யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்திருக்க, செல்வியைத் தவிர்த்து அனைவரும் வந்திருந்தனர். செல்வி வரமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. பிரபாகரன் அவளை அழைத்து வரவில்லை அவ்வளவு தான்.
“ஏன்டா பார்த்தது தான் பார்த்த. கொஞ்சம் தள்ளி பார்த்திருக்க வேண்டியது தான? சித்தப்பா வீட்டுக்கு பக்கத்துத் தெருவுலையே பார்த்து வச்சிருக்க? அந்த ஆளுக்கு நல்ல நாள்லயே நம்மளைக் கண்டா ஆகாது?” என்றான் பிரபா.
“அவர் வீட்டுக்கு எதிர் வீட்டைத்தான் முதல்ல பார்த்தேன்ண்ணா. அவரு புண்ணியத்துல ஓனர் விடலைன்னு சொல்லிட்டார். அப்பறம் தான் இங்க பார்த்தது” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, வீட்டிற்கு தேவையான அனைத்தும் வாசலில் வந்து இறங்க, சிவாவோ புரியாமல் பார்த்தான். கபிலன் தான் இறக்கிக் கொண்டிருந்தான்.
“என்ன கபிலன் இதெல்லாம்?” என்றான் சிவா.
“கல்யாணம் முடிஞ்சப்பவே இந்த சீரெல்லாம் குடுத்திருக்க வேண்டியது சிவா. நீங்கதான் அப்போ வேண்டாம்னு சொல்லிட்டிங்க. ஆனா இப்போ செய்றது தான முறை” என்றவனை சிவாவால் மறுத்துப் பேச முடியவில்லை. அவன் கண்கள் அபியைத் தேட, அவன் தேடுவதை உணர்ந்தவள் அவன் அருகில் வந்தாள்.
“என்னாச்சுங்க?”
“இப்போ எதுக்கு அபி இவ்ளோ திங்க்ஸ்? நீ எதுவும் கேட்டியா?” என்றான் சிவா.
“வந்திடுச்சா?” என்றவள்
“அண்ணா எல்லாம் நான் சொன்ன மாதிரி தான வாங்குன?” என்றாள்.
“அம்மா தாயே நீ சொன்ன மாடல் தான் வாங்கியிருக்கேன். வேணும்னா செக் பண்ணிக்கோ” என்றான் கபிலன்.
“என்ன அபி இதெல்லாம்?” என்றான் சிவா.
“என்னன்னு கேட்டா? இதெல்லாம் இவங்க தான் வாங்கித் தரனும். அது தான முறை. அப்பறம் கூடப் பிறந்ததுக்கு இவன் இது கூட செய்யலைன்னா எப்படி?” என்றாள்.
“இது எங்க கடமை தம்பி” என்றார் மூர்த்தி. அவனும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. நடராஜனும் கலையரசியும் எதுவும் பேசமால் அமைதியாய் இருக்க, நடராஜனின் அமைதி சிவாவை கொஞ்சம் பாதிக்கத் தான் செய்தது.
“என்னாச்சுப்பா? ஏன் ஒரு மாதிரி அமைதியா இருக்கீங்க?” என்றான் மனசு கேட்காமல்.
“இதுல கொஞ்சம் பணம் இருக்கு சிவா. உனக்கு இப்போ நிறைய செலவு இருக்கும். இதை வச்சுக்கோப்பா” என்று நடராஜன் கொடுக்க,
“எனக்கு பணமெல்லாம் வேண்டாம்ப்பா! உங்களுக்குத் தேவைப்படும் வைங்க. ஒரு அவசர செலவுனா அண்ணன்களை எதிர்பார்க்க வேண்டாம் பாருங்க” என்றான் சிவா.
“கோபம்னா ரெண்டு வார்த்தை திட்டிடு தம்பி. இப்படி யாரோ மாதிரி பேசாத. மனசு கிடந்து அடிச்சுக்குது” என்றார் நடராஜன். அவன் அமைதியாக நிற்க,
“கடைசிப் பையன்னு கைக்குள்ளயே வச்சு வளர்த்ததுனால தானோ என்னவோ உன்னை வெளிய வேலைக்கு கூட அனுப்ப மனசில்லை சிவா. ஆனா கடைசி வரைக்கும் உன்னை சின்னப் பையனாவே நினைச்சது தப்புத்தான். கண்டிக்க வேண்டிய இடத்துல நான் யாரையும் கண்டிக்கலை. என்னால அது முடியவும் முடியாது. வயசான காலத்துல பிள்ளைங்க கையை எதிர்பார்த்து காலம் தள்ளும் போது நம்ம பேச்சுக்கு அங்க மதிப்பில்லாம போய்டும். அது தான் நம்ம வீட்லயும் நடந்தது. நாங்க பண்ணது தப்புத்தான், அதுக்காக நீ எங்க பிள்ளை இல்லைன்னு ஆகிடாது சிவா” என்றார் நடராஜன் சோர்ந்த குரலில்.
“நான் உங்க பிள்ளை இல்லைன்னு யார் சொன்னா? வீட்டை விட்டுத் தான்ப்பா வந்தோம். சொந்தத்தை முறிச்சுட்டு வரலை. தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்காதிங்க” என்று அவன் பேசிய பிறகு தான் அவர்களுக்கு நிம்மதியாய் இருந்தது.
சிவாவின் குடும்பத்தினர் கிளம்பிவிட,
“வெளிய முக்கியமான வேலை இருக்கு அபி. இன்னைக்கே முடிச்சாகணும். நான் வந்ததுக்கு அப்பறம் இதையெல்லாம் எடுத்து வச்சுக்கலாம். நீ தனியா எதுவும் செய்ய வேண்டாம்” என்றவனும் கிளம்பியிருந்தான்.
“அண்ணா” என்று கபிலனின் பக்கம் திரும்பியவளை முறைத்தான் கபிலன்.
“ஏன்டி இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை. இருக்க வேண்டியவன் வேலை இருக்குன்னு ஓடுறான். நான் லீவ் போட்டுட்டு உனக்கு ஹெல்ப் பண்ணனுமா?” என்றான்.
“அண்ணன்ற போஸ்ட் எல்லாம் சும்மாவா? வாண்ணா எல்லாத்தையும் எடுத்து வைப்போம்” என்றாள் பாவமாய்.
“அதான் சிவா சொல்லிட்டு போனானே, வந்ததுக்கு அப்பறம் எடுத்து வச்சுக்கலாம்னு. உன் புருஷன் வந்ததுக்கு அப்பறமே எடுத்து வச்சுக்கோங்க அபூ” என்றான்.
“அவரே டயர்டா வருவார், பாவமில்லையா?” என்றாள்.
“ஏன் எங்களுக்கெல்லாம் டயர்ட் ஆகாதா மேடம்?” என்றவன் புலம்பிக் கொண்டே செய்தாலும் அபர்ணாவுடன் சேர்ந்து அனைத்தையும் செய்து முடித்திருந்தான். சாந்தி சமையல் அறையை ஒதுங்க வைக்க, அவர்களை வைத்தே வீட்டை தயார் செய்து முடித்திருந்தாள் அபி.
“எத்தனை நாள் லீவ் போட்டிருக்க அபி?” என்றான் கபிலன்.
“இன்னைக்கு ஒரு நாள் தான் ண்ணா. நாளைக்கு ஸ்கூல் போகணும். அதான் இன்னைக்கே எல்லாத்தையும் எடுத்து வைக்கனும்னு சொன்னேன்” என்றாள்.
“பத்து நாள்ல குலதெய்வ கோவிலுக்கு போகணும் அபர்ணா. மறந்துடாத, மாப்பிள்ளைகிட்டயும் சொல்லிடு. நாங்களும் ஒரு வார்த்தை சொல்லிடுறோம்” என்றார் சாந்தி.
“நான் வரலைன்னு ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன்ம்மா” என்றாள் அபர்ணா சற்று குரலை உயர்த்தி.
“ஏன் அபர்ணா? வருஷத்துக்கு ஒரு தடவை போறோம். நீயும் சிவாவும் வந்தா நல்லா இருக்கும். நீ இல்லாம நாங்க எப்படி போறது?” என்றான் கபிலன்.
“அண்ணா நான் மட்டும் வந்தா பரவாயில்லை. பிறந்த வீட்டுக் கோயில்னு அத்தை குடும்பமும் வரும். நீங்க வேற ஒரே வண்டியை பிடிச்சு அதுல ஒன்னாதான் போகணும்னு சொல்லுவிங்க. வருஷா வருஷம் அது தான வழக்கம். இந்த தடவை கூட அந்த சுஜிதா வேற. அந்த பொண்ணு எப்படி பேசுச்சுன்னு நீயும் பார்த்துட்டு தான இருந்த?அதனால அவங்க வர்ற இடத்துக்கு என்னால வர முடியாதுண்ணா” என்றாள் அபர்ணா.
“அன்னத்துக்கு எப்படி பிறந்து வீட்டுக் கோயிலோ, அதே மாதிரி உனக்கும் தான அபர்ணா பிறந்த வீட்டு கோயில். இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு. இப்படி குலதெய்வ கோயிலுக்கு வர மாட்டேன்னு சொல்றது நல்லாவா இருக்கு?” என்றார் சாந்தி.
“அபூ சொல்றதும் சரி தான்மா. அன்னைக்கே அவங்க பேச்சு வார்த்தை சரியில்லை. மறுபடியுமா? எதுக்கு தேவையில்லாத பிரச்சனை. நீங்க அன்னைக்கு பண்ணதே எனக்குப் பிடிக்கலை. அவங்களுக்கு சமைச்சு பரிமாறனும்னு என் தங்கச்சிக்கு தலையெழுத்தா?” என்றான் கபிலன்.
“ஆமா கபிலா..! வேணும்னு தான் செஞ்சேன். இப்போ அதுக்கு என்னாங்குறிங்க அண்ணனும் தங்கச்சியும்? என் பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டா, அவ அப்படியே இருந்திடுவாளா? பாரு எம் பொண்ணும் நல்லாத்தான் இருக்கான்னு அவங்களுக்குக் காட்ட வேண்டாம்? என் பொண்ணை அவங்க மகனுக்கு கட்டாம விட்டுட்டோமேன்னு அவங்களுக்கு மனசுக்குள்ள படனும்னு தான் செய்யச் சொன்னேன். நான் என்ன இல்லாததையா செஞ்சுட்டேன். எல்லா பெத்தவ மனசுக்குள்ள இருக்குற ஆதங்கம் தான இது. இப்போ கட்டிட்டு வந்திருக்குற மகராசி என் பொண்ணுக்கு ஈடாவாளா? இப்பவே ஒருத்தரையும் மதிக்கிறது இல்லையாம், சொல்லிகிட்டாங்க. என் மக கலங்கி நின்னதுக்கெல்லாம் காலம் பதில் சொல்லனும்ல?” என்றவர் சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு செல்ல, கபிலனும் அபர்ணாவும் வாயடைத்து போய் நின்றனர்.
“என்ன ண்ணா நம்ம அம்மா வரவர சீரியல் அம்மா மாதிரி பேசுறாங்க?” என்றாள்.
“இந்த கிண்டல் தான வேண்டாங்கிறது. அவங்க ஆதங்கமும் சரிதான் அபி. நீங்க வேண்டாம்னு சொன்னாலும் என் பொண்ணு நல்லாத்தான் வாழுறான்னு அவங்க முன்னாடி காட்டணும்னு நினைக்கிறாங்க. அது இயல்பு தான அபி. விடு பார்த்துக்கலாம்” என்றான்.
“அது..அண்ணா சக்திக்கு ஏற்கனவே ரொம்ப வேலை. பாவம் நிற்க நேரமில்லாம அலையறாங்க. இந்த நேரத்துல போய் நான் எப்படி கோவிலுக்கு கூப்பிடுறது? அதான்” என்று சமாளித்தாள்.
“இத்தனை நாள் நான் உன்கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேசுனது இல்லை அபூ. உன்னோட மனநிலைன்னு சொன்னதால இப்போ கேட்குறேன், நீ இன்னும் பழசு எதையாவது நினைச்சுட்டு இருக்கியா?” என்றான் ஒரு அழுத்தத்துடன்.
“நானும் இப்போ சொல்றது தான், இனி யாரும் என்கிட்ட இதைப் பத்தி பேசக் கூடாது. என்னோட கடந்த காலத்துக்கே நான் போக விரும்பலை. அதைப் பத்தி நினைக்கக் கூட எனக்கு விருப்பமில்லை” என்றாள் எரிச்சலுடன்.
“அப்போ எல்லாரையும் பேஸ் பண்ணு. பேசுறது பிடிக்கலையா பதில் குடு, சிம்பிள்” என்றான் கபிலன். அபர்ணாவோ தூரத்தை வெறித்திருந்தாள்.
சிவா வீடு வந்து சேர இரவு வெகு நேரமாகியிருந்தது. களைப்புடன் வந்தவன், அபி வந்து கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்த்திருக்க, வந்தது என்னவோ கபிலன் தான். அவனும் நல்ல உறக்கத்தில் இருந்திருப்பான் போலும்.
“என்ன சிவா? இவ்வளவு நேரம்?” என்றான் கபிலன்.
“கொஞ்சம் மெட்டீரியல்ஸ் வாங்க மதுரை வரை போக வேண்டியது இருந்தது கபிலன். அதான் லேட் நைட் ஆகிடுச்சு. சாரி உங்களுக்குத் தான் கஷ்ட்டம்” என்றான் சிவா.
“இதுல என்ன இருக்கு சிவா. அபூ தூங்குறா. அப்போ நான் கிளம்புறேன் பார்த்துக்கோங்க” என்ற கபிலன் இரண்டு வீடு தள்ளி இருந்த அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
உள்ளே சென்றவனுக்கு அந்த வீட்டின் சூழல் பழகவே சிறிது நேரம் பிடித்தது. குளித்து முடித்து வந்தவன், தன் ஒற்றை மொட்டைமாடி அறையை எண்ணி ஏக்கம் கொண்டான்.
வீட்டில் அவன் வந்து செய்வதற்கு ஒரு வேலையும் இன்றி அனைத்தையும் முடித்து வைத்திருந்த அபியைக் கண்டவனின் சோர்வெல்லாம் எங்கோ சென்றிருந்தது. அவளோ ஹால் சோபாவில் படுத்து நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
‘வரவர இவளைப் பார்த்தாலே உள்ளுக்குள்ள என்னென்னமோ ஆகுது’ என்று புலம்பியவன்,
“அபி எழுந்து கட்டில்ல போய் தூங்கு அபி. எங்கையாவது பிடிச்சுக்கப் போகுது” என்றான் அக்கறையுடன். தூக்கக் கலக்கத்தில் எழுந்தவள் அவனை முறைத்தாள்.
“என்னாச்சு அபி? இப்ப ஏன் முறைக்கிற? சாரிமா போன இடத்துல லேட் ஆகிடுச்சு” என்றான்.
“நான் தான் தூங்கிட்டு இருக்கேன்னு தெரியுதுல்ல. என்னை எழுப்பாம தூக்கிட்டு போய் தூங்க வச்சிருக்கலாம்ல சக்தி” என்றாள்.
“அப்படியா? அப்போ இனிமேல் அப்படியே பண்றேன் அபி” என்றவனைப் பார்த்து பல்லைக் கடித்தவள் கடுப்புடன் எழுந்து சென்றாள்.
வேகமாய் சென்றவன் அவளை அப்படியே தூக்கிக் கொள்ள, திகைத்தவளைப் பார்த்தவன்,
“தூக்குறதுன்னு முடிவாகிடுச்சுன்னா ஏன் தூங்குறப்ப தூக்கணும். முழிச்சிருக்கும் போதே தூக்கலாமே?” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.
“என்ன அசால்ட்டா தூக்கிட்டிங்க?”
“பேக்கரியில எத்தனை மூடைய தூக்கியிருப்பேன்? ஆனா இன்னைக்குத் தான் ஸ்வீட் பேக்கரியையே தூக்கியிருக்கேன்னு நினைக்கிறேன்” என்றவனைப் பார்த்து அவளுக்கு ‘அய்யோ’ என்றிருந்தது.
அவளைக் கட்டிலில் போட்டவன், தானும் அங்கேயே படுத்துக் கொள்ள,
“ஏன் சார் இன்னைக்கு மொட்டை மாடிக்கு போகலையா?” என்றாள் அபி.
“ம்ம்..! நான் அந்த வீட்டு மொட்டை மாடி தூக்கத்தை மிஸ் பண்றேன் தான் அபி” என்றான்.
அவன் குரலில் இருந்த உணர்வில் மேற்கொண்டு அவனை கிண்டல் செய்ய அவளுக்கு விருப்பமில்லை.
“காலையில இருந்து அலைஞ்சிருக்கிங்க. டயர்டா இருப்பிங்க, தூங்குங்க சக்தி” என்றாள்.
அவளை இடையோடு அணைத்துக் கொண்டவன்,”எப்படி தூக்கம் வரும்? இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்ல” என்றான்.
“எதே” என்றவளின் முழிக்க அதைப் பார்த்தவன்,
“இந்த வீட்ல இது தான நமக்கு பர்ஸ்ட் நைட்டு. அதான் தூக்கம் வராதுன்னு சொன்னேன் அபி. நீ என்ன நினைச்ச?” என்றான் நமட்டு சிரிப்புடன்.
அடுத்த நாளில் இருந்து அவர்களின் வாழ்க்கை எப்போதும் போல் ஆரம்பித்திருந்தது. அபர்ணா பள்ளி சென்று வருவதும், சிவா கடை சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக அலைவதுமாக நேரமும் நாட்களும் விரைவாக சென்று கொண்டிருந்தது. அதிலும் இரவு வெகு நேரம் கழித்து களைத்துப் போய் வரும் சிவாவைப் பார்க்கும் போதெல்லாம் அபர்ணா மனதிற்குள் மிகவும் வேதனைப்பட்டுப் போவாள்.
அவன் செய்யும் எல்லா வேலைகளிலும் ஒரு நேர்த்தி இருந்ததை அபர்ணாவும் கவனித்தாள். எதையும் ஏனோ தானோவென்று செய்யும் பழக்கம் அவனிடம் ஆரம்பத்தில் இருந்தே இல்லை போல என்று நினைத்துக் கொண்டாள். சின்ன சின்ன விஷயங்களையும் அவன் நுணுக்கமாக செய்வதில் இருந்து அந்த தொழிலில் அவனுக்கு இருந்த அனுபவத்தையும் அறிவையும் புரிந்து கொண்டாள். காபி குடிக்கும் கப்பில் ஆரம்பித்து கடைக்கோடியில் வைக்கும் குப்பைத் தொட்டி வரைக்கும் அனைத்திலும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஒவ்வொரு பொருளையும் தேடித் தேடி வாங்கிக் கொண்டிருந்தான். அண்ணன் கடைக்கே அப்படி உழைத்தவன் தன் சொந்த கடைக்கு கேட்கவா வேண்டும்?
ஆனால் எந்த வேலையும் அவ்வளவு எளிதில் நடந்து முடியவில்லை. ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியிருந்தது. வேலை செய்யும் ஆட்கள் ஆரம்பித்து அனைவரிடமும் பேசியே வேலை வாங்க வேண்டியிருந்தது. சில சமயம் வீடு என்று ஒன்று இருப்பதையே மறந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் கடையை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு.
சில பெரிய ஆட்களின் பழக்க வழக்கம் இருந்ததால், இழுவையில் நடக்கும் வேலைகள் இழுவை இல்லாமல் முடிந்திருந்தது. கடையை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொன்றாக பார்த்துக் கொள்ளலாம் என்று அவன் நினைக்கவில்லை. ஆரம்பிக்கும் போதே அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஒரு பக்கம் கடை வேலை, இன்னொரு பக்கம் பொருட்கள் வாங்குவது, இன்னொரு பக்கம் முனிசிபாலிட்டி லைசென்ஸ் என்று அலைந்து திரிந்து ஒரு வழியாக அனைத்தையும் முடித்திருந்தான். டீலர்களிடமும் ஏற்கனவே பழக்கம் இருந்ததால் அதுவும் எளிதில் முடிந்திருந்தது. கூடவே இருந்து பார்த்த அபர்ணாவிற்கு கண்ணைக் கட்டியது. அவளுக்கு அப்போது தான் ஒரு விஷயம் புரிந்தது, தொழில் செய்வதென்பது அவ்வளவு எளிதான வேலையல்ல என்பது.
“இதுல இவ்வளவு கஷ்ட்டம் இருக்கா சக்தி?” என்று கேட்டவளை ஆதுரமாய் பார்த்திருந்தான்.
“பணம் எல்லாம் போதுமா சக்தி. நான் வேணும்னா அண்ணாகிட்ட கேட்டுப் பார்க்கவா?” என்றாள் ஒரு தயக்கத்துடன்.
“வேண்டாம் அபி. இப்போதைக்கு இருக்கு. மேற்கொண்டு எதுவும் வெளிய வாங்க வேண்டாம். யாரையும் தொந்தரவு பண்ணக் கூடாது அபி” என்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் எதையோ கேட்க யோசித்துக் கொண்டே இருக்க,
“நாளைக்கு கோவிலுக்கு வர முடியுமான்னு தெரியலை. நீ அவங்களோட போயிட்டு வா அபி. நான் முடிஞ்ச அளவுக்கு நேரா கோயிலுக்கு வர ட்ரை பண்றேன்” என்றான்.
திருமணத்திற்கு பிறகு முதன் முறை பிறந்த வீட்டில் குடும்பத்துடன் செல்லும் கோவிலுக்கு ஏனோ அவனின்றி செல்ல மனமே இல்லை அவளுக்கு. ஆனால் அவனை வந்தே ஆக வேண்டும் என்று இந்த நிலையில் கட்டாயப்படுத்துவதும் சரியாக இருக்காது என்று எண்ணியவள் அமைதியாக இருந்து கொண்டாள்.
மறுநாள் அதிகாலையிலேயே சிவா கிளம்பி சென்று விட, சாந்தி விடாமல் போனில் அழைத்துக் கொண்டே இருந்தார்.
“என்னாச்சு அபி? அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்களாம். நீ பேசவே இல்லையாம்? உடனே எனக்கு அடிச்சுட்டாங்க” என்றபடி வந்தான் கபிலன்.
“நான் சிவாகிட்டையே கேட்குறேன்” என்று அவனுக்கு அழைக்கப் போனவனைத் தடுத்தவள்,
“கிளம்பி வர்றேன்” என்றாள் எரிச்சலுடன்.
ஒருவழியாக அவளையும் கிளப்பிக் கொண்டு தான் சென்றான் கபிலன். அபர்ணா எண்ணியதைப் போல் அன்னம் குடும்பமும் இருக்க, முத்து மாணிக்கம் மட்டும் வரவில்லை.
“என்ன பார்க்குற அபூ? நான் என் தங்கச்சி இல்லாம போக மாட்டேன். அதே மாதிரி அப்பாவும் அவர் தங்கச்சி இல்லாம வர மாட்டார் போல” என்று கபிலன் சொன்ன விதத்தில் அவளின் இறுக்கம் சற்று குறைந்திருந்தது.
“ஆமான்னு சொன்னா என்ன செய்வ?” என்ற மாதவனின் குரலில் அப்படியே அடங்கிவிட்டாள் சுஜிதா. மாதவன் அதிகம் பேச மாட்டான். பேசும் வார்த்தைகள் நறுக்குத் தெரித்தார் போல் இருக்கும். சில சமயம் முத்து மாணிக்கத்தின் ஜெராக்ஸ் போல பேசுவான்.
அபர்ணாவிற்கு காரணமே இல்லாமல் அழுகையும் கோபமுமாய் வந்தது. அவளுக்கு என்ன வேண்டும் என்பதே தெரியவில்லையோ என்னவோ?