“இங்க பாரு பல்லவி யார்கிட்ட பேசணும்ன்னு எனக்கு அவசியமில்லை, நீ முதல்ல உள்ள போ, சீக்கிரம் உனக்கும் சரணுக்கும் தான் கல்யாணம்..” மூர்த்தி முடிவாக சொன்னார்.
“ப்பா.. முடியாதுப்பா, எனக்கு அவர் தான்..” கெஞ்சலை விட்டு அவளும் முடிவாக சொல்ல, கொந்தளித்த மூர்த்தி,
“முடியாது இல்லை, அப்போ என் வீட்டை விட்டு வெளியே போ..” என்றுவிட யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.
“என்னங்க.. என்ன பேசுறீங்க..? இந்நேரத்துக்கு அவ எங்க போவா..? வயசு பொண்ணு.. அவளை போய் வீட்டை விட்டு வெளியே போக சொல்றீங்க..?” ரத்னா பதறி தடுக்க, எதுவும் அவர் காதை எட்டவில்லை.
“நீ வாயை மூடு இல்லை உன்னை முதல்ல வீட்டை விட்டு தொரத்திட்டு அவளை துரத்துவேன்..” மனைவியிடம் கத்தியவர், “இன்னும் என் வீட்ல ஏன் நிக்கிற, வெளியே போ, உன்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு என் வீட்ல இடமில்லை, இனியும் உன்னை வீட்ல வச்சா என்னை மாதிரி முட்டாள் யாரும் இருக்க மாட்டான்..” என்று மகளை விரட்டவே செய்தார்.
“மூர்த்தி இது தப்புப்பா, அவளை வீட்ல வச்சு என்ன செய்றது பார்க்கலாம்..” கோமதியும் சொல்ல,
“இல்லைம்மா.. அவ நிக்கிறதை பார்த்தாலே உங்களுக்கு புரியலையா அவ அந்த பையனை விட மாட்டான்னு, இவ நமக்கு வேண்டாம், வெளியே போக சொல்லுங்க, இல்லை நானே இவ கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவேன், இவ நமக்கு அசிங்கம் தான், இவ தேவையில்லை.. போ.. போ வெளியே. போ..” என்று ஆவேசமாக கத்த, பல்லவிக்கு அழுகை நிற்கவில்லை.
எதை எதிர்பார்த்தாலும் இதை எதிர்பார்க்கவில்லை அவள்.
“இப்போவாவது சொல்றாளா பாரு எனக்கு அவன் வேண்டாம்ன்னு, எப்படி நிக்கிறா பாருங்க..” மூர்த்தி கத்தியவர், “இதுக்கு மேலயும் என் கண் முன்னாடி நிக்காத.. ஏய் நீ போறியா இல்லை உன்னை பெத்த உன் அம்மாவை வீட்ட விட்டு துரத்தவா..? இவ போமாட்டா, நீ கிளம்பு, போடி..” என்று மனைவியை பிடித்து தள்ளி அமர்க்களம் செய்தார் மனிதர்.
“போ வெளியே போய் நடுத்தெருவில் நில்லு, அப்போ தான் உனக்கு எங்க அருமை தெரியும், போ..” மகள் அப்போதும் வெளியே தான் போகிறேன் என்றதில் கண் முன் தெரியாத கோவத்தில் அடங்காமல் பேசினார்.
“அப்படி எல்லாம் நான் நடுத்தெருவில நிக்க மாட்டேன், எனக்கு என் ஈஷ்வர் இருக்கார் போங்க..” என்று வந்த வழியே நடக்க,
“என் பணத்துல வாங்கின நகை எல்லாம் கழட்டி வச்சிட்டு போ, இதுக்காக தான் அந்த பையன் உன் பின்னாடி சுத்தினானோ என்னமோ..” என, நின்று எல்லாம் வைத்தவள், ரத்னா கணவன் பிடியில் நின்று கத்த கத்த வெளியே வந்துவிட்டாள்.
அவர்கள் தெரு கடந்து, அடுத்தடுத்த தெரு கோவத்தில், அழுகையில் நடந்து கொண்டே இருந்தவள், ஒரு முட்டு சந்தில் தான் நடையை நிறுத்தினாள். ஒரு முழு நிமிடம் என்ன செய்ய என்று கூட புரியவில்லை. ஒரு பாதுகாப்பான கூட்டை விட்டு வெளியே வந்து விட்டவள், அப்படியே அங்கேயே நின்றாள்.
பைக் வந்து ஹார்ன் அடிக்க வழி விட்டு நின்றவளை சந்தேகமாக பார்த்து கொண்டே அந்த பைக் கேட்டிற்குள் சென்றது. அதில் மேலும் அழுகை கூட, திரும்பி மெயின் ரோட் வந்தவள், முகம் துடைத்து முதலில் ஈஷ்வருக்கு போன் செய்ய டெலிபோன் பூத் சென்றாள்.
கையில் ஒத்தை ரூபாய் இல்லை. ஆனாலும் அவனிடம் தான் சொல்லியாக வேண்டும். நம்பர் மனப்பாடமாக இருக்க, அழைத்துவிட்டாள். அவன் முதல் முறை எடுக்காமல் போக, ஏனோ ஒரு பயம். திரும்ப அழைக்க கடைசி ரிங்கில் தான் எடுத்தான்.
“நான்.. நான்..” என்று அழுகையில் திக்க, ஈஷ்வருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. குரல் லவி மாதிரி இருக்கே..
“லவி..” என,
“ஆமா.. நான் தான்..” அழுகையில் மெலிதாக தேம்பினாள் பெண்.
“ஏய்.. எங்கடி இருக்க..? ஏன் இந்த நம்பர்ல இருந்து கூப்பிடுற..? உன் போன் எங்க..?” படபடவென கேட்க,
இடம் சொன்னவள், “நான் இங்க இருக்கேன், சீக்கிரம் வாங்க ப்ளீஸ்..” என்று வைத்துவிட்டாள். ஈஷ்வருக்கு ஏதோ பிரச்சனை என்று புரிய, மின்னலாக அந்த இடம் வந்து சேர்ந்தான்.
பணம் கொடுக்காமல் அங்கேயே அழுகையை அடக்கி கொண்டு நின்றிருந்தவள், இவனை காணவும், கண்ணீர் வழிந்தேவிட்டது.
“என்ன ஆச்சு லவி..?” அவளின் அழுகை முகத்தில் ஈஷ்வர் துடித்து போனான். சுற்றி இருந்தவர்கள் பார்வை அவளை மிகவும் வலிக்க வைக்க,
“அவ.. க்கும்.. அவருக்கு பணம் கொடுங்க..” வலித்த தொண்டையை செருமி டெலிபோன் பூத் காரரை காட்டினாள்.
ஈஷ்வரும் அப்போது தான் எல்லார் பார்வையும் பார்த்தவன், பணம் கொடுத்துவிட்டு, வா போலாம்.. என்று அவளுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அவனின் முதுகில் முகம் புதைத்தவள் கண்ணீர் டிஷர்ட்டை நனைத்து கொண்டே வர, கைகள் நடுக்கம் கொண்ட ஈஷ்வர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டான்.
அப்படியும் அவள் இறங்காமல் அழுதுகொண்டே இருக்க, “லவி என்னடி ஆச்சு, என்ன பாரு ப்ளீஸ், எனக்கு எப்படியோ இருக்கு, சொல்லுடி..” முதுகில் இருந்து பிரியாத அவளின் கண்ணீரில் அவன் கண்ணிலும் கண்ணீர் தேங்க கெஞ்சியவன், பல்லவி அழுது கொண்டே சொன்ன விஷயத்தில் அதிர்ந்து தான் போனான்.
“என்ன வீட்டை விட்டு துரத்திட்டாங்களா..?” கோபத்துடன் கேட்க, ம்ம்.. என்று மேலும் கண்ணீர் சிந்தினாள்.
“சரி விடு, இப்போதயை கோவம் அவங்களுக்கு, சரி பண்ணிடலாம், நீ அழுகாத ப்ளீஸ்..” எவ்வளவு கெஞ்சியும் அழுக, ஈஷ்வர் திணறி தான் போனான்.
அவளின் விடாத அழுகை ஒரு பக்கம், ரோடில் இருப்பது ஒரு பக்கம், அடுத்து என்ன செய்ய என்று தெரியாத நிலை ஒரு பக்கம் என்று சில நொடிகள் தவித்தவன், பின் ஒரு முடிவோடு விஷ்ணுவிற்கு அழைத்து வர சொன்னான்.
அவன் வந்தவன் பல்லவியை பார்த்து, என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டவன், “சரி.. இப்போதைக்கு பல்லவி..” என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே,
ஈஷ்வர் இடையிட்டு “எனக்கும், அவளுக்கும் கல்யாணம் செஞ்சு வை..” என்றான். என்ன..? விஷ்ணு, பல்லவி இருவருக்கும் அதிர்ச்சி தான்.
“என்னடா பேசுற..? இந்த வயசுல யாராவது கல்யாணம் செய்வாங்களா..?” கோபத்துடன் அதட்ட,
“உனக்கு என்ன வயசுன்னு மறந்து போச்சா..? இருபத்திரெண்டு வயசில கல்யாணமாம் கல்யாணம்..” திட்டியவன், “பல்லவி இப்போதைக்கு உன் அத்தை வீடு வரட்டும், நான் பார்த்துகிறேன், அப்பறம் என்ன செய்றது பார்ப்போம்..” என,
“இல்லை இவளை தனியே விட மாட்டேன்..” என்றான் ஈஷ்வர் உறுதியாக.
“டேய் என்னை கடுப்பேத்தாத, உங்க அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்..”
“விஷ்ணு நான் இப்போ யாரையும் பார்க்கிற நிலையில இல்லை, லவி என்னை நம்பி வந்திருக்கா, அவளை பார்க்கிறதுதான் எனக்கு இப்போ முக்கியம்..” அழுத்தமாக அவளின் கை பற்றி சொல்ல, பல்லவி அவனையே பார்த்தாள்.
“ஈஷ்வர்.. உனக்கு லவி பைத்தியம் தான் முத்திடுச்சு, அதான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க, காதல்ன்னு வந்தா மட்டும் உன் பொறுமை, நிதானம், புத்திசாலித்தனம் ஒன்னும் வேலை செய்றதில்லை, ப்ளைண்டா முடிவெடுக்கிற..” விஷ்ணு கோவத்துடன் சொல்ல, ஈஷ்வர் அசையவில்லை.
“ஏம்மா பரதேவதை நீயாவது உன் மஜ்னுக்கு சொல்லு, இது சரிவராதுன்னு..” பல்லவியிடம் விஷ்ணு சொல்ல, அவளும் புரிங்து ஈஷ்வரிடம் பேச வர,
அவனோ, “லவி நீ எதுவும் சொல்லாத, இது தான் என் முடிவு..” அவளை நிறுத்தி விட்டவன்,
“இப்போ என்ன நீ எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டியா..? அப்போ இடத்தை காலிபண்ணு, நான் பார்த்துகிறேன்..” என்றான் அவனிடம் பல்லை கடித்து.
“எனக்கு வர கோவத்துக்கு உன் கடிக்கிற பல்லை மொத்தமா தட்டணும் போல இருக்கு.. ஏண்டா இப்படி என் உயிரை வாங்குற..? இதால எவ்வளவு பிரச்சனை வரும்ன்னு யோசி..”
“விஷ்ணு.. எனக்கு இப்போ என்னை நம்பி என் கை பிடிச்சிட்டிருக்கிற இவளோட பாதுகாப்பு தான் முக்கியம், என்னைவிட அவளுக்கு வேற யாரும் அடைக்கலம் தர தேவையில்லை அது நீயா இருந்தாலும் சரி..” அதோடு முடித்துவிட, அடுத்த நாள் அவர்கள் திருமணம் முடிந்தது.
காதல்.. ம்ம்.. காதல் என்ற சொர்க்கமும்.. நரகமும், வாழ்வும்.. சாவும், நீரும்.. நெருப்பும், காற்றும்.. மூச்சுமாக ஈஷ்வரை வலுவாக.. மிக வலுவாக ஆட்டுவித்து கொண்டிருந்தது.
அவன் என்று பல்லவியின் மீதான காதலை உணர்ந்தானோ அன்றில் இருந்து எல்லாம் பல்லவி மயம் தான் அவனுக்கு. அப்பா, விஷ்ணு என்று அவனின் வாழ்க்கையின் முக்கியமான ஆட்களிடமே வேறுபட்டு நின்றான்.
காதல் மாயவலை அவனை உள்ளே இழுத்து சென்றது. உடன் பல்லவியையும் இழுத்து சென்றான் தீவிர காதலன்.