அத்தியாயம் 4 :

“பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்” என்று மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டான்.

“வாங்க” என்று வரவேற்ற கபிலனும் சிவாவை ஆராய்ச்சியுடன் பார்த்தான். ஏதேதோ சிந்தனையில் இருந்த சிவாவும் கபிலனின் பார்வையை கவனிக்கவில்லை.

உள்ளே தங்கையிடம் சென்றான் கபிலன். காயத்ரி அவளையே பாவமாய் பார்த்திருக்க, தங்கையின் அருகில் சென்றவன் அவளின் தலையை ஆதுரமாய் வருடினான்.

“அண்ணா சொன்னா கேட்ப தானடா” என்று நிறுத்தியவன், தங்கையின் வெறுமையான பார்வையைக் கண்டு வருந்தினான்.

“ஒரு உண்மையை சொல்லவா அபர்ணா. வெளிய வந்திருக்க மாப்பிள்ளை நிஜமாவே மாதவனை விட நல்லா இருக்கார். உங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கும். விசாரிச்ச வரைக்கும் குறைன்னு ஒன்னும் சொல்ல முடியாது. இனி நீ தான் முடிவு எடுக்கணும். கண்டிப்பா கட்டாயப்படுத்தலை அபூ. இந்த பையனை பிடிக்கலைன்னா சொல்லு, வேற இடம் பார்க்கலாம்” என்றான் பொறுமையாக.

அப்போது எதார்த்தமாய் வெளியே எட்டிப் பார்த்த காயத்ரி அங்கே சிவாவைக் கண்டு ஆச்சர்யப்பட்டு போனாள்.

“சிவா அண்ணாவா அபர்ணாவை பொண்ணு பார்க்க வந்திருக்கார்?” என்றாள் நம்ப முடியாமல்.

“ஆமா காயத்ரி” என்றான் கபிலன்.

காயத்ரியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்தவன்,

“உனக்கு சிவாவை முன்னமே தெரியுமா?” என்றான் கபிலன்.

“அய்யோ அண்ணா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.என் அண்ணாவும் சிவா அண்ணாவும் பெஸ்ட் பிரண்ட்ஸ்” என்றவள்,

“ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்.நம்ம அபூக்கு சிவா அண்ணா பெஸ்ட் சாய்ஸ். என்ன கொஞ்சம் கோபக்காரர் தான்” என்றாள் காயத்ரி.

“உனக்கு சிவாவை முன்னமே தெரியுமா காயத்ரி?” என்றான் கபிலன்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்த சாந்தி, அபர்ணாவை அழைச்சுட்டு வாம்மா” என்று சொல்லி விட்டு செல்ல, அதைக் கேட்டவளுக்கோ கண்கள் கலங்கி கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று நின்றது. கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தியவளின் கண் முன் பிம்பமாய் வந்தது மாதவனின் சிரித்த முகம். பட்டென்று கண்களைத் திறந்து விட்டவளுக்கு உடலில் ஒரு பதட்டம் ஓடி மறைய, தங்கையை கவனித்துக் கொண்டு தான் இருந்தான் கபிலன்.

தங்கையோ தோளோடு அணைத்தவன், தானே அவளை அழைத்துக் கொண்டு செல்ல, அபர்ணாவோ தலையை நிமிரவே இல்லை.

அண்ணனின் அணைப்பில் தலையை நிமிர்த்தாமல் இருந்தவளைத் தான் நேர் பார்வையாய் பார்த்துக் கொண்டிருந்தான் சிவசக்தி. அழுது சிவந்திருந்த கண்களும், பொலிவில்லாத, எதையோ தொலைத்த முகமும் சிவாவின் கண்களில் இருந்து தப்பவில்லை.

“எங்க கபிலா? உன்னோட பொண்டாட்டியை காணோம்?” என்றார் கலையரசி.

“மறைச்சு பேச ஒண்ணுமில்லை அத்தை. என் மனைவிக்கும் என் வீட்டுக்கும் கொஞ்சம் சுமூகமான உறவு இல்லை. அவ குணத்துக்கு ஒண்ணா இருக்குறது கஷ்ட்டம். அதான் தனிக் குடித்தனம் போனோம். மத்தபடி என் அப்பா அம்மா தங்கச்சிக்கு ஒண்ணுன்னா நான் வந்து நிற்பேன்” என்றான் கபிலன்.

ஒளிவு மறைவின்றி பேசிய அவன் குணம் அவர்களுக்குப் பிடித்துப் போனது.

மேற்கொண்டு கபிலனே பேசினான்.

“மாதவனுக்கு என் தங்கச்சியை முடிக்கிறதா இருந்தது எல்லாருக்குமே தெரியும் மாமா. உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நாங்க எதையும் ஒளிச்சு மறைச்சு பண்ண விரும்பலை. இனி அது நடக்காதுன்னு தெரிஞ்ச பிறகு தான் வெளியவே பார்க்க ஆரம்பிச்சோம். நாளைப் பின்ன இதை வச்சு என் தங்கச்சியை ஒரு வார்த்தை சொல்லிட்டா என்னால பொறுக்க முடியாது” என்றான் கபிலன்.

அவன் பேசுவது ஜாடையாய் தன்னை மிரட்டுவதைப் போல் இருக்க பட்டென்று எழுந்தான் சிவசக்தி.

“அப்பா கடைக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன். நீங்க என்னன்னு பேசிட்டு வாங்க” என்று கிளம்ப முற்பட்டான் சிவா.

“எந்த பதிலும் சொல்லாம போனா என்ன அர்த்தம் சிவா?” என்றான் கபிலன்.

“என்ன சொல்ல சொல்றிங்க கபிலன்? நீங்க எல்லாத்தையும் வெளிப்படையா பேசுன வரைக்கும் சரிதான். ஆனா அதுல ஜாடையா ஒரு மிரட்டல் இருக்குற மாதிரி எனக்குத் தோணுது. ஒருத்தர் மேல நம்பிக்கை தானா வரணும். இப்படி மிரட்டி தக்க வைக்க முடியாது. அப்படி உங்க தங்கச்சியை கட்டியே ஆகணும்னு எனக்கும் எந்த அவசியமும் இல்லை” என்றவனின் குரலில் அனைவரும் கப்சிப் என்று அடங்கினர்.

“நான் அந்த அர்த்ததுல சொல்லலை சிவா” என்ற கபிலன் கொஞ்சம் இறங்கி வந்தான்.

“நீங்க ஏன் அப்படி சொன்னிங்கன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஒரு நாளைக்கு ஆயிரம் பேரை பார்க்குறேன். யார் எந்த நேரத்துல எப்படி பேசுவாங்கன்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் சின்னப் பையன் கிடையாது” என்றான் சிவா.

“சிவா கொஞ்சம் பொறுமையா பேசுப்பா” என்ற நடராஜனின் குரலில் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தான்.

“நீங்க வாய் திறந்து சம்மதம் எதுவும் சொல்லலையே சிவா?” என்று கபிலன் சற்று தயங்க,

“முதல்ல உங்க தங்கச்சியை என் முகத்தைப் பார்த்து வாயைத் திறந்து அவங்க சம்மதத்தை சொல்லச் சொல்லுங்க. அப்பறம் என் சம்மதத்தை கேட்பிங்க?” என்றவனின் அழுத்தத்தில் அனைவரும் அதிர்ந்து நிற்க, சில பல நிமிடங்கள் ஆன பின்னும் அபர்ணா தலையை நிமிரவே இல்லை.

“அபூ உன் கையில தான் எல்லாமே இருக்கு” என்றான் கபிலன் பொறுமையாக. ஆனால் அவளால் பொய்யாகக் கூட தலையை ஆட்ட முடியவில்லை. தட்டுத் தடுமாறி நிமிர்ந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட  வேகமாய் துடைத்தவள்,

“எ..என..எனக்கு சம்மதம் தான்” என்று சொல்லிய நிமிடம் அறைக்குள் சென்று விட்டாள்.

சிவா கபிலனை குற்றம் சாட்டும் பார்வையில் பார்க்க, கபிலனுக்கும் புரிந்தது.

“நான் கிளம்புறேன்ப்பா. என்ன பேசணுமோ பேசிட்டு நீங்களும் கிளம்புங்க” என்றவன்,

“வர்றேங்க” என்று அபர்ணாவின் பெற்றோரிடமும் சொல்லிவிட்டு சட்டென்று வெளியேறி விட்டான்.

அன்று மாலை பேக்கரிக்கு செல்லாமல் வீட்டு மொட்டை மாடியில் படுத்திருந்தவனை தேடி வந்தனர் நடராஜனும்,கலையரசியும்.

வெறும் தரையில் படுத்து வானத்தை வெறித்திருந்தவனின் தோற்றம் கண்டு நடராஜனுக்கு மனதிற்குள் பிசைந்தது.

“சிவா” என்ற தந்தையின் அழைப்பில் திரும்பியவன் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

சில நிமிட மௌனங்களுக்குப் பிறகு, அவரே ஆரம்பித்தார்.

“என்னப்பா ஒன்னும் சொல்லாம வந்துட்ட?” என்றார்.

தந்தையின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தவன், “என்மேல உங்களுக்கு எதுவும் கோபம் இல்லைன்னா வருத்தம் ஏதாவது இருக்காப்பா?” என்றான் கேள்வியாய்.

“உன்மேல எனக்கு என்னப்பா கோபம் இருக்கப் போகுது?” என்றார் நடராஜன் தாங்க முடியாமல்.

“இல்ல சின்ன வயசுல இருந்து நீங்க சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டியிருக்கேன். இப்போ என் வாழ்க்கை விஷயத்துலையும் அப்படியே ஆட்டனும்னு நினைக்கிறிங்க. இது உங்களுக்கு சரின்னு படுதாப்பா?” என்றான் கேள்வியாய்.

“சிவா” என்றார் அதிர்ந்து.

“ஏற்கனவே ஒருத்தனை விரும்பி அவன் தான் வாழ்க்கைன்னு வாழ்ந்துட்டு இருக்குற ஒரு பொண்ணை எப்படி எனக்கு பார்க்கனும்னு தோணுச்சு உங்களுக்கு? இல்லை நான் அந்த அளவுக்குத் தான் வொர்த்துன்னு நீங்களே முடிவு பண்ணிட்டிங்களா?” என்றான் உணர்வற்ற குரலில்.

“இப்படி எல்லாம் பேசாத சிவா. எல்லாருக்கும் நினைச்ச வாழ்க்கை தான் அமையுதா என்ன?” என்றார் கலையரசி.

“எப்பவுமே எல்லாருக்குமே நான் ஒரு ஆப்ஷன் தான். இவன் எது சொன்னாலும் கேட்டுக்குவான். நம்மளை மீறி என்ன செஞ்சுடுவான்ற எண்ணம். வெளிய ஜாப்க்கு போறேன்னு சொன்னேன். அண்ணன் கடையை பார்த்துக்க சொன்னிங்க. அதுக்கும் சரின்னு இருந்தேன். அதனால இப்ப என்ன நடக்குது? ஏதோ நான் வேற வழியே இல்லாம அவங்க கடையில இருக்குற மாதிரியும், போனாப்போகுதுன்னு எனக்கு அவங்க வேலை கொடுத்த மாதிரியும் தினமும் வீட்ல பேச்சு ஓடுது. இதெல்லாம் யாரால? உங்களால தானப்பா?” என்றான் ஆதங்கத்துடன்.

“பிரபா திடீர்ன்னு இப்படி நடந்துக்குவான்னு நாங்க நினைக்கலை சிவா. அப்பா உனக்கு அப்படி எல்லாம் நினைப்பேனா?” என்றார் வருத்தமான குரலில்.

“கடை விஷயத்தை விடுங்க. ஆனா இது என் வாழ்க்கை விஷயம்ப்பா. என்னைக் கட்டிக்கப் போற பொண்ணு மனசுல நான் தான் இருக்கணும்னு நினைக்கிறதுல ஒன்னும் தப்பில்லையே?” என்றான் ஒரு விரக்தி சிரிப்புடன்.

“கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியா போய்டும் சிவா” என்ற கலையரசியை முறைத்தவன்,

“சரி அதை விடுங்க. இப்போ எதுக்கு எனக்கு இவ்வளவு அவசரமா கல்யாணம்? உருப்படியா எதுவுமே என்கிட்ட இல்லை. வேலை உட்பட. இன்னைக்கு நான் மட்டும் பேச்சு வாங்குறேன். நாளைக்கு என்னைக் கட்டிகிட்ட பாவத்துக்கு அந்த பொண்ணும் இந்த வீட்ல பேச்சு வாங்கணும். இதெல்லாம் தேவையா?” என்று அவனும் ஏதேதோ காரணங்களை அடுக்கினான்.

“அவங்ககிட்ட சம்மதன்னு சொல்லிட்டு வந்துட்டோம் சிவா” என்ற தாயையும் தகப்பனையும் என்ன சொல்வதென்று தெரியாமல் பார்த்திருந்தான்.