சங்கர், காலையில் நேரமாக எழுந்து கொண்டார். தன் மகளை தன் தந்தைக்கு அறிமுகம் செய்யவென காத்திருந்தார். சஹானா எழுந்து, அண்ணன் கொடுத்த காபி குடித்துவிட்டு அமர்ந்திருந்தாள்.
ஈசன் “சஹா, நீ வீட்டுக்கு போயிட்டு வாடா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா.. எனக்கும் கொஞ்சம் திங்க்ஸ் எடுக்க வேண்டும்..” என்றான்.
சஹா அழ தொடங்கினாள்.
ஈசன் “என்ன சஹா” என்றான்.
சங்கர் “தங்கம்.. என்ன டா, இன்னும் அழுகை.” என்றார்.
சஹா தந்தையின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டு அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். பெண்ணவளுக்கு இன்னமும் இயல்புக்கு வர முடியவில்லை.. காலையில் எழுந்துவுடன் மாறிவிட இதென்ன காலநிலை மாற்றமா.. பெண்ணவள் தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டு அழுதாள்.
மூவரும் அமைதியாகினர். ஆண்கள் இருவருக்கும் பேச முடியவில்லை. ஈசனுக்கும் அவளின் நிலைதான்.. ஆனால், இந்தநாளில் அவனுக்கு மருத்துவமனை வாசம் பழையிருந்தது. எந்திரமாக எல்லாம் செய்தான். சஹானாவினால் அது முடியவில்லை.
இப்போது தாத்தா வந்தார். தாத்தா எட்டு மணிக்கு முன்பே மகனை பார்க்க வந்துவிட்டார் இன்று. இன்று பொதிகளின் அளவு கூடியிருந்தது.
அறையின் உள்ளே வந்தவர்.. சஹானாவை பார்த்து நின்றார். கிருபா, காலையில் அழைத்து சொல்லிவிட்டாள்.. சஹானாவின் வரவை பற்றி. எனவே பேத்தியை புன்னகை முகத்தோடு எதிர்கொண்டே நின்றார்.
சங்கர் நலிந்த புன்னகையோடு “அப்பா.. என் பொண்ணு ப்பா, சஹானா” என்றார்.
சஹானா எழுந்து நின்றாள்.
தாத்தா மெதுவாக அருகில் வந்து.. “எப்போ ம்மா வந்த..” என்றார்.
சஹானா “நைட்” என்றாள்.
சங்கர் “தாத்தா டா..” என்றார்.
அருணாசலம் மெதுவாக சஹானாவின் தலையை வருடி.. “இரு டா.. புதுசா பார்க்கிறால்ல. போக போக சரியாகிடுவா.. கண்ணெல்லாம் சிவந்து இருக்கு.. எல்லாம் சரியாகிடும் ம்மா..” என்றார்.
பின் சங்கரின் அருகே அமர்ந்துக் கொண்டு “உங்க அம்மா.. உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு நினைக்கிறா. நீ என்ன சொல்ற” என்றார் முதல் கேள்வியாக.
சங்கரின் பொலிவிழந்த கண்கள்.. கொஞ்சம் ஒளி கொண்டது. மகனை பார்த்தார். சங்கரின் பார்வை உணர்ந்து.. தாத்தாவும் ஈசனை பார்த்தார்.
தாத்தா “பேத்தி இருக்காளே ஈசா.. நம்ம இப்போ போனால்தான் டியூட்டிக்கு முன் அவரை பார்த்து பேசிட்டு வரலாம்.” என்றார்.
ஈசன் உணவுகளை எடுப்பதிலேயே குறியாக இருந்தான்.
தாத்தா, வெளியே போய்விட்டார். அங்கே அமரவில்லை. நேராக மருத்துவரை பார்க்க என.. ரிசப்ஷன் சென்று விசாரிக்க தொடங்கிவிட்டார்.
சங்கர் “என்னடா.. சஹா பார்த்துப்பா டா.. நீ தாத்தா சொல்றதை கேளேன்.” என்றார்.
சஹா எழுந்து அண்ணனிடமிருந்து உணவுகளை வாங்கினாள்.. “நீ பாரு ண்ணா” என்றாள்.
ஈசன், தந்தையிடம் ஏதும் பேசாமல் வெளியே வந்தான். அங்கே தாத்தா இல்லையெனவும்.. தேடிக் கொண்டு வந்து அவர் இருக்குமிடத்தில் அமர்ந்தான். தாத்தா, சங்கரின் மருத்துவரை பார்க்க அமர்ந்திருந்தார். இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.
இருவரும் அரைமணி நேரம் சென்று.. மருத்துவரை பார்த்து வந்தனர். மருத்துவர் அழைத்து செல்லலாம்.. என சொல்லி விவரம் கேட்டுக் கொண்டனர்.
சங்கருக்கு, சஹானா உணவு கொடுத்து முடித்திருந்தாள். மாத்திரைகளை ஒரு நர்ஸ் வந்து கொடுத்தார். சஹானாவிற்கும் இந்த நேரத்தில் எப்படி கொடுக்க வேண்டும் என சொல்லி சென்றார்.
சங்கர் சற்று நேரம் உறங்கினார்.
சஹா, அங்கேயே குளித்து.. அமர்ந்திருந்தாள்.
ஈசன் அப்படியே கேண்டீன் சென்றுவிட்டான்.
தாத்தா அறைக்கு வந்தார். மகன் உறங்குவதை பார்த்து.. அமைதியாக அமர்ந்துக் கொண்டார்.
சஹானா என்ன கேட்பது என தெரியாமல் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
தாத்தா “சாப்பிட்டியா சஹானா” என்றார்.
பேத்தி இல்லையென தலையாட்டினாள்.
தாத்தா “சாப்பிடு சஹானா.. கிருபா காலையில் போன் செய்து சொல்லிட்டா.. உனக்கும் சேர்த்துதான் டிபன் இருக்கும். பாரு தோசை வைச்சிருப்பா அத்தை. நீ சாப்பிடு” என்றார்.
சஹானா “அண்ணன் வரட்டும் தாத்தா” என்றாள்.
தாத்தா “நீ சாப்பிடு, அவன் இந்த சாப்பாடை சாப்பிட மாட்டான். நீ சாப்பிடு ம்மா..” என்றார். அசதியில் அப்படியே சாய்ந்துக் கொண்டார்.
சஹானா.. கொஞ்சம் விழித்தாள் என்ன நடக்கு இங்கே என.. ஒன்றும் கேட்க்க முடியவில்லை. அமைதியாக உண்டாள்.
ஈசன் வந்தான். குளித்தான்.
சஹானா வெளியே அமர்ந்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் உள்ளே பேச்சு சத்தம் கேட்டது. இவள் உள்ளே செல்லவில்லை.
ஈசன் தாத்தா சங்கர் மூவரும் எப்படி செல்லுவது.. என்ன என்ன ஏற்பாடுகள் வேண்டும்.. என பேசிக் கொண்டிருந்தனர்.
மதியத்திற்கு மேல்.. சஹானாவும் கோக்கிலாவும் சங்கரின் வீட்டிற்கு வந்தனர். காரைக்குடி கிளம்ப வேண்டும் என்பதால்.. வீட்டினை சுத்தம் செய்து.. பொருட்களை எடுத்து வைக்க என இருவரும் சென்றனர்.
சஹாவிற்கு ஈசன் போல ஒதுக்கம் எல்லாம் இல்லை உறவுகளிடம்.. “அத்தை.. என் அம்மா” தன் அன்னைக்கு விளக்கு ஏற்றும் படத்தை காட்டினாள்.
கோக்கிலா “என்னமோ நாங்க யாருமே பார்த்ததில்லை உங்க அம்மாவை.. என்னமோ சங்கர் வாழ்க்கையில் மட்டும் ஏன்தான் கடவுள் இப்படி விளையாடுறாரோ” என சொல்லி அமர்ந்தார்.
இருவருக்கும் அடுத்து பேசிக் கொள்ள முடியவில்லை. சஹானா வீட்டில் முன்பு வேலை செய்த அம்மாவை வர சொல்லியிருந்தனர். அந்த பெண்மணி வரவும்.. மூவருமாக சேர்ந்து எடுத்து வைத்தனர் பொருட்களை. அந்த பெண்மணி நிறைய ரேவதி பற்றி பேசினார். சஹாவும் அடிக்கடி ஆமோதிப்பாய் பேசினாள்.
இரவுதான் இருவரும் மருத்துவமனை வந்தனர்.
சண்முகத்திடம், தாத்தா இன்று இரவுதான் பேசிபார்த்தார்.. ‘வந்து சங்கரை பார்த்திட்டு போ ஷண்முகா.. என்ன கோவமானாலும்.. இந்தநேரத்தில் காட்ட வேண்டாம். நீ பார்க்காதது ஒரு குறையாக இருக்க வேண்டாம்.. வந்து பார்த்துட்டு போ ப்பா’ என்றார்.
ஷண்முகம் ‘எனக்கு அவ்வளவு பெரிய மனசில்லை ப்பா..’ என்றுவிட்டார்.
சண்முகத்தின் காயமும் பெரிதுதானே. அதனால், ஏதும் பேசாமல் அருணாசலம் அமைதியாகிவிட்டார்.
அடுத்த இரண்டு நாளில் சங்கர் தன் சொந்தஊர் வருவது உறுதியானது. தேவையான ஏற்பாடுகள் பற்றி மருத்துவர்கள் சொல்லினர். ஏற்பாடுகள் எல்லாம் செய்துக் கொண்டு.. காரில், பாட்டி கோக்கிலா சஹானா தாத்தா என நால்வரும் கிளம்பினர். சங்கரும் ஈசனும் மருத்துவமனை வாகனத்தில் கிளம்பினர்.
கிருபா, ஊரில் இந்த இரண்டு நாளும் வேலை சரியாக இருந்தது. சங்கர் தங்குவதற்கு அறை.. அந்த பெரிய வீட்டில் நான்கு அறைகளில் மட்டுமே.. அறையோடு ஒட்டிய ஓய்வறை. மற்ற அறைகள் எல்லாம் ஓய்வறை இல்லாததது. அதனால், சங்கர் தங்குவதற்கு என தன் அன்னையின் அறையை வேறு அறைக்கு மாற்றி விட்டு.. அவருக்கு தேவையான உபகரணங்கள் எல்லாம் வாங்கி பொருத்தி.. இன்னும் வசதியாக அந்த அறையை மாற்றி வைத்தாள். அத்தோடு, அவரை கவனித்துக் கொள்ள என ஒரு ஆண் நர்ஸ் ஏற்பாடு செய்ந்திருந்தாள், தாத்தாவின் சொல்படி. இப்படி நிறைய ஏற்பாடுகள் சங்கர் வருகைக்காக, கிருபா.
மாலை நெருங்கும் நேரம்.. எல்லோரும் காரைக்குடி வீடு வந்து சேர்ந்தனர். சங்கர் அப்படியே வ்ஹீல் சேரில் இருந்தபடியே, கண்ணமா அக்கா ஆரத்தி எடுத்து உள்ளே அனுமதித்தார்.
சங்கரை நேராக.. அவருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.. மருத்துவ பணியாளர்கள்.
கார் இப்போதுதான் வந்தது. தாத்தா பொறுமையாக இறங்கி வந்தார். கிருபா, தாத்தாவை பார்த்து “வாங்க தாத்தா.. பாட்டியை கூட்டிட்டு வரேன்” தாண்டிக் கொண்டு பாட்டியிடம் சென்றாள். பாட்டியை, அவரை பொறுமையாக கைபிடித்து இறக்கிவிட்டாள்.
கிருபா, சஹானாவை பார்த்து “வா சஹானா..” என்றாள்.
சஹானா, போனில் கிருபாவோடு பேசி இருக்கிறாள்.. இப்போது, கிருபாவின் அழைப்பிற்கு புன்னகைத்தாள். காரிலிருந்து இறங்கி வீட்டை பார்க்க.. அசந்துதான் போனால் சஹானா.. பிரமாண்டமான பார்க்கிங்.. அதையடுத்து.. வீட்டின் முகப்பில் கஜலக்ஷ்மி கம்பீரமாய் அமர்ந்திருக்க.. அந்த ஆர்ச்சிலிருந்து தொடங்குகிறது அவர்கள் வீட்டின் மதில்.. இரண்டாள் உயர மதில்.. அதன் உள்ளே.. கம்பிகாளால் பிணைக்கப்பட்ட வீட்டின் முகப்பு.. படிகள் ஏறி.. உள்ளே வந்தாள்.. தாழ்வாரம்.. அதையடுத்து.. தாழ்வான சிமென்ட் குழம்பினால் வழுவழுப்பாக்கப்பட்ட திண்ணை. அதை தாண்டி உள்ளே செல்ல.. மீண்டும் ஒரு அறைபோன்ற அமைப்பு.. அடுத்துதான் பெரிய பட்டாசாலை.. நடுவில் மித்தம்.. சுற்றிலும் நான்கு பக்கமும் அறைகள்.. அதுவும் மரவாசற்படிகளுடன். சஹானா மிரட்சியாக பார்த்துக் கொண்டே பட்டாசாலையில் நின்றாள்.
காபி எடுத்து வந்த கிருபா “சஹானா, நீ என் ரூமில் தங்கிக்கோ.. இரு, தாத்தாக்கு காபி கொடுத்துட்டு வரேன்” என பேசிக் கொண்டே திண்ணைக்கு சென்றாள் கிருபா.
தாத்தா திண்ணையில் அமர்ந்திருந்தார்.. வந்த வண்டிகளுக்கு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். கிருபா, தாத்தாவிற்கு காபி கொடுத்து விட்டு, பாட்டி அறையில் இருக்க அங்கே காபி எடுத்து சென்றாள்.
சஹானா, கிருபாவையே பார்த்திருந்தாள்.. கிருபா, நடந்துக் கொண்டே இருந்தாள்.. திண்ணை, அதன்பின் ஒரு நீண்ட அறை.. அதன்பின் பெரிய பட்டாசாலை.. அதையடுத்து மித்தத்தின் பக்கவாட்டில் அறை.. எவ்வளவு தூரம்.. இப்படி நடந்தால்.. காபி ஆறிவிடாதா..’ என மனதில் நினைத்துக் கொண்டே நின்றாள், சஹா.
கோக்கிலா சஹானாவை அழைத்து சென்று.. தன் மகளின் அறையில் விட்டார்.. “நீ என்ன குடிக்கிற சஹானா.. முகம் கழுவி வா.. எடுத்து வைக்கிறேன்” என சொல்லி அவள் என்ன குடிக்கிறாள் என் கேட்டுக் கொண்டு சென்றார்.
கோக்கிலா, டிரைவர்.. மருத்துவ உதவியாளர்கள் என மூவர் வந்திருந்தனர் அவர்களுக்கு காபி கொடுக்க சென்றார்.