“ஈஷ்வர் போன் பண்ணாரா..?” கேட்க, ம்ம்.. பல்லவி தலை ஆட்டினாள். கைகள் வேர்த்தது.
“உட்காரும்மா..” என,
“இல்.. இல்லை வேண்டாம்..” வேகமாக மறுத்தாள்.
“மாமா சொல்லும்மா..” என்றார் மனிதர். பல்லவி கொஞ்சம் தெளிந்த முகத்துடன் அவரை பார்க்க,
“நீங்க என் ஈஷ்வரோட உலகம், உங்களை நான் கண்டிப்பா காயபடுத்த மாட்டேன்.. உட்காருங்க..” மனதார சொன்னார் மாமனார்.
அவள் தயங்கி தயங்கி ஓரமாக அமர, “ஈஷ்வர் உங்ககிட்ட சொன்னாரா..? உங்களுக்கு அவர் சொல்றது சரியா படுதா..?” எடுத்தவுடன் மருமகளிடம் ஆதங்கத்துடன் கேட்டார்.
மருமகளோ முழித்தாள். என்ன சொன்னார்..? புரியாமல் பார்க்க, “உங்களுக்கு சொல்லலையா அவர்..?” நரசிம்மன் நம்பாமல் கேட்டார்.
“இல்.. இல்லை.. நீங்க சொல்றது எனக்கு புரியல..” என்றாள் வரவைத்த குரலுடன். கண் சுருக்கி அவளை ஆழ்ந்து பார்த்தவருக்கோ பல்லவிக்கு உண்மையில் தெரியவில்லை என்று புரிய, மூச்சை இழுத்துவிட்டார் மனிதர்.
“அவரை நான் ஐபிஸ் படிக்க சொல்லி கேட்டுட்டு இருக்கிறது..”
“அது தெரியும், அவர் என்னோட கோச்சிங் சென்டர் படிச்சப்போ ஒரு முறை சொன்னார்..”
“அப்போ சரி சொன்னவர், இப்போ முடியாது சொல்றார்..” என்றார் நரசிம்மன் இப்போதும் பொங்கிய கோபத்துடன். பல்லவிக்கும் அவள் ஒருமுறை இது பற்றி கேட்டதற்கு ஈஷ்வர் பேச்சை மாற்றியது ஞாபகத்திற்கு வந்தது.
“ஏன்..?” இந்த இடைப்பட்ட நாட்களில் அவன் ஒருமுறை கூட அது பற்றி பேசாததும் உறைத்தது.
“உங்களுக்காக.. உங்களுக்காக தான் ஐபிஸ் படிக்க மாட்டேன் சொல்றார்..” அவர் பட்டென உடைக்க, பல்லவிக்கு அதிர்ச்சி தான்.
“நான்.. நானா..?”
“ஆமா உங்களுக்காக தான்.. ஐபிஸ் படிச்சு முடிக்க மூணு நாலு வருஷம் ஆகும், அதுவரை உங்களை பிரிஞ்சிருக்க கஷ்ப்படுறார்..”
“நான்.. நான் பேசுறேன் அவருகிட்ட..” பல்லவி வேகமாக சொல்ல,
“உங்களுக்கு சொல்லியிருக்க மாட்டார் நினைக்கிறேன்..” என்றவர், அன்று வீட்டில் நடந்ததை முழுவதுமாக சொல்லி முடித்தார். அவர் ஈஷ்வரை அறைந்தது வரை.. பல்லவி கண் விரித்து பார்த்தாள்.
அன்று மாலை அவளை பார்க்க வந்த போது, அவனின் கன்னம் லேசாக சிவந்து வீங்கியிருக்க கேட்டதற்கு, கதவில் இடித்து கொண்டேன் என்றல்லவா சொல்லியிருந்தான். இவ்வளவு அடமா இருக்கிறாரா..? பல்லவி ஈஷ்வரை நினைத்து வருத்தத்துடன் இருக்க, நரசிம்மன் மருமகளிடம்,
“நீங்க நினைச்சா அவர் ஐபிஸ் படிக்க வைக்க முடியும்..” என்றார் மெல்ல.
“நான் பேசுறேன்..”
“இல்லைம்மா, அது தான் சொன்னேனே, அவர் கேட்க மாட்டார்..” வேறென்ன செய்றது.. பல்லவி பார்க்க, நரசிம்மனின் பார்வையில் திரும்ப அவள் மனம் அடித்து கொண்டது.
“நீங்க கொஞ்ச நாளைக்கு அவரை விட்டு பிரிஞ்சு..”
“மாமா..” பல்லவி கூவியேவிட்டாள்.
“என்னை மன்னிச்சிடுமா.. எனக்கு என் மகன் வாழ்க்கை, என் கனவு முக்கியம், அதுக்காக கொஞ்ச நாள் நீங்க அவரை விட்டு பிரிஞ்சு இருக்க தான் வேணும்..” முடிக்கும் போது திடமாக முடித்தார்.
“இது.. இது வேண்டாம் மாமா.. நான் அவரை விட்டு பிரிஞ்சு..” கண்கள் கலங்கவே செய்தது.
“தயவு செஞ்சு அழுகாதம்மா..” நரசிம்மன் கெஞ்சலாக சொல்ல, அழ கூட எனக்கு உரிமை இல்லையா..? உள்ளுக்குள் குமுறினாள்.
“என்னை புரிஞ்சுக்கோம்மா, உங்க காதல், கல்யாணம் எல்லாம் இப்போ ஒரு அஞ்சு ஆறு வருஷமா தான், ஆனா என்னோட கனவு அவர் பிறந்ததில் இருந்து, அவரும் செய்றேன் செய்றேன் சொல்லி இப்போ வந்து முடியாது சொல்றார், கேட்டா உங்களை தான் சொல்றார், நான் என்ன செய்யட்டும், உங்களை தவிர எனக்கு இப்போ வேற வழியே இல்லை..” அவர் பேசி பேசி அவளை கரைக்க, பல்லவியோ கண்ணீரில் கரைந்தாள்.
“அவருக்குன்னு ஒரு நல்ல வேலை.. மரியாதையான வாழ்க்கை, நாலு பேர் மதிக்க கூடிய பேர்.. இதை தானே கேட்கிறேன், நான் கேட்கிறதுல என்ன தப்பு இருக்கு..? நீங்களே சொல்லுங்க.. நீங்க படிச்சவங்க, உலகம் தெரிஞ்சவங்க, சொல்லுங்க..” பல்லவியிடம் கேட்க அவளால் என்ன சொல்ல முடியும்..?
“இதில இந்த வயசில கல்யாணம் வேற, கல்யாணம் செஞ்சுகிற வயசா இது..? ஒரு குடும்பத்தை தூக்கி சுமக்கிற முதிர்ச்சி இருக்கா அவர்கிட்ட, எல்லாத்திலும் அவசரம்.. இந்த அவசரம் வாழ்க்கைக்கு பொருந்துமா..?”
“இதே படிச்சு, வேலை பார்த்து உலகத்தை புரிஞ்சு, பக்குவம் கிடைச்சு அதுல வாழுற வாழ்க்கை எப்படி இருக்கும்..? அந்த பேர், அடையாளம் எப்படி இருக்கும்..? சும்மா கெத்தா நாலு பேர் முன்னாடி நிமிர்ந்து நிக்கிற அந்த கௌரவம் எப்படி இருக்கும்..?”
“அதை எல்லாம் விட்டு இப்டி என் மாமனார் சொத்தோட வருமானத்துல வாழுற வாழ்க்கை இதுல என்ன கிடைக்கும்..? இதுவும் கூட இப்போ ஓகே, உங்களுக்கு குழந்தை வந்ததுக்கு அப்புறமும் இப்படி வாழ முடியுமா..?”
“உங்க புருஷனா, என் பேர பிள்ளைகளுக்கு அப்பாவா ஈஷ்வருக்குன்னு ஒரு வருமானம், கௌரவமான அடையாளம் வேண்டாம்..? எப்போவரை அவர் என் மகன்கிற அடையாளத்தில் இருக்க முடியும்..? நான் இருக்கிறவரை.. நான் போய் சேர்ந்துட்டா என்ன பண்ணுவீங்க..” அவரின் மன அழுத்தம் அவரை பேச வைக்க, பல்லவி உடைந்து போனாள்.
முன்பே மனசாட்சி குத்த வாழ்ந்து கொண்டிருப்பவள் நரசிம்மன் கேட்ட கேள்வியில் இன்னும் துடித்து போனாள். கதறி அழுக முடியாமல் தொண்டை வலிக்க அமர்ந்திருந்தாள்.
நரசிம்மன் அவர் அழுத்தத்தை, ஆதங்கத்தை, ஏமாற்றத்தை வேதனையை தான் கொட்டினார். ஆனால் அது ஒவ்வொன்றும் பல்லவியை தானே குத்தியது.
மாமனார் சொன்ன குழந்தை என்ற வார்த்தை நிதர்சனத்தை இன்னும் வலுவாக எடுத்து காட்ட, கைகள் சோபாவை இறுக்கமாக பிடிக்க அமர்ந்தாள்.
“ஈஷ்வர்கிட்ட இதை எல்லாம் எடுத்து சொன்னா கேட்டுகிற நிலையிலே இல்லை, சொல்லியும் பிரயோஜனம் இல்லை. இந்த விஷ்ணுவும் அவருக்கு தான் சப்போர்ட் பண்றார். அதான் நான் உங்ககிட்டேயே வந்துட்டேன்..” சொல்லி அவள் முகம் பார்க்க, பல்லவி அழுகையுடன் குனிந்திருந்தாள்.
“நீங்க இங்க அவரோட இருந்தா தானே அவர் உங்களை விட்டு பிரிய மறுக்கிறார், அதான் நீங்க அவர் படிச்சு முடிக்கிற வரை என் பாதுகாப்புல இருங்கன்னு கேட்டு வந்திருக்கேன்..” பல்லவி மௌனமாக இருக்க, என்ன நினைத்தாரோ எழுந்து நிற்க, அவளும் உணர்ந்து எழுந்து அவர் முகம் பார்த்தாள்.
“நான் வந்தப்போவே சொன்னது தான், என் ஈஷ்வரோட உலகம் நீங்க, கண்டிப்பா உங்களை நான் பத்திரமா, என் மகளா பாதுகாப்பேன்.. நீங்க நான் கேட்கிறதுக்கு சரி சொல்லுங்க..” பல்லவியின் கைகள் பிடித்துவிட,
பல்லவி அதிர்ச்சியுடன், “மாமா என்ன பண்றீங்க..” என்று கைகளை இழுத்து கொண்டாள்.
“எனக்கு வேற வழி இல்லைம்மா.. நான் சொல்றதுக்கு ஓத்துக்கோ.. ப்ளீஸ்.. ரொம்ப நாள் எல்லாம் வேண்டாம், அவர் ஐபிஸ் முடிக்குற வரை தான், அப்பறம் நானே உங்களை அவர்கிட்ட சேர்த்துடுவேன்.. என்னை நம்புமா..” அவர் கெஞ்சி கேட்க, பல்லவி தலை சம்மதமாக ஆடியது.
நரசிம்மன் இதை எதிர்பார்க்கவில்லை. “உண்மையாவே நீங்க ஒத்துக்கிட்டிங்களா..?” திரும்ப திரும்ப கேட்டு உறுதி செய்து கொண்டவர், அவர் அவளை எந்த வெளிநாடு அனுப்ப என்று கேட்டார்.
“நான் நாளைக்கு சொல்லவா..?” அவள் கேட்க, நரசிம்மன் சந்தேகத்துடன் பார்த்தார்.
“என் ஈஷ்வர் மேல சத்தியமா நான் அவர்கிட்ட இதை பத்தி எதுவும் சொல்ல மாட்டேன்..” அவள் சத்தியம் வைக்க, நரசிம்மனுக்கோ என்ன தோன்றியதோ
“சரிம்மா, நான் காலையிலே வரேன்.. ரெடியா இரு..” கிளம்பிவிட்டார்.
அவர் செல்லவும் கதவு மூடி கதறி தீர்த்தாள். அவர் சொன்னதும் அனைத்தும் சரி தானே. என் காதல் தானே அவர் வாழ்க்கைக்கே முட்டு கட்டையா வந்து நிக்குது..? அவளின் மனசாட்சியின் குத்தலே, குற்ற உணர்ச்சியை தூண்டி விட்டது.
“அவங்க அப்பா கேட்டமாதிரி இந்த வயசுல அவருக்கு என்ன தலை எழுத்து என் பாரத்தை தூக்கி சுமக்கனும்ன்னு..?” அதற்கும் அழுதாள்.
“குழந்தை..” நரசிம்மன் சொல்லிவிட்ட, “என் மாமனார் வருமானத்தில, என் அடையாளத்துல எத்தனை நாள் வாழுவீங்க..” அழுகையோடு ரோஷத்தையும் கொடுத்தது.
“யாரோட வருமானமும் என் பிள்ளைக்கு தேவையில்லை.. இப்போ என்ன அவர் கண்டிப்பா ஐபிஸ் முடிப்பார், அதுவரைக்கும் நான் வேலை பார்த்து என் பிள்ளையை வளர்க்குறேன் யாரும் எங்களுக்கு செய்ய வேண்டாம்..” நரசிம்மன் மேலும் வைராக்கியம் வளர்த்தாள்.
அதன் முதல் வேலையாக, நேற்று பேஸ்புக்கில் அவள் தோழி போட்டிருந்த அந்த வேலையை தேடினாள். தேவாலாவில் எந்த நெட் வொர்க்கும் இல்லை, குளிர், வசதி இல்லை.. என்று அவள் மொத்த நெகட்டிவ் பாயிண்ட்ஸ் போட்டு இங்கு எல்லாம் யாரு வேலைக்கு போவா..? என்று கேட்டிருக்க, பல்லவி அப்போது அதை கடந்தவிட்டாள்.
இப்போது அவள் நிலைக்கு அது தான் முதல் ஞாபகத்தில் வந்தது. அவள் தோழியை அழைத்து மற்றவருக்கு கேட்பது போல முழு தகவலும் விசாரித்து கொண்டவள், அங்கு செல்வதற்கான ஏற்பாட்டையும் பிளான் செய்து கொண்டாள்.
இரவு கிளம்புவதற்காக முக்கியமானதை எல்லாம் எடுத்து வைத்தவள், ஈஷ்வரின் போட்டோவை எடுக்கும் போது திரும்ப ஒரு மூச்சு அழுதாள். அங்கு ஈஷ்வர் முழித்து இவளுக்கு போன் செய்ய, எடுக்க முடியவில்லை. கைகள் நடுக்கம் கொண்டது.
“நான் கூப்பிடுறேன்..” மெசேஜ் அனுப்பிவிட்டாள். இரவு நெருங்க நெருங்க, பயம் உச்சத்தில் நின்றது. ஈஷ்வரும் திரும்ப இருமுறை கூப்பிட்டிருக்க, கேட்டை பார்த்தாள்.
வாட்ச்மேன் சாப்பிட போக, வேகமாக போன் எடுத்து, ஈஷ்வருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டவள், பேக் செய்து வைத்த பேக்குடன் கிளம்பிவிட்டாள்.