அத்தியாயம் 23

காலையில் விழித்தவள் கண்டது இன்னமும் உறங்கிக் கொண்டிருந்த சிவாவைத் தான். அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனைக் கண்டு ஆச்சர்யம் தான் அவளுக்கு. இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட அவன் இவ்வளவு நேரம் தூங்கியதில்லை.

நேற்று அவன் பேசிய பேச்சுக்களும், செய்த சேட்டைகளும் ஞாபகத்திற்கு வர, தன்னையறியாமல் புன்னகை பூத்திருந்தாள் அபர்ணா. அவனை விட்டு விலக அவளுக்கும் மனமில்லை தான். ஆனால் பள்ளி செல்ல வேண்டுமே.

வெளியே மழை இன்னமும் விட்டு விட்டு பெய்து கொண்டு தான் இருந்தது. அந்த கிளைமேட்டிற்கு போர்த்திக் கொண்டு தூங்கச் சொல்லி உந்திய மனதை அடக்கியவள், அவன் உறக்கம் கலைக்காமல் எழுந்து குளித்து முடித்து வந்து சமையல் வேலைகளை ஆரம்பித்தாள்.

இரவு தாங்கள் சாப்பிட்ட நேரம் ஞாபகத்திற்கு வர, முகத்தில் குடிகொண்டிருந்த ஒரு ஏகாந்த சிரிப்புடனேயே அனைத்து வேலைகளையும் செய்து முடித்திருந்தாள். இருவருக்கும் மட்டும் என்பதால் சமையலை எப்போதும் சீக்கிரத்தில் முடித்துவிடுவாள்.

வேலைகளை முடித்துவிட்டு வந்து பார்க்க, சிவாவோ இன்னும் உறக்கத்தில் இருந்தான். யோசனையுடன் அவனை மெதுவாக எழுப்பியிருந்தாள்.

“சக்தி” என்றவளின் குரலில் தான் கண் விழித்திருந்தான் சிவா.

“தூங்கலையா அபி? டைம் என்ன?”

“செவன் தேர்ட்டி ஆகப் போகுது” என்று அவள் சொன்னது தான் மாயம்,

“மை காட்” என்று வேகமாய் எழுந்தான் சிவா.

அவன் எழுந்த வேகத்தில் அவள் என்னமோ ஏதோவென்று நினைத்தவள்,

“என்னாச்சு சக்தி? ஏதாவது முக்கியமான வேலையா போகனுமா?” என்றாள் வேகமாய்.

“என்ன அபி இப்படி கேட்டுட்ட? நான் தான் தூங்கிட்டேன், நீயாவது எழுப்பி விட்ருக்கலாம்ல” என்று தலையில்  கைவைத்தபடி அமர்ந்தவனைப் பார்த்தவளுக்கு பாவமாகிப் போனது.

“சாரி சக்தி..! நல்லா அசந்து தூங்குனிங்க. அதான் எழுப்பலை” என்றாள்.

“உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை அபி. அசந்து தூங்குனா அப்படியே விட்ருவியா நீ? என்னை எழுப்பியிருக்கணும் அபி நீ” என்றான் குற்றம் சாட்டும் பார்வையுடன்.

“எனக்கென்ன தெரியும்? நீங்க சொல்லியிருக்கணும்” என்று குரலை உயர்த்தியவள்,

“இப்ப என்ன கொஞ்சம் லேட்டா போய் அந்த வேலையைப் பார்த்தா ஒன்னும் ஆகாது” என்றாள் கடுப்புடன்.

“நீ நிஜமாத்தான் சொல்றியா? ஆனா நான் பார்க்க வேண்டிய ஆள் கிளம்பிடுவாங்களே?” என்றான் யோசனையுடன்.

“ஒரு நாளைக்கு இருக்க சொல்லி போய் பாருங்க” என்றவளை இழுத்து மடியில் இருத்திக் கொண்டான்.

“அப்போ ஒரு நாள் இரு அபி” என்று காதோரம் கிசுகிசுத்தவனை திரும்பி உக்கிரமாய் முறைத்தவள்,

“உங்களை” என்று மொத்தி எடுத்தாள்.

“ஹேய் விடுடி!எப்பவும் போல மூணு மணிக்கு எழுந்திருந்தா இயர்லி மார்னிங் ஷோவை முடிச்சிருப்பேன். பாரு இப்போ மிஸ் பண்ணிட்டேன்” என்றவனைப் பார்த்தவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது.

“கொஞ்ச நேரத்துல எனக்கு படபடன்னு வர வச்சிட்டு பேச்சைப் பாரு மனுஷனுக்கு? கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம?” என்றவளை விடாமல் அணைத்துக் கொண்டவன்,

“பொண்டாட்டிகிட்ட எவனாவது விவஸ்தையோட நடந்துக்குவானாடி?” என்றவன்,

“இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடேன் அபி” என்றான்.

“வாய்ப்பில்லை சக்தி. இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு. அதுவுமில்லாம நான் கிளம்பிட்டேன் பாருங்க” என்றாள்.

“இதெல்லாம் ரொம்ப அநியாயம் அபி” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அபர்ணாவின் அலைபேசி ஒலிக்க, காயத்ரி தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

“சொல்லு காயு”

“அபூ இன்னைக்கு தேனி டிஸ்ட்ரிக் ஸ்கூல்,காலேஜ் எல்லாம் லீவுடி. ஸ்கூல்ல க்ரூப்லயும் மெசேஜ் போட்டுட்டாங்க” என்ற காயத்ரியின் குரல் சிவாவின் காதுகள் வரை நன்றாக கேட்டது.

“கொஞ்சம் முன்னமே சொல்லியிருக்கலாம். பாரு நான் கிளம்பிட்டேன்” என்று முனுமுனுத்தபடி போனை வைத்தவள் திரும்பி சிவாவைப் பார்க்க, அவனோ சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்.

“சிரிக்காதிங்க சிவா” என்றவளுக்கும் சிரிப்பு வந்திருந்தது.

“அபி உனக்கு குளிருதா?”

“இல்லையே?”

“ஆனா எனக்கு குளிருது” என்றான்.

“ம்ம் அப்போ போர்த்திட்டுப் படுங்க” என்றாள் நக்கலுடன்.

“பொண்டாட்டி இருக்கும் போது போர்வை எதுக்குடி” என்றவளைக் கட்டிக் கொள்ள,

“விடுங்க சிவா”

“ஹேய் ஒன்னும் பண்ண மாட்டேன் அபி. கொஞ்ச நேரம் அப்படியே தான் இரேன். பாரு கிளைமேட் எப்படி இருக்குன்னு” என்று ஜன்னல் வழியே காட்ட, மழைத்தூறலும் மழைக்காற்றும் அந்த அதிகாலை நேரத்திற்கு மட்டுமல்ல அவர்களுக்கும் இனிமை சேர்த்துக் கொண்டிருந்தது.

அங்கே பிரபாகரனோ காட்டுக் கத்துக் கத்திக் கொண்டிருந்தான் செல்வியை. அவளோ கோபத்துடன் அவனைப் பார்த்திருக்க,

“இப்போ எதுக்குடி முறைச்சுட்டு நிக்கிற? நான் தான் லைனுக்குள்ள போகும் போது சொல்லிட்டு தான போனேன். ஒரு ரெண்டு நாள் பேக்கரிக்கு போனா ஆகாதாமா?” என்றான்.

“என்னால முடியாது. வேலைக்கு வேணும்னா ஒரு ஆளை வச்சுப் பாருங்க. சும்மா என்கிட்ட கத்திட்டு இருக்காதிங்க சொல்லிட்டேன்” என்றாள் செல்வி எரிச்சலுடன்.

“இப்படியே போனா, ஆள் வைக்கத் தேவையில்லை. வேற ஓனரைத் தான் அங்க கொண்டு போய் வைக்கணும்?” என்றான் பிரபாகரன்.

“இப்போ எதுக்கு பிரபா இப்படி கத்துற. அவங்களைப் பத்தித் தான் தெரியும் ஆச்சே. விடு, ஆள் யாராவது பார்ப்போம்” என்றான் சத்யா.

“வர்ற ஆள் எல்லாரும் சிவா ஆகிட முடியுமா சத்யா. இதோ இன்னைக்கு மழை பெய்யுதுன்னு கடையைத் திறக்கலை. ஆனா இன்னைக்குத்தான் வியாபாரம் நல்லா ஓடும். சிவா இருந்தப்போ ஒரு மழை நாளாவது வீட்ல இருந்திருக்கானா? இல்லை கடைக்குத் தான் லீவ் விட்டிருக்கானா? சொல்லப் போனா அன்னைக்குத்தான் வருமானம் அதிகமா இருக்கும் சத்யா. நான் நேத்து லைனுக்கு போயிட்டு வந்த அலுப்புல தூங்கிட்டேன். இன்னைக்கு கடைக்கு லீவ் விட வேண்டிய நிலைமை. இப்படியே போனா, துண்டைத் தான் தலையில போடணும்” என்றான் பிரபாகரன் கோபத்துடன்.

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? உங்களை இப்படி கஷ்ட்டப்படுத்தனும், நீங்க இப்படி புலம்பனும்னு தான உங்க தம்பி கடையை விட்டு போனார். இப்போ என்கிட்ட கத்துறிங்க?” என்ற செல்வியை இருந்த ஆத்திரத்துக்கு அறைந்திருந்தான் பிரபாகரன்.

“என்ன பிரபா இது? பொழுதுக்கும் பொண்டாட்டியை கை நீட்டுற பழக்கம்?” என்று நடராஜன் சத்தம் போட்டார்.

“பின்ன என்னப்பா? இப்ப கூட சிவா மேல தான் தப்புன்ற மாதிரி பேசுறா. இவ பண்ணது, பண்ணிட்டு இருக்குறது எப்போ தான் புத்திக்கு உறைக்கும் இவளுக்கு? அவன் எங்க கடையை விட்டு போனான். திங்க உங்கன்னு எல்லாத்துக்கும் கணக்குப் பார்த்து நீதான்டி அவனை வெளிய அனுப்பி விட்ட. உன் பேச்சைக் கேட்டு நானும் கொஞ்ச நாள் ஆடுனேன்ல..அதான் இப்போ அனுபவிக்கிறேன்” என்ற பிரபாவின் கோபத்தை குறைக்கவே முடியவில்லை.

“பிரபா கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்றான் சத்யா.

“முடியலை சத்யா. கடைக்கு வர்ற பாதிப் பேர் கேட்குற கேள்வி, எங்க சிவாவைக் காணோம்னு தான். ஒருத்தராவது அவனைப் பத்தி ஒரு குறை சொல்லணுமே..ம்கூகும்..அவன் இருந்த வரைக்கும் எல்லா செலவும் போக கடையில இருந்து அவன் எடுத்துக் குடுத்த லாபம் மூணு லட்சம். இந்த மாசம் அப்படியே பாதிக்கு பாதி தான் வந்திருக்கு. மூணு லட்சம் லாபம் எடுத்துக் குடுத்தவனுக்கு முப்பத்தையாயிரம் குடுக்கக் கணக்குப் பார்த்தா இல்ல, அதான் பாதிக்கு பாதியா கிழிஞ்சிடுச்சு.

சரி அது போகட்டும், அவன் கல்யாணத்துக்கு ரெண்டு சவரன் நகை எடுத்துப் போடலாம்னு சொன்னேன், அதுக்காவது விட்டாளா இவ? அங்க ஆரம்பிச்சு இங்க ஆரம்பிச்சுன்னு கடைசியா பைக்ல வந்து நின்னா பாரு சத்யா, அதைத்தான் இப்போ வரைக்கும் தாங்க முடியலை. பய என்னை என்ன நினைச்சிருப்பான். அண்ணன் இந்த வண்டிக்கு கூட கணக்குப் பார்த்திருக்கான்னு என்னை தப்பா நினைச்சிருக்க மாட்டான்? எல்லாம் இவளால வந்தது. பிள்ளைங்களுக்காகன்னு நானும் எவ்வளவு நாள் தான் பொறுத்து பொறுத்துப் போறது?” என்று மீண்டும் அவளை அடிக்க சென்றவனைப் பிடித்து தடுத்திருந்தான் சத்யா.

பிரபா பேசப் பேச செல்வி அரண்டு போய் நின்றாளோ இல்லையோ சரிதா அரண்டு போய் நின்றிருந்தாள்.

“என்னமோ நீங்க முதல் போட்டு ஆரம்பிச்ச மாதிரி பேசுறிங்க? எங்கப்பா தான் ஆரம்பிச்சு குடுத்தார்?” என்ற செல்வியை வெறுப்புடன் பார்த்தான் பிரபா.

“ஆரம்பிச்சு கொடுத்தது மட்டும் தான் உங்கப்பன்.. அதுல முழுசா பாடுபட்டு அதை இந்த அளவுக்கு உசத்துனது உங்கப்பனோ நானோ இல்லை நீயோ இல்லை, என் தம்பி. அவன் இல்லைன்னா இன்னைக்கு கடையே இல்லை. வெளிய போய் தொழில் பண்ணிப் பாரு தெரியும் உனக்கு? ஒன்னுக்கு பத்து கடை திறந்து வச்சிருக்கான். உன் கடை இல்லைன்னா இன்னொரு கடைன்னு போயிட்டே இருப்பாங்க. கஸ்ட்டமரைத் தக்க வைக்கிறது அவ்வளவு ஈசியா போச்சா உனக்கு. உங்கப்பா தான முதல் போட்டார், அப்போ நீயே போய் பாரு. நான் எதுல முதல் போட்டேனோ அந்த தொழிலை மட்டும் பார்த்துக்கிறேன்” என்றான் பட்டென்று.

“பிரபா இப்போ நீ டென்ஷன்ல இருக்க. கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்ற சத்யா,

“கொஞ்ச நேரம் நீங்களும் தான் பேசாம இருங்களேன் அண்ணி” என்றான் செல்வியிடம்.

“எப்படி பேசுறார்ன்னு பாருங்க சத்யா. எனக்கு என்ன தெரியும் கடையில?” என்றாள் அழுது கொண்டே.

“தெரியலைண்ணா வாயை மூடிட்டு இருக்கணும். ஒண்ணாந்தேதி ஆனா வரவு எவ்வளவுன்னு மட்டும் பார்க்கத் தெரியுதுல்ல. இனி அதுக்கு வேலை எவ்வளவு செய்யனும்னும் வந்து பாரு. அப்பத் தான் அதோட அருமை தெரியும் உனக்கு. வீட்ல தின்னுட்டு தின்னுட்டு சும்மா இருக்குறதால தான் கஷ்ட்டத்தோட அருமையே தெரியலை” என்றான் பிரபா.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே வண்டி சத்தம் கேட்க, சிவாவும் அபர்ணாவும் வந்திருந்தனர்.

செல்வியைப் பார்த்த பிரபா,

“அவங்ககிட்ட இன்னைக்கும் ஏதாவது தேவையில்லாம பேசுன, என்னை மனுஷனா பார்க்க மாட்ட செல்வி” என்று அதட்டியிருந்தான்.

“வா சிவா, வாம்மா அபர்ணா” என்றான் சத்யா.

சிவா வீட்டிற்குள் செல்ல ஒரு நிமிடம் தயங்கி நிற்க,

“உள்ள வர யோசனையா இருந்தா அப்படியே போடா..! இவ பேசுனது தான உனக்கு முக்கியமா போச்சு. அண்ணன்காரனுங்க நாங்க சும்மா தண்டத்துக்குத் தான இருக்கோம்” என்றான் பிரபாகரன் கோபமாய்.

“நான் எப்போண்ணா அப்படி சொன்னேன்” என்றவன் அபியைப் பார்க்க, இருவருமே உள்ளே சென்றிருந்தனர்.

கலையரசி வேகமாய் இருவருக்கும் காபி போடப் போக,

“நாங்க குடிச்சுட்டு தாம்மா வந்தோம்” என்றான் சிவா.

“இங்கயும் குடிக்கலாம். ஒன்னும் பட்டுக்காது” என்றான் பிரபா.

“இப்போ உனக்கு என்னாச்சுண்ணா? ஏன் கோபமா இருக்க?” என்றான் சிவா புரியாமல்.

“ஒன்னும் ஆகலைடா. எல்லாரும் பண்றதைப் பார்த்து கோபம் வராம இருந்தாத்தான் ஆச்சர்யம்” என்றவனை பார்த்த சிவாவிற்கு எதோ பிரச்சனை என்பது புரிந்து போனது.

“வெள்ளிக் கிழமை ஷாப் ஒப்பனிங் இருக்குப்பா. எல்லாரும் வந்துடனும். அண்ணா, அண்ணி நீங்களும் தான்” என்றான் சிவா பொதுவாக.

சத்யாவோ தம்பியை அணைத்துக் கொண்டான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு சிவா. கண்டிப்பா வந்திடுறோம்” என்றான்.

சிவா பிரபாவைப் பார்க்க,

“என்னடா பார்வை? நாங்க இல்லாம நீ ஒப்பன் பண்ணிடுவியா? அதெல்லாம் சரியா வந்திடுவோம்” என்றான்.

“நீங்க என்ன? இந்த நேரத்துல வீட்ல இருக்கீங்க? கடைக்கு போகலையா?” என்றான் சிவா.

“இன்னைக்கு கடையைத் திறக்கலை” என்ற பிரபாவை முறைத்தான் சிவா.

“இப்ப என்னை எதுக்குடா முறைக்கிற? லைனுக்குள்ள போயிட்டு வரவே லேட் நைட் ஆகிடுச்சு. தூங்கிட்டேன்” என்றான் பிரபா.

பிரபாகரனின் வேலையும் சிவாவிற்கு தெரியுமே. யோசனையுடன் அண்ணனைப் பார்த்தவன்,

“இன்னைக்கு ஒரு  பையனை உன்னை வந்து பார்க்க சொல்றேன்ண்ணா. தெரிஞ்ச பையன் தான். அவனைப் பேசி வேலைக்கு வச்சுக்கங்க. சம்பளம் எல்லாம் பேசிக்கோங்க. அவனே கடையை திறந்திடுவான். நீங்க ஆறுமணிக்கு போனா போதும்” என்றான் சிவா.

“எப்படி சிவா புதுப் பையனை நம்பி..” என்று பிரபா யோசிக்க,

“நல்ல பையன். கொஞ்சம் கஷ்ட்டப்படுற குடும்பம். அவன் தலையெடுத்து தான் குடும்பத்தைக் காப்பாத்தணும். அதனால நல்ல சம்பளம் குடுத்து நீங்க நல்ல முறைக்கு வச்சுகிட்டா, அவனும் நல்ல முறைக்கு இருந்துக்குவான். அதுக்கு மேல உங்க இஷ்ட்டம்” என்றான்.

“நீ சொன்னதுக்கு அப்பறம் என்ன சிவா, வர சொல்லு” என்ற பிரபாகரனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

அவர்கள் கிளம்பியிருக்க,

“என்னடி சரிதா? இந்த அபர்ணா மினுமினுன்னு இருக்கா? என்னவா இருக்கும்?” என்றாள் செல்வி.

‘இவ்வளவு நேரம் வாங்குன டோஸ் என்ன? இப்ப பேசுற பேச்சு என்ன? இவங்களையும் திருத்த முடியாது. என்னையும் திருந்த விட மாட்டாங்க’ என்று எண்ணியவள்,

“அது தான் எனக்கும் தெரியலைக்கா..!” என்றாள்.

“புருஷன் புதுக் கடை திறக்கப் போறான்ல. அந்த பவுசா இருக்கும்” என்றாள் செல்வி.

“அப்படியா சொல்றிங்க?” என்று சரிதா கேட்க,

“பார்த்தியா வீட்டுக்குள்ள வர்றதுக்கு கூட பொண்டாட்டியை பார்க்குறான் கொழுந்தன். அவ கண்ணாலையே சரின்னு சொன்ன பிறகு தான் உள்ளயே வந்தாங்க. நாமளும் தான் கட்டியிருக்கோம், எதுக்கெடுத்தாலும் தாட் பூட்னு குதிக்கத் தான் தெரியும்” என்ற செல்வியை நினைத்து சரிதாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

அனைவருக்கும் சொல்லி விட்டு வரும் போதே மீண்டும் தூறல் போட ஆரம்பித்திருந்தது.

‘எப்படியோ மழைக்கு முன்னாடி சொல்லிட்டு வந்தாச்சு” என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் அபர்ணா.

“என்ன அபி ? பார்வை எல்லாம் தினுசா இருக்கு?” என்றான்.

“இல்ல, என்னதான் அவங்க மேல கோபம் இருந்தாலும், அண்ணன் ஆள் இல்லாம கஷ்ட்டப் படுறாருன்ன உடனே ஆள் ரெடி பண்ணி குடுக்குறது என்ன? கடையைத் திறக்கலைன்ன உடனே வந்த கோபம் என்ன?” என்று அவள் கிண்டல் செய்ய,

அவளின் கரங்களை தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டவன்,

“எப்படி சொல்றதுன்னு தெரியலை அபி. அந்த கடை எப்படியும் போகட்டும்னு என்னால நினைக்க முடியலை. அதை உருவாக்க நான் பணம் போடாம இருந்திருக்கலாம். ஆனா நிறைய உழைப்பை போட்டிருக்கேன். ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கேன். பல நாள் தூங்காம வேலை பார்த்திருக்கேன். அது நான் உருவாக்கினது அபி. அதாவது முதல் குழந்தை மாதிரி. நம்ம உருவாக்குனது எப்படியும் போகட்டும்னு எப்படி விட முடியும்?” என்றவனைப் பார்த்தவளின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

உள்ளே சென்று ஒரு பார்சலை எடுத்து வந்தவன், அவளிடம் நீட்ட..

“என்ன சக்தி இது?” என்றபடி திறந்து பார்த்தவளுக்கு ஆச்சர்யம். அதில் இருந்த பிங்க் நிறப் புடவை கண்ணை நிறைத்தது.

“எப்போ வாங்குனிங்க? சொல்லவே இல்லை” என்றாள்.

“கல்யாணம் ஆகி இந்தனை நாள் ஆச்சு. உனக்குன்னு ஒன்னு கூட வாங்கித் தரலையே அபி. ஷாப் ஒப்பனிங் அன்னைக்கு இதைக் கட்டிக்கோ” என்றவனை கட்டிக் கொண்டவள்,

“பிடிச்சிருக்கு சக்தி” என்றாள்.

“எது சேரி பிடிச்சிருக்கா?இல்லை சேரி வாங்கிக் குடுத்தவனைப் பிடிச்சிருக்கா?” என்றான் ஏகாந்தமாய்.

“ரெண்டையும் தான்” என்றவளின் இதழ்களைக் களவாடிக் கொண்டான்.

கடை திறக்கும் நாளன்று…

“அபி ரெடியா?” என்று கேட்டபடி உள்ளே வந்தவன், கிளம்பியிருந்தவளைப் பார்த்து விசில் அடித்தான்.

“செம்மையா இருக்க அபி” என்றவன் அவளை அணைக்கப் போக, இரண்டடி பின்னே சென்றவள்,

“டைம் ஆச்சு சக்தி, நாம கிளம்பனும்” என்றவள் அவனையும் கிளப்பிக் கொண்டு சென்றாள்.