நஞ்சினாலான அமுதன்!

10

இரவில் சங்கரின் உடல்நல்லடக்கத்திற்கு பிறகு.. உறவுகள் எல்லாம் கிளம்பி இருந்தனர். அருணாசலத்தின், அக்கா மகன் மட்டும் இருந்தார். உணவுகளை அவர்தான் தருவித்திருந்தார். அதனால், பந்தி முடிந்து எல்லாம் எடுத்து செல்லும் வரை இருந்தார். பந்தி முடிந்தது. வீட்டு ஆட்கள் எல்லோரும் கூட உண்டு விட்டனர். ஈசனும் சஹாவும் இன்னும் உண்ணவில்லை. கோகிலா அப்போதும் சஹாவிடம் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவள் அழுகையை நிறுத்தவேயில்லை.

பாட்டிக்கு சற்று  நடக்க முடியவில்லை.. ஜூரம் போல.. லேசாக உடல் சுட்டது. தலை வலி என்றார். அதனால் மருத்துவர்கள் அவருக்கு மருந்து கொடுத்து பார்த்தனர். தாத்தாவுக்கும், அப்படியே மருத்துவர்கள் பார்த்து சென்றனர். கோகிலா அங்கே இருந்தனர்.

ஈசன், சற்று நேரம் என்ன செய்வதென தெரியாமல் அட்டன்ஸ் போட்ட இடத்தில் வெளியேவே அமர்ந்துக் கொண்டான். பின் சூழ்நிலை உணர்ந்து.. உள்ளே எழுந்து சென்று.. உடை மாற்றி வந்தான். தங்கை எங்கே என பார்த்தான். அவளை காணோம் எனவும், கிருபாவின் அறைக்கு வந்தான். சஹா அழுகையோடுதான் இருந்தாள். கிருபா எதோ பேசிக் கொண்டிருந்தாள்.. பார்த்தவனுக்கு திருப்தி. அவளோடு யாரேனும் ஒருவர் இருக்கின்றனரே என. வெளியே இருந்தே “சஹா வா சாப்பிடலாம்” என்றான்.

சஹா “அண்ணா..” என மீண்டும் அழுகை. அண்ணனை அந்த கோலத்தில் பார்க்கவும் தங்கைக்கு.. மீண்டும் அழுகை. ஈசனுக்கு அவளை தேற்றவும் தெம்பில்லை. அவள் போல அழவும் தெம்பில்லை. அப்படியே மரம் போல வாசலிலேயே நின்றான்.

பார்த்த கிருபாவிற்கு சங்கடமாக போனது.. அவனின் தோற்றம் பார்ப்பதற்கே ஒருமாதிரி இருந்தது.. அடர்ந்த அவனின் சிகை.. தாடி மீசை எல்லாம் இல்லாமல் இருந்தது. கிருபா “வா.. ஈசன்.. வாங்க.. ” என்றாள்.

ஈசனும் “சஹா வா சாப்பிடலாம். எல்லோருக்கும் வேலை முடியனுமில்ல.. வா” என்றான், இறுகிய குரலில். 

கிருபா, ஒன்றும் சொல்லாமல் சஹாவை அண்ணனிடமிருந்து பிரித்து அனைத்தவாறே.. கூட்டிக் கொண்டு முன்னே நடந்தாள். மூவரும் உண்டனர்.

கிருபா அங்கேயே நின்று.. எல்லோரும் பொருட்களை எடுத்து செல்லும்வரை.. இருந்தாள். கிருபா ஏற்பாடுகள் செய்த மாமாவிடம் “சரி மாமா.. நாளைக்கு வேணும்ன்னா, கூப்பிட்டு சொல்லிடுறேன்” என்றாள்.

அவரும் கேட்டுக் கொண்டு வீடு கிளம்பினார்.

ஷண்முகம் தன் அறையிலிருந்து வெளியே வரவேயில்லை. அவர் மட்டுமே  வந்திருந்தார். பெரிதாக யாரையும் பார்க்கவில்லை.. பேசவில்லை. இப்போதும்  அப்படியே அறையிலேயே இருந்துக் கொண்டார். அம்மாவை கூட கவனிக்க வெளியே வரவில்லை.

சஹா எழுந்து எழுந்து அமர்ந்து அழுகை. பாதி இரவில் காய்ச்சல், கிருபா விடியற்காலையில் சஹாவின் அனத்தலை உணர்ந்து மாத்திரை கொடுத்து உறங்க வைத்தாள்.

மறுநாள் காலையில் எல்லா சடங்குகளும் நடந்தது, ஈசன் எல்லாம் செய்தான். தாத்தா கொஞ்சம் திடமாக இருந்தார். பாட்டிதான் தளர்ந்து போனார். பட்டாசாலையில் பெரியவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர். கோகிலா துக்கம் கேட்க்க வருபவர்களை பாட்டியிடம் அதிகம் பேசாமல் பார்த்துக் கொண்டனர்.

ஈசன், காலை உணவு முடித்து.. வந்தான். தங்கையை பார்க்க.. கிருபாவின் அறைக்கு சென்றான். சஹா அப்போதுதான் உண்டு அமர்ந்திருந்தாள். கிருபா அங்கே இல்லை. ஈசன் அதை கவனித்துவிட்டு உள்ளே வந்தான்.

ஈசன் “சஹா, நம்மை நாமதான் பார்த்துக்கணும் பாப்பா. அப்பா, கண்டிப்பா நம்ம கூடதான் இருப்பார். நீ அழுதால் எல்லாம் சரியாகிடும்மா.. வேலைக்கு போகணுமே.” என்றான்.

அண்ணனின் தோளில் சாய்ந்துக் கொண்டு மீண்டும் அழ எத்தனித்தவள்.. ஈசனின் பேச்சில் அமைதியானாள். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். 

கிருபா அங்கே வந்து “ஈசன், உங்களை தாத்தா கூப்பிடுறாங்க, கடையிலிருந்து வந்திருக்காங்க” என்றாள்.

ஈசன் எழுந்து சென்றான்.

சஹா, கொஞ்சம் தன்னை திடப்படுத்திக் கொண்டாள். குளித்து வெளியே வந்தாள்.

ஈசன் தாத்தா இருவரும்.. கடை பணியாளர் குடும்பத்தினரிடம் பேசி அனுப்பினர். 

ஈசன் அப்போதுதான் போன் பேசிக் கொண்டே எழுந்து, திண்ணைக்கு சென்றிருந்தான்.

சண்முகம் வந்தார் இப்போது.. “கிருபா” என்றார்.

கிருபா உள்ளிருந்து வந்தாள் “ஏன் மாமா..” என்றாள்.

சண்முகம் “கடைக்கு போகலையாம்மா” என்றார்.

கிருபா “மூன்றுநாள் கடைக்கு லீவ் சொல்லி இருக்கோம் மாமா” என்றாள்.

சண்முகம் இப்போது “என்ன ப்பா இது.. இன்னும் என்ன அவனை பற்றியே பேசிகிட்டு.. எதுக்கு மூன்றுநாள்.. நாளையே காரியம் வைச்சிக்கலாமில்ல” என்றார்.

அருணாசலம் “என்ன ப்பா, இப்படி கேட்க்கிற.” என்றார். ஆதங்கமாக.. உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.. பெரிய மகனின் பேச்சில்.

சண்முகம் “அப்பா, இன்னும் என்ன ப்பா.. அவனோட புராணம். மூன்றாம் நாள் காரியம் வைக்கலாம். வேலை இருக்குல்ல..” என்றார்.

தந்தையோ “அவன் எங்க பையன்.. நம்ம வீட்டு பையன். பத்துநாள் தீட்டு காக்க முடியாம என்ன வேலை எனக்கு ப்பா..” என்றார் ஓய்ந்த குரலில்.

சண்முகம் “இவ்வளோ சொல்றீங்களே.. இவன் கொடுத்த கேஸ் வாபஸ் வாங்கிட்டானா.. பையன்னா, அது நடந்திருக்கனுமில்ல.. இன்னும் கேஸ் அப்படியே இருக்கு. இங்கயும் இருப்பான்.. நம்ம சொத்தையும் கேட்பான்.. நாம, எனக்கு பையன்.. பேரன்..ன்னு, நான் செய்வேன்னு செய்யனும்.. என்ன பா இது..” என்றார்.

அருணாசலம் பெரிய மகனை பார்த்தார்.. ‘என்னவாகிற்று இவனுக்கு. அப்படியென்ன பாசம் விட்டா போக்கிடும்.. என்ன பேசுவது இவனிடம்..’ என பார்த்தார். 

ஷண்முகம் மாமா கேட்பதும் ஞயாயம் என கிருபாவுக்கு புரிகிறது. ஆனாலும், தாத்தா இருக்கும் நிலையில் எதற்கு அதை பேசுவானேன் என அமைதியாக இருந்தாள்.

தந்தையோ “ஷண்முகா.. அதெல்லாம் நான் கேட்கலை. எப்படியோ என் பையன் என்கிட்டே வந்துட்டான். அவனை நல்லவிதமாக வழியனுப்பி வைப்பது என் பொறுப்பு. அதன்பிறகுதான் மற்ற பேச்சு” என்றவர் எழுந்து தன்னறைக்கு சென்றார்.

கொஞ்ச நேரம் அமைதி.

கிருபா “மாமா, டீ போடுகிறன் குடிங்க..” என சொல்லி உள்ளே சென்றாள்.

ஈசன், சண்முகத்தின் பேச்சினை கேட்டுக் கொண்டுதான் இருந்தான். உள்ளே வந்தான் இப்போது.

ஷண்முகத்திற்கு கோவம் தாங்கவில்லை ஈசனை பார்த்ததும் “ம்.. வெட்கமே இல்லாமல் இன்னும் உட்கார்ந்திருக்க இங்க.. எப்போ என் வீட்டிலிருந்து கிளம்புவ..”  என தன் வயது மறந்து.. தன் குணம் மறந்து.. ஒரு சிறு பையனிடம் கடுமைகாட்டுகிறோம் என தெரியாமல் ஷண்முகம் சாடினார். 

ஈசனுக்கு அவரின் கோவம்.. அத்தனை உவப்பாக இருந்தது. ‘என் அப்பாவை எத்தனைநாள்.. அவஸ்த்டைப்பட வைத்தாய்’ என உள்ளுக்குள் எண்ணி சிரித்துக் கொண்டு.. அமைதியாக.. அசராமல் அவரின் எதிரே நின்றான், ஈசன்.

ஷண்முகத்திற்கு அவ்வளவு எரிச்சல்.. அவனின் அமைதியில். அவன் தன்னை நக்கல் செய்வது போலவே எண்ணம்.. கைகள் பறபறத்தது.. அவனை அடிக்க.. எரிப்பது போல பார்த்து நின்றார்.

கிருபா டீ எடுத்துக் கொண்டு வந்தாள். இருவரின் பார்வையும் சரியில்லை என உணர்ந்து “மாமா டீ.. இந்தாங்க” என்றவள் அங்கேயே நின்றாள்.

ஷண்முகத்திற்கு, ஈசன் அமர்ந்திருப்பது தன்னை பார்ப்பது ஏதும் பிடிக்கவில்லை.. எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டார்.

கிருபா ஈசனை முறைத்தாள்.. ஈசனும் முறைத்தான். 

கிருபாவிற்கு.. இப்போது.. அவனின் முறைப்பு பயத்தை தந்தது. கண்களை சிமிட்டினாள்.. இயல்பாக பார்த்தாள். ஈசன், இன்னமும் அவளை முறைத்தான். மொட்டை தலையோடு அவனின் இறுகிய முகமும்.. பார்வையும்.. கிருபாவிற்கு பயத்தை தந்தது. கிருபாவும் தாத்தாவின் அறைக்கு சென்றுவிட்டாள்.

ஈசன், அந்த சேரில் அப்படியே சாய்ந்து அமர்ந்துக் கொண்டான் ஆசுவாசமாக.

மதியம் யாரும் பார்த்துக் கொள்ளவில்லை.. தனித்தனியாக உண்டனர். சஹானாவும் ஈசனும் உண்டனர். கோகிலா இருந்தார். கிருபா உண்டு அப்போதே தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

ஈசன் உக்கிரமாகவே இருந்தான்.. பேசவில்லை.. முகத்தில் கூட இலகு தன்மையில்லை. வீட்டில் கோகிலா “ஈசா, தங்கைகிட்ட பேசு.. உன் நண்பர்கள் யார் கூடவாது பேசு.. கொஞ்சம் தைரியமா இரு.. என்னமோ எங்களுக்கு உன்னை பார்க்கத்தான் சங்கடமா இருக்கு ப்பா..” என்றார்.

ஈசன் பதிலே சொல்லவில்லை. சஹா “அத்தை அவன் எப்போதும் இப்படிதான். அம்மா இறந்த போது கூட அழவேயில்லை. பேசவும் மாட்டான். ரொம்ப அடமென்ட் அத்தை. வேலைக்கு போனால் சரியாகிடுவான்.” என்றாள்.

கோகிலா கேட்டுக் கொண்டார்.

சஹா கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தாள்.

ஈசன் உண்டு முடித்து லாப்டாப் எடுத்து அமர்ந்து கொண்டான் வேலையை பார்க்க, தங்களின் அறையில்.

மாலையில் தாத்தா பட்டாசலையில் எல்லோரையும் அழைத்தார்.. ஈசன் வந்தான் கண்ணெல்லாம் சிவந்து வந்து நின்றான்.

பாட்டி “என்ன ப்பா, உடம்பு முடியலையா” என்றார்.

ஈசன் “ம்..” என சொல்லி அமர்ந்துக் கொண்டான்.

சஹா, கிருபாவிடம் கேட்டு.. மாத்திரை எடுத்து வந்தாள். 

தாத்தா “பத்தாம் நாளில்தான் காரியம். நம்ம வீட்டு பையன். நாம்தான் செய்யனும். எல்லோரும் இருக்கணும். எங்கேயும் போக கூடாது. ஷண்முகம், மீனாட்சியை லீவ் போட்டுட்டு வர சொல்லு. குழந்தைக்கு ஸ்கூல் இருக்கு.. ஆனால், கண்டிப்பாக பத்தாம் நாள் வந்திடனும். என் குடும்பம் எப்போதும் இப்படிதான் இருக்கணும்.. சொல்லிட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்..” என்றார்.

ஈசன் ஏதும் சொல்லவில்லை.

ஷண்முகம் “அப்பா, அதெல்லாம் சரி வராது. லீவ் இல்லப்பா..” என்றார்.

அருணாசலம் “பிடிக்காதவங்க கிளம்பி போங்க..” என்றார்.. கோவமாக.

கோகிலாவும் பாட்டியும் “என்னங்க.. அப்பா..” என்றனர் ஒரே நேரத்தில்.

ஈசன் மாத்திரைகளை விழுங்கிக் கொண்டே அவரை நக்கலாக பார்த்தான்.

ஷண்முகம் “என்ன ப்பா, பழசு எல்லாம் மறந்துடுச்சா..” என்றார்.

ஈசன் “உங்களுக்குத்தான் மறந்துடுச்சி. என் அப்பா எவ்வளவு நாள் கேட்டார்.. உங்ககிட்ட.. நீங்க அப்போவே எங்களை கூப்பிடிருக்கணும். நீங்கள் செய்தததையும் ஞாபகம் வைச்சிக்கோங்க ஷண்முகம்.” என்றான் அதே நக்கல் குரலில்.

அருணாசலம், ஈசனை பார்வையாலே அடக்கினார்.. ஈசனும் கொஞ்சம் தலை தாழ்ந்து அமர்ந்தான்.

தாத்தா “எல்லாம் ஞாபகம் இருக்கு ப்பா. இரண்டுபேருமே எனக்கு பையன்தானே. நீயில்லைன்னா, நாங்க இப்படி இருந்திருக்க முடியுமா.. எனக்கு தெரியும் பா” என்றார்.

தாத்தா, ஈசனை பார்த்தார் இப்போது “அவன் உன் பெரியப்பா.. பழசை மறந்துடு. எப்போதும் மரியாதையாக கூப்பிடனும்.” என்றார் கொஞ்சம் குரல் உயர்த்தி.

ஈசனுக்கு, உடல் முடியவில்லை.. தலை தாழ்ந்தே இருந்தது அவனுக்கு. 

ஷண்முகம் “அப்பா.. இதல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். எனக்கு வேலையிருக்கு. நான் போயிட்டு வரேன். இவனை அந்த நாளோட.. கணக்கு முடித்து அனுப்பிடுங்க..” என்றார்.

ஈசன், எதோ நினைவு வந்தவனாக உள்ளே எழுந்து சென்றான்.

அருணாசலம் “அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.. லீவ் போட்டேன் ஷண்முகம்” என்றார்.

ஷண்முகத்திற்கு மனது ஒத்துக் கொள்ளவில்லை.. அப்பாவிடம் ஓரளவிற்கு மேல் பேசவும் முடியாமல் “இல்ல ப்பா.. லீவ் இல்லை.. நானும் அவளும் அப்புறம் வரோம். ஆனால், நீங்க அவனுக்கு இடம் கொடுக்கிறீங்க” என்றார்.

ஈசன் இப்போது வந்தான்.. கையில் தன் தந்தையும் தாயும் இருப்பது போன்ற போட்டோ எடுத்து வந்தான்.

அங்கே பெரியவர்களின் படங்கள் எல்லாம் பட்டாசலையின் சுவரை சுற்றி.. மேலே வைத்திருந்தனர். இப்போது ஈசனும் ஒரு சுத்தியளோடு வந்தவன்.. தன் தாய் தந்தையின் படத்தை, ஆணி அடித்து மாட்டினான் கடைசி படமாக.

எல்லோரும் ஒருவித சங்கடத்தில் பார்த்திருந்தனர்.

பாட்டி அழுகை “இப்படிதான் உன் படத்தை நான் பார்க்கனுமா” என..

சண்முகம் எழுந்து சென்று விட்டார், தன்னறைக்கு.

எலோருக்கும் சங்கடமாக போனது. ஈசனும் சஹாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பாட்டி.. மெதுவாக எழுந்து சென்றார்.. பெரிய மகனின் அறைக்கு. கிருபாவும் அவருடனேயே சென்றாள்.

தாத்தா “அவனுக்கு கொஞ்சம் கோவம். சரியாகிடுவான். நீங்க சகஜமா இருங்க.. சஹா இங்க வா” என பேத்தியை அழைத்தார். தன் அருகே அமரும் படி கைகாட்டினார்.

வீடு இரண்டுபட்டு நின்றது..

ஷண்முகம் அன்று மாலையே.. இரவு தொடங்கும்.. வேளையில்  கிளம்பிவிட்டார். தந்தையை பார்த்து சொல்லிக் கொள்ளவில்லை. அப்படியே கிளம்பிவிட்டார்.

தாத்தாவிற்கு இரவு உணவின் போதுதான் தெரிந்தது மகன் கிளம்பிவிட்டான் என.. “துக்க் வீடுல்ல, அதான் சொல்லிக்காமல் போயிட்டான்” என்றார் சங்கடமாக.

பாட்டி “அவன் இருக்கும் போது ஏன் பேசுறீங்க.. அவனே இருந்திருப்பான். நீங்க பேசியே அவனை அனுப்பிட்டீங்க” என சாடினார் கணவனை.

தாத்தா ஏதும் சொல்லாமல் உண்டார்.. “சஹா.. ஈசா.. எங்க? சாப்பிட சொல்லுங்க” என்றவர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பாட்டி கலங்கினார். கோகிலா “அம்மா, சரியாகிடும்.. நீங்க மாத்திரை இன்னும் சாப்பிடலை” என்றார், அவரின் கவனத்தை மாற்றி. பாட்டியும் கோகிலாவும் அறைக்கு சென்றனர்.

கோகிலா பிள்ளைகளை அழைத்து உணவு உண்ண சொன்னார்.. ஈசன் அப்புறம் உண்கிறேன் என்றுவிட்டான்.. சஹா வந்து சொன்னாள். கிருபாவும் சஹாவும் உண்டனர். 

கோகிலாவிற்கு முடியவில்லை. கண்ணம்மா அக்காவும் முடியாமல் இருக்க.. அவர்கள் அப்போதே படுக்க சென்றுவிட்டனர்.

கிருபா எல்லாம் எடுத்து வைத்து பாத்திரம் துலக்க நின்றுக் கொண்டாள்.

சஹாவிற்கு போனில் அழைப்பு வர.. கிருபாவிற்கு உதவிட்டு  இப்போதான் சென்றாள்.

கிருபா, வேலைகள் முடித்து.. டேபிள் துடைத்து.. கிட்சென் ஒழுங்கு செய்து வர.. பட்டாசாலையில் எதோ அனத்தும்  சத்தம் “ம்.. ம்மா…” என.

கிருபா, பயந்துவிட்டாள். என்னவென பார்த்தாள். சங்கர் மாமாவிற்கு ஏற்றிய விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. சத்தம் மீண்டும் வந்தது. கொஞ்சம் பயம்.. அப்போதுதான் சோபாவில் கால்கள் தெரிந்தது.. யாரோ படுத்திருக்கின்றனர் என.

கிருபா கால்களை பார்த்தே அது.. ஈசன் என கண்டுக் கொண்டாள். அருகே சென்று பார்க்க.. ஈசன் அனத்திக் கொண்டிருந்தான்.

கிருபா “ஈசன்.. தியாகீசன்” என அழைத்தாள்.

ஈசனுக்கு விழிப்பு வரவில்லை.. அவனுடைய மொட்டைதலை.. அவளை என்னமோ பயபடுத்தியது.. சஹா எங்கே என பார்க்க தன் அறைக்கு வந்தாள்.. அவளை காணோம்.

மீண்டும் கிருபா ஈசனின் அருகில் வந்தாள்.. நன்றாக அனல் அடித்தது.. அவனுக்கு காய்ச்சல் என தெரிகிறது. எப்போதும் போல மெடிக்கல் பாக்ஸ் எடுத்து.. டெம்பெர்ரைசர் கன் வைத்து.. பார்க்க.. அது இஷ்ட்டத்திற்கு 106 என காட்டியது. 

கிருபா பதறி “ஈசன்.. ஈசன்” என அழைத்தாள்.. கொஞ்சம் பயம்.. அவனின் நெற்றியில் கை வைக்க. ஆனாலும், நெற்றியில் கை வைத்து பார்க்க கொதித்தது. கிருபா “ஈசன்” என்றாள் குனிந்து.

ஈசன் கண் திறந்தான்.. இப்போது. கண்கள் வீங்கி.. சிவந்து.. கண்ணீர் மளுக்கென  வழிந்தது. கிருபா அந்த கண்ணீரை துடைத்தாள். அப்படியே அவளின் கைகளும் சுட்டது.

ஈசன் அவள்புறம் திரும்பி படுத்தான்.. கிருபாவின் கைகள் விலகியது.

ஈசனுக்கு ஒன்றும் புரியவில்லை.. தன் டி-ஷர்ட்டினை ஒரு கையால் பிடித்துக் கொண்டு கண்மூடினான்.

கிருபா, அவசரமாக.. தாத்தாவிற்கு செக் செய்யும் நர்ஸ், அவருக்கு அழைத்தாள். அவனை எப்படி மருத்துவமனை கூட்டி போவது என தெரியாமல்.

அவர் வருவதற்கு அரை மணி நேரமானது. அமர்ந்திருந்தாள்.. கிருபா. அவனின் நெற்றியில் வெள்ளை துணியை தண்ணீரில் நனைத்து போட்டுக் கொண்டு.

லேசாக விழிப்பு வந்தது ஈசனுக்கு “இங்க என்ன பண்ற” என்றான்.

கிருபா “சாப்பிடுறீங்களா” என்றாள்.

ஈசன் “போ.. நீ, நான் சாப்பிட்டுக்கிறேன்” என்றான்.

கிருபா உள்ளே சென்று தோசை ஊற்றினாள்.

நர்ஸ் அழைக்கவும். கதவை திருந்துவிட்டாள், கிருபா.

ஈசனுக்கு தோசை கொண்டு வந்து கொடுத்தாள் கிருபா. உண்ண முடியவில்லை அவனால்.

ஈசனை, பரிசோதித்து ஊசி போட்டார். ஒரு தோசை உண்டான்.

நர்ஸ், அவனை அப்படியே கூட்டி போய்.. அவனின் அறையில் விட்டு.. விடை பெற்று சென்றார்.

கிருபா கதவினை பூட்டி வந்தாள்.

கிருபா, ஈசனின் அறைக்கு வந்து தண்ணீர் வைத்தாள்.

ஈசன் கொஞ்சம் நினைவுக்கு வந்திருந்தான். ஈசன் பெட்டில் அமர்ந்துக்  கொண்டிருந்தான்.. உள்ளே வந்தவளின் கண்களை பார்க்க முனைந்தான். 

கிருபா “மாத்திரை போடணும்..” என சொல்லி ஒரு செட் மாத்திரைகளை கொடுத்தாள்.

ஈசன் அவளின் கண்களை இப்போது நேருக்கு நேராக பார்த்தான்.. கருவிழிகள் அசையாமல் பார்த்தான் அவளை. 

பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவனின் சிவந்த கண்களில் முன்போல முறைப்பில்லா பார்வையில்.. பயம் இல்லையெனிலும்.. என்ன இருக்கு.. என புரியவில்லை.. மேலும் ஒருநொடி அவனின் பார்வையை எதிர் கொண்டவள்.. சட்டென “மாத்திரை.” என சொல்லி வைத்துவிட்டு.. நகர போனாள்.

ஈசன் “தேங்க்ஸ்..” என்றான்.. அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு.

கிருபா ஏதும் பேசாமல் வெளியே சென்றாள்.

கிருபா, சஹாவை எழுப்பி.. அண்ணனோடு உறங்க வைத்துதான், வந்து படுத்தாள் தன் அறையில் கிருபா.

சஹா, அதன்பின் இரவில் எழுந்து மருந்து கொடுத்து அண்ணனை கவனித்துக் கொண்டாள்.