ஒரு நிமிடம் முழுதாய் ஒரே நிமிடம் தான் அழகுராணியைக் கண்டு சக்திவேலன் தடம்புரண்டு நின்றது. மீண்டுக்கொண்டவன் நிதர்சனம் உணர்ந்து விறைத்து நிற்க, அடுத்து அவன் செய்யவிருப்பதை அனுமானித்தவள் போல் சட்டென்று வீட்டினுள் நுழைந்துவிட்டாள் அழகி. அவள் செயலில் அதிருப்தி கொண்டாலும் முந்திய சந்திப்பின் நிகழ்வில் பட்டென்று முகத்திற்கெதிரே கதவை சாற்றியது போல் இப்போது செய்ய அவன் கை உயரவில்லை. தடையாக அவன் நேசித்த அழகியாய் அவள் கண்ணெதிரே நிற்கும் நேரம் அவனை களவாடத்தான் செய்தாள். தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை கடினப்பட்டுத்தான் அகம் கொண்டு வந்து வாதிட முடிந்தது அவனால்.
“உனக்கு என்ன வேலை இங்க? யாரும் பாக்குற முன்னாடி கிளம்பு முதல்ல.”
“…” முடியாது என்பது போல் நின்றவள் அவனை கண்களில் நிரப்பி அகத்தினில் அடுக்கிக்கொண்டாள். கண்சிமிட்டாமல் தன்னை மொய்க்கும் அவள் பார்வையில் உள்ளுக்குள் சாரல் வீசத்தான் செய்தது சக்திவேலனுக்கு. அதையும் மீறி அவள் செய்துகொண்டிருக்கும் விஷயங்களை புத்தி எடுத்துரைக்க மயங்கிடவில்லை அவன்.
“ஒருதடவை சொன்னா புரியாதா… தொந்தரவு பண்ணாம கிளம்பு இங்கிருந்து.” என்று கண்டிப்புடன் கூறியவனை ஏறிட்டவள் அவனை விட்டு வீட்டை ஒருமுறை சுற்றிப்பார்த்தாள்.
நாற்காலிகளும் மேசையும் ஒரு ஓரமாய் ஒதுக்கப்பட்டு அதன் மீது அட்டைப்பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் இங்கிருந்து கிளம்ப ஆயத்தமாகிவிட்டான் என்பது புரிந்துபோக, சுணங்கிய மனதினை வெளிப்படுத்தாமல் இருக்க சிரமப்பட்டு போனாள் அழகி. எச்சிலை கூட்டி விழுங்கி தன்னைப்போல் நடுங்கும் விரல்கள் கொண்டு முன்னே விழாத முடிகளை செவிமடலின் பின் ஒதுக்குவது போல் தவிப்பை மறைத்துக்கொண்டே, “விழி தூங்குறாளா?” என்றபடி மூடியிருக்கும் அறைக்குள் செல்ல அடியெடுத்து வைக்க, குறுக்கே மறித்தான் சக்திவேலன்.
“வாசல் அந்தப்பக்கம்.” அவனின் செல்கள் அனைத்தும் அவளை வெளியேற்றுவதில் குறியாய் இருக்க மறுப்புகளும் பேச்சுகளும் அதன்படியே வந்து விழுந்தன.
இறுகிக் கிடக்கும் கணவனின் முகம் பார்த்தவள் பெருமூச்செடுத்தவளாய் உடலை தளர்த்தி அங்கேயே ஒரு ஓரமாய் சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
கிளம்பாமல் அவள் அமரவும், “ஏய்…” என்று வந்துவிட்டவனை கலங்கும் விழிகளுடன் ஏறிட்டவள், “உங்களுக்காக இந்த உலகத்தை எதிர்த்து போராட தெரிஞ்ச எனக்கு உங்களோட போராடத் தெரியல.”
தோற்றத்தில் மட்டுமல்ல உணர்வுக்குவியலிலும் அழகுராணியாய் சக்திவேலனின் காதல் மனைவியாய் மாறியிருந்தவள் தோல்வியை ஒப்புக்கொண்டது போல் அவனின் பாராமுகத்தை கையாளத்தெரியாமல் அதனை கடக்க முடியாமல், எதிர்க்கத் திராணியில்லாமல் பரிதவித்து அவள் அமர்ந்திருந்த விதம் கல்லுக்குள் ஈரமாய் அவனுள் ஊடுருவி இறுக்கத்தை தளரச் செய்தது.
“உங்களோட பாசத்தை, ஆதரவை, அரவணைப்பை மட்டுமே பார்த்த என்னால உங்களோட இந்த முகத்தை ஏத்துக்க முடியல. அப்படியே என்னை அம்போன்னு விட்டுட்டு விழியை கூட்டிட்டு போனப்போ கூட உங்க பாதுகாப்புக்காகனு என்னை நானே தேத்திகிட்டு இந்த பாதையில ஓட ஆரம்பிச்சேன். ஆனா இனி முடியும்னு தோணல. ஓட தெம்பும் இல்லை. உங்களை பாத்ததும் ஓடி வந்து தோள் சாஞ்சிக்கணும்னு தோணுது. எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு உங்கள கட்டிக்கிட்டு மாயமா மறஞ்சி கரைஞ்சி போயிடணும்னு தோணுது. கடந்து வந்த வலியெல்லாம் ஒண்ணுமேயில்லைங்குற மாதிரி ஒரு வாழ்க்கை வாழணும்னு தோணுது. என்ன செய்ய நானு?” விழிநீர் திரையிட ஏறிடுபவளை கண்டு அவன் கண்களும் கலங்குவேன் என்று நின்றது. நெகிழத் துவங்கிய மனது அவள் புறம் சாய, சக்தியாய் அவள் செய்யும் அறநெறி தவறிய கயமைகளை பிடிவாதமாய் மனதிற்குள் இருத்தி இறுக்கம் கொண்டவன்,
“பொண்ணை பெத்து வச்சிருக்கோம். அவளோட பாதுகாப்பும் எதிர்காலமும் அமைதியான வாழ்க்கையும் எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்கு இடைஞ்சலா வர்றது நீயாவே இருந்தாலும் உன்னை விட்டு விலகுறது தவிர வேற வழி இல்லை எனக்கு. நானா போகவா இல்லை நீயா கிளம்புறியான்னு முடிவு பண்ணிக்கோ.” என்பவன் சட்டையை பிடித்து உலுக்கி அவன் நெஞ்சில் சாய்ந்துவிடும் ஆவேசம் அவளுள். அடக்கிக்கொண்டாள்.
என் ஆதி, அந்தம் நீ என்று வார்த்தைகள் வடிக்காவிட்டாலும் வாழ்ந்த வாழ்க்கை அப்படி ஒன்றாய் இருந்திருக்க, அவன் தன்னை நட்டாற்றில் விட்டுச் சென்றது கூட பெரிதாக தெரியவில்லை அவளுக்கு. குடும்பத்தின் நலன் கருதி அந்நேரம் அவன் எடுத்த முடிவில் எழுந்த அதிர்வும் அதிருப்தியும் வெறுமையும் கூட சில நாட்கள் கழித்து அவனுக்கான ஏக்கமாய் தேடலாய் மாற்றம் கொண்டது. சக்தியாய் தன்னை உருவேற்றிக் கொண்டபிறகு வாழ்வு இப்படியே போய்விடுமோ என்ற ஐயமெல்லாம் எழாது இதுதான் இனி தன் பாதை, கணவன் மகளை அருமையாய் வளர்த்து கரையேற்றி விடுவான் என்ற நம்பிக்கையில் தனக்காக, உற்றத்தாருக்காக ஓட ஆரம்பித்தாள். ஏக்கங்கள் பின்செல்ல குறிக்கோள் வகுத்துக்கொண்டு அதனை பிரதானப்படுத்தி முன்னேறியவளை புரட்டிப்போட்டது போலானது கணவன் மற்றும் மகளின் வரவு. அத்தனை வருடங்கள் அவர்களை கண்ணில் காணாதவரை இருந்த திடம் கரைந்து குடும்பம் முதன்மையாய் பட இருப்பிடத்தில் இருப்பு கொள்ளவில்லை, விடிந்ததும் கிளம்பி வந்துவிட்டாள்.
ஆனால் கொண்டவனோ போ போ என்று விரட்ட, உடலின் மொத்த சக்தியும் மனதின் திடமும் வடிந்துவிட்டதை போல் உணர்ந்தாள்.
“நான் வேண்டாமா உங்களுக்கு?” சக்தியின்றி வினாவியளுக்கு பதில் கொடுக்க திணறியவனாய் சக்திவேலன் முகம் திருப்ப,
“எனக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும். என்னை மாதிரி அம்மா இல்லாத பொண்ணா என் விழி வளர்றதுல எனக்கு விருப்பம் இல்லை.” என்றிருந்தாள் அழகி.
“அம்மாவால அவளே இல்லாம போயிட்டா?” என்று அவன் சொல்லும் போதே குரல் தடித்து தடுமாறி கரகரப்புடன் வர, கனைத்து தொண்டையை சரி செய்துகொண்டவன், “இத்தனை வருஷம் அப்படித்தான வளர்ந்தா? இனியும் நல்லாவே வளருவா.” என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல, துணுக்குற்றவள்,
“என்ன?”
“இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட அம்மா எங்கன்னு என் பொண்ணு கேட்டதில்லை. அது அவளுக்கு தேவையும் இருந்தது இல்லை.” கண்ணை மூடிக்கொண்டால் பகல் இருளாகிவிடும் என்பது போல் இருந்தது அவன் வாதம்.
அதனை உணர்ந்தவள் போல் அவழிதலில் ஏளன சிரிப்பு வந்தமர்ந்து பின் தாயை பற்றிய கேள்வி வந்ததும் மருகிய மகளின் முகம் நினைவு வந்தவளாய் நெருக்குருகி நின்றாள். என்ன பேசுகிறான் இவன்?
“வாயை திறந்து கேட்கலைன்னா அவளுக்கு நான் தேவையில்லைனு ஆகிடுமா?” அவனின் வாதங்களில் சிதறும் மனதினை ஒட்டவைத்தபடி தளர்ந்தவள் தன்னை தேற்றிக்கொண்டு நிமிர்ந்து நிற்க, அவளை சமாளித்து இங்கிருந்து கிளப்ப முடியாதோ என்ற ஐயம் வந்துவிட்டது சக்திவேலனுக்கு. அவளின் கண்ணீர் முன் அவளின் தடுமாற்றத்தின் முன் தன் திடம் குறைவதை உணர முடிந்தது. அவள் வந்தவுடன் விரட்டத் துணிந்த தன்னால் பேச்சுக்கு பேச்சு, வார்த்தைக்கு வார்த்தை என அவளை வார்த்தையால் வீழ்த்தி வெளியேற்ற முயலும் தன் செயல்கள் வெகுநேரம் தாக்குபிடிக்காது என்று புரிந்து போனது. ஆனால் அவளை இங்கிருந்து கிளப்பிட வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தவன் வார்த்தைகளை சிதற விட்டான்.
“தேவையில்லாம நேரத்தை வீணடிக்காம கிளம்பு. உடுப்பை மாத்தி இப்படி வந்து நின்னா நீ என்னோட அழகியா ஆகிடுவியா இல்லை நான்தான் அதே பழைய சக்திவேலனா மாறிடுவேனா? அழகுராணியை காதலிச்சவன் வாழ்க்கை அஞ்சு வருஷம் முன்னாடியே நின்னு போச்சு. இப்போ இருக்குறது ஏழு வயசு பொண்ணோட அப்பா. அவன் வாழ்க்கையே அவன் பொண்ணுதான். அவனுக்கு வேற யாரும் தேவையில்லை, அது அவன் பொண்ணை பெத்தவளா இருந்தாலும் சரி அவ எனக்கும் என் பொண்ணுக்கும் வேணாம்.”
‘வேணாம் வேணாம்னா… நான் இல்லாம என் பொண்ணு வந்தாளா?’ நா வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவள்,
“அன்னைக்கு நீங்க என்னை அம்போன்னு விட்டுட்டு போனப்போ கூட அதிர்ச்சி தானே தவிர உங்களை தப்பா நினைக்க மனசு வரலை. இப்போ என்னை தள்ளி வைக்குறதா நினைச்சி நீங்க விடுற வார்த்தை தான் என்னை ரொம்ப நோகடிக்குது. இந்த அஞ்சு வருஷத்துல ஒருதடவை கூட என் நினைப்பு வரலையா உங்களுக்கு?”
‘உன் நினைவில்லாமல் என் நாள் துவங்கியதும் இல்லை முடிந்ததும் இல்லை.’ என்று சொல்ல முடியாமல் அவன் வெறித்து நிற்க,
“பூ மாதிரி பொத்தி வச்சி என்ன ஆனாலும் உன்னை தனியா விடமாட்டேனு வாக்கு கொடுத்து கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து வாழ்ந்தவளை அப்படியே விட்டுட்டு போனோமே அவ என்ன ஆனா, என்ன பண்றா பாதுகாப்பா இருக்காளா இல்லை உயிரோடவாவது இருக்காளானு பாக்க தோணலைல உங்களுக்கு. அவ்ளோ தான்லே நான்?” என்ன முயன்றும் மனதின் ஒரு ஓரத்தில் புள்ளியாய் விழுந்த எண்ணம் கேள்வியாய் வெளிவந்துவிட, சக்திவேலன் உதட்டை மடித்து உணர்வுகளை கட்டுக்கள் வைக்க போராடியவனாய் நின்றான்.
“அப்போ எல்லாமே பொய்ல. என்னோட வாழ்ந்த வாழ்க்கை, என் மேல வச்ச பாசம், இந்த காதல் மன்னாங்கட்டி எல்லாம் உங்களுக்கு அடங்கி, உயிரே போனாலும் நேர்மை, கொள்கையை பிடிச்சிகிட்டு இருக்குற வரைக்கும் தான்ல? உங்களை காப்பாத்த எந்த எல்லைக்கும் போவேன்னு செயல்ல காட்டினப்புறமும்…” என்றவளை இடைமறித்தவனாய்,
“என் ஒருத்தன் உயிரை காப்பாத்த எத்தனை குடும்பத்தை அழிச்சிட்டு இருக்கேனு புரியுதா உனக்கு. உன்னால வரப்போற இளம்தலைமுறையே நாசமா போய்ட்டு இருக்கு. இது இந்த தலைமுறையோட முடிஞ்சி போகுற விஷயமில்லை. காலம் தொட்டு குடும்ப அமைப்பையும் அடுத்தடுத்த தலைமுறையோட நல்ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்குற விஷயம்னு ஏன் உன் புத்திக்கு புரிய மாட்டேங்குது. பல குடும்பத்தை அழிச்சி தான் நான் இருக்கணும்னா அப்படி ஒன்னு தேவையே இல்லை. என் விதி கூப்பிடும் போதே என்னை விட்டிருக்கலாம்.” இரக்கமின்றி அவன் பேச, அதனை தாள முடியாதவளாய் இதழ் கடித்து உணர்வுகளை உள்ளடக்கியவள் பட்டென்று அவன் வாயில் ஒன்று போட்டுவிட்டாள்.
“என்ன? அப்படியே விட்டிருக்கணுமா? அதுக்கா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டேன். உங்களை விட்டு, விழியை விட்டு இருந்தது எல்லாம் நீங்க என்கூட இல்லைனாலும் எங்கேயோ நல்லா இருக்கீங்கன்னுதான் அத்தனையும் சகிச்சிக்கிட்டு கடந்து வந்தேன். ஈஸியா சொல்றீங்க விட்டிருக்கலாம்னு.” அவன் சொன்னதை ஏற்க முடியாதவளாய் உணர்வுகளை அடக்க சிரமப்பட்டு உடல் உதறல் எடுக்க, இங்குமங்குமாய் நடைபோட அவளையே பார்த்து நின்றவனுள் வெறுமை.
தன் மீது கொண்ட அன்பினால் மாபாதக செயலை புரிந்திருக்கிறாள் என்றாலும் அதன்தொட்டு தங்களை சேரப்போகும் இழுக்கையும் அச்சுறுத்தலையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறியவன் முடிவு என்னவோ திண்ணமாய் இருந்தது. இடைப்பட்ட கசப்புகளை அவனே மறந்தாலும் அவளால் ஆதாயம் பெற்றவர்கள் தங்களை மறக்கப்போவதில்லை. தொடர்கதையாக ஏதோவொரு வடிவில் வினையாக தங்களை சுற்றி சுற்றி வரும், அது வேண்டாம் என்று அழுத்தமாக நின்றான்.
“அவ்ளோ தானா?” முகமெல்லாம் சிவந்து கண்ணீர் ததும்ப அவள் வந்து நிற்க, முகத்தை திருப்பினான் சக்திவேலன்.
“போ போனு சொன்னா எதுவுமே இல்லைனு ஆகிடுமா? என்ன மறுத்தாலும் நான் உங்க பொண்டாட்டிங்குறதும் நமக்கு பொறந்தவ விழிங்குறதும் மாறப்போறதில்லை. இப்போ நீங்க என் பக்கத்துல வந்த மாதிரி எத்தனை வருஷமானாலும் எனக்கானது என்கிட்ட வந்து சேரும். இல்லை வர வைப்பேன். கடவுளா பாத்து உங்களை இங்க அழைச்சிட்டு வந்திருக்காரு இதுக்கு மேலையும் என் குடும்பத்தை தனியா விட நான் முட்டாள் இல்லை. நீங்க வேண்டாம்னாலும் நான் இருப்பேன்.” என்றவள் கண்களை அழுந்த துடைத்துவிட்டு மூடியிருக்கும் அறையை பார்த்தவள் நேராக சமையலறை சென்று அன்றைக்கான உணவை சமைக்க, அவளின் அதிரடியில் அதிர்ந்து தான் நின்றான் சக்திவேலன்.