ஜீவ தீபங்கள் -17 3 12739 பாலனும் படுத்து விட்டான். சிறு உறக்கத்துக்கு பின் பாலன் கண் விழிக்க அவனருகில் உறங்கிக் கொண்டிருந்தாள் பிரியா. பாலனுக்கு பசியாக இருக்க உறங்குபவளை தொந்தரவு செய்யாமல் அவனே எழுந்து வெளியில் வந்தான். சமையல் வேலை செய்பவர் மதிய உணவுக்கு பின் அவரது வீடு சென்று விட்டு மாலையில்தான் வருவார். அந்த நேரத்தில் வடிவம்மாள் பார்த்துக் கொள்வார். அவரும் இரவில் சரியாக உறங்காத காரணத்தால் உறங்க சென்று விட்டார் போலும். தானே சமையலறை சென்று பார்க்கலாம் என பாலன் நினைக்க அவனது அம்மா வந்து விட்டார். எப்படி இருக்கிறது இப்போது என விசாரித்தவர் அவன் முகம் பார்த்து பசிக்கிறதா என கேட்கவும் பாலனின் மனம் கரைந்து போனது. ஆம் என அவன் தலையாட்ட அவரே சமையலறை சென்றார். இரு நாட்களுக்கு மென்மையான உணவாக சாப்பிட சொல்லியிருக்க அவனுக்கென கஞ்சி இருந்தது. அதை சூடு செய்து எடுத்து வந்து கொடுத்தார். சாப்பிட்டவன் தம்பியை பற்றி கேட்க தன் அறையில் இருப்பதாக கூறினார். வருணை பார்க்க அம்மாவின் அறைக்கு சென்றான். அவனை விட நீளம் குறைவாக இருந்த மர சோபாவில் உறங்கிக் கொண்டிருந்தான் வருண். பாலன் நன்றாக இருந்தால் அவனே தம்பியை தூக்கிக் கொண்டு போய் அவனது அறையில் படுக்க வைத்திருப்பான். தம்பிக்கு தன்னால் அடிக்கடி அலைச்சல் ஏற்படுகிறது என்ற நினைவோடு கனிவாக பார்த்திருந்தான். “என் கூடத்தான் இருந்தான், அப்படியே தூங்கிட்டான் போல. இப்படி உடம்ப குறுக்கிகிட்டு படுத்திருக்கானே, எங்கேயாவது பிடிச்சுக்க போகுதே” என கவலையாக சொன்னார் பிரகதீஸ்வரி. “நானும் நினைச்சேன் மா, எழுப்பினா உறக்கம் போயிடும்னு விட்டுட்டேன்” என்றான் பாலன். “தூக்கம் போனா போகுது, எழுப்பு அவனை, பெட்ல தூங்க சொல்லு” என பிரகதீஸ்வரி சொல்ல தம்பியை எழுப்பி விட்டான் பாலன். எழுந்த வருண் உறங்கவெல்லாம் இல்லை. மூவருமாக வெளியில் வந்து விட்டனர். திண்ணையில் வெறும் தரையில் கால் நீட்டி சுவரில் சாய்ந்த வண்ணம் அமர்ந்தான் பாலன். அண்ணனுக்கு எதிரில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தான் வருண். சோம்பலான முன் மாலை நேரம். சார்லியை கவனித்து விட்டு இரு மகன்களுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டார் பிரகதீஸ்வரி. “எனக்கு அப்போ எதையும் சரியா யோசிக்க முடியலைடா. அதான் உங்களை எல்லாம் பார்க்காம விட்டுட்டேன். அந்தாளு செத்து போயிருந்தா கூட வாழ்ந்த நாளை எல்லாம் நினைச்சு தேறியிருப்பேன். எனக்கு நடந்தது கொடுமையான துரோகம்தான்னாலும் நான் உங்களை பார்க்காம விட்டது தப்புடா” என்றார் பிரகதீஸ்வரி. எத்தனை வருடங்களுக்கு பிறகு மகன்களிடம் மனம் திறக்கிறார்? வருண் நகர்ந்து அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தான். “இப்ப எல்லாம் நல்லா வளர்ந்து போய் நிக்கிறீங்க, என்னத்த நான் உங்களை கவனிக்க? ஹ்ம்ம்… என் காலம் வீணா போச்சு போ” தன் மக்களை சீராட்டி வளர்க்கவில்லையே என்ற கவலை அப்பட்டமாக தெரிந்தது அவரிடம். “என்னம்மா ஏன் இப்படி எல்லாம் நினைக்கிற? எங்களுக்காகத்தான் நீ இருக்கேன்னு தெரியாதா எங்களுக்கு? எதுவும் வேணுமா ம்மா? எதுவா இருந்தாலும் கேளும்மா” என்றான் பாலன். சின்ன மகனின் தலை தடவிக் கொண்டு சிரித்தாரே தவிர எதுவும் கேட்கவில்லை. மௌனமாக நகர்ந்தது நேரம். ‘மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்து விட்டது. சின்னவனுக்கும் விரைவில் செய்ய வேண்டும். பேரக் குழந்தைகள் பார்க்கும் பாக்கியம் எல்லாம் இருக்கிறதா எனக்கு?’ இரு மகன்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே உத்ராவையும் மனக் கண்ணில் கொண்டு வந்து அமைதியாக அந்த நேரத்தை கடந்து கொண்டிருந்தார் பிரகதீஸ்வரி. சௌமியா பற்றிய நினைவில் அலைப்புறுதலில் இருந்தான் வருண். ‘அம்மாவின் மடியில் தம்பி, அவன் தலை கோதிக் கொண்டே அமைதியாக காட்சி தரும் அம்மா’ தான் இதுநாள் வரை கண்டிராத இந்த நிகழ்வை மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தான் பாலன். திடீரென வானம் கறுத்து போனது. சட சட என பெரு மழை பொழியத் துவங்கியது. பலமான இடி சத்தம் வேறு கேட்க பிரியா எழுந்து வந்து விட்டாள். மாமியார் மடியிலிருந்து வருணை இழுத்து அகற்றியவள், “இன்னும் உனக்கு பாப்பான்னு நினைப்பா? நேத்து எப்படி கோவபட்ட என்கிட்ட, என் அத்தை மடி கேட்குதா உனக்கு?” எனக் கேட்டாள். “அதான் சாரி கேட்டுட்டேன்ல சும்மா…” என்ற வருண் மீண்டும் அம்மாவின் மடியில் படுக்க போக இருவருக்கும் இடையில் வந்து நின்று கொண்டாள். சார்லி வந்து பிரியாவின் பக்கம் வந்து நிற்க, அதை அள்ளி எடுப்பது போல போனவள் வருண் எதிர்பாராத தருணத்தில் அவனை திண்ணையிலிருந்து தள்ளி விட தரையில் விழாமல் சமாளித்தாலும் மழையில் நனைந்து போனான். வருண் பற்களை கடித்துக் கொண்டு அவளை முறைக்க, “நீயெல்லாம் இப்படி குளிச்சாதான் உண்டு. நல்லா குளி” என கிண்டலாக சொன்னாள். நிலத்திலிருந்து தாவி திண்ணையில் ஏறினான் வருண். அவன் எண்ணம் புரிந்தவள் கையில் இருந்த சார்லியோடு பாலன் பக்கத்தில் அவனை ஒன்றிக் கொண்டு அமர்ந்து கொண்டாள். “அவனுக்கே அடி பட்ருக்கு, இடிச்சிடாத பிரியா” எச்சரிக்கை செய்தார் பிரகதீஸ்வரி. அச்சோ என்ற பிரியா கணவனிடமிருந்து முகத்தை மட்டும் நகர்த்தி ஆதரவுக்காக அவன் கையை பிடித்துக்கொண்டாள். “உனக்கு இப்ப கொஞ்ச நாளாதான் அவர் ஹஸ்பண்ட். நான் பொறந்ததிலேர்ந்து எனக்கு அவர் அண்ணன், என்னை தடுப்பாரா அவர்? என்னை தள்ளினதுக்கு பழிக்கு பழி வாங்காம விட மாட்டேன்” கையை முறுக்கிக் கொண்டு வம்பு பேசினான் வருண். “அய்ய… நான் பொறந்ததிலேர்ந்து எனக்கும் இவர் அத்தை பையன்தான். நீ வெறும் உடன்பிறப்பு மட்டும்தான், நான் இவரோட மாமா பொண்ணு அப்புறம் வைஃப், என்னங்க?” வருணுக்கு பதில் கொடுத்து கணவனையும் தனக்கு ஆதரவாக பேச அழைத்தாள். “நீ என்ன சொன்னாலும் விட மாட்டேன் அண்ணி, உன்னை முழுசா மழைல நனைக்காம விட மாட்டேன்” என சொல்லிக் கொண்டே வருண் முன்னேற பாவமாக பாலனை பார்த்தாள் பிரியா. “சரி போகுது விடுடா” என பாலன் மனைவிக்கு ஆதரவாக பேச சார்லியும் வருணை பார்த்து குரைத்தது. “கீழ தள்ளினதுல எனக்கு ஏதும் அடி பட்ருந்தா என்ன ண்ணா ஆகியிருக்கும்? அண்ணிய கண்டிக்காம என்னை அதட்டுற, அங்க சொல்லி வை” என வருண் சொல்ல பிரியாவிடமிருந்து இறங்கிய சார்லி வருணை பார்த்து விடாமல் குரைத்தது. வருண் “ஷட் அப்” என பல முறை கத்தியும் அது கேட்பதாக இல்லை. பாலனும் பிரகதீஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாக சிரிக்க “சார்லி சைலன்ட்!” என பிரியா ஒரு முறை சொன்னதும் அமைதியடைந்து விட்டது சார்லி. வருண் சார்லியை முறைத்துக் கொண்டிருக்க, “சனி ஞாயிறா போனதால இங்க இருந்ததுல இவளுக்கு லீவ் ஆகல. இன்னிக்கு நைட் இவளை அழைச்சிட்டு போய் சென்னைல விட்டுட்டு வாடா” என தம்பியிடம் சொன்னான் பாலன். “நாளைக்கு ஒரு நாள் இருந்திட்டு போறேனே” என கெஞ்சலாக கேட்டாள் பிரியா. பாலன் மனைவியை ஒரு பார்வை பார்க்க, “இல்லயில்லை இன்னிக்கே கிளம்பறேன்” என்றாள். “ம்மா அண்ணி சார்லிக்கு சொல்ற சைலன்ட் விட அண்ணன் அவர் வைஃபை பார்க்கிற பார்வைக்கு மகிமை அதிகம் போல…” கிண்டல் செய்த வருண் தன் அண்ணன் அடுத்து எதுவும் சொல்வதற்குள் உள்ளே ஓடி சென்று விட்டான். பாலன் அறைக்கு வரவும் அவனை வால் பிடித்துக்கொண்டே வந்தாள் பிரியா. வருணை பிடித்து தள்ளியதற்காக அவன் கடிந்து கொள்ள, “சும்மா விளையாட்டாதான்…” என்றாள். “இந்த பழக்கம்தான் எப்பவும் வரும். நீதான் வீட்டுக்கு மூத்த மருமக. நாளைக்கு வருணுக்கு கல்யாணம் ஆனா வர்ற பொண்ணு எப்படி எடுத்துக்கும் இதைனு தெரியாது. பொறுப்பா இரு” என்றான். “போங்க சும்மா சிடு சிடுன்னு பேசுறீங்க. உங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை” என்றவள் ஜன்னல் பக்கம் நின்று கொண்டு மழையை கோவமாக பார்த்திருந்தாள். “முந்தாநாள் நைட் கன்டினியூவா கால் பண்ணிட்டே இருந்தியே, ஏதாவது முக்கியமான விஷயமா? அங்க எல்லாம் ஒழுங்கா போகுதா?” என பாலன் விசாரிக்க அவளுக்கு கௌதமின் நினைவு வந்தது. “என்ன பிரியா எதுவும் பிரச்சனையா? ஏதாவது சிக்கல இழுத்து விட்றாத” என அதட்டலாக சொன்னான். “அப்படிலாம் இல்லைங்க” என மெலிதான குரலில் சொன்னாள். “பிரியா…” படுக்கையில் அமர்ந்திருந்தவன் சற்று அழுத்தம் கூட்டி அழைத்தான். குழப்பம் நிறைந்தவளாக அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். அவளின் கண்களை தீர்க்கமாக பார்த்தவன், “உன்கிட்ட எதுவோ சரியில்ல. நீ நல்லா இல்ல, என்ன… என்ன பிரச்சனை உனக்கு?” எனக் கேட்டான். கண்களில் நீர் நிறைய அவனையே பார்த்திருந்தவள் சட்டென அவன் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள். சில நொடிகள் அவளை அப்படியே விட்டவன் பின் அவளை நிமிர்த்தி, “சொல்லு” என கட்டளையாக கேட்க கெளதம் பற்றி சொல்லி ஆரம்பித்தாள் பிரியா.