திகம்பரனின் திகம்பரி அவள் 19

மறுநாள் காலை பல்லவிக்கு நேரமே விழிப்பு வந்துவிட்டது. எழுந்தவளுக்கு ஈஷ்வரின் நெருக்கம் நேற்றிரவு நடந்ததை உணர்த்த, சிலிர்ப்பும், வருத்தமும் ஒன்றாக உண்டானது. தன்னை அணைத்திருந்தவனின் கைகளை விலக்கிவிட்டு குளித்து வந்தவள், ஹாலில் அமர்ந்தாள்

என்ன செஞ்சு வச்சிருக்க நீ..?” என்று மனசாட்சி குத்த ஆரம்பித்தது

இப்போதான் காலேஜ் படிச்சிட்டு இருக்கார், இருப்பத்தி ரெண்டு வயசு தான் ஆகுது, அவர் மேல போய் குடும்ப பாரத்தை இறக்கி வைக்க பார்க்கிற..? இதுக்கு தானே அவங்க அப்பா அவ்வளவு கோவப்பட்டார்.. இப்போ அவரோட கோவமும் நியாயம் ஆயிடுச்சே..?”  நரசிம்மனை நினைக்கவும் ஏதோ குற்றம் புரிந்துவிட்ட அதிர்வு

நன்றாக எழுந்து அமர்ந்தவளுக்கு அச்சம் உண்டானது. “அவருக்கு தெரிஞ்சா என்ன நினைப்பார்..? ஈஷ்வர் மேல ரொம்ப கோவப்படுவாரா..? எப்படி கோவபடாம இருப்பார்..?”

பல்லவி.. உன் காதலுக்கு அவரை இப்படி பண்ணிட்டியே..? உன்னோட நெருக்கம் தானே அவரை அப்படி செய்ய வச்சிடுச்சு, முதல் தப்பு உன் மேல தான்.. கடவுளே..” தன்னை தானே நிந்தித்து கொண்டவளுக்கு கண்ணீர் தேங்கியது

ச்சு.. இப்போ என்ன..? உன் புருஷன் தானே..?” காதல் மனம் சப்பை கட்டு கட்ட, அவளாலே அதை ஏற்று கொள்ள முடியவில்லை.

புருஷனா இருந்தாலும் வயசு, சூழ்நிலை, முறை  எல்லாம் இருக்கு இல்லை..” அதனிடம் சண்டையிட்டு  கொண்டிருக்க, காலிங் பெல் அடித்தது

இந்த நேரத்துல யாரு..?” பல்லவி கண்களை துடைத்து எழுந்து சென்று லென்ஸ் வழியே பார்க்க, விஷ்ணு நின்றிருந்தான். அவனை பார்க்கவும், முகம் கசங்கி போனதுமீண்டும் பெல் அடித்தான் விஷ்ணு

யார் லவி..?” ஈஷ்வர் உள்ளிருந்து குரல் கொடுக்கபல்லவி கதவை திறந்துவிட்டாள். உள்ளே நுழைந்த விஷ்ணு பல்லவியின் கலங்கிய முகத்தில் புருவம் சுருக்கி உள்ளே வர, ஈஷ்வர் வெறும் டிரேக் பேண்ட், பனியனுடன்  வெளியே வந்தான்

ஏய் விஷ்ணு வந்துட்டியா..?” ஈஷ்வர் அவனை பார்த்ததும் அருகில் வர, விஷ்ணு பட்டென திரும்பி பல்லவியை பார்த்தான்

ஈஷ்வரின் பிரகாசமான முகம், பல்லவியின் கலங்கிய  முகம், ஏதேதோ உணர்த்த, அதிர்ச்சியுடன் இருவரையும் பார்த்தான்

எப்படிடா வந்த..? வீட்டுக்கு போனியா இல்லை நேரா இங்க தான் வரியா..? சின்னுக்கு டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க..? குணப்படுத்த முடியும் தானே..? போன்ல கேட்டதுக்கு நேர்ல சொல்றேன் சொல்லிட்ட..?” ஈஷ்வர் கேள்வியாய் கேட்க, விஷ்ணு அடக்கி வைத்த  கோபமூச்சுடன் சோபாவில் அமர்ந்தான்

கொஞ்சம் தண்ணி வேணும்..” அமைதியான  குரலில் சொல்ல, ஈஷ்வரிடம் தனியே பேசத்தான் விஷ்ணு தண்ணீர் கேட்டது புரிந்த பல்லவி கிட்சன் சென்று செல்பில் சாய்ந்து நின்றாள்.

“என்ன விஷ்ணு..?” ஈஷ்வர் கேட்க, அவன் அவனையே உறுத்து பார்த்தான். சில நொடிகள் சென்று ஈஷ்வருக்கு புரிந்தது அவன் பார்வை. புரிந்த பின்  சட்டென சிவந்தவிட்ட முகத்துடன் பின் தலையை கோதி கொண்டான்

என்னடா இது..?” விஷ்ணு அடிக்குரலில் சீறினான்

காங்கிராஜுலேட் பண்ண மாட்டியா..? இன்பேக்ட் உன்னோட முதல் விஷ் எங்களுக்கு கிடைச்சா ரொம்ப சந்தோஷபடுவோம்..”  ஈஷ்வர் உற்சாகத்துடன் சொல்ல, விஷ்ணுவிற்கு அவனை என்ன செய்ய என்றே தெரியவில்லை

ஈஷ்வர்.. உனக்கு புரியுதா நீ என்ன செஞ்சு வச்சிருக்கன்னு..? ஒரு பேமிலியை ரன் பண்ண கூடிய வயசும், பக்குவமும் உனக்கு இருக்கா..? முதல்ல உனக்குன்னு ஒரு அடையாளம் இருக்கா..?”  விஷ்ணு அடிக்குரலில் பொரிய

முகம் இறுகிவிட  “நீ சொல்றது உண்மை தான் விஷ்ணு, ஆனா என்னால அதை மாத்த முடியும்ன்னு நம்பிக்கை  இருக்கு, பட் இப்போ நீ சொல்ற  வார்த்தை ஒவ்வொண்ணும்  கண்டிப்பா லவியை ஹர்ட் பண்ணும், சோ..” ஈஷ்வரும் கோபத்துடன் நிறுத்த, விஷ்ணு மூச்சை நன்றாக இழுத்துவிட்டு சாய்ந்தான்.  

இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் உரசி கொண்டிருக்க, உள்ளிருந்த பல்லவியின் முகம் இன்னும் கலங்கி போனது. என்னதான் இருவரின் பந்தமும் அப்படி என்றாலும் விஷ்ணுவால் அதற்கு மேலும்  அவர்களின்  அந்தரங்கத்தை தலையிட முடியவில்லை

அதிலும் நடந்து முடிந்துவிட்ட ஒன்றை பற்றி என்ன பேச..? கோவப்பட..?  வாசல் திறந்த பல்லவியின் கலங்கிய முகமும் அவள் நிலையை சொல்ல,  “இனி இது பத்தி நான் ஏதாவது பேசினா ரெண்டு பேரும் ஹர்ட் ஆவாங்க, அவன் சொல்றதும் சரி தான்..”

என் ஈஷ்வர், அவனோட காதல்..  ரெண்டு பேரும் எனக்கு முக்கியம், இவங்களை பேசி கஷ்டப்படுத்தி என்ன ஆக போகுது..? முடிஞ்சது  முடிஞ்சது  தான். விடுடா..”  விஷ்ணு தனக்குள் பேசியபடி ஈஷ்வரை பார்த்தான்

தன்னையே பார்த்திருந்த அவன்  முகத்தில் தெரிந்த  அந்த வசீகர களை அவனின் மகிழ்ச்சியை காட்ட, விஷ்ணுவிற்கு அவனிடம் கோவம் கொள்ளவும்  முடியவில்லை

அவனோட  லவி பைத்தியம் உனக்கு தெரிஞ்சது தானே விஷ்ணு..? விடு, ம்ப்ச்.. இது நரசிம்மன் மாமாக்கு தெரிஞ்சா..? தெரியாம பார்த்துக்கணும், அட்லீஸ்ட் இவன் படிச்சு முடிவரைக்குமாவது..” யோசித்து கொண்டே அமர்ந்திருக்க, ஈஷ்வருக்கு புரிந்தது அவனின் என்ன ஓட்டங்கள்

என் விஷ்ணு..” மனம் கர்வம் கொள்ள, விஷ்ணுவை எழுப்பி அவனை இறுக்கமாக அணைத்து கொண்டான்

எனக்கு தெரியும் நீ என்னை புரிஞ்சுப்பன்னு, தேங்ஸ் விஷ்ணு..” ஈஷ்வர் நெகிழ்வுடன் சொல்ல, விஷ்ணுவிடமும் நெகிழ்வு தான்

டேய் அப்படி பார்த்தா என்னோட கிறுக்கு தனத்துக்கு எப்போவும் முன்னாடி நிக்கிற உனக்கு நான் எவ்வளவு தேங்ஸ் சொல்றது..?” அவனும் ஈஷ்வரை அணைக்க, உள்ளிருந்த பல்லவி கொஞ்சம் ஆசுவாசமானாள்

இவர்களின் பந்தமும் புரிந்தது பெண்ணிற்கு. ஈஷ்வர் வாழ்க்கையில் விஷ்ணு எவ்வளவு முக்கியம் என்று ஈஷ்வர் பேச்சில் உணர்ந்திருக்கிறாள்.  இன்று நேரிலே பார்த்துவிட்டாள்

“இருடா காபி எடுத்துட்டு வரேன்..” ஈஷ்வர் கிட்சனுக்கு செல்லபொண்டாட்டியை பார்க்க தான் ஓடுறான்.. விஷ்ணு அங்கு சிரித்து கொண்டான்

லவி இவனை பார்க்கவும் நன்றாக நிமிர்ந்து நின்றவள் முகத்தை மாற்ற, அவளின் கலக்கத்தை கண்டு கொண்டான் திகம்பரன். இதமாக அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டவன், அவளின் உச்சி தலையில் இதழ் பதித்தான்

சில நொடிகள் சென்று  பிரிந்தவர்கள், “காபி போடலாமா..?” என்றான்

நான் போடுறேன், நீங்க அவரோட இருங்க..” பல்லவி அவனை அனுப்பி வைக்க, ஈஷ்வர் விஷ்ணுவிடம் வந்தான்

சின்னு விஷயம் என்ன ஆச்சு..? இப்போவாவது சொல்லு..” ஈஷ்வர் திரும்ப கேட்க

அவன் குணமாக  வாய்ப்பு இருக்குன்னு தான் சொல்லியிருக்காங்க, ஆனா அவனோட ட்ரீட்மென்டுக்கு அமெரிக்கா தான் போகணும் போல..” விஷ்ணு யோசனையுடன் சொன்னான்

சூப்பர் விஷ்ணு, எப்போ போலாம்..?” ஈஷ்வர் சந்தோஷ பரபரப்புடன் கேட்டான்

அடுத்த மாசம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன்..”

எனக்கும் அதுக்குள்ள எக்ஸாம் முடிஞ்சிடும் போலாம்..” இருவரும் மேலும் பேசி கொண்டிருக்க, பல்லவி இருவருக்கும் காபி கொடுத்தாள்

உனக்கு எங்க..?” ஈஷ்வர் கேட்க, அவளும் கையில் காபியுடன் வந்தவள், தள்ளியே தனி சேரில்  அமர்ந்தாள். முதலில் இருந்தே விஷ்ணு, பல்லவி இடையே ஒரு இடைவெளி உண்டே. இப்போது அது இன்னும் அதிகமானது போல பல்லவி உணர, குனிந்தபடியே காபி குடித்து கொண்டிருக்க, அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர்

அத்தை தான் கூப்பிடுறாங்க..” விஷ்ணு அவன் போன் பார்த்து சொன்னவன், பேசிவிட்டு, ஈஷ்வரிடம் கொடுத்தான். அவர் என்ன சொன்னாரோ

நீங்க எதுக்கு இங்க வரீங்க..?” ஈஷ்வர் வேகமாக மறுத்தான்

டேய்.. எனக்கு பல்லவியை பார்க்கணும் போல இருக்குடா, அவளுக்கு உடம்பு முடியலன்னு வேற சொல்லியிருந்த, நான் வந்து பார்த்தா என்ன தப்பு..?” எப்போதும் மகன் பல்லவியை அடைகாப்பதில் கங்கா வருத்தம் கொண்டு பேசினார்

ம்மா.. அவளுக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க..” ஈஷ்வர் முடித்துவிட

சரி.. நீ எப்போ வீட்டுக்கு வர, அப்பா வந்ததுமே உன்னை தான் வீட்டுக்கு வர சொன்னார்..”

ம்ப்ச்.. நாளைக்கு தான் வருவேன், பல்லவிக்கு இன்னும் நல்லா குணமாகட்டும்..” ஈஷ்வர் பேசி வைத்துவிட, விஷ்ணு அவனை முறைக்கவே செய்தான்

இல்லைடா.. வீக்கா இருக்கா, அதான்..” ஈஷ்வர் கெஞ்சலுடன் மழுப்ப

என்னவோ பண்ணுசொன்னாலும் கேட்டுக்கவா போற..?” என்றுவிட்டவன், பல்லவியிடம் சொல்லி கொண்டு வீட்டிற்க்கு கிளம்பிவிட்டான்

அதற்கு பிறகான  ஈஷ்வரின் முழு நேரமும் பல்லவியுடன் தான் சென்றது. அவளுக்கு என்னதான் உள்ளுக்குள் குத்தினாலும், ஈஷ்வர் நெருங்கும் போது காதல் கண்ணை தான் மறைத்துவிட்டது. மறுநாள் கங்கா போன் செய்துவிட, பல்லவி தானும் ஹாஸ்டல் கிளம்ப தயாரானாள்

நோ.. நோ நீ எங்க போற..?” ஈஷ்வர் அவளை நிறுத்த, ஏன் என்று பார்த்தாள் பல்லவி

லவி..” அவளை இழுத்து மடியில அமர்த்தி கொண்டவன், “உனக்கு ஹாஸ்டல் பிடிக்கலன்னு நல்லாவே தெரியுது, அவ்வளவு கஷ்டப்பட்டு நீ அங்கிருக்க வேண்டாம், காலி பண்ணிட்டு இங்கேயே நம்ம வீட்லே இருக்கலாம்..” என்றான் அவளின் கன்னத்துக்கு முத்தம் வைத்தபடி

இல்லை அது வேண்டாம், நான் ஹாஸ்டல்லே போறேன்..” அவள் புரிந்து மறுக்க

ம்ஹூம்.. வாய்ப்பே இல்லைடி, இனி என் பொண்டாட்டி என் கூட தான் இருப்பா..”

என்ன பேசுறீங்க..? நீங்களும்  என்கூட இருக்க போறீங்களா..? முடியாது..”

லவி.. முன்னவே உன் பிடிவாதத்துக்கு தான் உன்னை ஹாஸ்டல்ல விட்டேன், இனி நானும் ஒத்துக்க மாட்டேன், நான் இருக்கும் போது என் பொண்டாட்டி எதுக்கு  ஹாஸ்டல்ல முடியாது அவ்வளவு தான்..” அவனும் பிடிவாதம் பிடிக்க, பல்லவிக்கு அவனை சமாதானம் செய்யவே முடியவில்லை

சரி ஓகே.. நான் இங்கேயே இருக்கேன், ஆனா நீங்க உங்க வீட்ல தான் இருக்கணும்..” அவள் இந்த விஷயத்தில் உறுதியாக நின்றாள்

ஈஷ்வரும் முயன்று பார்த்தவன், “ஓகே.. ஆனா நான் தினமும் ஈவ்னிங் உன்னை வந்து பார்த்துட்டு தான் போவேன்..” அவன் முடித்துவிட, பல்லவிக்கு இதே போதும் என்று தோன்றியது

நான் கிளம்புறேன், சாப்பாடு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிக்கோ, நாளை  ஹாஸ்டல் காலி பண்ணிடலாம், ச்சு.. நோ பீலிங்ஸ், என் பொண்டாட்டியை பார்க்க ஈவினிங் வருவேன் மேடம்..”  அவள் கலங்கிய முகத்தில் முத்தம் வைத்து கிளம்பியவன், நேரே வீட்டிற்கு சென்றான்

நரசிம்மன் இவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவர், அவனிடம் தெரிந்த முக பொலிவில் முகம் சுருக்கியவர். “அவங்களை ஹாஸ்டல் விட்டுட்டீங்களா..?” எடுத்தவுடன் பல்லவியை  தான் கேட்டார் மனிதர்

இல்லை.. அவ அங்க நம்ம வீட்லே இருக்கட்டும்.. ஹாஸ்டல்ல தனியா பீல் பண்றா போல..” மகன் சொல்லநரசிம்மனின் கோவம் அவர் முகத்திலே தெரிந்தது

எப்படி தனியா  இருப்பாங்க..? சரிவராது, ஹாஸ்டல் விடுங்க..”

“தனியா எங்க அப்பார்ட்மெண்ட் செக்கூரிட்டி தான் இருக்காரே..?”

ஈஷ்வர்.. என்னை திரும்ப திரும்ப கோவப்படுத்தாதீங்க..?”

ப்பா.. அவளுக்கு ஹாஸ்டல் பிடிக்கலை, ரொம்ப கஷ்டப்படுறா, வீட்லே இருக்கட்டும், நான் ஈவினிங் மட்டும் போய் பார்த்துட்டு வந்துடுவேன்..” சொன்னவன் அவர் பதிலை கூட கேட்காமலே  மேலே ஏறிவிட்டான்