Advertisement

ஜீவ தீபங்கள் -24

அத்தியாயம் -24

உத்ரா கலந்து வைத்திருந்த ஹார்லிக்ஸ் ஆறிப் போயிருந்தது. தன்னை சுற்றி கணவனை தவிர யாருமில்லை என தெரிந்து பாலனிடமிருந்து விலகினாள் பிரியா. பாலன் அவளது கன்னத்து ஈரம் துடைக்க வலியில் முனகினாள்.

“டாக்டர்கிட்ட போவோமா?” எனக் கேட்டான்.

“எங்கேயும் வரலை போங்க” சோர்வாக சொன்னாள்.

வெளியில் வந்த வடிவம்மாள் பிரகதீஸ்வரி விழித்துக் கொண்டதாகவும் பாலனை அழைப்பதாகவும் சொன்னார். பிரியாவை கண்டவர் அவள் முகம் பார்த்து விட்டு திகைக்க, “கொஞ்சம் இவளுக்கு என்ன செய்யலாம்னு பாருங்க” என சொல்லி அம்மாவை காண சென்றான்.

மகனை கண்ட பிரகதீஸ்வரி எழ முயல உதவினான் பாலன். அமர்ந்தவர், “கெட்ட கனவுப்பா. உத்ரா எங்க அவளையும் வர சொல்லேன்” என்றார்.

“ஆதவன் வந்து அழைச்சிட்டு போயிட்டான் மா. நீ தூங்கிட்ட, இனிமே காலையிலதான் எழுந்துப்பன்னு அனுப்பி வச்சிட்டேன். நாளைக்கு வருவா உன்னை பார்க்க” என்றான்.

மகிழ்ந்தவர், “என்னை எழுப்பி விட்ருக்கலாம் நீ” என்றார்.

“பிரியா கூட வந்திட்டா ம்மா” என பாலன் சொல்ல, “வந்திட்டாளா? எங்க இருக்கா? என்னை ஏன் பார்க்க வரலை அவ?” கட்டிலில் இருந்து எழ முற்பட்டார்.

“ப்ச் ஏன் ம்மா இவ்ளோ வேகம்? அவ வந்ததுமே தூங்கிட்டா. எழுப்பி விடவா?”

“அவ்ளோ நேரம் ஆகிடுச்சா? காலையில பார்த்துக்கிறேன். உத்ராகிட்ட பேசணும் அப்புறம் வருண்கிட்டேயும் பேசணும்” என்றார்.

பொறுமையாக தங்கை தம்பி என பேச வைத்தவன் மீண்டும் அவர் உறங்கிய பின் வெளியில் வந்தான். பிரியாவிடமிருந்து அனைத்தையும் அறிந்து கொண்ட வடிவம்மாளிடம் அம்மாவுக்கு எதுவும் தெரியக்கூடாது என சொன்னான். பிரியாவின் கன்னத்துக்கு போட தயாரித்திருந்த மஞ்சள் பத்தை அவனிடம் தந்து விட்டு பிரகதீஸ்வரியின் அறைக்கு சென்று விட்டார் வடிவம்மாள்.

காபி பருகி விட்டு சற்று தெம்பாக அமர்ந்திருந்தாள் பிரியா.

“இப்ப காபி குடிச்சா எப்ப சாப்பிடுவ? சாப்பிட்ருக்க வேண்டியதுதானே?” எனக் கேட்டான்.

“அத்தைக்கு என்ன? நான் போய் பார்க்கவா?”

“இந்த முகத்தை பார்த்து எனக்கே தாங்கல. நாளைக்கு போலாம். வா ட்ரெஸ் மாத்திக்க, இதை போட்டுட்டு படு கொஞ்ச நேரம். அரை மணி நேரம் கழிச்சு சாப்பிட்டு தூங்கலாம்” என்றான்.

“நீங்க எதுவும் கேட்டுக்கல”

“என்ன அவசரம்? இப்போ உனக்கு ரெஸ்ட்தான் வேணும்”

“இல்ல”

“என்ன இல்ல?”

“ரெஸ்ட் இல்ல, நீங்கதான் வேணும்” என சொல்லி ஒரு கையை அவனை நோக்கி நீட்டினாள்.

அவள் முகத்தை பரிவாக பார்த்துக் கொண்டே கை பிடித்தவன் அவர்கள் அறைக்கு அழைத்து சென்றான். உள்ளே நுழைந்ததும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். சட்டென்ற அவளது செயலில் திடுக்கிட்டு இரு கைகளையும் மேலே உயர்த்தியிருந்தவன் பின் மெல்ல அவளை அணைத்துக் கொண்டான்.

“கெளதம் அப்ராட் போறான். தேஜை எல்லாம் மீட் பண்ணி சாரி சொல்லியிருக்கான். என்னை பார்க்கணும்னு சொன்னதும் மறுக்க முடியலை. வான்னு நான்தான் சொன்னேன். சாரி சொன்னான், நல்லா இருன்னு விஷ் பண்ணினான். அப்புறம் கிளம்பிட்டான். அவனுக்கு இனிமே கில்ட் இருக்காதுதானே? நான் அவனை பார்க்க போனது தப்பா?” அவன் அணைப்பில் இருந்தவாறே கேட்டாள்.

“யாரையும் சுலபமா நம்பிடுற பிரியா நீ. போனது தப்பில்ல, என்கிட்ட சொல்லி என்னையும் அழைச்சிட்டு போயிருக்கலாம்ல? அவன் முழுசா திருந்தாம வேற நோக்கத்தோட வந்திருந்தா?”

“எனக்கு அப்படிலாம் அவனை டவுட் பண்ண வரலை. தேஜ் சொன்னான் ரொம்ப ஃபீல் பண்ணினானாம். தேஜ் அம்மாகிட்ட ப்லெஸிங் எல்லாம் வாங்கிகிட்டனாம். அவன் மாறிட்டான்னு தோணிச்சு. உங்ககிட்ட சொல்லலாம்னா நீங்க சரியா பேசினாதானே? போங்க…” என்றவள் அவனை தள்ளி விட்டு விலகி நின்றாள்.

“விட்டுட்டு போய்ட்டு நல்லா பேசலையாம்” பாலன் சலித்துக் கொள்ள தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தவள், “அசிங்கமாக்கி விட்டுட்டான் என் அண்ணன்” என்றவள் பாலன் பக்கம் திரும்பி, “என்னை பார்க்க முடியலைல உங்களால?” எனக் கேட்டாள்.

“மனசுக்கு நெருக்கமானவங்க எப்பவுமே அவலட்சணம் ஆகுறது இல்லை பிரியா. அப்படி அவலட்சணமா தோணினா என் கண்ணுலேயோ உன் முகத்திலேயோ இல்லை குறை. என் மனசுல குறை” என அவன் சொல்ல மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளை விலக்கி கட்டிலில் அமர வைத்து மஞ்சள் பத்தை போட்டு விட ஆரம்பித்தான்.

பாலனின் மனம் புரிந்தவளாக, “அத்தை எப்பவுமே நமக்கு அழகுதான்” என்றாள்.

ஒரு பக்கமாக உதடுகள் வளைய லேசாக சிரித்தவன், “அம்மான்னாலே அழகுதான்” என்றான்.

“அப்போ வைஃப்னா?”

“கன்னம் வீங்கி உதட்டுல அடி பட்டு இருக்கிறப்ப கேட்டா எப்படி சொல்வேன்?”

தன் கன்னத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தவன் கையை பிடித்தவள், “வாயால சொல்றதுக்கும் எனக்கு அடி பட்டு இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்டாள்.

“வாயாலதான் சொல்லணும், ஆனா வார்த்தையால இல்ல” என்றவன் மீண்டும் பத்து இட சிரித்தாள் பிரியா. அப்படி சிரித்ததில் பத்து கன்னத்தை இழுக்க வலியில் முகம் சுருக்கியவள், “நீங்களே எப்பவாவது இப்படி வயசுப் பையன் மாதிரி பேசுவீங்க, அப்பன்னு பார்த்து கன்னம் சுளுக்கி போய்டுச்சு” என குறை பட்டாள்.

“ஏய்!” அவன் அதட்ட, “ஆரம்பிக்காதீங்க. என் லக்கேஜ்லாம் எங்க? அதான் போயிட்டாளேன்னு கோவத்துல கடாசிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“எல்லாம் கப்போர்ட்ல அரேஞ் பண்ணிட்டேன்”

“ஹைய… எல்லாத்தையுமா?”

“நீ என் வைஃப் பிரியா”

“சொல்லிட்டே இருங்க, அப்பதான் மறக்காது உங்களுக்கு”

பத்து போட்டு முடித்தவன் எழ, “நான் படுத்தா தூங்கிடுவேன். கூடவே இருங்க” என்றாள்.

“ரூம்லதான் இருக்கேன். கூடவே இருக்கணும்னா என்ன ஒட்டிக்கிட்டு திரியனுமா?”

“ஏன் அப்படியும் செய்யலாம். அப்படி மட்டும் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?”

“நீ ரொம்ப அதிகமா கற்பனை செய்ற. அப்படியெல்லாம் இருக்க முடியாது. நடப்புக்கு வா பிரியா”

“ப்ச்!”

“தெய்வீக காதல் எல்லாம் ஃபேண்டஸி. தாம்பத்யம்ங்கிறது ஒரு தர்மம் பிரியா” என பாலன் சொல்ல, ‘ங்கே’ என விழித்தாள் பிரியா.

“நான் சொன்னேன்ல நீ சின்ன பொண்ணுன்னு. பக்குவம் வரும் போது தானா தெரியும்”

“என்னங்க!” என சிணுங்கினாள்.

சிரித்த பாலன், “என்ன செய்யணும் இப்போ?” எனக் கேட்டு, உடனே இறுக்கமான முகத்தோடு “முத சரியாகனும் உனக்கு. ஆதவன் நான் நினைச்சத விட முரடனா இருக்கான். உத்ராவ நினைச்சு ரொம்ப கவலையாகுது” என்றான்.

பிரியாவின் முகமும் வாட, “ரொம்ப யோசிக்காத. சாப்பிடுறியா?” எனக் கேட்டான்.

“வாழைப்பழம் இருந்தா ரெண்டு கொடுங்க. சாப்பிட பிடிக்கல” என அவள் சொல்ல மேலும் வற்புறுத்தாமல் பழமே எடுத்து வந்து கொடுத்தான். அதற்குள் ஆடை மாற்றியிருந்தவள் அதை சாப்பிட்டு விட்டு, “தர்மம்னு ஏதோ சொன்னீங்களே, சொல்லுங்க” என்றாள்.

“இப்போ இல்ல. படு, சொல்ல வேண்டிய நேரத்துல சொல்றேன்” என அவன் சொல்ல அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு படுத்து விட்டாள்.

அம்மாவுக்கு காய்ச்சல் இல்லை என உறுதி செய்து கொண்டு பாலன் உறங்க வரும் போது பிரியா உறங்கிப் போயிருந்தாள். ஆதவன் பற்றிய நினைவு நெருடலாக இருந்தது. அவன் மாறா விட்டால் துன்ப படப் போவது உத்ராவாகிற்றே. கவலையோடுதான் பாலனும் உறங்கினான்.

முதல் நாள் மாலையில் தாத்தாவும் பாட்டியும் கோயிலுக்கு சென்றிருந்த வேளையில்தான் இத்தனை களேபரமும் நடந்திருந்தது. வீட்டிற்கு வந்தவர்கள் உத்ராவை கண்டு மகிழ அவள் சொன்ன விஷயத்தால் கவலை கொண்டிருந்தனர். காலை விடிந்த உடனே அங்கிருந்த பிரியாவின் கைபேசியை எடுத்துக் கொண்டு பேத்தியை காண வந்து விட்டனர்.

பிரியா இனியும் பிரகதீஸ்வரியை காணாமல் இருக்க முடியாதே. மருமகளை பார்த்து விட்டு அவர் கவலை கொள்ள பாட்டி வாய் விட்டு ஆதவனை திட்டித் தீரத்தார்.

“அம்மா… ஆதவனுக்கு சாபம் கொடுக்காத, அவன் உத்ரா வீட்டுக்காரன். அவங்க நல்லா இருக்கணும்” என கவலையாக பிரகதீஸ்வரி சொல்ல அங்கு வந்த பாலன், “இனிமே இந்த பேச்சை யாரும் எடுக்க வேணாம்” என கண்டிப்போடு சொல்லி உத்ராவை பற்றி விசாரித்தான்.

“நைட் ரூமுக்குள்ள போனவங்கதான் அப்புறம் நான் பார்க்கவே இல்ல” என்றார் பாட்டி.

“ஒரு வேளை ரூம்லேயே வச்சு உன் பேரனை துவைச்சு எடுத்திட்டாளோ உத்ரா? நான் கால் பண்றேன்” என்ற பிரியா உத்ராவுக்கு அழைக்க போனாள்.

“இப்போதானே சொன்னேன்… அந்த பேச்சு வேணாம்னு. போ வந்தவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா, காலை சாப்பாடு என்னன்னு கவனி” என பிரியாவை அங்கிருந்து அப்புறப் படுத்தப் பார்த்தான்.

“அண்னன் அடிச்சதுல இன்னும் எனக்கு சரியாகல, உங்க பையன் என்கிட்ட வேலை சொல்றாங்க பாருங்க அத்தை” என பிரியா குறை சொல்லிக் கொண்டிருக்க பாலன் கைகளை கட்டிக் கொண்டு அவளையே கூர்மையாக பார்த்தான்.

அவன் பார்வையிலேயே எழுந்து கொண்டவள், “யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணலைல? இருங்க ரவா கோதுமைலதான உப்புமா செய்வாங்க. உங்களுக்கெல்லாம் உப்புலேயே உப்புமா செய்ய சொல்றேன்” என சொல்லிக் கொண்டே சென்றவளை பார்த்து பெரியவர்கள் சிரிக்க, பாலனும் புன்னகைத்தான்.

Advertisement