“ம்ஹூம்.. முடியாதுடி, லாஸ்ட் செமஸ்டர் எக்ஸாம் முடிச்சிட்டு நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம், நீ அப்ளை பண்ணிட்டியா..?”

“ம்ஹூம்.. நான் உங்களை மாதிரி ரொம்ப ஸ்மார்ட் கிடையாது, கஷ்டப்பட்டு தான் படிக்கணும், அதுக்கும் டவுட் தான்..”

“அப்போ ஏன் இதை எடுத்த..?”

“வீட்ல சொல்லி தப்பிக்க காரணம் வேண்டாமா..? அண்ணாக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு  பாட்டி எழுந்துட்டாங்க, அதான் இதை சொல்லிட்டேன், பட் படிச்சு எக்ஸாம் எழுதுற எண்ணமும் இருக்கு, tnpsc, பேங்க் அப்ளை பண்ணலாம் இருக்கேன்.. அதுக்கு வேற கொஞ்சம் படிக்கணும், நோட்ஸ் எடுத்துட்டு இருக்கேன்..”

“ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத, படி பார்ப்போம்..”

“ம்ம்..” என்றவள் போன் அடிக்க பார்த்தால் ரத்னா.

“ஐயோ பேசிட்டே இருந்ததில நேரம் ஆயிடுச்சு, கிளம்பலாம்..” என, ஈஷ்வர் அவளுடனான முதல் பைக் பயணத்தை ஆரம்பித்தான்.

பல்லவியோ அம்மாவிடம் பேசி கொண்டே வர, ஈஷ்வருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். இவளை பத்தி தெரிஞ்சது தானே..? விட்டுவிட்டான். இதோ வந்திட்டேன்ம்மா.. சொல்லி கொண்டே வர, அவள் நேரம் டிராபிக்.

வண்டிகள் ஊற, ஈஷ்வர் நுழைந்து நுழைந்து தான் சென்றான். பல்லவியும் விடாமல் போன் செய்த அம்மாவிடம் டிராபிக் என,  மூர்த்தியும் வீட்டுக்கு வந்தவர் மகள் வரவில்லை எனவும் மனைவியிடம் பாய்ந்தார்.

“வந்துடுவாங்க..”என்றவரின் பதில் கோமதியின் பேச்சு முன் எடுபடவில்லை.

“மூர்த்தி இது சரிவராது, நீ பேசாம சரண்க்கு என் மகள் ஜாதகம் கேட்டா இல்லை கொடுத்துடு, இவ கல்யாணம் செஞ்சுட்டு போய்ட்டு படிக்கட்டும்..” கோமதி வாய்ப்பு கிடைத்தது என்று ஆரம்பித்துவிட்டார்.

“லேட்டா வரத்துக்கு எல்லாமா கல்யாணம் பண்ணுவாங்க..” ரத்னா தாங்காமல் முணுமுணுத்துவிட, கோமதி காதில் விழுந்துவிட்டது. அவர் புகைய ஆரம்பிக்க, இங்கு பல்லவி ஈஷ்வருடன் பைக்கில் வந்து நின்றாள்.

அதுவும் இரண்டு வீடு தள்ளி தான். அவள் நேரம் மூர்த்தி மகளை எதிர்பார்த்து கேட்டில் நின்றிருந்தவர் இதை பார்த்துவிட்டார். ஈஷ்வர் ஹெல்மெட் அணிந்திருக்க முகம் தெரியவில்லை. பார்த்ததும் அவருக்கும் உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. மடமடவென உள்ளே சென்றுவிட, பல்லவி திரும்பி செல்லும் அவரை பார்த்துவிட்டாள்.

“நான் வரேன்..” உள்ளுக்குள் திகிலுடன் ஈஷ்வரிடம் விடைபெற,

“ம்ம்.. நைட் போன் பண்றேன்..” என்றவன் ஹெல்மெட்டை கழட்டி கொண்டிருந்ததில் மூர்த்தியை கவனிக்கவில்லை.

பல்லவி உள்ளே வர வர, மூர்த்தி அவளையே பார்த்து நின்றார். “எவ்வளவு நேரம்டி..?” ரத்னா மகளிடம் கேட்க,

“டிராபிக்ம்மா..” என்றவள் குரல் முணுமுணுத்து தான் கேட்டது.

“எப்படி வந்த ஆட்டோவா..? பஸ்ஸா..?” ரத்னா மேலும் கேட்க,

“எப்படி வந்த கேட்காத ரத்னா, யார்கூட வந்தன்னு கேளு..” என்றார் மூர்த்தி. அவர் குரல் காரத்தின் நெடியை வீடு முழுதும் பரப்பியது.

“என்.. என்ன சொல்றீங்க..?” ரத்னா புரிந்து பயத்துடன் மகளை பார்த்தார்.

“ஏன் நான் சொல்றது உனக்கு புரியலையா..? உன் பொண்ணு யார் கூட வந்தான்னு கேளு சொன்னேன்..” அவர் மீண்டும் கத்தவே செய்தார்.

“என்னடா சொல்ற..? தெளிவா சொல்லு..” கோமதி மகனிடம் கேட்க,

“உங்க பேத்தி அவளுக்கு அவளே மாப்பிள்ளை தேடிகிட்டா சொல்றேன்.. நாம யாருக்கும் ஜாதகம் கொடுக்க தேவையில்லை சொல்றேன்..” மூர்த்தி சொல்ல சொல்ல, ரத்னாவிற்கு கண்ணீரோடு கோவமும்.

“பல்லவி அப்பா என்ன சொல்லிட்டு இருக்கார்..? இதெல்லாம் உண்மை இல்லை தானே, அம்மா உன்னை நம்புறேன், சொல்லு..?” மகளிடம் கேட்க, அவளின் அமைதி அவரின் நெஞ்சில் தீயை கொட்டியது.

“ஐயோ.. போச்சு, இத்தனை வருஷம் நாங்க கட்டி காப்பாத்தின குடும்ப கௌரவம் போச்சே, இதுக்கு தான் தலைப்பாடா அடிச்சிகிட்டேன் முதல்ல இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணுங்கன்னு, யார் கேட்டா என் பேச்சை..” கோமதி படபடவென  என்று ஆரம்பித்து பக்கம் பக்கமாக பேச, ரத்னாவோ மகளை வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.

“சொல்லு யார் அது..?” மூர்த்தி விசாரிக்க, பல்லவி மௌனம் காத்தாள்.

இன்னார் என்று சொல்ல முடியவில்லை. வீட்டாருக்கு நல்ல அபிப்ராயமே இல்லாத அரசியல்வாதி மகன் என்று இந்த நேரம் சொல்ல வேண்டாம் என்று நினைத்துவிட்டாள்.

“எப்போல இருந்து பழக்கம்..?” மூர்த்தி மேலும் கேட்க,

“என்னோட ஸ்கூல் சீனியர்..” என்றுவிட்டாள்.

“என்ன..? அப்போவாவே.. அடி ஆத்தி இதை எங்க போய் சொல்வேன், முளைக்காததுக்கு முன்னாடியே ஜோடி சேர ஆள் பார்த்திருக்கா.. இது வெளியே தெரிஞ்சா பிள்ளையா வளர்த்திருக்கீங்கன்னு சொந்த பந்தம் எல்லாம் துப்புவாங்களே நான் என்ன செய்வேன்..?” கோமதி பொரிய, பல்லவிக்கு கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

“வயசுல மூத்தவ என் பேச்சை கேட்காம இவளை நம்பின ஆடுன  மொத்த குடும்பத்துக்கும் நல்ல பலன் கிடைச்சிடுச்சு.. உங்களுக்கு இது தேவை தான், பாருங்க உங்கள தலை குனிய வச்சுட்டா, இவளை பெத்த உங்களுக்கு நல்ல பலனை கொடுத்திட்டா, உன் வயிறு குளிர்ந்திருக்குமே மருமகளே..”  கோமதி பேசி மூர்த்தி, ரத்னாவின் கோவத்தை தூண்டிவிட, அது சரியாக பல்லவி தலையில் விழுந்தது.

“போதுமா..? சொல்லு போதுமா உன்னை நம்பினதுக்கு இது போதுமா எங்களுக்கு..?” ரத்னா மகளை பார்த்து கத்தி அழுக,

“ம்மா..” என்று அவரின் அருகில் சென்றாள்.

“வராதா.. என்கிட்ட கூட வராதா.. போ..” தள்ளி நின்று அழுக, பல்லவிக்கு நினைத்ததை விட நிலைமை சமாளிக்க முடியாததாக இருந்தது.

இதுவரை மனதில் ஏதோ ஒரு மூலையில் அம்மா, அப்பாவை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை இப்போது ஆட்டம் கண்டது. பரணி இருந்திருந்தாலாவது இந்த சூட்டை தணித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும், இப்போது இவள் மட்டும் எனும் போது பெற்றவர்களின் முன் விசாரணையே இல்லாத குற்றவாளியாக நின்றாள். அதில் கோமதியின் பங்கு தான் முழுதாக இருக்க, புரிந்த பல்லவிக்கு அவரிடம் எதுவும் பேச முடியவில்லை.

“நல்ல வேளை.. இவ ஜாதகத்தை என் பேரனுக்கு கொடுக்கல, அவனுக்கு வேற நல்ல பொண்ணா கிடைக்கட்டும்..” கோமதி விடாது சூடேத்தி கொண்டே இருக்க, மூர்த்தி அந்த நொடி முடிவெடுத்தார்.

“ம்மா.. இப்போவும் ஒன்னும் ஆகிடலை,  நாளைக்கே நான் தங்கச்சிகிட்ட பேசி இவளை சரணுக்கு கட்டி வைக்கிறேன்..” அறிவிப்பாக சொல்ல, பல்லவிக்கு பக்கென்று இருந்தது.

“எதுக்கு.. இல்லை எதுக்குன்னு கேட்கிறேன், என் பேரனுக்கு இவ வேண்டாம்..” கோமதி சொல்ல, ரத்னாவின் அழுகை கூடியது.

“தங்கச்சி கால்ல விழுந்தாவது இவளை சரணுக்கு கட்டி வச்சு தான் ஆகணும், இவளை இப்படியே விட்டா நம்ம  குடும்ப மானத்தை வாங்கிடுவா..?”

“அதுக்கு என் பேரன் தான் கிடைச்சானா..? நீ உன்  ஒழுக்க  மகளுக்கு வேற மாப்பிள்ளை பாரு..” கோமதி சொல்ல, பல்லவிக்கு அதற்கு மேல் முடியவில்லை.

“எனக்கு உங்க பேரன் ஒன்னும் தேவையில்லை, என் ஈஷ்வர் இருக்கார் எனக்கு..” என்றுவிட்டாள்.

“என்ன சொன்ன..?” மூர்த்தி பெல்ட்டை உருவி அடிக்க போக,

“ஐயோ என்ன செய்றீங்க..?” என்று ரத்னா மகளுக்கு முன் வந்து நின்றார்.

“முதல்ல உன்னை தான் கொல்லனும், பொண்ணா வளர்த்து வச்சிருக்கா என்ன சொல்றா பாரு..” மகளை காப்பாற்ற வந்த மனைவியை கத்தியவர், பெல்ட்டை கீழே வீசினார்.

“விடுடா மூர்த்தி, இப்போ இவளை என்ன செய்யன்னு தான் பார்க்கணும்..” கோமதி திட்டம் போட ஆரம்பிக்க, பல்லவிக்கு புரிந்து போனது.

“ஏய் உன் மகளை கொண்டு போய் ரூம்ல பூட்டி வை, நான் இப்போவாவே தங்கச்சிக்கு பேசுறேன்..  முடிஞ்சா நாளைக்கே இவ கல்யாணத்தை முடிச்சிடனும்..” மூர்த்தி போன் எடுக்க,

“பல்லவி மிக  உறுதியாக எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்றாள்..”

“பல்லவி வாயை திறந்தா நானே உன்னை அடிச்சிடுவேன், வாயை மூடு..” ரத்னா மகளை அடக்க, அவளோ எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று தான் நின்றாள்.

“நீ சொல்றதை கேட்க நாங்க ஆள் இல்லை, ஒழுங்கா உள்ளே போ..” மூர்த்தி கடுமையாக சொல்ல, அவள் இருந்த இடம் விட்டு நகரவே இல்லை.

“பல்லவி எங்க பேச்சை கேளு.. பண்ணது தப்பு இதுல இவ்வளவு அடம் ஆகாது..” ரத்னா கோவப்பட, கெஞ்ச, மூர்த்தியும் கொஞ்சம்  இறங்கி,

“உனக்கு நாங்க நல்ல வாழ்க்கையை அமைச்சு தரோம், அவன் வேண்டாம் உன்னை பெத்து வளர்த்துக்கு எங்களுக்காக இதை பண்ணு..” என்று அவளின் கையை பிடிக்கவே செய்துவிட்டார்.

பல்லவி அதிர்ந்து போனவள், ப்பா.. என்று அழுதாலும், அவளின் முடிவில் உறுதியாக நின்றாள்.

“அப்போ உனக்கு அவன் தான் முக்கியமா..? எங்களை விட அவன் வேணும் இல்லை உனக்கு..” என்று  கத்த, சரியாக அந்த நேரம் ஈஷ்வர் போன் செய்துவிட்டான்.

“அவனா தான் இருக்கும்..” வேகமாக வந்து மொபைல் பிடுங்கி பார்த்த மூர்த்தி அப்படியே மொபைலை தூக்கி அடிக்க, அது சுக்கல் சுக்கலாக தெறித்தது.

பல்லவி அதிர்ந்து போய் நிற்க,  மூர்த்தி இப்படியே விட்டால் சரிவராது என்று அவரின் தங்கையிடமே பேசி நாளும் குறிக்க, பல்லவிக்கு உள்ளுக்குள் பயம் உச்சத்தை தொட்டது. இப்போது இல்லை என்றால் எப்போதும் ஈஷ்வர் எனக்கு இல்லை புரிந்து கொண்டவள்,

“நீங்க என்ன பேசி நாள் குறிச்சாலும் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம், நீங்க ஒருமுறை அவரை பாருங்க, பேசுங்க..”  கெஞ்ச, பேச்சு நீண்டு கொண்டே சென்றது. எவ்வளவு பேசினாலும் மகளின் அடத்தில் பெற்றவர்கள்  கொதித்தனர்.