இந்த பத்து நாட்களில் கலையரசியுடன் பேச்சுக் கொடுத்து ஓரளவிற்கு தெரிந்து கொண்ட விஷயங்களை யோசித்துப் பார்த்தாள். செல்வி சரிதாவைப் பற்றி யாரும் தனியாக வந்து அவளுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இத்தனை நாட்களில் அவர்களே தங்கள் குணத்தை உணர்த்தியிருந்தார்கள்.
ஏதேதோ யோசித்தபடி தூங்கியவள் காலையில் எழும் போதே சற்று தாமதமாகத் தான் எழுந்தாள். குளித்து முடித்து கிளம்பி கீழே வர, கலையரசி வேக வேகமாய் சமைத்துக் கொண்டிருந்தார்.
“முடியாததோட நீங்க எதுக்கு அத்தை சிரமப்படுறிங்க? செல்வியக்கா இல்லன்னா சரிதாக்காவை செய்ய சொல்லியிருக்கலாமே?” என்றவள் கடகடவென்று அவருக்கு உதவி செய்ய, அவளைப் பரிவுடன் பார்த்தார் கலை.
“நான் பார்த்துக்கிறேன் அபர்ணா. உனக்கு நேரமாகுது, நீ சாப்பிட்டு கிளம்புமா” என்றார்.
“இன்னும் அரைமணி நேரம் இருக்கு அத்தை” என்றவளின் கைகள் வேகமாய் வேலை செய்து கொண்டிருந்தது.
“அச்சோ நீ ஏன் அபர்ணா செய்ற? நாங்க வந்து செஞ்சிருப்போமே?” என்றபடி வந்தாள் சரிதா.
“நீங்களும் வாய்ல தான் சொல்றிங்க. செஞ்ச மாதிரி தெரியலையே?” என்று படக்கென்று கேட்டு விட்டாள் அபர்ணா.
“நாங்க வேலை செய்றது இல்லைன்னு சொல்ல வரியா அபர்ணா. நீ வராததுக்கு முன்னாடி நாங்க தான் செஞ்சோம். ஒரு பத்து நாள் செஞ்சுட்டு ஓவரா பேசாத” என்றாள் சரிதா.
“நான் எதார்த்தமா தான் சொன்னேன்க்கா. நீங்க ஏன் அதை வேற விதமா எடுத்துக்கிறிங்க?” என்றவள்,
“ஏன் அத்தை? நேத்து எல்லாருக்கும் சேர்த்து தான சப்பாத்தி செஞ்சேன். ஆனா அவங்க வந்து சாப்பிடும் போது எதுவும் இல்லை. அவங்க சாதம் தான் சாப்பிட்டாங்க” என்றாள்.
“அது அபர்ணா” என்ற கலையரசி என்ன சொல்வதென்று பேசாமல் இருக்க, அவர் தயங்கியதில் அபர்ணாவிற்கு உண்மை விளங்கியிருந்தது. தினமும் இந்த கதை தான் நடக்கிறது என்று.
“சொல்றனேன்னு கோவிச்சுக்காதிங்க. அவங்களையும் நீங்க தான் பெத்திங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு” என்று பட்டென்று கூறியவள், தன் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
அபர்ணாவின் கேள்வியில் அதிர்ந்த கலையரசி அப்படியே நின்றிருந்தார். அவர்கள் பேசியது நடராஜன் காதிலும் விழத்தான் செய்தது. அவருக்கும் அபர்ணாவின் கேள்வி மனதிற்குள் சுருக்கென்று தைக்க, எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றுவிட்டார்.
“என்னாச்சு? ஏன் எப்படி நிக்கிறாங்க?” என்றாள் செல்வி.
“எல்லாம் கடைசி மருமக கேட்ட கேள்வியை நினைச்சு தான்” என்ற சரிதா அவள் பேசிச் சென்றதை செல்வியிடம் கூறினாள்.
“இவளுக்கு வாய் துடுக்கு கொஞ்சம் அதிகம் தான். கொஞ்சம் அடக்கித் தான் வைக்கணும்” என்றாள் செல்வி.
ஸ்கூட்டியில் பேக்கரியை கடந்து சென்றவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. லாவண்டர் நிற காட்டன் புடவையில் புத்தம் புது மலராய் சென்றவளைக் கண் எடுக்காது பார்க்க,
“அண்ணியை என்னமோ புதுசா பார்க்குற மாதிரி பார்க்குறிங்க?” என்றான் மணி.
“போய் வேலையைப் பாருடா” என்றவன்,
அவள் எப்படியும் திரும்பிப் பார்ப்பாள் என்று எண்ணினான். அவளோ தலையை பேருக்குக் கூட திருப்பவில்லை.
பள்ளிக்கு சென்றவளுக்கு மனதில் இருந்த கவலையெல்லாம் பின் செல்ல, அன்றைய நாள் சிறப்பாகவே சென்றது. உடன் காயத்ரியும் இருக்க சொல்லவே வேண்டாம். இடையில் தேவையில்லாத எந்த சிந்தனையும் அவளுக்கு வரவேயில்லை.
“சிவா அண்ணா வீட்ல எல்லாம் செட் ஆகிடுச்சா உனக்கு?” என்றாள் காயத்ரி.
“ம்க்கும்..!சிவா அண்ணாவே செட் ஆகலை. இது வீடு வேற செட் ஆகணுமாம்” என்று முனுமுனுத்தாள் அபி.
“செட்டாக நீ விட்டாத்தான?” என்றாள் காயத்ரி சிரிப்புடன். அபி அவளை முறைக்க,
“என்ன முறைப்பு வேண்டி இருக்கு? உன்னைப் பார்த்தா புதுசா கல்யாணம் ஆனவ மாதிரியா இருக்கு? ஏதோ இமய மலைக்கு ஆன்மீக சுற்றுலா போயிட்டு வந்த மாதிரி இருக்கு” என்றாள் காயத்ரி சிரிப்புடன்.
“நீ வேற ஏன் காயு? அந்த வீட்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. இப்பவே கண்ணைக் கட்டுது. எதிர்காலத்தை நினைச்சா எனக்கே பயமா இருக்கு” என்றாள் உள்ளம் மறையாமல்.
“சிவா அண்ணா இருக்க பயமேன்?” என்றாள் காயத்ரி.
“இருந்து தள்ளிட்டாலும்” என்றவள் மேற்கொண்டு பேசவில்லை.மீண்டும் அவனைப் பற்றிய யோசனை தலையில் ஏறிக் கொண்டது.
ஸ்கூல் முடிந்து வெளியே வந்தவள், வண்டியை எடுத்துக் கொண்டு வர,
“நான் ஆட்டோல போயிக்கிறேன் அபூ” என்றாள் காயத்ரி.
“ஓவரா சீன் போடாம வாடி. உன்னை இறக்கி விட்டுட்டு போறதுல நான் ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டேன்” என்றவள் அவளையும் ஏற்றிக் கொண்டு வெளியே வர,
“அபூ அங்க பாரு” என்றாள் காயத்ரி.
“எங்க?” என்றபடி பார்க்க, அங்கே நின்று கொண்டிருந்தான் மாதவன். அவனைத் தாண்டித் தான் இவள் செல்ல வேண்டும். அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
எப்போதும் போல் வண்டியை ஸ்லோ செய்தவள்,
“என்னங்க மாமா இந்த பக்கம்?” என்றாள் எப்பவும் போல் சாதாரணமாய்.
“வசூலுக்கு வந்தேன்ப்பா. எதுவும் சாப்பிடுறியா அபர்ணா?” என்றான் மாதவனும்.
“இல்ல மாமா வேண்டாம். அப்போ நான் கிளம்புறேன்” என்றவள் கிளம்ப எத்தனிக்க,
“ஒரு நிமிஷம்ப்பா” என்று அவளை நிறுத்தியிருந்தான்.
“சொல்லுங்க மாமா” என்றாள்.
மாதவன் காயத்ரியைப் பார்க்க, அவளோ சட்டென்று இறங்கி முன்னால் சென்று நின்று கொண்டாள்.
“நீ அங்க நல்லா இருக்கியாப்பா?” என்றான் ஒரு தயக்கத்துடன்.
“எனக்கென்ன மாமா? ரொம்ப நல்லா இருக்கேன்” என்றாள்.
“நீ சொல்றதை நம்புறதுக்கு நான் முட்டாள் இல்லப்பா. எனக்கு அந்த வீட்டைப் பத்தியும் தெரியும். அங்க இருக்கவங்களைப் பத்தியும் தெரியும். அந்த சிவா ஏன் அவன் அண்ணன் கடையில வேலை பார்க்கணும்?பெருசா என்ன வருமானம் வந்துட போகுது? இது எனக்குத் தெரிஞ்ச கம்பெனி தான். நல்ல சேலரி பேக்கேஜ் இருக்கும்” என்று விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான் மாதவன்.
“என் மேல இருக்குற அக்கறையில பேசுறிங்கன்னு எனக்குப் புரியது மாமா. ஆனா இது எனக்கு வேண்டாம். அவருக்கு எது சரின்னு தோணுதோ அதையே செய்யட்டும்” என்றாள்.
“சொன்னா கேளுப்பா அபர்ணா” என்றான் மீண்டும்.
“தேங்க்ஸ் மாமா. டைம் ஆகுது, அப்போ நான் கிளம்புறேன்” என்றவள் காயத்ரியையும் ஏற்றிக் கொண்டு கிளம்பிவிட்டாள். மாதவன் தான் ஒரு மாதிரி நின்றிருந்தான்.
சிறிது தூரம் சென்ற பின் “என்னவாம் உன் மாமாவுக்கு?” என்றாள் காயத்ரி எரிச்சலுடன்.
“ஹேய்! அவர் எப்பவும் போல பேசினார் காயு. அதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற?” என்றாள் அபர்ணா.
“நான் டென்ஷன் ஆக என்ன இருக்கு? ஆனா உன் ஓரகத்திங்க ரெண்டு பேரும் பார்த்துட்டே போனாங்க” என்றாள் காயத்ரி.
“அவங்க எப்படி இங்க?” என்றாள் புரியாமல்.
“ஏதாவது வேலையா வந்திருப்பாங்க” என்ற காயத்ரி
“சிவாண்ணா பேக்கரியில இருந்து உன்னைத் தான் பார்க்குறார். வண்டியை நிறுத்தேன், ஒரு காபி குடிச்சுட்டு போகலாம்” என்றாள்.
“இல்ல வேண்டாம்” என்ற அபி வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டாள்.
காயத்ரியை வீட்டில் இறக்கி விட்டவள், தன் வீட்டிற்குள் சென்று ‘அப்பாடா’ என்று அமர்ந்தாள்.
சாந்தியின் கைமணத்தில் சூடாக காபி வர,
“தேங்க்ஸ்ம்மா” என்றவளுக்கு அது மிகவும் தேவையாய் இருந்தது.
“இருந்து நைட் சாப்பிட்டு போ அபர்ணா. இல்ல செஞ்சு குடுக்கவா?” என்றார் சாந்தி.
“இல்லம்மா! நான் அங்கேயே பார்த்துக்கிறேன்”என்றாள்.
“அப்பா வந்து விட்டுட்டு வர்றேன்டா” என்றார் மூர்த்தி.
“ஸ்கூட்டியில தானப்பா. நான் போய்டுவேன்” என்றவள் கிளம்பிவிட்டாள்.
ஏனோ அத்தையின் வீட்டை கடக்கும் போது அவள் மனம் பாரமாகிப் போனதை அவளால் தவிர்க்க முடியவில்லை. அப்போது தான் அன்னமும் முத்து மாணிக்கமும் எங்கோ சென்று விட்டு வந்திருப்பார்கள் போல. இவளைப் பார்த்தவுடன் அன்னம் வேகமாய் வர,
“நல்லா இருக்கேன் அத்தை” என்றவள் தயக்கத்துடன் முத்து மாணிக்கத்தைப் பார்த்தாள்.
“எ..எப்படி இருக்கீங்க மாமா?” என்றாள்.
“இப்ப வரைக்கும் நல்லாத்தான் இருக்கேன்மா. இதுக்கு அப்பறம் உன் கையில தான் இருக்கு” என்றார் புதிருடன்.
“மாமா” என்றாள் அதிர்ந்து.
“மாதவன் உன் ஸ்கூல் முன்னாடி வெயிட் பண்ணி உன்கூட பேசிட்டு வந்தானாமே? வேண்டப்பட்டவங்க சொன்னாங்க. இதெல்லாம் நல்லாவாமா இருக்கு. நாலு பேர் நாலு விதமா பேசுறதுக்கு நாமளே இடம் கொடுத்துடக் கூடாது. மருமக பிள்ளைக்கு எதுவும் தெரியாது. தெரிஞ்சா சங்கட்டம் தான?” என்றார்.
“மாமா எப்பவும் போல தான் பேசுனாங்க மாமா” என்றவளுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை. எதுவும் பேசாமல் வண்டியை கிளப்பிக் கொண்டு சென்று விட்டாள்.
“ஏங்க இப்படி பேசி வச்சிங்க?” என்றார் அன்னம் கோபமாய்.
“உண்மையைத் தான் சொன்னேன் அன்னம். எல்லாத்தையும் ஆரம்பத்துலையே சொல்லி வச்சுட்டா யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது பாரு” என்றவரை என்ன சொல்வதென்று தெரியாமல் கோபமாய் பார்த்திருந்தார் அன்னம்.
அபர்ணாவிற்கு மனமே ஆறவில்லை. தன்னை கடைசி வரை இந்த விஷயம் துரத்துமோ என்ற எண்ணம் புதிதாய் அவள் மனதிற்குள் துளிர் விட்டிருந்தது. அத்தனை நேரம் இருந்த மனநிலை மாறி ஒரு இறுக்கத்துடன் தான் வீட்டிற்கு சென்றாள்.
வண்டியை நிறுத்தியவளுக்கு வீட்டிற்குள் செல்லவே தோன்றவில்லை. நேராக மேலே அறைக்கு செல்ல முற்பட்டவளைத் தடுத்தது செல்வியின் குரல்.
“என்ன அபர்ணா, வந்த உடனே நேரா மேல போற?” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லைக்கா” என்றவள் வேறு வழியின்றி வீட்டிற்குள் நுழைந்தாள்.
“ஸ்கூல் விட்டு வர இவ்வளவு நேரமா அபர்ணா?” என்றாள் சரிதா.
“அதான? உனக்கு எப்படி எங்களைத் தெரியும். மாதவன் முன்னாடி நின்னா உலகமே தெரியாதாமே? ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க” என்றாள் சரிதா.
இப்போது தான் அவர்கள் பேசுவதன் உள்ளர்த்தமே புரிந்தது அபர்ணாவிற்கு.
பட்டென்று எழுந்தவள் மேலே செல்ல முற்பட,
“நைட்டுக்கு சமைக்கணும் அபர்ணா” என்றாள் செல்வி.
“என்னால முடியாது. எனக்கு சாப்பாடு வேண்டாம். உங்களுக்கு வேணும்னா நீங்க சமைச்சுக்கோங்க” என்றவள் நிற்காமல் செல்ல,
“அப்பவே இன்னொருத்தனை காதலிச்ச பொண்ணு எனக்கு வேண்டாம்னு சிவா சொன்னார். அத்தையும் மாமாவும் தான் கேட்கலை. பாவம் இப்போ அனுபவிக்கிறார்” என்றாள் சரிதா, அவளுக்கு கேட்க வேண்டுமென்றே.
சரிதா சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவளுக்கு கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.
அறைக்குச் சென்றவள் அப்படியே கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
என்னதான் வெளியே தைரியமாக காட்டிக் கொண்டாலும், மனதிற்குள் பெரிதும் அடி வாங்கியிருந்தாள் அபர்ணா. மாதவனின் பேச்சும், முத்துமாணிக்கத்தின் வார்த்தைகளும், இப்போது இவர்கள் பேசியதும் என்று அனைத்தும் ஒன்று சேர்த்து அவளை பலவீனமாக உணரச் செய்திருந்தது. கத்தி அழ வேண்டும் என்று தோன்றியது. அதே சமயம் அதைக் கேட்க யாருமில்லை என்ற உணர்வும் தோன்றியது.
மாதவனிடத்தில் சாதாரணமாய் பேசும் வார்த்தைகளுக்குக் கூட இத்தனை அர்த்தங்கள் கற்பிக்கப் படும் என்று அவள் அறியவில்லை.
கலங்கியிருந்த மனம் இறுதியாக சரிதா சொன்ன வார்த்தைகளில் வந்து நிற்க, அதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.
‘இன்னொருத்தனை காதலிச்ச பொண்ணு எனக்கு வேண்டாம்’ என்று சிவா நேரிலேயே சொல்வதைப் போன்று தோன்றியது. பிரம்மை பிடித்தவள் போல் அப்படியே இருந்தாள்.
முதல் நாள் அபர்ணா அப்படி பேசியதில் இருந்து சிவாவிற்கு ஒன்பது மணிக்கு மேல் கடையில் இருக்க முடியவில்லை. மணியிடம் சொல்லிவிட்டு கிளம்பிட்டான்.
அதிசயமாய் வீட்டிற்கு சீக்கிரம் வந்த மகனைப் பார்த்த நடராஜன்,
“இன்னைக்காவது சீக்கிரம் வரணும்னு தோணுச்சே. வீட்ல உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்குன்னு தோணுதா சிவா உனக்கு?” என்றார் நடராஜன்.
மெல்ல தலையை நிமிர்த்தியவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, சிவாவிற்கோ ஒன்றும் புரியவில்லை.
காலை மடக்கி அவள் முன் அமர்ந்தவன்,
“எதுவும் பிரச்சனையா அபி? ஏன் இப்படி லைட் கூட போடாம உட்கார்ந்திருக்க? புடவையைக் கூட மாத்தல?” என்றான்.
“ஒண்ணுமில்ல” என்பதைப் போல் தலையை ஆட்டியவள் வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கப் பார்க்க, அதுவோ விடுவேனா என்பதைப் போல் வெளியே வந்திருந்தது.
“அபி” என்றவன் அவள் கைகளைப் பிடித்தது தான் மாயம், ஒரு கேவலுடன் பாய்ந்து அவனைக் கழுத்தோடு கட்டிக் கொண்டாள் அபர்ணா. நடந்ததை உணரவே அவனுக்கு சில நிமிடங்கள் பிடித்தது. திடீரென்று தன்னைக் கட்டிக் கொண்டு கதறிக் கொண்டிருப்பவளை புரியாது திகைத்துப் பார்த்தவன்,ஒரு கையால் ஆதரவாய் அணைத்தபடி, அவள் அழுகையை நிறுத்த முயற்சி செய்ய, அதற்கான வாய்ப்பை அவள் கொடுக்கவேயில்லை.
“என்னன்னு சொன்னாத்தான தெரியும் அபி. எதுவுமே சொல்லாம இப்படி அழுதா நான் என்னன்னு நினைக்கிறது?” என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.
“யாரு அப்படி சொன்னா?” என்றான் புரியாமல். அவன் அப்படி கேட்ட பிறகு தான் அவளுக்கு நிஜமே உரைத்தது. சட்டென்று அவனிடமிருந்து விலகியவள் தள்ளி அமர்ந்து கொள்ள,
“யார் என்ன சொன்னாங்கன்னு கேட்டேன் அபி” என்றான் மீண்டும் அழுத்தமாக.
“யாரும் எதுவும் சொல்லலை” என்றவளை யோசனையுடன் பார்த்திருந்தான். பிறகு ஏதோ நினைத்தவனாய்,
அவள் அருகில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவன் சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. இருவருக்கும் இடையில் இருந்த அந்த ஒரு அடி இடைவெளியைப் பார்த்தவன், இப்போது தானே தள்ளி அமர்ந்து அதை நிரப்பியிருந்தான்.
அவளின் கைகளை எடுத்து தனக்குள் அடக்கிக் கொள்ள, அவனையே இமைக்காது பார்த்தவள், அவனின் தோள் சாய்ந்து கொண்டாள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆறுதலும் அமைதியும் அவளுக்குத் தேவையாய் இருந்தது.
“யார் என்ன சொன்னாலும், நீ எப்படின்னு உனக்குத் தெரியும் தான? அப்பறம் ஏன் இந்த அழுகை? தொட்டதுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுறதை முதல்ல நிறுத்து அபி. உன்னை ஒரு விஷயம் பலவீனமாக்குதுன்னா அதுக்கு நீ ரொம்ப இம்பார்ட்டன்ஸ் குடுக்கறன்னு அர்த்தம்” என்றான் சிவா.
“இன்னொருத்தனை காதலிச்ச பொண்ணு எனக்கு வேண்டாம்னு சொன்னிங்களா?” என்றாள் அவன் கண் பார்த்து.
“யார் சொன்னா இதை?” என்றான்.
“அப்போ சொல்லியிருக்கிங்க தானே. இது தான் என்னை பலவீனமாக்கிடுச்சு. அப்போ உங்களுக்கு ரொம்ப இம்போர்டன்ஸ் குடுக்குறேனா நானு?” என்றாள் கமரிய குரலில்.
“இது நல்ல விஷயம் தான அபி” என்றவன்,
“என்கூட கடைசி வரைக்கும் வாழப் போற பொண்ணு மனசுல நான் தான் இருக்கணும்னு நினைக்கிறது பெரிய தப்பொன்னும் இல்லையே அபி. எதார்த்தம்ன்னு ஒன்னு இருக்குல்ல. அதனால அப்படி சொன்னேன். அதுமட்டும் காரணமில்லை.நானே லைப்ல ஸ்டெடியா இல்லாதப்போ இந்த கல்யாணம் அவசியமான்னு தோணுச்சு, அவ்வளவு தான்” என்றான்.
அவன் பேச்சிற்கு பதில் சொல்லாமல்,
“என்ன சீக்கிரம் வந்துட்டிங்க?” என்றாள்.
“அது நேத்து என் பொண்டாட்டி என்கூட சண்டை போட்டா. அவளைக் கண்டுக்கிறதே இல்லை, அவகூட பேசுறதே இல்லைன்னு. சரி இன்னைக்காவது சீக்கிரம் போவோம்னு கிளம்பி வந்தேன். வந்து பார்த்தா மேடம் இப்படி அழுது வடியறிங்க. நல்லவேளை சீக்கிரம் வந்தேன். இல்லைன்னா எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்க மாட்ட அபி” என்றான்.
“ரொம்பத்தான் அக்கறை” என்றாள் முனுமுனுப்பாய்.
“நான் அக்கறைப் படாம வேற யார் அக்கறைப் படுவா?” என்றவனைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தாள்.