அத்தியாயம் 24

குடும்பத்தினர் அனைவரும் கடையின் அமைப்பைப் பார்த்து வியந்து நின்றனர். அவ்வளவு அழகான அமைப்பில் இன்டீரியர் வொர்க்கை செய்திருந்தான் சிவா.

“அபர்ணாஸ் கபே!!!” வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை. சிவாவைப் பெற்றவர்களுக்கு சந்தோசம் என்றால்,அபர்ணாவின் பெற்றோருக்கோ பெருமையில் நிறைந்திருந்தது முகம். சாந்திக்கோ ஒரு படி மேலே.

அன்னத்தின் குடும்பத்தில் அன்னமும் கிஷோரும் வந்திருந்தனர்.

“இன்டீரியர் எல்லாம் ரொம்ப அருமையா பண்ணியிருக்க சிவா. நிஜமாவே சூப்பரா இருக்குடா” என்றனர் பிரபாவும், சத்யாவும்.

“தேங்க்ஸ்ண்ணா” என்றவனைத் தான் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அபர்ணா. அவள் பெயரை வைத்தது அவளுக்கே தெரியாதே.

“அபூ..! பார்த்தது போதும்” என்று கலாய்த்த கபிலன்,

“சும்மா சொல்லக் கூடாது அபி. நிஜமாவே சிவா சரக்கு இருக்குற மூளைக்காரன் தான். தெளிவா யோசிச்சு தான் காலேஜ் இருக்குற ரோட்ல கபே ஸ்டார்ட் பண்ணியிருக்கான். ஏற்கனவே ஒன்னு ரெண்டு இருக்கு தான். ஆனா, சம்திங் டிபரண்டா பண்ணியிருக்கான் அபூ”என்றான் கபிலன்.

“இவங்க என்னை இங்க கூட்டிட்டே வரலைண்ணா. கடைசியா பார்த்துக்கோ அபின்னு சொல்லிட்டாங்க. ஸ்டார்ட்டிங்ல வந்தேன். இப்போ இப்படி வந்திருக்கும்னு எனக்கும் தெரியாது” என்றாள் அபர்ணா. அவளுக்கோ சொல்ல முடியாத ஒரு உணர்வு.

பூஜைகளும் முடிந்து இனிதே திறக்கப்பட்டிருந்தது “அபர்ணாஸ் கபே”

குடும்பத்தினர் கிளம்பியிருக்க,முதல் நாள் என்பதால் அபர்ணாவும் சிவாவுடன் அங்கேயே இருந்து விட்டாள்.

“அப்போ நாங்களும் கிளம்பறோம் அபி” என்று கபிலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனின் அருகில் வந்த வித்யா கபிலனிடம் ஒரு கவரைக் கொடுத்தாள். கபிலன் மனைவியை வியப்புடன் பார்க்க,

“ஒப்பனிங்க்கு நாம ஏதாவது செய்யணும்ல கபிலன்” என்றாள்.

“பார்மாலிட்டிஸ் எல்லாம் எதுக்கு அண்ணி?” என்றாள் அபர்ணா.

“உனக்காக இல்லைன்னாலும் சிவா அண்ணாக்காக குடுக்குறோம். வேண்டாம்னு சொல்லாத அபர்ணா” என்ற வித்யாவை இப்போது ஆச்சர்யமாய் பார்ப்பது அபர்ணாவின் முறையானது.

“அப்போ நாங்க கிளம்பறோம் அண்ணா” என்று சிவாவிடம் சொல்லி விட்டு சென்ற வித்யாவைப் பார்த்தவளுக்கு நெஞ்சைப் பிடிக்காத குறை தான்.

கணவனின் முகத்தையே குறுகுறுவென்று பார்த்து வைக்க, ஒரு நிலைக்கு மேல் முடியாமல் திரும்பியவன்,

“இப்போ எதுக்கு அபி என்னை இப்படி பார்த்துட்டே இருக்க” என்றான் சீண்டலுடன்.

“வித்யா அண்ணி பெருசா யார் கூடவும் பேச மாட்டாங்க. திடீர்ன்னு சிவா அண்ணான்னு பாசத்தை பொழியறாங்களே.. அதான் என்ன காரணம்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றாள் அவனையே கூர்ந்து பார்த்தபடி.

“என்னைக் கேட்டா? எனக்கு எப்படி தெரியும்?” என்றவன் அடுக்கிக் கொண்டிருந்த பொருட்களின் மீது கவனத்தைத் திருப்ப,

“சொல்லுங்க சக்தி” என்றாள்.

“கபிலனுக்கும் வித்யாவுக்கும் எதோ மிஸ் அண்டர்ஸ்டேன்டிங் போல.ரெண்டு பேர் கிட்டயும் எதுவுவோ சரியில்லைன்னு தோணுச்சு. அதான் கூப்பிட்டு பேசுனேன். ப்ராப்ளம் சால்வ்டு” என்றான் போகிற போக்கில்.

“அப்படி என்ன பிரச்சனை?” என்றாள் விடாமல்.

“பிரச்சனைன்னா விடேன் அபி. அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?” என்றான் சக்தி.

“ஒன்னும் சொல்ல வேண்டாம் போங்க” என்று அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

அவளை அருகில் இழுத்துக் கொண்டவன்,

“வித்யா மேரேஜ்க்கு முன்னாடி யாரையோ லவ் பண்ணியிருப்பாங்க போல. வீட்ல அவசர அவரசமா உங்க அண்ணனை மேரேஜ் பண்ணி வச்சுட்டாங்க. அதான் அவங்க உங்க வீட்லயும் மிங்கிள் ஆகலை. கபிலன் கூடவும் மிங்கிள் ஆகலை. அதைத்தான் பேசிப் புரிய வச்சேன்” என்றான் சிவா.

“என்ன சொல்றிங்க சக்தி? இது கபிலனுக்குத் தெரியுமா?” என்றாள்.

“விஷயம் இதுன்னு தெரியாது. நீயும் சொல்ல வேண்டாம், இது அவங்க பர்சனல் அபி” என்றான் சற்று அழுத்தமாக.

“அப்போ உங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்றாள் விடாமல்.

“வித்யா லவ் பண்ணது என் ப்ரண்டைத் தான். இப்போ அவனுக்கும் மேரேஜ் முடிஞ்சிருச்சு. வித்யாவுக்கும் மேரேஜ் முடிஞ்சிருச்சு. அதைத்தான் பேசி புரிய வச்சேன்” என்றான் சிவா.

“ஹோ..! அதான் நீங்க வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவங்க வீட்டுக்கு வர்றதை அவாய்ட் பண்ணாங்களா?” என்றாள்.

“அபி போதும் இந்த பேச்சு. இனி அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராது. நீயும் தெரிஞ்ச மாதிரி காட்டிக் கூடாது” என்றான் சிவா.

“தேங்க்ஸ் சிவா” என்றாள் அவனை இடுப்போடு அணைத்தபடி.

“ஹேய் இது பப்ளிக் பிளேஸ்டி” என்றான் சிரிப்புடன்.

“எல்லாம் ஓன் பிளேஸ் தான். யாரு கேள்வி கேட்பா?” என்றவளின் அருகில் குனிந்தவன்,

“எதெல்லாம் ஓன் பிளேஸ்ன்னு வீட்டுக்கு வந்து சொல்றேன்டி” என்றவனின் பேச்சில் குப்பென்று முகம் சிவந்திருந்தாள்.

அன்று முழுவதும் அவனுடனேயே இருந்து அவனுடன் சேர்ந்தே வீட்டிற்கு வந்தது ஒரு புது அனுபவமாக இருந்தது அபர்ணாவிற்கு.

வீட்டில் தன் அணைப்பில் இருந்தவளை மேலும் தனக்குள் புதைத்துக் கொள்ள, அவளோ பாந்தமாக அடங்கிப் போனாள்.

“சக்தி என்னவோ தெரியலை, மனசெல்லாம் நெறஞ்சு போன பீல். அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு” என்றாள் மனதை மறையாமல்.

“எதுக்கு இப்போ இந்த தேவையில்லாத பயம்?” என்றான் சிவா.

“ஸ்டெப் எடுத்து வச்சுட்டோம். எல்லாம் சரியா நடக்கும்ல” என்றாள் அபி.

“அது நம்ம கையில தான் இருக்கு அபி. உழைக்க சோம்பேறித்தனப்பட்டா, பலன் கையில கிடைக்காது. எதை செஞ்சாலும் சரியா செய்யணும்” என்றவனின் விரல்கள் அவள் இடையில் கோலமிட,

“நான் இதை சொல்லலை” என்றாள்.

“நான் இதையும் சேர்த்து தான் சொன்னேன்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

அவளோ அவன் முகம் பார்த்திருக்க,

“எப்படின்னு சொல்லத் தெரியலை அபி..! இருட்டுல இருக்கேனா வெளிச்சத்துல இருக்கேனான்னு தெரியாம இருந்த என்னை கையைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து இது தான் வாழ்க்கைன்னு தெளிய வச்சது நீதான. இப்போ உனக்கு ஏன் இப்படி பயம் வருது அபி?” என்றான்.

“இப்பல்லாம் கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலே பயம் வருது சக்தி” என்றாள்.

“நான் இருக்கும் போது வரக்கூடாதே” என்றவன் மேற்கொண்டு அவளைப் பேச விடவே இல்லை. அவனோ அவளை ஆட்கொண்டிருக்க, அவளோ அவன் ஆளுமைக்குள் சிக்கிக் கொண்டாள்.

நாட்களும் நேரமும் நிற்காமல் சென்று கொண்டிருக்க, சிவாவும் அபியும் தங்கள் எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர்.

சிவா எப்போதும் போல் தன் அதிகாலை ஓட்டத்தை ஆரம்பித்திருந்தான். அபி வழக்கம் போல் பள்ளி செல்வதும், வருவதுமாக இருந்தாள்.

வழக்கத்தை விட மாற்றாக, இப்போது ஸ்கூல் முடிந்து நேராக கபே சென்று விடுவாள். சிவாவுடன் இருந்து அவனுடையே கிளம்பி வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாள்.

கபே ஒரே இரவில் வளர்ச்சியடைந்து விடவில்லை. தொழிலில் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் இடர்களையும் சிவாவும் சந்தித்தான். ஏற்கனவே அனுபவம் இருந்ததால் அதைக் கலைவது அவனுக்கு எளிதாக இருந்தது.

முதல் மாதம் சொல்லிக் கொள்ளும் படியாக வருமானம் இல்லை. இரண்டாம் மாதம் வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருந்தது. மூன்றாம் மாதம் அவனின் சம்பளம் நின்றது. இப்படி ஒவ்வொரு படியாக வளர்ந்து கொண்டிருந்தான் சிவசக்தி.

ஆறுமாதங்களுக்குப் பிறகு..

“அபி இன்னும் என்ன கிளம்பாம இருக்க?” என்ற சிவாவின் கேள்வியில் அவன் முகம் பார்த்தவள்,

“நாம போகனுமா சக்தி. எனக்கு வேண்டாம்னு தோணுது” என்றாள்.

“கண்டிப்பா போகணும். நம்மளை மதிச்சு வீடு தேடி வந்து கூப்பிட்டிருக்கார் உன் மாமா. அப்போ போகாம இருந்தா நல்லா இருக்குமா?” என்றான் சிவா.

மாதவனின் மனைவி சுஜிதாவிற்கு அன்று வளைகாப்பு. அதற்காகத் தான் இத்தனை யோசனை அவளுக்கு.

அவளின் தயங்கிய முகம் பார்த்தவன்,

“என்ன அபி?” என்றான் கனிவுடன்.

“யாராவது ஏதாவது சொல்லிட்டா?” என்றாள்.

“இன்னும் இந்த பயம் உன்னை விட்டு போகலையா அபி. அப்படி யாராவது ஏதாவது சொன்னா, என் அபி சும்மா விடுறவளா என்ன?” என்று அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு மனம் கொஞ்சம் இலகுவானது.

“நான் எடுத்து வச்சிருக்க புடவை, நான் எடுத்து வச்சிருக்க அக்ஸசரீஸ் தான் போடணும்” என்றான் கண்டிப்புடன்.

“வளைகாப்பு வீட்டுக்கு எதுக்கு சக்தி இவ்வளவு கிராண்டா?” என்றாள் தவிப்புடன்.

“இது ஒன்னும் கிராண்டா இல்லை. ஜஸ்ட் எலகன்ட்டா எடுத்து வச்சிருக்கேன்” என்றான். அவன் சொன்ன மாதிரியே கிளம்பி வந்தவளைப் பார்த்தவனுக்கு கண்ணை எடுக்க முடியவில்லை. இப்போது சற்று சதைப் பிடித்து இருந்தாள். அது அவளுக்கு கூடுதல் அழகாகத் தெரிந்தது.

வளைகாப்பு வீட்டில் ஜோடியாய் வந்தவர்களைப் பார்த்தவர்கள் மீண்டும் ஒரு முறை பார்த்து வைத்தனர். அப்படி இருந்தது இருவரின் பொருத்தமும்.

“இன்னைக்கு முதல்ல சுத்தி வைக்கணும் அபர்ணா. எல்லார் கண்ணும் உங்க மேல தான்” என்றார் சாந்தி. அவருக்குத் தான் பெருமையில் முகம் மினுமினுத்தது. முத்து மாணிக்கத்தைப் பார்த்த பார்வையில் ஒரு நக்கல் தெரிந்தது. அதை அவரும் உணர்ந்திருந்தார்.

அவர் மகனுக்கு கட்டி வந்த மருமகள் தான் அவரிடம் சரியாக பேசுவது கூட இல்லையே. வீட்டில் மாதவனுக்கும் மருமகளுக்கும் நடக்கும் பிரச்சனைகளை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார் அவரும்.

“எப்படி இருக்கீங்க மாமா?” என்றாள் அபர்ணா எப்போதும் போல்.

“ந..நல்லாயிருக்கேன்மா” என்றவருக்குத் தான் முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்று தெரியவில்லை.

சுஜிதா அலங்காரத்துடன் மனையில் இருக்க, அருகில் மாதவன் பட்டு வேஷ்ட்டி சட்டையில் இருந்தான். அனைவரும் அவளுக்கு வளையல் போட்டுக் கொண்டிருக்க, கீழே இருந்த சில பெண்களோ,

“அப்பறம் அபர்ணா நீ எப்போ நல்ல செய்தி சொல்ல போற?” என்று ஆரம்பித்திருந்தனர்.

“இப்போதைக்கு இல்லைங்க” என்று சிவா தான் பதில் சொல்லியிருந்தான்.

“சக்தி”

“என்ன அபி?”

“எனக்கும் ஆசையா இருக்கு. எனக்கும் எப்போ இப்படி வளையல் போடுவாங்க?” என்றாள் ஏக்கமாய்.

“நீதானா அபி ஒரு வருஷம் போகட்டும்னு சொன்ன?” என்றான்.

“அப்போ சொன்னேன்..! ஆனா இப்போ ஆசையா இருக்கே?” என்றாள்.

“தப்பாச்சே..! பொண்டாட்டி ஆசையை நிறைத்தாம இருந்தா வரலாறு என்னைய தப்பா பேசுமே? வீட்டுக்கு கிளம்புவோமா?” என்றான் சிரிப்புடன்.

“தெரியாம சொல்லிட்டேன் சாமி” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அன்னம் அவளை அழைத்தார்.

சுஜிதாவிற்கு வளையல் போட்டு விட்டவள், சந்தனம் குங்குமமிட மாதவனோ பார்வையை வேறு எங்கோ வைத்திருந்தான்.

“பார்த்திங்களா அபர்ணா? உங்களைப் பார்த்தா நான் எதுவும் சொல்லுவேன்னு நினைச்சு வேற எங்கயோ வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்” என்ற சுஜிதாவை மாதவனும், அபர்ணாவும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியுடன் பார்த்தனர். அவளின் பேச்சு அருகில் இருந்த அன்னத்திற்கும் கேட்டிருந்தது.

அபர்ணா அதிர்ந்ததைப் பாரத்த சுஜிதா,

“இந்நேரம் இவரை மேரேஜ் பண்ணியிருந்திங்கன்னா, இப்போ என் வயித்துல இருக்குற இவர் வாரிசு உங்க வயித்துல இருந்திருக்கும் இல்ல” என்று சொல்லி சிரித்தவளைப் பார்த்தவளுக்கு பொறுமை எல்லை மீறியிருந்தது.

சற்று தள்ளி நின்று அபியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாவிற்கு எதுவோ சரியில்லை என்று மனதிற்கு பட, வேகமாய் அருகில் சென்றான்.

“இங்க பாருங்க சுஜிதா..அதோ அங்க நிக்கிறாரே என் புருஷன் சக்தி.. அவரைத் தவிர என் கண்ணுக்கு இங்க யாரும் ஆணழகனாவும் தெரியலை. ஆம்பளையாவும் தெரியலை. அவர் பக்கத்துல இன்னொரு பொண்ணு நிக்கிறதைக் கூட என்னால சகிச்சுக்க முடியாது. நீங்க என்னடான்னா உங்க புருஷன் வாரிசு என் வயித்துல வளர்ந்திருக்கும்னு சொல்றிங்க? இதுல இருந்து தெரியலை நீங்க வாழ்ற வாழ்க்கையோட லட்சணம். கண்டதையும் யோசிச்சு வாழ்ற வாழ்க்கையை நரகமாக்கிக்காதிங்க. அவ்வளவு தான் சொல்லுவேன். என்கிட்ட இப்படி பேசுறது இதுவே கடைசி தடவையா இருக்கணும். வயித்துல குழந்தை இருக்கேன்னு பொறுமையா பேசிட்டு போறேன். இல்லைன்னா இங்க நடந்திருக்குறதே வேற” என்று பல்லைக் கடித்தபடி அவள் அழுத்தம் திருத்தமாக உரைக்க, அவளின் இந்த நேரடிப் பேச்சில் சுஜிதாவின் முகம் வெளுத்திருந்தது.

திரும்பி மாதவனைப் பார்த்தவளுக்கு ஒரு பக்கம் பாவமாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவன் மீதும்  தப்பு இருப்பதாகவே பட்டது.

“ஐ ஆம் சாரி மாமா..! உங்களை நினைச்சா எனக்கு பரிதாபம் கூட வர மாட்டேங்குது” என்று நிமிர்ந்தவள் அப்போது தான் கோபத்தில் முகம் சிவக்க தன் அருகே நின்றிருந்த சிவாவைப் பார்த்தாள்.

“சக்தி”

“தெரிஞ்சவரோட பொண்ணா போயிட்டிங்க. முறைக்கு அண்ணன் மனைவியாவும் போயிட்டிங்க. இல்லைன்னா இங்க நடந்திருக்குறதே வேற” என்ற சிவாவின் கோபத்தை மாதவனே இப்போது தான் நேரில் பார்க்கிறான்.

“வேண்டாம் சக்தி” என்று அபி அவனின் கையைப் பிடிக்க,

“கிளம்பலாம் அபி” என்றான் பட்டென்று.

அன்னம் தன் கண்ணீரை பிறர் அறியாமல் மறைக்க, நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்து மாணிக்கம் மனதிற்குள் வருத்தத்தில் குமைந்து கொண்டிருந்தார்.