கோடைக்கேற்ற கேப்பங்கூழ் குடித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியவன் நேரே அவனது அலுவலகத்திற்குச் சென்றான். கோரிக்கை மனு கொடுக்கவென ஆங்காங்கு மக்கள் நின்றுகொண்டிருக்க, இருசக்கர வாகனத்தில் வந்திறங்கியவனை பார்த்ததும் முணுமுணுப்புகள் வந்தது. மக்கள் நெருங்கி வந்தனர்.
“என்ன குறை இருந்தாலும் தயங்காம என்கிட்ட சொல்லுங்க என் அதிகாரத்துக்கு உட்பட்டு முடிச்சி கொடுக்குறேன்.” என இன்முகமாக சொல்லி மனுக்களை பெற்றுக்கொண்டான். அலுவலகத்தில் இருந்த அவன் ஆதரவாளர்கள் உடனே அவனுக்கு பின் வந்து நின்று கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.
வாய்த்துடுக்கு உள்ள சிலர் பழைய ஆட்சியை விமர்சித்ததோடு இவர்கள் ஆட்சியையும் விமர்சித்து மனு கொடுக்க, “இப்போதான வந்திருக்கோம். சீக்கிரம் உங்கள் குறைகள் அந்தந்த துறையிடம் கொண்டு சேர்த்து சரி செய்வோம்.” என நம்பிக்கையூட்டும் விதமாக பேசி சிலரை அனுப்பி வைத்தான்.
எங்கிருந்தோ ஓடி வந்த அவன் உதவியாளன் பிரபுவை அடிக்கண்ணால் முறைக்க, அதிலிருந்த செய்தி உணர்ந்து மீதம் உள்ள கூட்டத்தினரை தன்புறம் திருப்பி அவர்களிடமிருந்து மனு வாங்கினான். ரத்னதீபன் மெல்ல நழுவி உள்ளே செல்ல, பின்னோடே வந்துவிட்டான் பிரபு. கையில் இருந்த மனுக்களை அவனிடம் திணித்து, “எதெல்லாம் உடனே சரி செய்யுற மாதிரி இருக்கு, எதெல்லாம் ஹை ப்ரியாரிட்டி இஸ்யூஸ், எதுல கைவச்சா நமக்கு நல்ல பேர் கிடைக்கும், எது நமக்கு நாமளே மண்ணை வாரி போட்டுக்குறதுனு பிரிச்சி லிஸ்ட் போட்டு கொண்டு வா. அப்புறம் முடிவு பண்ணலாம் எதை தீர்த்து வைக்குறதுனு.” என்ற கட்டளைக்கு தலையாட்டிக்கொண்ட பிரபு,
“கார் ஒன்னு புக் பண்ணிடலாமா அண்ணே? வருங்கால அமைச்சர் இப்படி ஸ்ப்ளெண்டர் வண்டில வர்றது நல்லாவா இருக்கு?”
“காசு நீ குடுக்குறியாடா?” பிரபுவை முறைத்தான் ரத்னதீபன்.
“எலெக்ஷனுக்கு செலவு பண்ணது போக மீதி இருக்கே. அதுல வாங்கிக்கலாம் அண்ணே.” என்று யோசனை சொன்ன பிரபுவின் தோள்களில் கைபோட்டவன், “வருங்கால அமைச்சர்னு சொன்னியே அதுக்கு காசு எங்கிருந்துடா வரும்? எம்.எல்.ஏ ஆகுறதுக்கே இவ்ளோ ஃபண்ட் தேவைப்படும் போது அமைச்சருக்கு எவ்ளோ வாரி இறைக்க வேண்டியிருக்கும்?”
“இருந்தாலும்…”
“இந்த ஃபண்டுக்கே என் வாழ்க்கையை பணயம் வச்சிருக்கேன்டா. அப்படியெல்லாம் வெட்டி பந்தாவுக்கு செலவு பண்ணிடக்கூடாது.” என்று நியாயம் பேசினான் தீபன்.
“என்னவோ போங்க அண்ணே… கார்ல வந்து இறங்குனா எவ்ளோ கெத்து…”
“அமைச்சர் ஆனதும் காட்ட வேண்டிய கெத்தை இப்போவே காமிச்சா அப்புறம் அமைச்சர் சீட்டை துடைக்க விட்டுருவாங்க கட்சியில இருக்குற பெருசுங்க. இப்போ கம்முனு இருந்தா பின்னாடி ஜம்முனு இருக்கலாம். அதோட இப்படி மக்களோட மக்களா டூ வீலர்ல போறது மக்கள் மனசுல பதியும்டா. எளிமையா இருக்காரு. சுலபமா அணுக முடியுது. எங்கள்ல ஒருத்தருனு நினைப்பாங்க. இல்லையா நினைக்க வைப்போம்.” என்றவன் குரலில் அத்தனை அழுத்தம். பார்வையில் தீர்க்கம்.
“பெரிய பெரிய பிளான் எல்லாம் வச்சிருக்கீங்க அண்ணா.” என பிரபு சிலாகிக்க,
“பிளான் போட்டா பிளான் ஏ, பின்னு நிறைய போடணும். அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. ப்ளோல போகணும்டா… அதுல வர வாய்ப்பை பயன்படுத்திக்கணும்டா… ரெண்டு வருஷமா கூட இருக்க இதைக்கூட நான் சொல்லனுமா?” என அவன் தலையில் லேசாக தட்டியவன் அலைபேசி எடுத்து அன்றைக்கு காத்திருக்கும் வேலைகள் என்ன என்று பார்த்தான்.
“இன்னைக்கு தலைமை செயலகம் போய் புதுசா பதவி ஏத்து ஆபீஸ் செட்ட பண்ணியிருக்குற அமைச்சருங்கள பாக்கணும். அப்புறம் மேடம் இன்னைக்கு ராயல் பேலஸ் ஹோட்டலுக்கு வராங்க லன்ச் அங்க பாத்துக்கலாம்னு சொன்னாங்க.” என்றான் பிரபு அவன் படித்து முடிக்கும் முன்பே.
“சால்வை பொக்கே எல்லாம் ரெடியா?”
“எல்லாம் ரெடி அண்ணா. நீங்க சொன்னதும் கார் ஏற்பாடு பண்ணிடுறேன் போய்ட்டு வந்துடலாம்.” என்றதற்கு ரத்னதீபன் தலையசைக்க, தலைமை செயலகம் செல்ல உடனே காருக்கு சொன்னான் பிரபு.
அந்த இடைவெளியில் நேற்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட அவனது காணொளி எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது என்று பார்த்தான். மற்றைய அமைச்சர்களுக்கு எந்த அளவில் சமூக வலைத்தளத்தில் வரவேற்பு இருக்கிறது என்றெல்லாம் கவனித்தான்.
“இன்னும் பெர்பார்ம் பண்ணணுமோ?” என்றவனிடம் வந்த பிரபு, “அப்படியெல்லாம் பண்ணா கண்டுபுடிச்சிடுவாங்க. நீங்க சாதாரணமா இருங்க, நம்ம டீம்கிட்ட சொல்லி பாத்துக்க சொல்றேன்.”
“என்னை குழிக்குள்ள இறக்கிவிடாம இருந்தா சரி.” என சொல்லிக்கொண்டவன் கார் வரவும் தலைமைச் செயலகம் புறப்பட்டான்.
“சி.எம் பாக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கு பிரபு.”
“இன்னும் பத்து நாள் ஆகுமாம்… பி.எம் பாக்க போறாராம். அப்புறம் ஏதோ திட்டம் துவங்கி வைக்கிறது, துறை தலைமைக்கிட்ட பேசுறதுனு அவர் காலெண்டர் முடிஞ்சிடுச்சு.”
“சொந்த கட்சி எம்.எல்.ஏ’க்கே அப்பாயிண்ட்மெண்ட் இல்லையா. நல்லது.” என பல்லைக் கடித்துக்கொண்டவன் காரில் ஓட்டுநர் இருப்பதை கவனித்து வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டான்.
காத்திருந்து தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்த அமைச்சர் அறைகளுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்து என மாலை வரை அங்கேயே நேரமாகிவிட்டது.
“மேடம்கிட்ட சொல்லிட்டேன் லேட் ஆகும் லன்ச் முடியாதுன்னு. டின்னர் ஓகேவான்னு கேட்டாங்க.” என்று மதிய நேர இடைவெளியில் ரத்னதீபனிடம் கேட்க, ஒரு நொடி யோசித்தவன், “இன்னைக்கு வேண்டாம்னு சொல்லிடு.” என்றான். பிரபு அதனை செயல்படுத்த, தெரிந்தவர்களிடம் இன்முகமாக பேசி விடைபெற்றான் ரத்னதீபன்.
மாலை மீண்டும் தன் அலுவலகம் வந்து அன்றைக்கு பார்க்க வேண்டிய வேலைகள் சிலவற்றை பார்க்க, மீதியை மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என ஒதுக்கி வைத்தான். இடையே பரிந்துரைக்கு வந்தவர்களிடம் நயமாக பேசி அவர்களுக்கு உரிய உதவி கிடைக்கும்படி செய்தான்.
“தொகுதி பக்கம் போகணுமே…” என இடையே வந்து பிரபு நினைவுப்படுத்தவும் காத்திருந்த கட்சி ஆட்களை தன்னுடன் வரும்படி அழைத்துக்கொண்டு அவன் தொகுதியில் குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து சென்றார்கள். வாக்களித்து வெற்றிபெற வைத்தமைக்கு நன்றி தெரிவித்து குறைகளை கேட்டறிந்து கொண்டான். இளைய தலைமுறையிடமிருந்து வரவேற்பு பலமாய் இருக்க அகமகிழ்ந்து போனான் ரத்னதீபன்.
“இதெல்லாத்தையும் கவர் பண்ணி பைல் பண்ணு. இந்த ஏரியாவுல நமக்கு நிறைய செல்வாக்கு இருக்கு. இங்க பிரச்சனைன்னு யாராவது வந்தா உடனே என் கவனத்துக்கு கொண்டு வா.” என அன்றைய நாளின் இறுதியில் பிரபுவிடம் கட்டளையிட்டான்.
தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாக பிரபு சொல்ல, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பியவனை நிறுத்தியவன், “வீடு பாத்துடலாம் அண்ணே. இனிமே டெய்லி உங்களை பாக்க மக்கள் வருவாங்க. அந்த ரூம்ல இருந்தா சரிவராது.” என்றவனை புருவம் உயர்த்தி பார்த்தவன், “நீயே யோசிக்கும் போது நான் யோசிக்க மாட்டேனா. சின்னதா பாக்குறதா பெருசா பாக்குறதான்னு யோசனையில இருக்கேன். சீக்கிரம் சொல்றேன் பாக்க ரெடியா இரு.” என்றவனை மீண்டும் வழிமறித்தவன்,
“டபுல் பெட்ரூம் பாக்குறேன். அண்ணியை கூட்டிட்டு வந்துருங்க.” என்றவனை முடிந்த மட்டும் முறைத்தான் ரத்னதீபன்.
“இன்னும் என்ன அண்ணே? ஜெயிச்சாச்சு சும்மா வீம்பை புடிச்சிட்டு இருக்காதீங்க. உங்ககூட கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம் எல்லாம் தானா சரியாகிடும் பாருங்க.” என்றவன் கையில் வலிக்காமல் அடிபோட்டவன், “உனக்கு கொடுத்த வேலையை மட்டும் பாரு. கொடுக்குற சம்பளத்துக்கு மேல கூவாத.” என வண்டியை உருமவிட, சலித்துக்கொண்டே வழிவிட்டான் பிரபு.
இருசக்கர வாகனத்தில் இரவு நேர சென்னைப் பயண அனுபவமே தனிதான். எறும்பு போல் இடைவிடாது நெருக்கிப்பிடிக்கும் வாகனங்கள் இருக்காது. காதை கிழிக்கும் வண்டியின் ஓசைகள் அடங்கிவிடும். சிக்னலில் நிற்கும் பொழுதுகள் கூட மாநகரின் அழகை ரசிக்கத் தோன்றும். வெப்பம் தணிந்து காற்றில் ஈரப்பதம் அதிகரித்து லேசான குளுமையை உணர முடியும். இருளை விரட்டும் தெரு விளக்குகளும் பாலங்களில் ஒளிரும் வண்ண வண்ண விளக்குகளும் சில நேரம் திருவிழாவை நினைவுப்படுத்தும் சில நேரம் கண்களுக்கு சோதனை கொடுக்கும். வணிகக்கடைகள் அடைக்கப்பட்டு உணவுத் திருவிழா களைகட்டும். என்றாவது ஒருநாள் நடுஇரவை தாண்டியும் புட் ஸ்ட்ரீட்களை தேடிக்கொண்டு செல்லும் அனுபவம் அந்நாளைய அழுத்தத்தை குறைக்கும். ஈர்க்கும் வண்ண விளக்குகளோடு இயங்கும் சாலையோர இரவுக்கடைகளில் பொறுமையாக பார்த்து வாங்கலாம். அவசரமின்றி வயிறு நிறைய உண்ணலாம். சாலைக்கு நடுவே அழகிற்கு வைத்திருக்கும் செடிகள் பூத்துக்குலுங்குவதை மெதுவாக வண்டி ஓட்டிச்சென்று ரசிக்கலாம். இப்படி பகல் நேரத்திற்கு முரணான இந்த இரவு பயணத்தை ரசித்தபடி தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் ரத்னதீபன்.
குடும்பத்தை விட்டு வெளியூரிலிருந்து வந்து வேலை செய்யும் இளைஞர்களுக்கு உரித்தான தங்கும் விடுதி அது. நண்பர்களுடன் சேர்ந்து பகிர்ந்துகொண்டு தங்கும் அறைகளும் உண்டு. தனித்து தங்கும் வசதியும் உண்டு. நேரம் காலம் பார்க்காமல் இரண்டு வருடமாக அவன் ஓடியாடி அரசியல் வேலைகள் செய்ய வசதியாக இருந்த இந்த இடத்திலேயே தங்கிக்கொண்டான். இனி இங்கு தங்குவது தன் பதவிக்கு சரிவராது என்று தெரியும், இருப்பினும் வீடு பார்த்துச் செல்ல தயக்கம். தங்கும் அறையில் தெரியாத வெறுமை வீடு என்கையில் வந்தது. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு ஓடியாடிவிட்டு அறைக்கு வருகையில் சோர்ந்துவிடுவான். படுத்தவுடன் உறக்கம் தழுவிவிடும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னோ தனிமை தாக்கியது. எட்டாக்கனியை எட்டிவிட்ட திருப்தியோ என்னவோ சுற்றத்தினரை மனது தேடுகிறது.
அறைக்கு வந்தால் வரவேற்க எவரேனும் இருந்தால் நன்றாக இருக்குமோ என்றெல்லாம் யோசனைகள் நீள்கிறது. இனிதான் நீ அதிகம் அலைய வேண்டி இருக்கும், வேலையும் அதிகம். இந்த வெறுமையெல்லாம் கணநேர உணர்ச்சி, கண்துடைப்பு போல் காணாமல் போய்விடும் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறான். இன்றும் தலையில் தட்டிக்கொண்டே கதவடைத்தான். அலுவலகத்திலேயே உண்டுவிட்டதால் அறைக்கு வந்து உடை மாற்றியவன் பொத்தென்று படுக்கையில் விழுந்தான். உடல் ஓய்விற்கு கெஞ்ச கண்கள் அடைபடமாட்டேன் என்றது. அந்நேரம் பார்த்து அலைபேசி ஒலிக்க, இந்நேரம் யார் என்ற புருவ சுருக்கத்தோடு எடுத்துப்பார்த்தால் வளவன். யோசனையுடன் அழைப்பை ஏற்றான்.
“இப்போ ஃப்ரீயா மாப்பிள்ளை, பேசலாமா?” என ஆரம்பித்தான் வளவன்.
தணிந்து வந்த குரலில் எழுந்து அமர்ந்துவிட்ட ரத்னதீபன், “சொல்லுங்க. என்ன இந்த நேரம் கூப்பிட்டிருக்கீங்க?”
தேர்தல் முடிவுகள் வந்த அன்று இரவு வெகு நேரம் வரையிலுமே வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டிய கட்டாயம். பின் தலைமையை சந்திப்பது, பெரும்பான்மை கட்சியான இவர்களது கட்சி ஆட்சி அமைப்பது குறித்த கூட்டங்களில் பங்கு கொள்வது என ஓய்வின்றி போனதால் தவறிய அழைப்புகளை கவனிக்ககூட இல்லை. பதவி ஏற்பு விழாவிற்கு கூட இவர்களை அழைக்கவில்லை. தன் குடும்பத்துடன் நிறுத்திக்கொண்டான். அழைத்திருக்க வேண்டுமோ என இப்போது தோன்றியது. அதுவும் மரியாதையுடன் பணிந்து வரும் மச்சான் குரல் அவனை யோசிக்க வைத்தது. மனைவிக்கு வாய்த்துடுக்கு என்றாலும் அவள் வீட்டினர் என்றுமே அவனின் மரியாதைக்கு குறை வைத்தது இல்லையே. நாமும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டுமோ என்றெல்லாம் யோசனை சட்டென வந்தமர்ந்தது. இத்தனை நாள் இல்லாமல் இப்போது என்ன மாமனார் குடும்பத்தினர் மீது கரிசனை என்றுகூட எண்ணிக்கொண்டான்.
“மாப்பிள்ளை லைன்ல இருக்கீங்களா?”
“ஹான் ஹான் சொல்லுங்க மச்சான்… எப்படி இருக்கீங்க?” குரல் செருமி இயல்பாக பேச முற்பட்டான். அரசியல்வாதியின் சாமர்த்தியமோ என்னவோ எண்ணியதை உணர்ச்சிப்பிடிக்குள் கொண்டு வந்து உடனே வார்த்தைகளாய் வெளிப்படுத்த முடிந்தது.
“எல்லாரும் நல்லாயிருக்கோம் மாப்பிள்ளை. உங்களுக்கு எப்படி போகுது? ரொம்ப அலைச்சலா? போட்டோ பாத்தேன் இளைச்சி போயிட்டிங்க.” என சாதாரணமாக பேச்சை வளர்த்தான் வளவன்.
ரத்னதீபன் கேள்விகளுக்கு பதில் கொடுக்க, மெல்ல தான் அழைத்ததற்கான காரணத்தை ஆரம்பித்தான் வளவன்.
“என்ன முடிவு பண்ணி இருக்கீங்க மாப்பிள்ளை? ரெண்டு வருஷமாகுது.” என்று கேட்கவும் புரிந்துபோனது தீபனுக்கு.
கண்களை மூடித்திறந்தான். தேர்தல் என்று இரண்டு வருடம் கட்சிப் பணியை காரணம் காட்டி ஓட்டியாகிற்று. இனி இந்த கேள்வி தன்னை அதிகம் தொடரும் என்று அம்மாவின் பேச்சிலேயே புரிந்து போனது. இப்போது வளவனும் அதையே கேட்க என்ன சொல்வது என்று அமைதியாக இருந்தான்.
“பாப்பா மேல கோவம்னு புரியுது. ஆனா மனசு விட்டு பேசுனா எல்லாம் சரியா போயிடும் மாப்பிள்ளை. பேசுறீங்களா கூட்டிட்டு வரவா?” என ஆவலுடன் வளவன் கேட்க, கேலியாய் வளைந்தது தீபனின் இதழ்கள்.
“உங்க தங்கச்சி வந்துட்டு தான் மறுவேலை பார்ப்பா. அன்னைக்கு பங்ஷன் வந்துட்டு என்னை பாக்கக்கூடாதுனு நான் பக்கத்துல வரவும் தள்ளி போய் மூஞ்சை திருப்பிட்டு நிக்குறா.”
“உங்க வீட்ல எல்லாரும் பாப்பானு கூப்பிடறதால அவ சின்ன புள்ளையாகிடுவாளா? என் தங்கச்சியைவிட ஒரு வயசு பெரியவ. என் தங்கச்சிக்கு ரெண்டு வயசுல ஒரு பையன் இருக்கான்.” என்ற ரத்னதீபன் என்ன சொல்ல வருகிறான் என்று குழம்பிப் போனான் வளவன்.
“மாப்பிள்ளை?”
அவன் பதில் கொடுக்கும் முன், “அண்ணா…” என்ற சத்தத்தில் சட்டென்று வளவன் திரும்பிப் பார்க்க, அவனை உக்கிரமாய் முறைத்துக்கொண்டு நின்றாள் செண்பகா.
“மாப்பிள்ளை லைன்ல இருக்காரு பேசு பாப்பா.” என்று சட்டென அலைபேசியை அவளிடம் நீட்டிவிட, அதே வேகத்தில் அலைபேசியை பிடுங்கி அழைப்பை துண்டித்துவிட்டாள் செண்பகா.
வெகு நாட்கள் கழித்து கேட்ட மனைவியின் குரலில் நிமிர்ந்து அமர்ந்த ரத்னதீபன் வளவன் அலைபேசியை அவளிடம் கொடுப்பது தெரிந்து பரபரப்பாக, அழைப்பு துண்டிக்கப்படவும் அது அவள் வேலை என்று புரிந்துபோனது. பரபரப்பு சட்டென்று அடங்கி மூக்கின் மீது கோபம் வந்து அமர்ந்துகொண்டது.
‘என்னிடம் பேச மாட்டாளாமாம். பேச வேண்டாம். போடி.” என அவளை மனதிற்குள் வைது படுத்துவிட்டான்.
இங்கு தங்கையிடம் மாட்டிக்கொண்ட வளவனுக்கு இவர்களை எப்படி சேர்க்கப்போகிறோம் என்ற கவலை வந்துவிட்டது.
“என்னமோ நான் தப்புங்குற மாதிரி அவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க…” ஆவேசமாய் அண்ணனை கேள்வி கேட்டு நின்றாள் செண்பகா.
“மரியாதையா பேசு பாப்பா…”
“பொண்டாட்டிக்கு சேர வேண்டிய மரியாதையை கொடுக்கத் தெரியாதவனுக்கு மரியாதை ஒன்னுதான் கேடு.”
“என்ன மரியாதை கொடுக்கல உனக்கு? அந்த பங்ஷன் என்ட்ரி பாஸ்ல கூட உன் பேர் பின்னாடி அவர் பேரோட அச்சடிச்சு வந்துச்சு. அவர் சொல்லாமலா? நீதான் அவர் மனைவின்னு அதுக்கான மரியாதையை கொடுத்துட்டாரு செண்பா…” என்று அழுத்தமாக அதே சமயம் கண்டிப்புடன் சொன்னான் வளவன். கணவன் மனைவிக்குள் ஆயிரம் இருக்கட்டும் ஆனால் மூன்றாம் நபர் முன் எடுத்தெறிந்து பேசக்கூடாது என்ற எண்ணம் அவனுக்கு. அதனை தங்கைக்கு சொல்லவும் செய்திருக்கிறான். என்ன கோபம் வந்துவிட்டால் அதெல்லாம் மறந்துவிடுகிறாள் அவன் அருமை தங்கை.
“கிழிச்சாரு. நீ வந்துதான் ஆகணும் ஆனா நான் உன்னை கண்டுக்க மாட்டேன்னு அங்க முகத்தை திருப்புறாரு. அவர்கிட்ட பணிஞ்சு பேசிட்டு இருக்க நீ…”
“நீயும் முகத்தை திருப்புனியாமே?”
“எனக்கு முன்னாடி சீட்ல அவ உக்காந்திருக்கா… அப்படியே கொஞ்சுவாங்களா உன் மாப்பிள்ளையை?” என்றதும் அவள் யாரை சொல்கிறாள் என அனுமானித்தவன், “ப்ச்… அதை விடு செண்பா.” என்றான் அலுப்பாய்.
“அதேதான் நானும் சொல்றேன். என்னை விடுங்க. என் பீலிங்ஸ் உங்க யாருக்கும் புரியாது. புரியப்போறதும் இல்லை.” ஆவேசமாய் பேசிக்கொண்டே வந்தவள் இறுதியில் வருத்தமாய் முடித்து திரும்பச் செல்ல,
“அப்போ விட்டுரு செண்பா. இது உன்னை போட்டு அழுத்திட்டு இருக்குன்னா இதுலேந்து வெளில வந்திரு.” உறவை முறித்துக்கொள்வது பற்றி வளவன் மறைமுகமாக சொல்ல, முணுக்கென்று கண்ணீர் வந்தது செண்பகாவிற்கு.
“என்ன முடியாதா?” என்று பார்த்தான் வளவன்.
அண்ணனின் பார்வையில் மூச்சுக்கள் ஏறி இறங்க, படபடப்பாய் உணர்ந்தாள். ரத்னதீபனை விடுவதா?
“ஏன் இழுத்துப் புடிச்சிட்டு இருக்க? இப்படி இருக்குறதாலதான் என்னைக்காவது ஒருநாள் மாப்பிள்ளையோட சேர்ந்து வாழ போயிடுவேன்னு எல்லாரும் நம்பிட்டு இருக்காங்க. பொய்யான நம்பிக்கை கொடுக்குறதுக்கு பதில் முடிவெடுத்துட்டு வர்றதை பேஸ் பண்ணிக்கலாமே.”
“…”
“செண்பா?”
“இல்லை… எனக்குத் தெரியல.” என்றவள் அதற்கு மேல் நிற்கவில்லை. நின்றால் ஏதாவது சொல்வானோ என்ற படபடப்புடன் உள்ளே சென்றுவிட்டாள்.
செல்லும் தங்கையை வருத்தத்துடன் பார்த்த வளவனுக்கு என்ன செய்து அவர்கள் வாழ்க்கையை சரிசெய்வது என்று புரியவில்லை. நெற்றியை தேய்த்துக்கொண்டவன் அங்குமிங்கும் நடந்தான். எந்த யோசனையும் வரவில்லை ஆனால் ஒருவனின் நினைவு வர உடனே அவனுக்கு அழைப்பு விடுத்துவிட்டான். அவனால் நிச்சயம் இவர்களை ஒன்று சேர்க்க முடியும் என்ற வளவனின் அசைக்க முடியா நம்பிக்கை நிலைக்குமா?