அத்தியாயம் – 2
அந்த உயர்தர உணவகத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. அத்தனை களேபரத்திலும், ஒருத்தி மட்டும் இருவர் அமரும் ஒரு மேசையில், கண்ணாடி ஜன்னல் வழியே கீழே சென்று கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவனின் வரவுக்காக.
ஏதோ உணர்வு உந்த,  திரும்பியவள் கண்டது அவளை நோக்கி வரும் அவனைத்தான். இறுதியாக ஈர உடையில் மனைவி பிள்ளைக்கு சாங்கியம் செய்து, துக்கம் தாளாமல் கதறி அழுது மனைவியின் காலடியில் விழுந்தவனைத்தான். அப்போதை விட, உடல் இப்போது முறுக்கேறியிருந்தது. முகம் சற்று கடினப்பட்டிருந்தது.அவளைப் பார்த்த பார்வையை மாற்றாமல் அருகே வந்தான்.
எழப் போனவளை அமரச் சொல்லி சைகை செய்து, அவள் எதிரே அமர்ந்தான். அவன் என்ன யோசிக்கறான் என்பது முகத்தில் கடுகளவும் தெரியவில்லை. ஒரு அறிமுக சிரிப்பு கூட உதிரவில்லை. என்ன பேச என்று தெரியாமல் வானதியும் அவனைப் பார்த்தாள். அருகே பார்க்க ஓரிரு வெள்ளை முடி தெரிந்தது. முப்பதுகளில் மத்தியில் இருக்கும் ஆடவன். அப்போதே அழகன், இன்று அறிவின் முதிர்ச்சியும் சேர, இன்னும் அசத்தலாக இருந்தான். வினோத்தின் கண்களும் அவளை எடை போட்ட படிதான் இருந்தது.
“ஹலோ வினோத். எப்படியிருக்கீங்க?”, வானதியே பேச்சைத் துவங்கினாள்.
“ம்ம்…ஹாய். ஏன்?”, என்று கேட்டான். அவனது குரலின் வசீகரம் சற்றும் குறையவில்லை. டீப் வாய்ஸ். ஸ்வேதா அதைப் பற்றி அப்படி சிலாகிப்பாள். எண்ணம் போன திசையை உணர்ந்து அதை தடுத்துப் பிடித்தவள்,
“ஏன்… உங்களை கல்யாணம் செய்ய சரின்னு சொன்னேன் கேட்கறீங்களா?”
“ம்ம்… இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிகிட்டு இருந்தவ, திடீர்னு எங்க அம்மா பேச்சு வாக்கில சொன்னதுக்கு நீ சம்மதிச்சிருக்க? வொய்?”, அதுதான் அவனை இரண்டு நாட்களாக குடைந்துகொண்டிருந்தது.
அவன் அப்போதும் அன்னையிடம் மறுத்தான். ஆனால் இந்த முறை சம்பூர்ணம் கேட்பதாக இல்லை. உன்னையும் ஸ்வேதாவையும் பற்றி நன்றாகத் தெரிந்தவள்.  கண்டிப்பாக பேசு என்று அனத்தியிருந்தார். அதனாலேயே இந்த சந்திப்பு.
“ம்ம்… அது…. சொல்றேன். முதல்ல எதாவது ஆர்டர் செய்யலாமா? “
“ம்ப்ச்… சரி …எதையாவது சீக்கிரம் சொல்லு.”, விட்டேத்தியாக வந்தது பதில்.
அதற்கு எந்த எதிர்ப்பும் இன்றி, “ சேவ் பூரி, பேபி கார்ன் சூப் ஓகேவா?”, என்று மெனுவைப் பார்த்துவிட்டு வினோத்திடம் கேட்டாள். அவன் சம்மதமாக தலையசைத்ததும், ஆர்டர் கொடுத்துவிட்டு, ஒரு ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டு,
“நான் சொல்ல வரதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க ப்ளீஸ். அப்பறம் முடிவு உங்க கையிலதான்.”, நிறுத்தினாள். வினோத் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, மெல்ல பார்வையை தழைத்தவள்,
“எனக்கும் கல்யாணம் செய்ய இஷ்டமில்லை. ஆனா அப்பா அம்மா கஷ்டப்படறதைப் பார்த்தா ரொம்ப கில்ட்டியா இருக்கு.  அவங்களுக்காக நான் கல்யாணம் செய்தாலும், வரப் போறவனுக்கு ஒரு நல்ல மனைவியா இருக்க மாட்டேன். வீணா அவன் லைப்பும் கெடும்.”, நிமிர்ந்து அவனைப் பார்க்க, சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆன்ட்டி, நீங்க ஸ்வேதா ஞாபகமாவே இருக்கறதா சொன்னாங்க. உங்களுக்கும் கல்யாணம் செய்யணும்னு ப்ரெஷர். அதுதான்…”, மீண்டும் வினோத்தைப் பார்க்க,  ‘அதுனால ?’, என்று கேட்பது போல, ஒரு புருவம் மட்டுமே உயர்ந்தது.
தண்ணீரை ஒரு மிடறு குடித்தவள், “ அது… வீட்ல ஒரு வரன் பார்த்து என்னை ஃபோர்ஸ் செஞ்சிகிட்டு இருந்த போதுதான், ஆன்ட்டியை பார்த்தேன். அன்னிக்கு சாயந்திரம், ஒரு வேகத்துல உங்க பேரை சொல்லிட்டேன். அப்பறம் யோசிச்சபோதான், இது நம்ம இரண்டு பேருக்குமே பெனெஃபிட்டா இருக்கும்னு தோணுச்சு.”
நிறுத்தி அவனை நோக்க, இந்த முறை, ‘மேலே சொல்லு’, என்பதாக கையால் சைகை செய்தான் வினோத்.
‘எல்லாம் கேட்டுவிட்டு காறி துப்பிவிட்டு போகப்போறானோ?’, என்ற அச்சம் நெஞ்சை பிசைந்தாலும், “ வந்து …எனக்கு புருஷன் வேண்டாம். உங்களுக்கு மனைவின்னு யாரும் வேணாம். ஊருக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு, நாம ஃபரெண்ட்ஸ், ஹௌஸ் மேட்ஸ் மாதிரி இருந்துக்கலாம்னு….”, அவனின் ‘லூசா நீ’, என்ற பார்வையில் குரல் தேய்ந்து நின்றது வானதிக்கு.
இரண்டு நாட்களாக யோசிக்கும்போது சிறப்பான திட்டமாக தெரிந்தது, இப்போது அபத்தமாக இருந்தது.
சிப்பந்தி, அவர்கள் ஆர்டரை கொண்டு வந்து வைக்கவும், ஒரு நிமிட அமைதி.
“சாப்பிடு.”, என்ற வினோத், “நீ சின்ன பொண்ணில்லை. ம்ம்.. சவுத் ஜோன்னுக்கு உங்க கம்பனில நீதான் மானேஜர்னு சொன்னாங்க அம்மா. அப்பறம் எப்படி இந்த மாதிரி ஒரு ஐடியா?”, குரலில் ஒரு எள்ளல் இருக்கிறதா என்று கவனித்தால் அப்படி எதுவும் தெரியவில்லை வானதிக்கு.
“ம்ம்… நான் சொன்னது ஒரு கோர்வையா இல்லாம இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும். அவங்க காலத்துக்கு அப்பறம் தனியா இருந்துடுவோம்னு ஒரு பயம் பெத்தவங்களுக்கு. யாரையாவது பிடிச்சு கட்டி வெச்சு கஷ்டப்படறதைவிட, இது அவங்களுக்கு ஒரு திருப்தி. நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். ஒரே வீட்ல இருக்கோம். நம்ம வசதிக்கான ரூல்ஸ்படி வாழ்ந்துக்கலாம். அப்படி தோணவும்தான் இது சரி வரும்னு நினைச்சேன். உங்களுக்கு அப்படி தோணலைன்னா, நீங்க தாராளமா வேண்டாம்னு சொல்லுங்க. “
“சொல்லிட்டு? எங்க அம்மா இதை விட்டா எனக்கு கல்யாணமே செய்ய வாய்ப்பிருக்காதுன்னு நினைக்கறாங்க. உன் கேனத்தனமான யோசனைக்கு என்னை பலிகடாவாக்கியிருக்க.”, வினோத்தின் குரலில் கடினம் வந்தது.
அவன் ‘கேனத்தனமான ஐடியா’, என்று கூறியது அவள் தன்மானத்தை உசுப்பிவிட.. “என்ன …என்ன கேனத்தனமா இருக்கு? “, என்று கேட்டாள்.
“முதல்ல, நீ ஏன் கல்யாணம் வேண்டாங்கற?”, அவன் கூர் பார்வை தாக்கியது.
பார்வையை தழைத்தவள், “வேண்டாம். “ என்றாள்.
“சரி… நாள பின்ன, உனக்கு வேற யாரையும் பிடிச்சா? தேவையில்லாத சிக்கல் வரும்.”
“இல்லை. அப்படியெல்லாம் வாய்ப்பில்லை. அப்படி எதாவது நடந்துடாதான்னுதான் இத்தனை வருஷம் இருந்தேன். “, சற்று விரக்தியான குரலில் சொல்லவும்,
“ம்ம்.. வானதி… உனக்கு எதுவும் ப்ராப்ளம்னா, என்னாலான உதவி செய்யறேன். உன் வாழ்க்கை எதுக்கு வீணடிக்கற?”, வினோத் குரலில் ஒரு பரிதாபம் தெரிய,
“ஒரு புண்ணாக்கும் இல்லை. நானே சிங்கப்பூர்ல கவுன்சலிங் போனேன். என் அறிவுக்கும் மனசுக்குமான போராட்டம். எதாவது ஒரு பக்கம் நான் சாயணும். ஆயிரம் ஆயிரம் டாலரா குடுத்ததுக்கு, ப்ரச்சனைக்கு தீர்வு உன் கையிலதான்னு சொல்லிட்டாங்க. ப்ளீஸ், எங்க வீட்ல கூட நான் சொன்னதில்லை. உங்க கிட்ட கூட இப்ப இந்த பேச்சு வரவும் சொல்ல வேண்டியதா போச்சு. மிச்ச எல்லா வகையிலையும் நான் ஓகேதான். என்னை கேட்கறீங்களே….ஏன் உங்களுக்கு வேற யாரையும் பிடிக்கலாமே? அப்படி இருந்தா, ம்யூசுவலா டைவர்ஸ் பண்ணிக்கலாம். “, வேகமாய் பதில் கூறினாள். நுனி மூக்கு சிவந்தது.
அவள் வேகம் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தி, உதட்டை லேசாகப் பிதுக்கியவன், “ சரி… கல்யாணம் முடிஞ்சதும் குழந்தை எங்கன்னு கேட்பாங்களே, அதுக்கு என்ன செய்யப் போற?”, அடுத்த ப்ரச்சனையை வைத்தான்.
“ம்ம்.. இது நான் யோசிச்சேன். எனக்கு குழந்தை பிறக்க சிக்கல்னு சொல்லிக்கலாம். கொஞ்ச வருஷம் ட்ரீட்மெண்ட் அது இதுன்னு சொல்லிட்டு, இப்ப வயசாகிடுச்சு, இனி கஷ்டம்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லிக்கலாம். வருத்தப்படுவாங்கதான். மே பீ, அந்த நேரம் உங்களுக்கும் ஓக்கேன்னா எதாவது குழந்தை தத்தெடுத்துக்கலாம்.”
“ஒரு முடிவோடதான் வந்திருக்க போல?”, கொஞ்சம் நக்கல் தொனித்தது.
“கல்யாணம் முடிச்சா, நம்ம வசதிப்படி இருக்கலாம்னு சொன்னியே? எங்கம்மா என் கூட இருந்தா, எப்படி நாம தனித்தனியா இருக்க முடியும் ? ஒரே ரூம்ல இருக்கணும்.இல்லை அவங்ககிட்ட உண்மையை சொல்லணும். இது ஆகாது.”
“ம்ம்…அது… ஒரு ரூம் என் ஆபிஸ் ரூம் மாதிரி பக்கத்துலயே செட் பண்ணிக்கறேன். அங்கையும் ஒரு பெட் இருக்கட்டும். ஆன்ட்டி நம்ம கூட இருக்கும்போது, உங்க ரூம்ல  ஒரு சோஃபா பெட் இருக்கே, அதுல நான் படுத்துக்கறேன்.”, சற்று தயங்கினாலும் கூறிவிட்டாள்.
“என் பெட் ரூம்ல என்ன இருக்குன்னு உனக்கு எப்படி தெரியும்?”, ஆச்சரியமாகக் கேட்டான் வினோத்.
“இல்லை… ஸ்வேதா சீமந்தம் முடிச்சு, அவளோட அலங்காரம் கலைக்க நான் ஒரு வாட்டி வந்திருக்கேன். அப்ப அந்த சோஃபா பெட்லதான் உட்கார்ந்தேன். “, சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்க, இருள் சூழ்ந்திருந்தது.
“சாரி… சாரி… நீங்க கேட்கவும் சொன்னேன். அதுவும், இதெல்லாம் நான் ஏற்கனவே யோசிச்சேன்னு புரிய வைக்கத்தான்….”, வானதி இழுக்கவும்,
“இதெல்லாம் யோசிச்சியே, வேற ஒருத்தியை என் மனைவின்னு சொல்ல நான் விருப்பப்படமாட்டேன்னு யோசிக்கலையா?”, சீறினான்.
“ம்ம்… அதுவும் யோசிச்சேன். நான் என் பேரைக்கூட கல்யாணத்துக்கு அப்பறம் மாத்திக்கலை. எங்க அப்பா இனிஷியலே இருக்கட்டும். கேட்டாலும், பாஸ்போர்ட், ஆதார் எல்லா இடத்துலையும் மாத்தணும். செய்யலாம் செய்யலாம்னு சொல்லிக்கலாம். உங்க அம்மாக்காக நீங்க சில இடத்துல வாய் வார்த்தையா என்னை மனைவின்னு சொல்ல வேண்டியிருக்கலாம், அதுகூட முடியாதுன்னா…. ஐடியா விட்டுடலாம்.”, ரோஷமாக சொல்லி முடித்தாள்.
“இவ்ளோ தூரம் யோசிச்சு எதுக்கு என்னை கல்யாணம் செய்யணும் வானதி? வேற யாரையவது கேட்டிருக்கலாமே?”, யோசனையாகவே கேட்டான் வினோத்.
“ம்ப்ச்… வேற யார்கிட்ட கேட்க? இதுவும், ஆன்ட்டி நீங்க ஸ்வேதா ஞாபகமாவே இருக்கறதா சொல்லவும்தான் தோணுச்சு. பிடிக்கலைன்னா நானே கூட சொல்லிடறேன்.  நாங்க பேசினோம். சரி வரலைன்னு. நீங்க பழி ஏத்துக்க வேண்டாம்.”, வானதி சொல்லவும், மீண்டும் சிற்றே சிவக்கும் அவளது நுனி மூக்குதான் கண்ணில் பட்டது  வினோத்திற்கு.
“நீ என்ன சொன்னாலும், எங்கம்மா என்னைத்தான் அதுக்கு காரணம்னு சொல்லுவாங்க.”, ஒரு பெருமூச்சு ஒன்று வந்தது அவனிடமிருந்து.