திகம்பரனின் திகம்பரி அவள் 12 2 12255 விஷ்ணு அவனின் பைக்கில் ஈஷ்வரை பிக் அப் செய்ய வர, “மகாவும் வரா விஷ்ணு, நான் என் பைக்கிலே வரேன்..” என்றான் அவன். “என்ன அவ வராளா..? அப்போ நீ அவளோடே கிளம்பு, நான் வரல..” விஷ்ணு பைக்கை கிளப்ப, ஈஷ்வர் கீயை எடுத்து கொண்டான். “ஈஷ்வர்.. இந்த அரைவேக்காடு கூட எல்லாம் நான் வரமாட்டேன்.. கீ கொடு..” அங்கு வந்த மகா பார்த்தே விஷ்ணு சொல்ல, அவளுக்கு சுர்ரென்று ஏறியது. “ச்சு.. இருடா..” ஈஷ்வர் கீயுடன் உள்ளே செல்ல, மகா அவன் முன் நின்றவள், “நான்.. நான் அரைவேக்காடா..? அதை கொதிக்கிற பாய்லர் நீங்க சொல்ல கூடாது, எப்போவும் மத்தவங்க மேல சுடு தண்ணி ஊத்திக்கிட்டு..” பல்லை கடித்து பேசினாள். “அதான் தெரியுது இல்லை சுடு தண்ணி ஊத்துறேன்னு அப்பறம் ஏன் கிட்ட வர.. தள்ளி போடி..” “எனக்கு ஒன்னும் இந்த ஹீட்டர் கூட சூடு வாங்கணும்ன்னு அவசியம் இல்லை, அத்தை மகனா போயிட்டிங்கன்னு பார்த்தா ரொம்ப பண்றீங்க..” “அத்தை மகனா இருந்தா என்னை நோண்டிட்டே இருக்கணுமா..?” “என்.. என்ன நோண்டினேன்..?” “ஓஹ்.. உங்களுக்கு தெரியாது, மேட்ச் மேக்கிங் வேலை எல்லாம் ஜோரா பார்க்கிற போல..” “எனக்கு ஒன்னும் அந்த அவசியம் இல்லை, அந்த கவிதா அக்கா கேட்டதால தான் அத்தைகிட்ட அவங்களை இண்ட்ரோடியூஸ் பண்ணேன்..” “அவ ஏன் கேட்டான்னு உனக்கு தெரியாதா..?” “தெரியும், அப்படியாவது கமிட் ஆக மாட்டிங்களான்னு தான் செஞ்சேன்..” “நான் கமிட் ஆகறதுல மேடம்க்கு என்ன அப்படி ஒரு ஆர்வம்..?” “பின்ன.. நீங்க இப்படியே வாய் அடிச்சி சுத்திட்டு இருந்தா கடைசில என் தலையில இல்லை விடுவீங்க..” “ஆஹ்ன்..” “ஆமா ஏற்கனவே வீட்ல அந்த ஆசையில தான் சுத்திட்டு இருக்காங்க, இதுல நீங்களும் வர பொண்ணை எல்லாம் துரத்திட்டே இருந்தா என்ன அர்த்தம்..? சட்டு புட்டுன்னு யாரையாவது கரெக்ட் பண்ற வழியை பாருங்க, என்னால எல்லாம் இந்த கொதிக்கிற பாய்லர்ல வந்து விழ முடியாது..” “ஹாஹா.. இந்த பாய்லர்ல விழவும் ஒரு பவர் ஏஞ்சல் வேணும்டி, அது எல்லாம் நீ கிடையாது, நீ சரியான அரைவேக்காடு.. ஹாஹா..” மீண்டும் மீண்டும் சிரிக்க, மகாவிற்கு பிபி எகிறியது. “உங்களை..” மகா எகிறும் நேரம், “போலாமா..?” என்று வந்தான் ஈஷ்வர். ம்ம்.. மகா கடுப்பாக அண்ணனின் பைக்கிற்கு செல்ல, விஷ்ணுவிற்கு கீ கொடுக்க அவனும் அவனின் பைக்கில் பின் தொடர்ந்தான். “ண்ணா.. எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்..” மகா சிக்னலில் பைக் நிற்கவும் அண்ணனின் காதை கடிக்க, பின்னால் திரும்பி முறைத்த ஈஷ்வர், “இதுக்கு தான் எங்களோட கிளம்பி வந்தியா..? விஷ்ணு கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்..” என்றான். “ண்ணா.. ப்ளீஸ்ண்ணா.. எனக்கு கொஞ்சம் ட்ரெஸ் எடுக்கணும், கொஞ்ச நேரம் மட்டும் தான்..” “ம்ஹூம்.. வாய்ப்பே இல்லை, நீ முழு நாளையும் மாலிலே கடத்திடுவ, நாங்க வரல..” “ண்ணா.. உன்கிட்ட கேட்காம நான் வேற யார்கிட்ட கேட்க..? உன் ஒரு தங்கச்சியை இப்படி தான் மனசு கஷ்டப்படுத்துவியா..? ஊர் உலகத்துல அண்ணங்க எல்லாம் எப்படி இருக்காங்க.தெரியுமா..? நான் என்ன உன்கிட்ட அது வேணும், இது வேணும்ன்னு ஓயமாவா வந்து நிக்கிறேன், எப்பவாவது ஒரு முறை தானே..” வெறும் மூக்கை சிந்தி சிந்தி பேச, “ஆமாமா.. அந்த எப்பவாவது ஒரு முறை மாசத்துக்கு ஒரு முறை தானே..?” என்றான் ஈஷ்வர் நக்கலாக. “ம்ப்ச்.. என்ன இருந்தாலும் உனக்கு நான் முக்கியமில்லை தான், பரவாயில்லை, என்னை அந்த ஸ்டாப்ல இறக்கி விட்டுடு, நான் பஸ்லே போயிக்கிறேன்..” பாவமாக சொல்ல, “பஸ் ஸ்டாப்ல நிறுத்தினா மட்டும் நீ இறங்கிடுவியா..? இன்னும் இன்னும் பேசி என் உயிரை வாங்குவ, வந்து தொலை..” ஈஷ்வர் முன்னால் சென்று விஷ்ணுவிற்கு கண் காட்டிவிட்டு அடுத்த லெப்ட் எடுத்தான். “எனக்கு தெரியும் இந்த இம்சை இதை தான் செய்யும்ன்னு, அதுக்கு தான் முதல்லே வரமாட்டேன் சொன்னேன்..” விஷ்ணு கோபத்துடன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பார்க்கிங் சென்றான். “சாரி விஷ்ணு.. கொஞ்ச நேரம் மட்டும் தாண்டா, அவளுக்கு ஏதோ துணி எடுக்கணுமாம்..” ஈஷ்வர் சொல்ல, அவனுக்காக உள்ளே சென்றான். “எனக்கு தெரியும் என் அண்ணனுக்காக நீ வருவன்னு..” மகா எதையோ சாதித்த சிரிப்புடன் லிப்டிற்குள் செல்ல, புரிந்த விஷ்ணு பல்லை கடித்தான். மகாவின் கொஞ்ச நேரம் பல மணி நேரங்களாக நீள, விஷ்ணு ஈஷ்வரை தான் குதறி கொண்டிருந்தான். “வந்துடுவாடா.. அவளும் எங்க போறா..” ஈஷ்வர் அவனை சமாளித்து கொண்டிருக்க, மகா ஒரு வழியாக வந்தாள். வந்தவளோ “பசிக்குது..” என்றாள். “சரி வா தலப்பாக்கட்டி போலாம்..” ஈஷ்வர் சொல்ல, “ம்ஹூம்.. இன்னிக்கு ஷஷ்டி விரதம்.. வெஜ் தான்..” என்றாள் மகா. “சண்டே வெஜ்ஜா..? நீ உன் தொங்கச்சியை கூட்டிகிட்டு இடத்தை காலி பண்ணு..” என்றான் விஷ்ணு கொதித்து போய். “ண்ணா..” மகா முகத்தை பாவமாக வைக்க, ஈஷ்வர்க்கு தான் மத்தளம் சத்தம் கேட்டது. “விஷ்ணு.. ப்ளீஸ்..” அவனை சரிக்கட்டி வெஜ் சாப்பிட சென்றனர். இதற்கே மாலை ஆகிவிட, “இப்போவாவது போலாமா..?” என்றான் விஷ்ணு. “எங்க..?” மகா கேட்க, “நம்ம ECR கெஸ்ட் அவுஸ்க்கு..” “இனி எப்படி முடியும்ண்ணா..? இங்கேயே ஈவினிங் ஆகிடுச்சு.. எங்களுக்கு எக்ஸாம் வேற இருக்கு.. போய் படிக்கணும்..” என்றாள் மகா. “இவ்வளவு நல்லவளா பேசாத, நீ தான் எங்க பிளானை கெடுத்த..?” விஷ்ணு அவள் மேல் பாய்ந்தான். “இப்போ என்ன உங்களுக்கு பீச் தானே போகணும், வாங்க பெசன்ட் நகர் போலாம்..” “ஏன் நீ அறுபடை முருகனுக்கும், அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு போகனுமா..?” விஷ்ணு புருவம் நெறித்து கேட்டான். கண்டிபிடிச்சிட்டான்.. உதடு சுளித்த மகா, “ஏன் நான் போனா என்ன..? நீங்களும் பீச் தானே போகணும்..?” என்றாள் சட்டமாக. “இவளை..” விஷ்ணு பல்லை கடிக்க, “உட்கார்ந்து அலை கூட பேச்சு வார்த்தை நடத்த எந்த பீச்சா இருந்தா என்ன..?” அவனுக்கு கேட்பது போல முணுமுணுத்தாள் முறைப்பெண். “விஷ்ணு..” ஈஷ்வர் அவனை கூப்பிட, “நீ தாண்டா இவ இவ்வளவு ஓவரா போக காரணம்..” “விடுடா.. இன்னிக்கு ஒரு நாள்..” விஷ்ணு கோபத்துடன் அவன் பைக் எடுக்க, ஈஷ்வர் அவனை தொடர்ந்தான். “நீங்க அறுபடை முருகன் போய்ட்டு வாங்க, நான் அஷ்டலக்ஷ்மி கோவில் பின்னாடி இருக்கேன்..” விஷ்ணு சென்றுவிட, ஈஷ்வர் தங்கையுடன் முருகனை காண சென்றான். கோவில் அப்போது தான் திறந்திருக்க, கை, கால் கழுவி கொண்டவர்கள், ஒவ்வொரு முருகனையும் வணங்கி, சில நிமிடங்கள் அமர்ந்து அந்த அமைதியை மனதில் ஏற்று வெளியே வந்தனர். அடுத்து நிழல் கீழே விழா அஷ்டாங்க விமானம் கொண்ட அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு வர, ஈஷ்வர் பைக் நிறுத்தினான். அப்போது தான் எல்லாம் வர ஆரம்பித்திருக்க, மக்கள் கூட்டம் தெரிந்தது. முதலில் மகாலக்ஷ்மி.. விஷ்ணுவும் கிழக்கு பார்த்து இருக்க, வணங்கியவர்கள், நீண்ட ஆயுள், பூரண ஆரோக்கியம் வழங்கும் ‘ஆதிலக்ஷ்மி’…, பசியை போக்கி, தானியங்களை அள்ளி கொடுக்கும் ‘தான்யலக்ஷ்மி’.., தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொட்டி கொடுக்கும் ‘தைரியலக்ஷ்மியை’ வணங்கினர். மூன்றாம் அடுக்கிற்கு ஏறியவர்கள், திருமணத்திற்கு, குழந்தை வரம் வேண்டுவோரின் லக்ஷ்மியான நான்கு கைகள் கொண்ட ‘சந்தானலக்ஷ்மியை’ வணங்கியவர்கள், அடுத்து வெற்றியை தரும் ‘விஜயலக்ஷ்மியை’ வணங்கினர். அடுத்து கல்வி ஞானத்திற்கு ‘வித்யாலக்ஷ்மியை’ வணங்கி, சகல சௌபாக்கியங்களும், ராஜவாழ்க்கையும் கிட்ட ‘கஜலக்ஷ்மியை’ வணங்கி அடுத்த அடுக்கு ஏறினர். நான்காம் அடுக்கில் செல்வத்தின் லக்ஷ்மியான ‘தனலக்ஷ்மியை’ வணங்கி கீழிறங்கிய ஈஷ்வருக்கு, எதிர்புறத்தில் மேலேறும் பாதையில் பல்லவி ஏறிக்கொண்டிருந்தாள். அவளும் ஈஷ்வரை பார்த்தாள். இருவர் கண்களும் ஆச்சர்யத்தில் விரிந்தது. அவளுக்கு பின்னால் ரத்னா வந்தவர், “என்ன பல்லவி ஏறு..” என, ஈஷ்வரை பார்த்து கொண்டே மேலேறினாள். “மகா.. இங்கேயே கொஞ்ச நேரம் நிக்கலாம்..” கீழிறங்கும் பீச் வியூ இருக்கும் அடுக்கில் நின்றனர். “நல்லா இருக்கு இல்லைண்ணா..” மகா பீச் காற்றில் முடி பறக்க, ஆனந்தமாக சொன்னாள். “ம்ம்..” ஈஷ்வர் கண்கள் கீழிறங்க போகும் பல்லவியை எதிர்பார்த்திருந்தது. ஒரு வார இடைவெளி கொஞ்சம் தேட வைத்தது போல. பல்லவியும் அவனை தேடியே கீழே வந்தாள். இருவரின் பார்வையும் மற்றவரை திருடி கொண்டிருக்க, பல்லவி குடும்பம் அவளை அழைத்து கொண்டு கீழிறங்கியது. “போலாம் மகா..” என, இருவரும் கீழிறங்க, ஈஷ்வர் பல்லவியை தேடி கொண்டே வந்தான். ஓரிடத்தில் அவளின் மொத்த குடும்பமும் இருந்தது. அதில் சரணும் அடக்கம். ஈஷ்வரை பல்லவியும் கண்டு கொண்டாள். அவனின் பார்வை சரணை தொட்டு மீள்வதையும் பார்த்தவள், ரத்னா ஏதோ கேட்க அவருக்கு பதில் சொன்னாள். “ண்ணா.. போலாம்..” மகா முன்னே நடக்க, பல்லவியை கடந்து செல்ல, அவள் பார்வை.. பார்க்காமலே உணர்ந்தவன் கண் சுருக்கியபடி நடந்தான். “மூர்த்தி.. பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணி கேளேன், எங்க இன்னும் காணோம்..?” கோமதி சொல்லி கொண்டிருக்க, “அதோ அவங்களே வந்துட்டாங்க..” என்று சாமி கும்பிட்டு கீழிறங்கும் பெண் குடும்பத்தை கை காட்டினார். பரணிக்கு பெண் பார்க்கும் நிகழ்வு கோவிலில் வைத்துவிட, இரண்டு குடும்பமும் அங்கு கூடினர். பரணி பார்க்காதது போல அவனுக்கு பார்த்திருக்கும் மகிளாவை பார்க்க, அவளும் ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள். இருவருக்கும் முழு திருப்தி என்பது மலர்ந்த அவர்கள் முகத்திலே தெரிய, இருபக்க குடும்பத்தினருக்கும் நிம்மதியானது. “பீச் பக்கம் போயிடலாம்..” என, எல்லோரும் பீச் வந்தனர். “நீங்க அப்படியே ஒரு வாக் போய்ட்டு வாங்க..” பெண்ணின் தாய்மாமா சொல்ல, பரணி, சரண், பல்லவி, மகிளா மட்டும் நடக்க ஆரம்பித்தனர். “பல்லவி.. இங்க பாரேன்..” சரண் அவளுக்கு சைகை காட்டி நிறுத்திவிட, பல்லவியும் சங்கடம் தீர்ந்து மெதுவாக தேங்கி நின்றாள். “அவங்க தனியா பேசிக்கட்டும்..” சரண் சொல்ல, “ம்ம்..” என்ற பல்லவி ஈஷ்வரை தேட, அவனோ விஷ்ணு, மகாவுடன் தள்ளி நின்றிருந்தான். “என்னடா இங்கேயும் சண்டை போட பிளானா..?” விஷ்ணு மெல்லிய குரலில் சீண்டலாக சொன்னான். “ம்ப்ச்.. உன் கண்ணுல இருந்து ஒன்னும் தப்ப முடியாது..” “ம்ம்ம்.. எனக்கு உன் கண் மட்டும் போதும்.. பிடிச்சிடுவேன்..” விஷ்ணு சிரிப்புடன் சொன்னான். “ம்ஹ்ஹ்ம்.. போடா..” ஈஷ்வர் தலை கோதி அலைய தான் பார்த்தான். பல்லவி பறந்த சுடி ஷாலை பிடித்தபடி இவனை பார்க்காமல் பார்த்து கொண்டிருந்தாள். “ண்ணா.. அலைக்கு போலாமா..” மகா வர, “நீ போகாத கடல் அழுக்காகிடும்..” என்றான் விஷ்ணு கேலியாக. “அது ஏற்கனவே அப்படி தான் இருக்கு..” மகா உதட்டை சுளித்து சொல்ல, “நேத்து நீ இங்க வந்திருந்தியாக்கும்..” விஷ்ணு விடாமல் கேலி செய்ய, மகாவிற்கு இவனை பிடித்து கடலில் தள்ளிவிட்டால் என்ன என்றே தோன்றியது. “எங்க கிட்ட வந்து தானே பாரேன்..” விஷ்ணு உணர்ந்து நக்கலடித்தான். “உங்களை தள்ளிவிட்டா மொத்த கடலும் கொதிக்க ஆரம்பிச்சிடும்.. நீங்க இங்க இருந்தே பேச்சு வார்த்தை நடத்துங்க.. நீ வாண்ணா..” ஈஷ்வர் கை பிடித்து மறுபக்கம் நடக்க ஆரம்பித்துவிட்டாள். பரணியும், மகிளாவும் சில நிமிடங்கள் பேசி விட்டு வர, இரு குடும்பமும் பேச்சு வார்த்தை நடத்தினர். “இப்போ வர நல்ல நாள்ல உறுதி செஞ்சுட்டு, அடுத்த மூணு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்..” அங்கயே முடிவானது. “ஏற்பாடு பற்றிய பேச்சுக்கள் போனில் பார்த்து கொள்ளலாம்..” என, இரு குடும்பமும் கிளம்பினர். “போலாம்..” மூர்த்தி முன்னால் நடக்க, பல்லவி லேசாக திரும்பி பார்த்தாள். ஈஷ்வர் மகாவுடன் பேசியபடி அலையில் நின்றிருந்தான். மனம் சுருக்கென்றது. கோவிலில் வைத்து பார்த்ததோடு சரி.. இவ்வளவு நேரம் அவள் பக்கம் திரும்பவில்லை. அவள் கொடுத்த கிப்ட்டும் அவனிடம் இல்லை. “பிரிக்கவே இல்லையா..? எப்படி பிரிப்பார்..? அப்படி விசிறியடிச்சிட்டு வந்தா..? ஒன்னு கொடுக்காம எடுத்து வந்திருக்கணும், இல்லை கையில் கொடுத்திருக்கணும்..” அவளுக்கே அவள் செய்தது இப்போது லேசாக உதைத்தது. “அப்போ அவர் பேசினது..?” மனம் ரோஷம் கொண்டது. இறங்கி வரவும் முடியாமல், அவனிடமும் பேசாமல் இருக்க முடியாமலும் தவிக்க ஆரம்பித்தாள் திகம்பரி. திகம்பரனுக்கோ அவனின் இத்தனை வருட காத்திருப்பு வீணா என்ற ஆதங்கத்துடன், ஊடலின் வலியும் வதைத்தது.