திகம்பரனின் திகம்பரி அவள் 3 1 12329 திகம்பரனின் திகம்பரி அவள் 3 “என்ன பேசுறீங்க நீங்க..? எப்படி இப்படி பேசலாம் நீங்க..?” பரணி, ரத்னா பேச்சில் அவர்கள் இன்னாரென்று புரிந்து கொண்ட கங்காவிற்கு, அவர்கள் மகனிடம் பேசியது கோவத்தை கொடுத்தது. “ராஜா ஏதோ உங்க பொண்ணை மறைச்சு வச்சி கொடுமை படுத்திட்டு இருக்கிற மாதிரி பேசுட்டு இருக்கீங்க, அவ தான் என் மகனை பிரிஞ்சு போயிட்டா, போனவளை நினைச்சு என் மகன் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா..?” கங்கா கோவம் குறையாமல் பரணி, ரத்னாவிடம் எகிற, “ம்மா.. கொஞ்சம் பொறுமையா இருங்க..” கலையரசு அவரை அமைதிப்படுத்த முயன்றார். “நீங்க சும்மா இருங்க, அவங்க என் மகனை என்ன நினைச்சு பேசிட்டு இருக்காங்க..” “கங்கா..” ஒரு அதிகாரமான அதட்டல் வர, எல்லோரும் திரும்பி வாசலை பார்த்தனர். வாசல் கதவுக்கு வெளியே நின்றிருந்த நரசிம்மன் மனைவியை கோபத்துடன் பார்த்து கொண்டிருந்தார். அப்போது தான் பரணி, ரத்னா இருவரும் அவரை கண்டு கொண்டனர். “இவரை கடந்து தானே உள்ள வந்தோம், ஆனா இவர் ஏன் வாசல்ல நின்றிருக்கார்..?” பரணி முடிந்தவரை எல்லாவற்றையும் அவதானிக்க முயன்று கொண்டிருந்தான். “இல்லைங்க.. இவங்க ராஜாவை..” “அவங்க பொண்ணை பெத்தவங்க, ஆயிரம் பேசுவாங்க, நீ ஏன் அவங்களை பேசுற..?” “புரியுதுங்க, அதுக்காக ராஜா பத்தி எதுவும் தெரியாம இப்படி பேசினா எப்படிங்க..? இவங்க பேச பேச அவன் முகமே செத்து போச்சு, அவன் பல்லவியை பிரிஞ்சு எவ்வளவு வேதனையில இருக்கான்னு இவங்களுக்கு என்ன தெரியும்..?” அவரின் பேச்சில் பரணிக்கு உள்ளுக்குள் கொதித்தது. ஆனால் கொஞ்சமும் வெளிக்காட்டி கொள்ள அவனுக்கு இஷ்டம் இல்லை. அவனுக்கு தேவை அவன் தங்கை அவர்களிடம் வந்து சேருவது தான். வெகுவாக முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு நிற்க, ரத்னாவும் திரும்பி மகனை பார்த்தார். அவரிடமும் கோவம் தான். பரணி கண்களாலே அவரை சமாதானம் செய்ய, அவரால் முடியவில்லை. “எங்களை விடவா இவர் மகன் வேதனை ட்டிருப்பான்..?” அம்மாவாக அவ்வளவு புகைந்தது அவருக்கு. “இன்னிக்கு நாங்க, என் பொண்ணு இவ்வளவு கஷ்டப்பட காரணமே இவங்க மகன் தான், இவரோட அந்த காதல் தான்..” ரத்னா பேச வாய்திறக்க பரணி அவரின் கை பிடித்தவன், “வேண்டாம்மா, இவங்க என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும், நமக்கு நம்ம பாப்பா வேணும், அதை மட்டும் நினைங்க..” என்றான் மென் குரலில். அவர்களையே பார்த்து கொண்டிருந்த நரசிம்மன், “கங்கா முதல்ல அவங்களை உட்கார வை..” வாசலில் நின்றபடியே சொல்ல, கங்கா உர்ரென்று தூக்கிய முகத்துடன், “உட்காருங்க..” என்றார் கணவன் பேச்சை மீற முடியாமல். “பரணி, ரத்னா இருவரும், “இருக்கட்டுங்க..” என்றுவிட்டனர். “தம்பி.. முதல்ல அம்மாவை கூப்பிட்டு போய் உட்காருங்க.. பொறுமையா பேசலாம்..” நரசிம்மன் நேரடியாக பரணியிடம் சொல்ல, “வேண்டாம் சார்.. எங்களுக்கு கேட்க வேண்டியதை கேட்டுட்டு நாங்க கிளம்புறோம்..” உள்ளே ஈஷ்வர் சென்ற திசையை பார்த்தான். “தம்பி.. உங்களுக்கு தெரிய வேண்டியதை நான் சொல்றேன், அதுக்கு முதல்ல உட்காருங்க, எதாவது சாப்பிடுங்க..” “சார்.. ப்ளீஸ், எங்களுக்கு எதுவும் வேண்டாம், பாப்பா எங்கன்னு மட்டும் சொல்லுங்க போதும் நாங்க கிளம்பிக்கிறோம்..” “உங்க பாப்பா எங்கன்னு எங்களுக்கு எப்படிங்க தெரியும்..? என் மகனே அவ எங்க இருக்கான்னு தெரியாம தினம் தினம் செத்துட்டு இருக்கான்..” கங்கா சொல்லும் நேரம் ஈஷ்வர், விஷ்ணுவுடன் வெளியே வந்தான். அவனை பார்த்த ரத்னாவால் தன் கோவத்தை கட்டு படுத்த முடியாமல் போக, “என் பொண்ணு உங்க மகனை நம்பி தான் வந்தா..” என்று பேசிவிட்டார். “அப்போ என் மகன் தான் உங்க பொண்ணை தொலைச்சிட்டான்னு சொல்றீங்களா..?” “இல்லைன்னு சொல்றீங்களா..? சொல்லுங்க, பெத்து வளர்த்த எங்களை எல்லாம் வேண்டாம்ன்னு தூக்கி போட்டுட்டு உங்க மகன் தான் வேணும்ன்னு அவர் பின்னாடி வந்த என் பொண்ணு எங்கங்க சொல்லுங்க..” ரத்னா அழுகையும், கோவமுமாக பேச, கங்கா அமைதியாகி போனார். அம்மாவாக அவரின் வேதனை புரிய அதற்கு மேல் பேசமுடியவில்லை. ஈஷ்வர் சிவந்து கண்களுடன் இறுக்கமான உடலுடன் நின்றான். “எங்களுக்கு தெரியும் நீங்க ரொம்ப பெரிய இடம்ன்னு, பணத்துல, செல்வாக்குல, பதவியில, அதிகாரத்துல எல்லாத்திலும் நீங்க பெருசு, எங்களால உங்களோட நேருக்கு நேர் நிக்க முடியாது, நாங்க சாதாரண மிடில் கிளாஸ் ஆளுங்க, என் பையனும், அவங்க அப்பாவும் கம்பெனியில வேலை பார்க்கிறவங்க..” “எங்களுக்கு சொல்லிக்கிற படி அதிகாரம், செல்வாக்கு எல்லாம் இல்லை, உங்களோட சண்டை போடவும் மனசுல தெம்பு இல்லை, விட்டுடுங்க எங்களையும், என் பொண்ணையும்..” ரத்னா கை தூக்கி கும்பிட்டு அழுக, ஈஷ்வர்க்கு சகலமும் துடித்தது. மகனை பார்க்கவும் அவனுக்கு மறைவாக நின்று கொண்ட நரசிம்மனுக்கு பல யோசனைகள். “இங்க பாருங்கம்மா.. நீங்க திரும்ப திரும்ப இதையே பேசுறது தான் எனக்கு கோவம் வருது, உண்மையாவே உங்க பொண்ணு எங்கன்னு என் மகனுக்கு தெரியாது.. பல்லவி அவளே தானே பிரிஞ்சு போனா..” “அவளை போக வச்சதே உங்க வீட்டுக்காரர் தானே.. அப்பா, மகன் பிரச்சனையில என் தங்கச்சி தானே பிணையானா..?” பரணி விசாரித்ததை வைத்து ஆத்திரத்துடன் சொன்னான். “அவங்களுக்கும் பிரச்சனை வர காரணமே இவங்க காதல் தானே..?” உன் தங்கையும் சம்மந்தப்பட்டிருக்கிறாள் என்ற ரீதியில் பேச, பரணிக்கு கடுப்பானது. “தப்பு தான், என் தங்கச்சி பண்ணது தப்பு தான், ஒத்துகிறேன், அவ எங்கன்னு சொல்லுங்க நான் கூட்டிகிட்டு போயிடுறோம்..” “அட என்னப்பா நீ திரும்ப திரும்ப இதையே சொல்லிட்டிருக்க, பல்லவி எங்கன்னு ஈஷ்வருக்கு தெரியாது..” “இவருக்குமா தெரியாது..” பரணி நரசிம்மனை கை காட்டி கேட்க, அவர் தான் தள்ளி நின்றிருந்தாரே. “உங்க மகனுக்கு வேணும்ன்னாலும் தெரியாம இருக்கலாம், ஆனா கண்டிப்பா மினிஸ்டர் சாருக்கு தெரிஞ்சிருக்கும்..” பரணி சர்வ நிச்சயமாய் சொல்ல, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த விஷ்ணு முகத்தில் மெச்சுதல். அதுவரை பரணி மேல் இருந்த அதிருப்தி கூட லேசாக மறைந்து தான் போனது. “பரவாயில்லைடா உன் மச்சானுக்கு உன் சட்டை பிடிக்கிற வீரம் தான் இல்லைன்னு நினச்சேன், மூளையாவது கொஞ்சம் இருக்கு..” ஈஷ்வரிடம் வாய் விட்டு சொல்லவே செய்தான். பக்கத்தில் நின்றிருந்த சுப்ரமணிக்கு தான் பக்கென்று இருந்தது. “அடேய்.. என்னடா பேசிட்டு இருக்க..?” “பின்ன என்னடா நம்ம வீட்டு பொண்ணை ஒருத்தன் அனாமத்தா தொலைச்சிட்டு நிக்கிறான்னா அவனை தூக்கி போட்டு பந்தாட வேண்டாமா..? அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தா என்ன..?” “டேய்.. நீ புரிஞ்சு தான் பேசுறியா..?” “இதில் புரியாம பேச என்ன இருக்கு..? அவன் வந்த வேகத்துக்கு இவன் மூக்கை உடைப்பான்னு பார்த்தா, கை பிடிச்சிட்டு நிக்கிறான், இவன் எல்லாம் மறத்தமிழன், நம்ம அடையாளமே நம்ம அந்த கோவம், வீரம் தானடா..” “டேய்.. போதும்டா வாய் மூடி தொலை..” “ம்ப்ச்.. என்னவோ போ..” விஷ்ணு போனால் போகுதென்று வாய் மூடிக்கொள்ள ஈஷ்வர்க்கு பரணியின் எண்ணம் புரிந்தது. நிதானமாக தங்கை இருக்கும் இடத்தை தெரிந்து கூட்டி கொண்டு சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான் என்று. “இப்போ இவ்வளவு பேசுற நீ இத்தனை வருஷம் என்ன பண்ணிட்டிருந்த..?” கங்கா பேச, “எனக்கு தெரியாதுங்க.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பல்லவி காதலிக்கிறாங்குறது மட்டும் தான் எங்களுக்கு தெரியும், ஆனா யாரை காதலிக்கிறான்னு எங்க வீட்ல யாருக்கும் தெரியல, நானும் அந்த பிரச்சனை நடந்தப்போ என் மாமியார் வீட்டுக்கு சிங்கப்பூர் போயிருந்தேன், வந்ததுக்கு அப்பறம் தான் இப்படின்னே தெரிஞ்சது..” பரணி சொல்ல, “அப்போ பல்லவி அப்பாக்கு அவ மேல ரொம்ப கோவம், எங்க மாமியார் பேச்சை கேட்டு பல்லவிகிட்ட ரொம்ப சண்டை போட்டார், அவ இவர் பேச்சை கேட்கலைன்னதும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டாரு, பல்லவியும் அந்த ராத்திரில, என் ஈஷ்வர் இருக்கார் நான் போறேன் போங்கன்னு சொல்லிட்டு வந்துட்டா, அந்த ஈஷ்வர் யாருன்னு கூட அப்போ எங்களுக்கு தெரியாது, காலையில என் மகன் சொல்லித்தான் இவர் தான் அந்த ஈஷ்வர்ன்னு எனக்கு தெரியும்..” ரத்னா சொல்ல, கங்காவிற்கு உண்மையிலே இது அதிர்ச்சி தான். அவர் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவில்லை. “இப்போ எப்படி தெரிஞ்சுது..” கங்கா பரணியை பார்த்து கேட்டார். “நாங்க திருப்பதி போனப்போ இவர் தான் எங்களுக்கு ஆக்டிங் ட்ரைவரா வந்தார்..” என, கங்கா திரும்பி மகனை ஆதங்கத்துடன் பார்த்தார்.