நஞ்சினாலான அமுதன்!

11

சண்முகம் ஒருநாள் முன்பே வந்துவிட்டார்.. குடும்பத்தோடு. அவர்களின் அறையிலேயே இருந்தனர் மூவரும். ஏற்பாடுகளை கவனிக்க கூட சண்முகம் வெளியே வரவில்லை. என்னமோ மனம் மாறிபோனார் போல.

அருணாசலம், கிருபாவிடம் அந்தணரை பார்ப்பதற்கும்.. அவரிடம் இருக்கும் லிஸ்ட் வாங்குவது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். 

ஈசன், வெளியே வந்தான் இப்போது.. தாத்தாவின் பேச்சினையும் வேலையையும் கேட்டவன்.. “தாத்தா.. என்கிட்டவும் சொல்லுங்க.. நானும் இருக்கிற வேலையை பார்க்கிறேன்.. பாவம் அவங்களும் எத்தனை அலைவாங்க.. கடைக்கும் போகணும்.. நாளைக்கு ஏற்பாட்டினையும் பார்க்கணுமே.. அதனால், நானும் ஹெல்ப் பண்றேனே” என்றான். தாத்தாவின் அருகில் திண்ணையில் அமர்ந்தவாறு, ஈசன் பேசினான்.

ஈசன், இப்போதெல்லாம் தன்னிடமிருந்த ஒரு கருப்பு கேப் அணிந்துக் கொள்கிறான் வீட்டிலேயே. அன்று உடல் நலமில்லாமல் போனதிலிருந்து சற்று இளைத்திருந்தான். அதனால் தன்னை கண்ணாடியில் பார்க்கவே தனக்கு ஒருமாதிரி இருக்க.. கேப் அணிந்துக் கொண்டான்.. அறையிலிருந்து வெளியே வரும் போதெல்லாம். கிருபாவிற்கு கொஞ்சம் பயம் குறைந்திருந்தது.

தாத்தா புன்னகையோடே “தாராளமா உதவி பண்ணு. ஆனால், உனக்கு இடம் எல்லாம் தெரியாதே. கிருபா கூடவே போ.. லிஸ்ட் எடுத்து போய் கடையில் கொடுத்திடுங்க.. நம்ம கடைக்கு வந்திட்டு கூப்பிடுங்க.. சில தானப் பொருட்கள் எல்லாம் எடுக்கணும், எடுத்துகிட்டு.. கடையில் கணக்கு பார்த்திடு கிருபா.. நாளைக்கு நீ போக முடியாது. அதனால், ராம்கிட்ட சொல்லிட்டு வந்திடு. எல்லோரையும் மதியம் சாப்பிட வர சொல்லிடு. வரும் போது.. அந்த சாமான்களை எடுத்து வந்திடுங்க” என்றார் தெளிவாக.

ஈசன், தன் கார் எடுத்தான். சுவாதீனமாக கிருபா முன்பக்கம் ஏறி அமர்ந்தாள். இருவரும் பயணித்தனர். கிருபா வழி சொல்ல.. ஈசன் டிரைவ் செய்தான். ட்ராபிக் இல்லை.. தூரமும் அதிகம் இல்லை.. ஒன்றும் கஷ்ட்டமாக இல்லை, வேறு பேசிக் கொள்ளவும் இல்லை இருவரும். லிஸ்ட் வாங்கி.. ஹோம சாமான்கள் கடையில் கொடுத்து.. பின், மளிகை கடையில் இன்னொரு லிஸ்ட் கொடுத்துவிட்டு, தங்களின்  கடைக்கு வந்தனர்.

ஈசன் இப்போதுதான் முதல் முதலாக கடைக்கு வருகிறான். பணியாளர்கள் எல்லோரும் எழுந்து நின்றனர்.. ஈசனை பார்த்து. கேப் போட்டுக் கொண்டே எல்லோரையும் பார்த்து சிரித்தவன்.. சேல்ஸ் கவுண்டரில் நின்று பேச தொடங்கினான் அவர்களோடு.

கிருபா, அலுவலக அறைக்கு சென்றுவிட்டாள். 

நல்ல பெரிய கடை.. கீழ் தளத்தில் கார்னர் கடை, பெரிய போர்ட் “அருணாசலா வெள்ளி மாளிகை” என பழைய எழுத்துகளில் மின்னியது போர்ட். வாசலில் ஷோ பீஸ் என சில பொருட்கள் மட்டுமே இருந்தது.. ஆனால், உள்ளே.. நிறைய ஷெல்ப்பில்.. இப்போதைய கலெக்ஷன் எல்லாம் ஷோ பீசாக வைத்திருந்தனர். ஈசன் அதையெல்லாம் பார்த்துக் கொண்டே நின்றான். எல்லோரும் வேலையை பார்த்தனர்.

கிருபா, தாத்தாவிற்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தாள். ஈசன் உள்ளே வந்தான் இப்போது. கிருபா, இயல்பாக கண்களால் எதிர்லே இருந்த சேர்’ரினை காட்டினாள்.. அமரும்படி கையையும் அசைத்தாள்.. போனில் பேசிக் கொண்டே. 

ஈசன், முகத்தில் சட்டென ஒரு சுவாசியம்.. ‘பாருடா.. கண்ணு பேசுது’ என, அமர்ந்தான் அமைதியாக. அவனின் புருவம் உயர்ந்ததை கிருபா கவனிக்கவில்லை.

கிருபா பொருட்களை குறித்துக் கொண்டாள். போன் பேசி முடித்தவள்.. “இ..இருங்க” என்றவள் வெளியே வந்து பொருட்களை எடுத்து பேக் செய்து.. எப்போதும் போல பில்லிங் செய்ய வேண்டும் என சொல்லி, தன் அறைக்கு வந்தாள்.

ஈசன் “என்ன இத்தனையா.. எல்லாம் வெள்ளியிலா” என்றான்.

கிருபா “ம்.. செய்வோம்.. தாத்தாவோட மாமா.., அக்கா வீட்டுகாரர் இறந்த போது இப்படி எல்லாம் தானம் கொடுத்தாங்க.. அப்படி செய்தால், அவர்கள் நல்லபடியாக மேல்லோகம் செல்லுவார்களாம்.” என்றாள்.

ஈசனுக்கு ஒருமாதிரி முகம் வாடி போனது. 

கிருபா அதை கவனித்துவிட்டு “க்கும்.. எ..ஏதாவது குடிக்கிறீங்களா” என்றாள்.

ஈசன், கேப் எடுத்து கீழே வைத்தான்.. அவளை பார்த்தான் ““ம்.. வெளியே போய் குடிக்கலாமே” என்றான்.

கிருபா “வெளியவா..” என்றாள் தயக்கமாக.

ஈசன், அவளின் பார்வையை நேராக பார்க்க முயற்சிக்க.. 

கிருபா, அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்,  ஃபையில்களை எடுத்து வைப்பது போல கவனத்தை மாற்றிக் கொண்டவள் “ஏன், இங்கேயே” என ஆரம்பிக்க.

ஈசன் “வாங்க பாஸ்.. நான் பில் பே பண்றேன்” என எழுந்துக் கொண்டான்.

கிருபா “பத்து நிமிஷம் பொருட்களை எடுத்துகிட்டு போகிடலாம்” என்றாள்.

ஈசன் “ம்.. “ என போன் பார்த்து அமர்ந்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் பொருட்கள் பேக் செய்து.. பில்லோடு எடுத்து வந்து கொண்டுத்தனர்.

கிருபா எடுத்துக் கொண்டு “போலாம் ஈசன்” என்றாள்.

ஈசன் சாவி எடுத்துக் கொண்டு முதலில் செல்ல.. கிருபா வெளியே வந்து.. “தாத்தா எல்லோரையும் நாளைக்கு மதியம் சாப்பிட வர சொல்லிட்டார். நான் போன் செய்கிறேன். கடையை ரெண்டுமணி நேரம் லாக் செய்துட்டு வாங்க. சரியா பார்த்துக்கோங்க.. நாளைக்கு நாங்க வரமாட்டோம்” என சொல்லி விடைபெற்று கிளம்பினர்.

ஈசன் காரெடுத்து நின்றான்.

மீண்டும் கடைகளில் எல்லா சாமான்களையும் வாங்கிக் கொண்டு.. ஈசன் சொன்னது போல.. ஒரு கேக் கடையில் நிறுத்த சொன்னாள், கிருபா. 

ஈசன் காரினை பார்க் செய்துவிட்டு “நியாபகம் வைச்சிருக்க.. எங்க மறந்திட்டியோன்னு நினைச்சேன்” என சொல்லிக் கொண்டே இறங்கினான்.

கடையில் நல்ல கூட்டம். இருவரும் ஆர்டர் செய்து அமர்ந்திருந்தனர். ஈசன் “ஏதாவது பேசேன்..”  என்றான் எதார்த்தமாக. அவளை இந்த நாளில் ஆராய்கிறான்.. யார் எது சொன்னாலும் மறுப்பதில்லை.. எல்லாம் சரியாக செய்கிறாள்.. எதோ ஐந்தாம் வகுப்பு பிள்ளை போல. ஆனால், என்னிடம் மட்டும் இது சரி அது தவறு என பாடம் எடுக்கிறாள். இவள் டீச்சரா.. மாணவியா.. என அறியும் ஆர்வத்தில்.. அவளுக்கு தன்மீது ஆர்வம் இருக்கும் என எண்ணி.. தானே பேச வாய்ப்பளிப்பதாக எண்ணி இப்படி கேட்டான்.

கிருபா நிமிர்ந்து ஈசனை பார்த்தவள் “என்ன பேசுவது..” என்றாள் தோள்களை உலுக்கிக் கொண்டு.

ஈசனுக்கு என்னமோ போலானது. ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க எண்ணினான். அவள்முன் உட்கார முடியவில்லை. எழுந்து ஆர்டர் பார்த்து, அதை தானே எடுத்து வந்தான்.

கிருபா “செர்வ் செய்ய ஆட்கள் வருவாங்க” என்றாள்.

ஈசன் முறைத்தான். 

கிருபாவிற்கு அவனின் முறைப்பு எரிச்சலை தர.. கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தாள் “அவங்க செர்வ் செய்வாங்க.. நீங்க சொல்லுங்க, ஏதாவது சொல்ல நினைச்சீங்களா” என்றாள், கொஞ்சம் தயக்கமான குரலில், ஆனால், அவனின் முகத்தை பார்த்து கேட்டாள்.

ஈசன் “இல்ல..” என்றான் ஒரே வார்த்தையில், அதன்பின் இருவரும் பேசவில்லை. கிருபா போன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஈசன், அவளை பார்வையால் வருடினான். திமிரோ பயமோ.. எதோ ஒன்று.. அவளின் பாவனையில். ஆனால், ஈசனை அவளின் அந்த உடல்மொழி ஈர்த்தது.

கிருபாவிற்கு அவன் பார்ப்பது தெரிந்தது உண்டு முடிந்தவள்.. “போங்க.. சஹாக்கும், சம்பூர்ணாவிற்கும் ஏதாவது ஆர்டர் பண்ணுங்க. எனக்கு ஒரு வண்ணிலா மில்க்ஷேக்” என்றாள் அவனை பார்க்காமல்.

ஈசன் அழுத்தமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான், அவளையே.

கிருபா “மணியாச்சு, நானே போயிக்கிறேன்” என எழ எத்தனித்தாள்.

ஈசன் “பாஸ்.. நானே போறேன்” என்றான்.

கிருபா நிமிர்ந்து பார்த்து.. அவனின் தோற்றத்தில் கொஞ்சம் பயந்தாலும்.. அந்த இலகு புன்னகையில் தானும் புன்னகைத்தாள்.

ஈசன் ஆர்டர் செய்து வந்தான். கிருபாவிற்கு தாத்தா போன் செய்யவும்.. பேசிக் கொண்டிருந்தாள். தாத்தா வேட்டி துண்டு வாங்கி வர சொன்னார். கிருபா கேட்டுக் கொண்டாள்.

ஆர்டர் செய்திருந்த உணவுகள் வந்தது. இருவரும் கிளம்பி துணி கடைக்கு சென்றனர். எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். 

மறுநாள் காலையில்.. அந்தணர்கள் வந்தனர் ஈசன் ஈரமான வேட்டியோடு எல்லா சடங்குகளையும் செய்தான்.

உணவு தருவித்திருந்தனர்.

சண்முகத்தின் மனைவி வீட்டிலிருந்து, உறவுகள் வந்திருந்தனர். கோகிலாவின் கணவன் வீட்டு, ஆட்கள் வந்திருந்தனர். அருணாசலத்தின் அக்கா அண்ணன் வீட்டு சொந்தங்கள் என எல்லோரும் வந்திருந்தார். உறவுகள் மட்டும்தான். 

எல்லோரும்.. சங்கர் மற்றும் அவர் மனைவியின் புகைப்படத்தை பார்த்தனர். சஹா ஈசனை பற்றி விசாரித்தனர். கிருபாவிடம் பேச வந்தவர்கள் எல்லோருக்கும சஹாவினை அறிமுகம் செய்து வைத்தாள். ஈசன் தாத்தாவோடு அமர்ந்திருந்தான். சண்முகம் அதை கண்டு, அப்பாவின் அருகே வரவேயில்லை. சம்பூர்ணா எப்போதும் போல கிருபாவோடே இருந்தாள்.

மதியம் உணவு பந்தி நடந்தது.. தூரத்து உறவுகள் எல்லாம் தங்கினர் அடுத்த இரண்டு நாட்களும். வீட்டின் அறைகள் எல்லாம் சுத்தம் செய்து வைத்திருந்தனர். ஆங்காங்கே உள்ளே அறைகளில் எல்லா உறவுகளும் தங்கிக் கொண்டனர்.

அடுத்த இரண்டுநாளும் வீட்டில், வீட்டு மனிதர்களுக்கு நிற்க நேரமில்லை. உள்ளூர் உறவுகளும் அடுத்த இரண்டுநாளும் எல்லா சடங்குகளுக்கு வந்திருந்தனர். அருணாசலம் உறவுகளை தாங்கி நிற்பவர். எல்லா உறவுகளையும் கவனித்தார்.

சுபம் என பதிமூன்றாம் நாள் நடந்தது. ஈசன், தந்தைக்கு செய்ய வேண்டியதை எல்லாம் முறைப்படி அந்தணர் உதவியோடும்.. தாத்தாவின் பலத்தோடும் செய்து முடித்தான்.

எல்லாம் முடிந்து.. அருணாசலம் உறவுகளின் மத்தியில் ஈசனிடம் நின்றுக் கொண்டு.. சண்முகத்தை அழைத்தார் கண்களால். அவரோ வரவில்லை.

தாத்தாவே.. “நம்ம சங்கர் ரேவதியோட மகன்.. என்னோட பேரன். எங்கள் தலைமுறையின் அடுத்த வாரிசு..” என சொல்லி.. ஈசனின் கை பற்றிக் கொண்டவர். நிமிர்ந்து பார்த்து கிருபாவை அழைத்தார். மற்றொரு பக்கம் வந்து நின்றாள் கிருபா. கூடவே நின்ற சஹானாவையும் கூப்பிட்டு கொண்டார்.. கிருபாவோடு நின்றாள் சஹா. பின் தாத்தா “சம்பூர்ணா” என அழைத்தார் பேத்தியை. அவளும் வந்து ஈசனின் அருகே நின்றாள்.

ஷண்முகம் எழுந்து பின்னால் சென்றார் சத்தமில்லாமல். தாத்தா இதை கவனித்தார். ஆனாலும், ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.

அருணாசலம் “எங்கள் வாரிசுகளை ஒன்றாக பாவித்து.. சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

பெரியவர்கள் எல்லோரும்.. அதாவது தன் அக்காவின் மகன், மாப்பிள்ளை.. தன் அண்ணனின் மகன் மாப்பிள்ளை.. தன் சம்பந்தி வகையறாக்கள் என எல்லோரிடமும் கேட்டார். சம்மதம் என புன்னகை செய்தனர், சபையோர். அருணாசலம் சபையை வணங்கி.. தன் மனையாள் இருக்கும் இடம் வந்தார். இருவரும், சேர்ந்து எல்லோரிடமும் பேச தொடங்கினர்.

சற்று நேரத்தில்.. 

கோகிலா “ஷண்முகம் மீனாட்சி.. அப்பாவை வணங்கு” என்றார்.

மீனாட்சி கணவனை தேட.. தங்கையின் பேச்சு காதில் விழ.. மனைவி மகளோடு வந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார், சண்முகம். அடுத்த நொடி.. அங்கிருந்து சென்றுவிட்டார் ஷண்முகம்.

சம்பூர்ணா இயல்பாக அக்கா என பேசி பழகிக் கொண்டாள், சஹாவோடு. ஆனால், ஈசனோடு பேச தோன்றவில்லை போல.. அமைதியாகவே இருந்தாள்.

அடுத்தடுத்து.. கோகிலா கிருபா, ஈசன் சஹா என குடும்பமாக, தாத்தா பாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

உணவு முடித்து உறவுகள் எல்லாம் கிளம்பினர்

சண்முகம் உண்டு முடித்ததும் கிளம்ப வேண்டும் என.. தங்களின் அறைக்கு வந்துவிட்டார்.

அருணாசலம் மகனிடம் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டே இருந்தார். உண்டு முடித்து சற்று நேரம் படுக்கலாம் என தன் அறைக்கு செல்ல.. கோகிலா வந்து “தம்பி இப்போவே கிளம்புகிறான் போல ப்பா.. நீங்க என்னான்னு கேளுங்க” என்றார்.

அருணாசலம் மகனின் அறைக்கு சென்றார். சண்முகம், கிளம்பிக் கொண்டிருந்தார் ஊருக்கு.

மீனாட்சி “மாமா” என பதறி எழுந்தாள். எப்போதும் அறைக்கு வந்தவரில்லை அருணாசலம்.

அமைதியாக ஒரு சேரில் அமர்ந்தார்.. “என்னம்மா, உன் புருஷனுக்கு கோவம்” என்றார் லகுவான குரலில்.

மீனாட்ஷி “என்ன மாமா சொல்றது” என்றாள்.

ஷண்முகம் “மீனா நீ கிளம்பு, அவருக்கு புது உறவு வந்துவிட்டது. நீ கிளம்பு நமக்கு வேலை இருக்கு” என்றார்.

அருணாசலம் “டேய், என்ன டா.. யாரும் புது உறவு இல்லை டா. “ என்றார்.

சண்முகம் “என் மாமியார் வீட்டில் சிரிக்கிறாங்க. சபையில் நின்னு.. அவனை பேரன்னு சொல்றீங்க. புரிஞ்சு போச்சு எனக்கு. எதோ திட்டம் போடறீங்க..” என சொல்லி தன் உடைகளை மாற்ற தொடங்கினார்.

தந்தையோ “ஷண்முகா.. நம்மை நம்பி வந்தவன் டா.. பேரன். சங்கர் எந்த நிலையில் வந்தான்னு உனக்கு தெரியும், மத்தவங்களுக்கு தெரியாதுல்ல” என்றார் திடமான குரலில்.

மீனாட்சி மாமனாரை நிமிர்ந்து பார்த்தாள். அருணாசலம் பார்வையை திருப்பவில்லை.

ஷண்முகம் “நீங்க செய்தது.. செய்வது ரொம்ப அநியாயமா இருக்கு. இது என்னோட இடம். ஓடி போனவனை நீங்க இவ்வளவு மெச்ச வேண்டாம். விடுங்க, இனி என்னை எதிர்பார்க்காதீங்க.. மீனா கிளம்பு” என்றார்.

தந்தை மீண்டும் ஓய்ந்து போனார். என்ன பேசுவதென தெரியவில்லை. அப்படியே வந்து பட்டாசாலையில் அமர்ந்தார்.

பாட்டி அருகில் வந்து என்னவென கேட்டார். தாத்தாவும் மறையாமல் சண்முகத்தின் கோவத்தினை சொல்லிக் கொண்டிருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருக்க.. சண்முகம் குடும்பமாக வெளியே வந்தார்.. “அம்மா, நான் கிளம்புகிறேன்.. எங்களுக்கு நல்ல மரியாதை. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்றார்.

ஈசன் அங்கேதான் இருந்தான்.. அவனுக்கு ஓரளவு புரிகிறது. சண்முகத்தை பார்த்தால் பாவமாகவும் இருந்தது. ஆனால், என்னால் என்ன செய்ய முடியும் என அலட்சியத்தோடு பார்த்தான், அங்கு நடப்பதை.

ஷண்முகத்திற்கு, ஈசனை பார்க்கவும் இன்னும் கோவம் அதிகமாக.. “கிருபா.. கோகிலா நீங்க கூட என்னை இப்படி தள்ளி வைப்பீங்கன்னு நினைக்கலை” என்றவர்.. கோகிலாவின் பேச்சை காதிலேயே வாங்கவில்லை.

அப்படியே கிளம்பிவிட்டார். எல்லோருக்கும் தடுக்கவும் முடியவில்லை.. பேசவும் திராணியில்லை.. என்ற நிலை. எல்லோரும் ஓய்ந்து போயிருந்தனர். 

கிருபா கார் வரை சென்றாள் “மாமா, சீக்கிரம் சரியாகிடும் மாமா.. நீங்க தாத்தாவை புரிஞ்சிப்பீங்க” என்றாள்.. கார் நகர்ந்துவிட்டது.

சஹா இரவு பெங்களூர் கிளம்பினாள். தாத்தா “முடிந்தால், அண்ணன் போல.. வீட்டிலிருந்து செய்வது போல வேலையை மாற்றிக்க டா” என்றார்.

சஹா “எங்க கம்பெனியில் அப்படி இல்ல தாத்தா, பார்க்கலாம்” என்றாள்.

ஈசன் “தாத்தா.. பெங்களூர் நாங்க இருந்த இடம்தான். நிறைய தெரிந்தவர்கள் இருக்காங்க. இப்போ இவ இருக்கும் வீடு கூட அப்பாவின் ப்ரென்ட் வீடுதான்” என தைரியம் சொன்னான்.