திகம்பரனின் திகம்பரி அவள் 10 1 11764 திகம்பரனின் திகம்பரி அவள் 10 “விஷ்ணு பீச் போலாமா..?” ஈஷ்வர் போன் செய்து கேட்க, விஷ்ணு ஓர் நொடி அமைதி காத்தவன், “இப்போ நீ எங்க இருக்க..?” கேட்டான். “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” “ஓகே.. போலாம்.. பெசன்ட் நகர் பீச் வா..” அவன் வைத்துவிட, ஈஷ்வர் அங்கு சென்றான். இவனை பார்த்ததும் விஷ்ணுவிற்கு புரிந்தது பல்லவி தான் என்று. “எனக்கு பசிக்குது ஏதாவது வாங்கிட்டு வா..” சொன்ன ஈஷ்வர் பீச் ஓரம் சென்று அமர்ந்தான். விஷ்ணு கொஞ்சம் தள்ளி இருந்த பிட்ஸா ஷாப் பார்த்து அங்கு சென்று வாங்கி வந்து கொடுக்க, சாப்பிட்டான். அந்த பாக்ஸ் எடுத்து போட்டு வந்த விஷ்ணு, அவனின் பக்கத்தில் அமர்ந்தான். மாலை போல வந்தவர்கள், இருள் சூழ்ந்த பின்னும் பேசி கொள்ளவில்லை. விஷ்ணுவிற்கு இது பழக்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், ஈஷ்வர் இப்படி கிடையாதே. “மாமாக்கு சொல்லிட்டியா..?” விஷ்ணு கேட்க, “இல்லை..” என்றான். விஷ்ணு அவன் மொபைல் எடுத்து தானே இங்கு இருக்கிறோம் மெசேஜ் அனுப்பினான். “என்ன ஆச்சு..? பல்லவி கூட எதுவும் சண்டையா..?” “பேசினா தானே சண்டை போட..” ஈஷ்வர் விரக்தியாக சொன்னான். “ஓஹ்..” விஷ்ணு கண் சுருங்கியது. ஈஷ்வர் மொபைலில் மெசேஜ் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு வந்து கொண்டே இருந்தது. அவன் முகம் பார்த்த விஷ்ணு எதுவும் பேசாமல் எழுந்து நடக்க சென்றான். அடுத்து மெசேஜ் வர, ஈஷ்வர் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் எடுத்து பார்த்தான். பல்லவியிடம் இருந்து எண்ணற்ற சாரி மெசேஜ்.. பார்த்தே கொண்டு இருக்க, ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தது. பார்த்தான்.. ஆனால் கேட்கவில்லை. அடுத்து இன்னொரு வாய்ஸ் மெசேஜ். இந்த முறை ஹாண்ட்ஸ் ப்ரீ கனெக்ட் செய்தான். பல்லவி மூச்சு விடும் சத்தம். அப்படி கூட தெரியவில்லை. மெலிதாக தேம்பும் சத்தம். “அழுகிறாளா..?” “ஏன் இப்படி பண்றீங்க..?” என்று தான் ஆரம்பித்திருந்தாள். ஈஷ்வர் கண் மூடி திறந்தான். “உங்களை நெருங்கவும் முடியாம, விலக்கி வைக்கவும் முடியாம நான் படுற அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும், என்னால முடியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் நைட்ல நிம்மதியா தூங்கி பல நாள் ஆச்சு.. ரொம்ப போராடுறேன், பயமா இருக்கு, அழுகையாவும் வருது..” மெசேஜ் அதோடு நின்றிருந்தது. அடுத்த மேசேஜ் ஆரம்பித்தது. “நான் இன்னிக்கு வேணும்ன்னு எதுவும் பண்ணல, உண்மைக்கும் உங்களை பேஸ் பண்ண பயந்து தான் நான் ஓடி ஒளிஞ்சேன், உங்களை இப்படி தவிக்க வைக்க இல்லை.. எப்படி இருந்தாலும் உங்க மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணாதது தப்பு தான், ரொம்ப ரொம்ப சாரி.. ஏதவாது பேசுங்க.. ரொம்ப கில்ட்டா இருக்கு..” மெசேஜ் முடிய, ஈஷ்வர் இதை இரண்டும் திரும்ப திரும்ப கேட்டான். கேட்டு கொண்டே இருந்தான். பல்லவி குரல் காதில் ஒலிக்க, அவன் மனமோ ஏதேதோ யோசித்து கொண்டிருந்தது. கங்கா வேறு இடையில் இரு முறை போன் செய்து விட்டார். மகன் எடுக்கவில்லை என்றதும் விஷ்ணுவிற்கு அழைத்து பேசினார். “பீச்ல தான் இருக்கோம்த்தை.. நான் தான் கூட்டிட்டு வந்தேன்.. இதோ கிளம்பிடுறோம்..” கங்காவிடம் பேசி வைத்த விஷ்ணு, தூரத்தில் இருந்தே ஈஷ்வரை பார்த்தான். ஹாண்ட்ஸ் ப்ரீ எடுத்துவிட்டவன், எழுந்து நடக்க ஆரம்பித்தான். முகம் மிகவும் தீவிரமாக இருந்தது. நடந்து கொண்டே இருந்தவன், ஓரிடத்தில் கை கட்டி அலையில் கால் வைத்து நின்றான். அவன் பின்னாலே சென்ற விஷ்ணுவும் அவன் பக்கத்தில் நிற்க, திரும்பி பார்த்த ஈஷ்வர், “என்ன கேட்கணும்..?” கேட்டான். “நீயே சொல்வன்னு நினைச்சேன்..” விஷ்ணு தோளை குலுக்கினான். “நான் தப்பு பண்றேன் இல்லை..” ஈஷ்வர் அவனை பார்த்து கேட்டான். “தப்பு.. அப்படி சொல்ல முடியாது.. பட்..” அவன் முகம் பார்த்து விஷ்ணு நிறுத்திவிட்டான். அவன் செய்வது தவறு என்ற எண்ணம் ஈஷ்வருக்கே வந்துவிட்ட போதும், அதை தவறு என்று விஷ்ணு சொல்வதை ஏற்க முடியாமல் பார்க்கவும், இவனும் நிறுத்திவிட்டான். “புரியுது விஷ்ணு, பட்.. என்னாலவும் முடியலடா..” அவனின் தோள் தட்டிய விஷ்ணு, “என்ன யோசிச்சிருக்க..?” கேட்க, அலைகளை வெறித்த ஈஷ்வர், “கொஞ்ச நாள் அமைதியா இருக்கலாம் நினைச்சிருக்கேன்..? இது டூ இயர்லி எனக்கும், அவளுக்கும். சோ கொஞ்சம் விலகி இருக்கலாம்..” சில நொடி அமைதி காத்தவன், தொடர்ந்து, “ரெண்டு பேரும் ரொம்ப வீக்கா பீல் பண்றோம், என்னால இதை அவ்வளவு ஈஸியா கடக்க முடியல, அவளாலயும் என்னை ஏத்துக்க முடியல.. அழுத்தம் கொடுக்குதுடா, என்னை மாதிரி அவளும் தவிக்கிறா, இவ்வளவு கஷ்டம் எதுக்கு..? விடுடா..” தொண்டை செருமி சொன்னான். அவன் தொண்டை குழி வேக வேகமாக ஏறி இறங்குவதிலே அவன் அடக்கப்பட்ட துக்கம் தெரிந்தது. பார்த்த விஷ்ணுவிற்கு கோவம் தான். இது எல்லாம் தேவையா என்று..? “விஷ்ணு.. முன்ன எல்லாம் இப்படி இல்லைடா.. ஒரு அற்புதமான பீல்.. அப்படியே ஹெவன்ல மிதக்கிற சுகம், வேறெதுவும் கூட வேண்டாம், ஜஸ்ட் அவளை நினைச்சிட்டு இருந்தாலே போதும், மனசுக்கு அப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கும் தெரியுமா..? மணிக்கணக்கா தூங்காம முழிச்சிருந்திருக்கேன், அந்த சோர்வே தெரியாது, ப்ரெஷா இருக்கும் மனசும் சரி, உடம்பும் சரி.. ஆனா.. இப்போ என்னால அதை அனுபவிக்க முடியல, ஏதோ.. இங்க ஒரு மாதிரி வலிக்குதுடா..” இதயத்தை தொட்டு காட்டினான். “இன்னிக்கு கூட அவளை பார்க்க முடியலன்னு அவ தெரு பக்கமே சுத்திட்டு இருந்தேன், என்னமோ இதுக்கு முன்னாடி அவளை தினமும் பார்த்து பேசிட்டு இருந்த மாதிரி.. இது என்னை திட்டி காலேஜ் போன்னு விரட்டுனப்போ கூட அடமா சுத்திட்டு இருந்தேன்.. ஒரு மெண்டல் மாதிரி..” மூளையை தட்டி காட்டி சொன்னவன், “உனக்கு தெரியுமா விஷ்ணு அவ என்னை பேஸ் பண்ண முடியாம தான் வெளியவே போயிருக்கா, ஆனா நான் அவளை பார்த்தே ஆகணும்ன்னு அவளை பார்த்து, அவ மேல கோவபட்டு, அவளையும் அழ வச்சு.. வேண்டாம்டா. இது வேண்டவே வேண்டாம். இது ஹெவன் எல்லாம் இல்லை, பியூர் ஹெல்.. நரகம்.. யப்பா.. என்ன வலி வலிக்குதுடா..” ஈஷ்வர் பேசி கொண்டே போக, விஷ்ணு அவனை அணைத்து கொண்டான். அவன் அணைப்பு ஈஷ்வர் கண்ணில் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு சொட்டு கண்ணீரை சிந்த வைத்தது. “ஈஷ்வர்.. முதல்ல உன்னை நீ அமைதிபடுத்து.. என்ன செய்யா முடியும்ன்னு பார்ப்போம்..” “ம்ப்ச்.. என்ன செய்ய..? ஒன்னும் வேண்டாம்.. அவளாவது என் தொல்லை இல்லாமல் நிம்மதியா இருக்கட்டும்..” சில நொடி அணைப்பு. தானே விலகிவிட்ட ஈஷ்வர், முகம் துடைத்து நடந்தான். “நீ விலகிட்டா மட்டும் பல்லவிக்கு நிம்மதி கிடைச்சிடுமா..?” “என்ன பண்ணட்டும்..?” “அது உனக்கே தெரியும்..” “எனக்கு தெரியும் தான், ஆனா..?” “உனக்கு செய்ய மனசில்லை சொல்லு..” “மனசில்லைன்னு இல்லை விஷ்ணு.. அது..” “கொஞ்ச நாள் மட்டும் தான்..” “ம்ஹூம்.. மூணு வருஷம்..” “அவ்வளவு பெரிசுன்னு ஏன் நினைக்கிற..? சீக்கிரம் போயிடும் நினை, நீ சொன்னது தான், இது ரொம்ப சீக்கிரம் தான், நீயும் ஸ்பேஸ் எடுத்துக்கோ, பல்லவிக்கும் அந்த ஸ்பேஸ் கொடு..” “விஷ்ணு இப்போ இப்போ தான்டா மெசேஜே பண்றேன், அதுக்கும் ரிப்ளை கிடையாது.. அந்த கான்டெக்ட் கூட இல்லன்னா.. புரியுது அதுக்கே அவளை பார்க்கணும்ன்னு இப்படி சில்லியா நடந்துகிறேன்.. அவகிட்ட எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லைன்னு நினைச்சே எதிர்பார்ப்பு வைக்கிறேன், அவளை போர்ஸ் பண்ணல, பண்ணல சொல்லியே போர்ஸ் பண்றேன்.. எனக்கே நான் பண்றது புரியுதுடா, அது தப்பும் கூட. ஆனா எப்படிடா அவளை விட்டு விலகி இருக்க..?” நடந்தவன் நின்றான். “ஆனா இதுவே எங்களுக்கு கஷ்டத்தை கொடுக்குது, வேண்டாம்டா.. விலகியே இருக்கலாம்..” இறுதியாக.. ஆனால் உறுதியாக சொன்னான். விஷ்ணு முகத்தில் ஒரு மெலிதான புன்னகை. அந்த புரிதலே ஈஷ்வரை கொஞ்சம் நிதானத்திற்கு கொண்டு வந்தது. “நீ என்னை திட்டுவ நினைச்சேன்..” “கண்டிப்பா.. கொஞ்ச நேரம் முன்னாடி கூட அடிக்க கூட தான் நினைச்சேன், பட் நீ இவ்வளவு தெளிவா உனக்குள்ளே யோசிச்சு நல்ல முடிவு எடுக்கும் போது ஏன் திட்டணும், இப்படி தட்டி கொடுக்க தான் செய்யணும்..” அவனை தோளோடு அணைத்து கொண்டான் விஷ்ணு. கொஞ்சம் திடம் வந்தது. இதே திடத்தை பல்லவிக்கும் கொடுக்க வேண்டும் என்று உள்ளுக்குள் உறுதி எடுத்து கொண்டவன், “கிளம்பலாமா..?” என, இருவரும் நடந்தனர். “ஆமா.. இன்னிக்கு நீ காலேஜ் போனியா..?” விஷ்ணு கொஞ்சம் யோசனையுடன் கேட்டான். “இல்லை..” “பல்லவியை வெளியே வச்சு ஏதும் மீட் பண்ணியா..?” “அப்பா கால் பண்ணியிருந்தாரா..?” ஈஷ்வர் நேரடியாக கேட்க, “இல்லை அத்தை இரண்டாவது முறை பேசும் போது மாமா சொல்றதை கேட்டு என்கிட்ட கேட்டாங்க..” “ம்ம்.. எனக்கும் கால் பண்ணியிருந்தார்.. மே பி நான் இன்னிக்கு பல்லவி ஏரியா பக்கம் சுத்தினது தெரிஞ்சிருக்கும்..” “என்ன சொல்ல போற..?” “அப்பாக்கு பொய் பிடிக்காது, சோ உண்மையை சொல்லிடணும், அதோட இப்போ எடுத்த என்னோட முடிவையும் சொல்லணும்..” “சொல்லு.. மாமாக்கு உன்மேல பல கனவு இருக்கு, அது உனக்கே தெரியும்..” “ம்ம்.. வீட்டுக்கு வரியா..?” “இல்லை சின்னுவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல போல, வீட்டுக்கு போறேன்..” அவன் பைக் எடுத்தான் விஷ்ணு. “என்ன ஆச்சு..?” ஈஷ்வர் கவலையாக கேட்க, “உங்க அத்தை சொல்றதை பார்த்தா புட் பாய்சனா தான் இருக்கும்.. போய் பார்த்துட்டு சொல்றேன்..” விஷ்ணு கிளம்ப, ஈஷ்வரும் அவனின் பைக்கில் கிளம்பினான். இரண்டாவது சிக்கனலில் இருவரும் பிரிந்து அவரவர் வீடு வந்தனர். நரசிம்மன் மகனுக்காக ஹாலிலே காத்திருந்தார். “ஈஷ்வர் வந்துட்டியா..? வா வா.. அப்பா உன்கிட்ட ஏதோ பேசணும்ன்னு ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்கார்..” கங்கா சொல்ல, “முதல்ல அவர் ரிப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிடட்டும்.. அப்பறம் பேசிக்கிறேன்..” என்றார் நரசிம்மன். “விஷ்ணு பீஸா வாங்கி கொடுத்தான் சாப்பிட்டேன்.. பேசலாம்ப்பா..” ஈஷ்வர் சொல்ல, அவன் முகம் பார்த்த நரசிம்மன், “ஆபிஸ் ரூம்க்கு போலாம்.. கங்கா.. ரெண்டு டீ கொடுத்தனுப்பு..” சில அடி நடந்தவர், “நீ எடுத்துட்டு வராத..” என்றார் மனைவியை அறிந்தவராக. “ஏன் அப்பாவும், மகனும் அப்படி என்ன பேசுறீங்கன்னு எனக்கு தெரிய வேண்டாமா..?” கங்கா சத்தமாக முணுமுணுக்க, அப்பாவும், மகனும் கதவடைத்தேவிட்டனர். “உட்காருங்க..” அவர் சோபாவில் அமர்ந்து மகனுக்கு மற்றொரு சோபா காட்டினார். “இருக்கட்டும்ப்பா.. சொல்லுங்க..” “உட்காருங்க..” நரசிம்மன் மீண்டும் சொல்ல, அமர்ந்தான். “காலேஜ் நேரத்துல உங்களை நம்ம தொகுதி பக்கமா பார்த்திருக்காங்க..” நரசிம்மன் நேரடியாக கேட்டார். “நான் இன்னிக்கு காலேஜ் போகல..” “ஏன் என்கிட்ட சொல்லலை..?” ஈஷ்வர் அமைதி காத்தான். “அப்பாகிட்ட சொல்ல முடியாத ஏதோ ஒன்னு செஞ்சிட்டு இருக்கீங்க..” சொல்லவிட வேண்டும் என்ற முடிவோடு தான் வந்தான். ஆனால் அப்பா எனும் ஆளுமை முன் வார்த்தை வரவில்லை. “இப்போவாவது சொல்வீங்களா..?” “உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லைப்பா.. ஆனா..” “அதான் நானே சொல்லிட்டேனே சொல்ல முடியாத வேலை செஞ்சிட்டு இருக்கீங்கன்னு.. யார் பொண்ணு..?” “யோசிக்காம சொல்லுங்க.. நீங்க இன்னிக்கு அப்படி சுத்துனதுலே தெரியுது அவங்க தான் என் மருமகன்னு.. என் அரசியல் போக்கை எதுவும் காட்ட மாட்டேன், தயங்காம சொல்லுங்க..” “பல்லவி..” “ம்ம்.. என்ன பண்றாங்க..?” அவளை பற்றி, குடும்பத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். முற்றும் முழுதாக விசாரிக்க வேண்டும் என்று குறித்து கொண்டார். “பல்லவி என்னை இன்னும் அக்சப்ட் பண்ணிக்கல..” ஈஷ்வர் சொல்ல, “ஏன்..?” “நமக்குள்ள சரிவராது நினைக்கிறா..” “ஓஹ்.. இந்த அரசியல்வாதி மகன் வேண்டாம்..” நரசிம்மன் பட்டென சொன்னார். ஈஷ்வர் அமைதியாக இருந்தான். “இதுக்கு தான் சொல்றேன் படிச்சு நல்ல வேலையில உட்காருங்கன்னு.. என்னோட அடையாளம் உங்களுக்கு என்ன கொடுக்கும்..? ஒன்னுமில்லை..” நரசிம்மன் சொல்ல, ஈஷ்வர் அவர் இதை தான் சொல்வார் என்று தெரிந்து அமர்ந்திருந்தான். “ நீங்க நல்லா படிக்கணும், படிச்சு ஒரு பெரிய கௌரவமான, பேர் சொல்ற வேலை பார்க்கணும், அது தான் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன், ஆனா நீங்க..?” வருத்தத்தோடு பேச, ஈஷ்வருக்கே அவன் தவறு புரிய தானே செய்தது. “நீங்களும், உங்க தங்கச்சியும் என்னை போல இந்த அரசியல்ல விழுகாம, உங்க அத்தை குடும்பம் மாதிரி படிச்சு, ஒரு அந்தஸ்தான வாழ்க்கை வாழுங்கன்னு கேட்கிறேன்..” “உங்களுக்கு தெரியும் இல்லை, என்ன தான் நான் MLA, ஆட்சி வந்ததுக்கு அப்பறம் மினிஸ்டர்ன்னாலும் வெளியே மக்கள் கிட்ட எனக்கான மரியாதை.. அப்படி ஒன்னு இல்லவே இல்லை, தலைவா, அய்யா, அண்ணேன்னு என்கூட இருக்கிற கட்சிகாரனுங்களே எப்போ என் முதுகுல குத்தலாம் பார்த்துட்டு இருக்காங்க..” “ஏதோ என்னால முடிஞ்சவரை இந்த தொகுதிக்கு நல்லது பண்றதால தான் தொடர்ந்து MLA வா இருக்கேன், ஆனா இங்கேயும் என் கட்சி ஆளுங்களே என் பேர் சொல்லி பணம் வாங்குறாங்க, அடாவடி பண்றாங்க, கேட்க முடியாது, கேட்டா அவன் ஒரு பத்து பேரை சேர்த்து பிரச்சனை பண்ணுவான், மேலிடத்துல நமக்கு தான் அட்வைஸ் பண்ணுவாங்க, எந்நேரமும் ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கை..”