தேன் சாரல் நீ 27

    சுஜா ரியாக்ஷன் பார்த்து அதிர்ந்த காயுவும், கண்ணனும் ஜெய் கையில் கிடைத்தால் கைமா செய்யும் நிலையில் இருந்தனர்.

   தினம் ஒரு பிரச்சனை, ஒரு பஞ்சாயத்து. ஏச்சும் பேச்சும் வாங்குவது சுஜாவின் வழக்கமானது. சுஜா சாப்பிட வரும்போது, அவள் சமைத்த பதார்த்தங்கள் சில பல தீர்ந்து போயிருக்கும், அல்லது நீரில் மிதந்து கொண்டிருக்கும், அல்லது சில சமயம் உப்பில் ஊறிக்கொண்டிருக்கும்.

 சாப்பாடு பாத்திரத்தில் மண்ணுடன் சாப்பாடும் உறவாடிக் கொண்டிக்கும், யாராவது கேட்டால் கவின் அல்லது பவன் விளையாட்டாய் சாப்பாட்டில் மண் அள்ளிக் கொட்டியதாய் சமாளிக்கப்படும். இவை யாவும் ஜெய், விஜயன் கண்களுக்கு புலப்படாமல் நடத்துவது தான் கீதாவின் ஸ்பெஷாலிட்டி.

    சிலநாள் சுஜா மீது பாலபிஷேகம், குழம்பபிஷேகம் என நடப்பதும் உண்டு. அந்த நாட்களில் சுஜா ஜெய்யுடன் செல்ல அவசர அவசரமாக புடவையை மாற்றிக் கொண்டு ஓட நேரும். மொத்தத்தில் ஒரு வெறுப்புணர்ச்சியை சுஜாவின் மனதினுள் ஆழப்பதித்தனர்.

   இப்போதெல்லாம் காலை சாப்பாட்டையும் கையோடு எடுத்துச் செல்வது அவள் வழக்கமாயிற்று. இங்கேயே அதை சாப்பிடுவது இல்லை என அதற்கும் பேச்சி வாங்கினாள். உட்கார்ந்து சாப்பிட்டால் பஸ் மிஸ்ஸாயிடும். நான் பஸ்ஸில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொள்கிறேன் என விஜயனிடம் பர்மிசன் வாங்கியிருந்ததால் கீதாவால் ஏதும் செய்ய முடியவில்லை.

   சுஜா அன்று பேபி பிங்க் நிற காட்டன் சேலையில் அழகாக கிளம்பியிருந்தாள்.

  பேபி பிங்க் உடையில் அவள் தேவதை போல இருக்க, அவளை  ரசித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ஜெய் . அவன் சுஜாவை பார்த்துக் கொண்டே சாப்பிடுவதை பார்த்த சுசிலாவுக்கும், கீதாவுக்கும் வயிறு எரிந்தது.  குழம்பில் ஏதும் செய்யமுடியாது என புரிந்து, பவனை  வேகமாய் கிள்ள அவன் ஓங்கி அழ ஆரம்பித்தான். இங்க் பாட்டிலுக்காய் அடம் பிடிக்கிறான் பவன் என ஜெய்யின் கருப்பு இங்க் பாட்டிலுடன் கீதாவும், பவனும் நடைபோட்டனர்.  ஜெய் அவன் மனைவியை பார்ப்பதை பொறுக்க முடியாமல், கீதா வேக வேகமாக இங்க்குடன் வர, விஜயனுக்கு சாம்பார் பரிமாறிக் கொண்டிருந்த சுஜா சட்டென  நகர்ந்தாள். தவறுதலாக???? விஜயன் மீது அன்று  இங்க் அபிஷேகம் நடந்தது.

   கீதா பதற, “ விடுமா குழந்தை தானே அவனுக்கு என்ன தெரியும்?” என பொறுமையாக சொன்ன விஜயன்,

   “பதறாத கீதா. வயிற்றிலிருக்கும் குழந்தை பயந்துக்க போகுது. நீயென்ன சுஜா அழகா கிளம்புதுன்னு பொறாமையிலா கொட்டின? பவன் தெரியாம கைத்தவறி… என்மேல கொட்டிட்டான். நீ வா.. வந்து கொஞ்சநேரம் பொறுமையா உட்காரு.” என சமாதானம் செய்வது போல அவளை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்துவிட்டு,  மறுபடியும் மெதுவாக குளித்துவிட்டு சட்டையை மாற்றிக் கொண்டு, “படுத்து தூங்கும்மா கீதா..தெரியாம தானா நடந்ததுக்கு நீயென்ன செய்வ? நான் சுஜாகிட்ட பேசறேன்” என சொல்லி தனது வேலையை பார்க்க சென்றான்.

    சுஜாவும், ஜெய்யும் அதற்குள் கிளம்பி சென்றிருக்க இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சுஜாவிடம் இதுபற்றி பேசப்போகிறான் விஜயன் என்பதையே ஏற்க முடியாமல் பல்லைக்கடித்துக் கொண்டு கோபத்தை அடக்கினாள் கீதா.

  இந்நிகழ்வுக்குப் பின் விஜயன் கவனம் கீதாவின் மேல் விழுந்தது. அடுத்தமுறை பவனை காணாமல் கவினை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து பால் கப்புடன் வர விஜயன் சூடான ரசத்தை டம்ளரில் ஏந்தியபடி பவனுடன் வந்தான்.

   சட்டென கீதாவின் அருகே வந்து, விஜயன் வேண்டுமென்றே தடுமாற, கொதிக்கும் ரசம் கீதாவின் முன் தளும்பி சிதறியது. கீதாவின் கால் பாதங்களில் சூடான ரசம் தெறித்தது.

    “ஐய்யோ எரியுதே! எரிச்சல் தாங்க முடியலயே!” என கீதா கதற “ஏன்டா கண்ணா எப்ப பார்த்தாலும்  பாலு, குழம்பு, ரசம்,  இங்க்ன்னு சுஜாம்மா மேலயே தினமும் நீ ஊத்தி விடற? ஒருநாளாவது உங்கம்மா மேல ஊத்தின நீயி?ஆனா பாரேன்! ஒரே ஒரு நாள் ரசம் மேல லைட்டா பட்டதுக்கே உங்கம்மா ஆளாப் பறக்குறா. தினமும் நீ கப் முழுசும் ஊத்தினாலும் உங்க சுஜாம்மா பொறுமையா இருக்காங்க. ஷீ இஸ் ஸச் எ ப்ரேவ் அண்ட் ஸ்ட்ராங் லேடி.” என விஜயன் சொல்ல விக்கித்து நின்றாள் கீதா.

   “தன் வினைத் தன்னைச்சுடும்  பழமொழி ஞாபகம் இருக்குதான? ரசம் மேல லைட்டாதான் பட்டிருக்கு. ஆனா அடுத்த தடவை இதை திருப்பி பண்ணினா சூடான ரசம் தலை முதல் கால் வரை சட்டியோட கொண்டு வந்து ஊத்திவிடுவேன்.”

    “ இனி ஒரு தடவை சுஜா மேல கைத்தவறி கொட்டினாலும் கன்னம் பழுத்துடும் ஜாக்கிரதை. கர்ப்பினின்னு கூட பார்க்க மாட்டேன். அந்த பொண்ணு அமைதியா போறது உனக்கு பயந்து இல்ல.. அதோட புருஷனுக்காக.. அது தெரியாம இந்த கூத்தா? ச்சே  எங்கம்மா அதுந்தம்பிக்கு வாக்கு குடுத்திட்டேன்னு யேன் வாழ்க்கையையே அழிச்சிடுச்சி..” என ஆத்திரத்தில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்தான் விஜயன்.

   இப்போதாவது சுசிலா சுதாகரித்தாரா? விடுமா கீதாவும், விதியும்? இரண்டும் சுசிலாவுடன் சேர்ந்து சுஜாவின் வாழ்வில் பேயாட்டம் போட காத்திருக்கும்போது எப்படி புத்தி வரும் சுசிலாவுக்கு?

    முதுகலை கல்வியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அந்த வார ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்தது . அதற்கு ஜெய்யுடன் சுஜாவும் அப்ளை செய்திருந்தாள்.

    ஹால் டிக்கெட் வந்ததும் ஜெய் வீட்டில் அந்த வாரம் இருவருக்கும் தேர்வு இருப்பதாக கூற, ஏன், எதற்கு, இதை எழுதாவிட்டால் என்னவாகும் என சில பல கேள்விக்கணைகளை தாண்டி வருவதே பெரும் பாடானது அவனுக்கு.

     “அம்மா இது எம்.எட்  படிப்பிற்கான நுழைவுத்தேர்வு. இதை பாஸ் பண்ணி எம்.எட் கோர்ஸ்ல சேர்ந்து அதை முடிச்சிட்டா பரிட்சை எழுதி காலேஜ்  வாத்தியாரா போலாம்மா. இன்னும் சம்பளம் கூடும்.” என ஜெய் உளற, கீதாவுக்கு உதறலெடுத்தது.

    “இதுவே வேணாமுன்னு நினைச்சா, இதை விட நிறைய சம்பளம் வரக்கூடிய காலேஜ் வேலையா வேணும் உனக்கு? இருடா வர்றேன்” என மனதினுள் புகைந்தவள், தேர்வு அன்றே தனக்கு வளைகாப்பு விழா வைப்பதென முடிவு செய்தாள். ஆம் அவளே முடிவெடுத்தாள்.

   சுஜா தானுண்டு, தன் வேலையுண்டுன்னு போனாலும் கீதா குறுக்கே வந்து குளறுபடி செய்வதுதான் வழக்கமாயிற்றே. ரகசியமாக தன் தாயிடம் சொல்லி உறவினருக்கு அழைப்பு விடுக்கச் செய்தாள்.

    சுசிலாவிடமும், விஜயனிடமும் முதல்நாள் சொன்னால் போதும் என இருவரும் முடிவெடுத்தனர்.

   அவள் பக்க உறவினர்களே ஐம்பது பேருக்கு மேல இருக்கனும் என முடிவு செய்தனர் அம்மாவும், பொண்ணும். சமையல்காரர்கள் தேவையில்லை, சுஜாவே சமைத்துவிடுவாள் என நினைத்தனர். வீட்டில் சமைக்கவென ஒருத்தி இருக்க, சமையல்காரன் எல்லாம் தண்டமாக எதுக்கு? அந்த காசும் மிச்சம் பிடிக்கலாம் என கனவு கண்டனர் கீதாவும், அவள் அம்மாவும்.

   மெனு முடிவு செய்து சமைக்க தேவையானவை வரை பட்டியலிட்டு வைத்தனர். முதல் நாள் சொன்னால் பக்கத்தூரில் இருக்கும் கீதாவின் சித்தி குடும்பம் பொருட்களை வாங்கிக்கொண்டு வந்துவிடுவர். விழாவின் போது கீதா “ ஏங்க நம்ம வளைகாப்புக்கு சித்தப்பா பொருள் வாங்கிட்டு வந்தா நல்லாவா இருக்கும்? நாமளே பணம் குடுக்கலாங்க” என எல்லோர் முன்னாடியும் சொன்னால் விஜயன் பணம் கொடுத்துவிடுவான் என நினைத்தனர்.

   யாரிடமும் சொல்லாமல் திட்டம் தீட்டி திடீரென காலையில் சொன்னால் சுஜாவும், ஜெய்யும் பரிட்சைக்கு போக முடியாது என நினைத்தாள் கீதா.

  ஆனால் நடந்ததோ யாரும் எதிர்பாராதது. விஜயன், கீதா தனியாக சென்று அடிக்கடி பேசி வருவதை கவனித்தான். பரிட்சைக்கு சுஜா செல்வதை தடுப்பதற்காக ஏதோ திட்டம் தீட்டுகிறாள் என நினைத்தான்.

   “டேய் ஜெய் உன்ன காப்பாத்த ரிஸ்க் எடுக்கிறதே எனக்கு பொழப்பா போச்சி.” என புலம்பியவன்,  அவளுக்கு முன் தான் முந்திக்கொள்ள நினைத்தான். உடல்நிலை சரியில்லை, வழுக்கி விழுந்துட்டேன், வயிறு திடீரென வலிக்குது, உதிரப்போக்கு இருக்கு இப்படி ஏதோ ஒன்னைச் சொல்லி   ஹாஸ்பிடல் போகனும், சுஜா கூடமாட ஒத்தாசைக்கு வேணும், அதனால அடுத்த முறை பரிட்சைக்கு போயிடலாம். குழந்தையை விட பரிட்சையா முக்கியம் அப்படின்னு டிராமா பண்ணுவாங்கன்னு விஜயன் நினைத்தான். ஹால்டிக்கட், மற்ற தேவையான சான்றிதழ்களை  முன்தாகவே தயார்செய்து தன்னிடம் தரும்படி விஜயன் சொல்ல, சுஜா அதுபோலவே செய்ய அதை  வாங்கியவன் பத்திரப்படுத்தினான்.

  ஓரிரு செட் நல்ல உடைகளை மாடி அறையில் கீதா, சுசிலாவுக்கு தெரியாமல் கொண்டு வைக்கச் சொன்னான்.

விஜயன் எதிர்பார்த்தபடி முதல் நாள் இரவு பவன் தங்களறையில் கட்டிலின் மேல் வாந்தியெடுத்தான். “எனக்கும் வாந்தி வருவதுபோலவே உள்ளது. படுத்தா படபடன்னு வருது. என்னால முடியல”ன்னு கீதா பதறி அழ, சுசிலா சுஜாவிடம், “இன்னைக்கு உங்க ரூம்ல படுத்துக்கட்டும். நாளைக்கு காலையில புது மெத்தை வாங்கி போட்டுடலாம்” என கெஞ்ச,

 விஜயனை பார்த்தபடி, “சரி படுக்கச்சொல்லுங்க. ஆனா காலையில நாங்க நேரமா கிளம்பனும். சீக்கிரம் எழுப்பி விட்டுடுவேன். எங்கிட்ட கோவிச்சுக்க கூடாது” என்றாள்.

  அதை காலையில பாத்துக்கலாம் என நினைத்தபடி கீதாவும், சுசிலாவும் உள்ளே சென்று கதவை தாழிட்டனர். கதவை தவிர மற்றதெல்லாம் பூட்டியிருக்க பாதி கிணறு தாண்டியாச்சி.  காலையில கதவை திறக்கவே கூடாதுன்னு முடிவு செஞ்சிக்கிட்டூ தூங்கினர்.

   விஜயன் திட்டப்படி, முதல் நாள் இரவு பத்து மணிக்கு மகேஷின் நண்பர் ஒருவரும், இன்னும் இருவரும் அதே தேர்வு மையத்திற்கு காரில் செல்வதாக மகேஷ் ஜெய்யிடம் போனில் பேசும்போது  சொன்னான். அதை கேட்ட விஜயன், அவர்களுடன் அதிகாலையில் கிளம்பி சென்றால் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு, தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு செல்லலாம் என்று  ஜெய்யிடம் கூறினான்.

   ஜெய்யோ, “அண்ணா! எல்லாரும் தூங்க போயிட்டாங்க. அம்மா, அண்ணிக்கிட்ட சொல்லாம காலையில எப்படி கிளம்பறது?” என புலம்ப

  “ஏன்டா முட்டாள் ஒரு தடவை சொன்னா கேக்கமாட்டியா?” அப்படின்னு ஜெய்க்கு நாலு அறைவிடத் தோணுச்சி விஜயனுக்கு, “கோபப்பட்டால் காரியமே கெட்டுடும்…. சோ பொறுமை விஜயா! பொறுமை!” என தன்னைத்தானே சமாதானப்படுத்தியவன்,

  “நான் காலையில பொறுமையா சொல்லிக்கிறேன். சொன்னா புரிஞ்சிப்பாங்க????  தனியா போனா மூணு பஸ் மாறி போகனும். பஸ்ஸு நின்னு நின்னு போறதுக்குள்ள விடிஞ்சிடும். நீங்க கார்ல பத்திரமா போய்ட்டு வாங்க” என ஆயிரம் சமாதானம் சொல்லி கிளம்ப வைத்தான்.

   நாலு மணிக்கே எழுந்து, அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு, “அப்பாடா இனிதான் கச்சேரி ஆரம்பம். பார்க்கலாம் இன்றைய ஆட்டத்தை. ஒரு வேளை அதிர்ச்சியில குறைமாசத்துல குழந்தை பிறந்திடுமோ?” என முனகியவன் சமையலறை சென்று  சுடச்சுட டீ போட்டுக்கொண்டு வந்து திண்ணையில் ஹாயாக உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தான்.

  கிழக்கே வெளுக்க ஆரம்பிக்க, இரண்டு, மூன்று வண்டிகள் மூட்டைகளுடன் வந்து நின்றன வாசலில்.

    “ஓ.. நாடகம் ஆரம்பம் போல. ஆனா இன்னும் நம்ம கூனி எழுந்து வரலையே..!” என யோசித்த விஜயன், வந்தவர்களை வரவேற்க வேகமாக வாசலுக்கு போனான்.

  அங்கே கீதாவின் சித்தி, அவரின்  கணவர் குழந்தைகளுடன் சில பல பைகள், சாக்குகளுடன் நின்றார்.

   “வாங்க மா.. மா.., வாங்கத்தை… என்ன காலையிலேயே இந்த பக்கம்? விசேஷம் எதாவது இங்க பக்கத்துல நடக்குதா? அங்க போயிட்டு ஆர அமர பொறுமையா விடிஞ்சதும் வந்திருக்கலாமே? விடிஞ்சும் விடியாம இருக்குற இந்த நேரத்துல திருடங்க போல வந்து நிக்கிறிங்க?”

   “உங்க அரும பொண்ணு எழுந்து வரவே எட்டு மணியாகும். அப்புறம் யார பாக்க இப்பவே வந்திங்க?” என முகத்துல அடிப்பதுபோல கேட்டான் விஜயன்.

  கீதா, கீதாவின் அம்மா, கீதாவின் சித்தி மூவரும் குணத்துல ஒரே குட்டையில ஊறின  ஒன்று போலவே அழுகின மட்டைகள்.

    கீதாவின் சித்தப்பா சற்றே தயங்க, கீதாவின் சித்தியோ, “உங்களுக்கு எப்பவும் தமாசுதான் மாப்பிள்ளை. கீதா கண்ணு எந்திரிச்சி வரலன்னா என்ன? அவளா  எங்களுக்கு காபி போட போறா? எங்க அந்த புது பொண்ணு? இன்னுமா எந்திரிச்சி வரல? பொழப்பு உருப்பட்டாப்புலதான்!”

   “என்ன படிமானம் பழக்கி வச்சிருக்காங்க அவ வூட்டுல? ஒரு பொம்பள புள்ள விடிஞ்சி இவ்வளவு நேரம் தூங்குனா அந்த வூடு விளங்குமா?” புலம்ப ஆரம்பிக்க

   “ஹலோ மாமியாரே! நீங்க உங்க பொண்ணுக்கு பழக்கின படிமானத்தைவிட அவங்க கம்மியா பழக்கல. ஆமா உங்க கீதா பொம்பள புள்ள இல்லியா? திருநங்கையா? ஓ அதனாலதான் எத்தனை மணிக்கு வேணுமுன்னாலும் எந்திரிச்சி வரலாமா? இத தெரியாம பொண்ணுதான்னு நான் வேற கட்டித் தொலச்சிட்டேனே!” என சத்தமா சொன்னவன்

   “இந்த காபி தண்ணிக்குதான் விடியாம கிளம்பி வந்திங்களோ?” சத்தமாக கேட்டவன் மெதுவாக “என்ன பிச்சைக்கார குடும்பம்டா?” என முனுமுனுத்தான்.

   “மாமா யேன் போனு உள்ள இருக்கு. வீட்டு போனு வேலை செய்யல. கொஞ்சம் உங்க போன குடுங்க” என வாங்கியவன் அருகிலிருந்த வாளி நீரில் பொத்தென போட்டான்.

   “மாப்பிள்ளை எங்க போன்!” கீதாவின் சித்தி கத்த

   “ஆமா உங்க போன்தான். நீங்க குளிச்சி நல்ல டிரஸ் போட்டு அடுத்த குடும்பத்த கெடுக்க காலையிலேயே கிளம்பி வந்திங்களே, அந்த போன்-ஐ குளிப்பாட்டி விட்டிங்களா? அதான் நான் குளிக்க வச்சிருக்கேன். போறப்பே பத்திரமா கொண்டுபோய் துவட்டி பவுடர் போட்டு விடுங்க” என்றான் விஜயன்.

    இன்னும் உள்ளே கூப்பிடவில்லை. உட்கார சொல்லவில்லை, போனை தண்ணீரில் போட்டாச்சி, ஏதோ புரிந்தது கீதாவின் சித்தப்பாவுக்கு. ஆனாலும் வாயை திறக்கவில்லை அவர்.

  அதற்குள் வீட்டினுள் போன் அடிக்க விஜயன் வேண்டா வெறுப்பாய் “உள்ள வந்து உட்கார்ந்து எதுக்கு வந்திங்கன்னு காரணத்தை சொல்லிட்டு போங்க” என உள்ளே சென்றான்.

  போனை எடுத்து சற்றே குரலை மாற்றி ஜெயனின் குரலில் “ஹலோ” என்றான்.

 போனில் யார்?  கீதா ஜெயித்தாளா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.