அப்போது ஜானகி குளித்து முடித்து வந்தவள் “பேசலாமா?”, என்று கேட்டாள்.
“நானும் குளிச்சிட்டு வரேன் டி. பேசிட்டு அப்புறம் உன்னைத் தூங்கவே விட மாட்டேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அவன் பேச்சைக் கேட்டு ஜானகி சிறு சிரிப்புடன் அமர்ந்திருக்க அப்போது ரகுவின் போன் அடித்தது. யாரென்று எடுத்துப் பார்க்க கீர்த்தி என்று வந்தது. அதைக் கண்டு அதிர்ந்து போனாள் ஜானகி.
கீர்த்தி இருக்கிறாள் என்று தெரியும். டைவர்ஸ் ஆனதும் தெரியும். ஆனால் ரகுவும் அவளும் பேசுகிறார்கள் என்று தெரியாதே. ஒரு மாதிரி படபடப்பாக வந்தது.
அதை எடுக்கவா வேண்டாமா என்ற குழப்பம் கொண்டவள் என்றைக்கா இருந்தாலும் இந்த சூழ்நிலையை எதிர்க் கொள்ள தன் வேண்டும் என்று எண்ணி அதை எடுத்து காதில் வைத்தாள்.
“ஹேய் ரகு இப்ப தானே பேசினோம்? அதுக்குள்ள எங்க போயிட்ட? போன் எடுக்க ஏன் இவ்வளவு நேரம்?”, என்று கீர்த்தி குரல் சந்தோஷமாக வெளி வர ஜானகிக்கு குற்ற உணர்வு வந்தது. கீர்த்தி ரகுவைக் காதலித்தாள் என்று அவளுக்கு தெரியுமே?
என்ன சொல்ல என்று தெரியாமல் ஜானகி அமைதியாக இருக்க “கேக்குதா ரகு? நீ திடீர்னு நாளைக்கு கிளம்பி அங்க வரச் சொல்ற? எத்தனை நாள் அங்க தங்கணும்னு சொல்லலை? அதான் கேக்க மறுபடி கால் பண்ணினேன். அதுக்கு ஏத்தது போல கிளம்பி வரணும்ல அதான்”, என்று கேட்டாள் கீர்த்தி.
“என்னது கீர்த்தி இங்கே வரப் போறாளா? வரச் சொன்னது ரகுவா?”, என்று அதிர்ந்து நின்ற ஜானகிக்கு பேச்சே வரவில்லை.
“ரகு கேக்குதா நான் பேசுறது?”, என்று மீண்டும் மீண்டும் கீர்த்தி கேட்ட பிறகு தான் நடப்புக்கு வந்தவள் “ஹலோ கீர்த்தி நான் ஜானகி பேசுறேன்”, என்றாள்.
இப்போது அதிர்ச்சியாவது கீர்த்தியின் முறை. உணர்வற்று நின்று விட்டாள். இப்படி ஒரு அதிர்ச்சியை கீர்த்தி எதிர் பார்க்கவே இல்லை. இது உண்மையா கனவா என்று தெரியாத மனநிலையில் அவள் இருக்க “ஏய் கீர்த்தி கேக்குதா டி? நான் ஜானகி பேசுறேன்”, என்று மீண்டும் சொன்னாள்.
“ஆன் ஜானு, நீயா? நீ எப்படி? சாரி எப்படி இருக்க? திடீர்னு நீ பேசினதும் ஒரு மாதிரி ஷாக் ஆகிருச்சு”
“நல்லா இருக்கேன் டி. நீ எப்படி இருக்க கீர்த்தி”
“நான் நல்லா இருக்கேன். நீ… நீ எப்படி ரகு போன்ல? அதுவும் இந்த நேரத்துல”, என்று சந்தேகமாக கேட்டாள்.
“அது… அது வந்து… நான் இங்க. எனக்கும் ரகுவுக்கும்.,…”, என்று தயங்கிய படியே பேசிய ஜானகிக்கு அப்படி ஒரு குற்ற உணர்வு. என்ன தான் அவர்கள் விவாகரத்து வாங்கி இருந்தாலும் கீர்த்தியின் கணவன் ரகு தானே? அவளிடமே எனக்கும் உன் புருசனுக்கும் கல்யாணம் ஆகிருச்சு என்று சொல்ல வாய் வர வில்லை.
“என்ன ஜானு சொல்ற? எனக்கு ஒண்ணும் புரியலை? உன்னைப் பாத்தேன்னு அன்னைக்கே ரகு சொன்னான். ஆனா அவன் வீட்டுக்கே எப்படி வந்த?”, என்று கலவரமாக கேட்டாள் கீர்த்தி. ஜானகியும் ரகுவும் ஒன்று சேர்ந்தால் அவ்வளவு தான் என்று அவளுக்கு அவ்வளவு கலக்கமாக இருந்தது.
“எனக்கும் ரகுவுக்கும் கல்யாணம் ஆகிருச்சு கீர்த்தி”, என்று ஜானகி குற்ற உணர்வுடன் சொல்ல போனை தவற விட்டு மீண்டும் பிடித்தாள் கீர்த்தி. அவளால் இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளவே முடிய வில்லை.
“என்னது கல்யாணமா? ரகுவுக்கும், ஜானகிக்கும் கல்யாணமா? நான் கேட்டது உண்மை தானா?”, என்று மனதுக்குள் புலம்பிய கீர்த்தியால் அதை ஒரு சதவீதம் கூட ஜீரணிக்க முடியலை.
“எப்படி? எப்படி ஆச்சு? எப்படி இந்த விசயம் நடந்துச்சு? எவ்வளவு பக்காவா பிளான் பண்ணி எல்லாம் பண்ணி கடைசியில் எப்படி இப்படி ஆனது?”, என்று உள்ளுக்குள் துடித்துப் போனாள். கடவுள் விதித்த விதியை மாற்ற மனிதர்களுக்கு சக்தி இருக்கிறதா என்ன?
கீர்த்தியின் மௌனம் ஜானகியை வெகுவாக பாதித்தது. ஜானகி திருமண விஷயம் சொன்னதும் “அப்படியா சந்தோஷம்”, என்பது போல கீர்த்தி பேசி இருந்தால் ஜானகிக்கும் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவள் அமைதி ஜானகியை வெகுவாக பாதித்தது.
“சாரி கீர்த்தி, கல்யாணம் ஆகி ரெண்டு நாள் ஆகுது. உனக்கு தெரியாதா? ரகு சொல்லிருப்பான்னு நினைச்சேன்”, என்று ஜானகி சொல்ல “இல்லையே எனக்கு தெரியாதே. ரகு சொல்லவே இல்லை”, என்றவளுக்கு உள்ளுக்குள் பயம். “ஒரு வேளை என்னோட தில்லுமுல்லு எல்லாம் ரகுவுக்கு தெரிந்திருக்குமோ?”, என்று எண்ணி.
“எங்க கல்யாண விஷயத்தை நேர்ல சொல்லத் தான் ரகு உன்னை இங்க கூப்பிட்டுருப்பான் போல? நீ இங்க வா கீர்த்தி. நானும் உன்னைப் பாக்கணும். உன்னைப் பாத்தா தான் எனக்கும் நிம்மதியா இருக்கும். ஏதோ உன் வாழ்க்கையை பிடுங்கின மாதிரி இருக்கு. எனக்கும் ரகுவுக்கும் உன்னை எப்படி பேஸ் பண்ணன்னு கஷ்டமா இருக்கு. ஆதியைப் பத்தி எல்லாம் கவலைப் படாதே கீர்த்தி. ஆதி ரகுவோட பையன். இனி அவன் எனக்கும் பையன் தான். நீ வேற ஒரு வாழ்க்கையை ஏத்துக்கணும். நீ நேர்ல வாயேன், பேசுவோம்”, என்று ஜானகி சொல்ல “சரி வரேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு தீவிரமாக யோசித்தாள்.
ஆக ரகுவுக்கு ஒன்றும் தெரிய வில்லை. திருமண விஷயத்தை சொல்ல தான் தன்னை அழைத்திருக்கிறான் என்று புரிந்து நிம்மதி உண்டாது. ஆனாலும் அவர்கள் எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று வன்மம் எழுந்தது.
தான் இவ்வளவு செய்து, தன்னுடைய வாழ்க்கையில் என்ன எல்லாமோ நடந்து கடைசியில் அவள் தடுத்த விஷயம் நடந்தால் அதை அப்படி அவளால் தாங்கிக் கொள்ள முடியும்?
மீட்டிங்காவது ஒன்னாவது? இவர்கள் நிம்மதியை கெடுத்தால் தான் அவள் நிம்மதியாக இருக்க முடியும். அதை விட ஜானகி கீர்த்தியை பற்றி ரகுவிடம் சொல்லி விட்டால் அவ்வளவு தான் அதை தடுக்க ரகுவும் ஜானகியும் ஒன்றாக இருக்க கூடாது என்று முடிவு எடுத்து பஸ் டிக்கட் தேடினாள்.
ஆனால் எல்லாம் புக்காகி இருக்க அவளால் நாளை மதியத்துக்கு தான் டிக்கட் போட முடிந்தது. நேரில் போய் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டாள்.
ஆனால் அவள் இங்கே வருவதற்குள் மோகன் தன்னுடைய மகளுக்காக ஒரு சதுரங்க வேட்டையை ஆரம்பித்திருப்பார் என்று அவள் எதிர் பார்க்க வில்லையே? வினை விதைத்தவள் வினையை அறுக்க தானே செய்ய வேண்டும்?
போனை வைத்த ஜானகியும் பல யோசனைகளில் அமர்ந்திருந்தாள். “தப்பு பண்ணிட்டேனோ? முன்னாடியே கீர்த்தி கிட்ட பேசிருக்கணுமோ? இப்ப ரகுவை நினைச்சு அழுவாளோ? நிச்சயம் அழுவா. ரகுவை விரும்பிக் கல்யாணம் பண்ணினாளே? ஆனா ரகு லவ் என் மேல இருக்கே. அப்படின்னா அவங்க பிரியுறதுக்கு நான் தான் காரணம். என் மேல இருக்குற லவ்னால தான் ரகு கீர்த்தியை தள்ளி வச்சிட்டான். கீர்த்தி ஆதி எப்படி உருவானான்னு சொல்லிருப்பா. ஆனா அதை ரகு நம்பிருக்க மாட்டான். என் மேல இருக்குற காதல் அதை நம்ப விட்டுருக்காது. அதனால தான் கீர்த்தியை பிரிஞ்சிட்டான். நான் இடைல வராம இருந்திருந்தா அவங்க நல்லா இருந்திருப்பாங்க. நான் ஒரு குடும்பத்தையே பிரிச்சிட்டேன்”, என்று எண்ணியவளுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே அவர்கள் டைவர்ஸ் வாங்கியது மறந்து போனது.
“நாளைக்கு கீர்த்தி வரட்டும். அவ வந்து முடிவு பண்ணட்டும். அவளுக்கு ரகு வேணும்னா என் உயிரைக் கொடுத்து கூட அவங்களை சேத்து வைப்பேன். நான் சொன்னா ரகு கண்டிப்பா கீர்த்தியை ஏத்துக்குவான். எனக்கு அவன் கூட வாழ்ந்த ரெண்டு நாள் வாழ்க்கை போதும். ரகு கிடைப்பானான்னு ஆசை பட்டேன். இப்ப அவன் கூட வாழவும் செஞ்சிட்டேன். இதுவே இந்த ஜென்மத்துக்கு போதும். கீர்த்தி பாவம். அதை விட ஆதிக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் வேணும். நான் என்ன தான் நல்லா பாத்துக்கிட்டாலும் அவனோட அம்மாவா ஆகிற முடியாதே? நான் ரகுவை விட்டு பிரிஞ்சா தான் எல்லாருக்கும் நல்லது”, என்று முடிவு எடுத்தாள்.
அப்போது ஒரு துண்டை இடையில் கட்டிக் கொண்டு மற்றொரு துண்டால் தலையை துவட்டிய படி வந்த ரகு அவள் ஏதோ யோசனையில் இருக்கவும் அவளை பின்னே இருந்து அணைத்தவன் “என் பொண்டாட்டுய்க்கு அப்படி என்ன யோசனை?”, என்று கேட்டான்.
அவன் தொடுகையில் சிலிர்த்தவளுக்கு இப்போது கீர்த்தி பற்றி பேசி இந்த நாளைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. கூடவே அவள் மனதோ ரகுவுடன் இருப்பது இன்று தான் கடைசி நாள். அதை பயன்படுத்திக் கொள் என்று அவளை தூண்டி விட்டது.