சங்கர் மாமா இருந்த அறைக்கு சென்றாள் கிருபா. அவருக்கு காபி கொடுத்தாள். அங்கிருந்த நர்ஸ் சங்கருக்கு கொடுக்க செய்தார். கிருபா “மாமா.. ஏதாவது வேணும்மா மாமா..” என்றாள்.

சங்கர் “இல்ல டா.. சஹானாவை பார்த்தியா” என்றார்.

கிருபா “ம்.. அம்மா, என் ரூமில் இருக்க சொல்லியிருக்காங்க.. நீங்க நிம்மதியா இருங்க மாமா.. ஏதாவது வேண்டும்ன்னா சொல்லுங்க, அம்மாக்கு காபி கொடுத்துட்டு வரேன்” என சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள்.

ஈசன் அப்போது அங்கே இல்லை.

கிருபா, தன் அன்னைக்கு கொடுத்துவிட்டு.. மீண்டும் கிட்சேன் வந்தாள் கண்ணம்மா அக்கா, தங்கள் மூவருக்கும் காபி கலந்து வைத்திருக்க எடுத்துக் கொண்டு பட்டாசாலை வந்தாள். 

சஹானா சரியாக தன் அறையிலிருந்து வரவும் “வா சஹா, காபி குடிக்கலாம்.” என சொல்லி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள். சோபா என்றால் குஷன் எல்லாம் இல்லை.. மரத்தாலானது.. மூவர் சேர்ந்து அமர்வது போல இருக்கும்.. பக்கவாட்டில் இரண்டு பெரிய நாற்காலிகள்..  அதுதான் சோபா.

சஹானா வந்தாள்.. இருவரும் குடிக்க தொடங்கினர்.

கோக்கிலா தன் அன்னையின் அறையிலிருந்து  வந்தவர் “ஈசனுக்கு கொடுத்திட்டியா கிருபா” என்றார்.

கிருபா “இல்ல ம்மா.. அவங்களை காணோமே” என்றாள்.

சஹா “எங்க..” என சொல்லி எழுந்தாள்.

கிருபா “நீ குடி சஹா” என்றாள்.

ஈசன் அப்போதுதான் வந்தான், தந்தையின் அறையிலிருந்து சஹா “அண்ணன் அங்க இருக்கான்” என்றாள்.

கிருபா “சஹா, உங்க அண்ணன்கிட்ட காபி இங்க இருக்குன்னு கூப்பிடு” என்றாள்.

சஹா போன் செய்தாள் அண்ணன் எண்ணுக்கு.. கிருபா அதை பார்த்து “கூப்பிடு.. சஹா” என்றாள்.

சஹா “இதோ போனில் கூப்பிடுறேன்..” என்றாள்.

கிருபா ஏன் என பார்த்தாள்.

சஹா “இல்ல.. சத்தம் போட்டால்.. வந்து அடிப்பான். அவனுக்கு பிடிக்காது.” என்றாள் சின்ன குரலில்.

அப்படியே ஈசன் போன் அழைப்பை பார்த்துவிட்டு, தங்கையை பார்த்தான். தங்கை.. காபி இங்கிருக்கு என சைகை செய்தால்.. ஈசன் அங்கே வந்தான்.

கிருபா காபி எடுத்து அவன் கையில் கொடுத்தாள். ஈசன் வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ் “ என்றான்.

கிருபா “இனிமேல் எங்க கையால்தான் சாப்பாடு.. நிறைய தேங்க்ஸ் சொல்ல வேண்டி வரும்” என்றாள்.

ஈசன் “எங்க அப்பாக்காக இதை கூட செய்ய மாட்டேனா” என சொல்லியவன் அங்கே எதிர் சேரில் அமர்ந்தான்.

இவர்களின் பேச்சை கவனிக்காத சஹா “அக்கா, பெரிய வீடு.. எத்தனை ரூம் இருக்கு” என்றாள்.

கிருபா ஈசனை முறைத்துக் கொண்டே “ஏன் உங்க அண்ணன் சொல்லலையா” என்றாள்.

சஹா “அண்ணனா..” என்றாள்.

கிருபா “உங்க அண்ணனுக்கு இந்த வீட்டை பற்றி தெரியாமலா..” என சொல்ல வர..

ஈசன் விழித்துக் கொண்டு.. “ஹலோ.. ஹலோ.. இருங்க. என்ன பேசுறீங்க, கொஞ்சம் அமைதியா இருங்க.. எப்போதும் அடுத்தவங்க பேச்சில் மூக்கை நுழைப்பதே வேலை” என பேச..

இதுவரை இயல்பாக இருந்த கிருபாவின் முகம்.. சற்று கோவமாக மாறியது, நிறுத்தி நிதானமான குரலில் “யார் அடுத்துவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்கிறா” என்றாள்.

ஈசன் தடுமாறினான் “இல்ல.. இல்ல.. நான் சஹாவை சொன்னேன்.. இதெல்லாம் கேட்க்க கூடாதுன்னு சொன்னேன்.” என்றான் முறைத்துக் கொண்டே.

கிருபா “ஏன் உங்க தங்கைக்கும் எதுவும் தெயரியாதோ” என்றாள்..

ஈசனின் முகம் இறுகி போனது..  எழுந்து விட்டான்.. தலையை கோதிக் கொண்டான் “ஏதாவது புரியுதா பாரு” என டென்ஷனாக முனகினான். எப்படி சொல்லுவது என தெரியாமல் “சஹா.. நீ இவங்ககிட்டேயிருந்து தள்ளி இரு.. வா போலாம்” என்றவன் தங்கையை கையேடு கூட்டிக் கொண்டு தன் தந்தையின் அறைக்கு போனான்.

கிருபாவிற்கு சிரிப்புதான் வந்தது  ‘பண்றதெல்லாம் திருட்டுத்தனம்.. இதில் என்கூட சேராதன்னு கூட்டி போறான்..’ என புன்னகையோடு நினைத்துக் கொண்டு காஃபி கப்புகளை தேய்க்க போட்டுவிட்டு, தாத்தாவை தேடி வந்து அமர்ந்தாள்.

சற்று நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு.. கடைக்கு கிளம்பி போய்விட்டாள்.

மாலையில் டவல்பாத் கொடுத்து சங்கரை.. பட்டாசாலைக்கு கூட்டி வந்தார் நர்ஸ். சங்கர் தன் வீட்டை சுற்றி பார்த்தார். கண்கள் குளம் போல் இருந்தது. பாட்டியும் அப்போதுதான் வந்தார். மகனை அங்கே பார்த்ததும் “தூங்கலையா சங்கர்” என்றார்.

சங்கர் “இல்லம்மா.. நான் உங்களை கஷ்ட்டபடுத்திட்டேன்.. அதான் ஆண்டவன் என்னை தண்டுச்சிட்டான்.. என்னை மன்னிச்சிடும்மா..” என்றார்.

பாட்டி “திரும்ப திரும்ப அதையே சொல்லாத சங்கரு.. நீ அதெல்லாம் யோசிக்காத. அமைதியா இரு” என்றார் மகனின் கை பிடித்துக் கொண்டு.

கோக்கிலா, பழம் கொண்டு வந்து கொடுத்தார்.. கொஞ்சமாக சங்கருக்கு. மற்ற எல்லோருக்கும் கிண்ணத்தில் சுண்டல் கொடுத்துவிட்டார் அவர்கள் இருக்கும் அறைக்கே.

சஹா, வேலையை பார்க்க தொடங்கியிருந்தாள் லாப்பில் அமர்ந்து.

ஈசனுக்கும் அதே போல.. அவன் அலுவகம் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இவனை வர சொல்லியிருந்தனர், முன்பு. இப்போது அப்பாவிற்கு முடியவில்லை என வொர்க் ப்ரோம் ஹோம் கேட்டான்.. கொடுத்துவிட்டனர் அவர்கள் அலுவலகத்தில். அவனின் விடுப்பு நாளையோடு முடிகிறது. எனவே, இன்று அமைதியாக அப்பாவின் அறையிலேயே அமர்ந்துக் கொண்டான்.

அவனுக்கோ யோசனைகள் பல.. தஞ்சம் புகுவது போல வந்துவிட்டாகிவிட்டது.. இதன்பின் என்ன நடக்கும்.. என ஒருமாதிரி உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது. என்னால் இங்கே இருக்க முடியமா.. அப்பாவிற்காக என்றாலும் எத்தனைநாள் இருப்பேன்.. என யோசிக்க கொஞ்சம் டென்ஷன் ஆனது. 

ஈசன் எழுந்து வெளியே வந்தான்.. அப்போது கண்ணம்மா அக்கா.. சுண்டல் கொண்டு வர.. வாங்கிக் கொண்டு.. வெளியே வந்தான். பட்டாசாலையில் பெரியவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்தான். தாத்தாவை காணோம்.. என எண்ணிக் கொண்டே.. திண்ணைக்கு வந்து அமர்ந்துக் கொண்டான்.

பொறுமையாக சுண்டலை உண்டுக் கொண்டே போன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் அதுவும் தீர்ந்து போனது. அப்படியே வெளியே வந்து பார்க்கிங் ஏரியாவில் நடந்தான். காற்று இதமாக வீசியது. புதிதாக இருந்தது.. பெரிய மணற்பரப்பில்.. காற்று வீச.. காலில் செருப்பில்லாமல்.. அப்டியே எந்த பொறுப்பும் இல்லாமல்.. இயல்பாய் நடப்பது இருகிய அவனின் மனநிலையை கொஞ்சம் தளர்த்தியது.

எதிர் வீட்டில்.. வாசலில் அமர்ந்திருந்த பாட்டி.. இங்கே எதோ நிழலாடுவதை பார்த்துவிட்டு.. எழுந்து இந்த வீடு நோக்கி வந்தார்.. ஈசனை பார்த்தவர் “யாரு சங்கரா..” என்றார்.

ஈசன் “இல்ல.. அவர் உள்ளே இருக்கார்” என்றார்.

பாட்டி படி ஏறி.. உள்ளே சென்றார்.

ஈசன் முன்போல அந்த இதமான காற்றினை அனுபவித்தபடி நடந்தான்.

சற்று நேரத்தில் கிருபா வந்தாள். ஈசனுக்கு அந்த வண்டியை பார்த்தும் நின்றுக் கொண்டான்.. கிருபாவாக இருக்குமென எண்ணவில்லை.. அவன். கண்ணில் வெளிச்சம் படவும் நின்றுக் கொண்டான். அருகில் வரவும்தான் அது கிருபா என தெரிய.. ஓ.. வேலைக்கு போய்ட்டு வராங்க.. என எண்ணிக் கொண்டு திரும்பி நடந்தான்.

கிருபா வண்டியிலிருந்து இறங்கி.. அதை நிறுத்திவிட்டு வந்தாள்.. ஈசனை நோக்கி.. “வாக்கிங்’கா” என்றாள்.

ஈசன் “ம்.. எங்க வொர்க் பண்றீங்களா.. டீச்சர்ரா..” என்றான்.

கிருபா “ஓ.. நீங்க என்ன.. வக்கீலா” என்றாள் சம்பந்தமே இல்லாமல்.

ஈசன் “என்ன” என்றான் எப்போதும் போல..

கிருபா “பின்ன, அதெப்படி பத்துநாளாக பார்க்கிறீங்க.. நான் என்ன வேலை பார்க்கிறேன்னு தெரியாதா” என்றாள்.

ஈசன் “எனக்கு அடுத்தவங்களை பற்றி தெரிஞ்சிக்க அவசியமில்லை” என்றான் நக்கலாக.

கிருபா அசராமல் “இப்போ எதுக்கு கேட்டீங்க” என்றாள்.

ஈசன் “ஜஸ்ட்.. சும்மா” என்றான் லேசாக புன்னகை இழையோட.. ஒரு நக்கல் த்வனியில் கேட்டான்..

கிருபா “தெரிஞ்சிக்க வேண்டாமே.. உங்க வேலையை மட்டும் பாருங்க.. அடுத்தவங்க வேலை உங்களுக்கு எதுக்கு தெரியனும்..” என சொல்லி உள்ளே நடந்துவிட்டாள்.

ஈசன் தன் தலையை கோதிக் கொண்டான்.. நெற்றி சுருங்க யோசித்தான்  ‘இவங்க வேலையில் நான் என்ன தலையிட்டேன்.. என்ன வேலை பார்க்கிரீங்கன்னு கேட்டேன்.. சரியான கிரிமினல்.. க்ராஸ் குயூஸ்ட்டின் பன்ன்றா’ என எண்ணிக் கொண்டு நடந்தான்.