அவளின் கோபத்தை குறைக்க வேண்டுமென்று தான் அவளை அணைத்திருந்தான் சிவா. ஆனால் உண்மையில் மனதிற்குள் அவனுக்குத்தான் அவ்வளவு கோபமும் ஏமாற்றமும் இருந்தது. அபர்ணா அதை வெளிக்காட்டி விட்டாள். சிவாவோ அதை மனதிற்குள் போட்டு அழுத்திக் கொண்டான். செல்வி அந்த மூன்று நாள் சம்பளக் கணக்கை பேசும் போதே அவன் உள்ளுக்குள் முற்றிலும் உடைந்து போயிருந்தான். ஏனோ தான் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டதை போன்ற உணர்வு அவனுக்குள் எழாமல் இல்லை.
அந்த இடத்தில் அபி தனக்காக இவ்வளவு பேசுவாள் என்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை. தனக்காக அவ்வளவு பேசி விட்டு, இங்கே வந்து பரிதவிப்புடன் நின்றவளைத் தான் அத்தனை நேரம் நிதானமாய் பார்த்திருந்தான். ஏனோ இப்போதெல்லாம் அவள் தன்னை மிகவும் ஈர்ப்பதைப் போன்ற எண்ணம் அவனுக்கு.
திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணம் முடிந்த பின்பு சில நாட்களும் சரி, எப்போதும் சோகமாய் அழுத முகத்துடனேயே பார்த்தவளை, இப்போது புதிதாய் பார்க்கிறான் சிவா. எதற்கெடுத்தாலும் அழுத அபர்ணா தான், இன்று இவ்வளவு நிதானமாய் யோசிக்கிறாள், பேசுகிறாள் என்பதே அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
திருமண விஷயத்தில் அவளுக்கு கிடைத்த ஏமாற்றம் தான் அவளை சில காலம் இயல்பில் இருந்து மாற்றியிருந்தது என்பதை அவனும் இப்போது உணர்ந்திருந்தான். சிவாவுடனான உறவை அவள் மனம் ஏற்றுக் கொண்டதா என்று அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால் இப்போது சிவாவிற்கு தேவையான அனைத்தையும் அவள் தான் செய்கிறாள். இதையெல்லாம் பிரியத்தில் செய்கிறாளா? இல்லை இயல்பாகவே இந்த உறவை ஏற்றுக் கொண்டாளா? என்று தான் தெரியவில்லை அவனுக்கு. அனால் ஒன்று இந்த ஒரு மாத காலத்தில் சிவாவின் வாழ்வில் முழுமுதற் அங்கமாகிப் போனாள் அபர்ணா.
அவளை அணைப்பில் வைத்துக் கொண்டே இந்த சிந்தனைகளில் இருந்தவனது அணைப்பின் இறுக்கம் அவன் சிந்தனைகளுக்குத் தகுந்து இறுகிக் கொண்டே போக, அபியால் ஒரு நிலைக்கு மேல் அந்த இறுக்கத்தைத் தாங்க முடியவில்லை.
“சக்தி வலிக்குது” என்றவளின் குரலில் தான் சட்டென்று நிதானத்திற்கு வந்து அவளை விடுவித்திருந்தான்.
“சாரி அபி” என்றவன்,
“டென்ஷன் குறைஞ்சிடுச்சா?இப்போ எப்படி இருக்கு?” என்றான்.
அவனை முறைத்தவள் “ம்ம்..!இறுக்கி கட்டி வச்சிருந்த கயித்தை அவுத்தா எப்படி இருக்கும்? அப்படி இருக்கு இப்போ எனக்கு? ஹக் பண்றேன்னு சொல்லி மொத்த எலும்பையும் உடைச்சுட்டிங்க” என்றாள்.
“சாரி அபி” என்றான்.
“நான் கீழ பேசுனதுல உங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லையே?” என்றாள் அவன் முகம் பார்த்து.
“வருத்தம் இருக்குன்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்?” என்றான் புருவத்தை உயர்த்தியபடி.
அவன் செய்கையில் பட்டென்று தன் பார்வையை மாற்றிக் கொண்டவள்,
“என் பொண்டாட்டி எனக்காக முத முறையா பேசியிருக்கா. இதுல வருத்தம் எங்க இருக்கு? சந்தோஷமாத்தான் இருக்கு” என்றான் ஒரு சிறு முறுவலுடன். சிவா தன்னை பொண்டாட்டி என்று கூறும் போதெல்லாம் அவளறியாமல் ஒரு உணர்வு மனதிற்குள் ஓடி மறைவைதை அவளும் உணர்ந்திருந்தாள்.
“அப்படியெல்லாம் இல்லை” என்றாள் வேண்டுமென்றே.
“அப்படியா? அப்போ யாரோ ஒருத்தவங்க ஈவ்னிங் நான் பேக்கரியில இல்லைன்னதும் டென்ஷன் ஆகி, கடுப்பா பேசிட்டு வந்தாங்களாமே? காபி கூட குடிக்கலையாம்? அது யாருன்னு தெரியுமா அபி உனக்கு?” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
‘போட்டுக் குடுத்துட்டானே மணி’ என்று பல்லைக் கடித்தவள்,
“அது ஈவ்னிங் இருந்தே சரியான தலைவலி அதான்” என்று பொய்யாய் சமாளித்தாள்.
“நம்பிட்டேன்” என்றவனை பார்க்க முடியாமல் எங்கெங்கோ பார்க்க,
“அபி பசிக்குது” என்று காதோரத்தில் கேட்ட குரலில் அவள் திடுமென் திரும்ப, அவளின் விரிந்த விழிகளைப் பார்த்தவன்,
“இவ்வளவு ரணகளத்துலயும் எனக்காக சமைச்சு வச்சியே. அதான் பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிடலாமா?” என்றவன் கேட்க, அப்போது தான் அவளுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. அவள் மூச்சில் ஏதோ புரிந்தவன்,
“நீ என்ன நினைச்ச?” என்றான் பொய்யான முறைப்புடன்.
“அதெல்லாம் ஒன்னும் நினைக்கலை” என்றவள், வேகமாய் அறைக்குள் ஓடி விட்டாள். சிகையைக் கோதிக் கொண்டவனின் முகத்திலும் ஒரு புன்னகை குடி கொண்டிருந்தது.
மறுநாள் அபி கூறியதைப் போல காலை எட்டு மணிக்கு மேல் தான் பேக்கரிக்கு கிளம்பிச் சென்றான் சிவா. அபிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அவள் பள்ளிக்கு செல்லவில்லை.
சிவா செல்லாததால் காலை மூன்று மணிக்கே எழுந்த பிரபாகரன் செல்வியையும் எழுப்பியிருக்க, அதில் தூக்கம் கெட்டவள் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன கடுப்பா இருக்கா? எனக்கும் தான் அப்படி இருக்கு? அதுக்கு என்ன செய்யலாம்? பேசாம பேக்கரியை வித்துடலாமா?” என்றான் பிரபாகரன்.
“நீங்க போறதுக்கு எதுக்கு என்னையும் சேர்த்து எழுப்புறிங்க?” என்றாள் கடுப்புடன்.
“ம்ம்..! இனிமேலும் நீ வெறும் வாயில முழம் போடக் கூடாதுன்னு தான். நான் ஒருத்தனே எத்தனை வேலையை செய்ய முடியும்? இந்த வாரம் வசூலுக்கு லைன்குள்ள போகணும். வீட்ல பகலெல்லாம் சும்மா தான இருக்க. ஒழுங்கா கடைக்கு வர்ற வழியைப் பாரு” என்று சொல்லி விட்டு சென்ற கணவனை தனக்கு சக்தியிருந்தால் எரித்திருப்பாள். அந்த அளவிற்கு கோபத்தில் பிரபாகரனை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
ஏற்கனவே கோபத்தில் இருந்த செல்விக்கு காலையில் குளித்து முடித்து புத்தம் புது மலராய் வந்து நின்ற அபர்ணாவைக் கண்டவுடம் ரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறியது .
“ஏன் சரிதா? ஒன்னுமில்லாதவனைக் கட்டுனதுக்கே இந்த ஆட்டம். இன்னும் நல்ல வேலையில இருக்குறவன், சொத்து பத்துன்னு இருக்குறவனையெல்லாம் கட்டியிருந்தா என்னென்ன ஆட்டமெல்லாம் ஆடியிருப்பாங்களோ என்னவோ?” என்றாள் செல்வி வேண்டுமென்றே ஜாடையாய்.
“அதெல்லாம் புரியறவங்களுக்குப் புரியும். என்னமோ இவ புருஷனை விட்டா எங்களுக்கு ஆளே இல்லாத மாதிரி அவ்வளவு பேச்சு. கூரை மேல சோத்தைப் போட்டா ஆயிரம் காக்கா. ஆனா பாரு, இருக்குற வேலையும் விட்டுட்டு சோத்துக்கு என்ன பண்ணுவாங்க..? அது சரி அதான் இங்க எல்லாம் வாங்கி போடுறோமே. நல்லா சமைச்சு தனக்குத் தானே கொட்டிக்கட்டும்” என்றவளின் பேச்சில் அபர்ணாவிற்கு முகம் இறுக, தேவையில்லாமல் கலங்கிய கண்களை கட்டுப் படுத்திக் கொண்டு உள்ளே சென்றாள்.
ஏற்கனவே கலையரசி சமைத்துக் கொண்டிருக்க, அங்கே வந்த அபர்ணாவைப் பார்த்தவர்,
“நான் சமைக்கிறேன் அபர்ணா. நேத்தே முடியலைன்னு சொன்ன. ரெண்டு நாள் தான லீவ் உனக்கு. வேற ஏதாவது வேலை இருந்தா பாருமா” என்றார் கலையரசி.
“வேலையெல்லாம் முடிச்சுட்டேன் அத்தை. இனி எங்களுக்கு சேர்த்து சமைக்க வேண்டாம். நான் எங்களுக்கு தனியா சமைச்சுக்கிறேன் அத்தை. உங்களுக்கும் மாமாவுக்கும் நானே செஞ்சுடுறேன். நீங்க ஏன் சிரமப் படுறிங்க?” என்றாள் அபர்ணா.
“தனியா சமைச்சுக்கிறியா?” என்ற கலையரசி அதிர்ந்தார். சரிதாவோ முதலுக்கே மோசம் வந்தவளைப் போல் பார்த்திருக்க, செல்விக்கோ கோபம் கண்ணை மறைத்தது.
“உனக்கு வேணும்னா நீ தனியா செஞ்சுக்கோ. அதென்ன அத்தைக்கும் மாமாவுக்கும் செய்றேன்னு சொல்றது. அவங்க எங்களுக்கு செஞ்சு குடுக்குறதையும் கெடுத்து விடணும். அது தான உன் நோக்கம்?” என்றாள் கோபமாய்.
“அப்படித்தான்னு சொன்னா என்ன செய்விங்க?” என்றாள் அபர்ணா நிதானமாய்.
“அதெல்லாம் வேண்டாம் அபர்ணா..! நேத்து நீ பேசுனதுக்கு நாங்க ஏதாவது சொன்னோமா? ஏன்னா அதுல ஒரு நியாயம் இருந்தது. ஆனா வீட்ல ரெண்டு உலை வைக்கிறது எல்லாம் சரியா வராதும்மா” என்றார் கலையரசி, செல்வி பேசியதை அறியாதவராய்.
“நேத்து வீட்டுக்கு மட்டுமில்லை, சாப்பிடுற சாப்பாட்டுக்கும் சேர்த்து தான் இவங்க கணக்கு பேசுனாங்க அத்தை. அது மட்டுமில்லாம நான் என்னோட புருஷனுக்கும் அவரைப் பெத்தவங்களுக்கும் தான் சமைக்க முடியும். மத்தவங்களுக்கு வடிச்சுக் கொட்டனும்னு எனக்கென்ன தலையெழுத்து?” என்றாள் அபர்ணா.
‘ஆத்தி இவ லேசுப்பட்டவ இல்லை போலயே?’ என்று நெஞ்சில் கை வைத்த சரிதா,
“அக்கா அப்போ இனி அடுப்படி வேலையும் நாம தான் பார்க்கனுமா?” என்றாள் செல்வியிடம்.
“மேல் வீட்டுக்குத் தான வாடகை கணக்கு பேசுன? அப்போ கீழ வந்து இந்த கிட்சனை எந்த உரிமையில புழங்குவ?” என்றாள் செல்வி.
“செல்வி பேசாம இரும்மா” என்றார் கலையரசி.
“நான் கேட்குறது நியாயம் தான அத்தை. இங்க இருக்குறது நானும் சரிதாவும் சீதனமா கொண்டு வந்தது. ரோஷம் இருக்குறவங்க இங்க இருக்குற எதையும் தொடமாட்டாங்க” என்றாள் செல்வி பட்டென்று.
“நல்லது” என்றபடி மேலே சென்றவள்,சென்ற வேகத்தில் கிளம்பி கீழே வந்தாள். அவளைப் பார்த்தும் பார்க்காததும் போல் இருந்தனர் சரிதாவும் செல்வியும்.
“இப்போ எங்கக்கா போறா? இருந்தாலும் நேத்தும் இப்பவும் நீங்க கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டிங்க. இப்போ நஷ்ட்டம் யாருக்கு பாருங்க. அவ புருஷனை உங்க கடைக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டா. ஏதோ அவ புண்ணியத்துல வாய்க்கு ருசியா இந்த ஒரு மாசமும் சாப்பாடு கிடைச்சது. இப்போ அதுவும் இல்லைன்னு ஆகிப் போச்சு” என்ற சரிதாவை எரிச்சலுடன் பார்த்தாள் செல்வி.
“நேத்து வந்தவ இவளுக்கு இவ்வளவு திமிரு இருக்கும் போது, இந்த வீட்டுக்கு மூத்த மருமக நானு. எனக்கு எவ்வளவு இருக்காது. இனிமேல் இவ புருஷனுக்கு என்ன கலெக்டர் உத்தியோகமா கிடைக்கும். பார்க்கத்தான போறேன்? அப்படி என்ன வாழ்ந்து கிழிக்கப் போறாங்கன்னு” என்றாள் செல்வி.
“சிவாவைப் பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுறது ஆச்சர்யமா இருக்கு செல்வியக்கா. உங்க பேக்கரி இந்த நிலைமைக்கு இருக்குறதுக்கு முக்கிய காரணமே அவர் தான். இந்த உண்மையை நீங்க ஏத்துக்கத் தான் வேணும். அவர் வெளிய போறாதால உங்களுக்குத் தான் நட்டம். அவருக்கில்லை” என்றாள் சரிதா.
“இப்போ நீ யாரு பக்கம் பேசுற சரிதா?” என்றாள் செல்வி கோபமாய்.
“அய்யோ அக்கா, நான் உண்மையைத் தான் சொன்னேன்” என்றவள்,
“என்னக்கா திரும்பி வர்றா?” என்றாள் முனுமுனுப்பாய்.
கலையரசியிடம் வந்த அபர்ணா, “அத்தை நான் அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்” என்றாள்.
“உன் இஷ்ட்டம்மா..! ஆனா ஒன்னு அபர்ணா, நீ பொறுமையான பொண்ணு. இந்த குடும்பத்தை கலைக்க மாட்டேன்னு நினைச்சேன்” என்றார் கலையரசி.
“உங்க குடும்பம் எப்போ ஒண்ணா இருந்தது, இப்போ நான் வந்து கலைக்க. ஏற்கனவே அப்படித்தான் இருந்தது அத்தை” என்றாள் அபர்ணா.
“தெரியுதுமா..! அதுக்காக குடும்பத்துக்குள்ள நீ பெருசா நான் பெருசான்னு பேசிட்டே போனா, மனக்ககசப்பு தான் மிஞ்சும். சில இடத்துல பொறுமையா போறது தப்பில்லையே?” என்றார் கலையரசி.
“அப்போ உங்க பையனுக்கு என்னைக் கட்டி வச்சிருக்கக் கூடாது. மண்ணைத் தான் கட்டி வச்சிருக்கணும். எனக்குன்னா மட்டும் பத்து பக்கத்துக்கு பேசுறிங்க. உங்க மூத்த மருமகளுங்கன்னா மட்டும் அப்படியே அடங்கிடுறிங்க. நல்ல நியாயம் அத்தை உங்க நியாயம்” என்றாள் அபர்ணா செல்வி மேல் இருந்த கோபத்தில் அவரிடம் காய்ந்தாள்.
“அபர்ணா நான் அப்படி பாரபட்சம் எல்லாம் பார்க்கறது இல்லை” என்றார் கலையரசி.
கலையரசியை நிதானமாய் பார்த்த அபர்ணா,
“ஒரு விஷயம் சொல்லவா அத்தை. உங்களுக்கு சக்தியை அடங்கிப் போக சொல்லியே பழகிடுச்சு. அதாவது உங்க பேச்சை கேட்குறவங்களை மட்டும் தான் நீங்க வச்சு செய்றிங்க. அவர் விஷயத்துல அது தான் நடந்தது. உங்க மூத்த மருமகளுங்க குணமும் உங்களுக்குத் தெரியும். அதனால கொஞ்சம் வாய் பேசாம அடங்கிப் போற பொண்ணா பார்த்திருப்பிங்க. அன்னம் அத்தை வீட்டுக்கு மருமகளா போக முடியாததால நான் வேதனையில இருப்பேன். அந்த நேரத்துல உங்க பையனைக் கட்டினா, எது நடந்தாலும் அமைதியா போய்டுவேன்னு நீங்க நினைச்சிருக்கிங்க. அதாவது சக்திக்கு ஏத்த பொண்டாட்டியா. இப்போ அது நடக்கலை. உடனே குடும்பம் பிரியுது அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க. தப்பு எல்லாமே உங்க மேல தான். ஆரம்பத்துல இருந்து நீங்க சரியா இருந்திருக்கனும். அதை விட்டுட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா ஒன்னும் செய்ய முடியாது” என்றவள் கிளம்பிவிட்டாள்.
பேக்கரி பொருட்களை எடுக்க செட்டின் சாவியை வாங்க வந்த மணிக்கு பேச்சு வார்த்தைகள் அனைத்தும் காதில் விழ, அது நேராக சிவாவின் காதுகளுக்கு சென்றிருந்தது. அபர்ணா தன்னை அழைத்து நடந்ததை கூறுவாள் என்று சிவா எதிர்பார்க்க, அவளோ அவனுக்கு அழைக்கவேயில்லை.