கிருபா, ஈசனுக்கு முன் வண்டியில் கிளம்பிவிட்டாள். அவளால் இன்னமும் தாத்தாவிடம் சொல்ல சங்கடம்தான். தாத்தா செய்து தருவார், ஆனால், மாமா கோவம் கொள்ளுவார்.. என யோசித்துக் கொண்டே அன்றாட வேலைகளை பார்த்தாள்.
இப்போது ஈசனும் தாத்தாவும் காரில் வந்து சேர்ந்தனர், கடைக்கு.
தாத்தா, அலுவலக அறைக்கு வந்தார் “என்ன டா, தாத்தாகிட்ட சொல்லாமல் வந்துட்ட” என்றார்.
ஈசன் முறைத்தான் அவளை.
தாத்தா புன்னகையோடு அமர்ந்தார்.. அவளின் எதிரே.
கிருபா தெளியாத முகத்தோடு அமர்ந்திருந்தாள்.
தாத்தா “ஆக, சத்தமில்லாமல் காரியம் நடக்குது” என்றார்.
ஈசனும் கண்மூடி திறந்தான் ஆம் என்பதாக. ஈசன் தாத்தாவிடம் பேசுவதற்கு யோசிக்கவே இல்லை. வீட்டிலிருந்து கிளம்பும் போதே.. கிருபாவினை தேடினான்.. அவள் கிளம்பிவிட்டாள் எனவும் தாத்தாவிடம் வந்தவன் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் தாத்தா.. என் காரில் வரீங்களா.. நாம போலாம்” என்றான்.
அப்படியே இருவரும் பேசி கொண்டே வந்து சேர்ந்தனர்.
இப்போது தாத்தாவின் பேச்சில் கிருபா எழுந்து நின்றாள்.. சிறுபிள்ளையாய். தாத்தாவின் முகம் புன்னகையைதான் காட்டியது.. “அது சரி, செய்யறதெல்லாம் செய்துட்டு.. இப்படி நின்றால் சரியாச்சா.. கிருபா” என்றார்.
கிருபா தலைகுனிந்து நின்றாள்.
தாத்தாவிற்கு பேத்தியின் இந்த கலங்கிய முகத்தை பார்க்க முடியவில்லை.. “நான்.. பாட்டி.. உங்க அம்மா எல்லோரும்.. மனதில் நினைத்திருந்தோம்.. இந்த பிள்ளைகளுக்கு பிடித்தம் இருந்து திருமணத்தை முடிந்திட மாட்டாமோ.. என. ஆனால், அப்போவெல்லாம், முறைச்சிகிட்டே நின்னீங்க, உங்களிடம் அப்படி ஏதும் இல்லவே இல்லன்னு நினைச்சோம்.. பார்த்தால், கல்யாணம் செய்துக்கிறோம்ன்னு இப்போ வந்து சொல்றீங்க” என்றார், குரலில் சந்தோஷத்தின் சாயல்தான் இருந்தது.
ஈசன் “தாத்தா, இப்பவும் சொல்லியிருக்க மாட்டோம்.. எனக்கு அடுத்த வருசம்தான், காண்ட்ராக்ட் முடியுது. இந்த ஷண்முகம்..” என பேசியவன், தாத்தாவின் பார்வையில் “அவரால்தான் இப்போ சொல்றோம். எங்களுக்கு அவசரமில்ல. அவர் கொண்டு வந்த வரண் மட்டும் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க, நானே சொல்லிடுவேன் எல்லோரிடமும், இவதான்.. உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனை வரும்ன்னு சொல்றா. ஆனால், நீங்க சொன்னால்தான் பிரச்சனை வரும்ன்னு எனக்கு தோணுது.. நீங்க இருங்க.. நானே அவரிடம் பேசிக்கிறேன்..” என்றான் ஒரு முடிவோடு.
தாத்தா “ஈசன்.. உன்மேல ஏற்கனேவே கோபத்தில் இருக்கான். கிருபாவை உனக்கு கட்டிக் கொடுக்கனும்ன்னு நீ கேட்டால், அவ்வளவுதான். கிருபாவை பேசியே கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்திடுவான். அத்தோட, பெரிய சண்டையாகும். நான் சொல்லிடுறேன்” என்றார்.
ஈசன் இப்போது தாத்தாவின் அருகே இருந்த சேரில் அமர்ந்தான்.. அவரை நோக்கி.. “அதான் தாத்தா நான் சொல்றேன், உங்ககிட்ட சண்டைக்கு வருவார்.. இதே நான்.. கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னால்.. ஒரே ஆளா போய்டும். எப்போதும் போல அவர் வேண்டாம்ன்னு சொல்லுவார், நான் வேணும்ன்னு நிப்பேன்.. நீங்க பேசி முடிச்சிடுங்க” என்றான்.. பெரிய திட்டமிடலோடு.
தாத்தா யோசனையில் இருந்தார்.. பின் “நான் அவனிடம் அமைதியாக பேசி முடிச்சிடுறேன். நல்ல விஷயம் நல்ல விதமாக நடக்கனுமில்ல ஈசா.. இரு, பார்ப்போம்” என்றார்
இதை விளையாட்டாக தாத்தா பேசிக் கொண்டிருந்தாலும், தன் பெரிய மகனை நினைத்து கொஞ்சம் பயம்தான் அவருக்கு. காசு பணம் சொத்து பிரிப்பது என எல்லாவற்றிலும், ஒரு அதட்டலில் அவனை சரி செய்திடலாம். ஆனால், கிருபா.. அவன் வளர்த்த பெண். இப்போதுதான் அக்கறையாக ஒரு வரன் கொண்டு வந்திருக்கிறான்.. இதை எப்படி பேசுவது என யோசினையில்தான் இருக்கிறார். அதனால், பேரனை அமைதியாக இருக்கும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஈசன் கிருபாவை பார்த்தான் இப்போது.
கிருபாவின் முகம் தெளியவேயில்லை.
ஈசன் “இன்னும் என்ன உனக்கு பிரச்சனை, அதான் தாத்தா ஒகே சொல்லியாச்சே” என்றான்.
கிருபா முகம் தெளிவை காட்டவேயில்லை.. இப்போதும்.
தாத்தா கூட சந்தோசமாக இருக்கிறார் எனலாம். ஆனால், இவள் முகத்தில் ஒரு புன்னகை கூட காணோம் என எண்ணிய ஈசன் “ஏன் தாத்தா, சண்முகம் ஏதாவது சூனியம் வைச்சிருப்பாரோ” என்றான் எரிச்சலான குரலில்.
தாத்தா “டேய்.. என்ன பேச்சு இது” என்றார்.
ஈசன் கொஞ்சம் தளர்ந்து “அங்க பாருங்க.. இப்போவே எப்படி பயந்து நிக்குறான்னு. அவர்.. இவளிடம் வந்து.. கொஞ்சம் அதட்டி.. ஈசனையா கல்யாணம் செய்துக்க போறேன்னு கேட்டால்.. இல்லைன்னு சொல்லிடுவா போல” என்றான் கிண்டல் குரலில்.
கிருபா கண்களில் தண்ணீர்.. அவன் கிண்டல்தான் செய்திறான். ஆனால், அவளுக்கு உண்மையான வார்த்தைகள்.
தாத்தா “சும்மா இருப்பா..” என்றார்.
கிருபா “அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.. நான் அப்பாவை பார்த்ததில்லை.. ஆனால், அவர்தான் எனக்கு அப்பா.” என்றாள் தழுதழுப்பான குரலில்.
தாத்தா அமைதியானார் அந்த நாட்களின் நினைவில்.
மீண்டும் கிருபாவே “இப்போது வேண்டுமானால், அவர் கோவம் கொள்ளலாம்.. இங்கே வராமல் இருக்கலாம். ஆனால், அப்போது..” என சொல்லி தாத்தாவை பார்த்தாள்.. ஈசனை பார்த்தாள்.
தாத்தா யோசனையில் இருந்தார். ஈசன் சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.. எதோ கதை கேட்க்கும் பாவனையில். கிருபாவிற்கு சங்கடமாக இருந்தது ஆனாலும் சண்முகம் மாமாவை பற்றி, இவருக்கு தெரிய வேண்டுமே என எண்ணி பேச தொடங்கினாள்.
“ஷங்கர் மாமா கல்யாணம் செய்துகிட்டு போன போது.. அவர்தான் தனியா குடும்பத்தை பார்த்தார். அவருக்கு கல்யாணம் ஆகும் போது வயது 33ன்னு அம்மா சொல்லுவாங்க. இந்த குடும்பம் சிதறிபோக இருந்தது.. சொந்த பந்தம் யாரும் எங்க அம்மாவை கட்டிக்க முன்வரலை.. எல்லோரும் தாத்தாவை சேர்த்துக் கொள்ளாமல் இருந்த நேரம் அது. மாமாதான் பாதுகாத்தார்.. இந்த குடும்பத்தை. ச..ங்கர் மாமாவை தப்பு சொல்லலை.” என ஈசனை அமைதியாக ஒரு பார்வை பார்த்தாள்.
ஈசன் லேசாக தலை குனிந்தான்.. இப்போது இந்த குடும்பத்தை பற்றி தெரிகிறதே அவனுக்கு.. அத்தோடு, தாத்தாவின் அருமையும் தெரிகிறதே.. எனவே, அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
கிருபா “ஆனால், ஷண்முகம் மாமாதான்.. இங்கே இருந்தார். தன் அப்பா அம்மாவின் உடல்நலம் பார்த்து.. இங்கு எழுந்த கெட்டபேர்.. தாத்தா அதானால் கொஞ்சநாள் வேலைக்கு போகலையாம், பாட்டி சொல்லுவாங்க. எங்க அம்மாவிற்கு மாப்பிள்ளை கிடைக்காமல் தேடி கல்யாணம் செய்து.. சரி, தன்னை பார்க்கலாம்ன்னு யோசிக்கும் போது.. அதை யோசிக்க விடலை.. எங்க நேரம். எங்க அப்பாவும் ஒரு வருஷத்தில் எங்களை விட்டுட்டு போயிட்டாங்க. நாங்க கொஞ்சநாள் எங்க அப்பாவீட்டில் இருந்தோம். அங்க, அம்மாவிற்கு மரியாதை இல்லையாம்.. இது தெரிந்து தாத்தா எங்களை பார்க்கனும்ன்னு பிரியப்பட்ட போது.. மாமா மறுத்து பேசாமல் வந்து.. பேசி கூட்டிட்டு வந்தாங்க. என்னை பார்த்து பார்த்து வளர்த்தார்.. ஸ்கூல் சேர்த்துவிட்டார். பஸ்சில் அனுப்பமாட்டாங்க.. ஒன்னு தாத்தா.. இல்ல மாமாதான் வந்து கூட்டிட்டு போவாங்க, வருவாங்க. மாமா கைபிடிச்சிதான் நான் எழுதவே ஆரம்பித்தேன். மாமாவுக்கு ரொம்ப பாசம் என்மேல.” என்றாள் அப்போதைய நினைவில்.
மீண்டும் “இப்போ மாற்றம் இருக்கலாம்.. ஆனால், நான் மாற கூடாதில்லை. கல்யாண வயதை மீறிய நிலையில்தான் மாமாக்கு கல்யாணம் ஆச்சு.. அதன்பின்தான் அவருக்குன்னு ஒரு குடும்பம். இந்த வயதில் நீங்க.. உங்க அப்பாவை வைத்துக் கொண்டு, யாருமில்லாமல் கஷ்ட்ட பட்டீங்கல்ல, அதை எங்க மாமா.. அப்போவே பட்டிருக்கார். எல்லோரும் இருந்தும் பட்டிருக்கார்.” என்றாள், திடமான குரலில்.
ஈசனின் முகத்தை ஏறிட்டாள் இப்போது அதில் ஒரு வருத்தம் தெரிந்தது.. “நா..ன், நடந்ததை சொன்னேன். எனக்கு அவர் சம்மதம் வேண்டும்.. வாங்கி கொடுங்க ஈசன்” என்றாள்.. யாசகமான குரலில்.
தாத்தா கிருபாவை பார்த்தார்..
ஈசன் என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றான்.
இப்போது தாத்தா அதட்டினார்.. “டேய்.. பொண்ணு கேட்க்குது.. என்ன யோசனை” என்றார்.
ஈசன் “அஹ.. என்ன கிருபா, கண்டிப்பா அவர் சம்மதத்தோட நடக்கும்” என்றான்.
தாத்தா “ம்.. பெண் பிள்ளைகள் மனம் வாடுவதை பார்த்திட்டு இருக்க, நமக்கு எதுக்குடா.. மீசை. பாசம் வைச்சவங்க.. கேட்க்கிரதையும்.. சொல்றதையும்.. செய்ய கடமைப்பட்டவங்க டா.. நம்ம இனம். பிள்ளை கண்ணில் தண்ணீ பாரு.. போ.. பேசு.. கிருபாம்மா.. நீ கவலை படாத, எல்லாம் சரி பண்ணிடலாம். அதைவிட என்ன இருக்கு எங்களுக்கு” என்றவர்.. அலுவலக அறையிலிருந்து வெளியே வந்தார்.
ஈசன் “கிறுக்கு டி, நீ.. என சொல்லி அவளின் கைகளை பற்றினான்.” கிருபா கைகளை விளக்கிக் கொண்டு எதிரே இருந்த சேரில் அமர்ந்தாள்.
ஈசன் “கிருபா, நீ சொல்றா மாதிரி, உங்க மாமா சரின்னு சொல்லும் வரை போராடுவோம் போராடுவோம்” என்றான் கிண்டலாகவே. இதுதான் அவனின் குரல்..இதுதான் அவனின் அதிகபட்ச அக்கறையான குரல் என கிருபாவிற்கு புரிந்தது.
கிருபா தெளிந்துக் கொண்டு ஈசனை பார்த்து புன்னகைத்தாள்.
சங்கரின் திவசம்.
குடும்ப நபர்கள் மட்டுமே. ஷண்முகம் காலையில்தான் வந்து சேர்ந்தார். படையல் எல்லாம் முடிந்து எல்லோரும் உண்டு அமர்ந்திருந்தனர்.
மாலையில்,
சம்பூர்ணா வரவில்லை. மீனாட்சியிடம் கிருபா அமர்ந்திருக்க.. சம்பூர்ணாவின் படிப்பு பற்றி பேச்சு சென்றுக் கொண்டிருந்தது. சஹாவும் அங்கேதான் இருந்தாள்.. மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
கோகிலா சண்முகம் இருவரும்.. எதோ பேசிக் கொண்டிருக்க.. இப்போது வக்கீல் வந்தார்.
தாத்தா வக்கீலை வரவேற்றார். எல்லோருக்கும் அதிர்ச்சி.. ஈசனை சந்தேகமாக ஷண்முகம் பார்த்தார். ஈசன் முறைத்தான். ம்.. எல்லோரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். அதிசியம் தான்.
உபசரிப்புகள் முடிந்தது..
தாத்தா “அவரவருக்கு சேர வேண்டியதை செய்திடலாம்ன்னு யோசிச்சேன். அதான் இவரை வர சொல்லியிருக்கேன்.” என்றார்.
சண்முகம் ஏதாவது பேசுவார் என எதிர்பார்க்க.. அவர் ஏதும் பேசவில்லை.
கோகிலா “என்ன அப்பா இது.. இப்போது எதுக்கு இதெல்லாம். எல்லோரும் நன்றாகத்தானே இருக்கோம். இப்போது ஏதும் பேச வேண்டாம் ப்பா” என்றார்.
அருணாசலம் “அப்படி இல்ல.. கோகிலா, பேசுவதில் என்ன தப்பு. உள்ளதை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில் என்ன இருக்கு. நீ சும்மா இரு” என அதட்டினார்.
பின் கணீர் குரலில் “பிள்ளையார்பட்டிகிட்ட இருக்கும் இடம் எட்டு ஏக்கர் அது என் மனைவி பெரியமகன் சண்முகத்துக்கும் கோகிலாவிற்கும் ஷங்கருக்கும்.. என நால்வருக்கும் சரி பாதி. நம்ம ஊரில் இருக்கும் பள்ளியின் பாதி பங்குதாரர் நான்.. அந்த பங்கு.. ஷண்முகத்திற்கும் என் மனைவிக்கும். ஊர் மத்தியில் இருக்கும் காம்ளெக்ஸ்.. அதில்தான் நம்ம கடை இருக்கு.. அதுக்கும் வாடகை கொடுக்கிறோம். அந்த காம்ளெக்ஸ் சண்முகத்திற்கும் சங்கருக்கும் சரி பாதி. பரம்பரை நகைகள்.. மீனாட்சி கோகிலா ரேவதி என மூவருக்கும் சரி பங்கு. மாரியம்மன் கோவில் அருகில் இருக்கும் சின்ன காம்ளெக்ஸ்க்கு அம்மா கோகிலா என இருவருக்கு மட்டுமே உரிமை. அடுத்து இந்த கடை.. வீடு.. இது என்னுடைய நான்கு பேரன் பேத்திகளுக்கு. அடுத்த நூறு வருடத்திற்கு.. இந்த நால்வரும் மட்டுமே எந்த முடிவுகளையும் எடுக்க முடியும், அதுவும் சேர்ந்துதான் எடுக்க வேண்டும். புதிப்பிக்க.. விரிவாக்க.. என எதுவும் செய்யலாம். சம்பூர்ணா மேஜர் ஆகும்போது.. அவளையும் பங்குதாரராக கொண்டு செயல்படும். கடையை இதுவரை கிருபா கவனித்துக் கொண்டதால்.. என் கையிருப்பு முழுவதும் அவளையே சாரும்.” என விலாவாரியாக படித்தவர் “எனக்கு பின்னரே நடக்கும்.. அதுவரை.. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பானவன்” என முடித்தார்.
ஷண்முகம் முகம் தெளியவேயில்லை. தன்னுடைய பங்குகள் எல்லாவற்றியும் சங்கருக்கு பாகம் கொடுத்தது அவருக்கு நெருடியது. ஆனால், எதையும் காட்டிக் கொள்ளவில்லை. மீனாட்சி அமைதியாக இருந்ததெல்லாம் வீணானதாக எண்ணம். தங்களுக்கு முழுமையாக வரவேண்டியதில் சங்கருக்கும் பங்கு என்றாக இருவருக்கும் வாடி போனது.
வக்கீல் விடைபெற்று கிம்பினார். யாரும் ஏதும் பேச முற்படவில்லை இறுக்கமான சூழல் அங்கே. தாத்தாவை எதிர்த்து யாருக்கும் பேச முடியவில்லை.
ஈசன் அமைதியாக தன் அறைக்கு வந்துவிட்டான்.
சஹா கிருபா இருவரும் தங்களின் அறைக்கு வந்தனர்.
பெரியவர்கள் மட்டுமே இருந்தனர்.. பாட்டி ஒரு சோகத்தோடு பூஜை அறையில் அமர்ந்துக் கொண்டார்.. அவருக்கு.. இப்போ எதுக்கு இதையெல்லாம் பேசணும் என எண்ணம்.. எனவே, தனிமையை நாடி வந்து அமர்ந்தார்.. சற்று நேரத்தில் “கிருபா” என அழைத்தார்.
கிருபா வந்து சேர்ந்தாள். பாட்டி “சாம்பிராணிக்கு தணல் எடுத்து வாடா” என்றார்.
பாட்டி சொல்லல சொல்ல.. சாம்பிராணி போட்டாள் கிருபா. இப்போதுதான் பாட்டியின் முகம் சற்று தெளிந்தது.
இரவு உணவு உண்டனர்.
தாத்தா பாட்டி ஷண்முகம் என மூவரும் உண்டனர். மீனாட்சி பரிமாறிக் கொண்டிருந்தார். கோகிலா தன் அன்னையின் அருகே அமர்ந்திருந்தார்.
ஷண்முகம் “அப்பா, கிருபாவை பெண் பார்க்க எப்போ வரசொல்லட்டும்.. கிருபாவை முன்பே தெரியும்.. அப்படியே சின்னதாக நிச்சயம் போல வைத்திடலாமா” என்றார் பொறுப்பாக.
தாத்தா “இரு டா.. கொஞ்சம் பொறுமையாக இரு..” என சொல்லி மீனாட்சியை பார்த்தார் பின் “உன் பெரியப்பா பையன் சதீஷ்க்கு தானே கிருபாவை கேட்க்கிறாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி, அத்தை சொந்தத்திலேயே ஏதாவது வரன் இருக்கான்னு பார்க்கும் போது.. அந்த பையன் பற்றி கேட்டோமில்ல” என்றார்.
மீனாட்சி “அஹ.. அப்போ அவங்களுக்கு.. அவனுக்கு கல்யாணம் செய்வதில் விருப்பம் இல்லை.. அதான் அப்புறம்” என சொல்ல..
அருணாசலம் “புரியலைம்மா” என்றார்.
ஷண்முகம் “அப்பா, அதெல்லாம் வேண்டாமே.. இப்போ கிருபாவை கேட்க்கிறாங்க” என்றார்.
தந்தை “சும்மா இருடா.. “ என மகனை அதட்டியவர் “சொல்லு ம்மா.. அப்போது ஏன் வேண்டாம்..” என்றார்.
மீனாட்சி “அதில்லை மாமா.. அப்போது அவனுக்கு அப்ராட் போயிட்டுத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு இருந்தான். அவனால், போக முடியலை. அவன் தம்பிக்கு நிச்சயம் ஆகிடுச்சி. இன்னும் ஆறுமாசத்தில் கல்யாணம் நடக்கலைன்னா, அப்புறம் நடக்கிறது கஷ்ட்டம்ன்னு சொல்லிட்டாங்க, அதான், இப்போது, இவனுக்கும் பார்த்திடனும்ன்னு நினைக்கிறாங்க.” என்றார்..
தாத்தா “ஆக, அவசரமாக தேடியதில் கிடைத்தது.. என் பேத்தி. ம்.. “ என்றவர் நிறுத்திக் கொண்டார்.
யாராலும் ஏதும் பேச முடியவில்லை.
தாத்தா உண்டு முடித்து எழுந்துக் கொண்டார்.
சண்முகம் “ஏன் கோகிலா, நான் கிருபாவிற்கு நல்லது நினைக்க மாட்டேனா.. அப்படி என்ன.. என்மேல நம்பிக்கை இல்லையா” என்றார்.
கோகிலா “என்ன பேச்சு சண்முகம் இதெல்லாம்.. அப்பா எதோ யோசிக்கிறார்.” என சொல்லி நிறுத்திக் கொண்டார்.
மீனாட்சி “விடுங்கக, இந்த வீட்டில் எதற்கும் நமக்கு உரிமையில்லை” என்றார்.
சிவகாமி “என்ன மீனா இப்படி பேசுற.. உன் மாமனார் எல்லாவற்றையும் யோசித்து செய்பவர்.. ஷண்முகா நீ எதுவும் நினைக்காத டா.. அவருக்கு கிருபா செல்ல பேத்தி டா.. பார்த்து பார்த்து செய்வார்.” என்றார்.
ஷண்முகம் “ம்.. எனக்கு மட்டும் அவள் யாராம்.. நான், நல்லது கெட்டது செய்ய மாட்டேனா.. அவளுக்கு. எங்க கிருபா.. கூப்பிடுங்க அவளை.. இந்த மாமா என்ன செய்யாமல் விட்டுட்டேன்னு கேட்க்கலாம்” என்றார் ஆவேசமாக.
அன்னை “டேய்.. சின்ன பையனாட்டம் என்ன பேச்சு இது. யோசிச்சு செய்வோம் டா.. நீ சாப்பிடு” என சமாதானப்ப்படுத்தினார்.
சண்முகம் “என்னை நல்லா சமாளி ம்மா..” என சொல்லி உண்டார்.
பின் “நீங்க எல்லோரும் சாப்பிடுங்க” என சொல்லி உண்டு எழுந்தார்.
சண்முகம் உண்டு வெளியே வர.. பட்டாசாலையில் அவர் கண்ட காட்சியில் “கிருபா.. மாமி சாப்பிட கூப்பிடுறாங்க போ..” என எரிந்து விழ வைத்தது.
முன்பே கடுப்பில் இருந்த ஷண்முகம் இப்போது வெளியே வரவும்..கண்ட காட்சி.. ஈசன் சோபாவில் அமர்ந்திருக்க.. சஹா கிருபா கீழே அமர்ந்திருக்க.. சின்ன பேக் ஈசனின் அருகில் இருக்க.. எதோ பெர்ப்யூம்.. எடுத்து கிருபா கையில் ஈசன் கொடுக்க.. அதை வாங்கிக் கொண்டு.. கண்கள் மின்ன.. அவள் ஈசனை பார்த்துக் கொண்டிருந்த காட்சிதான்.. அவரின் எரிச்சலுக்கு காரணம்.