திகம்பரனின் திகம்பரி அவள் 23 2 16730 “ஆனா மருமககிட்ட பேசினா அவங்ககிட்ட மறுப்பு தான் தெரிஞ்சது. ஒரு நாலு வருஷம் பிரிஞ்சிருந்தா என்ன..? அவர் ஐபிஸ் படிச்சு முடிக்கும் போது இவங்க குடும்பம் நடத்த வயசும் சரியா இருக்கும், ஒரு நல்ல பேரும் இருக்கும், அடையாளமும் இருக்கும், சமுதாயத்துல இவங்களுக்குனு ஒரு கௌரவமும் கிடைக்கும்..” “ஏன் இதை இவங்க ரெண்டு பேருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கன்ற கோவத்துல, ஆதங்கத்துல தான் நான் அன்னிக்கு அப்படி கேட்டேன், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி எங்க வருமானத்துல, அடையாளத்துல இருக்க முடியும்ன்னு..?” “இதுல எந்த உள்ளர்த்தமும் இல்லை. உங்களை காயப்படுத்தணும்ன்னு எண்ணமும் இல்லை. எதார்த்தத்தை புரிய வைக்கணும்ங்கிற என்னோட ஆதங்கம் மட்டும் தான்ம்மா உன்கிட்ட என்னை அப்படி பேச வச்சுது, இது சத்தியமான உண்மை. அரசியல்ல ஆயிரம் பொய் பேசினாலும், குடும்பத்துல பொய் சொல்ல மாட்டேன்..” “அன்னைக்கு இருக்கிற சூழ்நிலையை உங்களுக்கு புரிய வைக்கிற நோக்கம் மட்டும் தான். ஆனா அதுவே உங்களை இவ்வளவு பாதிக்கும் நான் நினைக்கல, எங்களுது எல்லாம் உங்களுக்கு தான்னும் போது நான் அப்படி யோசிக்காம பேசியிருக்க கூடாது..” “தப்பு தான், என்ன தான் சொன்னாலும் நான் செஞ்சது தப்பு தான்.. என்னை மன்..” “ப்பா.. மாமா.. மாமா.. என்னங்க..” நால்வரின் சத்தமும் ஓங்கி ஒலித்தது. கங்கா தவிப்புடன் அவரின் அருகில் சென்று நின்று கொண்டார். ஈஷ்வருக்கு அவரின் ஒவ்வொரு வார்த்தையும் எங்கோ சென்று தாக்கியது. உயிர் வரை குத்தியது. புரிந்த விஷ்ணு அவன் கை பிடித்து தட்டி கொடுத்தான். பல்லவிக்கு இதெல்லாம் முன்பே அவர் சொல்லியிருந்தார் தான். ஒரு நொடி அவளுக்கு என்ன பேச என்று கூட தெரியவில்லை. அவர் சொல்வது எல்லாம் உண்மை என்று புரிந்தது. “ஆனால் சில வார்த்தைகள் தெரிந்து வந்தாலும், தெரியாமல் வந்தாலும் அதற்கான வீரியம் ஒன்று உண்டே..?” “அதற்காக அவரை மேலும் பேசி நோகடிக்கவும் விரும்பவில்லை. செய்த தவறை சொல்லி இவ்வளவு வருந்தும் ஒரு பெரிய மனிதரை இதற்கு மேலும் பேசுவது அவளை அவளே கீழாக தான் நினைக்க வைக்கும்..” கையில் இறங்கும் மகளை இறுக்கமாக பிடித்தவள், “ப்ளீஸ், நான் தான் உங்களை புரிஞ்சுக்கல போல, என்னோட தப்பும் இதுல கொஞ்சம் இருக்கு, அப்படியும் நீங்க எங்களை தேடி பிடிச்சு உங்க பாதுகாப்புல தான் இத்தனை வருஷம் எங்களை வச்சிருந்திருக்கீங்க, இல்லை அனு பிறந்தப்போ நான் ரொம்ப கஷ்ட பட்டிருப்பேன்..” பல்லவி மனதார சொல்ல, ஈஷ்வர் அவளை பார்த்தவன், திரும்பவும் முகம் திருப்பி கொண்டான். “என்னை புரியுது தானேம்மா, நான் எதுவும் வேணும்ன்னு சொல்லல..” நரசிம்மன் பல்லவியின் வார்த்தையில் மீண்டும் கேட்க, கங்காவோ வேகமாக வந்து மருமகளை அணைத்து கொண்டார். “எங்க ஒரே மருமக நீ, எங்களுக்கு மகா போல தான் நீயும், உன் மனசுல எங்க மேல் இவ்வளவு கஷ்டம் இருக்குன்னு தெரியாம, நம்ம வீட்டுக்கு வர மாட்டேன் சொன்னதுக்கு கோவப்பட்டுட்டேன்..” வருத்தத்துடன் சொன்ன கங்கா மேலும், “உன் மாமனார் பேசினது ஒரு பொண்ணா உன்னை எவ்வளவு பாதிச்சிருக்கும்ன்னு எனக்கு புரியுது பல்லவி, நான் உன்கிட்ட முதல்லே பேசியிருந்தா கூட இந்தளவு வந்திருக்காதோ என்னமோ..?” பார்வையால் ஈஷ்வரை குற்றம் சாட்டினார் கங்கா. அவனோ “இன்னும் என்னென்ன பேசணுமோ பேசுங்க..” பார்வை பார்த்தான். என்ன சொல்வாள் பல்லவி..? முடிந்ததை முடிந்ததாகவே மறக்க நினைத்தாள். குறைந்த பட்சம் நரசிம்மன் விஷயத்திலாவது, நாட்கள் எடுக்கும். பார்ப்போம், தன்னை தயார் செய்தவள், கங்கா பேச்சிற்கு அமைதியாக நின்றாள். “நான் அங்க ரத்னா வீட்ல, இங்க உன்மேல் கோவப்பட்டதை மனசுல வச்சுக்காத பல்லவி..” கங்கா பேத்தியை வாங்கி கொண்டு சொன்னார். “நீங்க என்மேல கோவப்பட்டது எனக்கு சந்தோசம் தான், நான் பிறந்த வளர்ந்த என் சொந்த குடும்பத்துகிட்டேயே எனக்காக சப்போர்ட்டா பேசுனீங்க..” பல்லவி மனதார சொன்னாள். “அப்போ நான் அங்க இவளுக்காக பேச சொல்றாளா..?” ஈஷ்வர் அவளை வெறித்து பார்த்தான். கூடவே “அவங்ககிட்ட எல்லாம் ஏன் பேசணும்..? அதுக்கான தகுதி அவங்களுக்கு இருக்கா..?” கோவமும் வந்தது அவனுக்கு. “உங்க பாட்டி தான் ரொம்ப மோசம்..” கங்கா இப்போதும் கோபத்துடன் சொன்னவர், “அவங்க இப்படின்னு தெரிஞ்சிருந்தா உங்க அம்மா உன்னை கூட்டிட்டு போக நான் விட்டிருக்கவே மாட்டேன்..” என்றுவிட்டார் மனதை மறைக்காமல். பல்லவிக்கு மாமியார் இப்படி சொல்லவும், அந்த வீட்டு பெண்ணாக உள்ளுக்குள் அவ்வளவு வலித்தது. “அவங்க சொல்றது சரி தானே பல்லவி, நீ காதலிக்கிறேன்னு தெரிஞ்ச கொஞ்ச நேரத்துலே உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினவங்க வீட்டுக்கு நீ போயிருக்க கூடாது..” “எங்க காதல் அவ்வளவு பெரிய குத்தமா..? நாங்க காதலிக்கிறதுக்கு முன்னாடியும் சரி, எங்க கல்யாணத்துக்கு பின்னாடியும் சரி நான் ரொம்ப அழுதது வீட்டை நினைச்சு தானே. அவங்களை ஏமாத்திட்டோம்ன்னு குற்ற உணர்ச்சியில இவரோடவும் பலநேரம் சண்டை வந்திருக்கு..” “ஆனா என்ன இருந்தாலும் என் அப்பா, அம்மா, பாட்டி, அண்ணா இல்லையா, அவ்வளவு சீக்கிரம் அவங்க மேல எனக்கு இருந்த அந்த பாசம் வடிஞ்சு போகல, ரத்தம் சொந்தம் இது தான் போல. அதுவும் அம்மா, அண்ணா..” “அன்னிக்கு அப்பா என்னை அடிக்க வந்தப்போ, வீட்டை விட்டு வெளியே அனுப்பினப்போ அம்மா அவ்வளவு அழுதாங்க, பேச்சு வாங்கினாங்க, என்னை நினைச்சு ரொம்ப ஏங்குவாங்கன்னு தெரிஞ்சு தானே இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அம்மாக்காகவே அவங்க வீட்டுக்கு திரும்ப போனேன், அது எவ்வளவு பெரிய தப்புனு பட்டு தான் உனக்கு புரிஞ்சது பல்லவி..” அவள் முகம் இப்போதும் கசங்கி தான் போனது. மருமகளை கவனித்த கங்கா, “விடு பல்லவி, உங்க பாட்டி குணமே தேள் மாதிரி கொட்டுறது தான் போல, எப்படி தான் உங்க அம்மா எல்லாம் அவங்களோட இருக்காங்களோ, எனக்கு வந்த கோவத்துக்கு இன்னும் பேசியிருப்பேன்.. உனக்காக தான் விட்டேன்..” இப்போதும் கோமதியை உள்ளுக்குள் ஆய்ந்துவிட்டார். பல்லவி விரக்தியாக பார்த்தவள், “நீங்க சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு, ஆனா உண்மை தானே, ஏத்துக்க தான் செய்யணும்..” “அந்த மண்ணுல இருந்து அவங்களே என்னை வேரோடு பிடுங்கி போட்டதுக்கு அப்பறம் திரும்ப அந்த பட்டு போன மண்ணுக்கே நான் போயிருக்க கூடாது, அங்க நான் எப்படி உயிர்ப்போட இருக்க முடியும்..?” “எனக்கு அங்க எந்த சொந்தமும் இல்லை. உரிமையும் இல்லை. அப்படி பட்ட இடத்தில, நாம எதுக்கு போகணும், உரிமையா சண்டை போடணும், கோவப்பட்டு பேசணும்..?” “எனக்கு அங்க மிச்சம் இருக்கிறதே அம்மா தான், அண்ணாவும் எனோ இப்போ எனக்கு கொஞ்சம் தூரம் போயிட்ட மாதிரி தெரியுது, போகட்டும், யாரும் வேண்டாம்..” மிகவம் வெறுமையாக முடித்துவிட, ஈஷ்வர் அவளையே தீர்க்கமாக பார்த்தான். அனு திரும்ப திரும்ப கங்காவிடம் இருந்து அவளிடம் தாவ, மகளை வாங்கி கொண்டாள் பல்லவி. இந்த இரண்டு நாட்களில் புது மனிதர்கள், இடம், உணவு என்று அனு கஷ்டப்படுவது வேறு அம்மாவாக அவளை வறுத்தியது. “இந்த இடமாவது எனக்கும், என் பொண்ணுக்கும் நிலைக்கணும், அதுக்கு நீ வேலைக்கு போகணும் பல்லவி. ஒரு டிகிரி வச்சிருக்கிற உனக்கு என்ன வேலை கிடைக்கும், அதான் இரண்டு நாளா பார்த்துட்டு தானே இருக்க, வாடைக்கு வீடு பிடிக்க முடிஞ்சது, வேலை தான்..” ஞாபகம் வந்ததும் முகம் வாடி போனது. மகளின் தலையை வருடி கொடுக்க, அவள் தூக்கத்திற்கு பல்லவியின் கழுத்தை கட்டிக்கொண்டாள். “அனுக்கு தூக்கம் வருது போல பல்லவி..” கங்கா சொல்ல, பல்லவிக்கு இது தெரிந்து தான் இருந்தது. ஈஷ்வர் நின்று கொண்டே இருந்த மனைவி மகளை பார்த்தான். “என் பொண்ணு தூங்க கூட இந்த வீடு இல்லையா..?” இன்னும் இன்னும் தன்னை வருத்தி கொண்டான். “கங்கா மருமகளையும், பேத்தியையும் கூப்பிட்டுக்கோ நம்ம வீட்டுக்கு போலாம்..” நரசிம்மன் சொல்ல, பல்லவி மறுப்புடன் தலை குனிந்து கொண்டாள். டக்கென்று அங்கு பொருந்த முடியும் என்று தோன்றவில்லை. ஈஷ்வருக்கோ “அப்போ இது யார் வீடு..? நான் என் பொண்டாட்டி, பிள்ளையை பார்த்துக்க மாட்டேனா..? மாமனார் வரச்சொல்றார், மருமக வாடகை குடுப்பேன் சொல்றா.. என்ன என்னை நினைச்சாங்க ரெண்டு பேரும்..” உள்ளுக்குள் பொங்கி கொண்டு வர, “ம்மா.. ரெண்டு பேர்கிட்டேயும் போதும் சொல்லுங்க..” என்றான். அவன் குரல், முகம் இரண்டும் சொல்லி கொள்ளும் படி இல்லை. “நிறைய நிறைய பேசியாச்சு மாமனாரும், மருமகளும், இதுக்கு மேல என்கிட்ட தெம்பு இல்லை. வார்த்தையால ரெண்டு பேரும் என்னை தான் கொன்னுட்டு இருக்காங்க..” அவரவர் நியாயம் ஈஷ்வரை தான் குத்தி வலிக்க வைத்து கொண்டிருப்பதை இருவரும் உணரவில்லை “ஈஷ்வர்.. நான்..” நரசிம்மன் பேச வர, “நீங்க உள்ளதை தான் சொல்றீங்க, உங்களுக்கும், உங்க மருமகளுக்கும் ஆயிரம் காரணம், நியாயம் இருக்கு, நான் தான் எல்லா தப்பும்..” “உங்களுக்கு நல்ல மகனாவும் நான் இல்லை, இந்த மேடத்துக்கு நல்ல புருஷனாவும் நான் இல்லை, எனக்கு புரியுது விட்டுடுங்க..” என்னவோ இருந்தது அவனின் குரலில். நரசிம்மனுக்கும் சரி பல்லவிக்கும் சரி உள்ளுக்குள் துடித்தது. “சரி சரி நாங்க பேசல, கங்கா அவருக்கு தண்ணி கொடு..” மனைவியை விரட்டினார். அவர் தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து கொடுக்க, வாங்கவே இல்லை. அவன் நிலை உணர்ந்த விஷ்ணு துடித்து போனவனாய், “ஈஷ்வர்.. நான்..” ஏதோ பேச வர, “விஷ்ணு வாயை மூடு, இல்லை உன்னை கீழே தூக்கி போட்டுடுவேன்..” கர்ஜனையாகவே வந்தது அவன் குரல். இத்தனை வருடங்களில் ஈஷ்வரை இப்படி பார்த்ததில்லை. பல்லவிக்கு உயிர் வரை வலித்தது.