‘என்ன பெருசா எதிர்பார்க்கிறேன், ரெண்டு வார்த்தை ஆசையா பேசினா குறைஞ்சு போய்டுவாரா?’ மனதில் கோவம் கொண்டவள் அவன் கையை உதறி விட்டு கிளம்பினாள். 

அறையை விட்டு வெளியில் போகும் தருணத்தில் இப்படி கோவமாக செல்ல மனமில்லாமல் அவளாகவே அவனிடம் இறங்கி வந்து, “உடம்ப பார்த்துக்கோங்க. டெய்லி கால் பண்ணுங்க. கோவத்தை குறைச்சுக்கோங்க” என சொல்லிக் கொண்டிருந்தாள். அனைத்துக்கும் சிறிதாக தலையாட்டிக் கொண்டான். 

“உங்கள… போங்க” என அலுப்பாக சொன்னவள் எங்கேயும் செல்லாமல் அவனிடமே நிற்க அவன் நகர்ந்து சென்றான்.

“இவருக்கு நான் ஒரு பொறுப்பு கடமை… அவ்ளோதான். கொஞ்சமும் ஆசை இல்ல லவ் இல்ல போடி பிரியா, உனக்கு வாய்ச்சது இம்புட்டுத்தான்” பிரியா வாய் விட்டு புலம்ப தன் காதில் விழுந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை பாலன். 

மழை விட்டிருக்க இரவு சாப்பாடும் முடிந்தது. ஆதவன் வீட்டிலிருந்து அனைவரும் வந்தனர். அப்பாவிடமும் அண்ணனிடமும் தன் கணவனை பார்த்துக் கொள்ளும் படி இரண்டு முறை சொல்லி விட்டாள் பிரியா. 

“அட போம்மா, பாலாவுக்கு யார் துணையும் வேணாம். நீ பயப்படாம இரு” என்றார் மலையரசன். தாத்தாவும் தைரியம் சொன்னார். 

“அப்புறம் ஏதாவது ஆச்சு உங்களை எல்லாம் சும்மா விட மாட்டேன்” என அப்பாவிடம் அவள் சொல்லிக் கொண்டிருக்க, “வாய குறைச்சிட்டு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு கிளம்பு, மழை நேரத்துல லேட் பண்ணிகிட்டு, உன்னை விட்டுட்டு வருண் திருச்சி போக வேணாமா?” என கடிந்து கொண்டான் பாலன். 

“ஒரு சொல்லு சொன்னதில்லை என் பொண்ண, ஹ்ம்ம்… அவ வாங்கி வந்த வரம் இப்படி” சலித்தார் துர்கா. 

அம்மாவை முறைத்து பதில் தர தயாரானாள் பிரியா. மாமியாரை கண்டு கொள்ளாமல், மனைவியை எதுவும் பேச விடாமல் கண்களால் அடக்கிய பாலன் “வருண் அவ பேக் எடுத்திட்டு போய் கார்ல வை” என சொல்லி, “போ பிரியா அம்மாகிட்ட சொல்லிட்டு வா” என்றான். 

பிரியா தன் மாமியார் அறைக்கு செல்ல, “பார்த்தியாடா ஆதவா? உன் பொண்டாட்டி என்கிட்ட சொல்லிக்கிட்டா தேவையில்லைனு நீ சொல்ற. பிரியாவ பாரு மாமியாருக்கு எவ்ளோ மரியாதை தர்றான்னு, எல்லாம் கொடுப்பினை!” என்றார். 

அனைவர் முன்பும் அம்மாவை விட்டுத் தந்து பேச முடியாமலும் அம்மா சொல்வதை ஆமோதிக்க முடியாமலும் தள்ளிப் போய் நின்று கொண்டான் ஆதவன். 

“நீ முதல்ல உன் மாமியாருக்கு கொடு அந்த மரியாதைய” தோளில் முகவாயை இடித்துக் கொண்டே கூறினார் வள்ளிக்கண்ணு. 

பதிலுக்கு பேசுகிறேன் என பிடித்துக்கொண்டார் துர்கா. பாட்டியும் ‘நான் உனக்கு சளைத்தவள் இல்லை’ என சரிக்கு சரியாக பேசினார். உத்ரா பட்டுக் கொள்ளாமல் வடிவம்மாளுடன் இருந்தாள். 

பிரியாவின் பேகை காரில் வைத்து விட்டு வந்த வருண் அண்ணன் காதில், “எப்படி ண்ணா எதுவும் பேசாம நிக்குற? நான் கேட்டு விட்ரவா?” என சின்ன குரலில் கேட்டான். 

“கேட்க வேண்டியவங்க அமைதியா இருக்கும் போது நாம என்னடா பேச முடியும்? நீயும் அமைதியா இரு. எதிரியா இருந்தா மல்லுக்கு நிக்கலாம், சொந்தம், அதுலேயும் நெருங்கின சொந்தம், அந்த சொந்தமும் காலத்துக்கும் வேணும்ங்கிறப்போ கோவத்தை தூக்கி ஓரமாதான் வைக்கணும். உள்ள போனவள இன்னும் காணோம் பாரு” என்ற பாலன் அம்மாவின் அறைக்கு சென்றான். 

பிரகதீஸ்வரி பக்கத்தில் அமர்ந்திருந்த பிரியா, “நேரத்துக்கு அவர் வர்றாரான்னு பார்க்கணும் அத்தை நீங்க, உங்களுக்காகவாவது டைத்துக்கு வருவார். அப்படி வரலைனா எனக்கு போன் பண்ணனும் சரியா?” என சொல்லிக் கொண்டிருந்தாள். 

மகனை பார்த்த பிரகதீஸ்வரி, “இவ ஏம்ப்பா இப்படி பயப்படுறா? என்னடா வேற ஏதும் பிரச்சனையா?” என விசாரித்தார். 

பிரியா பயந்து போனவளாக பாலனை பார்க்க அவன் மனைவியை முறைத்தான். அவள் கண்களால் மன்னிப்பு வேண்ட, “இவ பேசுறதுக்கு எல்லாம் அர்த்தம் கண்டுபிடிச்சிட்டு. எனக்கு இப்படி ஆனதுல பயந்திட்டா, அவ்ளோதான். அவ கிளம்பட்டும் மா, நீ தூங்கு” என்றவன் பிரியாவை பார்க்க அவள் அத்தையிடம் சொல்லிக் கொண்டு வெளியேறினாள். 

டிரைவர் பக்கத்தில் வருணும் பின் இருக்கையில் பிரியாவும் அமர்ந்து கொள்ள தம்பியிடம் “அப்பப்ப மைண்ட் ஆஃப் ஆகிப் போய் சுத்துற, நல்லா இருடா, எது வந்தாலும் பார்த்துக்கலாம்” என சொல்லி விட்டு பிரியாவிடம் வந்தான் பாலன். 

அவள் போய் வருவதாக தலையசைக்க, “தைரியமா இருக்கணும், ஹ்ம்ம்?” எனக் கேட்டான். 

அவள் தலையாட்ட, “கார் எடுப்பா” என பாலன் குரல் கொடுக்க காரை எடுத்தான் டிரைவர்.

பிரியாவின் பிரச்சனையை தலைக்கு ஏற்றிக் கொண்டு கவலையோடு வீடேறினான் பாலன். 

ஆதவன் வீட்டினரும் கிளம்ப தயாராக இன்னும் துர்கா, வள்ளி பாட்டி இருவரது வாய் சண்டை முற்று பெறவில்லை. பாலன் திண்ணையில் நின்ற படியே ஹாலில் வடிவம்மாளிடம் பேசிக் கொண்டிருந்த உத்ராவை கவலையாக பார்க்க எதேச்சையாக அண்ணனை பார்த்தவள் புன்னகை செய்தாள். 

ஆதவன் செருப்பு அணிந்து கொண்டிருக்க அவன் தோளை பற்றிய பாலன், “நீ பார்த்துப்பேன்னு தெரியும் டா, இருந்தாலும் சொல்றேன். அது… அங்க உத்ராவுக்கு எல்லாம் புதுசு இல்லையா? அவளுக்கு பழகற வரை நீ கொஞ்சம் அக்கறை எடுத்து பார்த்துக்கடா” என்றான். 

“ஏன் உங்க தங்கச்சி என்ன சொன்னா?” ஹாலில் இருந்த உத்ராவை பார்த்துக் கொண்டே கேட்டான் ஆதவன். 

“இன்னும் உன் பொண்டாட்டினு சொல்ல மாட்டேங்குறியாம்…” கிண்டலாக சொன்ன பாலன், “அவ எதுவும் சொல்லல, வந்ததிலேர்ந்து நீயும் பார்க்கிறதான நாங்க தனியா பேச கூட டைம் இல்ல. அவ முகம் என்னவோ போல இருக்கு பாரு, அதனால சொன்னேன். பார்த்துக்க” என்றான். 

சரி என ஆதவன் தலையசைக்க உள்ளே பார்த்த பாலன், “உத்ரா வாம்மா, இன்னொரு நாள் வரலாம், மாப்ள கிளம்பிட்டான் பாரு” என அழைக்க, வந்தவள் அண்ணனுக்கு பத்திரம் சொல்லி விட்டு ஆதவனை விட்டு விலகி நடந்து சென்றாள். 

ஆதவனின் கார் புறப்பட்டு சென்றும் கூட யோசனையாக அங்கேயே பாலன் நின்றிருக்க, “நல்லாத்தான் கவனிச்சுக்குதாம் ஆதவன் தம்பி. அவர் அம்மா முன்னாடி ரொம்ப தாங்கினா அந்தம்மாவுக்கு எரிச்சல் ஆவுதாம். அதனால அந்தம்மா முன்னாடி மட்டும் தள்ளியே இருந்துப்பாங்களாம்” என தன்னிடம் உத்ரா சொன்ன கதையை சொன்னார் வடிவம்மாள். 

இல்லை என்பது போல தலையாட்டிய பாலன், “உங்களுக்கு அப்படித்தான் தெரியுதா?” எனக் கேட்க என்ன சொல்ல என பார்த்தார் வடிவம்மாள். 

“அம்மாகிட்ட எதுவும் சொல்லிக்காதீங்க. இது புருஷன் பொண்டாட்டி விஷயம், சட்டுன்னு நாம தலையிடவும் முடியாது. என் தங்கச்சி சமாளிப்பா, முடியலைன்னா வருவா. பார்த்துக்கலாம்” என்ற பாலனுக்கு கணவன் மனைவிக்குள் ஏதோ புரிதலில் கோளாறு எனதான் நினைக்க தோன்றியது.

மற்றவர்கள் தன் வாழ்க்கையை விமர்சனம் செய்யும் நிலை வந்து விடுமோ என்ற யோசனையோடே படுக்க வந்த ஆதவன் உர் என இருக்கும் உத்ராவை பார்த்து, “ரெண்டு மூணு நாளாவே ஒரு மாதிரியாவே இருக்கியே, என்ன விஷயம்?” எனக் கேட்டான். 

மனதில் வைத்திருப்பதை விட நேரில் கேட்டு தெளிவடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்த உத்ரா, “வெள்ளிக்கிழமை ஈவ்னிங் நீங்க எங்க இருந்தீங்க?” எனக் கேட்டாள். 

நொடி நேரம் யோசித்தவன் அவளை கோவமாக பார்த்து, “இந்த குறுக்கு விசாரணை வேலை எல்லாம் வேணாம். என்னன்னு நீயே சொல்லு” என்றான். 

“உங்களை அவ கூட காபி ஷாப்ல பார்த்தேன்” என்றாள். 

அதிராமல், “ஹ்ம்ம்… அதுக்கு?” எனக் கேட்டான். 

“என்ன இப்படி கேட்டா சும்மா போய்டுவேன்னு நினைச்சீங்களா? எனக்கு தெரியாம நீங்க அவ கூட வெளில போறது சரியா?” எனக் கேட்டாள். 

தன் முழுக்கை சட்டையை மடித்து விட்டுக் கொண்டே “என்ன சொல்ல வர்ற?” என ஆங்காரத்தை அடக்கிக் கொண்டு கேட்டான். 

“எதுக்கு நீங்க எனக்கு தெரியாம அவளோட அங்க போனீங்கன்னு நீங்கதான் சொல்லணும்” 

“அன்னிக்கு நைட் இதை நினைச்சுதான் என்கிட்ட கத்துன இல்ல?” 

“ஆமாம், பாஸ்ட் விடுங்க, இன்னும் அவளோட காண்டாக்ட்ல இருக்கிறது எனக்கு எப்படி இருக்கும்? என்ன இருக்கு உங்க மைண்ட்ல? நான் சாதுன்னு மட்டும் தப்புக்கணக்கு போட்றாதீங்க” கிட்டத்தட்ட மிரட்டினாள் உத்ரா. 

“ச்சீ!” என்றவன் அவள் தோளை வலிக்க பற்றி நகர்த்தி விட்டு அவனது மாற்றுடை எடுத்துக் கொண்டு குளியலறை சென்று விட்டான். 

அவன் திரும்பி வரவும், “இன்னும் எனக்கு நீங்க பதில் சொல்லலை” என்றாள். 

“உன் முட்டாள்தனமான பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன். என் கோவத்தை கிளறாம வாய மூடிட்டு தூங்கு” என்றவன் படுத்து விட்டான்.

“இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங், இன்னொரு முறை அவ கூட உங்களை பார்த்தேன்… தொலைச்சிடுவேன்” சத்தம் போட்டாள். 

“கை பர பரங்குது. தாங்க மாட்டேன்னு கண்ட்ரோலா இருக்கேன். ஒழுங்கு மரியாதையா இரு” உறுமினான் ஆதவன். 

“மேல கை வச்சு பாருங்க, அப்புறம் தெரியும்…” என உத்ரா கத்த, வேகமாக எழுந்தவன் அவளை அடிக்க பாய, பயந்து போனவள் ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள். 

“சந்தேகம் புடிச்ச பேயாடி நீ? எனக்கு சுதாவை ஏமாத்திட்டோம்னு கில்ட். பழச மறந்து உன் லைஃப் பாருன்னு சொல்லதான் அவளை மீட் பண்ணினேன். இதுல என்னத்த உன்கிட்ட சொல்லணும் நான்? அன்னிக்கே என்னன்னு நார்மலா கேட்ருந்தா சொல்லியிருப்பேன், அதை விட்டுட்டு… இப்ப கூட ஏதோ நல்ல மூட்ல இருக்கிறதால பொறுமையா சொல்லிட்டு இருக்கேன். வாய்க்கு வந்தத பேசிக்கிட்டு…” என்றவன் மீண்டும் படுத்துக் கொண்டான். 

உத்ராவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. தான்தான் அதிகப் படியாக நடந்து கொண்டோமோ என தோன்ற தயக்கத்தை மீறி சின்ன குரலில், “சாரி” என்றாள். 

“பேசாம பட்றி, பேசறதெல்லாம் பேசிட்டு சாரி பூரின்னு கடுப்ப கிளப்பிகிட்டு” என ஆதவன் சொல்ல உத்ராவின் முகம் சுணங்கியது. 

ஆனாலும் அப்படியே விடாமல், “நான் ஒண்ணும் யார் கூட பார்த்தாலும் சந்தேக படறவ இல்ல. என் நிலையில இருந்து யோசிச்சு பாருங்க, நீங்களும்தான் அடிக்க கை ஓங்குனீங்க கொஞ்சமும் மரியாதை இல்லாம பேசுறீங்க…” உத்ரா சொல்லிக் கொண்டிருக்க அருகிலிருந்த தலையணையை தரையில் விட்டெறிந்தவன், “ஷட் அப்!” என கத்தி குப்புற படுத்துக் கொண்டான். 

மேலும் பேச்சையோ சண்டையையோ வளர்க்க விரும்பாமல் கனத்த மனதோடு உத்ராவும் படுத்து விட்டாள். 

தான் நடந்து கொள்ளும் விதம் பற்றி அலசி ஆராயாமல், ‘நான் நல்லா இருக்கலாம்னு நினைச்சாலும் இவ விட மாட்டா போலயே. ஐயையோ இவளோட எப்படி குடித்தனம் செய்ய போறேன்!’ என நொந்து கொண்டான் ஆதவன்.