வீட்டிற்கு வந்ததிலிருந்து அமைதியாய் அமர்ந்திருந்த மகளைப் பார்த்த சாந்திக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. இறுகிப் போயிருந்தவளின் முகம் மட்டும் ஏதோ யோசனையில் இருக்க, அவளிடம் பேசவே யோசித்தார் சாந்தி.
“ஏதாவது பிரச்சனையா அபர்ணா?” என்றார் மூர்த்தி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா” என்று வேகமாய் கூறியவள்,
“அண்ணாவுக்கு இன்னைக்கு லீவ் தானம்மா!” என்றாள்.
“அப்படித்தான் நினைக்கிறேன் அபர்ணா” என்றார்.
“எனக்கு, ரெண்டு பேருக்கு சமைக்கத் தேவையான பாத்திரமும், அடுப்பும் சிலிண்டரும் இன்னைக்கே வேணும். உடனே வேணும்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
“என்னாச்சு அபர்ணா? அங்க எதுவும் பிரச்சனையா? என்னடி நடந்தது?” என்றார் சாந்தி பதட்டத்துடன்.
“ஒன்னும் நடக்கலைம்மா..! இதெல்லாம் எடுத்து அண்ணாகிட்ட குடுத்து விட்டாலும் சரி. ஆட்டோல அனுப்பி விட்டாலும் சரி. எனக்கு கொஞ்சம் பொருள் வாங்கணும். கடைக்கு போயிட்டு வீட்டுக்கு போவேன். அதுக்குள்ள குடுத்து விடுங்கம்மா” என்றவள் யோசனையுடன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு செல்ல, சாந்தியும் மூர்த்தியும் எதுவும் புரியாமல் கபிலனுக்கு அழைத்து விஷயத்தை கூறியிருந்தனர்.
புரியாமல் திகைத்த கபிலனும், சிவாவிடம் கேட்கலாம் என்று அவனுக்கு அழைக்கப் போக, பிறகு அந்த யோசனையை கைவிட்டவனாய், அபர்ணா கேட்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான். அதற்குள் அவளும் வீடு போய் சேர்ந்திருக்க, தான் கொண்டு சென்ற பொருட்களை அமைதியாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளைத் தான் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அதிக மன அழுத்தத்தில் இருந்தால் மட்டுமே இப்படி அமைதியாக இருப்பாள் என்று அவனுக்குத் தான் தெரியுமே.
“என்னாச்சு அபூ?” என்றான் கபிலன் அமைதியாக.
“அண்ணா” என்றவள் என்ன சொல்வதென்று புரியாமல் திகைக்க,
“உன்னைத் தான் கேட்குறேன் அபூ. என்ன இங்க பிரச்சனை? எதுக்காக சமைக்கிறதுக்கு இப்படி தனி செட்டப்? வீட்ல எதுவும் பிரச்சனையா?” என்றான் கபிலன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னா. சும்மா சும்மா கீழ போய் செய்ய முடியலை, அதான்” என்பதோடு முடித்துக் கொண்டாள்.
“முதல் நாள் காலையில தாட் பூட்னு போனை போட்டு கத்துன அபர்ணாவா இது? இன்னைக்கு என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லக் கூட யோசிக்கிற அளவுக்கு வேற ஆள் ஆகிட்டிங்களோ?” என்றான் கபிலன்.
எவ்வளவு முயன்றும் சிவாவை அவன் வீட்டு ஆட்கள் அப்படி பேசியதை அண்ணனிடம் சொல்ல மனம் வரவில்லை அவளுக்கு. எங்கே கபிலனும் சிவாவை அப்படி நினைத்து விட்டால் என்ன செய்வதென்ற பயம் தான் அவளுக்கு.
“பிரச்சனைன்னா உன்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லப் போறேன்ண்ணா.நிஜமா எதுவும் இல்லை” என்றாள்.
“சரிடா..! அப்போ நான் கிளம்பறேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“சக்திகிட்டயும் நீங்க எதுவும் கேட்கக் கூடாது” என்றாள் அறிவிப்பாய். அவள் சொல்லா விட்டாலும் கபிலனுக்கு ஏதோ புரிவதைப் போல் இருந்தது.
“சரிடா” என்றவன் கிளம்பிவிட்டான்.
தங்கள் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவள் இருந்தாள். காலையில் செல்வி பேசிய பேச்சுக்கள் ஏனோ நெருஞ்சி முள்ளாய் அவள் மனதைக் குத்திக் கொண்டே இருந்தது.
யோசனைகளுடன் சமைத்து முடித்தவள், மேற்கொண்டு செய்ய வேலைகள் எதுவும் இல்லாததால் படுத்தவள் அப்படியே தூங்கியும் போனாள்.
ஆறுமணிக்குள் சிவாவை வீட்டிற்கு வர சொல்லியிருந்தாள் அபர்ணா. ஆனால் அவன் வரவோ மணி எட்டாகியிருந்தது. பிரபாகரனிடம் கூடவே இருந்து ஓரளவிற்கு அனைத்தையும் புரிய வைத்திருந்தான். ஒரே நாளில் முடியாது என்று அவனுக்கும் தெரியும். முடிந்த அளவு சீக்கிரம் பேக்கரி பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு வந்தால் தான் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க முடியும் என்று நினைத்திருந்தான்.
வீட்டில் நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தெரிந்திருந்தாலும், எதுவும் தெரியாதவனைப் போல் இருந்து கொண்டான். வீட்டிற்கு வந்து மேலே செல்ல முற்பட்டவனை பிடித்துக் கொண்டார் கலையரசி.
“என்னாச்சும்மா?” என்றான்.
“சிவா சொல்றனேன்னு தப்பா நினைக்காதப்பா. தனி சமையல் எல்லாம் வேண்டாம். நீயாவது அபர்ணா கிட்ட சொல்லி புரிய வை சிவா” என்றார்.
“என்ன தனி சமையல்? நீங்க என்ன சொல்ல வர்றீங்க?” என்றான் சிவா.
“எதுக்கு அத்தை மென்னு முழுங்குறிங்க? உடைச்சு சொல்லுங்க, அவர் பொண்டாட்டியால தான் இந்த குடும்பம் ரெண்டாகிடுச்சுன்னு” என்றாள் செல்வி.
“அவங்களை அமைதியா இருக்க சொல்லுங்கம்மா! நேத்தே சொன்னேன்,என் அபியைப் பத்தி தப்பா பேச வேண்டாம்னு” என்றான்.
“தப்பா பேசணும்னு எங்களுக்கு வேண்டுதல் பாருங்க. கூட்டுக் குடும்பமா இருந்தா அவ இஷ்ட்டத்துக்கு ஆட முடியாது. அதனால அவளுக்குத் தோதா தனியா இருக்கணும்னு பார்க்குறா. நினைச்சா போறதும் வர்றதும், இதென்ன வீடா இல்லை சத்திரமா?” என்று செல்வி முடிக்கும் முன் கோபத்தில் இறுகப் பற்றிக் கொண்டிருந்த சேரைத் தூக்கி அடித்த அடியில் அது சில்லு சில்லாய் நொறுங்கியிருந்தது.
சரிதாவோ பயத்தில் நெஞ்சில் கைவைத்தபடி கண்ணை விரித்திருந்தாள். அப்போது தான் வந்த பிரபாகரன், அங்கு சிவா இருந்த இருப்பைக் கண்டு,
“என்னாச்சுடா சிவா?” என்றான் புரியாமல்.
“சித்தப்பா” என்று பிரபாகரனின் பிள்ளைகள் அழ ஆரம்பிக்க, தன்னைக் கட்டுப்படுத்தியவன்,
“ஒன்னும் இல்லைடா. நீங்க உள்ள போங்க” என்று பிள்ளைகளை அறைக்குள் அனுப்பி விட்டான்.
கலையரசியின் அருகில் வந்தவன்,”இங்க நடந்தது எல்லாமே எனக்குத் தெரியும்மா. அபியாவது தனியா சமைச்சுக்கிறேன்னு மட்டும் தான் சொன்னா. ஆனா இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க, நான் வேற வீடு பார்த்துட்டு இருக்கேன். இனியும் இங்க இருந்தா என்னை மாதிரி ஒரு மானங்கெட்டவன் இந்த ஊர்லையே இருக்க முடியாது. இன்னும் ஒரு வாரத்துல இங்க இருந்து கிளம்பிடுவேன்” என்ற மகனை அதிர்ந்து போய் பார்த்திருந்தார் கலையரசி.
பிரபாகரனிடம் திரும்பியவன்,”என் பொண்டாட்டியை தப்பா பேசுனா இனி அண்ணின்னு எல்லாம் பார்க்க மாட்டேன். சொல்லி வச்சுக்க” என்றவன் அதே ஆத்திரத்துடன் திரும்ப, அங்கே மாடிப் படியில் அவன் கோபத்தில் மிரண்டு போய் நின்றிருந்தாள் அபர்ணா.
காலையில் மூன்று மணிக்கு எழுந்து சென்ற பிரபா எப்போதடா எங்கு விழுவோம் என்று வீட்டிற்கு வர, இங்கு இந்த பிரச்சனை.
“அண்ணின்னு பார்க்காம இப்படி பேசுறார். நீங்களும் பார்த்துட்டு இருக்கீங்க?” என்ற செல்வியை வந்த ஆத்திரத்தில் ஓங்கி அறைந்திருந்தான் பிரபாகரன்.
“மனுஷன் அவனவன் போய் நிக்க நேரமில்லாம வேலை செஞ்சுட்டு வந்தா, தின்னுட்டு கொழுத்துப் போய் வம்பை இழுத்து வைக்கிறதே உனக்கு வேலையா போய்டுச்சுடி. நானும் எத்தனை நாள் தான் பொறுமையாவே போறது. மனுஷியாடி நீயெல்லாம்” என்று பிரபாகரன் கத்திய கத்தில் மிரண்டவளாய் அப்படியே வாயை மூடிக் கொண்டாள் செல்வி.
சிவாவோ அபர்ணாவை இழுக்காத குறையாய் இழுத்துக் கொண்டு மேலே சென்றிருந்தான். தூக்கக் கலக்கத்தில் இருக்கிறாள் என்று அவள் முகம் பார்த்தே தெரிந்தது அவனுக்கு.
மேலே வந்தவன் அவளிடம் எதுவும் பேசாமல் சென்று குளித்து வர, அதற்குள் அவளும் முகம் கழுவி தூக்கம் கலைந்திருந்தாள்.
அவள் சாப்பாடை எடுத்து வைக்க, அமைதியாய் சாப்பிட்டு முடித்தவன், அவள் சாப்பிடும் வரை பொறுமையாய் அமர்ந்திருந்தான்.
அவன் ஏதாவது கேட்பான் என்று அவள் எதிர்பார்க்க சிவாவோ எதுவும் கேட்கவுமில்லை, பேசவுமில்லை. சிறிது நேரம் நடை பயின்றவன் வழக்கம் போல் வெளியே பாயை விரித்து படுத்துவிட்டான்.
தூக்கக் கலக்கத்தில் சென்றாலும், செல்வி பேசிய அனைத்தையும் அவளும் கேட்டிருந்தாளே.
கண்களை கைகளைக் கொண்டு மூடி படுத்திருந்தவனுக்குள் அப்படி ஒரு போராட்டம்.
ஏற்கனவே தூங்கி அப்போது தான் எழுந்த அபர்ணாவிற்கு இனி தூக்கம் என்பது வருவதற்கு வாய்ப்பில்லை. அறைக்குள்ளேயே நடை பயின்றவளுக்கு மனமே ஆறவில்லை. எட்டி வெளியே பார்க்க, அவனோ அதே நிலையில் படுத்திருந்தான்.
சரியாக அதே நேரம் கபிலன் அழைக்க,
“அண்ணா” என்றாள் சற்று கலங்கிய குரலில்.
“என்னாச்சு அபர்ணா? ஈவ்னிங் சிவா கூப்பிட்டு வேற வீடு பார்க்குறதா சொன்னார். நல்ல வீடா இருந்தா சொல்லச் சொன்னாரு” என்றான் கபிலன்.
“நான் காலையில பேசுறேன்ண்ணா” என்றவள் வைத்துவிட்டாள். ஏனோ அவன் படுத்திருந்த தோற்றம் மனதைப் பிசைந்தது அவளுக்கு. அவனுக்கு அருகே செல்லச் சொல்லி உந்திய மனதை அடக்கும் வழியின்றி தவித்தவள், சிறு தயக்கத்துடன் தான் சென்றாள். அவனுக்கு அருகில் தானும் ஒரு பெட்ஷீட்டை விரித்தவள், தலையைனையை தொப்பென்று போட, அந்த சத்தத்தில் கண்களில் இருந்து கையை விலக்கியிருந்தான் சிவா. அவன் கண்களோ கன்றி சிவந்திருந்தது.
“உள்ள போய் படு அபி” என்றான் உணர்வற்ற குரலில்.
“இல்ல, உள்ள வெக்கையா இருக்கு. நானும் இங்கயே படுத்துக்கிறேன்” அவனை ஒட்டியே படுத்துக் கொண்டாள்.
“இத்தனை நாள் இல்லாத வெக்கை இன்னைக்கு மட்டும் என்ன?” என்றான் சிவா.
அவளோ பதில் எதுவும் பேசாமல் வானத்தைப் பார்த்து படுத்துவிட்டாள். மின்னும் நட்சத்திரங்களும், ஜொலித்த அரைநிலவும் வீசிய குளிர் காற்றும் அவளுக்கு சற்று இதத்தை தந்திருந்தது.
யோசனைகளை புறந்தள்ளியவள்,”என்னாச்சு சக்தி உங்களுக்கு? ஏன் என்கிட்ட எதையும் கேட்கலை?” என்றாள்.
“உனக்கே சொல்லத் தோணியிருந்தா சொல்லியிருப்ப தானே அபி. இல்ல இந்த ஒன்னுமில்லாதவன்கிட்ட சொல்லி மட்டும் என்ன ஆகப் போகுதுன்னு சொல்லாம விட்டுட்டியா?” என்றான் நிலவை வெறித்தபடி.
அவன் மனதில் இப்படி ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் என்று அறியாத அபர்ணா அதிர்ந்தபடி அவனைப் பார்க்க,
“சொல்லு அபி! அதனால தான் என்கிட்ட சொல்லனும்னு தோணலையா?” என்றான்.
“வெளிய வேலையா போயிருக்கவங்களை டென்ஷன் பண்ண வேண்டாம்ன்ற எண்ணமும் காரணமா இருக்கலாம் இல்லையா? மத்தபடி என் புருஷன் ஒன்னுமில்லாதவன்னு நான் என்னைக்கும் நினைச்சது இல்லை” என்றாள் சட்டென்று.
ஏனோ அதுவரை அவன் மனதிற்குள் அடக்கிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று உடைந்திருந்தது. சட்டென்று அருகில் படுத்திருந்தவளை இழுத்து அணைத்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான்.
சட்டென்று அணைப்பான் என்று எதிர்பார்க்காதவள், கழுத்து வளைவில் பட்ட ஈரத்தில் திகைத்து அது அவனின் கண்ணீர் என்பதையே பிறகு தான் உணர்ந்தாள். ஏனோ அவளுக்கும் கண்கள் கலங்க, அவள் அதை அடக்கும் முன்பே வெளிவந்திருந்தது.
“ச..சக்தி” என்றாள் மெதுவாய்.
“பிளீஸ் அபி..! பியூ மினிட்ஸ்” என்றவனின் குரல் கரகரத்திருந்தது. சில நிமிடங்கள் அவள் அருகாமையில் ஆறுதல் தேடியவன், கண்ணீர் வந்த தடமே தெரியாமல் விலகி வானத்தைப் பார்த்தபடி படுத்துவிட்டான்.
“லைப்ல நானே ஸ்டெடி ஆகாம கல்யாணம் பண்ணி இப்போ உன்னையும் சேர்த்து கஷ்ட்டப்படுத்துறேன் இல்ல அபி” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்று அவளுக்குப் புரியவில்லை.
“நான் அப்படி நினைக்கலை சக்தி” என்றாள்.
“பொய் சொல்லாத அபி. முதல் நாள் வரும் போது, இந்த ரூமைப் பார்த்து உன் முகத்துல வந்து போன உணர்வுக்கான அர்த்தம் எனக்கு அப்பவே புரிஞ்சது” என்றான் சிவா.
“நான் இல்லைன்னு சொல்லலையே? நான் அப்போ இருந்த மனநிலையில அப்படி நினைச்சது உண்மைதான். நான் இருக்குற இடம் தான் வசதி குறைவா இருக்கேன்னு நினைச்சேனே தவிர, உங்களை ஒரு நாளும் அப்படி நினைக்கலை” என்றாள்.
அவனோ பதிலின்றி அமைதியாய் இருக்க, அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ, நகர்ந்து அவன் நெஞ்சில் தலை வைத்து அணைத்தபடி படுத்துக் கொண்டாள். தானாக வந்து அணைத்தவளைப் பார்த்தவனின் கரங்கள் இயல்பாக அவளை வளைத்துக் கொண்டது.
“பார்த்துக்கலாம் சக்தி. எதைப் பத்தியும் யோசிக்காம தூங்குங்க. எல்லாம் சரியாகிடும்” என்றாள்.
“இனி எல்லாம் சரியா தான் நடக்கும் அபி. சரியா தான் நடக்கும்” என்றவனின் முகமும் கரமும் இறுக, அவளுக்கு சொன்னானோ இல்லையோ தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் சிவா.
அவன் கண்களில் தெளிவும் தீர்க்கமும் இப்போது இருந்தது.