மகன் பிறந்ததில் இருந்தே இதுவரை விளையாட்டுக்கு கூட அடிக்காத தந்தை இன்று அவனை கை நீட்டி அறைந்துவிட, மொத்த வீடும் உச்சகட்ட அதிர்ச்சியில். கங்கா வாய் மேல் கை வைத்துவிட்டவர், கணவரை பார்க்க, அவரோ இன்னும் தீராத கடுங்கோவத்துடன் நெஞ்சு ஏறி இறங்க நின்றிருந்தார்.
அறை வாங்கிய மகனோ கண்கள் சிவக்க, கைகளை இறுக்க பிடித்து கோவத்தில் உடல் அதிர நின்றிருந்தான். அவன் கண்களில் தேங்கிய நீருடன் சிவப்பு கொழுந்துவிட்டு எரிய, நரசிம்மனை பார்க்க, அவரும் அதே கோபத்துடன் மகனை பார்த்தார். இருவரின் பார்வைகளும் ஒருவரை ஒருவர் அனலாக உரசியது.
இவர்கள் இருவருக்கும் இடையில் நிண்றிருந்த விஷ்ணுவிற்கோ நரசிம்மன் ஈஷ்வரை அடித்தது அப்படி ஒரு கோவத்தை கொடுக்க, “பேச்சா பேச்சா இருக்கும் போது எதுக்கு ஈஷ்வரை அடிச்சீங்க..? அவன் என்ன தப்பா சொன்னான்..? அவனுக்கு ஐபிஸ் பிடிக்கல சொல்றான், விட வேண்டியது தானே..” நரசிம்மன் மேல் பாயவே செய்தான்.
அவர் மகனை விட்டு தங்கை மகனிடம் திரும்பியவர், “அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க, உங்க மனசாட்சிக்கு தெரியும் அவர் செய்றது, செஞ்சது எல்லாம் தப்புன்னு, ஆனா சபையில் அவரை விட்டு தரமாட்டிங்க, உங்களோட தர்க்கம் பண்றதே வேஸ்ட்..” என்று கத்தியவர், மகனின் மேல் பாய்ந்தார்.
“நானும் நீங்க ஏதோ வளர வாலிப பிள்ளை, விவரம் பத்தலை, வாழ்க்கை நிதர்சனம் புரியல, பக்குவமா பேசி புரிய வைக்கணும், உங்க மேல கோவப்பட கூடாது, திட்ட கூடாது, மனசு கஷ்ட படுத்த கூடாதுன்னு பொறுத்து பொறுத்து போனா ரொம்ப அதிகமா நடந்துக்கிறீங்க..?”
“நான் உங்க மேல வச்சிருக்கிற பாசத்தை போய் சுயநலம்ன்னு உளறிட்டு இருக்கீங்க, என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..? அப்பா தானே நாம பேசினா விட்டுடுவார்ன்னா.. முடியாது..”
“இந்த முறை முடியவே முடியாது, அதுலயும் நீங்க இவ்வளவு பேசினத்துக்கு என்ன ஆனாலும் உங்களை விட முடியாது, நீங்களா..? நானான்னு பார்த்துடலாம் வாங்க..” மகனிடம் சவாலேவிட,
“ஓஹ்.. என்ன பண்ணுவீங்க..? சொல்..” விஷ்ணு நரசிம்மன் பேச்சில் ஏறி கொண்டு போக, ஈஷ்வர் விஷ்ணு கை பிடித்துவிட்டான். அவன் திரும்பி ஈஷ்வரை பார்க்க அவனோ நரசிம்மனின் நடுங்கிய கைகளை காட்டினான்.
அவரின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறியிருக்க, வேர்த்து போயிருந்தார் மனிதர். அவரின் உடலிலும் நடுக்கம் தெரிய ஆரம்பிக்க, மருத்துவனான விஷ்ணு அப்படியே அமைதியாகி போனான்.
“என்ன பேசுங்க ஏன் நிறுத்துட்டீங்க..?” நரசிம்மனின் வேதனை, ஏமாற்றம், வலி அவரின் கோவமாக வெளிப்பட்டது.
“அத்தை.. மாமாக்கு தண்ணி கொண்டு வாங்க..” விஷ்ணு கங்காவிடம் சொன்னவன், “நீங்க முதல்ல உட்காருங்க..” என்றான் நரசிம்மனிடம்.
“ஏன்..? நான் ஏன் உட்காரணும், என்ன வயசாயிடுச்சு பார்க்கிறீங்களா..? இப்போவும் உங்க ரெண்டு பேரையும் வெளுக்கிற சக்தி எனக்கு இருக்கு..” அவர் ஆவேசத்துடன் பேச, விஷ்ணு அவரின் கை பிடித்து அமரவைக்க முயன்றான்.
“விடுங்க என்னை..” அவனின் கை உதறியவர், மகனை பார்க்க பார்க்க அவர் கண்கள் சட்டென கலங்கிவிட்டது. பார்த்த ஈஷ்வருக்கு மூச்சே நின்றுவிட்டது போலானது.
“ப்பா..” அவரை நெருங்க,
“வராதீங்க, என்கிட்ட வராதீங்க, உங்களை நான் இங்க..” என்று இதயத்தை அடித்து காட்டியவர், “இங்க உசரத்துல வச்சிருக்கேன், என்னை பெத்த, என்கூட பிறந்த, எனக்காக வாழுற, ஏன் நான் பெத்த பொண்ணு கூட இவ்வளவு இல்லை. நீங்க.. உங்களை வச்சிருக்கேன், ஆனா நீங்க என்னை போய் சுயநலம்ன்னு..” அதற்கு மேல் முடியாமல் ரூமுக்கு வேகமாக செல்ல, ஈஷ்வர் கண்களும் கலங்கிவிட்டது.
கங்கா கணவர் பின்னே ஓட, மகா கண்களில் வழிந்த நீரை சுண்டிவிட்டவள், விஷ்ணுவை கோவமாக பார்த்தாள். “உனக்கு என்னடி..” விஷ்ணு அவளின் முறைப்பில் காய்ந்தான்.
“தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு என் அப்பாகிட்ட சண்டை போடுவீங்களா..? அவருகிட்ட கோவப்படுவீங்களா..? அவருக்கு யாருமில்லை நினைச்சிங்களா..? அவரோட மக நான் இருக்கேன், உங்க சத்தத்தை எல்லாம் வேறெங்கேயாவது வச்சுக்கோங்க..” மகளாய் கொதித்து போனவள் இருவரிடமும் சண்டை போட்டு ரூமுக்கு போக,
“பார்றா ஹால்ப் பாயில் ரொம்ப தான் கொதிக்குது..” விஷ்ணு சத்தமாக நக்கலடித்தவன், ஈஷ்வரை இழுத்து கொண்டு ரூம் சென்றான். அந்த நாள் முழுதும் வீட்டில் சின்ன சத்தம் கூட கேட்கவில்லை. காலை உணவு, மதிய உணவு மொத்த குடும்பமும் உண்ணவில்லை. விஷ்ணு தவிர,
“உங்க கோவத்துக்கு எல்லாம் பசி தீர்வு இல்லைடா என்னை விட்டுடுங்க..” என்றவன், ஆன்லைனில் புல் மீல்ஸ் ஆர்டர் செய்து டேபிளில் அமர்ந்து சாப்பிட, தண்ணி எடுக்க வந்த மகாவிற்கு தான் பற்றி கொண்டு வந்தது.
அவளை பார்த்தவன் நக்கலாக, “அப்பாக்காக சவுண்ட் விட்ட இல்லை தண்ணி குடிச்சே பட்டினி கிட..” கிச்சனில் இருந்து பவுல் எடுத்து வந்து பாயசம் குடிக்க, மகா பல்லை கடித்து ரூமுக்கு சென்றாள்.
ஈஷ்வர் பால்கனியில் அமர்ந்திருந்தவன், பல்லவிக்கு போன் செய்து அவள் சாப்பிட்டதை உறுதி செய்து கொண்டவன், விஷ்ணு வரும் வரை அங்கேயே தான் இருந்தான். விஷ்ணு வந்தவன் இவனிடம் எதுவும் பேசாமல் பெட்டில் படுத்துவிட்டான்.
பார்த்த ஈஷ்வருக்கு புரிந்தது அவனின் கோவம். நிச்சயம் நரசிம்மனை தான் பேசியது அவனுக்கு பிடித்திருக்காது. இவன் எப்போ சண்டை போடுவான் தெரியல.. பெரு மூச்சு விட்டு கொண்டவன், மாலை நெருங்கவும் பல்லவியிடம் போக யோசித்தான்.
நரசிம்மனை நினைத்து தயக்கம். அவர் இன்று எல்லா ப்ரோகிராமையும் கேன்சல் செய்துவிட்டு வீட்டிலே இருக்கிறார். ஐந்து மணி ஆகவும் பல்லவி எப்போதும் போல போன் செய்துவிட, ஈஷ்வர் கிளம்பியேவிட்டான். விஷ்ணு தூங்கி கொண்டிருக்க, மகனின் பைக் சத்தத்தில் நரசிம்மனின் முகம் அதிருப்தி கொண்டது.
“இங்க இவ்வளவு பிரச்சனை போய்ட்டு இருக்கு, இவர் இப்போவும் மருமககிட்ட போறார்..” கண்கள் சுருங்க அமர்ந்திருந்தார். விஷ்ணு இருள் சூழ்ந்த பின் முழித்தவன், ஈஷ்வர் இல்லாமல் போக நொடியிலே புரிந்தது அவன் எங்கு சென்றிருப்பான் என்று.
“இவனை..” கடுப்புடன் அவன் வீடு கிளம்பிவிட்டான். அந்த வாரம் முழுதும் அப்படியே சென்றது. அப்பாவும் மகனும் நேருக்கு நேர் கூட பார்ப்பதில்லை. கங்கா மகனிடம் பட்டும் படாமல் பேச, மகா அதுவும் இல்லை. அண்ணன் செய்வது தப்பு என்று முறுக்கி கொண்டு திரிந்தாள்.
ஈஷ்வரும் யாரையும் நெருங்காமல் ஏதோ யோசனையுடன் ரூமிலே அடைபட்டு கொண்டான். பல்லவியிடம் செல்ல மட்டும் கீழிறங்குபவன், அவளை பார்த்துவிட்டு இரவு போல வருவான். வந்தவுடன் ரூமிற்கு ஏறிவிடுவான். மகனின் செயலில் நரசிம்மனுக்கு மனம் விட்டு விடும் போல இருந்தது.
“அவர் என் மேல மனசு விட்டுட கூடாதுன்னு நான் பார்த்தா அவர் என்னை இப்படி..” கங்காவிடம் மேற்கொண்டு பேச முடியாமல் இரவு எல்லாம் முழித்திருப்பார். வீட்டின் சூழ்நிலை மிகவும் கனமாக செல்ல, அந்த வார முடிவில் ஈஷ்வர் விஷ்ணுவை வீட்டிற்கு கூப்பிட்டான்.
“எதுக்கு நான் வர நீ அங்க போகவா..?” விஷ்ணு கோவப்பட்டு பேசினாலும் ஈஷ்வர் கேட்க கிளம்பி வந்திருந்தான்.
கங்கா இவனை பார்த்து முகம் திருப்ப, “என்ன அத்தை வரவேற்பு எல்லாம் பலமா இருக்கு..” என்று அவரை சீண்டி வம்பிழுத்து அவர் கொடுத்த காபி குடித்தான்.
“விஷ்ணு நீயாவது அவன்கிட்டே பேசலாம் இல்லை, ஏன் இப்படி நடந்துகிறான், இப்போ வரை அவங்க அப்பாகிட்ட வந்து ஒருவார்த்தை பேசல, பாவம்டா அவர் நைட்டெல்லாம் தூங்க மாட்டேங்கிறார், ரொம்ப வேதனை படுறார்..” கங்கா அழுகவே செய்ய, விஷ்ணு அவருக்கு ஆறுதல் சொல்லி ஹாலில் அமர்ந்தான்.
ஈஷ்வர் அன்று பல்லவியிடம் இருந்து சீக்கிரமே வந்துவிட்டவன், விஷ்ணுவுடன் தோட்டத்திற்கு சென்றான். “நான் கூப்பிடலேன்னா இப்போவும் என்னை பார்க்க வந்திருக்க மாட்ட இல்லை..” விஷ்ணுவிடம் ஈஷ்வர் உர்ரென்று கேட்க,
“நீ செஞ்ச வேலைக்கு இப்போ வந்ததே பெருசு..” என்றான் அவன்.
“ம்ப்ச்.. விஷ்ணு அப்போ ஏதோ கோவம்.. அதான் அப்பாவை..”
“ஈஷ்வர்.. போதை மட்டும் இல்லை கோவம் கூட பல நேரம் உண்மையை உடைச்சிடும்..” இடையிட்டான் விஷ்ணு. அவன் புரியாமல் பார்க்க,
“உன் மனசுல மாமாவை இப்படி முன்னயே நினைச்சிருக்க, அதான் கோவத்துல வார்த்தையா வருது..” என, ஈஷ்வர் அது உண்மை என்பதால் அமைதியாகி போனான்.
“அவர் கனவு, ஆசை எல்லாம் அவர் சார்ந்தது, ரைட் தான், ஆனா அவர் உன்மேல வச்சிருக்கிற பாசம் அதை எப்படிடா உன்னால மறுக்க முடிஞ்சது..?” விஷ்ணு மேலும் கேட்க,
“தப்பு தான் விஷ்ணு, ரொம்ப கில்ட்டா பீல் பண்றேன், அவர் முகத்தை கூட பார்க்க முடியல..” ஈஷ்வர் உடைந்த குரலில் சொல்ல, பவுண்டைன்க்கு அந்த பக்கம் இருந்த நரசிம்மனுக்கு கண் கலங்கிவிட்டது.
அவரும் மனம் பாரமாக அழுத்த தோட்டத்தில் தான் அமர்ந்திருந்தவர், இருவர் பேச்சிலே அப்படியே ஓரமாக ஒதுங்கிவிட்டார். இப்படியாவது மகன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிய நினைத்து தான் மறைந்து கொண்டார். அது தவறு தான். அவருக்கு வேறு வழியும் தெரியவில்லை.
“ஈஷ்வர்..” விஷ்ணு அவனை அணைத்து கொள்ள, சில நொடிகளில் மீண்டான்.
“என்ன முடிவெடுத்திருக்க..?” விஷ்ணு கேட்க,
“தெரியலடா..” என்றான் ஈஷ்வர்.
“முதல்ல எல்லாம் ஐபிஸ் படிக்க ஓகே தானே சொன்ன, இப்போ ஏண்டா வேண்டாம் சொல்ற..?” விஷ்ணு தீர்க்கமாக கேட்டான்.