நீலா சிறிது நேரம் யோசித்தவள், மொழியை பார்க்க சென்றாள். சென்றவள், “மொழி இது நாம விருப்பப்பட்ட வாழ்க்கையானாலும் இதை அமைத்து தந்தது நம்ம சுஜாதான். அவளுக்கு அவங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணாங்க எல்லாரும் சீர் செஞ்சாங்க. நாம என்ன செஞ்சோம்?” என்க, மொழியோ
“ ஆமங்கா நமக்காக நிறைய விட்டுக்குடுத்தா. நாம இங்க இருக்கும்போது நமக்காக ஒன்னொன்னா பாத்து பாத்து செய்யறா. இப்போகூட சென்னையில நமக்கு வாங்கி குவிச்சிருந்தா.”
“அத்தைங்க கூட நகைகள் பொதுவுல எல்லாரும் சேர்ந்து செஞ்சது. நாம ஏதாவது தனிபட்ட முறையில செய்யனுமுன்னு பேசிக்கிட்டாங்க. அவங்களும் நம்மளோட சேர்ந்து சீர் செய்ய ரெடியாயிருப்பாங்க. ஆனா என்ன செய்ய? ஐடியா சொல்லுங்க ஒத்துவந்தா செஞ்சிடலாம்.” என சொல்ல
“அது காயுவும் கண்ணனும்…அவங்க ஸ்கூல் பக்கத்துல புதுவீடு ஒன்னு வாங்கியிருக்காங்க. அதுக்கு பக்கத்துல இன்னும் ரெண்டு வீடு விக்காம இருக்காம். நாம நாலு பேரும் சேர்ந்து அதில் ஒன்ன சீரா சுஜாவுக்கு வாங்கி கொடுக்கலாமா? இது உனக்கு ஓகேவா?” என நீலா கேட்க
“அக்கா சூப்பர் ஐடியா. இருங்க அத்தைங்கள கூப்பிடறேன். அவங்களையும் கேட்கலாம்.” என மொழி வேகமாக சமையல்கட்டு நோக்கி செல்ல, நீலா கண்ணனுக்கு அழைத்து விற்காமல் இருக்கும் வீடுகளின் அமைப்பு, அளவு, விலை, பத்திரம் பதிவு செய்ய தேவையானவை என பல விபரங்களை விசாரித்து வைத்தாள்.
இருமாமியார்களும் வந்ததும் நீலா “அத்தை காயு ஸ்கூல் பக்கத்துல வீடு வாங்கியிருக்கு. இப்போ காயு மாசமா இருக்கிறதால அங்கேயே குடியும் போக போறாங்க. நம்ம சுஜாவுக்கு குழந்தை உண்டானா அந்த சுசிலாம்மா காசு வீணா போகுமுன்னு வாடகை வீட்டுக்கு விடாது. சுஜாவும் வீட்டுக்கும், ஸ்கூலுக்கும் அலையனும்.”
“இப்போ நாம நாலு பேரும் சுஜாவுக்கு சீரா ஒரு வீட்ட காயு வீடு பக்கத்துல வாங்கி குடுத்துடுவோம். நாளைக்கு அவ தனிக்குடித்தனம் போன அதுல குடியிருக்கட்டும். இல்ல வாடகைக்கு விட்டுட்டு அந்த காச நகைசீட்டு போல போட்டு வைக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க?” என கேட்க
“நல்ல யோசனைதான். எங்கிட்ட ஒரு மூணுலட்சம் பணமிருக்கு. எங்க வீட்டுக்கு போறப்போ, அவங்க இங்க வர்றப்போன்னு குடுத்தது இருக்கு. நான் அந்த பணத்தை தர்றேன். மீதி பணத்துக்கு என்ன செய்ய?” என சாந்தா கேட்க, மொழி அவரை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள்.
“மொழி நம்ம எமோஷன அப்புறம் மெதுவா காட்டலாம். அமைதியா இரு. அவங்கள பயங்காட்டாத.” என்ற நீலா, தன் சின்ன மாமியாரிடம் “அத்த உங்ககிட்ட எவ்வளவு இருக்கு” எனக் கேட்க, மொழியை பார்த்து அவர், “ மொழிமா எங்க ரூம் போயி இடதுபக்க கப்போர்டுல ஒரு பச்சை பைல் இருக்கும் பாரு அதை எடுத்துட்டு வாம்மா” என்க
“அத்தை என்ன பண்ண போறாங்க? அவங்க பேருலயே வீடிருக்கோ? நம்ம பங்குக்கு என்ன செய்யப் போறோம்?” என யோசித்தபடியே மொழி எடுத்து வந்தாள்.
அந்த பைலில் இரு பேங்க் பாஸ்புக் இருக்க, இரண்டையும் சாந்தாம்மாவிடம் கொடுத்தார். அதில் விஜி, சாந்தா இருவர் பெயரிலும் சில லட்சங்கள் தொடர்வைப்பு திட்டத்தின் மூலம் வரவு வைக்கப்பட்டிருந்தது. தொகை ஒவ்வொரு மாதத்திற்கும் மாறுபட்டிருந்தது. Variable RD ஆக இருந்தது.
எல்லோரும் ஆச்சர்யமாக விஜிமாவை பார்க்க, “சுஜா பார்ட் டைம் ஜாப்ல பணம் கிடைக்க ஆரம்பிச்சதும் எங்க ரெண்டு பேருக்கும் இத ஆரம்பிச்சா. இத உங்க பிள்ளைகள் பெருசாகற வரை தொடக்கூடாதுன்னு கண்டிஷன் வேற போட்டிருக்கா. இதை எங்களுக்கு மட்டுமே பயன்படுத்தனுமாம்.” என்றவர் அதை விடுத்து அடுத்திருந்த ஒரு டெபாசிட் பாண்டு எடுத்து நீட்டினார்.
“டெபாசிடை உடைத்தால் ஒரு ஆறேழு லட்சம் கிடைக்கும். எங்க பாட்டி இறந்ததுக்கு பாட்டியோட நகை பத்துப் பவுனும் கொஞ்சம் பணமும் எங்க மாமா எனக்கு சீதனமா கொடுத்தார். அந்த பணத்தை செலவு பண்ணாம பேங்க்ல போட்டிருந்தேன். அதை இப்போ பயன்படுத்திக்கலாம் நீலா.” என்க
“பாட்டி பங்கு ஓக்கே! பட் பேத்தி பங்கு எங்கே?” என மொழி கேலியாக கேக்க
ஒரு ஹேண்ட் பேக் தர அதில் உண்டியலில் போடுவது போல நிறைய ரூபாய் நோட்டுக்கள் மடக்கி வைக்கப்பட்டிருந்தன. “எம்மா வங்கி காசாளரே! எண்ணி சொல்லுங்க” மொழி ரூபாய் நோட்டுக்களை விரித்து அடுக்கியபடி சொல்ல, சிரித்தபடி பிரித்து அடுக்கி கணக்கிட அதிலும் மூன்று லட்சத்து முப்பத்தெட்டாயிரம் இருந்தது.
இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட பதின்மூன்று லட்சம் தர, மொழியும், நீலாவும் தலா மூன்று லட்சமும், ஈஸ்வர், சுகன் பங்கு பணமும் போட்டால் வீட்டும் இரு ஏக்கர் நிலமுமாய் ஓரிடம் அடுத்த வீதியில் இருப்பதாய் கண்ணன் சொன்னது நியாபகம் வர அதையே வாங்கிடலாம் என முடிவு செய்தாள் நீலா. வீட்டோடு மொத்தம் இருபத்தைந்து லட்சம் ஓனர் சொல்கிறார். உட்கார்ந்து பேசினால் குறையும். சீக்கிரம் கிரயம் வைத்தால் இன்னும் குறைக்கலாம் என கண்ணன் சரியெனபட்டது அனைவருக்கும்.
காயுவை பார்க்கப் போவது போல ஈஸ்வர், சுகன் குடும்பங்கள் தத்தம் அன்னையருடன் கிளம்பியது.
பெண்கள் சமாச்சாரம் இது, நமக்கு எதுக்கு இது? என வீட்டில் ஆண்கள் இருந்து கொள்ள, சுகனும், ஈஸ்வரும் டிரைவர், பாதுகாவலர் என கேலி பேசி அனுப்பி வைத்தனர்.
கண்ணன் இடத்தை காட்டிட, அனைவருக்கும் பிடித்தது. கண்ணன், சுகன் இருவரும் ஈசி போட்டுப் பார்க்கச் செல்ல பெண்கள் ஈஸ்வருடன் பூ, பழங்கள், ஸ்வீட்டுடன் காயுவை பார்க்கச் சென்றனர்.
காயுவை பார்த்துவிட்டு, அந்த இடம் சட்டப்பிரச்சனை அற்றதாக இருக்க, அன்றே அந்த இடத்தை கண்ணனை வைத்து ஒரு வாரத்திற்குள் கிரயம் செய்வதென பேசி அட்வான்ஸ் குடுத்துவிட்டே வீடு திரும்பினர்.
ஒரு வாரத்தில் நிலத்தை சாந்தாம்மா பேரில் கிரயம் செய்து, சுஜாவுக்கு ரகசியமாய் தான செட்டில்மென்ட் செய்து வைத்தனர்.
சுஜாக்கு மட்டும் நீலாவும், மொழியும் பயந்து கொண்டே சொல்ல, அவளும் ஒரு பத்திரத்தை எடுத்துக் கொடுத்தாள். அதில் அவள் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே, தாத்தா அவள் பேரில் எழுதிய நிலம் ஈஸ்வர், சுகன் பேரில் கிரயமாயிருந்தது.
அங்கிருந்த வீடுகளை, பில்டர் ஒருவர் வீடாக கட்டி விற்று வந்ததால் எல்லாமே புது வீடு. வாங்கியவர்கள் கிரகபிரவேசம் செய்து கொண்டனர்.
காயு வீடும், சுஜா வீடும் கிரகபிரவேசத்திற்கு தயாராயின. யாரை மனையில் அமர்த்துவதென கண்ணன் வீட்டிலும், சுஜாவின் தாய் வீட்டிலும் குழப்பம் வர, கண்ணனின் அம்மா மலர்விழி ஒரு யோசனை சொன்னார்.
அதன்படி, காயுவும், கண்ணனின் சகோதரியும் குழந்தை உண்டாகி இருப்பதால் சுஜா, ஜெய்யே இரு வீட்டிலும் மனையில் உட்காரட்டும். கேட்பவர்களிடம் சுகனின் ப்ரெண்ட் வீடு அது. அவர் குடும்பத்தால் உடனே வர முடியாததால் அவர் கண்ணன் வீட்டு விஷேசத்தோடு சேர்ந்து, அதே போல செய்யும்படி கண்ணனிடம் சொல்லி ஏற்பாடு செய்ததாக, சொல்லிவிடலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி செய்ய முதலில் ஜெய் வீட்டில் சொல்ல வந்தனர் கண்ணனும், மலர்விழி அம்மாவும். விசயத்தை கேட்ட சுசிலா என்ன சொல்வதென தயங்கி தடுமாறி நின்றார்.
கீதாவோ உடனே, “ அதெல்லாம் முடியாது. மூத்தவ நான் இருக்கும்போது நீங்க அவள, எங்க ஜெய் மாமாகூட எப்படி உங்க வீட்டுல மனை ஏற சொல்விங்க? ஜெய் மாமாகூட நான்தான் மனையில உட்காருவேன். எனக்கு நல்ல அகலமான கரைவச்ச குங்கும கலர் புடவை எடுத்து வைங்க.” என கத்தி கலாட்டா செய்ய, மலர்விழி அம்மா பொறுமையாக, “கண்ணு இது விளையாட்டில்ல. குழந்தை உண்டாகி இருப்பவங்க மனையில உட்காரகூடாது. அதனாலதான் யேன் மருமகளையே நான் மனையில உட்கார சொல்லல.”
“வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு அது நல்லதில்ல. அதுவுமில்லாம புருஷனும், பொண்டாட்டியும் தான் மனையில உட்காரனும். ஜெய்யும், சுஜாவும்தான் புருஷன் பொண்டாட்டி. நீ விஜயன் பொண்டாட்டி. ஜெய்கூட எப்படி உட்காருவ? புரிஞ்சிக்கோ கீதா” என சொல்ல
“ஐய்யோ ஏன் உங்களுக்கு எல்லாம் என்னைய புரியவே மாட்டேங்குது? எனக்கு இந்த குழந்தையே வேண்டாம். இதுக்கு என்ன ஆனாலும் எனக்கு கவலையில்லை. எங்க ஜெய் மாமாவுக்கு என்னையதான் ரொம்ப பிடிக்கும். எனக்கப்புறந்தான் மத்தவங்கன்னு மாமா அடிக்கடி சொல்வாங்க. அதனால நானே அவரோட உங்க வீட்டுல மனையில உட்கார்ந்து பூஜை பண்றேன்” என கீதா ஆர்ப்பாட்டம் செய்ய சுசிலா அமைதியாக நிற்பதை பார்த்த மலர்விழி அவசரமாக சுஜாவை பார்க்க, அவளோ தூரத்து மேகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இங்க பாரும்மா கீதா! வீடு என்னது. நான் ஜெய், சுஜாவை மனையில உட்கார வைக்க முடிவு பண்ணி எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன். யேன் வீட்டு மனையில நான் சொல்றவங்கதான் உட்காரனும். உன் இஷ்டத்திற்கு என்னால ஆடமுடியாது.” எனவும் போன் வரவும் சரியாக இருந்தது.
“ஹலோ விஜி தம்பி நாங்க உங்க வீட்டுக்கு வந்துட்டோம்பா. உங்க வீட்டம்மா ஜெய்யோட உட்கார்றேன்னு கத்துது.அவனோட, அவன் பொண்டாட்டி தான உட்காரனும். கீதா குழந்தை பிறக்குற வரை பச்சை பந்தலடியில நிக்கக்கூடாது. நீயும் கீதாவ கூட்டிட்டு மொத நாளே வந்துடனும். தோட்ட வேலை கிடக்கு, ஆடு மாடு பாக்கனும் அப்படின்னு வராம இருந்த அவ்வளவுதான் பாத்துக்க” என சொல்ல கீதா கோபத்தில் கையிலிருந்த தட்டை வீசியடிக்க சுசிலாவின் காலில் பட்டு அது உருண்டோடியது.
சுஜாவும், ஜெய்யும் அந்த விஷேசத்திற்கு போகவே கூடாது என கீதா போர் கொடி தூக்க, குடும்பமே போக வேண்டுமென விஜயன் முறுக்க, ஒரு வாரம் அமளி துமளியாக இருந்தது ஜெய் வீடு.
ஜெய்யும் சுஜாவும் ஏற்பாடுகளை கவனிக்க இருநாள் முன்னதாக வந்தால் நன்றாக இருக்குமென கண்ணனும், மலர்விழியும் சொல்லிச் சென்றதால் இருவரும் இருநாள் முன்னதாகவே காயு வீட்டுக்கு சென்றனர்.
கீதாவோ, “ஐய்யோ அந்தம்மா நம்ம கனவ கனவாவே போக வச்சிடும் போல. இங்க இந்த கிழவியும் என்னைய அவனோட இல்லன்னாலும் யேம் புருஷனோட மனையேறட்டுமுன்னு வாய திறந்து சொன்னாளா? நாளைக்கு எப்படி அவ மனையேற போறான்னு நான் பாக்கறேன்” என பொருமியபடி வலம் வந்தாள்.
கீதா வயிரெறிய சுஜாவும், ஜெய்யும் மாலையுடன் மனையேறி பூஜை செய்து நல்ல நேரத்தில் பால் காய்ச்சினர் காயு வீட்டில்.
அதற்கு முதல் நாளே சுஜாவிற்கென வாங்கிய வீட்டிலும் சிம்பிளாக??? சுஜாவின் தாய் வீடு, நீலா, மொழியின் தாய்வீடு, சாந்தா, விஜியின் தாய்வீடு, கண்ணன் குடும்பம் என பூஜை செய்து பசுவையும், கன்றையும் வீட்டினுள் கூட்டி வந்து, அதற்கு பசுந்திவனம் கொடுத்து பால் காய்ச்சி இருந்தனர்.
எல்லோரிடமும் சுகன் ப்ரெண்ட் வீடு என சொல்லி சமாளித்தனர்.
கண்ணன் குடும்பம் ஓரிரு நாட்களில் அங்கு குடி வந்தனர். சுஜா காலையில் வந்து காயுவை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். மாலையில் திரும்ப கொண்டுவந்து விட்டுச் செல்வாள்.
கண்ணன் பல நாள் காலை, மாலை அவள் வரும் நேரம் வீட்டிலிருப்பதை பார்த்த சுஜா,
“ அண்ணா நீங்க வீட்டிலிருக்கும்போது நீங்களே வந்து விட்டுட்டு வரலாமில்ல. நான் நேர ஸ்கூலுக்கு போயிடுவேனே” என கேக்க
மலர்விழி, “ உன்ன ரெண்டு வேளையாவது சாப்பிட வைக்க வேற வழி தெரியல கண்ணு” என மனதினில் நினைத்தபடி, “யேங்கண்ணு சுஜா….யேஞ்சாப்பாடு அவ்வளவு மோசமா இருக்கா? அதிலிருந்து தப்பிக்க அவன கொண்டு வந்து விட சொல்றியா?” என பரிதாபமாக கேட்க
“அம்மா, நான் எங்க சாந்தாம்மாவை உங்களிடம் பார்க்கிறேன். ஆனாலும் தினமும் எனக்கும் சேர்த்து சமைக்கிறது கஷ்டமா இருக்கும்மா” என சுஜா தயக்கமாக சொல்ல கண்ணன் முறைத்தான்.
“யேந்தங்கச்சிக்கு ஒரு வேளை சோறுபோட வழியில்லாதவனா நானு? சுஜா உன்கூட சாப்பிட்டா பேசிக்கிட்டே காயு ரெண்டு வாய் சேர்த்து சாப்பிடறா. ரெண்டு குழந்தையை சுமக்கிறோமுன்னு அவளுக்கு அக்கறை எங்கிருக்கு? நீ சொன்னா மறுபேச்சி பேசாம கேக்குறா..” என சுஜாவை சமாளிக்க முடியாமல் உலற, காயு வந்தாள் கைகொடுக்க.
காயு கண்ணனை முறைத்தபடி, “உங்க அண்ணன் செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்ய முயற்சி செய்யறார். புரியலயா? என்னைய கஷ்டப்படுத்தாம குழந்தையை வளர்க்கறராம். உன்னோட இருக்கும்போது நான் ஜாலியாக பேசி சிரிச்சிக்கிட்டே இருக்கேனாம். அதான்,” சுஜாவை காட்டி, “இந்த நெல்லுக்கு பாயற தண்ணீ”, தன்னை காட்டி, “ இந்த புல்லுக்கும் போகுது.” என சிரித்தாள்.
“நீயும் சீக்கிரம் நல்ல சேதி சொல்லுமா சுஜா.” என மலர் சொல்லிச் செல்ல, சிரித்தபடி நின்றாள் சுஜா.
“ சரிம்மா,” “இல்லம்மா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அதுக்குள்ள என்ன அவசரம்.” “குழந்தையா? அது ஒன்னுதான் குறைச்சல்” இப்படி ஏதோ ஒரு பதிலை வெட்கத்துடனோ, கோபத்துடனோ எதிர்பார்த்தனர். ஆனால் சுஜா நிமிர்ந்து கேலி சிரிப்புடன் நின்றது கண்ணன், காயு வயிற்றில் புளியை கரைத்தது.