நகரை ஒட்டி அமைந்திருந்த அந்த பேக்கரியில் அன்று கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. பேக்கரியை ஒட்டியே டீ ஸ்டால், பிரஷ் ஜூஸ் என்று தனித் தனி பிரிவுகள் இருக்க, அனைத்திலும் ஆட்கள் நின்று பம்பரமாய் வேலை செய்து கொண்டிருந்தனர். அவ்வூரின் மிகப் பிரபலமான பேக்கரி அது. தரத்தில் எப்போதும் குறையிருக்காது.
பேக்கரிக்கு வந்த அதன் உரிமையாளன் பிரபாகரன், சுற்றும் முற்றும் தேட, அங்கே மேற்பார்வை பார்த்தபடி ஒவ்வொருத்தருக்கும் வேலையை பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன்.
“சிவா” என்ற அண்ணனின் குரலில் திரும்பிய சிவ சக்திக்கு வயது இருபத்தி எட்டு ஆகிறது. கலையான முகத்துடன் கொஞ்சம் கம்பீரமும் சேர்ந்து மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முகத்துடன் இருக்கும் தன் தம்பியை பார்க்கும் போது பிரபாகரனுக்கே சில சமயம் பொறாமை வருவதுண்டு.
படித்து முடித்து கேம்பஸில் வேலைக்கு தேர்வாகியிருந்தவனை பிடித்து வைத்துக் கொண்டான் பிரபாகரன். அவனுக்கு இரண்டு மூன்று தொழில்கள் இருந்தது. அதனால் தன் பேக்கரியை பார்த்துக் கொள்ள தம்பியை விட்டால் பொறுப்பான ஆள் கிடைக்காது என்று அவனை தன்னுடனேயே வைத்துக் கொண்டான்.
‘யாருக்கோ செய்ற வேலையை அண்ணனுக்கு செய்ப்பா’ என்று தாயும் தகப்பனும் சொல்ல, நான்கு வருடங்களாக இதே பேக்கரியில் தான் இருக்கிறான். அவன் படித்த படிப்பிற்கும் இந்த வேலைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்றாலும், அண்ணன் கேட்டுக் கொண்டதற்காக அவனும் இருந்து விட்டான்.
“அண்ணா” என்றபடி வந்து நின்றவன் தேவைக்கு அதிகமாக பேசவே மாட்டான்.
“தெரியும்ணா” என்று பதில் சொல்லிக் கொண்டே பார்க்க வேண்டிய வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“மணி இந்த டேபிளுக்கு மூணு காபி மூணு பப்ஸ்” என்று சொல்லிவிட்டு அண்ணனிடம் திரும்பியவன்,
“நான் பார்த்துக்கிறேன்ண்ணா” என்றான்.
“நீ இருக்குற தைரியத்துல தான் இருக்கேன் சிவா” என்று கிளம்ப சென்றவனிடன்,
“என்னோட சேலரி இன்னும் நீங்க தரலைண்ணா. அக்கவுண்ட்ல போட்ருங்க” என்றபடி தன் வேலையை கவனிக்க சென்றவனை பிரபாகரன் பார்த்த பார்வையில் மருந்துக்கும் சிநேகம் இல்லை.
சிவ சக்தி ஆரம்பத்தில் இப்படியெல்லாம் இல்லை. ஆனால் பிரபாகரனின் மனைவி செல்வி எதற்கெடுத்தாலும் சிவாவை சற்று குத்தலாக பேசி வைக்க, அதிலிருந்து அவன் முற்றிலும் தனக்குள் இறுகிப் போனான்.
வீட்டிற்கு அவன் செல்வது தூங்குவதற்கு மட்டுமே. உறங்கும் நேரம் தவிர்த்து நாள் முழுவதும் இந்த பேக்கரியில் மட்டுமே செலவிட்டுக் கொண்டிருந்தான்.
நேரம் செல்ல செல்ல கூட்டம் குறைந்திருந்தது. மதிய நேரம் என்பதால் ஆட்கள் குறைவாக இருக்க, அப்போது தான் சற்று ஆசுவாசமாய் அமர்ந்தான் சிவ சக்தி.
அப்போது தான் கவனித்தான், ஒரு டேபிளில் அமர்ந்திருந்த இரு பெண்களை. வந்து நேரமாகியும் எதுவும் ஆர்டர் செய்யாமல் இருந்தவர்களை ஒரு யோசனையுடன் பார்த்திருந்தான்.
அந்தே டேபிளில் இருந்த காயத்ரியோ அழுது கொண்டிருந்த அபர்ணாவை எப்படி தேற்றுவது என்று புரியாமல் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று பள்ளிக்கு செல்லும் மனநிலையில் அபர்ணா இல்லை. காயத்ரி தான் கட்டாயப்படுத்தி அவளை அழைத்து வந்திருந்தாள். அழுததில் முகமெல்லாம் வீங்கி, ஒரே நாளில் எதையோ பறி கொடுத்தவளைப் போல் இருந்தவளைக் கண்டு காயத்ரிக்கு மனமே ஆறவில்லை.
முதல் நாள் மாலை முகம் சிவக்க சென்றவளா இவள்? என்பதைப் போல் இருந்தது அபர்ணாவின் நிலை.
“அபர்ணா இன்னும் எவ்வளவு நேரம் இப்படி அழுதுட்டே இருப்ப? ஸ்கூல்ல கேட்டவங்க கிட்ட பீவர்ன்னு சொல்லி சமாளிச்சாச்சு. இங்க பாரு போறவங்க வர்றவங்க எல்லாம் வித்தியாசமா பார்த்துட்டு போறாங்க. முதல்ல கண்ணைத் துடைடி” என்ற காயத்ரியின் குரலில் அவளுக்கு மேலும் அழகை வர, டேபிளில் கைகளுக்குள் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தவளை அடக்கும் வழி தெரியாது திகைத்திருந்தாள் காயத்ரி.
“யார் மணி அது? வந்து இவ்வளவு நேரமாகியும் எதுவும் ஆர்டர் பண்ணலை. அதுல ஒரு பொண்ணு ரொம்ப நேரமா அழுதுட்டு இருக்குற மாதிரி தெரியுது” என்றான் சிவா யோசனையுடன். அவர்கள் அவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்ததால் அவர்கள் யாரென்று தெரியவில்லை அவனுக்கு.
மணியை உக்கிரமாய் முறைத்த சிவா, “இப்போ இது ரொம்ப அவசியமா?” என்றான்.
“நீங்க தான கேட்டிங்க. பதில் சொன்னாலும் திட்டுறிங்க. சொல்லாம இருந்தாலும் திட்டுறிங்க” என்று சடைத்துக் கொண்டான் மணி.
“அவங்க வீட்டு பொண்ணு நம்ம பேக்கரிக்கு வர்றது வழக்கமில்லையே. என்ன திடீர்ன்னு?” என்ற சிவா அப்போது தான் எழுந்து வந்த காயத்ரியைப் பார்த்தன். இப்போது புரிந்தது அவனுக்கு.
“விஷயம் என்னன்னு சொல்ல வேண்டாம்மா. அது எனக்கு தேவையில்லாததும் கூட. ஆனா நாலு பேர் வந்து போற இடம். வயசுப் பொண்ணு இப்படி அழுதுட்டு இருக்குறதைப் பார்த்தா அவங்க இஷ்ட்டத்துக்கு பேசுவாங்கம்மா. அதுக்காகத் தான் சொல்றேன்” என்ற சிவா, அவளுடன் பேசிக் கொண்டே மாஸ்டரிடமிருந்து இரண்டு காபியை எடுத்து அவளிடம் நீட்ட, ஒரு தயக்கத்துடன் வாங்கிக் கொண்டு சென்றாள் காயத்ரி.
அவள் அபர்ணாவை கட்டாயப்படுத்தி காபியை குடிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில் பக்கத்து கல்லூரி மாணவிகள் சிலர் வர, அவர்களைத் தொடர்ந்து சில இளைஞர்களும் வந்து அமர்ந்தனர்.
“சிவாண்ணா நேத்தும் இந்த பசங்க இந்த பொண்ணுங்களை இதே நேரத்துக்கு வந்து கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க. இன்னைக்கும் வந்திருக்காங்க. சொன்னாலும் கேட்குறது இல்லை” என்ற மணியை முறைத்தவன்,
“இதை நீ நேத்தே சொல்லியிருக்கணும் மணி” என்று அதட்டியவன், அவர்களைத்தான் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
“அவன் நம்ம ஒன்றியம் பையண்ணா. அந்த தெனாவெட்டு தான். சொன்னாலும் கேட்டுக்கிற ரகம் இல்லை” என்றான் மணி.
“அப்போ சொல்ற விதத்துல சொல்லணும் மணி” என்று எழுந்து செல்ல முற்பட்டவனை தடுத்தான் மணி.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த பெண்கள் ஒரு முகச் சுழிப்புடன் எழுந்து செல்ல,
“இவனுங்கள” என்று சட்டையின் கைப் பகுதியை ஏற்றியவாறு எழுந்து சென்றவன் அங்கே நடுநாயகமாக அமர்ந்திருந்தவனை ஓங்கி அறைந்திருந்தான். அவன் அறைந்த அறையில் சற்று தள்ளி அமர்ந்திருந்த அபர்ணா உலுக்கி விழ, அவள் கையில் இருந்த காபி கிளாஸ் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது.
“ஹேய் அபர்ணா பார்த்துடி” என்று காயத்ரி அவளை தன் பக்கமாக இழுக்க, கிளாஸ் உடைந்த சத்தத்தில் திரும்பியவனின் பார்வையில் விழுந்தாள் அபர்ணா. அழுது சிவந்திருந்த முகமும், கலங்கிய விழிகளும், பயத்தில் பதட்டத்துடன் நின்றிருந்த விதமும் அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை. அவளை ஒரு முறை முறைத்தபடி,
“மணி இதை கிளீன் பண்ண சொல்லு” என்றவன்,
“பேக்கரிக்கு வந்தா வந்த வேலையை மட்டும் பார்க்கணும். அதென்ன பொண்ணுங்களை டீஸ் பண்றது?” என்றவன் மீண்டும் அவனை அடிக்க போனான்.
“வேண்டாம்ண்ணா! நான் அந்த பொண்ணை லவ் பண்றேன்” என்றான்.
“லவ் பண்றேன்னு சொல்ற? அப்பறம் கூட ரெண்டு பேரை கூட்டிட்டு வந்து கிண்டல் பண்ணி டீஸ் பண்ணிட்டு இருக்க. இது தான் சார் லவ் பண்ற லட்சணமா? இனி அந்த பொண்ணுங்க பக்கம் தலை வச்சு படுக்கக் கூடாது. மீறிப் பார்த்தேன், வாயைக் கிழிச்சுடுவேன்” என்றான் சிவசக்தி.
“வேண்டாம்ண்ணா..! நீங்க இதுல தலையிடாதிங்க. அப்பறம் நான் எங்கப்பாகிட்ட சொல்லுவேன்” என்றான்.
“உங்க அப்பா என்ன பெரிய பருப்பா? போய் சொல்லுடா போடா” என்று அவனை விரட்டியவன், இவர்கள் பக்கம் திரும்ப,
“சாரிண்ணா! அது ஒரு பதட்டத்துல கிளாசை கீழ விட்டுட்டா. நாங்க அதுக்கும் சேர்த்து பே பண்ணிடுறோம்” என்றாள் காயத்ரி வேகமாக.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா..! குடிச்ச காபிக்கு மட்டும் காசை குடுத்துட்டு போங்க” என்றவன்,
“மணி சுத்தம் பண்ண சொன்னேன்” என்று மீண்டும் அழுத்தி சொன்னவாரு அங்கிருந்த நகர, அப்போது தான் அபர்ணாவிற்கு மூச்சே வந்தது.