“ப்பா.. ப்ளீஸ், அப்பாவை அழவைக்கிற மகன் எப்போவும் நல்லா..”
“என்ன பேசுறீங்க..?” வேகமாக விலகி வாயை அடைத்தவர், “உங்களுக்கு அப்பாவா இருக்கிற பெருமையில, பூரிப்புல விடுற கண்ணீர் இது.. இதை போய்..” படபடப்புடன் பேசினார்.
இன்று முழுதும் அவரை பார்த்திருந்தானே மகன். வருபவர்களிடம் எல்லாம் லிங்கேஷ்வரன் ஐபிஸ் என்று தான் அறிமுகம் செய்திருந்தார் அவர். அந்த வார்த்தை சொல்லும் போது அவர் குரலில் தெரிந்த பெருமை, அவரின் பூர்ப்பு. மகனாக அந்த நொடி அவரின் நம்பிக்கையை ஜெயித்தேவிட்டான் ஈஷ்வர்.
“எனக்கு தெரியும் அப்பாவா நீங்க ஒரு பெஸ்ட் அப்பான்னு, அந்த வயசில செய்ய கூடாததை செஞ்சது நான் தான், அதனாலே இடையில எல்லாம் தப்பா போயிடுச்சு..”
“சில இடங்கள்ல எனக்கு உங்க மேல வருத்தம் இருக்கு தான், ஆனாலும் உங்க மகனா நான் இருக்க கண்டிப்பா கொடுத்து வச்சிருக்கணும்..” மனதார சொல்ல, இதை விட வேறென்ன வேண்டும் நரசிம்மனுக்கு.
“நான் தான் அவசரப்பட்டு ஏதேதோ செஞ்சு எல்லாத்தையும் சிக்கல் ஆகிட்டேன், அன்னைக்கு நீங்க என்னை கேட்டது எல்லாம் சரி தான், உங்களை விட, மருமகளை விட, பேத்தியை விட நான் இந்த ஐபிஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க கூடாது..”
“ப்பா.. நான் ஐபிஸ் வேலையை விடல, டிஸ்பி தான்னு தெரியுறதுக்கு முன்னாடியே இந்த ஐபிஸ் வேண்டாம், எங்களோட வீட்டுக்கு வாங்கன்னு நீங்க கூப்பிட்டதை விட ஒரு மகனா எனக்கு வேறென்ன வேணும்..?” அந்த இடத்தில அப்பாவாக அவர் ஜெயித்ததில் ஈஷ்வர்க்கு தான் அவ்வளவு மகிழ்ச்சி.
“ரொம்ப சந்தோஷம்ப்பா என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு, நீங்க ரொம்ப அமைதியா இருக்கவும் எண்னை வெறுத்திட்டாங்களோன்னு..”
“அப்படி எல்லாம் இல்லப்பா.. எனக்கு உங்க மேல கோவம், வருத்தம், ஏமாற்றம் இருந்திருக்கு, வெறுப்பு எந்த காலத்திலும் இல்லை..”
“உங்களுக்கு புடிக்கலன்னா நீங்க இந்த வேலையை விட்டுட்டு பிஸ்னஸ் பாருங்க..” நரசிம்மன் மகனுக்காக உண்மையாகவே சொன்னார்.
“ம்ஹூம். இல்லைப்பா, விஷ்ணுக்காக தான் முதல்ல அந்த ஆப்பரேஷன் எடுத்தேன், ஆனா எனக்கே இப்போ அந்த வேலை பிடிக்குது..”
“ரொம்ப நல்லதுப்பா..” நரசிம்மன் மகிழ்ச்சியுடன் சொல்ல, அவர் மனம் புரிந்தவன்,
“தூங்க போங்கப்பா, இனி உங்களுக்கு ஏதாவது பேசணும்ன்னா நேரா என்கிட்ட பேசுங்க, இப்படி தனியா மறுகாதீங்க..” என, நரசிம்மன் நீண்ட வருடங்கள் சென்று நிறைந்த மனதுடன் தூங்க சென்றார்.
அவரின் நிறைவில் மகனாக ஈஷ்வரும் நெகிழ்ந்தவன் ரூம் வர, பல்லவி எழுந்து அமர்ந்திருந்தாள். “நீ தூங்கலையா..?” ஈஷ்வர் கதவு மூடி கேட்க,
“தண்ணி வேணும்..” என்றாள் அவள்.
“அப்பாகிட்ட பேசினதுலே கீழே வச்சுட்டு வந்துட்டேன்..” மீண்டும் சென்று எடுத்து வந்து கொடுத்தான். பல்லவி குடித்தவள் கணவனை பார்க்க, அவன் கண்டு கொள்ளாதவன் போல தூங்க சென்றான்.
“ஈஷ்வர்..” பல்லவி கூப்பிட,
“குட் நைட்..” என்றான் அவன்.
அதற்கு மேல் என்ன பேச பல்லவி அமைதியாகிவிட்டாள். ஏதோ ஒரு கோவம். படுத்திருக்கும் ஈஷ்வரின் முடிய பிடித்து ஆட்டும் வேகம். தன்னை கட்டு படுத்த முடியாமல் எழுந்து பால்கனி திறந்து சென்றாள்.
ஈஷ்வர் திரும்பி அவளை பார்த்து படுத்தான். அவள் வானத்தை பார்த்து நிற்க, ஈஷ்வருக்கு இருவரும் காதலித்த நாட்கள் நினைவிற்கு வந்தது. அங்கு நின்று அந்த மேகத்தை பார்த்து தான் அவளிடம் நிறைய பேசியிருக்கிறான். இன்று அதே இடத்தில் அவன் லவி நிற்கிறாள்.
இவ்வளவு போராட்டம், வலி, வேதனை, அழுகை எல்லாம் தன்னில் இருந்து தான் ஆரம்பித்தது. இப்போது எல்லாம் அடிக்கடி தன் மீதான தவறுகள் அவனுக்கு தோன்றுகிறது.
பதினெட்டு வயதில் காதலுக்காக பெரிதாக சுத்தியது, தெரு தெருவாக அலைந்தது, அந்த வயதில் திருமணம், தாம்பத்தியம்..??
“கொஞ்ச வருஷம் பொறுமையா இருந்து படிச்சு முடிச்சிருந்தா அப்பாவே பல்லவியை எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிருப்பார், அப்போ காதல்ன்னாலே அப்பா ஒத்துக்க மாட்டார்ன்னு பயம், ம்ம்ம்..” பெரு மூச்சு விட்டு கொண்டான்.
“நான் மட்டும் கஷ்டப்படல, இவளையும் காதல்ன்னு உள்ள இழுத்து போட்டு, குடும்பத்தை இழந்து, என்னடா பண்ணி வச்சிருக்க ஈஷ்வர்..?” எப்போதும் போல இப்போதும் தன்னை தானே நிந்தித்து கொண்டான்.
அவனின் இந்த குற்ற உணர்ச்சியே அப்பா, மனைவியிடம் அமைதி காக்க வைத்தது. வாழ்க்கையை சரியான முறையில் எதிர் கொள்ளவில்லை. நிறைய அனுபவ பாடம் இந்த வயதிலே.
எல்லாம் நல்லதாக முடிந்தாலும் சில கசப்புகள் நடந்து விட்டதே. அதை மாற்ற முடியாது, ஆனால் கடக்க முடியும்.
பல்லவி அவன் பார்வை உணர்ந்து திரும்பி பார்க்க, ஈஷ்வர் தூங்குவது போல கண் மூடினான். பல்லவி அதற்குள் பார்த்துவிட்டவள், வேகமாக வந்து அவன் மேலே விழுந்தாள்.
“ஆஹ்ஹா..”அவள் திடீரென விழுந்தது வலிக்க, ஈஷ்வர் மெல்ல கத்தியேவிட்டான்.
“நல்லா வேணும் உங்களுக்கு..” அவன் நெஞ்சில் மீது இன்னும் குத்தினாள் மனைவி.
“ஏய் வலிக்குதுடி..” அவள் கை பிடிக்க, அண்ணாந்து முகம் பார்த்தவள், எட்டி அவனின் கன்னத்தை கடித்து வைத்தாள்.
“இந்த ஒரு வாரமா என்னை படுத்திட்டீங்க இல்லை..” மீண்டும் அடிக்க, ஈஷ்வர் அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.
“விடுங்க என்னை..” திமிறியவள், கண்ணீர் அவன் நெஞ்சை நனைத்தது.
“இதுக்கு தான் நான் தள்ளியே இருந்தேன், என்னால் நீ நிறைய அழுற..” ஈஷ்வர் வருத்தத்துடன் சொல்ல, பல்லவி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உண்மைடி.. என் காதல் அப்போவும் சரி, இப்போவும் சரி உன்னை கஷ்டப்படுத்தது, நான் என்ன முயற்சி எடுத்தாலும் உனக்கு அது வலியை தான் இதுவரை கொடுத்திருக்கு..” திகம்பரன் வேதனையுடன் சொல்ல, பல்லவி வேகமாக தலை ஆட்டி மறுத்தாள்.
“இல்லை.. நீங்க நினைக்கிறது போல இல்லை..” என,
“ச்சு.. எனக்கே உண்மை தெரியும்..” என்றான் அவன்.
“உண்மையான உண்மை என்ன தெரியுமா நீங்க என்னை அளவுக்கு அதிகமா காதலிக்கிறீங்க அது மட்டும் தான்..”
“அந்த காதல் தான் எனக்காக, என் கஷ்டம் புரிஞ்சு என்னை போர்ஸ் பண்ணாம மூணு வருஷம் தள்ளி இருக்க வச்சது, அப்புறமும் எனக்கான ஸ்பேஸ் கொடுத்தது..”
“வீட்ல என்னை வெளியே அனுப்பினப்போ எனக்கு நம்பிக்கை கொடுக்கணும்ன்னு, நான் தனியா பீல் பண்ண கூடாதுன்னு அந்த வயசுலே என்னை கல்யாணம் செய்ய வச்சது..”
“அப்பறமும் உங்க உரிமை எடுத்துக்காம என் விருப்பத்துக்காக ஹாஸ்டல்ல விட்டது. எனக்கு உடம்பு முடியாதப்போ என்னை கேர் பண்ணது..” சொல்லி கொண்டே போனவள், அடுத்து நடந்தது நினைத்து வாய் மூடி கொள்ள,
“சொல்லு அந்த வயசுலே உனக்கு அனுவை கொடுத்தது.. எங்க அப்பா உன்கிட்ட பேசி உன்னை கஷ்டப்படுத்தினது, நீ தனியா மகளோட கஷ்டபட்டது..” கணவன் தொடர்ந்து சொல்ல,
“ஈஷ்வர் போதும், நான் நீங்க நினைக்கிற அளவு எல்லாம் பெருசா கஷ்டம் படல, அப்படி பார்த்தா நான் எப்படி இருக்கேன்னு நீங்க தான் தினம் தினம் நிறைய கஷ்டப்பட்டு இருக்கீங்க..” அவனை புரிந்து சொன்னாள்.
இப்போதும் அந்த நாட்கள் ஈஷ்வருக்கு வேதனை தான். அவன் முகத்திலே புரிந்து கொண்ட பல்லவி, “என்மேலேயும் நிறைய தப்பு இருக்கு ஈஷ்வர், எப்போவும் ஆண்களுக்கு முதிர்ச்சி கொஞ்சம் லேட்டா தான் வரும், ஆனா எனக்கு அந்த வயசுல மெச்சூரிட்டி இருந்தும் நீங்க கல்யாணம் செஞ்சுக்கலாம் சொன்னப்போ நான் உறுதியா இருந்து மறுத்திருந்தா நாம இவ்வளவு கஷ்டம் பட்டிருக்க வேண்டாம்..”
“சோ எல்லாத்தையும் உங்க மேலே நீங்க தூக்கி போட்டுக்க வேண்டாம்.. முடிஞ்சது, முடிஞ்சு போச்சு, இனியாவது நம்ம குடும்பத்துக்கு, நம்ம பொண்ணுக்கு நம்மால முடிஞ்ச அளவு பெஸ்ட்டா இருப்போம்..” என்றாள். ஈஷ்வருக்கும் அது புரிந்து இருந்ததின் பலன் தான் நரசிம்மனிடம் மனம் விட்டு பேசியது.
இப்போது இருவருக்கும் மனம் லேசானது. பல்லவி அவனை வாகாக அணைத்து படுக்க, “அடியேய்.. எவ்வளவு நேரம் என்மேலே படுத்திருப்ப, போதும்டி..” என்று அவளை விலக்க,
“ம்ஹூம்.. இது தான் உங்களுக்கு பனிஷ்மென்ட்..” என்றாள் அவள் நகராமல்.
“இது எனக்கா பனிஷ்மெண்ட்டா..?” அவன் கண்கள் குறும்புடன் அவள் மேல் பதிய,
“நான் வரல இந்த ஆட்டத்துக்கு, ஏற்கனவே விஷ்ணு அனுவை வச்சு ஓட்டிட்டு இருக்கான், இதுல இன்னொன்னுக்கு நீ அடி போடுற..” ஈஷ்வர் மறுக்க,
“அப்படியா உங்களுக்கு வேண்டாமா..?” என்றவள் கண்கள் அவன் கைகள் இருக்கும் இடம் பார்த்தது.
“அது நீ எவ்வளவு வெய்ட் போட்டிருக்கேன்னு பார்த்துட்டு இருக்கேன், சும்மா சொல்ல கூடாது கும்முன்னு தான் இருக்க, அதான் அன்னிக்கு கோவத்தை காரணமா வச்சு அப்படி செஞ்சுட்டேன், சாரி சொல்லிக்கவா..” அவளின் உதடுகளை நெருங்கினான்.
“உங்களை.. இனி குடி பக்கம் போனீங்க அவ்வளவு தான்..” என்றாள் மிரட்டலாக முகம் தூக்கி.
“யாரு.. நானு போடி, அது அப்பாவை கஷ்டப்படுத்த, அந்த மிஷனுக்காக மேல தெளிச்சுப்பேன், இல்லை விஷ்ணு என்னை தொலைச்சிடுவான்..” என்றான் அவன் சிரிப்புடன்.
“அதான் அன்னிக்கு அவ்வளவு நிதானமா சண்டை போட்டிங்களா..” நினைத்து அவனை அடித்தாள்.
“ம்ப்ச்.. தப்பு பண்ணிட்டேன் அன்னிக்கே சொல்லியிருந்தா இந்நேரத்துக்கு அனுக்கு ஒரு பேபி கிடைச்சிருக்கும், இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்லை.. கூடிய சீக்கிரம் என்னோட ஆசைகள் எல்லாம் நிறைவேத்த வழி பண்ணனும்..”
“இல்லன்னா மட்டும்..” பல்லவி நொடிக்க, ஈஷ்வர் அவளின் காதலில் ஆசையாக அவளை அணைத்து கொண்டான்.
பக்கத்தில் மகள் சிணுங்க, மனைவியை ஒரு கையால் அணைத்தபடி மகளின் தலையை வருடி கொடுத்தான். மகள் சிணுங்களை நிறுத்திவிட்டு படுக்கவும், மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான் ஈஷ்வர்.
இருவரும் அமைதியாக மற்றவர் அருகாமையை உணர்ந்து ரசித்து அனுபவித்தனர். முறையான அங்கீகாரம், அவர்களின் காதலை மேம்படுத்தியது.
இருவருக்கும் காதல் எவ்வளவு கஷ்டத்தை கொடுத்தாலும், அந்த காதல் தான் அவர்களை அந்த கஷ்டத்தை கடக்கவும் வைத்தது.
“இன்னும் இன்னும் உன்னை காதலிக்கணும் போல இருக்கு லவி, எனக்கு போதவே இல்லைடி..” ஈஷ்வர் அவளை இறுக்கமாக அணைத்தான்.
ஈஷ்வரின் அளவில்லா காதலில் எப்போதும் போல அவன் மேல் எல்லையில்லா காதல் கொண்டாள் திகம்பரனின் திகம்பரி.