“இங்க பாருங்க ஓசில கிடைச்ச சரக்குனு கொஞ்சம் எக்ஸ்ட்ரா உள்ள தள்ளிட்டேன் அதுக்காக என்னையே தள்ளி வச்சிடுவீங்களா? என் முகத்தை பார்த்து பேசி எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா?” என உரிமையாய் சண்டைக்கு நின்றான் பிரபு.  

‘இவன் மட்டும் தள்ளாடும் அளவுக்கு குடிக்காமல் இருந்திருந்தால் அன்று மந்த்ரா காரில் ஏறியிருக்கவும் வேண்டாம் செண்பகாவும் சந்தேகம் கொண்டிருக்கமாட்டாள்…’ என பழியை இவன்மீது சுமத்திவிட்டவன் பிரபுவிடம் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை. என்னவென்றால் என்ன என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். பிரபுவிற்கு இவன் பேசாமல் இருக்கும் காரணம் இன்னதென்று சரியாகத் தெரியாமல் அவனாகவே அன்று குடித்ததற்கு கோவமாக இருக்கிறான் என நினைத்துக்கொண்டு சமாதானப்படலத்தில் இறங்கிவிட்டான்.  

“போய் வேற வேலை இருந்தா பாரு.” என அப்போதும் பிரபுவை விரட்ட, முகம் தூக்கிக்கொண்டு சென்றான் அவன்.

பெருமூச்சுடன் செல்லும் அவனைப் பார்த்த ரத்னதீபனுக்கும் என்னவோ போல் ஆனது. வீட்டில் செண்பகாவுடனும் பூசல் இங்கு இவனுடனும் கசப்பு என்றிருப்பது ஒருவித உளைச்சலை கொடுத்திருக்க, கொஞ்சம் இறங்கி வந்தான். பிரபுவை அழைத்து பொதுவாக தொகுதி குறித்து பேச, அவனுக்கும் தீபன் இயல்பானது புரிந்து இலகுவானான்.

“உங்க மச்சானுக்கு டெண்டர் கொட்டேஷன் அனுப்பிட்டேன். பேசுனாரா உங்ககிட்ட?”

“எப்போ அனுப்புன?” என கேட்டுக்கொண்டே அலைபேசியை எடுத்தவன் விமல் அழைத்திருக்கிறானா என பார்த்துக்கொண்டே, “விலை கம்மியா பட்டன் போன் ஒன்னு வாங்கணும்டா. முடிஞ்சா இன்னைக்கே ரெடி பண்ணு. பர்சனல் நம்பரை அதுல போடுப்போம். நானே எதுவும் முக்கியமான வேலையில சிக்கி இருந்தாலும் அதுல செண்பா கூப்பிட்டா உடனே எனக்கு சொல்லணும்.” என கட்டளையிட, அப்போதே புது அலைபேசிக்கு சொல்லி வைத்தான் பிரபு.  

“கூப்பிட்டிருக்காரு. நாந்தான் பாக்கல. பேசிக்குறேன்.” என்றவன் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசிவிட்டு அவனை அனுப்ப, திரும்பவும் அழைத்தான் விமல். 

“பிரபு விவரம் அனுப்புனாப்புல. அப்பிளை பண்ணிட்டேன் மச்சான். கிடைச்சா மொதோ போஸ்டர் உங்களுக்குதான்.”

“விளம்பரம் பண்றேன்னு எனக்கு ஆப்பு அடிச்சிறாதீங்க மச்சான். நீங்க தனியா பார்த்துட்டு இருந்தவரை பிரச்சனை இல்லை. ஆனா இனிமே எது பண்ணாலும் அதுக்கு பின்னாடி நான் இருக்கேனுதான் வரும்.” கவனமாக இருங்கள் என நேரே சொல்ல முடியாமல் குறிப்பு வைத்து அவன் சொல்ல, 

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மச்சான்.” என இலகுவாகிவிட்டான் விமல்.

இவன் சரியாக இருக்க வேண்டுமே என ரத்னதீபனுக்கு தான் சிறு சஞ்சலம். அதனை ஒதுக்கித் தள்ளியவனுக்கு இவனிடம் யோசனை கேட்கலாமா என்றுகூட எண்ணம் தொனிக்க, என் குடும்பத்தினுள் சண்டை என மச்சானிடம் உதவி கேட்பதா என உடனே உதறித்தள்ளினான்.

“அப்புறம் மச்சான் தங்கச்சி என்ன சொல்லுது? எல்லாம் சரியாகிடுச்சா? தீபாவளி எல்லாம் வரப்போகுது என்ன பிளான் வச்சிருக்கீங்க?” என அடுத்த விஷயத்திற்கு தாவ, 

“அதுக்குள்ள தீபாவளியா?”

“என்ன அதுக்குள்ளவா? தங்கச்சிகூட இருக்கவும் நாள் போறதே தெரியலையா உங்களுக்கு?” என கிண்டல் போல் சொல்லியவன், “நடுவுல இருக்குற எந்த லீவுக்கு கூப்பிட்டாலும் உங்களை கைகாமிக்குது செண்பான்னு அத்தை சொல்லிட்டு இருந்தாங்க. அதான் ஊர் பக்கம் வர யோசனை இருக்கான்னு கேட்டேன்.” என்றதும் பளிச்சென்று மின்னல் வெட்டியது ரத்னதீபனுக்கு.

“வரேன் மச்சான்.” என்றான் உடனேயே.

இங்கே இருதுருவமாக இருப்பதற்கு பதில் ஊருக்கு சென்றால் ஒரே அறையில் தங்க நேரிடும், அவளுடன் தனிமை கிடைக்கும். சிறு பயணம் அவள் இறுக்கத்தை குறைக்கும், பேசி சரி செய்யலாம் என இன்னும் வேறு சில கணக்கு போட்டவன் அன்றைக்கு இரவே மனைவியிடம் வந்து நின்றான். 

“ஆயுத பூஜைக்கு உனக்கு லீவ் இருக்கும்ல. அன்னைக்கு ஊருக்கு போகணும் செண்பா.” 

அவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் நகரப் பார்க்க, அவள் கைப்பிடித்து நிறுத்தியவன், “என்மேல கோவமா இருக்குறது ஒருபக்கம் இருக்கட்டும். இன்னும் நாம வீட்டுக்கு வரலைன்னு கேட்டுட்டே இருக்காங்க. ஒருநாள் போயிட்டு வந்துரலாம்.” என அசராது பொய்யை தட்டிவிட்டான். ஊருக்கு வரும்படி செண்பாவிடம் ஓரிரு முறை சொல்லிப் பார்த்து பலனில்லை என்கவும் எப்படியோ நன்றாக இருந்தால் போதுமென்று நினைத்துக்கொண்டவர்கள் அழைக்கவெல்லாம் இல்லை. இவனை கூப்பிட வேண்டுமென்றாலும் அதற்கு அலைபேசி அழைப்பை ஏற்க வேண்டுமே. 

செண்பகா நீ கூப்பிட்டால் வந்துவிட வேண்டுமா என்ற பார்வை கொடுக்க, தலை கோதியவன், “உன் அண்ணனும் கூப்பிட்டாரு. ரெண்டு வீட்டுக்கும் போயிட்டு வந்துரலாம். இந்த ரெண்டு வருஷத்துல அவங்களை ரொம்ப படுத்திட்டோம். கொஞ்சம் அவங்களுக்காக பாக்கலாமே.” சற்று தாழ்த்தி பேச, அவள் முகம் யோசனையானது. அவளிடம் யாரும் வரச்சொல்லி சொல்லவில்லையே.

“உனக்கே தெரியும் கல்யாணத்துக்கு அப்புறம் வந்த எந்த பங்ஷன்லையும் நாம முழுமனசோட கலந்துக்கல. எல்லாத்துலையும் பிரச்சனை. சண்டை போட்டு மூஞ்சை தூக்கி வச்சி, எதுவுமே சரியா நடக்கல. இப்போ சேர்ந்துட்டோம்னு சந்தோஷமா இருக்காங்க. ஏதாச்சும் ஒரு நேரம் போயிட்டு வர்றதுதான் சரியா இருக்கும். எனக்காக இல்லை குடும்பத்துக்காக யோசிச்சு சொல்லு.” அவளை அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற உந்துதல் அவன் வார்த்தைகளில் வெளிப்பட, அப்போதும் செண்பகா எதுவும் சொல்லவில்லை. ஆனால் யோசிக்கிறாள் என முகம் காட்டிக்கொடுத்தது. 

அதிகம் அழுத்தம் கொடுத்து அது தனக்கே திரும்பிவிடப்போகிறது என சற்று அமைதி காக்க, நாட்கள் அதன்போக்கில் நகர்ந்தது. செண்பகா எதுவும் சொல்லவில்லை. ஆனால் அண்ணனிடம் கேட்டாள்.

“என்னை விட்டுட்டு உன் மச்சானை மட்டும் வீட்டுக்கு கூப்பிட்டியாமே? என்ன விஷயம்?” வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் பேசினாலும் இங்கிருக்கும் பிரச்சனையை வீட்டினில் பகிர்ந்துகொண்டதில்லை செண்பகா. அதனால் கேலியாக கேட்பது போல் போட்டு வாங்கப் பார்க்க,  

வளவனுக்கோ நாம எப்போ கூப்பிட்டோம் என்ற யோசனை. ஏதோ ஏடாகூடம் செய்துவிட்டு தன்னை வைத்து சரிக்கட்ட பார்க்கிறான் தங்கை கணவன் என அரசியல்வாதிக்கு தப்பாத மச்சினனாக அடிநுனியை பிடித்துவிட்டவன், அதை ஒட்டியே பேசினான்.

“அன்னைக்கு நைட் அவசரமா கிளம்பி போனதுதானே. அதுக்கு அப்புறம் வரவே இல்லையே பாப்பா நீங்க. மாப்பிள்ளைகிட்ட பேசுறப்போ கூப்பிட்டேன் எப்போ வரீங்க?” 

அண்ணன் இப்படி சொல்லவும் கணவன் சொன்னது உண்மைதான் போலும் என எண்ணிக்கொண்ட செண்பகாவின் குரல் தழைந்தது, “வேலை இருக்கு.”  

“அது எப்போவும்தான் இருக்கும் பாப்பா. நாமதான் நமக்கு வேண்டியவங்களுக்காக அதை ஒதுக்கணும்.”  

என் கணவனுக்கு ஏன் இது புரியாமல் போனது என நொந்து கொண்டவள் தன் வீட்டினரைப் பார்க்கலாம் என்ற ஆவலில் ஊருக்கு செல்ல மனதளவில் தயாரானாள். ரத்னதீபனிடம் தெரிவிக்கவில்லை. மண்டை காய்ந்து சுற்றட்டும் என்ற எண்ணமாகவும் இருக்கலாம். அப்படித்தான் அவனும் திரிந்தான். 

மக்களுக்கு பணி செய்வதில் ஈடுபாடு என்பதைவிட, அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற உந்துதல்தான் அவனை இயக்கிக்கொண்டிருந்தது. இதோ சட்டமன்ற உறுப்பினராகிவிட்டோம் என்று அமைதியாக இல்லாமல் அடுத்து மந்திரிப்பதவிக்கு என்ன செய்யலாம் என தந்திரமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் எங்கோவொரு புள்ளியாய் மனைவி அவனை தேங்க வைத்தாள். என்றும் இல்லாத பொழுதுகளாய் அவளது ஒதுக்கமும் வருத்தமும் அவனை வருந்தச் செய்தன. நடுவே இடைப்பட்ட வருடம் அவளை பாராமலேயே அவள் குரல் கேளாமலே கழிந்த நாட்களில் இதுபோன்ற யோசனையில்லையே என்ற எண்ணம் வந்து போனது. தன்னை விட்டு எங்கே சென்றுவிடுவாள் என்ற அலட்சியம் அவனை அப்படி இயக்கியதோ? இப்போது அப்படி வருந்திப் பேசி அவள் ஒதுங்கவும் இவனுக்கு பொறுக்கவில்லை. நெருஞ்சியாய் மனதை தைத்தாள். எந்த வேலையில் தன்னை புகுத்திக்கொண்டாலும் இறுதியில் அவளே மனதில் வந்து நின்றாள். இதற்கு மேல் தாங்காது என்று அவனுக்கு தோன்றியதோ இல்லையோ பிரபுவுக்கு தோன்றிவிட்டது.

“அப்படி என்ன கஷ்டம் இப்போ உங்களுக்கு? எப்போதும் ஏதோ யோசனையில இருக்கீங்க. முகமெல்லாம் சுருங்கிப் போயிடுது. அண்ணி கூட எதுவும் சண்டையா?”

பிரபுவை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் குனிந்து கொள்ள,

“இன்னும் மேடம் விஷயம்தான் பிரச்சனையா? மனசு விட்டு பேசுங்க அண்ணே. என்ன இருந்தாலும் கல்யாணம் ஆன புதுசுலேயே உங்களோட இன்னொரு பொண்ணு பேர் அடிபட்டா அவங்களுக்கும் கஷ்டமாதான இருக்கும். அப்போவே அவங்களை உக்கார வச்சி நீங்க தெளிவா பேசி புரியவச்சிட்டு இதுல இறங்கியிருக்கணும். சரி போனது போகட்டும் விடுங்க, அண்ணிக்கு ஏதாச்சு ஸ்பெஷலா வாங்கிட்டு போங்க. அவங்களுக்கு புடிச்ச பூ, சாப்பாடு இதுமாதிரி. கண்டிப்பா ஹாப்பி ஆவாங்க.” என அவன் பங்குக்கு யோசனை கொடுக்க, அதனை காதில் வாங்கிக்கொண்டது போல் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அதை செயல்படுத்திவிட்டான்.

இது ஏன் எனக்குத் தோன்றவில்லை? தன்னைத்தானே கடிந்துக்கொண்டே மனைவிக்கு இருமுழம் மல்லிப்பூவும் அவளுக்குப் பிடித்த உணவும் வாங்கிச் சென்று ஆர்வமுடன் நீட்டினான். அவளின் உணவு நேரத்திற்கு முன் சென்றுவிட வேண்டும் என அரக்கப்பரக்க வாங்கிச் சென்றாலும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் வேண்டுமென்றே சமையலறை சென்று சமைத்து வைத்திருந்த உப்புமாவை தட்டில் போட்டுக்கொண்டு வந்தமர்ந்தாள். 

கொஞ்சமேனும் இலகுவாள் என்ற அவன் எண்ணத்திற்கு எதிர்பதமான அவள் வினையை சற்றும் எதிர்பாராதவன் பட்டென தட்டை தன்வசப்படுத்தி அதில் இருப்பவற்றை வாயில் போட்டுக்கொள்ள, அதிர்ந்து போவது இவள் முறை. ஆனால் அசந்துவிடாமல் அவள் எழுந்து மீண்டும் சமையலறை செல்ல, பின்னோடே பாய்ந்து சென்றவன் அவளுக்கு முன் அடுப்பில் உப்புமா வைத்திருந்த சட்டியை கையில் எடுத்துக்கொண்டான்.

“இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு?” எரிச்சல் மிகுதியில் செண்பகா கத்த, வாயில் இருந்ததை அப்படியே முழுங்கியவன், “உனக்கு புடிச்சது வாங்கிட்டு வந்திருக்கேன். சாப்பிடலாம்ல.”  

“பரவாயில்லையே எனக்கு என்ன புடிக்கும்னு எம்.எல்.ஏவுக்கு தெரிஞ்சிருக்கே.” இளக்காரம் கொட்டிக்கிடந்தது அவள் பேச்சில். 

அதில் தூண்டப்பட்டவனாய் மனைவியை முறைத்துப்பார்த்தவன், “நீ எதிர்பாக்குற மாதிரி நான் நடந்துக்குறது இல்லைங்குறதுக்காக உனக்கு புடிச்சது புடிக்காதது எதுவுமே தெரியாதுன்னு நினைச்சியா?”

“உங்களுக்கு பேசவா சொல்லிக்கொடுக்கணும்.”

“சொல்லிக்குடேன் உன்கிட்ட எப்படி பேசணும்னு.” 

“குடுத்துட்டாலும். அப்படியே கேட்டுட்டாலும்.” முணுமுணுத்துக்கொண்டே அவள் வெளியே செல்ல, கைகழுவிவிட்டு பின்னோடே சென்றவன் வாங்கிவந்த உணவை மீண்டும் அவளிடம் நீட்டினான். 

எப்படி எதுவுமே நடவாதது போல் பூவும் உணவும் வாங்கி வந்து நிற்கிறான் என ஆற்றாமையாக பார்த்தவள் அவனை தவிர்த்து நகரப் போக, விடவில்லை ரத்னதீபன்.

பேசினால் இவளை அடக்கமுடியாது என்று செயலில் இறங்கிவிட்டான். கையில் வைத்தே உணவுப் பொட்டலத்தை பிரித்து அவளுக்கு தோதாக சிறிய கவளமாக எடுத்து அவள் வாயருகே நீட்ட, அவனை உறுத்து விழித்தவள் வாயை இறுக மூடிக்கொண்டாள். சளைக்காதவனாய் உணவை கிழே வைத்துவிட்டு அவள் தாடையை இறுகப்பற்றி ஊட்டப்போக, கோபமாய் அவன் கையை தட்டிவிட்டாள் செண்பகா. பதிலுக்கு அவள் அசந்த நேரம் பட்டென அவள் மூக்கை பிடித்துவிட, மூச்சுவிடவென வாயை திறந்துவிட்டாள் செண்பகா. கிடைத்த சாக்கில் ஒரு வாய் ஊட்டுவிட்டு அவன் பின்னகர, இருமிக்கொண்டே அவனை அடித்தவளுக்கு தண்ணியும் கொடுத்தான்.

“கொல்லப்பாக்குறியா என்னை?”

“உனக்கு புடிச்சதை சாப்பிட வைக்க என்னல்லாம் பண்ண வைக்குற நீ.” அவனும் முறைத்தான். 

“புடிச்சது கூட புடிச்ச நேரத்துல கிடைச்சா தான் மதிப்பு.”

“ஒன்னு புடிக்குதுன்னா கடைசி வரைக்கும் அது எப்படி இருந்தாலும் புடிக்கணும். குறிச்சி வச்சாப்ல இந்த நேரத்துல இது கிடைச்சாதான் புடிக்கும்னா அது எப்படி புடிச்ச பொருளா ஆகும்?”

அவன் எதை சொன்னானோ அவள் எதை புரிந்து கொண்டாளோ இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக முறைத்துக்கொண்டு நின்றனர்.

“இப்போ சாப்புடுறீயா என்ன?” கொஞ்சம் சத்தம் கூட்ட, அந்த உணவின் ருசியில் அதன் பக்கம் சாய்ந்துவிட்டாள் செண்பகா. அவள் செய்துவைத்திருந்ததை அவன் உண்டான்.

‘இதுக்கு இவ்ளோ அக்கப்போர்.’ என அவன் மனம் சலித்துக்கொண்டது, ‘அடுத்து ஊருக்கு கிளப்பனுமா?’ என நினைக்கும் போது அவளே வாய் திறந்தாள்.

“எப்போ ஊருக்கு போகணும்?”

“ஆயுத பூஜை செவ்வாய்க்கிழமை வருது. மண்டே நைட் கிளம்பி போயிட்டு புதன் காலையில வந்துரலாம்.” இவன் திட்டம் சொல்ல, அவள் முகம் சுருங்கி விரிந்தது.

“திங்கள் பரந்தூர்லையும் செவ்வாய் விழுப்புரத்திலும் தங்கிக்கலாம்.” சமயோசிதமாக அவன் யோசனை கொடுக்க, மெல்ல தலையை உருட்டியது பெண்.

அப்பாடா என மனதிற்குள் ஆசுவாசம் கொண்டவன் வரப்போகும் விடுமுறை நாளை சமாளிப்பானா சொதப்புவானா…