அத்தியாயம் 5 :

என்றும் இல்லாத திருநாளாய் தங்கள் வீடு தேடி வந்து அமர்ந்திருந்த தங்கையையும் தங்கையின் கணவரையும் தான் பார்த்திருந்தார் மூர்த்தி. சாந்தி அவர்களுக்கு குடிக்க கொண்டு வந்து கொடுக்க, ஒரு செருமலுடன் ஆரம்பித்தார் முத்து மாணிக்கம்.

“மாதவனுக்கு பொண்ணு பார்த்திருக்கு. எம்எல்ஏ பொண்ணு தான்.அண்ணன் வீட்டுக்கு முறைப்படி தகவல் சொல்லனும்னு என் பொண்டாட்டி சொல்லிட்டா. தாய்மாமனா முன்ன வந்து நடத்திக் குடுத்துடு மூர்த்தி” என்றார் அதிகார தொனியில். குரலில் மருந்துக்கும் ஒரு இளகல் தன்மை இல்லை.

அன்னத்திற்கோ தன் பிறந்த வீட்டில் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. ஏதோ தானே குற்றம் செய்ததைப் போல் தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவர்கள் பேசுவதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த அபர்ணாவிற்கு யாரோ நெஞ்சில் ஈட்டியை வைத்து குத்திய உணர்வு. கண்ணீரை வெளியே விடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் அமர்ந்திருந்தாள்.

மூர்த்தி பதில் எதுவும் பேசாமல் முத்து மாணிக்கத்தை முறைத்தார் போல் பார்க்க, அவரின் அமைதி உள்ளே இருந்த அபர்ணாவை கலங்கச் செய்தது. வேகமாய் எழுந்து வந்து தந்தையின் முகம் பார்த்து நின்றாள். தன் மகளின் வருகையும் தன் முகம் பார்த்து சொல்லும் செய்தியும் அவருக்கு புரியாமல் இருக்குமா என்ன?

அபர்ணாவைப் பார்த்த அன்னத்திற்கு தான் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவர் மனதில் இருந்த ஆசைகள் தான் எத்தனை? எதிர்பார்ப்புகள் தான் எத்தனை? அவள் தன் வீட்டிற்கு மருமகளாய் வர வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே ஆசைப்பட்டவர் அன்னம். அபர்ணாவின் மனதில் அதை பதிய வைத்தவரும் அவர் தான். அந்த குற்ற உணர்ச்சியும் இப்போது சேர்ந்து கொண்டு அவரை ஆட்டிப் படைத்தது. அவளைப் பார்க்க பார்க்க அவரும் கலங்கிப் போனார்.

“தாய் மாமனா வந்து நிக்கிறதுக்கும் ஒரு தகுதி தராதரம் வேணுமே. எங்ககிட்ட தான் அதெல்லாம் இல்லையே” என்றார் மூர்த்தி பட்டென்று.

முத்து மாணிக்கம் திரும்பி அன்னத்தை முறைத்தார். அதே முறைப்புடன் மூர்த்தியை பார்த்தவர்,

“என்ன மூர்த்தி? நக்கலா? இவ தொல்லை தாங்க முடியாமத் தான் உன் வீட்டு படியேறி வந்து பேசிட்டு இருக்கேன். நாளைக்கு சாதி சனத்துக்குள்ள தாய் மாமன் இல்லாம என் மகனுக்கு ஒரு சொல்லு வந்துடக் கூடாதுன்னு தான் வந்து நிக்கிறேன். மாமன் உயிரோட இருக்கும் போது மத்தவனை வச்சு மாலை போடுறதுல உனக்கு பிரச்சனை இல்லைன்னா எனக்கும் பிரச்சனை இல்லை” என்றார் பட்டென்று.

“அப்பா” என்றாள் அபர்ணா மன்றாடும் குரலில்.

“என் மக சொன்ன ஒரு வார்த்தைக்காக வருவேன். செய்ற முறையை செய்வேன். மத்தபடி விருப்பப்பட்டு எல்லாம் நாங்க யாரும் வரலை” என்றார் மூர்த்தி.

“அண்ணா” என்று அன்னம் கண்ணீர் வடிக்க,

“நீ பேசாத அன்னம். சும்மா இருந்த சின்ன புள்ள மனசுல ஆசையை வளர்த்து விட்டது நீ. நான் அப்பவே என்ன சொன்னேன்? இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னேனா இல்லையா? இதோ இவர் குணம் தெரிஞ்சு தான சொன்னேன். அப்பல்லாம் என் மருமகளை என் வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லுவியா நீன்னு அப்படி சண்டை போட்ட என் கூட. ஆனா கடைசியா நான் சொன்ன மாதிரி தான நடக்குது? இன்னைக்கு கலங்கி போய் நிக்கிறது என் பொண்ணு தான?” என்றார் மூர்த்தி கோபமாய்.

“கலங்கி போய் நிக்கிற மாதிரி தெரியலையே மூர்த்தி? அதான் எனக்கு ஆகவே ஆகாத குடும்பத்துல பேசி முடிசுட்டிங்களே? நீங்க சொல்லலைன்னா எங்களுக்குத் தெரியாம போய்டுமா? என்னை அசிங்கப்படுத்தனும்னு தான அந்த வீட்ல சம்பந்தம் பேசியிருக்க?” என்றார் முத்து மாணிக்கம்.

“உங்களுக்கு என் பொண்ணோட அருமை தெரியலை. அருமை தெரிஞ்சவங்க கேட்டாங்க. சரின்னு சொன்னோம். ஏன் உங்க பையன் இல்லைன்னா ஊர்ல வேற யாருமே இல்லையா என்ன?” என்றார் மூர்த்தியும் நக்கலாய்.

“தங்கச்சி வீட்டு உறவு நீடிக்கனும்னா அந்த சம்பந்தத்தை வேண்டாம்னு சொல்லிடு” என்றார் முத்து மாணிக்கம்.

“அப்போ அண்ணன் வீட்டு உறவு வேணும்னா என் பொண்ணை மாதவனுக்கு கட்டி வைக்கிறிங்களா அன்னம்?” என்றார் மூர்த்தி.

“மாதவனுக்கு பேசி முடிச்சாச்சு” என்றார் முத்து மாணிக்கம் பட்டென்று.

“அதே மாதிரி அபர்ணாவுக்கும் பேசி முடிச்சாச்சு. யார் என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும்” என்றார் மூர்த்தியும் விடாமல்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தான் மாதவன். ஒரே ஊர் தான் என்றாலும் முன்பு அடிக்கடி வருவான். இப்போதெல்லாம் வருவதில்லை.

திடீரென்று வந்த மாதவனைக் கண்ட அபர்ணாவிற்கு உடல் படபடக்க, கண்கள் கலங்கிப் போனது.

அவள் பார்த்து நினைத்து ரசித்த ஒருவன். மனதிற்கு பூட்டி வைத்து காதலித்த ஒருவன். சில நாட்களில் யாரோ ஒருத்திக்கு கணவனாகப் போகிறான் என்ற நினைப்பே அவளைக் கொல்லாமல் கொன்றது. எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் நிற்க அவள் வெகு பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

மகளின் தவிப்பும் கண்ணீரும் சாந்திக்கு புரிந்தது.

“அபர்ணா நீ உள்ள போம்மா” என்ற சாந்தி,

“என்ன சாப்பிடுற மாதவா?” என்றார்.

“எதுவும் வேண்டாம் அத்தை” என்றவன் ஒரு தயக்கத்துடன் அபர்ணாவை பார்த்தான். அவளோ அவன் முகம் பார்க்கவே இல்லை.

“மன்னிச்சுடு அபர்ணா. அன்னைக்கு அப்பா அப்படி பேசுனது தப்புத்தான்” என்று நிறுத்தியவன்,

“என் மேல இருக்குற கோபத்துல ஏன் அபர்ணாவுக்கு அவசர அவசரமா முடிக்கணும்? அதுவும் அந்த சிவா பயலுக்கு போய்? அபர்ணாவுக்கு வேற நல்ல இடமா பார்ப்போம்” என்றான் மாதவன்.

“அபர்ணாவுக்கு பெத்தவங்க நாங்க இருக்கோம் மாதவா. அவளுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எங்களுக்குத்  தெரியும். மத்தவங்களுக்கு அந்த  சிரமம் வேண்டாம்” என்றார் மூர்த்தி.

“அபர்ணா அங்க போனா கஷ்ட்டப்படுவா மாமா” என்றான் மாதவன்.

அவனின் பேச்சில் குபுக்கென்று கண்ணீர் வெளியே வந்திருந்தது அவளுக்கு. சட்டென்று அறைக்குள் சென்று விட்டாள்.

“குடுத்த வார்த்தையை மீறி எங்களுக்கு பழக்கம் இல்லை மாதவா!” என்றார் மூர்த்தி.

“நீ எதுக்கு இப்போ இங்க வந்த மாதவா? இவங்களுக்கு சொன்னாவெல்லாம் புரியாது. பட்டாத்தான் புத்தி வரும். இது உனக்குத் தேவையா?” என்று முத்து மாணிக்கம் மகனை சத்தம் போட்டார்.

“நான் அபர்ணாகிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் மாதவன்.

“தேவையில்லை மாதவா” என்றார் மூர்த்தி. எங்கே மகளின் மனதை மீண்டும் கலைத்து விடுவானோ என்ற பயம் அவருக்கு.

“மாமா ஒரு அஞ்சு நிமிஷம் பேசுறதால என்ன ஆகிடப் போகுது?” என்று சற்று குரலை உயர்த்தியவன், யாரின் அனுமதியையும் எதிர்பார்க்காமல் அவளின் அறைக்குள் நுழைந்தான். அவன் அங்கு வருவான் என்று எதிர்பார்க்காதவள் சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“அபர்ணா அந்த சிவா விஷயத்துல நீ கொஞ்சம் அவரசப் படாம முடிவு எடுக்குறது நல்லதுன்னு தோணுது. கோபம் வந்தா என்ன பண்றோம்னு தெரியாம பண்ணிட்டு இருப்பான். உருப்படியா வேலை கிடையாது. அண்ணன் பேக்கரியை பார்த்துட்டு ஊரைச் சுத்திட்டு இருக்கான். அவன் எப்படி உன்னை நல்லா வச்சு காப்பாத்துவான்?” என்றான் பொறுமையாக.

அபர்ணா வாய் திறந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

“ஏதாவது பேசுப்பா” என்றான் மாதவன்.

“உங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா நாங்க எல்லாரும் வருவோம் மாமா. தாய் மாமன் மாலையை கண்டிப்பா அப்பா தான் போடுவார். நீங்க இப்ப மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கனும் மாமா” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

“என் விஷயத்துல தலையிடாதன்னு சொல்லாம சொல்றியா அபர்ணா. உன்னை மாதிரி நானும் நீ சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பிருக்கு?” என்றான் மாதவன்.

“திடீர்ன்னு என்ன மாமா என் மேல உங்களுக்கு அக்கறையெல்லாம்?” என்றாள் கேள்வியாய்.

“அது எப்பவும் இருக்குறது தான்ப்பா. என் மாமா பொண்ணு மேல எனக்கு இல்லாத அக்கறை யாருக்கு இருக்கும்?” என்றான் மாதவன்.

“ஹோ..! அப்போ இத்தனை நாள் இருந்தது வெறும் அக்கறை தான் இல்லையா மாமா?” என்றவளின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் திணறினான் மாதவன்.

மற்றவர்களிடம் வேண்டுமானால் மாதவன் நடிக்கலாம். ஆனால் அபர்ணாவிடம் நடிக்க முடியாதே. அபர்ணா மீது அவனுக்கும் ஈர்ப்பு இருந்தது உண்மை தானே. அதை உணர்ந்த பிறகு தானே அவள் அவனை உரிமையுடன் நேசிக்க ஆரம்பித்தாள். மற்றவர்களுக்கு தெரியாது என்றாலும் சம்பந்தப்பட்ட அவனுக்குத் தெரியுமே?

“முதல்ல உங்களுக்கு எது வேணும்ங்றதுல நீங்க தெளிவா இருங்க மாமா. அப்பறம் என் வாழ்க்கையை பார்ப்பிங்க” என்றாள்.

“சாதாரண ஈர்ப்பை காதல்னு நீ முடிவு பண்ணிகிட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும் அபர்ணா?” என்றான் மாதவன்.

“அப்படியா? அப்போ இப்போ வந்து இவ்வளவு தெளிவா பேசுற நீங்க, இதை ஆரம்பத்துலையே பேசியிருக்கலாமே?” என்று விரக்தியுடன் சொன்னவள்,

“சொல்லியிருக்க மாட்டிங்க. ஏன் தெரியுமா? உங்க பின்னாடியே சுத்தி சுத்தி வந்து ஒரு பொண்ணு நேசிக்கிறான்னு தெரிஞ்ச உடனே நீங்க அதை என்ஜாய் பண்ணிங்க. அது தான் உண்மை” என்றவளின் முகம் பார்க்க முடியாமல் திரும்பியவன், பட்டென்று அவள் கையைப் பிடித்தான்.

தன் கையைப் பிடித்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தவள், “தீச்சுட்டார் போல்” கையை இழுத்துக் கொண்டாள்.

உடல் வெடவெடக்க பேச்சற்று போனவள், “என்ன பண்றிங்க மாமா?” என்றாள் கோபத்துடன்.

“என்னால நீ இவ்வளவு கஷ்ட்டப்படுவன்னு தெரியாம போய்டுச்சு அபர்ணா. நான் என்னைப் பத்தி மட்டுமே யோசிச்சுட்டேன். ஐ ஆம் சாரி. இப்ப நான் என்ன பண்றது? இந்த கல்யாணத்தை வேணும்னா நிறுத்திடவா?” என்றான் வேகமாய்.

தலையை கீழே குனிந்து கொண்டவள் “வேண்டாம்” என்பதைப் போல் தலையை ஆட்டினாள் கண்ணீருடன்.

“அப்போ நீ வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டா, நான் நிம்மதியா இருப்பேன். ஆனா அந்த சிவா வேண்டாம்ப்பா” என்றான்.

“இப்போ கூட என்னைப் பத்தி உங்களுக்கு கவலை இல்லை. ஆனா, உங்களுக்கு பிடிக்காத சிவா மாப்பிள்ளைன்றது தான் கவலை. இல்லையா மாமா?” என்றாள் விரக்தியுடன்.

“அப்படி இல்லப்பா” என்று மாதவன் ஏதோ சொல்ல வர,

“நான் பார்த்துக்கிறேன் மாமா. எதையும் யோசிக்காம செய்ய மாட்டேன். நீங்க உங்க கல்யாண வேலையை பாருங்க” என்றாள் அபர்ணா.

அவள் அப்படி சொல்லவும் தான் அவன் ஆசுவாசமாய் மூச்சே விட்டான். ஆனால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை மாதவனால். தன் பின்னால் வந்து  நேசத்தைக் காட்டிய போது  தோன்றாத எண்ணமெல்லாம் இப்போது அவளே விலகிச் செல்லும் போது தோன்றியது அபர்ணா மீது. அழுது சிவந்திருந்தாலும், அதிலும் கூட ஒரு பொலிவுடன் இருந்தாள். ஏனோ அவளை சிவாவின் அருகில் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை அவனால். இருதலைக் கொள்ளி நிலையாகிப் போனது அவன் நிலைமை.

முத்து மாணிக்கம், அவன் வாழ்க்கையில் ஒரு தெளிவான முடிவை எடுத்த பிறகு, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான் மாதவன்.

கல்யாணத்தை நிறுத்த முடியாது என்று அவனுக்குத் தெரியும். அதே சமயம் அபர்ணாவும் வேண்டும் என்று அந்த நொடி தோன்றியது அவனுக்கு.

“ச்ச்ச…! உன் புத்தி ஏன் மாதவா இப்படி போகுது? இது நாள் வரைக்கும் நீ இப்படி தப்பா யோசிச்சது இல்லையே? திடீர்ன்னு என்ன? அபர்ணா நீ பார்க்க வளர்ந்த பொண்ணு. உன் மாமா பொண்ணு. அவளைப் பத்தி நீ இப்படி நினைக்கலாமா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன், ஒரு நிமிடமானாலும் தனக்குள் தோன்றிய எண்ணத்தை கண்டு பயந்து போனான்.

“நான் வர்றேன்ப்பா” என்றவன் அதே பதட்டத்துடன் வெளியே வந்துவிட்டான்.

பெற்றவர்களுடன் வீடு வந்து சேரும் வரை தனக்குத் தோன்றிய எண்ணத்தை நினைத்து வெட்கிப் போனான் மாதவன்.

அவர்களைப் பார்த்த கிஷோரோ,

“இப்போ அங்க எதுக்கு போயிட்டு வர்றீங்க? கொஞ்ச நஞ்சம் இருக்குற அவ உசுரையும் மொத்தமா வாங்குறதுக்கா?” என்றான் கோபமாக.

“பார்த்து பேசு கிஷோர். நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்றார் முத்து மாணிக்கம்.

“இப்ப மட்டும் மனுஷனாவா இருக்கீங்க? மொத்தமா ஒரு பொண்ணோட சாபத்தை வாங்கியிருக்கிங்க. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை. எவ்வளவு தூரம் ஆடுவிங்களோ ஆடுங்க. ஆனா அவ என்னோட பிரண்ட். மறுபடியும் அவ கண்ணு முன்னாடி போய் உங்க பெரிய பையனை நிக்க வேண்டாம்னு சொல்லுங்க” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான் கிஷோர்.

தங்கையின் குடுபத்தினர் கிளம்பி சென்ற அரைமணி நேரத்தில் வந்து நின்ற சிவசக்தியைப் பார்த்தவுடன் எதுவும் புரியாமல் குழம்பி நின்றனர் மூர்த்தியும், சாந்தியும்.

“வாங்க தம்பி” என்றவர்களுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. சில நிமிடங்கள் வார்த்தைகளின்றி அமர்ந்திருந்தான்.

“என்ன தம்பி திடீர்ன்னு?” என்று மூர்த்தியே ஆரம்பித்தார்.

அதற்குள் சாந்தி அபர்ணாவை அழைக்க, வெளியே வந்தவள் அங்கு அமர்ந்திருந்த சிவாவைப் பார்த்து திகைத்தாள். சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டவள்,

“ம்மா” என்றாள்.

“தம்பிக்கு காபி போட்டு எடுத்துட்டு வாம்மா” என்றார் சாந்தி.

‘ஏன் மாதவன் மாமா குடும்பம் வந்தப்ப நீங்க தான போட்டுக் குடுத்திங்க. அதே மாதிரி இப்பவும் போட வேண்டியது தான?’ என்று மனதிற்குள் நினைத்தவள் வெளியே சொல்லவில்லை. அமைதியாய் செல்ல முற்பட்டவளை தடுத்தது சிவாவின் குரல்.

“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க” என்றவன் தயக்கத்தை விட்டவனாய், பேச ஆரம்பித்தான்.

“எங்க வீட்ல உங்ககிட்ட என்ன சொல்லியிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா இது சரியா வராது. நீங்க உங்க பொண்ணுக்கு வேற ஒரு நல்ல இடமா பார்த்துக்கோங்க. என் பேர்ல எந்த சொத்தும் இல்லை. அந்த வீட்ல கூட எனக்கு பங்கு இல்லை. ஒரு சாதாரண பேக்கரியில மாசம் சம்பளத்துக்குத் தான் வேலை பார்க்குறேன். அதையும் கூட என் அண்ணன் சில மாசம் குடுக்க மாட்டான். இப்படி எந்த வகையில பார்த்தாலும் நான் இப்போ ஒன்னுமில்லாதவன் தான். இன்னைக்கு பொய்யை சொல்லி கட்டிட்டு போயிட்டு நாளைக்கு உங்க பொண்ணை கஷ்ட்டப்படுத்தினா அது நல்லா இருக்காது. இதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்” என்றவன் எழுந்துவிட்டான்.

மூர்த்தியும் சாந்தியும் என்ன சொல்வதென்று தெரியாமல் பார்க்க, முதல் முறையாக சற்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் அபர்ணா. அவன் முகத்தில் எந்த பொய்யும் இல்லை. சொல்ல வந்ததை சொல்லி முடித்த நிம்மதி தான் தெரிந்தது அவளுக்கு. அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன் அவளைப் பார்க்க சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டாள்.

“அது தான் படிச்சிருக்கிங்களே தம்பி. வெளிய ஒரு நல்ல வேலை தேடிக்கலாமே? இதெல்லாம் ஏற்கனவே அப்பா சொல்லிட்டார். என்ன? வீடு இருக்கும்னு நினைச்சோம்” என்றார் மூர்த்தி.

“என் பக்க நிலவரம் இது தான். எந்த முடிவையும் யோசிச்சு எடுங்க. நாளைக்கு அவசரப் பட்டுட்டோம்னு நீங்க நினைச்சிடக் கூடாது பாருங்க. அப்பறம் எனக்கும் மாதவனுக்கும் ஆரம்பத்துல இருந்தே ஆகாது. அதனால உங்க குடும்பத்துக்குள்ளயும் பிரச்சனை வர வேண்டாம்னு நான் நினைக்கிறேன்” என்றவன் கிளம்பி விட்டான்.

வாசல் வரை சென்று வண்டியை எடுத்தவனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. எப்படியும் திருமணப் பேச்சை நிறுத்தி விடுவார்கள் என்று நினைத்த படி சென்றவனை யோசனையுடன் பார்த்திருந்தாள் அபர்ணா.

“நீ என்னம்மா சொல்ற அபர்ணா?” என்றார் மூர்த்தி.

“அப்பா ரெண்டு வருஷம் போகட்டும்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“அது முடியாதும்மா..! மாதவன் கல்யாணத்துக்கு முன்னாடி உன் கல்யாணம் நடக்கனும். முடியாத பட்சதுக்கு பூ வச்சு உறுதியாவது பண்ணனும். அப்போதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கும்.” என்றார் உறுதியாக.

ஒரு நிமிடம் ஆழ்ந்து யோசித்தவள், “உங்க இஷ்ட்டம்ப்பா” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

மூர்த்தி மகளின் முகத்தைப் பார்க்க அதுவோ உணர்வுகள் துடைக்கப்பட்டு வெறுமையாய் இருந்தது.

மகள் சென்றவுடன் கணவனின் அருகில் சென்ற சாந்தி,

“இப்போ என்னங்க பண்றது?” என்றார் கவலையாய்.

“நான் நடராஜன் மாமா வீட்ல தான் என் பொண்ணைக் குடுப்பேன்” என்றார்.

“ஏங்க போட்டி போடுற விஷயமா இது? பொண்ணோட வாழ்க்கை விஷயம்”என்றார் சாந்தி.

“எதுவும் இல்லைன்னாலும் இந்த பையன் கிட்ட ஒரு நேர்மை இருக்கு சாந்தி. கண்டிப்பா நம்ம பொண்ணை நல்லபடியா வச்சுப்பான். மேற்கொண்டு என்ன செய்யலாம்னு பேசி, கல்யாண வேலையை பார்க்கணும்” என்றவரை அதற்கு மேல் சாந்தியால் மறுத்து பேச முடியாமல் போனது.

அதற்கடுத்த வேலைகள் வேகமெடுக்க, சிவாவிடம் வீட்டினர் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. சிவாவும், தான் சென்று பேசி விட்டு வந்ததில் அவர்கள் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள் என்று அவன் வேலையில் மூழ்கிப் போக, ஒரு வாரம்  கழித்து நடராஜன் சொன்ன பிறகு தான் அவனுக்கு விஷயம் தெரிய வந்தது.

“இதெப்ப நடந்தது? ஏன் யாரும் என்கிட்ட சொல்லலை?” என்றான் எரிச்சலுடன்.

“இதென்ன சிவா புதுசா கேட்குற? உன்னையும் தான கூட்டிட்டு போய் பார்த்து பேசி முடிச்சுட்டு வந்தோம். இப்போ திடீர்ன்னு இப்படி மாத்தி பேசுற?” என்றார் நடராஜன் புரியாமல்.

“அது வந்து..” என்று தயங்கியவன்,

“பொண்ணு வீட்ல இருந்து எதுவும் சொல்லலையா?” என்றான் உள்ளே போன குரலில்.

“அவங்க என்ன சொல்லணும் சிவா? அவங்க தான் அன்னைக்கே சம்மதம் சொல்லிட்டாங்களே? இன்னும் வேற என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குற?” என்றார் நடராஜன்.

அவர்கள் பேச்சில் இருந்து அபர்ணா வீட்டிற்கு தான் சென்று பேசி விட்டு வந்ததை அவர்கள் தன் வீட்டினரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதே அப்போது தான் சிவாவிற்கும் புரிந்தது.

“ஒண்ணுமில்லைப்பா” என்றான் யோசனையுடன்.

“என்ன கொழுந்தனாரே? பொண்ணு வீட்ல இருந்து சீர் வரிசை அதிகம் எதிர்பார்க்குறிங்களோ? அதான் எதுவும் சொன்னாங்களான்னு கேட்டுட்டு இருக்கிங்களா?” என்றாள் செல்வி கிண்டலுடன்.

“அண்ணி” என்று பல்லைக் கடித்தான் சிவா.

“அப்படியே நீங்க கேட்டாலும் கொட்டிக் குடுக்குற அளவுக்கு எல்லாம் வசதி இல்லை போல. இதுக்கு என் அப்பா கேட்டப்பவே நீங்க சரின்னு சொல்லியிருந்தா மாமனார் வீட்டு சொத்தோட ஜம்முன்னு செட்டில் ஆகியிருப்பிங்க. இனி உங்க பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, நல்லா யோசிச்சுக்கங்க” என்றாள் செல்வி.

“அதே தான் நானும் சொல்றேன் அண்ணி. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, உங்க தங்கச்சிக்கு வேற நல்ல இடமாவே பார்த்துக்கங்க. நானே ஒன்னுமில்லாதவன்” என்றான் கிண்டலுடன்.

“நான் என்னைக்கோ சொன்னதை மனசுல வச்சுட்டு பேசுறிங்க. உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நானும் நினைக்கிறன்” என்றாள் செல்வி.

“அதை நான் பார்த்துக்கிறேன் அண்ணி” என்று பேச்சை முடித்தவன், தன் அறைக்கு சென்று விட்டான்.

“இருந்தாலும் சிவாவுக்கு கொஞ்சம் திமிர் அதிகம் தான் செல்வியக்கா. அண்ணின்னு ஒரு மரியாதை இல்லை. எப்படி பேசிட்டு போறார் பாருங்க” என்றாள் சரிதா.

“எங்க போய்ட போறாங்க. கல்யாணம் முடிச்சு பொண்டாட்டியை இங்க தான கூட்டிட்டு வரணும். அப்போ பார்த்துக்கலாம்” என்றாள் செல்வி.

“அவங்க தனியா போய்ட்டாங்கன்னா??” என்றாள் சரிதா கேள்வியாய்.

“அதெப்படி விட முடியும் சரிதா? நான் எதுக்கு இருக்கேன்? நான் பார்த்துக்கிறேன் விடு” என்ற செல்விக்கு இப்போது வரை மனமே ஆறவில்லை. ஆனால் அவளின் கணவன் பிரபாவோ,

“அவனுக்கு பிடிக்கலைன்னா விட்ரு செல்வி. இது அவன் வாழ்க்கை. அவனுக்கு எது சரின்னு தோணுதோ அதையே பண்ணிக்கட்டும். ஒரு அளவுக்கு மேல நாம கட்டாயப்படுத்த முடியாது” என்று சொல்லிவிட்டான். அதனால் செல்வியால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் போனது.