பேசவில்லை. எந்த ஸ்பீட் பிரேக்கிலும் ஏற்றி இறக்கவில்லை. சொல்லப் போனால் அலுங்காமல் குலுங்காமல் கொண்டு வந்து இறக்கியிருந்தான்.
அவள் இறங்கியவுடன்,
“கபிலன் டிராப் பண்ண சொல்லலை. நான் தான் டிராப் பண்ண வந்தேன். ரோட்ல கண்ணு கலங்கி நிக்கிறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்” என்றவன் அவளைத் திரும்பியும் பாராது சென்று விட்டான்.
அபர்ணாவோ விக்கித்து போய் நின்றிருந்தாள்.
அதற்கு பிறகு இரண்டு நாட்களிலேயே பூ வைத்து நிச்சய தாம்பூலம் மாற்ற குடும்பத்துடன் வந்து இறங்கியிருந்தான் சிவசக்தி.
மூர்த்தி தங்கையின் வீட்டிற்கும் சொல்லியிருக்க, முத்து மாணிக்கமும் மாதவனும் வரவில்லை.அவ்வளவு சொல்லியும் மூர்த்தி கேட்கவில்லை என்ற கோபம் அவர்களுக்கு. அன்னமும் கிஷோரும் வந்திருந்தனர். அக்கம் பக்கம் நெருங்கிய சொந்த பந்தங்கள் என்று குறிப்பிட்ட ஆட்களை மட்டும் அழைத்திருந்தனர்.
“என்னக்கா? அப்படி ஒன்னும் வசதி இல்லைன்னு சொன்னிங்க? ஆனா வீடு அழகா இருக்கு. ஓரளவுக்கு பெரிய வீடாவும் இருக்கு” என்றாள் சரிதா மெல்லிய குரலில்.
“வீடு இருந்து இவளுக்கு என்ன ஆகப் போகுது? அது பையனுக்குத் தான போகும். அதெல்லாம் விசாரிச்சுட்டேன். பொண்ணோட அப்பா சரியான குடியாம். குடிச்சே சம்பாதிச்சதுல பாதியை அழிச்சுட்டார்ன்னு சொன்னாங்க” என்றாள் செல்வி.
“பார்ப்போம் என்ன பேசி முடிக்கிறாங்கன்னு” என்ற சரிதாவும் அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
பரஸ்பர சம்பிரதாயபேச்சு வார்த்தைகளுக்குப் பின் திருமணத் தேதி குறிக்கப்பட்டது.
சொந்த பந்தங்களுக்கு ஆச்சர்யமே கபிலன் மனைவி வித்யா அமைதியாய் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்தது தான். சாந்திக்கு கூட நம்பமுடியவில்லை. கபிலன் வரும் போதே வித்யாவிடம் கண்டிஷன் போட்டுத்தான் கூட்டி வந்திருந்தான். தங்கையின் திருமணத்தில் முகத்தைக் காட்டினால், தனிக்குடித்தனம் கிடையாது என்ற கண்டிஷன் தான் அது. அதனாலேயே எந்த பிரச்சனையும் செய்யாது அமைதியாக இருந்துவிட்டாள்.
கரும் பச்சை வண்ண புடவையில் அதீத அலங்காரம் இன்றி வந்து நின்றவளைத் தான் முதன் முறையாக கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.
“என்ன பெருசா அழகா இருக்கா. என் தங்கச்சி இவளை விட கொஞ்சம் பூசுன மாதிரி இருப்பா. மத்தபடி அவளும் பார்க்க அம்சமா இருப்பா” என்றாள் செல்வி விட்டுக் குடுக்காமல்.
“சரி சரி டென்ஷன் ஆகாதிங்க” என்றாள் சரிதா.
“சிவா இந்த பூவை அபர்ணா தலையில வச்சு விடுப்பா” என்றார் கலையரசி.
“நீங்களே வச்சு விடுங்கம்மா” என்றான் சிவா.
“நீதான் வைக்கணும் வாப்பா” என்றவுடன் வேறு வழியில்லாமல் எழுந்து சென்றான்.
அபர்ணாவிற்கோ இதயம் பந்தையக் குதிரை போல் ஓடிக் கொண்டிருந்தது. தலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குனிந்து கொண்டாள்.
சிவாவோ அவளின் படபடப்பிற்கு அவசியமில்லை என்பதைப் போல் பட்டும் படாமல் பூவை வைத்து விட்டிருந்தான். அவன் சம்பிரதாயத்திற்கு வைத்து விட, காயத்ரி அதை சரியாக வைத்து விட்டாள்.
“அப்படியே மோதிரத்தையும் போட்டு விடுப்பா” என்று கலையரசி மோதிரத்தை நீட்ட அதை கையில் எடுத்தவன், வெகு நேரம் போடாமல் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“போடுப்பா” என்றார் கலை.
“அவங்க நிமிராம போட மாட்டேன்” என்றான் தீர்க்கமான குரலில். அவனின் குரலில் அவள் சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவளைப் பார்த்தபடியே நீட்டாத அவளின் கையை தானே எடுத்து மோதிரத்தை அவள் விரலில் சேர்த்திருந்தான்.
“நீயும் போடு அபூ” என்று கபிலன் சொல்ல, அவளின் கரங்களோ வலுவே இல்லாதவை போன்று நடுங்கியது. எவ்வளவு முயன்றும் அவளால் முடியவில்லை. நீட்டிய அவன் கரத்தையே பார்த்திருந்தவளுக்கு கண்கள் நிரம்பியது.
“போடு அபூ” என்று கபிலன் அழுத்தி சொல்ல, பட்டும் படாமல் அவன் விரல்களில் மோதிரத்தை அணிவித்தவளின் கண்ணீர் அவன் கைகளில் பட்டு தெறித்திருந்தது.
அவளின் நிலையை உணர்ந்தவன் கபிலனை ஒரு பார்வை பார்த்து விட்டு அவளை மறைத்தார் போல் நின்று கொள்ள, மற்றவர்கள் பார்க்கும் முன்னர் கண்ணீரைத் துடைத்திருந்தாள் அபர்ணா.
“சிவா அந்த சந்தனம் குங்குமத்தை நெத்தியில வச்சு விடு” என்று ஒரு ஆள் சொல்ல, அவர்கள் சொன்ன அனைத்து சம்பிரதாயங்களையும் செய்தவன்,
“காயத்ரி உள்ள கூட்டிட்டு போமா” என்றான் அவளை மற்றவர்களின் பார்வையில் இருந்து காக்கும் பொருட்டு.
“என்ன அவசரம் கொழுந்தனாரே? எல்லாரும் சந்தனம் குங்குமம் வைக்கணும். ஜோடியா நின்னு போட்டோ எடுக்கணும். இன்னும் எத்தனை வேலை இருக்கு? இப்பவே உள்ள கூட்டிட்டு போக சொல்றிங்க?” என்றாள் செல்வி கிண்டலுடன்.
அதற்குள் தன்னை சரி செய்து கொண்ட அபர்ணாவோ சற்று தெளிந்த முகத்துடன் நின்றாள்.
“ஹேய் ஆபரணம் நிஜமாவே இன்னைக்கு பொண்ணு மாதிரி இருக்கடி” என்று கிஷோர் கிண்டல் செய்ய, அவனைப் பார்த்தவளின் கண்களில் வேதனை தொக்கி நின்றது.
அதையெல்லாம் கண்டு கொள்ளாத கிஷோரோ,”எப்படி இருந்தாலும் நீ எனக்குத் தான் அண்ணியாகனும்னு விதி இருந்திருக்கு பாரேன்” என்றான்.
அவள் அவனை முறைக்க,
“என்ன முறைப்பு? சிவாவும் எனக்கு அண்ணன் தான?” என்றவன்,
“என்ன சிவாண்ணா? நான் சொல்றது சரிதான?” என்றான் சிவாவைப் பார்த்து.
சிவா மெலிதாய் சிரித்து வைக்க,
“பெரியவங்களுக்குள்ள தான் பேச்சு வார்த்தை இல்லை. ஆனா எனக்கு அந்த தடையெல்லாம் இல்லை. சொல்லப் போனா மேட்ச்ல எங்க கேப்டனே சிவாண்ணா தான்” என்றான் கிஷோர் சிரிப்புடன்.
அன்னத்திற்கு தன் அண்ணன் மகளை தன் மகனுக்கு முடிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் வேதனையும் இப்போது இன்னும் அதிகரித்தது.
“சரி சரி ஜோடியா நில்லுங்க. செம்மையா ஒரு போட்டோ எடுக்குறேன்” என்ற கிஷோர் அவர்களை போட்டோ எடுக்க முற்பட, ஜோடியாய் நின்றவர்களின் இடையில் ஒரு அடிக்கு இடைவெளி இருந்தது.
தன் வீட்டில் இருந்து ஓராயிரம் அடிகளைக் கடந்து அவளிடத்தில் வந்தவனுக்கு, அந்த ஒரு அடி இடைவெளியை நிரப்புவது என்பது இயலாத காரியமாய் இருந்தது.