ஜீவ தீபங்கள் -17 2 12621 இன்னும் தனக்கு அழுகை வருவது போலிருக்க அடக்க முயன்றாள் பிரியா. குரலை செருமி லேசாக புன்னகை செய்தவன், “எனக்கு ஒண்ணும் இல்ல. சும்மா நாலு தையல் போட்டுட்டு கட்டை மட்டும் பெருசா போட்ருக்காங்க” என்றான். பிரியா உதடுகளை மடித்து அழுகையை அடக்கினாலும் கண்ணீர் வெளிப் பட, “அதான் சென்னையில இருந்துகிட்டே இங்க உன் புருஷன் உயிர காப்பாத்திட்டியே… ப்ச் நார்மலா இரு” என்றான். “ஏன் இப்படி ஆச்சு? யார் பண்ணினா இப்படி?” குரல் நடுங்க கேட்டாள். “கடையில முன்ன ஒரு தகராறு. அதுக்காகத்தானான்னு விசாரிக்கணும். அதை விடு, நான் பார்த்துக்கிறேன். வருணோட போய் ஏதாவது சாப்பிட்டு வா” என்றான். “கொஞ்ச நேரம் ஆகட்டும்” என இவள் சொல்லிக் கொண்டிருக்க செவிலியரோடு வருணும் உள்ளே வந்தான். சலைன் இணைப்பை நீக்கி விட்டு பாலனை ஃபிரெஷ் ஆகுமாறு கூறி சென்றார் செவிலியர். வருண் அண்ணன் கை பிடித்து இறக்கி விட்டான். கணவன் கையை பிடித்த பிரியா, “நான் பார்த்துக்கிறேன், நீ போய் எனக்கு காபி வாங்கிட்டு வா” என வருணை ஏவினாள். “நீ உட்கார் அண்ணி, நான் அண்ணனை கவனிச்சுட்டு அப்புறம் போய் வாங்கிட்டு வர்றேன்” என்றான். தான்தான் கவனிப்பேன் என பிரியா அடமாக சொல்ல வருணும் விடாமல் நிற்க, “ரெண்டு பேரும் வேணாம். நானே பார்த்துப்பேன்” என்ற பாலன் ஓய்வறைக்கு சென்று விட்டான். வெது வெதுப்பான நீரில் உடல் கழுவிக் கொண்ட பாலனுக்கு ஒரு கையில் நரம்பு ஊசி இருக்க இன்னொரு பக்க கழுத்தில்தான் காயம் என்பதால் அந்த கையையும் தூக்க முடியவில்லை. வருணை உதவிக்கு அழைத்தான் பாலன். ஆனால் உள்ளே வந்ததோ பிரியா. “அவனைத்தானே கூப்பிட்டேன்? நீ போ” என நெளிந்தான் பாலன். “வருண் கடைக்கு போய்டுச்சு. நான்தானே?” என்றவள் அவனுக்கு இயல்பாக உதவி செய்ய, “படுத்துற பிரியா நீ” என்றான். “எனக்கு ஏதாவதுன்னா உத்ராவ அனுப்பி விடுவீங்க, உங்களுக்குன்னா வருண் வேணும். இதுக்கு நாம கல்யாணம் செஞ்சிருக்கவே வேணாம். நீங்க அமைதியா இருங்க, பேச பேச கழுத்து வலிக்கும்” கண்டிப்பும் மிரட்டலுமாக பேசியவளை கண்டு பாலனுக்கு வெட்கமும் சிரிப்புமாக இருந்தது. பிரியா கணவனை குழந்தை என கருதி விட்டால் போலும், அவனை ஒரு வழி செய்த பின்னரே வெளியில் அழைத்து வந்தாள். மனைவியின் முகத்தை காண முடியாமல் பாலன் தடுமாற அவன் எப்போதும் குரலை செருமுவது போல செய்தாள் பிரியா. திகைத்து பின் சிரித்த பாலன், “தம்பி வந்திடுவான், அவன் முன்னாடி ஏதாவது கிறுக்கு தனம் செஞ்சு வைக்காத” என கண்டிப்போடு சொல்ல, “ட்ரை பண்றேன்” என சொல்லி கணவனை இன்னும் அதிர வைத்தாள். பிரியாவின் துடிப்பும் அழுகையும் உரிமையும் இந்த கிண்டலும் நினைக்க நினைக்க பாலனுக்கு ‘இவ என் பொண்டாட்டி’ என கொஞ்சம் மிதப்பாகத்தான் இருந்தது. பிரியா பேசிக் கொண்டிருக்க பின் மண்டையில் வலியை உணர்ந்தான் பாலன். இரவில் தலையிலும் அடி விழுந்தது இப்போதுதான் அவனுக்கு நினைவில் வந்தது. வருண் வரவும் அவன் பொறுப்பில் பாலனை விட்ட பிரியா ஓய்வறை சென்று விட்டாள். தம்பி கொடுத்த பால் பருகியதும் தலையில் அடி பட்டது பற்றி சொன்ன பாலன், “டாக்டர்கிட்ட சொல்லணும்டா” என்றான். வருணுக்கு பயம் ஏற்பட, “என்னண்ணா இப்போ சொல்ற? முன்னாடி முழிப்பு வந்தப்பவே தலையில அடி பட்டத சொல்றதுக்கு என்ன? இரு நான் சிஸ்டர்கிட்ட சொல்றேன்” என பேசிக் கொண்டிருக்க வெளியில் வந்த பிரியா கேட்டு விட்டு பதறிப் போனாள். வருணை முறைத்த பாலன், “ஏற்கனவே என்னை போட்டு பாடா படுத்துறாடா, நீ வேற” என கடிந்து மனைவியை பார்த்து, “நல்லாத்தான் இருக்கேன், எதுக்கும் செக் பண்ணலாம்னு சொன்னேன். வேற ஒண்ணுமில்ல, வா காபி குடி” என சொல்லி காபி எடுத்து தருமாறு வருணுக்கு கண் காட்டினான். “ஏய் அண்ணி! நான் உன்னை பார்க்கிறதா அண்ணனை பார்க்கிறதா? சும்மா நொய் நொய்னு அழுது கடுப்பாக்காத. இல்ல அப்படித்தான் அழுவேன்னா வீட்டுக்கு போய் பொறுமையா அழுவு. ஒழுங்கா நீயே காபிய குடி” என கோவப்பட்டவன் அண்ணன் பற்றி செவிலியரிடம் சொல்ல சென்று விட்டான். பிரியா விக்கித்து போய் நின்றிருக்க, “நைட்டெல்லாம் தூங்கலை அவன். அதான் எரிச்சல் ஆவுறான். நீ வா, காபி குடி” சோர்வாக பேசினான் பாலன். இவன் விட மாட்டான் என புரிந்து காபியை உள் செலுத்தியவள் எங்கே அடி என கேட்டு கொண்டிருக்க டியூட்டி மருத்துவர் வந்து விட்டார். அவர் பரிசோதித்து விட்டு பாலனுக்கு சிகிச்சை கொடுக்கும் சர்ஜனிடம் பேசி உடனே எக்ஸ்ரே ஸ்கேன் என பரிசோதனைகள் செய்ய சொன்னார். நடக்க வேண்டாம் என சொல்லி சக்கர நாற்காலியில் வைத்து பாலனை அழைத்து செல்ல அண்ணனை அப்படி எல்லாம் பார்க்க வருணுக்கே தாங்க முடியாமல் போக பிரியாவுக்கு கேட்கவே வேண்டாம். ஸ்கேன் அறையில் பாலன் இருக்க தான் கோவப்பட்டதற்கு அண்ணியிடம் மன்னிப்பு கேட்டான் வருண். “அண்ணன் தம்பி ரெண்டு பேருமே அதிகமா கோவ படுறீங்க. என் அண்ணனும் சளைச்சது இல்ல. ஆ ஊ ன்னா கை நீட்டுறது. இப்போ எங்க வந்து நிக்குது?” திட்டி புலம்பியவள், “நீ நைட் தூங்கலையாமே, வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. நான் இருக்கேன் இங்க” என்றாள். பிரியாவின் அக்கறையில் கனிவாக பார்த்த வருண், “நம்ம ரெண்டு பேராலயுமே அண்ணனை விட்டுட்டு போக முடியாது. உனக்கு அழுகை வந்தா பாத்ரூம் போய் சைலன்ட்டா அழுதிட்டு முகம் கழுவிட்டு வந்திடு, அண்ணனை டென்ஷன் பண்ணக்கூடாது” என்றான். வருணை முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் பிரியா. பரிசோதனைகள் முடிந்து பாலனை அறைக்கு அழைத்து வந்த பின் ஆதவனும் உத்ராவும் வந்து விட்டனர். அவசர வேலையாக பாலன் சென்னை சென்று விட்டதாக அம்மாவிடம் சொல்லி விட்டதாக சொன்னாள் உத்ரா. சற்று நேரத்தில் தாத்தா பாட்டியும் பார்க்க வந்தனர். ஸ்கேன் முடிவு நார்மல் என வந்துவிட்டது. ஆதவன் அவன் குடும்பத்தினரை அவன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டான். பிரியாவும் வருணும் பாலனுடனே தங்கி விட்டனர். துர்கா மருத்துவமனைக்கு வந்து மகளை பார்த்தவர் வீட்டுக்கு அழைத்தும் கணவனை விட்டு வர மாட்டேன் என கூறி விட்டாள். “ஐயையய்ய… டார்ச்சர் பண்றீங்க ரெண்டு பேரும்” பாலன் சலிக்கும் அளவுக்கு அவனது மனைவியும் தம்பியும் அன்புத் தொல்லை செய்தனர். இரவில் மீண்டும் உத்ரா பார்க்க வர, “தயவு பண்ணி நாளைக்கு வீட்டுக்கு அனுப்பி விட்ருங்க சார்” என மருத்துவரிடம் கெஞ்சியே விட்டான் பாலன். இரவில் அந்த அறையில் இருந்த ஒற்றை படுக்கையை பிரியாவுக்கு கொடுத்த வருண் வேறு அறை எடுத்து தங்கு என எவ்வளவு சொல்லியும் கேளாமல் அதே அறையில் தரையில் துணி விரித்து படுத்துக் கொண்டான். இரவில் போடப் பட்ட வலி நிவாரணி ஊசி மருந்தால் பாலன் உறங்கியிருக்க வருணும் அப்போதுதான் கண் அசந்தான். பிரியாவுக்கு கெளதம் பற்றி இந்த நிலையில் எப்படி சொல்வது என்ற எண்ணம் வர சொல்லவே கூடாது என முடிவு செய்து விட்டாள். உறக்கம் வராமல் அடிக்கடி எழுந்து வந்த பிரியா கணவனை தொட்டு பார்த்து செல்ல நடு இரவை கடந்த பின் அவளது தொடுகையில் கண் விழித்துக் கொண்டான் பாலன். அவன் விழித்தது அவளுக்கு தெரியவில்லை. தன் படுக்கைக்கு திரும்பிய பிரியா படுக்காமல் ஏதோ யோசனையாக இருந்தாள். தன்னை நினைத்து வருத்தம் கொள்கிறாளோ என நினைத்த பாலன் பிரியாவையே கூர்ந்து கவனித்தான். அவள் முகத்தில் கவலை அப்பிக் கிடந்தாலும் புருவங்களும் நெற்றியும் நெறி பட்டுக் கொண்டிருந்தன. பொறுத்து பார்த்த பாலன், “பிரியா!” என அழைக்க வருணும் எழுந்து கொண்டான். இருவருமே பாலனிடம் வந்து என்னவென விசாரிக்க தம்பி முன்னிலையில் பிரியாவிடம் எதுவும் கேட்டுக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்தவன் ஓய்வறை செல்ல வேண்டும் என கூறினான். பாலன் எழ தம்பி உதவ அவனே ஓய்வறை சென்று வந்தவன் படுக்காமல் அமர்ந்து கொண்டு மற்ற இருவரையும் உறங்க சொன்னான். தனக்கு உறக்கம் வரவில்லை என்ற வருண் அமர்ந்து கொள்ள பிரியாவை வற்புறுத்தி படுக்க செய்தான் பாலன். தூங்கவில்லை என்றால் திட்டு விழும் என கணவனுக்கு பயந்த பிரியா கண்களை மூடிக் கொள்ள சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள். மறுநாள் மதியம் போல டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து விட்டான் பாலன். பிரகதீஸ்வரி மகனை பார்த்து விட்டு பயந்து போய் அழ அண்ணனை அறைக்கு அனுப்பி விட்டு அம்மாவோடு இருந்து கொண்ட வருண், “சின்ன ஆக்சிடெண்ட்மா, நீ இப்படி அழுதா அண்ணனுக்கும் கவலையாகும். அமைதியா இரு” என சமாதானம் செய்தான். அம்மா அழுவதை கண்டுவிட்டு வந்த பாலனுக்கு அறையில் இருக்க முடியவில்லை. அம்மாவை பார்த்து வருகிறேன் என சென்றவனை பிரியா விடவில்லை. “வருண் பார்த்துக்கும் அத்தைய. உங்களை இப்படி கட்டோட பார்க்க பார்க்கத்தான் அத்தை அழுவாங்க. அவங்க தெளிஞ்சதும் போங்க, இப்ப இருங்க இங்கேயே” என அதட்டியே விட்டாள்.