*21*

விடுமுறை நாளான அன்று பிரிக்கப்படாமல் இருந்த பொருட்களை அட்டைப்பெட்டியில் இருந்து எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தான் சக்திவேலன். மனதின் ஓரத்தில் வண்டாய் குடைந்து கொண்டிருந்தது மனைவியின் நினைவுகள். இனி உங்களுடன் தான் இருப்பேன் என்று அத்தனை பிடிவாதமாய் வீட்டினுள் நுழைந்து உரிமையெடுத்து சமைத்துக் கொடுத்து இரவு படுக்கை வரை வந்தவள் அவளுக்கு அழைப்பு வரவும் அந்த இரவில் கிளம்பிச் சென்றாள். மறுநாள் காலை வந்து நிற்பாள் என்று பார்த்தால் வரவில்லை, சரி இரவு வருவாள் என்று காத்திருக்க அதன்பின் கண்ணில்படவே இல்லை அவள். ஒதுங்கிவிட்டாள் என்று மகிழ்வதற்கு மாறாக மனது பிசைந்தது. சில மாதங்களாக அடிக்கடி செவியடைந்த சக்தியின் செயல்களும் சில நாட்களாக கிடைத்த அவளது தரிசனமும் அவனது திடமான மனநிலையின் சமநிலையை குலைப்பதாய். சுவாதியின் குறுக்கீட்டில் இப்போது இன்னும் அதிகமாய் மனைவியின் நினைவுகள். முன்னர் அழகான நாட்களை உள்ளுக்குள் திருப்பிப்பார்த்து வாழ்ந்துகொண்டிருந்தவன் சில நாட்களாக அவளது நிகழ்கால வாழ்வை தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். திரைமறைவு தொழிலில் மட்டும் அவள் தலை கொடுக்காமல் இருந்திருந்தால் தாங்கள் குடும்பமாய் மகிழ்வாக இருந்திருப்போமோ என்று எண்ணங்கள் தறிகெட்டு ஓட, எதர்ச்சையாக விழுந்தது அவ்வார்த்தைகள்.

“தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் கும்பல் சென்னை துறைமுகத்தில் வைத்து கைது. 

ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குவாட்ஸ் பவுடரினுள் போதைப்பொருளை பதுக்கி கடத்தியுள்ளனர். கப்பலிலிருந்து படகிற்கு மாற்றி கரைக்கு எடுத்து வந்த சமயம் அதிகாரிகளுடன் மாட்டியுள்ளனர்.   

கடத்தப்பட்ட இதன் மதிப்பு சுமார் நூறு கோடி என்று சொல்லப்படும் நிலையில் அந்த கும்பலுக்கு தலைமை வகித்த சக்தி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.” என்ற செய்தி செவி அடையவும் பட்டென்று திரும்பினான் சக்திவேலன்.

கயல்விழி கையிலிருந்த தன் அலைபேசியில் இருந்துதான் அந்த தலைப்பு செய்தி வருகிறது என்று புரிந்து விரைந்து சென்று மகளிடமிருந்து பிடுங்கிப் பார்த்தான். அப்பா என்று மகள் சிணுங்கியது கூட காதில் விழவில்லை, அத்தனை தீவிரமாக திரையில் ஓடிய காணொளியில் இருந்தது அவன் கவனம். கைது செய்து அழைத்துச் செல்லப்படும் சக்தியின் முகம் துணியால் மூடப்பட்டு எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் இருந்தது. பெண் காவலர்கள் இருவர் அவளின் இருபுறமும் பிடித்துக்கொண்டு தரதரவென வேகமாக இழுத்துச் சென்றனர். முன்னேயும் பின்னேயும் சில ஊடகத்தினர் கேமராவுடன் அவர்கள் வேகத்திற்கு ஓடினர். சுற்றிலும் காவலர்கள் கூட்டமே அதிகமிருக்க சக்தியையும் இன்னும் சில ஆண்களையும் காவல்துறை வேனில் ஏற்றுவது காண்பிக்கப்பட்டது. 

“போதைப்பொருள் கடத்துவதாக புலனாய்வு துறைக்கும் போதை தடுப்பு பிரிவுக்கும் இரகசிய தகவல் வந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு கடத்தல்காரர்கள் பிடிக்கப்பட்டார்கள்.” என்ற மேலும் விவரங்கள் தெரிவிக்கப்பட மனம் படபடவென அடித்துக்கொண்டது சக்திவேலனுக்கு. அந்த காணொளியை மீண்டும் மீண்டும் ஓட்டிப்பார்த்தான். இருளில் சரிவர வெளிச்சமில்லாமல் அவள் முகம் எங்கேயும் வெளிப்படவில்லை. மனைவி பிடிபட்டுவிட்டாள் என்று உள்மனம் அடித்துச்சொல்ல, இவளாக இருக்கக்கூடாது என்று அறிவு முனங்கியது. எத்தனை முறை அந்த காணொளியை பார்த்தானோ எதுவும் அதிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளம் சோர்வுற உடலும் சோர்ந்து நாற்காலி தேடிக்கொண்டது. 

‘அங்க என்ன கஷ்டப்படுவாளோ. ஐயோ…. இப்படித்தான் என்னைக்காவது நடக்கும்னு தான வேணாம்னு சொன்னேன். தப்பு செஞ்சா தண்டனை தேடி வரும் ஓடி ஒளிய முடியாதே.’ என்று வேதனையில் வதங்கி நலுங்கியது அவன் மனது.

‘ஏன்டி உனக்கு தேவையில்லாத வேலை. என்கிட்ட எல்லாத்தையும் விட்டுட்டு வந்துறேன்னு மூச்சுக்கு முன்னூரு தடவை சொல்லிட்டு இப்படி திரும்ப அதுலையே இறங்கி இருக்கியே. உன் புத்தி ஏன் இப்படி போகுது. என்னோட அழகிக்கு இதெல்லாம் தெரியாதே.’ என்று மனதில் பிதற்றல். 

‘இவ்வளவு நாள் என் கண்ல படாம நல்லா இருந்ததான… இப்போ என்னடி இது? என்னை ஏன் இப்படி பாடாப்படுத்துற. உன்னை விடவும் முடியல வச்சிக்கவும் முடியல.’ அன்று அவள் சொன்னதை இன்று இவன் உணர்ந்தான். 

நினைவுகளில் அவளை அருகில் வைத்து, நிஜஉலகில் தொலைவில் நிறுத்தி அவளை ஒதுக்கி வைக்க முடிந்தவனால் அவளது இந்த கைதை ஏற்க முடியவில்லை. தனக்கு பிடிக்காததை செய்தாலும் எங்கோ நன்றாக இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டிருந்தவனை புரட்டிப்போட்டது போலானது. பார்வை தன்னால் மகளிடம் சென்று வந்தது. பெற்றவள் கயமையின் பலனாய் சிறைக்கு சென்றுவிட்டாள் என்ற நிதர்சனம் அறியாது எதையோ வரைந்து கொண்டிருந்தது. இப்படியொரு பெண்பிள்ளையை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் என்று கலங்கியவன் தேறிக்கொண்டான். ஆனாலும் மனது கேளாமல் மறுநாள் பள்ளி முடித்து சக்தியின் வீடிருக்கும் கடற்கரை பக்கம் சென்றுவந்தான். அவளைப் பற்றி ஏதாவது குறிப்பு கிடைக்குமா என மனதின் ஓரம் ஏற்பட்ட சிறு சஞ்சலத்திற்கு பதில் தேடி சென்றவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அந்த தெரு இயல்பாய் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தது. சக்தியின் வீடு பூட்டிக்கிடக்க யாரை கேட்பது என்று தெரியவில்லை. மனமே இன்றி அங்கிருந்து சென்றான். மறுநாளும் மனதின் உந்துதலில் மீண்டும் சக்தியை தேடி அவளிடத்திற்கு பயணப்பட்டான். அன்றும் அத்தெரு இயல்பாய் அவனை வரவேற்க, ஒரு வாரம் போல் தொடர்ந்து சக்தி வீட்டை நோட்டமிட்டவன் தன் தேடலை நிறுத்திக்கொண்டான்.

‘என்ன செஞ்சிட்டு இருக்க? பொம்பளை புள்ளையை வண்டில உக்கார வச்சி அவளை தேடுற அளவுக்கு புத்தி கெட்டுப் போச்சா. அந்த தெரு ஆளுங்க எல்லாம் எந்த மாதிரினே தெரியல, ஏதாச்சு ஆபத்து வந்தா என்ன பண்ணுவ? நீயே வாலன்டியரா போய் அங்க மாட்டிக்க பாக்கறியா? உன்னோட சேர்த்து கயலோட பாதுகாப்பு?’ என்று அறிவு வசவவும் சுதாரித்துக்கொண்டான்.

மறுநாள் பள்ளி முடிந்து வண்டி எடுத்தவன் நேராக வீட்டிற்கு விட,

“இன்னைக்கு பீச் போலையா ப்பா?” என்று ஏமாற்றமாய் கேட்டாள் பிள்ளை. பின்னே ஒரு வாரமாகவே மனைவி குறித்து விவரம் அறிந்துகொள்ள வேண்டி பள்ளி முடிந்து நேரே கடற்கரைக்கு வந்திருக்க, தினம் மணலில் வீடுகட்டி விளையாடி தண்ணீரில் கால் நனைத்து குதூகலித்த கயல்விழிக்கு இன்று கொஞ்சம் சுணக்கம்தான்.

“பழைய வீட்டை மிஸ் பண்ணியேனு கூட்டிட்டு வந்தேன் பாப்பா. இன்னைக்கு ஊஞ்சல்ல ஆடலாம்.” என்று மகளை சமாதானம் செய்து கூட்டி வந்துவிட்டான். ஆனால் அவன் மனம் சமாதானம் அடையவில்லை. என்ன முயன்றும் மனைவியின் நினைப்பை ஒதுக்கி வைக்க முடியவில்லை. நிறை குடமென விழிம்பில் நின்று அவள் நினைவுகள் தளும்பியது. `

“அப்பா பாஸ்ட்டா ஆட்டி விடு…” ஊஞ்சலில் அமர்ந்திருந்த கயல்விழி சத்தம் போட, அவன் நினைவுகளிலிருந்து வெளிவந்து மகளிடமே கவனம் செலுத்தினான். சிறிது நேரத்தில் சுவாதி அழைப்பில் வர, கயல்விழி ஊஞ்சலில் ஆடிய கதை, பள்ளியில் தோழியிடம் போட்ட சண்டை என்று அன்றைய நாளை அடுக்கிக்கொண்டிருந்தாள். பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு சுருக்கென்றது. இதெல்லாம் அழகுராணி இருந்து கேட்க வேண்டியது. அவள் இடத்தை தள்ளி நின்று சுவாதி நிரப்புகிறாள் என்ற எண்ணமே பாகற்காயாய் கசந்து முகம் சுருக்க வைத்தது. அழகுராணியிடம் சேர வேண்டிய கயல்விழியின் பாசமும் நேரமும் வேறொருவரை சேர்கிறது.  இத்தனை வருடம் இல்லாமல் இப்போது இதென்ன இப்படி செல்கிறது தன் எண்ணம் என்று தலையை உலுக்கிக்கொண்டான்.

“அப்பா ஆன்ட்டி பேசணுமாம்…” என்று சொல்லி கயல்விழி அவனிடம் அலைபேசியை கொடுக்க, பேச விருப்பமில்லாதவனாய், “ஒர்க் இருக்கு அப்புறம் பேசுறேன் சுவாதி.” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

கயல்விழி பேசவில்லையா என்பது போல் தந்தையை பார்த்து நிற்க, “சுவாதி ஆன்ட்டிகிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு இல்லை. எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லு. என்ன?” என வாஞ்சையாக பிள்ளையின் கன்னம் வருட, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தந்தைக்கு அடுத்து அவளுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்வது சுவாதிதானே, அவரிடம் எதையும் சொல்லக்கூடாதா என்று முகம் சுருங்கியது. 

ஏற்கனவே வளர்ந்த ஊரிலிருந்து பிரிந்து வந்தது, இங்கு வந்து பிடித்துப்போன வீட்டிலிருந்து பிடிவாதமாக கிளப்பி தற்போது தங்கியிருக்கும் வீட்டிற்கு கூட்டி வந்தது என விரும்பத்தகாத நிகழ்வுகள் பல தொடர்ந்து நடக்க, கயல்விழி சுணங்கினாள். பொதுவாக வளர்ந்தவர்களை விட பிள்ளைகள்தான் மாற்று சூழலை எளிதாக ஏற்றுக்கொண்டு தங்களை அதில் பொருத்திக்கொள்ளவர். இங்கு வந்தபின் கயல்விழி பொருந்திப்போக வாய்ப்பில்லாதபடி சக்திவேலன் தன்னுடனே பொத்தி பொத்தி வளர்க்க சிறகை விரித்து பறக்க விரும்பும் குழந்தையை சிறையில் அடைத்தது போலானது. இப்போது சுவாதியிடமும் அளந்து பேசு என்று வந்து நிற்க, கயல்விழியால் அமைதியாக இருக்க முடியவில்லை.  

“என்ன பாப்பா?” 

“எனக்கு ஏன் அம்மா இல்லை?” என கேட்டுவிட்டாள். அதிர்ந்து போய் சக்திவேலன் பார்க்க, 

“என் பிரென்ட் நிஷாந்தினிக்கு அம்மா இல்லைனு புது அம்மா கூட்டிட்டு வந்தாங்களாம் அவங்க அப்பா. அதுமாதிரி நீ ஏன் கூட்டிட்டு வரல.” 

வார்த்தையே வரவில்லை சக்திவேலனுக்கு. இதுநாள் வரை அம்மா பற்றி தன் மகள் கேள்வி எழுப்பியதில்லை என ஆசுவாசமும் கர்வமும் கொண்டவனுக்கு இன்று பெருத்த அடி. அம்மா பற்றி கேட்டது மட்டுமில்லாமல் இன்னொரு அம்மா வேண்டுமாமே கேள்வியே கசந்தது கடுமை ஏறியது. அழகுராணி இடத்தில் இன்னொருவளா நினைக்கவும் முடியவில்லை. 

“அப்பா.” அவன் அமைதி காக்கவும் பொறுமையின்றி அவன் கையை பிடித்துத் தொங்கினாள் கயல்விழி.

நிகழ்வுக்கு வந்தவன் மகளை சமாளிக்கும் கடமை தன்முன் இருப்பதை உணர்ந்து தன்னை தேற்றிக்கொண்டு, “உனக்கு அப்பா இருக்கேனேடா. எதுக்கு அம்மா?” என்றவனுக்கே அவன் பேச்சின் அபத்தம் புரிந்தது. சமவயது தோழிகளும் இல்லை, உற்ற உறவினர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படி யாருமில்லை எனும் போது பிள்ளை அம்மாவைத் தேடுவதுதானே இயல்பு. 

கயல்விழியின் கண்கள் கலங்கும் போல் இருந்தது ஆனாலும் சமாளித்துக்கொண்டு தந்தையிடமிருந்து நகர்ந்து சென்று அமர்ந்துகொண்டாள். பார்வை எதிரிலிருந்த சுவரை வெறிக்க, கை விரல்களை கோர்ப்பதும் பிரிப்பதுமாக ஏதோ போல் இருந்தாள். மகளின் ஆசையும் ஏக்கமும் தனிமையை தேடிப் போகும் பாங்கும் அவனது இத்தனை வருட வளர்ப்புக்கு சவால் விடுவதாய்.

“கயல்…” மனம் கேளாமல் மகளை அழைக்க, ஓடிவந்து அவன் இடையை கட்டிக்கொண்டாள் கயல்விழி. எவ்வித பேச்சுகளும் இல்லை. இருவரும் தனித்தனியாக அவர்களின் வேலையை பார்க்க இருள் படர்ந்தது. இரவு உணவு முடித்து உணர்வுகளை உலவவிட்டு இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் அணைத்தது போல் படுத்து உறங்க முற்பட, அழைப்பு மணி அடித்தது. யார் என்ற புருவ முடிச்சுடன் எழுந்து சென்று கதவை திறந்தவன் முகம் இறுகியது.

“வெளில போக வேண்டிய வேலை இருக்கு. கிளம்புறீங்களா?” என்று அவன் தன்மையாக கேட்க, 

“நீ யாரு முதல்ல? நீ கூப்பிட்டா நான் வரணுமா?” என்று எகிறினான் சக்திவேலன்.

“வந்துதான் ஆகணும்.” எதிர் இருந்தவனிடமும் கடுமை ஏறியது.

“ஆடர் போடுற வேலை எல்லாம் இங்க வேணாம்.”

“சொன்ன உடனே கிளம்பியிருந்தா நான் ஏன் இப்படி நிக்க போறேன்.” சூட்டோடு சூடாக பேச்சுவார்த்தை நீண்டது.

“நீ சொன்ன உடனே நான் கிளம்புனுமா. யாருக்காக வந்திருப்பேனு எனக்கு நல்லாவே தெரியும். பேசாம போய்டு.” என்று சக்திவேலன் மிரட்டலில் இறங்க, மசியவில்லை எதிராளி.

“அதான் தெரிஞ்சுடுச்சே. ஒழுங்கா வாங்க, சும்மா உங்களை சமாதானம் பண்ணிட்டு இருக்க எல்லாம் எனக்கு நேரமில்லை. அதுக்கு எனக்கு அவசியமுமில்லை.”

“அப்புறம் என்ன அவசியத்துக்கு என் வீட்டு கதவை தட்டுறீங்க?” மகள் இருப்பதால் வார்த்தையை பார்த்து விட்டான் சக்திவேலன்.

“என்ன பண்றது கஷ்டம்னு வரும்போது கூட நிக்க வக்கில்லாம விட்டுட்டு போன புருஷன்தான் வேணும்னு சக்தி நிக்கும் போது நான் இங்க நிக்க வேண்டியதாகிட்டு.” என்று முகத்தை கடுமையாக வைத்து ராஜா பேச, சக்திவேலன் முகமும் இறுகியது.

“வார்த்தையை பார்த்து பேசுங்க.”

“என்ன பாக்கணும்? உங்களுக்காகதானே சக்தி இதுக்குள்ள வந்துச்சு அதை எப்படி அப்படியே அம்போன்னு விட்டுட்டு போக மனசு வந்துச்சு? அதுசரி அப்படி விட்டுட்டு போனது தப்புனு இன்னைக்கு வரைக்கும் புரியாம முறுக்கிக்கிட்டு சுத்துற நீங்க எல்லாம் என்ன டீச்சரோ. நீங்கதான் வேணும்னு அங்க ஒருத்தி உக்காந்திருக்கா. என்னை பேச வைக்காம கிளம்புற வழியைப் பாருங்க.” 

ராஜாவின் குற்றச்சாட்டு சக்திவேலனை நேரடியாக தாக்க, கைமுஷ்டிகளை இறுக்கியவன் மகளை கருத்தில் கொண்டு கதவடைக்கப் போனான். அதனை முன்பே கணித்தது போல் கதவிற்கு இடையில் கால் வைத்த ராஜா, “எந்த அளவுக்கு கண்மூடித்தனமா உன் மேல பாசம் வச்சிருந்தா இத்தனை வருஷமாகியும் விட்டுட்டு போனவனுக்காக காத்திருக்கும் அந்த பொண்ணு. இன்னும் உன் புத்திக்கு உரைக்கலைல? காதலிக்க தகுதியே இல்லாதவன் மேல தான் இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் காதல் வரும் போல.” என்று ஆதங்கத்தில் வார்த்தை விட, பொறுக்கமுடியாதவனாய்,

“ஆமா விட்டுட்டு போனேன்தான். அதுக்காக ஒரேடியா என் அழகியை விட்டுட்டு போனேனு நினைச்சீங்களா? பார்சல்னு அன்னைக்கு வீட்டுக்கே ரெண்டு பேர் வந்ததுக்கு அப்புறம் கோவத்துல கிளப்புனேன்தான், ஆனா உடனே திரும்ப வந்தேன்.” என்று சொல்ல, இதென்ன புதுக்கதை என்று பார்த்தான் ராஜா.