“ம்ப்ச்.. விஷ்ணு அப்போ அப்பா ஆசைக்காக படிக்கலாம் தான் நினைச்சேன், ஆனா இப்போ  நான் ஆசைப்படுற வாழ்க்கைக்கு அது செட் ஆகாதுன்னு தோணுச்சு.. அதான்..”

“எது பல்லவி கூட நீ வாழ நினைக்கிற பேரீடைல் வாழ்க்கையா..?”

“ஏன் அதுல என்ன தப்பு விஷ்ணு, இதுவரை அவ என்னால கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கா, இனியாவது அவளோடு இருந்து அவளை சந்தோஷமா வச்சுக்கணும் நினைக்கிறேன்..”

“ஈஷ்வர் அவ கஷ்டடுபடுறதுக்கு உங்க அவசரம் தான் காரணம்..”

“லவ் பண்றது தப்பா விஷ்ணு, அதுக்கு போய் அவளை வீட்டை விட்டு அனுப்பினா..?”

“இது உனக்கு இப்போ புரியாது ஈஷ்வர் விடு..”

“ஓகே.. பேரெண்ட் பாயிண்ட் ஆப் வியூல அவங்க சரியாவே இருக்கட்டும், ஒரு ஹஸ்பண்டா நானும் சரியா இருக்கணும் நினைக்கிறேன்..”

“இப்போ மட்டும் நீ என்ன தப்பா இருக்க..? உன்னால முடிஞ்சவரை அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தானே கொடுத்துட்டு இருக்க..”

“எப்படி..? அவ தனியா அங்க தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு.. நான் இங்கன்னா.. போடா..”

“ஈஷ்வர் நீ எப்போவும் உன் வயசை மறந்துடற..”

“என்ன பொல்லாத வயசு, அந்த காலத்துல உன் அப்பா, என் அப்பா எல்லாம்  இந்த வயசுலே கல்யாணம் பண்ணிக்கலயா..?”

“ஈஷ்வர் இப்போ நீ என்னதான் சொல்ல வர..?”

“எனக்கு லவியை விட்டு எங்கேயும் போக முடியாது, நான் போகவும் மாட்டேன்..”

“இதை சொல்லுடா.. இது பேச்சு.. எனக்கு தெரியும் உன் மனசு என்னன்னு..” விஷ்ணு பல்லை கடித்து பேசினான்.

“விஷ்ணு புரிஞ்சுக்கோடா.. நான் ஐபிஸ் படிச்சு முடிக்கணும்ன்னா.. ப்ரீபெரேஷன் டைம், எக்ஸாம், ட்ரைனிங்ன்னு மூணு, நாலு வருஷமாவது ஆகும், அதுவரைக்கும் அவ எப்படிடா, என்னால முடியலடா.. ப்ளீஸ் நீ அப்பாகிட்ட பேசு.. எனக்காக ப்ளீஸ்..”  கெஞ்சலாகவே கேட்க, கேட்டு கொண்டிருந்த நரசிம்மனுக்கு வழி கிடைத்த பிரகாசம் முகத்தில்.

“மருமக.. இவங்களால தான்  ஐபிஸ் படிக்க மாட்டேன் சொல்றாங்களா..?” நரசிம்மன் மனதில் உடனுக்குடன் பல கணக்குகள். வழிகள், தீவிர யோசனைகள்.

“அவரால் படிக்க முடியாது, கஷ்டம்ன்னு சொன்னா கூட விட்டுடலாம், ஆனா இவர் காதல் பொண்டாட்டிக்காக வேண்டாம் சொன்னா.. அதெப்படி விட முடியும்..?” அந்த இரவிலே  என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு விட்டார் அரசியல்வாதி.

அதற்கு ஏற்றார் போல மறுநாள் காலையிலே விஷ்ணு, ஈஷ்வர் பற்றி பேச வர, இப்போ வேண்டாம் என்றுவிட்டவர், அவன் மேலும் கேட்டதில் முகத்தின் மலர்ச்சியை மறைக்க பாடுபட்டார்.

சின்னுவின் வைத்தியத்திற்காக ஈஷ்வரையும் தன்னுடன் அமெரிக்கா கூட்டி செல்கிறேன் என்று கேட்க, நரசிம்மன் யோசிப்பது போல தயங்கி சரி என்றுவிட்டார்.  நேரம் அவருக்கு சாதகமாக வாய்த்துவிட்டது.

அந்த வாரம் முழுதும் சின்னுவின் செக்கப், ஹாஸ்பிடல், விசா, என்று ஈஷ்வர், விஷ்ணு என்று மொத்த குடும்பமும் பிசியாக சுற்ற இவர் மட்டும் பல்லவியிடம் பேசும் நேரத்திற்காக காத்திருந்தார். அவர் மிகவும் எதிர்பார்த்த நேரம் வந்தே விட்டது.

அன்று இரவு பிளைட். ஈஷ்வர் முன்தின மாலை பல்லவி வீடு சென்றவன் இரவு வரவே இல்லை. அங்கேயே தங்கிவிட்டான். நரசிம்மனுக்கு தெரிந்தாலும் கண்டு கொள்ளவில்லை.

“ஈவினிங் ஏர்போர்ட்ல இருக்கனும் ஈஷ்வர்..” விஷ்ணு போன் செய்து சொல்ல,

“என் லக்கேஜ் வீட்ல இருக்கு, அம்மாவை எடுத்திட்டு ஏர்போர்ட் வரச்சொல்லு, நான் நேரே ஏர்போர்ட் வந்துடுறேன்..” என்று வைத்துவிட்டவன், பல்லவியை பார்த்தான்.

அவள் கலங்கும் கண்களை கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தாள். நேற்றில் இருந்து இப்படி தான் இருக்கிறாள். “லவி.. ப்ளீஸ்டி..” அவளை இழுத்து அணைத்து கொண்டான். கிளம்பும் நேரம் நெருங்க, அவளின் கண்ணீர் அவனின் நெஞ்சை நனைத்தது. ஈஷ்வருக்கும் கண்கள் கலங்கும் போல இருந்தது.

“எனக்கும் உன்னை விட்டு போக முடியலடி, ஆனா சின்னு.. அவனுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் ஒரு வழி கிடைச்சிருக்கு.. போகாம இருக்க முடியல..”  ஈஷ்வர் கமறிய குரலில் சொல்ல, நிமிர்ந்து அமர்ந்தவள்,

“நீங்க போங்க.. இது உங்களை ஒரு மாசம் பிரிஞ்சிருக்கிறதால கஷ்டமா இருக்கு, சீக்கிரம் செட் ஆகிடுவேன்..” என்றாள் கண் துடைத்து ஓட்ட வைத்த சிரிப்புடன்.

“ம்ப்ச்.. இவ்வளவு கஷ்டபட்டு ஏன் சிரிக்கிற..?” அவளை திரும்ப அணைத்து கொண்டவன்,   “விஷ்ணுவுக்கு நான் கூட இருந்தா சப்போர்ட்டா இருக்கும், அத்தை, மாமா எல்லாம் அவன் வேவ்லெந்துக்கு செட் ஆகமாட்டாங்க, அதோட எனக்கும் சின்னு கூட இருக்கனும் ஆசையா இருக்கு.. ரொம்ப பயப்படுறான்..”  உள்ள நிலைய சொன்னான்.

புரிந்த பல்லவி பாடுபட்டு அவளின் கண்ணீரை நிறுத்தியவள் நேரம் ஆவதை உணர்ந்து அவனை  குளிக்க அனுப்பி வைக்க, அங்கேயும் அவளை விடவில்லை.  இருவரும் ஒன்றாக குளித்து வர, அவன் உடை அவளே கொடுக்க, அவளின் முன் தலை குனிந்து நின்றான்.

பல்லவி சிரிப்புடன் தலை வாரிவிட்டவள், “இப்போ தெரியுதா உங்க வயசு உங்க செயல்ல எப்படி தெரியுதுன்னு..” உண்மையை கிண்டலாக சொன்னாள்.

“எப்போவும் நான் உன்கிட்ட இப்படி தாண்டி, எல்லாத்துக்கும் வயசை சொல்ல கூடாது..” அவளின் நெற்றி முட்டி சொன்னவன் அணைத்து சில நொடிகள் நின்றான்.

அதற்குள் கங்கா, விஷ்ணு, துர்கா, மகா என்று வரிசையாக போன் செய்ய, “நீங்க கிளம்புங்க.. நேரம் ஆச்சு..” விலகி இருவரும் வாசல் வந்தனர்.

ஈஷ்வர் ஷூ போடவும்  அவளின் தோள் பிடித்து நின்று ஒரு கையால் போட, “நான் ஏர்போர்ட் வரவா..?” கேட்டாள் பல்லவி.

ஈஷ்வர் தொண்டை குழி ஏறி இறங்க, அவளை பார்த்தான். அழுகையில் முகம் சிவந்து, மூக்கு விடைத்து  அவ்வளவு தவிப்புடன், கலக்கத்துடன் நின்றிருந்தாள் பெண்.

“அங்க.. நீ வேண்டாம்டி, எல்லாம் இருப்பாங்க, முக்கியமா அப்பா இருப்பார், இப்போ இருக்கிற சூழ்நிலையில நீ அவர் முன்னாடி வரது எனக்கு என்னமோ செட் ஆகல..” என்றான் அவர்களின் பிரச்சனையை மனதில் வைத்து.

பல்லவியோ  ஹாஸ்பிடல், சிகிச்சை அந்த கனமான சூழல் என்று நினைத்து கொண்டாள். “ம்ம். புரியுது..” அவள் தன்னை தானே தேற்றி கொள்ள,

“இந்த ஒரு மாசம் மட்டும் பொறுத்துக்கோடி, நான் வந்ததும் வீட்ல பேசி அங்க போறதா, இல்லை இங்கேயே இருக்கிறதா பார்க்கலாம்..” என்றவன்,

“டைம் கிடைக்கும் போதெல்லாம் நான் கூப்பிடுறேன், சரியா நேரத்துக்கு சாப்பிடு, கார்ட், பணம் எல்லாம் உன் செல்ப்ல வச்சிருக்கேன், எடுத்துக்கோ, ஷாப்பிங் போ, வீட்லே இருக்காத, நான் மகாகிட்ட சொல்லிட்டு போறேன், அவ வருவா சரியா..” அவளின் தலை முடி ஒதுக்கி, முகம் துடைத்து சொல்ல, பல்லவி அவனையே பார்த்தவள், எட்டி அவனின் உதட்டில் முத்தம் வைத்தாள்.

“லவி.. என்னடி..” அவளை அணைத்து கொள்ள, அவர்களின் பிரிவு அவர்களை மிக மோசமாக தாக்கியது.

“நான் போலடி, இங்கேயே இருக்கேன்..” என்றுவிட்டான் அடைத்த தொண்டையில். பல்லவி அவனை சமாதானம் செய்து அவன் கை பிடித்து  பார்க்கிங் கூட்டி வந்தாள். அவனுக்காக கார் தயாராக இருக்க, ஏறுமுன் அவளின் கை பிடித்து அழுத்தியவன்,

“வரேன் லவி.. பத்திரம்.. போன் பண்ணு, நல்லா சாப்பிடு, இப்போ எல்லாம் ஒழுங்கா சாப்பிட மாட்டேங்கிற, பாரு மெலிஞ்சு போயிட்ட.. என்னை நினைச்சு சாப்பிடு, நான் வரும்போது என் பொண்டாட்டி புஷ்டியா இருக்கனும், எனக்கு பெட்டே தேவைட கூடாது பார்த்துக்கோ..” அழுகையை மறைக்க கண் சிமிட்டி காதல் சீண்டலுடன் பிரிந்தான் திகம்பரன்.

திகம்பரிக்கோ அவன் சொல்லி சென்ற இப்போ எல்லாம் சரியா சாப்பிட மாட்டேங்குற, பாரு மெலிஞ்சு போயிட்ட.. வார்த்தையே காதில் நின்றது. பெண்மனம் டக்கென அவள் மாற்றத்தை கண்டு கொண்டது.

“ஆனா நாள்  தள்ளி போய் அஞ்சு நாள்  தானே ஆகுது, இப்போவே வித்தியாசம் தெரியுமா..?” வேகமாக நடக்க ஆரம்பித்தவள், உணர்ந்து தன் நடையை நிதானித்தாள்.

அவளின் பழக்கமான படிக்கட்டுகளை தவிர்த்து லிப்டில் சென்றவள் முதலில் மொபைல் எடுத்து அவளின் சந்தேகங்களை எல்லாம் கூகிலிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். அதுவரை கணவனின் பிரிவில் கலங்கியிருந்த  முகம், பிரகாசம் கொண்டது.

“எதுக்கும் இன்னும் ஒரு வாரம் போகட்டும்.. ஹாஸ்பிடல் போலாம்.. அப்பறம் இவர்கிட்ட சொல்லலாம்..” சந்தோஷத்தில் மிதந்தாள் திகம்பரி.

ஆனால் அவள் நினைத்த ஒரு வாரம் முடியும் முன்னே நரசிம்மன் வந்து நின்றார். காலிங் பெல் அடிக்க, யார்..? என்ற சந்தேகத்துடன் லென்ஸில் பார்க்க, நரசிம்மன். பார்த்தவுடன்  ஒரு அதிர்வு.

“ஈஷ்வர் இல்லாத நேரம் வந்திருக்கிறார் மனிதர். பயம் பிடித்து கொண்டது..”  மீண்டும் லென்ஸில் பார்த்தாள். அவர் மட்டும் நின்றிருந்தார். கட்சி ஆட்கள், கங்கா யாரும் இல்லை. திறக்கலாமா..? வேண்டாமா..? அவர் திரும்ப பெல் அடிக்க மனம் தைரியம் செய்து கதவு திறக்க, அவர் மருமகளை அருகில் பார்த்தார். மகனின் தேர்வு திருப்தி தான்.

“அவர் வீட்டில் நான் அவரை வாங்க என்று கூப்பிடுவது அபத்தம்..”  பல்லவி அமைதியாக நிற்க,

“உள்ள வரவாம்மா..?” என்றார் மாமனார்.

“ஹான்.. வா.. வாங்க.. வாங்க..” அவருக்கு  பின்னால் வர, அவர் சோபாவில் அமர்ந்தார். வீடு சுத்தமாக இருந்தது.

“தண்ணி கொடுமா..” பல்லவி தயங்கி திணறி நிற்க, தானே கேட்டார். ஈஷ்வர் அங்கு தூங்கும் நேரம், போன் கூட செய்ய முடியவில்லை. இவரை முன் வைத்து செய்யவும் முடியாது. அமைதியாக தண்ணீர் கொடுக்க, வாங்கி குடித்து கொடுத்தார்.

என்னவோ பெரிதாக வர போக்கிறது மனம் அடித்து கொண்டது பெண்ணிற்கு. நரசிம்மமனும் சில நொடிகள் அவளை பார்த்து மௌனம் காத்தவர், முடிவில் மகனின் நல்வாழ்விற்காக, அவரின் கனவிற்காக தொண்டையை செருமி ஆரம்பித்தார்.