Advertisement

     “அம்மா எனக்கு இந்த டிரஸ் தான் வேணும். எனக்கு இது தான் பிடிச்சிருக்கு” என்று கத்தினான் ஐந்தாவது படிக்கும் மகன் அருண்.
     “அப்பா எனக்கிட்ட இந்த சோலி இல்லை. இதை நான் நீ வாங்கி தர” என இன்னொரு புறம் படுத்தினாள் ஏழாவது படிக்கும் மகள் அஞ்சனா.
     பெற்றோர்கள் வேந்தன் மலர் இருவருக்கும் மண்டையை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது. நம் ஊரில் பல குடும்பங்களில் நடப்பது இதுதான்.
     வேந்தன் மலர் இருவரும் கணினி பொறியாளர்கள். நல்ல சம்பளம் சொந்த வீடு கார் என வசதியான வாழ்க்கை தான் இப்போது.
     ஆனால் இவர்கள் இந்த நிலையை அடைய கடுமையான உழைப்பை கொடுத்து தான் முன்னே வந்தார்கள். அவர்கள் இருவரின் குடும்பமும் வசதியானது இல்லை.
     எனவே சிறு வயது முதலே பணத்தின் அருமை, வாழ்வில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இப்போது இந்த நிலையை அடைந்து உள்ளனர்.
     இப்போதும் நம்மை விட பலர் கஷ்ட ஜீவனித்தில் வாழ்க்கின்றனர் என்பதை உணர்ந்து என்றும் சிக்கனத்தை தான் கடைபிடிப்பர்.
     ஆனால் இவர்கள் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் மட்டும் இதை பார்க்க மாட்டனர்‌. நல்ல பள்ளியிலே படிக்க வைத்தனர்.
     இவர்கள் பிள்ளைகள் இருவரும் இயல்பிலே வசதி இருக்கவும் விலை அதிகமானதையே தேர்வு செய்வர். பணத்தின் மதிப்போ அல்லது கஷ்டம் என்பதையோ எதையும் உணரவில்லை.
     பெற்றோர் இருவரும் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காமல் போய்விடுவர். இவர்களை எப்படி திருத்துவது என்று பெற்றோர்களுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
     தீபாவளி திருநாள் வந்தது. உடைகள் எடுக்க வேண்டும் என்ற பிள்ளைகளின் கோரிக்கையை ஏற்று இன்று காலை தான் உடைகள் எடுக்க செல்லலாம் என்று வேந்தன் முடிவு செய்தார்.
     விளம்பரங்களின் புண்ணியத்தால் நல்ல பெரிய கடையின் பெயரே தேர்வு செய்யப்பட்டது. அதுவும் பிள்ளைகளால்.
     ‘சரி நாம் தான் அப்படி வளர்ந்தோம், பிள்ளைகளாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்’ என்ற சராசரி பெற்றோராக அழைத்து சென்றனர்.
     அங்கே சென்றால் சாதாரண உடையே யானை விலை குதிரை விலை சொல்லப்பட்டது. பெற்றோர் இருவருக்கும் விலையை பார்த்து மயக்கமே வந்தது.
     சரி சராசரி விலையில் பார்க்கலாம் என்றால் தங்கள் பிள்ளைகள் அதற்கு மேல் என அதிக விலை துணிகளை கையில் எடுத்து கொண்டு  அது தான் வேண்டுமென அடமாய் நின்றனர்.
     இதில் கடை ஊழியர்கள் வேறு “இது புது டிசைன். உங்க பிள்ளைக்கு நல்லா இருக்கும்” என்று வியாபார யுக்தியை எடுத்து விட பிள்ளைகளை அடக்க முடியவில்லை.
     ஒருவழியாக அவர்களின் பட்ஜெட்டில் பிள்ளைகளுக்கு பிடித்தது போல் உடைகள் எடுத்து கொண்டு வந்தனர். வரும் வழியில் உணவு உண்ண ஒரு பெரிய உணவகம் சென்று வெளியே வந்தனர்.
     இப்போது தான் பிள்ளைகளுக்கு திருப்தி ஆனாது. இவர்களுக்கு எப்படி புரிய வைக்க என்று பெற்றோருக்கு யோசனை வந்தது.
     வேந்தன் காரை எடுத்து வர சென்றார். அப்போது அந்த உணவகத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி ரோட்டின் ஓரமாய் மர நிழலில் நின்று கொண்டனர்‌.
     அங்கே வீடில்லாத ஏழை மக்கள் சிலர் சிறு டென்ட் போன்ற வீடுகளில் வாழ்வதை விசித்திரமாக பார்த்திருந்தனர் பிள்ளைகள்.
     அங்கே சிறுவன் ஒருவன் தன் அன்னையிடம் “அம்மா தீபாவளி வருதுல்ல எல்லாரும் புது துணி, பட்டாசுலா வாங்கராங்கல. எனக்கும் வாங்கி தரியாமா.
     அங்க ரோட்ல கடை நிறைய இருக்கு. நான் பாத்தேன்” என்றான் ஏக்கமான குரலில் இவர்களை பார்த்தவாறு.
     அந்த பிள்ளையின் முகம் பார்த்த தாய்க்கு சங்கடமாக இருந்தாலும் அவர்கள் நிலையே கண் முன் வர “அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டபடுறோம்.
     இதுல எங்க பா நமக்கு தீபாவளிலாம். அப்பா காசு கொண்டு வந்தா பாக்குலாம் டா. நீ போய் விளையாடு” என்றுவிட்டு தன்னுடைய கைவேலையான கூடை பின்னுவதை தொடர்ந்தார்‌.
     இதை அனைத்தையும் மலரோடு நின்றிருந்த அருணும் அஞ்சனாவும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்‌. அவர்களுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது.
     பின் வேந்தன் வரவே காரில் ஏறிக் கொண்டனர். ஆனால் வழக்கம் போல் இல்லாது அமைதியாக வந்தது பெற்றோருக்கு ஆச்சரியமாக இருந்தது.
     அந்த அமைதி வீடு வந்த பின்னரும் தொடர வேந்தன் மலரிடம் மெதுவாக “என்னாச்சு. ஏன் சைலன்டா இருக்காங்க” என்றான். தன் பிள்ளைகளுக்கு எடுத்த உடைகள் பிடிக்கவில்லையோ என்ற பயம்.
     மலரும் மெதுவாக தாங்கள் நிற்கும் போது நடந்ததை விளக்கினார். சிறிது நேரம் பேசிய பிள்ளைகள் இருவரும் இப்போது தாய் தந்தையிடம் பேச வந்தனர்.
     “அப்பா, அம்மா நாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஆரம்பித்தது அஞ்சனா. “அம்மா நாம ரோட்ல பார்த்தோம்ல அந்த பையன் பாவம்ல. புது டிரஸ் வாங்க கூட காசு இல்லை அவங்ககிட்ட” என்றாள்‌.
     மலர் இப்போது “ஆமா அஞ்சு. அவங்களுக்கு இருக்க வீடு கூட அந்த டென்ட் தான். அப்படியும் உலகத்தில நிறைய மக்கள் இருக்காங்க. நாம இப்போ நல்லா இருக்கோம்.
     ஆனா எங்களோட சின்ன வயசுல இது மாதிரி எங்க அப்பா அம்மாக்கும் பணம் கஷ்ட இருந்துச்சு. சோ எனக்கு புரியுது. நீங்க பீல் பண்ணாதீங்க” என்றார்.
     அருண் தன் அன்னையை பார்த்து “அம்மா அதை பத்தி தான் பேச வந்தோம். நாங்க ரொம்ப மோசமா கடைல நடந்துக்கிட்டோம்” என்க “சாரி ம்மா. சாரி ப்பா” என்றனர் இருவரும்.
    கேட்ட பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியானது தங்கள் பிள்ளைகள் இனி நல்ல வழியில் வளர்வார்கள் என. பிறர் கஷ்டங்களை புரிந்து நடக்கும் குழந்தைகள் வாழ்வையும் புரிந்து கொள்வர் தானே.
       பின் “அப்புறம் நாம ஏன் அவங்களுக்கு டிரஸ் எடுத்து குடுக்க கூடாது?” என்றான் அருண். “நாம தீபாவளியை அவங்க கூட செலிபரேட் பண்ணலாம்ல பா பிளீஸ்” என்றாள் அஞ்சு.
     வேந்தனுக்கும் மலருக்குமே பிள்ளைகளின் இந்த பரிணாமம் பிடித்தது. சிறிது யோசித்த வேந்தன் தங்களால் எவ்வளவு முடியும் என்று ஒரு கணக்கை போட்டு அந்த பணத்தை எடுத்துக் கொண்டான்.
     ஏனெனில் அவன் பிள்ளைகள் முதன் முதலில் நல்ல வழியில் செலவழிக்க கேட்கும் பணம் அன்றோ. ஒரு நடுத்தர கடைக்கு சென்றனர் மறுநாள்.
     அங்கேயும் நல்ல துணிகள் தான் இருந்தது. ஆனால் கம்மி விலையில். இதை பார்த்த குழந்தைகளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. பெரிய கடையில் கடையின் பிரமாண்டத்துக்கு தான் பணம் என்று.
     மற்றபடி துணி அது எல்லா இடத்திலும் ஒரே தரத்தில் தான் இருக்கும் என்று. தங்களால் முடிந்த அளவு ஆண் பெண் என இருபாலர் துணிகளை வாங்கினார்கள்.
     பின் கொஞ்சம் இனிப்புகள் வாங்கிக் கொண்டு நேற்று சென்ற அதே இடத்திற்கு சென்றனர். அங்கே இருந்த சிறுவர்களை அழைத்து தாங்கள் வாங்கிய துணி மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
     அதில் நேற்று பார்த்த சிறுவனுக்கு அருணும் அஞ்சனாவும் சேர்ந்தே உடையை தந்தனர். அதில் அந்த சிறுவர்கள் முகத்தில் நிரம்பிய மகிழ்ச்சி குழந்தைகள் மட்டும் அன்றி வேந்தன் மலருக்கும் மன நிறைவை தந்தது.
     இது கண்டிப்பாக ஒரு நிறைவான தீபாவளியாக மாறியது. அருணும் அஞ்சனாவும் இனி அடம் பிடிக்காது குறைந்த விலையிலே நல்ல உடை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
     வேந்தனும் மலரும் இனி இது போல் சிலருக்கு தங்களால் முடிந்த அளவு பகிர்ந்து கொண்டாட முடிவெடுத்தனர். இது கண்டிப்பாக ஒரு தித்திக்கும் தீபாவளி தான்.
-சாந்தி கவிதா
       அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ?????

Advertisement