செவி அடைந்த இரைச்சலை எரிச்சலுடன் எதிர்கொண்ட சக்திவேலன் கண்களை தேய்த்துக்கொண்டு புரண்டு படுத்தான். நொடி நேரம் சென்றிருக்கும் பட்டென்று எழுந்தான்.
“பாப்பாக்கு இன்னைக்கு ஒன்பாட் ரைஸ் கொடுக்கணும். சுண்டல் ஸ்நாக்ஸ் பண்ணனும்.” என்று தனக்குள் பேசிக்கொண்டே எழுந்தவன் மணியைப் பார்க்க, அது ஏழரை நெருங்கிக்கொண்டிருந்தது. நேரமாகிவிட்டது என்று தலையில் அடித்துக்கொண்டவனுக்கு அப்போதுதான் நிதர்சனம் உரைக்க, அப்படியே பொத்தென்று மெத்தையில் அமர்ந்தான். இரவே கிளம்பி அவன் தற்போது தங்கியிருக்கும் வீட்டிற்கு மூவருமாக வந்தாகிற்று.
சுற்றம் கருத்தில் பதிய, உறக்கத்தில் கேட்ட இரைச்சல் தன் வீட்டிலிருந்து வருவது புரிந்தது. கண்களை சுருக்கிக்கொண்டு அவன் எழுந்து சென்று பார்க்க, கூடத்தில் இருக்கும் மேசையில் சம்மனமிட்டு அமர்ந்திருந்த கயல்விழி கைகளில் ஒரு கரண்டியும் தம்ளரும் ட்ரம்சாய் மாறியிருந்தது. சமையல் கூடத்திலிருந்த அழகி ஏதோ பாட அதற்கு தாளமென மகள் கரண்டியையும் தம்ளரையும் மேசையில் தட்ட, இசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. வரிகளுக்கு நடுவே அழகி கொடுக்கும் இடைவெளியில் ராகம் இழுத்தாள் கயல்விழி. செவியை கொடுமைப்படுத்தும் இசை எனினும் கண்களுக்கு விருந்தாய் இருந்தது அக்காட்சி. அவனையும் மீறிக்கொண்டு இதழ்களில் வந்தமர்ந்தது புன்னகை.
“ப்பா… குட் மார்னிங்.” இவனை கவனித்த மகள் காலை வணக்கம் வைக்க, அவளிடமிருந்த உற்சாகம் அவனையும் தொற்றிக்கொண்டது.
அவளை தூக்கி கொஞ்சி இறக்கிவிட்டவன், “இன்னைக்கு சீக்கிரமே கிளம்பிட்டீங்களே பாப்பா.”
இவன் பார்ப்பதற்காக காத்திருந்தவள் போல் அவன் பார்வை விழுந்த நொடி விரிந்த புன்னகையுடன் காலை வணக்கம் சொன்னாள் அவளும். அவளைக் கண்டதும் சுருங்க இருந்த அவன் இதழ்கள் மீண்டு லேசாக புன்னகைத்தது. அதற்கே இறக்கையின்றி பறந்தவள் ஆவி பறக்கும் காபியை எடுத்துச் சென்று நீட்டினாள். ஒன்றும் சொல்லாமல் அதனை வாங்கி வைத்துவிட்டு முகம் கழுவி வந்து குடித்தான். தொண்டையில் காபி சூடாய் இறங்க இறங்க உள்ளம் அமைதி கொண்டது. ஐந்து வருடங்கள் கழித்த இயல்பானதொரு காலையாக தோன்றியது.
என்றைக்கும் இல்லாத நிதானம் மனைவியின் புண்ணியத்தில் கிட்ட, அவசரமின்றி கிளம்பி வந்தான். மேசையில் அமர வைத்து கயல்விழிக்கு காலை உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள் அழகுராணி. இவன் வரவும் இயல்பாய், “இதுல பூரி கிழங்கு இருக்கு. போட்டுக்கோங்க.” என ஹாட்பாக்சை நகர்த்தி வைத்தாள்.
ஒன்றும் சொல்லாமல் எடுத்து வைத்து சாப்பிட்டவனுக்கு அமிர்தமாய் இறங்கியது.
“ம்மா நீங்க எப்ப சாப்டுவீங்க? தனியாவா?” எப்போதும் தந்தையும் மகளும் சேர்ந்தே உண்டு பழக்கம் என்பதால் இப்போது புதிதாக வந்திருக்கும் அம்மா தாங்கள் சென்ற பின் தனியாக சாப்பிடுவாளோ என்று யோசித்துக் கேட்டது அழகுராணியை உருக்கியது. தனக்காக மகள் யோசிக்கிறாள் என்பதே அத்தனை இதமாய் இருக்க, “உங்களுக்கு நேரம் ஆகுதுல்ல நீங்க கிளம்புனதும் அம்மா சாப்பிடுறேன்டா.”
“எங்களோடவே சாப்பிடுங்க.” என்ற கயல்விழி தானாக ஒரு பூரியை பிய்த்து அவள் உதட்டருகே நீட்டினாள். நெகிழ்ந்த அழகுராணி கண்களில் கண்ணீரும் இதழ்களில் சிரிப்புமாய் வாங்கிக்கொண்டாள்.
“அப்பாவுக்கு இப்படி ஊட்டிவிடுவேன்.” என பெருமையாக சொல்லிக்கொண்டாள்.
பள்ளிக்கு கிளம்பும் நேரம் வரவும் பையை எடுத்துக்கொண்டு சக்திவேலன் கிளம்ப, பின்னோடு மகளை தூக்கி வந்து வண்டியில் அமரவைத்து கையசைத்தாள் அழகுராணி. எங்கோ ஒரு ஓரத்தில் நிறைவாய் உணர்ந்தான் சக்திவேலன். காட்டிக்கொள்ளவில்லை, சொல்லிக்கொள்ளவில்லை. அப்படியே பள்ளிக்கு கிளம்பிவிட்டான். செல்லும் வழியெங்கும் விழிப்புடன் தங்களை எவரும் தொடர்கிறார்களா என கண்காணிப்பு இயல்பாகவே வந்தமர்ந்துகொண்டது. அப்படி யாரும் சந்தேகப்படும்படியாக தென்படவில்லை எனினும் மனது சமன்படவில்லை. ஒருவித எச்சரிக்கை உணர்வோடு அந்நாளை கடத்த, வீட்டினில் சாம்பிராணி மணம் கவர மங்களகரமாய் வரவேற்றாள் அழகி. புருவம் உயர்த்திப் பார்த்தவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து கவனித்துவிட்டு யோசனையுடன் கணவனிடம் வந்தாள்.
என்ன என்பது போல் இவன் புருவம் உயர்த்த,
“உங்க ஸ்கூல்ல வேலை பாக்குறாளே நிலா… அவளை பாத்தீங்களா இன்னைக்கு?” எனக் கேட்க, அவளை பற்றி ஏன் விசாரிக்கிறாள் என புருவம் சுருங்கியது இவனுக்கு.
“கஷ்டப்படுற பொண்ணு யாருமில்லைனு சொன்னாளேனு காப்பாத்தி கூட்டிட்டு வந்தது மட்டுமில்லாம ஸ்கூல்ல வேலை வாங்கிக் கொடுத்தேன். கடைசியில எங்களை பிடிக்கத்தான் என்கிட்ட வந்திருப்பாளோனு ராஜாவுக்கு ரவிக்கு எல்லாம் சந்தேகம்.” என சொல்ல அதிர்ச்சியாக இருந்தது சக்திவேலனுக்கு.
படங்களில் செய்தித்தாள்களில் பார்த்து படித்து அறிந்த உளவு பார்க்கும் விஷயம் நேரடியாகவே தன்னருகில் நடக்கையில் வரும் அதிர்வு அது.
“ஹார்பர்ல வச்சி நடந்த போலீஸ் அரெஸ்ட்டுக்கு அப்புறம் ஒரு ரெண்டு நாள் குப்பத்துல இருந்தா அதுக்கு அப்புறம் ஆள் மிஸ்ஸிங்.” என அவள் தொடரவும் இவனுக்கு கேள்விகள் முளைத்தது.
“ராஜா, ரவி யாரு? சக்தி அரெஸ்ட்ன்னு நியூஸ் வந்துச்சே அது உன் சம்மந்தப்பட்டதா? உன்னை அரெஸ்ட் பண்ணனும்னு வந்தவங்க ஏன் வேற யாரையோ அரெஸ்ட் பண்ணனும்?”
பரவாயில்லை முற்றிலும் ஒதுங்காமல் தன்னை பற்றி தெரிந்துகொள்ள முயல்கிறானே என ஆசுவாசம் கொண்ட மனைவி எங்கு துவங்குவது என யோசித்தாள். அவள் சிந்தனை ஓட்டத்தை தடை செய்வது போல் சக்திவேலன் அலைபேசி அடிக்க, எடுத்துப் பார்த்தான். சுவாதி அழைத்திருந்தாள். மகளை கூப்பிட்டு சொல்ல, மலர்ந்து போனது அவள் முகம்.
“அம்மா வந்ததை ஆன்ட்டிகிட்ட சொல்லவே இல்லை.” என சொல்லிக்கொண்டே அவள் அழைப்பை ஏற்று ஆன்ட்டி என்று கத்த, மகளை விழி விரித்துப் பார்த்தாள் அழகுராணி.
“என் அம்மா எங்ககூடவே வந்துட்டாங்களே.” ஆரவாரமாக பகிர்ந்த கயல்விழி கடந்த இரண்டு நாளில் நடந்த அனைத்தையும் சொல்ல, கணவனை கேள்வியாகப் பார்த்தாள் அழகி.
“முன்னாடி குடியிருந்த வீட்டு ஓனரோட பொண்ணு. பாப்பாக்கு ரொம்ப க்ளோஸ்.” என சொல்ல இயல்பாக எடுத்துக்கொண்டாள் மனைவி.
சில நிமிடங்களில் சக்திவேலனிடம் வந்து கயல்விழி அலைபேசியை நீட்ட யோசனையுடன் வாங்கி காதில் வைத்தான்.
“பட்டுன்னு இப்படி சொன்னா எப்படி?” சுவாதியின் மொத்த ஸ்ருதியும் இறங்கியிருந்தது.
“வேற எப்படி சொல்றது?” என்றவனுக்குமே மனைவியுடனான பிரிவின் காரணத்தை வெளிப்படுத்த விருப்பமில்லை. இந்தளவிற்கு வெளியே தெரிந்தால் போதுமென்று நினைத்தான்.
“இனிமே என் தேவை உங்களுக்கு இல்லைல. போகப்போக கயலும் மறந்துடுவா என்னை. இன்னைக்கே நான் போன் பண்ணலைனா இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சிருக்கவே இருக்காதுல, அவ்ளோ தான்ல…” என சுவாதி வருந்தி சொல்லவும் என்னவோ போலானது. இத்தனை வருடம் கயல்விழிக்கு துணையாய் ஆதரவாய் இருந்திருக்கிறாள். பல இக்கட்டான நேரத்தில் கைகொடுத்திருக்கிறாள். நியாயமாக தானே அழைத்து சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் அதை யோசிக்க எங்கே நேரமிருந்தது. இன்னும் இன்னும் மனைவி குறித்த குழப்பங்களும் அதனை தொடர்ந்த பாதுகாப்பு குறித்த ஐயங்களும் அவனை சுழற்றி அடிக்கிறதே. இருந்தும் இதுவும் நல்லதிற்கு என்றே தோன்றியது. சில நாட்களாக அதிக உரிமையெடுத்து சுவாதி பேசுவது போல் தெரிய, இப்போது உரிமைப்பட்டவள் வந்தபின் தேவையற்ற சிந்தனைகளுக்கு இடமில்லாமல் போய்விடுமே.
“ஃபிரீயா இருக்கும் போது இங்க வந்துட்டு போ.” என்றவன் வேறு சமாதானங்கள் சொல்லவில்லை. சுவாதிக்கு தன் எல்லை புரிந்தது போல் பட்டென நிறுத்திக்கொண்டாள்.
அழைப்பு துண்டிக்கப்பட, மனைவியை நிமிர்ந்து பார்த்தவன், “இப்போ சொல்லு.”
“எதை?”
“நிலாவை ஸ்கூல்ல பாக்கல இன்னைக்கு. அப்புறம்?”
தன் பக்க கதையை சொல்லும் முன் தன் மகளை பார்த்தாள் அழகுராணி. ஏதோ வரைந்து கொண்டிருந்தாள் கயல்விழி.
“அவ கவனிக்கமாட்டா நீ சொல்லு.”
“இல்லை… கவனிக்காத மாதிரி இருக்கு ஆனாலும் காதுல விழுமே… நைட் பேசலாமா?” குழந்தையிடம் ஒரு கண்ணும் இவனிடம் ஒன்றுமாய் அவள் தயங்க,
“சீக்கிரம் சாப்பாடு போடு.” என நேரமே உண்டு மகளை படுக்கைக்கு அழைத்து சென்றுவிட்டான். எதுவும் தெரியாமல் மண்டை வெடிப்பது போலிருக்க, பேசி முடித்துவிட வேண்டும் என்ற உந்துதல்.
“அம்மா வரலையே?” என மகள் உறங்காமல் தாயை பார்க்க, உடனே வந்து மகளின் மறுபக்கம் அமர்ந்து அவளை அணைத்துக்கொண்டாள் அழகுராணி. இருவரிடமும் வளவளத்துக்கொண்டே ஒருகட்டத்தில் உறங்கிப்போனாள் சிறியவள். அதற்காகவே காத்திருந்தவன் போல் அழகியை அழுத்தமாக பார்த்துவிட்டு வெளியேறினான்.
மகளுக்கு நன்றாக போர்த்திவிட்டு யோசனையுடன் வெளியே வந்தவள் அவனெதிரே அமர்ந்தாள். அவன் வாய் திறக்கும் முன் இவளே ஆரம்பித்தாள்.
“நாம பிரிஞ்சதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியல. கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்துச்சு. தொடர்ந்து அவங்க ஏதாவது பார்சல் கொடுத்தபடிதான் இருந்தாங்க. ஆனா ஒருகட்டத்துக்கு மேல நம்ம தங்கியிருந்த வீட்ல இருக்க முடியாத சூழல். நீங்க இல்லங்கவும் காலி பண்ண சொல்லிட்டாங்க. அப்புறம் தான் பிரச்சனையே ஆரம்பிச்சிது.” என நிறுத்தி அவள் எச்சில் கூட்டி விழுங்க, அலட்சியமாக அமர்ந்திருந்தவன் அன்னிச்சையாய் நிமிர்ந்தமர்ந்தான்.
“தனியா இருக்கேனு வீடு கொடுக்க யோசிச்சாங்க. வேற வழியே இல்லாம கிடைச்ச இடத்துல தங்க வேண்டியதாகிட்டு. அங்க தான் ராஜா அவங்க அம்மா, தங்கச்சியோட இருந்தாங்க. என்னோட நல்லா பழகுனாங்க, தனியா இருக்கேனு துணையா நின்னாங்க. எல்லாம் நல்லா போயிட்டு இருக்குறப்போ ராஜாவோட தங்கச்சியை யாரோ நாலு பேர் சேர்ந்து…” தொண்டையடைக்க அவள் பேச்சை நிறுத்திவிட, நெஞ்சம் அதிர பார்த்தான் சக்திவேலன்.
“கஞ்சா அடிச்சிட்டு என்ன பண்றோம்னு தெரியாம அவளை நாசம் பண்ணிட்டாங்க.”
“லூசா நீங்க. இவ்ளோ பெரிய விஷயம் நடந்ததுக்கு அப்புறமும் அதே கடத்தலை பண்ணிட்டு இருந்திருக்கீங்க? இந்த எழவுக்கு தான் அதை செய்யாதேன்னு சொன்னேன்.” தாள முடியாமல் கேட்டுவிட்டான் சக்திவேலன்.
விரக்தியாக சிரித்தவள், “எல்லாமே அவ்ளோ ஈஸினு நினைச்சீங்களா? போலீஸ் கேஸ்னு போக பயந்துட்டு ராஜா வீட்ல அமைதியா இருந்துட்டாங்க. அந்த நாலு பேருக்கு இது வசதியா போச்சு. திரும்ப வந்தவனுங்க வீட்ல இருந்தவங்களை அடிச்சி போட்டு அவளை தூக்கிட்டு போய்ட்டானுங்க. ராத்திரி பகல்னு அவளை தேடுனோம். கிடைக்கவே இல்லை அவ.” கண்கள் கலங்கி அந்த நாளின் நினைவுகளுக்கு சென்று வந்தாள்.
“இந்த டைமாவது போலீஸ் கிட்ட சொன்னீங்களா இல்லையா?”
“போலீஸ் கண்டுபுடிச்சிட்டாலும்…” என சலித்தவள், “இந்த கடத்தல்குள்ள என்னை இழுத்துவிட்ட அம்மாவை புடிச்சு ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டேன். அவங்க யார் யாரையோ புடிச்சி எங்களை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க, இந்த படத்துல காமிக்குற மாதிரி ரூம்குள்ள போட்டு நிறைய பொண்ணுங்களை அடைச்சு வச்சிருந்தாங்க. உனக்காக ரிஸ்க் எடுத்து கூட்டிட்டு வந்திருக்கேன், உங்க பொண்ணை மட்டும் கூட்டிட்டு போங்கன்னு சொன்னாங்க. அதுவரைக்கும் அங்க நடக்கிறது எதுவும் எங்களுக்கு புரியல. விசாரிச்சு பாத்தா இங்க இருக்க மிருகங்களுக்கு இரையானது பத்தாதுன்னு வெளிநாட்டு மிருகங்களுக்கு தீனியா போட இவளோட சேர்த்து இன்னும் பத்து பொண்ணுங்களை கடத்தி வச்சிருந்தாங்க. ஷாக் ஆகிடுச்சு. என்ன பண்றதுனு தெரியல. பத்து பொண்ணுங்க மாட்டிட்டு இருக்குறப்போ நம்ம பொண்ணை மட்டும் எப்படி கூட்டிட்டு போறதுனு நான் யோசிச்சிட்டு நிக்குற நேரம் ராஜா அவர் தங்கச்சியை போய் எழுப்புனார். எழுந்திருக்கவே இல்லை அவ. நம்மள காப்பாத்த யார் வரப்போறா இனி வாழ்ந்து என்ன பண்ண போறோம்னு நினைச்சிட்டா போல, உயிரை மாய்ச்சுகிட்டா…”
“இன்னும் கொஞ்ச முன்னாடியே கண்டுபுடிச்சி போயிருந்தா அவளை காப்பாத்திருக்கலாம். உடைஞ்சி போன அந்த நேரமும் அங்க இருக்குற எல்லாருமே என் தங்கச்சிங்கதான் எல்லாரையும் விட்டுருங்கனு ராஜா கேட்டாரு. ஒருத்தரை தான் கூட்டிட்டு போக முடியும்னு அவங்க ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. ஏதாவது மேஜிக் நடந்து அங்கிருக்கிற எல்லாரையும் காப்பாத்த முடியுமான்னு நாங்க பாத்திட்டு இருக்குறப்போ போலீஸ் வந்தாங்க. யாரோ தகவல் கொடுத்து காப்பாத்த வந்திருப்பாங்கனு பாத்தா மாமூல் வாங்க வந்திருந்தாங்க.” என்ற சக்தியின் முகத்தினில் வெறுப்பு மண்டிக்கிடந்தது.
“பெரிய இடத்து விவகாரம் ஒன்னும் பண்ண முடியாதுன்னு அவங்க ராஜாகிட்ட கை விரிச்சப்போ வந்திருந்த போலீஸ்ல ஒருத்தருக்கு நான் செஞ்ச வேலை வச்சி என்னை அடையாளம் தெரிஞ்சிருக்கு. அவங்களுக்குள்ள பேசி எனக்காக இறங்கி வர்றதா சொன்னாங்க, பதிலுக்கு பெரிய தொகை எதிர்பாத்தாங்க. நீங்க போனதுக்கு அப்புறம் அந்த கடத்தல் மூலமா வந்த பணம் இருந்துச்சு அப்படியே கொடுத்து அந்த பொண்ணுங்களை கூட்டிட்டு வந்துட்டோம். கேஸை வேற மாதிரி எழுதிக்குறோம் எதுக்கும் நீங்க பாதுகாப்பா இருந்துக்கோங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.
முதல்ல உங்களுக்கு அப்புறம் அந்த பொண்ணுங்களுக்குன்னு ஏதோ ஒரு வகையில இந்த கடத்தல் உபயோகப்படுதுனு தோணுச்சு. இந்த கடத்தலை நான் பண்ணலைனாலும் வேற யாரும் பண்ணுவாங்க அதே நாங்க காப்பாத்த நினைக்குற மாதிரி எல்லாரும் நினைக்க மாட்டாங்கல்ல? சமூகத்துக்கு கெடுதல் பண்ணாலும் அது மூலமா ஒரு நல்லது பண்ண முடியுங்கும் போது அதை ஏன் நாம விடணும். எப்படியும் விட நினைச்சாலும் முடியாது, நம்மாள முடிஞ்ச நல்லதை பண்ணிட்டு போலாமேன்னு ஒரு குறிக்கோளோட அந்த வேலையை செய்ய துணிஞ்சேன்.
கொஞ்ச கொஞ்சமா என்மூலமா அந்த பொண்ணுங்க வெளில வந்தது அவங்கள கடத்துனவங்களுக்கு தெரிஞ்சி என்கிட்ட வந்தாங்க. எனக்கு சப்போர்ட்டா இருக்குற கடத்தல் கும்பலை வச்சி அவங்களை சமாளிச்சேன். நூத்துல ஒண்ணா இல்லாம எனக்குன்னு ஒரு இடம், அதிகாரம் வேணும்னு கடத்தலை பெருசா பண்ண ஆரம்பிச்சேன். ராஜா எனக்கு துணையா நின்னாரு. ஒருகட்டத்துல அந்த ஊர்ல இருந்தா பெருசா எதுவும் பண்ண முடியாதுனு தோணுச்சு. இந்த ஊருக்கு வந்தோம். என்னால முடிஞ்ச உதவியை தேவைப்படுறவங்களுக்கு செஞ்சு என் பக்கத்துல வச்சிக்கிட்டேன்.
அரசியலுக்கு போகணும்னுற என்ணமெல்லாம் இல்லை. அரசியல் பலம் இருந்தா இந்த ஆள்கடத்தலை இன்னும் கட்டுப்படுத்த முடியும்னு தோணுச்சு அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருந்தோம். அதுக்குள்ள நீங்க இங்க வந்து, அவங்க எனக்கு ஸ்கெட்ச் போட்டு கடைசியில என் பேர்ல இருக்குற இன்னொரு ஆளை உள்ள இறக்க வேண்டியதா போச்சு. நாங்க சொன்ன மாதிரி மாட்டுன அந்த சக்தி சென்ட்ரல்ல இருக்குற ஒரு மினிஸ்ட்டரை கைகாட்டவும் அதை ஆப் பண்ண இப்போ பதவி என்னை தேடி வருது.” என தன் அந்த வருட கதையை சுருக்கமாக சொன்னாள்.
இடையில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், அவளையே வேட்டையாட பார்த்த மிருகங்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து இந்த ஊருக்கு வந்து அழுத்தமாக காலூன்றியது என தன் இருண்ட பக்கங்களை அறவே தவிர்த்தாள் அழகுராணி. அதெல்லாம் தன்னோடே போகட்டும் கணவனின் நிம்மதி கெட வேண்டாம் என்றெண்ணியபடி அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் சொல்லிய செய்தியில் கொஞ்சம் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான்.
கெடுதலிலும் நன்மை செய்கிறாள் என மனைவியின் நல்ல பக்கங்களை பார்க்கவா இல்லை அந்த நல்லதை செய்யவே சாமானியாய் இருந்தால் போதாது இதுபோல் ஏதேனும் பின்புலம் வேண்டும் என அதற்காகவே துணிந்து கடத்தும் செயலை ஆதரிப்பதா என குழப்ப மேகம் சூழ, மனதில் மண்டியிருந்த வெறுப்பின் வீரியம் என்னவோ சற்று மட்டுப்பட்டது என தான் சொல்ல வேண்டும்.