அத்தியாயம் 14

மறுநாள் எழும் போதே ஒரு தெளிவான மனநிலையுடன் தான் எழுந்திருந்தாள் அபர்ணா.  அவளை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. நேற்று சிவாவிடம் தான் நடந்து கொண்டதை எண்ணி ஒரு பக்கம் என்னவோ போல் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவனால் தான் இந்த அளவிற்கு தெளிந்திருக்கிறோம் என்று நிம்மதியாகத் தான் இருந்தது அவளுக்கு. கிளம்பும் போதே ஒரு மகிழ்ச்சியான மனநிலையுடன் தான் கிளம்பினாள்.

இளம் தளிர் பச்சை நிற காட்டன் புடவையும், தளரப் பின்னிய கூந்தலும் அன்று அவளை தனித்துவமாய் காட்டியது. சீக்கிரமே கிளம்பி கீழே வந்தவளை ‘ஆ’ வென்று பார்த்திருந்தாள் செல்வி.

“இவ என்னக்கா? நேத்து என்னமோ பேயறைஞ்சவ மாதிரி போனா? இன்னைக்கு ஜம்முன்னு வந்து நிக்கிறா?” என்றாள் சரிதா.

அவர்களை கண்டு கொள்ளாமல் வழக்கம் போல் சமையல்அறைக்குள் செல்ல, அங்கும் வழமை போல் கலையரசி தான் சமைத்துக் கொண்டிருந்தார்.

“இன்னைக்கு அழகா இருக்க அபர்ணா” என்றார் மருமகளைப் பார்த்து.

“தேங்க்ஸ் அத்தை” என்றவள், மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அங்கிருந்த வேலைகளை செய்ய, கலையரசிக்கு என்னவோ போல் ஆனது.

“என்மேல ஏதாவது கோபமா அபர்ணா?” என்றார்.

அவரை ஆச்சர்யமாகப் பார்த்தவள்,”இல்லையே? ஏன் அத்தை அப்படி கேட்குறிங்க?” என்றாள்.

“இல்ல, எப்பவும் கீழ வந்தா ஏதாவது பேசிட்டே இருப்ப. இன்னைக்கு அமைதியா இருக்கியே அதான் கேட்டேன்” என்றார் கலையரசி.

“நான் என்ன கேட்டாலும், டெய்லி நீங்க தான் சமைக்கிறிங்க. அதான் கேட்டு என்ன ஆகப் போகுதுன்னு விட்டுட்டேன்” என்றவளைப் பார்த்தவர் திகைத்து நிற்க,

“எண்ணெய் காய்ஞ்சுடுச்சு அத்தை, விலகுங்க” என்றவள் தாளித்து அதை சட்டினியில் ஊற்றியிருந்தாள்.

அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவள் சமையலை வேக வேகமாய் செய்ய,

“நான் செய்றேன் அபர்ணா. நீ குளிச்சு ரெடியாகிட்டமா” என்றார்.

“இருக்கட்டும் அத்தை. என்னால முடிஞ்சா நான் செய்வேன். முடியலைன்னா சொல்லிடுவேன்” என்றவள் வேகமாய் சமைத்து முடித்திருந்தாள்.

“இவ என்னக்கா? டிப்டாப்பா கிளம்பி வந்து கொஞ்சம் கூட அலுத்துக்காம சமைச்சுட்டு இருக்கா. அடுப்படியில இருக்குற கசகசப்பே இல்லையே. குக்கிங் வீடியோ போடுறவங்க சமைக்கிற மாதிரி சமைச்சுட்டு இருக்கா?” என்றாள் சரிதா ஆச்சர்யமாய்.

“எத்தனை நாளைக்கு? எப்படி சமைச்சா என்ன? நமக்கு வேலை வைக்காத வரைக்கும் சந்தோசம் தான்” என்றாள் செல்வி.

“தனக்கு மதிய உணவைக் கட்டிக் கொண்டவள்,

“அத்தை டிபன் கேரியர் இருந்தா குடுங்க” என்றாள்.

கலையரசி ஒரு புரியாத பாவனையுடன் எடுத்துக் கொடுக்க, அதிலும் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டிருந்தாள்.

“எதுக்கு அபர்ணா ரெண்டு லஞ்ச் பாக்ஸ். ரெண்டு நேரம் சாப்பிடுவியா என்ன?” என்றாள் செல்வி.

“ஏன் சாப்பிட்டா என்ன தப்பு? மனுஷன் வேலை செய்றதே வயிறார சாப்பிடனும்னு தானக்கா” என்றவள்,

“இது எனக்கில்லை, சக்திக்கு” என்றாள்.

“இதென்ன புது பழக்கம்? சிவாவுக்கு இப்படி எடுத்துட்டு போய் சாப்பிட்டு பழக்கமில்லை” என்றாள் சரிதா.

“எடுத்துட்டு போய் பழக்கமில்லையா? இல்லை எடுத்துக் குடுத்துவிட ஆள் இல்லையா?” என்று பட்டென்று கேட்டவள்,

“இனி பழகிக்கட்டும். நான் வர்றேன் அத்தை” என்றவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். பார்த்திருந்த கலையரசிக்குத் தான் என்னவோ போல் ஆனது. முதல் நாள் அவள் கேட்ட கேள்வியும், இப்போது அவள் கேட்ட வார்த்தைகளும் கலையரசிக்கு நெற்றிப் பொட்டில் அடித்தார் போல் இருந்தது.

பேக்கரியில் காலை  நேரக் கூட்டம் அதிகமிருக்க, வேலை செய்ய ஆட்கள் இருந்தாலும் தானும் சேர்ந்து பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தான் சிவா. அவள் வருவதற்கு இன்னமும் நேரம் இருக்கிறது என்று எண்ணியவன், வேலையில் கவனமாய் இருக்க,

“அண்ணா அண்ணின்னா” என்றான் மணி.

“என்னடா சொல்ற? இன்னும் டைம் இருக்கே” என்று வேகமாய் வெளியே வந்தான்.

‘நேற்று போல் இன்றும் திரும்பிப் பார்க்காமல் சென்று விடுவாள்’ என்று அவன் நினைத்திருக்க, பேக்கரியின் முன் வண்டியை நிறுத்தியவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.

“என்னாச்சு அபி? நீ ஓகே தான?” என்றான் வேகமாய்.

“ஏன் எதுவும் பிரச்சனைன்னா தான் வரணுமா என்ன?”என்றாள் அபர்ணா.

“இல்ல, திரும்பிப் பார்க்கவே நேரம் இல்லாதவங்க, நேர்ல வந்தா எப்படியிருக்கும்? அதான் கேட்டேன்” என்றான் சிறு சிரிப்புடன்.

“நான் திரும்பி பார்க்கனும்னு எதிர்பார்த்திங்க போல?” என்றாள் அவளும் சிரிப்புடன்.

“எல்லார்கிட்டயும் எதிர்பார்க்க முடியுமா என்ன?” என்றான்.

அவளோ பேச்சின்றி நிற்க,

“என்ன குடிக்கிற? டீயா, காபியா?” என்றான்.

“எதுவும் வேண்டாம்” என்றாள்.

“அதான் இன்னும் டைம் இருக்கே” என்றவன் அவளை வற்புறுத்தி அமர வைத்தான்.

“என்ன நடக்குது இங்க?” என்று முறைத்தபடி வந்து நின்றாள் காயத்ரி.

“ஹேய் காயு? நீ எப்படி இங்க?” என்றாள் அபர்ணா.

“அதைத்தான்டி நானும் கேட்குறேன்? நீ எங்க இங்க? நேத்து ஈவ்னிங் காபி குடிச்சுட்டு போலாம்னு சொன்னதுக்கு ரொம்ப பிகு பண்ண? இன்னைக்கு காலையிலேயே வந்து உட்கார்ந்திருக்க? ஆட்டோல வரும் போது உன்னைப் பார்த்துட்டு தான் இறங்கி வர்றேன்” என்றாள் காயத்ரி.

“காபி குடிக்கவெல்லாம் வரலை காயு. நான் இவங்களைப் பார்க்க தான் வந்தேன். இவங்க தான் காபி குடிச்சே ஆகணும்னு நிறுத்தி வச்சிருக்காங்க” என்றாள்.

“அண்ணா எனக்கு?” என்றாள் காயத்ரி.

“ஆல்ரெடி சொல்லிட்டேன்மா” என்றான் சிரிப்புடன். அவர்களுக்கான காபியை மணி எடுத்து வந்திருந்தான்.

“அண்ணி டெய்லி இப்படி ஒரு அட்டனென்ஸ் போட்டுட்டு போங்களேன். நீங்க வண்டியில போகும் போது பார்ப்பிங்களா மாட்டிங்களான்னு அண்ணனும் உங்களைப் பார்த்துட்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றான் சிரிப்பை அடக்கி.

“டேய் அடங்குடா” என்றவன்,அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.

“என்ன அபூ? காலையிலேயே டாலடிக்கிற?” என்றாள் காயத்ரி.

“ஹேய் நான் எப்பவும் போலத்தான் வந்திருக்கேன்டி” என்றவளுக்கு,

‘அப்படித்தான் இருக்கோமோ?’ என்ற எண்ணமும் தோன்றியிருந்தது.

காபியை குடித்து முடித்தவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து சிவாவைத் தேட, அவளின் தேடல் உணர்ந்தவன் வேகமாய் அவள் அருகில் வந்திருந்தான்.

“இதுல லஞ்ச் இருக்கு. மறக்காம சாப்பிட்டிருங்க” என்று கையில் ஒரு லஞ்ச் பேக்கை திணித்திருந்தாள். சிவா ஆச்சர்யமாய் பார்க்க,

“டைம் ஆச்சு. கிளம்புறோம்ங்க” என்றவள், இடத்தை காலி செய்திருந்தாள்.

“என்னண்ணா? வீட்ல இருந்து புதுசா சாப்பாடெல்லாம் வருது. இதுக்குத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்களோ?” என்றான் மணி. சிரித்துக் கொண்டான் சிவா.

“என்ன அபூ? சிவா அண்ணாவுக்கு சாப்பாடெல்லாம் எடுத்துட்டு வந்து தர்ற? என்ன விஷயம்?” என்றாள் காயத்ரி.

“அவங்க, வீட்ல சாப்பிடுறாங்களான்னே தெரியலை காயு. நைட் ஒரு நேரம் தான் வீட்ல சாப்பிடுற மாதிரி தெரியுது. அதுவும் இருக்குறதை. இத்தனை நாள் இதை கவனிக்காம விட்டுட்டோமேன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு” என்றாள்.

“புது இடம். அங்க இருக்குற பழக்க வழக்கம் எதுவும் உனக்குத் தெரியாது தானே அபி. இதுல நீ கில்ட்டியா பீல் பண்ண ஒண்ணுமே இல்லை. இனி பார்த்துக்கோ, அவ்வளவு தான்” என்றாள் காயத்ரி.

அன்று முழுவதும் அவள் ஏதோ ஒரு நிறைவை உணர்ந்தாள். இத்தனை நாள் மனதில் அழுத்திய எந்த உணர்வும் அன்று இல்லாததைப் போல் தோன்றியது அவளுக்கு.

மாலை பள்ளி முடிந்து திரும்பி வரும் போதும், அவளை நிறுத்தி ஸ்ட்ராங்கான ஒரு காபியை குடிக்க வைத்தே அனுப்பியிருந்தான் சிவா.

அதற்கடுத்து வந்த நாட்கள் இதுவே தொடர் கதையானது. அபர்ணா காலையில் அவனுக்கு சமைத்து எடுத்து வருவதும், மாலையில் மீண்டும் பேக்கரிக்கு வந்து விட்டு செல்வதும் என்று வாடிக்கையானது. ஆனால் இந்த ஒருவாரமாக அவன் நினைத்த மாதிரி சரியான நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியவில்லை. விசேஷ ஆர்டர்கள் என்று அடுத்தடுத்து வேலை இருந்து கொண்டே இருக்க, வீட்டிற்கு செல்லவே பன்னிரெண்டு மணியைத் தொட்டுவிடும். அவனிடம் ஒரு அளவிற்கு மேல் பேச அவளுக்கும் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.

திருமணம் முடிந்து கடைக்கு செல்ல ஆரம்பித்தவன் ஒரு நாள் கூட ஓய்வின்றி ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளுக்குத் தான் அதிர்ச்சியாக இருந்தது. அதைப் பற்றி அவனிடம் பேசி அவன் ஏதும் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்ற எண்ணமும் இருந்தது.

அன்று வழக்கம் போல் பள்ளி முடிந்து வெளியே வந்தவளுக்கு ஏனோ தலைவலி தாங்க முடியவில்லை. அன்று முழுவதும் இடைவிடாது வகுப்புகள் இருக்க, அவள் தொண்டையெல்லாம் வலி எடுத்திருந்தது. காயத்ரியும் அன்று பள்ளிக்கு விடுப்பு எடுத்திருக்க, தான் மட்டும் கிளம்பியிருந்தாள்.

‘சனி, ஞாயிறு ரெண்டு நாளும் நல்லா ரெஸ்ட் எடுக்கணும். பேசாம அம்மா வீட்டுக்கு போய்டுவோமா?’ என்று யோசித்தபடியே வண்டியை எடுத்துக் கொண்டு வந்தவள்,அங்கு மாதவன் நிற்பதைக் கண்டதும் யோசித்தாள்.

‘எதுக்கு வம்பு?’ என்று எண்ணியவள், ஒரு தயக்கத்துடன் அவனைக் கடந்து சென்றாள்.

“அபர்ணா” என்று அழைத்தவனின் குரல் காதில் விழாதவள் போல் சென்றிருக்க,

‘ஒருவேளை அபர்ணா நம்மளை கவனிக்கலையோ?’ என்றவன் வேகமாய் அவள் பின்னால் சென்று அவள் வண்டியை மறைத்தார் போல் நிறுத்தினான்.

அவனின் செயலில் அதிர்ந்தவள்,

“மாமா” என்றாள் அதே அதிர்வுடன்.

“என்னை கவனிக்கலையா? இல்லை கவனிக்காத மாதிரி போக ட்ரை பண்றியா அபர்ணா? அந்த அளவுக்கு நான் வேண்டாதவன் ஆகிட்டேனா?” என்றான் மாதவன்.

“அப்படியெல்லாம் இல்ல மாமா. நிஜமாவே கவனிக்கலை” என்றாள் பொய்யாய்.

“சாரி அபர்ணா. அப்பா பேசினதை அம்மா சொன்னாங்க. அவர் அப்படி பேசினது தப்புத்தான். சாரி கேட்கனும்னு நினச்சுட்டே இருந்தேன். இன்னைக்குத் தான் இந்த பக்கம் வேலையா வந்தேன்” என்றான்.

“இருக்கட்டும் மாமா? இப்போ இதைப் பார்த்துட்டும் எதுவும் சொல்லாம இருந்தா சரித்தான். அப்போ நான் கிளம்புறேன் மாமா” என்றாள்.

“முன்னாடி நானே கிளம்ப சொன்னாலும் கிளம்ப மாட்ட. இப்போ பேசக் கூட கூலி கேட்குற அபர்ணா?” என்றான் மாதவன்.

“பழசெல்லாம் எதுக்கு மாமா. யாராவது முட்டாளா இருந்த நாளையெல்லாம் மனசுல வச்சிருப்பாங்களா என்ன? அது மட்டுமில்லாம முன்னாடி நான் வெறும் அபர்ணா மட்டும் தான். ஆனா இப்போ அபர்ணா சிவ சக்தி. அதை நீங்களும் மறந்துடாதிங்க மாமா. நான் வர்றேன்” என்றவள் கிளம்பிவிட்டாள். ஏற்கனவே இருந்த தலைவலியோடு இந்த தலைவலியும் சேர்ந்து கொள்ள, பேக்கரியில் வண்டியை நிறுத்தி விட்டாள் வழக்கம் போல். ஆனால் சிவாவைத் தான் காணவில்லை.

“எங்க மணி அவங்களைக் காணோம்?” என்றாள்.

“ஒரு ஆர்டர் விஷயமா வெளிய போயிருக்கார் அண்ணி. காபி எடுத்துட்டு வரட்டுமா?” என்றான் மணி.

“ஒன்னும் வேண்டாம்” என்று கடுப்புடன் கூறியவள் எரிச்சலுடன் எழுந்து சென்று விட்டாள்.

வீட்டிற்கு வந்தவள், முகம் கழுவி விட்டு காபி போடலாம் என்று வர, அங்கு சமையலறை இருந்த இருப்பைப் பார்த்தவளுக்கு ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது. சிங்க் முழுவதும் பாத்திரமும், துடைக்காத அடுப்பும் கந்தரகோலமாய் கிடந்த அடுப்பு மேடையும் அவளின் ஆத்திரத்தைக் கூட்டியது.

அதே ஆத்திரத்துடன் வெளியே வந்தவள், அப்போது தான் கலையரசியும் நடராஜனும் வெளியில் இருந்து வருவதைப் பார்த்தாள்.

“வந்துட்டியா அபர்ணா. தெரிஞ்சவங்க வீட்டு விசேஷம். மதுரை வரைக்கும் போயிட்டு அப்படியே மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் போயிட்டு வந்தோம்மா” என்றவர்கள் ஆசுவாசமாய் அமர, அவர்களிடம் கோபத்தைக் காட்டி பலனில்லை என்று உணர்ந்து கொண்டாள்.

“காபி போடணுமா அத்தை?” என்றாள்.

“குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்மா” என்றவுடன், முகத்தில் எதையும் காட்டாமல்  முடிந்த அளவு அடுப்பையும் மேடையையும் துடைத்தவள், பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் அபர்ணா வந்துட்டியா? அப்படியே எனக்கும் சேர்த்து காபி போடேன்” என்றாள் செல்வி. வந்த கோபத்தை அடக்கியவள்,

“ம்ம்” என்றாள்.

தண்ணீர் குடிக்க உள்ளே வந்த கலையரசியும் சமையல் அறையின் லட்சணத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றார்.

“என்னமா போட்டது எல்லாம் போட்டபடி கிடக்கு?” என்றார்.

“அதைத் தான் நானும் கேட்குறேன் அத்தை” என்றாள் அபர்ணா.

“செல்வி நான் சொல்லிட்டு தான போனேன். வீட்ல  ரெண்டு பேர் இருக்கீங்க. இதைக் கூட செய்யக் கூடாதா? பகலெல்லாம் அந்த செல்லும் கையுமாத்தான் இருக்கீங்க? ஒரு வேலை செய்யறது கிடையாது” என்று கலையரசி குரலை உயர்த்தியிருந்தார்.

“நானும் ஒன்னும் சும்மா இல்லத்தை. இன்னைக்கு பசங்க ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங். கிளம்பி போயிட்டு வர லேட் ஆகிடுச்சு. அப்பறம் சரிதா காலையில இருந்தே உடம்புக்கு முடியலைன்னு சொன்னா. இப்ப என்ன நானே பண்றேன்” என்றாள் செல்வியும் குரலை உயர்த்தியபடி.

அபர்ணாவோ எதுவும் பேசாமல் காபி டம்ளரை அவர்களிடத்தில் கொடுத்தவள் தனக்கும் எடுத்துக் கொண்டு வர, சரியாக அந்த நேரத்திற்கு வெளியே வந்த சரிதா,

“முடியாதவளுக்கு ஒரு காபி குடுக்க தோணுதா இங்க யாருக்காவது?” என்றாள்.

பல்லைக் கடித்த அபர்ணா,”இந்தாங்க குடிங்க” என்று தன் டம்ளரை அவளிடம் கொடுத்து விட்டு சென்றாள்.

“அபர்ணா இங்க வாம்மா..! முதல்ல நீ இதைக் குடி” என்றார் கலையரசி பொறுக்க மாட்டாமல்.

“நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த நடராஜனுக்கும் மனம் பொறுக்கவில்லை. வாயைத் திறந்தால் செல்வி அதை வைத்து பெரிய பஞ்சாயத்தை கூட்டுவாள் என்று அவருக்குத் தெரியும். அதனால் பேசாமல் எழுந்து உள்ளே சென்று விட்டார். உள்ளே சென்றவர் உள்ளிருந்து மனைவிக்கு குரல் கொடுக்க, வேகமாய் சென்றார் கலையரசி.

“அந்த பொண்ணு ஸ்கூலுக்கும் போயிட்டு வந்து வீட்லயும் அத்தனை வேலை செய்யுது. என்ன பண்ணிட்டு இருக்கீங்க மூணு பேரும். நானும் அடுப்படி விஷயத்துல தலையிடக் கூடாதுன்னு பொறுமையா போறேன். எனக்கே பொறுமை போகுது. அந்த பொண்ணுக்கு எப்போ பொறுமை போகும்னு சொல்ல முடியாது, சொல்லி வை உன் மூத்த மருமகளுக கிட்ட” என்றார் வெளியே கேட்கும் படி.

“அம்மா தாயே ஒரு காபி போட்டுக் குடுத்துட்டு எங்களுக்கு பேச்சு வாங்கி விடுறது தான் உன் நோக்கமா? பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுற மாதிரி?” என்றாள் செல்வி.

அவள் பேச்சை அபர்ணா காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

“நைட்டுக்கு என்னத்தை செய்யணும்?” என்றாள் உணர்வற்ற குரலில்.

“எதுவும் செய்ய வேண்டாம்மா. உன் முகத்தைப் பார்த்தாலே நீ அசதியா இருக்குறது தெரியுது. இன்னைக்கு ஒரு நாள் வெளிய வாங்கிக்கலாம்” என்றார் கலையரசி.

“மத்தவங்களுக்கு வெளிய வாங்கிக்கோங்க அத்தை. எனக்கும் சக்திக்கும் நான் சமைச்சுக்கிறேன்” என்றவள் யாரையும் எதிர்பார்க்காமல் ஒரு கோபத்துடன் சென்று சமைத்துக் கொண்டிருந்தாள்.

“சமைக்கிறது தான் சமைக்கிறா. அப்போ எல்லாருக்கும் சேர்த்தே செய்யலாம்ல” என்றாள் சரிதா செல்வியிடம்.

அபர்ணா செய்து கொண்டிருந்த பன்னீர் பட்டர் மசாலாவின் வாசனை வேறு தூக்கியது. சப்பாத்தியை போட்டு எடுத்தவள், அனைத்தையும் ஹாட் பாக்ஸில் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

எப்படியும் சேர்த்தே சமைப்பாள் என்று எண்ணிக் கொண்டிருந்த செல்வியும், சரிதாவும் இப்போது முழித்துக் கொண்டு நின்றனர்.

“உங்களுக்கும் மாமாவுக்கும் எடுத்து வச்சிருக்கேன் அத்தை. சாப்பிடுறதுன்னா சாப்பிட்டுக்கோங்க. நாங்க மேலயே சாப்பிட்டுக்கிறோம்” என்றவள் யாரையும் சட்டை செய்யாமல் சென்று விட்டாள்.

மேலே வந்தவள் அப்படியே படுத்துவிட, எட்டுமணி வரை நல்ல உறக்கம் அவளுக்கு. தலைவலி கொஞ்சம் மட்டுப் பட்டதைப் போல் இருந்தது. முகத்தை கழுவியவளுக்கு, மாடியில் வீசிய அந்த இரவு நேரக் காற்று கொஞ்சம் இதத்தை தந்திருந்தது.

அப்படியே மெதுவாய் நடைபயின்று கொண்டிருந்தவள், தண்ணீர் பிடிக்க பாட்டிலை எடுத்துக் கொண்டு கீழே வர, சரியாக சிவாவும் அந்த நேரத்திற்கு வந்திருந்தான்.

‘என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டாங்க?’ என்று எண்ணியவள் அப்போது தான் கவனித்தாள் அவன் மிகவும் சோர்வுடன் இருப்பதை. அவன் கைகளில் இருந்த பார்சலே சொல்லியது அவன் சீக்கிரம் வந்ததற்கான காரணத்தை.

அந்த களைப்பிலும் மனைவியைப் பார்த்து ஒரு மென்னகை பூத்தவன், வாங்கி வந்திருந்த சாப்பாட்டு பார்சல்களை டைனிங் டேபிள் மேல் வைத்தபடி ஆசுவாசமாய் அமர்ந்துவிட்டான்.

“என்ன சிவா லேட் பண்ணிட்ட? பாரு குழந்தைங்க பசிக்குதுன்னு ஒரே அடம்” என்றபடி பிரபாகரனும் வந்து அமர, சத்திய சீலனும் வந்திருந்தான்.

“நீ எப்போ சத்யா வந்த?” என்றான் பிரபா.

“இப்போதான்ண்ணா..! அரைமணி நேரம் ஆச்சு” என்றான்.

“சீக்கிரம் வச்சுக் குடு செல்வி. பசங்க பசி தாங்க மாட்டாங்கன்னு தெரியாதா உனக்கு?” என்றான் பிரபா சற்று கோபமாய்.

“வச்சுகிட்டு தான இருக்கேன். எனக்கு ரெண்டு கை தான் இருக்கு” என்றாள் கடுப்புடன்.

“பசங்களுக்கு பசிக்குதுன்னா ஏதாவது செஞ்சு குடுத்திருக்கலாமே அண்ணி” என்றான் சிவா.

“முடியாமத்தான் வாங்கிட்டு வரச் சொன்னதே கொழுந்தனாரே” என்றாள் செல்வி இடக்காக.

“சரிதா குழந்தையை என்கிட்ட அனுப்பு. நான் அவளுக்கு ஊட்டுறேன்” என்றார் கலையரசி.

“நானே ஊட்டிக்கிறேன் அத்தை” என்றாள் முகத்தைத் தூக்கிக் கொண்டு.

“என்னாச்சு? ஏன் எல்லாரும் மூஞ்சியை தூக்கி வச்சுட்டு இருக்கீங்க?” என்ற பிரபா,

“ஹேய் செல்வி..! சிவாவுக்கும் தட்டு வைடி. இனி அவன் தனியா சாப்பிடுவானா?” என்றான்.

“அதெல்லாம் அவங்க வீட்டம்மா தனியா அவங்களுக்கு மட்டும் சமைச்சு எடுத்துட்டு போயாச்சு” என்றாள் பட்டென்று.

சிவா மனைவியை யோசனையுடன் பார்த்திருந்தான். வாட்டர் பாட்டிலுடன் எதுவும் பேசாமல் சென்றவளை,

“இதென்னப்பா அபர்ணா புதுப் பழக்கம்? உங்களுக்கு மட்டும் தனியா சமைக்கிறது. பசங்க பசி தாங்க மாட்டாங்கன்னு தெரியாதாப்பா?” என்றான் பிரபாகரன்.

“நான் மட்டும் சமைச்சா எங்களுக்கு மட்டும் தான் சமைக்க முடியும் மாமா” என்றாள் பட்டென்று.

“நீ வராததுக்கு முன்னாடி நாங்க தான்மா சமைச்சோம்” என்றாள் செல்வி.

“அப்போ இப்போ ஏன் நீங்க செய்யறது இல்லை?” என்றாள் அபர்ணா.

“அதான் சொன்னேனே. இன்னைக்கு வெளிய போயிட்டேன்னு” என்றாள் விடாமல்.

“அதே மாதிரி தான்க்கா. நானும் ஸ்கூல் போயிட்டேன். அத்தையும் மதுரை போயிட்டாங்க” என்றாள் பட்டென்று.

“பசங்களுக்கு மட்டுமாவது சேர்த்து செஞ்சிருக்கலாமேப்பா” என்றான் சத்யா.

“அபி எங்களுக்கும் பசங்களுக்கும் சேர்த்து செஞ்சு வச்சுட்டு தான் போனா சத்யா. உங்க பொண்டாட்டிங்க வீம்புக்கு வம்பைக் கூட்டுறாங்க” என்றார் கலையரசி.

“ஆமா, நாங்க தான் வம்புக்கு அலையறோம்” என்றாள் செல்வி சத்தமாக.

“எனக்குத் தலைவலிக்குது. கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிங்களா?” என்றான் சிவா கொஞ்சம் குரலை உயர்த்தி.

செல்வி கொஞ்ச நேரம் வாயை மூட,

“அண்ணா, இந்த மாச வரவு செலவு கணக்கு. இது டிப்பார்ட்மென்ட் ஸ்டோருக்கு குடுக்க வேண்டிய பில். இது வர வேண்டிய பில். இது பங்க்ஷன் ஆர்டர்ல வந்த வரவு செலவு. எல்லாருக்கும் சேலரி போட்டாச்சு. நீங்களும் செக் பண்ணிக்கோங்க” என்று தனித்தனியாக பிரபாவின் முன் வைத்திருந்தான்.

“செக் பண்ண வேண்டிய அவசியமில்லை சிவா. நீ பார்த்தா சரியாத்தான் இருக்கும்” என்றான் பிரபா.

“அப்படியெல்லாம் சொல்லாதிங்க. எதுக்கும் நீங்களும் பாருங்க” என்றாள் செல்வி வேண்டுமென்றே.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். டேபிள்ள இருக்குற கவரை எடுத்துட்டு வந்து சிவாகிட்ட குடு” என்றான் சாப்பிட்ட படி.

உள்ளே சென்ற செல்வி வெகு நேரம் கழித்து தான் வெளியே வந்தாள். அபர்ணா வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

செல்வி கவரை நீட்ட, அதை வாங்கியவன் அங்கேயே எண்ணிப் பார்க்க, அதில் முப்பத்தியிரண்டாயிரம் ரூபாய் இருந்தது.

“அதென்ன கணக்கு முப்பத்திரண்டு?” என்றான் சிவா புரியாமல்.

“இல்லையே முப்பத்தஞ்சு தான வச்சிருந்தேன்” என்ற பிரபா, செல்வியைப் பார்க்க..

“நம்ம கடையில லீவ் போட்டா, அன்னைக்கு சம்பளம் இல்லை தான. கொழுந்தனார் தான் கல்யாணத்துக்கு மூணு நாள் லீவ் போட்டிருந்தாரே. அதான் மூவாயிரத்தை எடுத்துட்டேன்” என்றாள் செல்வி.

பிரபா மனைவியை முறைக்க, சிவாவோ எழுந்த வேகத்தில் அவன் அமர்ந்த சேர் பின்னே தள்ளி சென்று விழுந்திருந்தது. டைனிங் டேபிளில் கைகளை ஊன்றி கோபத்தை அடக்கியவன், அந்த பணத்தையும் பிரபாவின் முன் வைத்திருந்தான்.

“அண்ணனுக்கு சும்மா செஞ்சேன்னு நினைச்சுட்டு போறேன்” என்றவன் முகம் இறுகிய படி,

“வா அபி” என்று அவளின் கையைப் பிடித்து அங்கிருந்து செல்ல எத்தனிக்க, பார்த்திருந்த கலையரசிக்கும் நடராஜனுக்கும் பேச்சே வரவில்லை.